(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும்
வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ
அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
ஜனவரி பத்தாம் தேதி
வெள்ளிக்கிழமை துவங்கியது, சென்னை புத்தகக் காட்சி. ‘புத்தகத் திருவிழா’ என்பதே
பொருத்தமான வார்த்தை. துவக்க விழா அன்று வெறும் பொதுக்கூட்டம் மாதிரிதான்
இருக்கும் என்பதால் நான் போகவில்லை. அடுத்தநாள், அதாவது சனிக்கிழமை போயிருந்தேன். கடைகள்
எல்லாம் அப்போதுதான் முழுமையாக அமைக்கத் தொடங்கியிருந்தார்கள். புத்தகக்
கட்டுகளைப் பிரித்து அடுக்கும் பணியில் எல்லா ஊழியர்களும் தீவிரமாக இருந்தார்கள். நடுப்பகல்
நல்ல வெயில்நேரம் என்பதால் கூட்டம் அதிகமில்லை. மாலையில் சாரிசாரியாகப் படையெடுக்க
ஆரம்பித்துவிட்டனர் மக்கள்.
கடைகள், சென்ற
ஆண்டைவிடச் சற்று கூடுதலான நீள அகலங்களுடன் இருந்தததாகத் தோன்றியது. பத்ரி போன்ற
தோழர்களின் முன்னெடுப்பு காரணமாக இருக்கலாம். அரங்கின் உள்ளேயே மிகப்பல இடங்களில்
குடிதண்ணீர், காபி, தேநீர் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அனைவருக்கும்
ஆறுதலான விஷயம்.
முதல்நாள் என்பதால்,
சென்ற ஆண்டு விற்காமல் தேங்கிப்போயிருந்த பழையநூல்கள் தாம் பல அரங்குகளில் இருந்தன.
புதிய நூல்கள் நாளைமுதல் வைக்கப்படும் என்றார்கள். ஆனால் எது பழைய நூல்? நாம்
ஏற்கெனவே படித்திருந்தால் அன்றோ அது பழைய நூல்? படிக்காத நூலெல்லாம் புதியநூலே
அன்றோ? மேலும், பழைய நூல்களைக் கண்டுபிடித்து வாங்குவதில் உள்ள தொல்லைகளை நான்
அறிவேன். எனவே கண்ணில் கிடைத்த நல்ல நூல்களை, அவை பழையனவானாலும் வாங்கிவிட்டேன். மூன்றுமணி
நேரம் அலைந்து பதினேழு நூல்கள் தான் வாங்கினேன். அவை பற்றிய ஒரு தொகுப்பு இன்று
இடம் பெறுகிறது. (இதனால் வழக்கமான ‘அபுசிதொபசி’ இன்று இல்லை. மன்னிக்கவும்.)
சிலப்பதிகார ரசனை –
மார்க்கபந்து சர்மா எம்.ஏ.
(வ.உ.சி. நூலகம்,
சென்னை-14 வெளியீடு: 2005, 144 பக்கம், ரூ.55)
இந்த நூலைச் சுமார்
முப்பது வருடங்களுக்கு முன் படித்திருப்பதாக நினைவு. இலக்கிய மாணவர்கள் தவறாமல் படிக்கவேண்டிய
அருமையான ஆராய்ச்சி நூல். இதில் வரும் ‘கண்ணகியின் வயது’ என்ற பகுதியிலிருந்து
சில பக்கங்கள் உங்களுக்காக:
மங்கல வாழ்த்துக்
காதையில், ‘ஈகைவான் கொடியன்னாள் ஈறாறாண்டு அகவையாள்’ எனக்
கூறப்பட்டிருப்பதால், மணம் நிகழுங்காலத்தில், கண்ணகி பன்னிரண்டு வயதுக்கு
உட்பட்டவள் என்று தெரிகிறது. இதன்பின், அடிகள் எங்கும் அவள் வயதைப் பற்றி இவ்வளவு
தெளிவாகக் கூறவில்லை.
