புதன், ஜனவரி 22, 2014

மூத்தவள் ‘அமா’, இளையவள் ‘றீ மா’ – (அபுசிதொபசி-25)

(புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கியவற்றுள் சில நூல்களைப் பற்றி இன்றும் தொடர்கிறேன்.)

நேற்று (புதன்கிழமை- 22-01-2014) 37-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியின் இறுதிநாள். ஏற்கெனவே இரண்டுமுறை போயிருந்தேன். முப்பது புத்தகங்கள் வாங்கியிருந்தேன். வங்கி இருப்பில் சில ஆயிரங்கள் குறைந்தது தெரிந்ததும், ‘ஐந்து அலமாரிகளும் நிரம்பி வழிகிறதே, இன்னும் வாங்கத்தான் வேண்டுமா’ என்ற (மறைமுகக்) கோபம் இல்லாளிடமிருந்து வெளிப்பட்டது. நேரிடையாக அல்ல, தன் மகளுடன் தொலைபேசும்போது. இருந்தாலும் நமது வழக்கத்தை மாற்றிக்கொள்ள முடிகிறதா? ‘இன்று தான் கடைசி. இன்று விட்டால் இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டுமே’ என்று (மெல்லிய குரலில், ஆனால் வீட்டிலுள்ளவர்களுக்குக் கேட்கும்படியாக) நானும் ஒரு நண்பருடன் தொலைபேசினேன். கூடவே, அன்று எங்கள் குடியிருப்பில் திடீர் மரணம் எய்திவிட்ட ஒரு நண்பரைப் பற்றிக் குறிப்பிட்டு, மனித வாழ்க்கையின் நிலையாமையை விவாதித்தேன். ‘எனவே இன்று கட்டாயம் புத்தகக் காட்சிக்குப் போய்வந்துவிடுவது நல்லதல்லவா?’ என்றேன். பேசி முடித்ததும், வியப்பூட்டும் விதமாக,  ஒரு திடீர் காப்பியுடன் எனக்கு உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைத்துவிட்டது! ‘போய் வாருங்களேன், உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்?’ என்றார் துணைவி.

இப்படி திடீர் அனுமதி கிடைத்தால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது என்னைப்போன்ற சராசரிக் கணவர்களுக்குத் தெரியாதா என்ன? ‘நீ வந்தால் தான் போவேன், இல்லையென்றால் வேண்டாம். ஏற்கெனவே நிறைய வாங்கியாகிவிட்டதே’ என்றேன் தயக்கத்துடன். ‘நான் வரவில்லை’ என்றார். எனக்குப் பகீரென்றது. ‘ஏன், வந்தால் என்ன? நீயில்லாமல் நான் எங்கும் போவதில்லையே! கோபமா?’ என்றேன். (எந்தச் சூழ்நிலையில் எம்மாதிரி பேசவேண்டும் என்பது சராசரிக் கணவர்களுக்குத் தெரியாத விஷயமா?) ‘நான் இன்று இரவு கடலூர் போகிறேனே’ என்றார் முகமெல்லாம் மலர. அவர் தந்தையின் ஊராயிற்றே! ஓ, அதுதான் காரணமா? மேற்கொண்டு ஏதும் பேசாமல் உடனே நடையைக் கட்டினேன், புத்தகப் பொருட்காட்சிக்கு.
*** 

கடைசிதினம்-மாலைநேரம்  என்பதால் புத்தகக் காண்காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடற்கரைபோல் இங்கும் தகரப் பெட்டியில் ‘மாங்காய் சுண்டல்’, கைமுறுக்கு, வேர்க்கடலை  ஏந்திக்கொண்டு வியாபாரிகள்-பெரும்பாலும் சிறுவர்களே- திரிந்தவண்ணம் இருந்தனர்.

ஒரு சுண்டல் சிறுவன், இன்னொரு சுண்டல் சிறுவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான், ‘இன்னும் பத்து ரூபாய் சேர்ந்துவிட்டால் போதும், ‘முத்து காமிக்ஸ்’ புத்தகம் வாங்குவேன்’ என்று. (பளபளா தாளில் முத்து காமிக்ஸ் இப்போதெல்லாம் அறுபதுமுதல் நூறு ரூபாய்.) பீட்சா வாங்க நினைக்காமல் புத்தகம் வாங்க நினைத்தாயே, தம்பி, நீ வாழ்க! உனக்காத்தானடா இந்தப் புத்தகக் கண்காட்சி!
***
புத்தகக் கடை வைத்திருந்தவர்கள் எல்லாரும் பதின்மூன்று நாள் உழைப்பில் களைத்துப் போயிருந்தனர். என் பதிப்பாளர், பொன்.வாசுதேவன், பாவம், இளைத்தும் போயிருந்தார், சரியான சாப்பாடும் தூக்கமும் இல்லாமல் போனதால். (அவருடைய கடையும் இளைத்துப் போயிருந்ததாகத் தோன்றியது. நிறைய விற்பனை ஆகியிருக்கக்கூடும்.)

இன்று எல்லா வரிசைகளையும் ஒருதரம் பார்த்துவிடுவது என்ற முடிவோடு விரைந்து நடந்தேன். திடீரென்று கண்ணில் பட்டது, ‘தமிழ்ப்பணி’ அரங்கு. அங்கு அதிர்ஷ்டவசமாக எனக்குக் காட்சிதந்தார், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள். பட்டுப்போன்ற வெண் மீசை. உலகில் எங்கிருந்தாலும் அவரை எடுத்துக்காட்டும் ‘டிரேட் மார்க்’ அது. மூக்கின் இருபுறமும் சமமாக நீண்டு, அதன் முடிவில் அகன்று விரிந்து கீழ்நோக்கி நிலம்பார்க்கும் மீசை. எண்பதைத் தொடும் பிராயத்தினர். இருபத்தைந்து ஆண்டுகளாக எனக்குத் தெரிந்தவர். அருமை மனைவியைச் சில ஆண்டுகள்முன்பு இழந்துவிட்ட சோகம் இன்னும் கண்களில் தெரிகிறது.

உலகக் கவிஞர்கள் மாநாடு எங்கு நடந்தாலும் தவறாமல் இவரைப் பார்க்கலாம். திரும்பிவந்தவுடன் அந்தப் பயண அனுபவங்களைப் புத்தகமாக்கி விடுவார். சொந்தமாக அச்சகமும், பதிப்பகமும், ‘தமிழ்ப்பணி’ என்ற மாத இதழும்... தமிழ் நாட்டில் வேறெந்தக் கவிஞரிடம் இருக்கிறது?‘மனோன்மணீய’த்திற்குப் பிறகு தமிழில் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு நாடக நூல் எழுதியவர் இவரே. ரஷியாவின் மிகச்சிறந்த கவிஞர் ஒருவரின் (தாரா சு ச்வேன்கோ) கவிதைநூலை இவர் மொழிபெயர்த்திருக்கிறார். ஓர் ஊரில் தங்கிவிட்டுப் போன இராணுவ வீரன் ஒருவனால் கர்ப்பிணியாக்கப்பட்ட பெண்ணொருத்தி, அந்த இராணுவ வீரர்கள் தம் கூடாரத்தைக் கலைத்துவிட்டு வேறொரு ஊருக்கு வண்டிகளில் புறப்படும்போது, ஒவ்வொரு வண்டியாகப் பார்த்து ‘அவன் இருப்பானோ’ என்று தேடும் காட்சியைப் பெருங்கவிக்கோவின் உயிருள்ள வரிகளில் படித்தது இன்றும் கண்முன்னால் தெரிகிறது.