‘யாண்டுசில கழிந்தன இற்பெறுங் கிழமையின்
காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென்’ (2:89-90)
இதனால்,
கயமலர்க்கண்ணியும், அவள் காதற் கணவனும் கூடி நடத்திய மாசற்ற மண வாழ்க்கையின்
எல்லையை ஒருவாறு அறிய முடிகிறது. இதை விளக்கிக் காட்ட விரும்பிய அடியார்க்கு
நல்லார், ‘கண்ணகிக்குச் சில யாண்டு கழிந்தன எனவே, மாதவிக்குப் பல்யாண்டு கழிதலுங்
கொள்ளப்பட்டது. இன்னும், மேற் கனாத்திறமுரைத்த காதையில், தேவந்தி, ‘கண்ணகி
நல்லாளுக்கு உற்ற குறையுண்டென்று என்புழி எச்சவும்மை விரிக்க, இவற்கு
அவள் இளமைப் பருவந்தொடங்கி நிகழும் பார்ப்பனத் தோழியாய் மாநாய்கன் மனை வளர்தலின்,
ஒரு காலத்தே குடிபுக்குச் சென்றுழிப்
பிரிவும் ஒரு காலத்தாயிற்று என்பதாகலின், ‘நாலீராண்டு நடந்ததற் பின்னர்’
என்பதை இருவர்க்குமாக்கி, மாதவிக்கு எட்டினிறந்த பலயாண்டு சேறலிற் கண்ணகிக்குச்
சிலயாண்டு கழிந்தவெனப் பொருள் கூறலுமொன்று’ எனக்கூறுகிறார். (சிலப்பு: ஐயர்: பக் 55).
அவருக்கே, தாம் கூறியவற்றில் உறுதியில்லை என்பதை, ‘இதனான் மிக்க பலமின்று;
ஏற்குமேற் கொள்க; இது போலி’ என அவர் கூறுவதாலேயே அறிந்துகொள்கிறோம்....
கண்ணகி
எட்டாண்டுகள் இல்லறம் நடத்தினாள் என்றால், மாதவிக்கு எட்டினிறந்த யாண்டுகள்
கழிந்ததை ஒப்ப வேண்டும். அவ்வாறானால், மதுரைக்குச் சென்றபோது, கண்ணகி, குறைந்தது
முப்பது வயதுடையவளாக இருந்திருக்க வேண்டும். ஆனால்,
(அ) ‘என்னோடு போந்த
இளங்கொடி நங்கை’ ( 15:137)
(ஆ) ‘சிறுமுதுக்
குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்’ (16:68)
(இ) ‘முதிரா முலைமுகத்து
எழுந்த தீயின்’ ( 25:76)
(ஈ) ‘முலைமுகந் திருகிய
மூவா மேனி’ (30:150)
என வருவனவெல்லாம்,
அவள் இளம் பருவத்தினளே என வற்புறுத்துகின்றன. இவற்றுள், ஒவ்வொன்றும் கதையில்
பங்கெடுத்துக் கொள்ளும் வெவ்வேறு பாத்திரத்தால் கூறப்பட்டது.
கண்ணகி, மாதவி இவ்
விருவரோடும் கோவலன் கூடியிருந்த காலத்தின் எல்லையே எட்டாண்டுகளாகும்...
(கண்ணகியின் வயது
குறித்த வேறு நல்ல ஆராய்ச்சி நூல்களை நண்பர்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.)
டாக்டர் எஸ்.
ஆர்.கே. யின் இரண்டு ஆராய்ச்சி நூல்கள்: (1) சிறியன சிந்தியாதான் (தையல் வெளியீடு, சென்னை-12 தொலைபேசி:9884501018 ரூ.90) (2) கம்பன்
கண்ட அரசியல் (‘சாமி புக்ஸ்,
மயிலாப்பூர்’ தொலைபேசி 9841449529, 9382677312. ரூ.60)
இந்த இரண்டு
நூல்களும் பல ஆண்டுகளாக அச்சில் இல்லை. இப்பொழுது வந்துள்ளன. ஆகவே வாங்கிவிட்டேன்.
தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பெரிதும் அறிமுகமான தமிழறிஞர் டாக்டர்
எஸ்.ராமகிருஷ்ணன்.
தமிழுக்குத் தொண்டு
செய்த தமிழீழ அறிஞர்கள் –முதுமுனைவர் இளங்குமரனார் – (தமிழ்மண் வெளியீடு. ரூ.50.)
ஈழத்தில் பிறந்த
தமிழ் அறிஞர்கள் பலர் காலத்தால் அழியாவகையில் தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளனர்.
அவர்களைப்பற்றிய அறிமுகமாக இந்நூல் வெளியாகியுள்ளது. புதிய நூல். நான் வாங்கியது
முதல் பாகம் மட்டுமே. இன்னும் பல பாகங்கள் வந்திருக்கின்றன.
முதல் பாகத்தில்
கீழ்க்கண்டவர்களின் வரலாறு எளிய நடையில் ஆதாரபூர்வமாக எழுதப்பட்டுள்ளது: சைமன்
காசிச்செட்டி, ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, வி.கனகசபை பிள்ளை, சுன்னாகம்
குமாரசாமிப் புலவர், நா. கதிரைவேற் பிள்ளை, ஞானப்பிரகாசர், ஆனந்த குமாரசுவாமி, இலக்கணக்கடல்
சி.கணேசையர், விபுலானந்தர், நவாலியூர் சோமசுந்தரப் புலவர், ந.சி.கந்தையாப் பிள்ளை,
தனிநாயக அடிகள், சு.வித்தியானந்தன்.
இன்று,
தமிழ்நாட்டில், தம் குழந்தைகள் தமிழைப் படிக்கவேண்டாம் என்று பெற்றோர்கள் உறுதியாகவும்
இறுதியாகவும் முடிவெடுத்துவிட்ட நிலையில், தமிழைச் சாகாமல் காக்கும் அரும்பணியில்
நம்மைவிடவும் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்கள் ஈழத்தமிழர்களே ஏன்பதை ஒப்புக்கொண்டுதான்
ஆகவேண்டும். அந்த முயற்சியை அங்கீகரிக்கும் விதமாக இந்த நூலை நான் அனைவருக்கும்
சிபாரிசு செய்கிறேன்.
(தொடரும்).
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
(c) Y Chellappa
email: chellappay@yahoo.com
நீங்கள், நான் கவியாழி என மூவரும் செல்வதேன ஒப்பந்தம்! ஆனால் ? இது, நியாமா!
பதிலளிநீக்குமன்னித்து விடுங்கள் ஐயா! இது கவியாழி செய்த துரோகம்! உங்களை ஏன் அவர் அழைத்துவராமல் போனார் ? இருக்கட்டும், இன்னொருநாள் நாம் இருவர் மட்டும் கிளம்புவோம், அவரிடம் சொல்லாமல்! பொங்கல் வாழ்த்துக்கள்!
நீக்குஉங்கள் பதிலில் பிழை இருக்கிறதே?உண்மை உங்களுக்கும் தெரிந்தே இப்படிக் குறை சொல்லலாமா?
நீக்குபடிக்காத நூலெல்லாம் புதிய நூலே. அருமை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே! ஆனால், தில்லியில் இருக்கும்போது வெளியீட்டு விழா நடந்ததே, எஸ்.ஆர்.கே.யின் 'திருக்குறள் ஆய்வுரை' - அதன் மறுபதிப்பு என்.சி.பி.எச்.இல் கிடைக்கவில்லை! உங்கள் செல்வாக்கில் வாங்கித்தர முடியுமா?
நீக்குநான் அப்பாவி துரோகியல்ல.
பதிலளிநீக்குபுலவருக்கே வெளிச்சம்
சரி, புலவர் ஐயா! அப்பாவிகளை மன்னித்துவிடுங்கள்! இனி ஒருநாள் நாம் மூவரும் சேர்ந்தே போகலாம் புத்தகக் காட்சிக்கு!
நீக்குஐய ! எஸ்.ஆர்.கே நிறைவான கம்யூனிஸ்ட் ! மிகச்சிறந்த இலக்கியவாதி ! அவர் கமபன்,ஷேக்ஸ் பியர், மிலடன்,காளிதாசன் ஆகியோரை ஒப்பு நோக்கில் பேசும்போது நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருப்போம் ! ---காஸ்யபன்.
பதிலளிநீக்குஅவருடைய நினைவாகத்தான் இந்த நூல்களை வாங்கினேன். நன்றி ஐயா!
நீக்குபுதுப்புது நூல்களின் அறிமுகங்கள்... நன்றி ஐயா...
பதிலளிநீக்குநன்றி ஐயா! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
நீக்குபுத்தகக் கண்காட்சியில் நான் எழுதிய சிறுகதைத் தொகுப்பு வாழ்வின் விளிம்பில்”-உம் மணி,ஏகலைப் பிரசுர ஸ்டாலில் கிடைக்கும் என்று தெரிகிறது. நினைத்த மாத்திரத்தில் பார்த்த பிடித்த புத்தகங்களை வாங்க முடியும் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்கள் சிறுகதை நூல், இன்று முதல் கிடைக்கும் என்று தெரிகிறது. மணிமேகலை மொத்தம் நான்கு ஸ்டால்களை வைத்திருக்கிறார்கள். நான்கில் ஏதாவது ஒன்றில் கிடைக்கும்.