தமிழைக் காப்போம் என்ற முழக்கத்துடன் குமரியிலிருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டவர். ‘கலைஞரும் கடவுளும் என்னிரு கண்கள்’ என்று தன் ஆன்மிகத்தை உலகறியப் பறைசாற்றியவர். ஐயப்பன் மீது அந்த நாட்களிலேயே இசைப்பேழை வெளியிட்டவர். ஹூஸ்டன் நகர் மீனாட்சி அம்மை கோவிலைக் கண்டவுடன், ‘மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்’ பாடியவர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் அமைத்து உலகளாவிய நட்புக்குப் பாலம் வகுத்தவர்.

‘சேது காவியம்’ என்ற தலைப்பில் மாபெரும் அளவில் காவியம் படைத்திருப்பவர். (அதன் ஐந்தாம் காண்டம் வெளியீட்டு விழா 09-02-2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது. அழைப்பிதழ் பார்க்கவும். அனைவரும் வருக!)

பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டார். (கடைசியாக அவரைப் பார்த்துப் பத்து வருடங்கள் ஆகியிருக்கும்.) கட்டித் தழுவிக் கொண்டார். 

அவரையும் என்னையும் பிணைத்தது தமிழ் மட்டுமின்றி, அரவிந்த அன்னையின் அருளாட்சியுமாகும். அதை நினைவு கூர்ந்தார். எனது ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ சிறுகதைத் தொகுதியை அவரிடம் கொடுத்து ஆசிபெற்றேன்.

அப்போது என் குடும்பம் பற்றி விசாரித்தார். பேரக் குழந்தைகளுக்காகப் புத்தகம் வாங்குவதுதான் இன்றைய நோக்கம் என்றேன். தனது ‘கொஞ்சும் இன்பம்’ என்ற குழந்தை பாடல் புத்தகத்தைக் கொடுத்தார். எழுபது கவிதை நூல்களைப் பெரியவர்களுக்காக எழுதியவர், குழந்தைகளுக்காகவும் எழுதியிருக்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது.

அதிலிருந்து சில பாடல்கள் இதோ:

விழி தம்பி விழி,
விடிந்ததப்பா விழி!
எ\ழு தம்பி எழு!
எழுந்துழைப்பைத் தொழு!

படி தம்பி படி
பாடம் நன்கு படி!
அடி தம்பி அடி
ஆணவத்தை அடி! (பக்.15)

கிழமைப் பெயர்களை மனப்பாடம் செய்ய உதவும் அழகிய பாடல்:

ஞாயிற்றுக்கிழமை
நண்பன் வந்தான்

திங்கட்கிழமை
திருச்சி சென்றோம்

செவ்வாய்க்கிழமை
செயல்கள் முடித்தோம்

புதன்கிழமை
புறப்பட்டு வந்தோம்

வியாழக்கிழமை
வீட்டில் தங்கினோம்

வெள்ளிக்கிழமை
நண்பன் சென்றான்

சனிக்கிழமை
தடைகள் நீங்கின

அதற்குப் பின்னால்
ஆ! ஆ! இன்பம்!


இம்மாதிரி இனிய பாடல்கள் கொண்ட நூல் இது.

விடைபெறும்போது, தாம் திருக்குறளுக்கு உரை எழுதியதைச் சொன்னார். (செம்மொழி உரை). கையடக்கமான அழகிய பதிப்பு. தங்கள் கையொப்பம் வேண்டுமே என்றேன். உடனே ஒரு வெண்பா எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார். ஆசுகவி ஆயிற்றே!பெருங்கவிக்கோ வா மு சேதுராமன் அவர்களின் முகவரி: 12, சாயிநகர் இணைப்பு, சென்னை 6000092. Vamusethuraman35@gmail.com. Ph. 044-24798375, 28552237. அவரது எல்லா நூல்களையும் அவரே வெளியிட்டிருக்கிறார்.
*** 