நீக்கு// எது பழைய நூல்? நாம் ஏற்கெனவே படித்திருந்தால் அன்றோ அது பழைய நூல்? படிக்காத நூலெல்லாம் புதியநூலே அன்றோ?//
பதிலளிநீக்குபழையநூல் – புதியநூல் நல்ல விளக்கம் தந்தீர்கள். உங்கள் கட்டுரையின் மூலம் உங்களுக்குள் இருக்கும் இலக்கிய தாகத்தினை அறிய முடிகிறது.
// மூன்றுமணி நேரம் அலைந்து பதினேழு நூல்கள் தான் வாங்கினேன். அவை பற்றிய ஒரு தொகுப்பு இன்று இடம் பெறுகிறது.//
நானும் புத்தகப் பிரியன். என்னதான் இண்டர்நெட்டில் வந்து படித்தாலும் புத்தகத்தை படித்த திருப்தி இல்லை. நீங்கள் வாங்கிய நூலகள் பற்றிய பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
உங்கள் பதிவில் GOOGLE FRIEND CONNECT widget ஐ வைத்தால் சேர்ந்து கொள்வேன்.
நன்றி நண்பரே! google friend connect விரைவில் இணைப்பேன். நன்றி.
நீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி
மிக்க நன்றி ஐயா!
நீக்குநூல் அறிமுகங்களுக்கு நன்றி சார்
பதிலளிநீக்குஉங்களை டிஸ்கவரியில் சந்திக்க முடியாமல் போயிற்று. உங்கள் நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
நீக்குஇலக்கியம், ஆராய்ச்சி, சுய முன்னேற்றம், தமிழறிஞர்கள் பற்றிய பல்வகை நூல்களையும் தேடி வாங்கி வந்து படித்து அது குறித்து சுருக்கமான பதிவு தந்துள்ளீர்கள். நன்றி ஐயா.
பதிலளிநீக்கு//மூன்றுமணி நேரம் அலைந்து பதினேழு நூல்கள் தான் வாங்கினேன்.//
பதிலளிநீக்குதங்கள் ஆதங்கம் புரிகின்றது. 17 நூல்கள் வாங்கிய தாங்கள் மறுமுறை செல்லும்போது இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கி, தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
அப்படியே செய்கிறேன் நண்பரே! ஆனால் தாகம் தீருமா என்று தெரியவில்லையே!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
தங்களின் பதிவின் வழி பல புத்தகம் பற்றிய தகவல் கிடைக்கிறது அதை வேண்டி படிக்க ஆர்வம் மிக அதிகம் என்ன செய்வது நாம் வாழு நாட்டில் இப்படியான புத்த கண்காட்சிகள் நடைபெறுவது குறைவு...
ஈழத்து தமிழ் அறிஞர்கள் பற்றிய தகவல் பாடசாலையில் உயர்தரத்தில் தமிழ் பரிவில் ஒரு பாடமாக உள்ளது...ஐயா.
த.ம 8வது வாக்கு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி நண்பரே! உலகளாவிய அளவில் தமிழ்நூல்கள் பரவலாகக் கிடைக்கும் நிலை விரைவில் ஏற்படும் - தொழில்நுட்பத்தின் உதவியால்! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
நீக்குநல்ல நூல் அறிமுகங்களுக்கு மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்கு//ஈழத்தில் பிறந்த தமிழ் அறிஞர்கள் பலர் காலத்தால் அழியாவகையில் தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளனர். அவர்களைப்பற்றிய அறிமுகமாக இந்நூல் வெளியாகியுள்ளது. புதிய நூல். //
புதிய நூல் பகிர்வுக்கு மிக்க நன்றி!! இன்னும் செல்லவில்லை! உங்கள் அற்முகம் போகும் ஆவலை இன்னும் தூண்டிவிட்டது!! பகிர்வுக்கு நன்றி!
துளசிதரன், கீதா
எப்போது போகிறீர்கள் என்று தெரிந்தால் அங்கே சந்திக்கலாமே!
நீக்குபொங்கல் நல் வாழ்த்துகள் கவிஞரே
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! தங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
நீக்குநாங்களும் உங்களுடன் வந்த உணர்வை இப்பதிவு ஏற்படுத்தியுள்ளது. நன்றி.
பதிலளிநீக்கு