தன் தந்தையார் பெருங்கவிக்கோவின் நூல்களை வெளியிடுதலும், தமிழ்ப்பணி இதழைக் கொண்டுவருதலுமே தலையாய கடமையாகக்கொண்டு செயல்படுகிறார், மூத்தமகன், வா.மு.சே.திருவள்ளுவர். அவரும் ஏராளமான புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நல்ல பேச்சாளர், நல்ல கவிஞர். தனது பர்மியப் பயணம் பற்றி அவர் எழுதியுள்ள நூல் ‘பர்மா மண்ணிலே..’. அதிலிருந்து சில பகுதிகள்:

பர்மியப் பெயர்களும் மொழியும்

பர்மிய நாட்டில் பெரும்பான்மையான மக்கள் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் இஸ்லாம், கிறித்தவம், ஹிந்து சமயங்களைச் சேர்ந்தவர்கள். ஆயினும் அவர்கள் பர்மிய மொழிப் பெயர்களையே சூட்டிக்கொள்கிறார்கள். அதனால் ஒருவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் என்று கண்டுகொள்ள முடியாது.

மௌங் செய்ன்....மவ்ங் செய்ன் என்பது ஒரு பொதுப்பெயர். மௌங் என்பது தம்பி அல்லது இளவல் என்றும், செய்ன் என்பது வைரம் என்றும் பொருள்படும். இளமையில் மௌங் செய்ன், வாலிபப் பருவத்தைக் கடந்ததும் கோ மவுங்செய்ன் என்றும், மூப்புத் தன்மை அடையும்போது ஊ மௌங் செய்ன் என்றும் அழைக்கப்படுவார்.

‘மௌங்’ தம்பி, ‘கோ’ அண்ணன், ‘ஊ’ தாத்தா என்பன உறவுமுறை சார்ந்த மரியாதைச் சொற்களாகும்.

அதேபோல், இளம் பெண்களின் பெயருக்கு முன்னே ‘மா’ என்றும், தாய்ப்பருவமுள்ளவர்களை ‘டோ’ என்றும் அழைப்பது முறையாகும்.

மா என்றால் சகோதரி என(வும்) பொருள்படும். தனக்கு மூத்த ஒரு பெண்மணியை ‘அமா’ என்றும், தனக்கு வயதில் சிறிய பெண்பிள்ளையை ‘றீ மா’ என்றும் சொல்வார்கள். அதேபோல, மூத்த பெண்களை சின்னம்மா, பெரியம்மா, அத்தே என்ற முறையில் ‘அடோ’ என்று அழைப்பார்கள்.

துறவிகளை –ஆண்பாலராயினும் பெண்பாலராயினும், ‘ஊ’ என்ற மரியாதைப் பெயாரால் அழைக்கிறார்கள்.

இராணுவத்தில் சேவை செய்பவர்களை ‘போ’ என்ற அடைமொழியிட்டு அழைப்பர். போ என்றால் வீரன், தீரன் என்று பொருளாம்.

பர்மாவில் உள்ள தமிழர்கள் தம் பெயரோடு ஒரு பர்மியப் பெயரை இணைத்து வைத்துள்ளார்கள். ஆனால் தம் பெயரின் இறுதியில் சாதிப்பெயரை கட்டாயம் போடுகிறார்கள்.

துறவிகளின் இறப்புவிழா

வெந்நீர் ஊற்று நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வழியில், கோபுரம் போன்ற (ஓர் அமைப்பு) மரக்கட்டையால் செய்யப்பட்டு, மக்கள் வரிசையாக ஏறி நின்று, உச்சியில் சென்று வணங்கித் திரும்பிகொண்டிருந்தனர். ஆண்களும் பெண்களும் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தனர். ஆங்காங்கே பொருட்களும் விற்பனை செய்துகொண்டிருந்தனர். ‘இது என்ன’ என்று வினவினேன். ‘புத்தத் துறவிகள் இறந்தால் அவர்களை கோபுரம் அமைத்து, சில நாட்கள் வைத்திருந்து, எல்லாப் பெருமக்களையும் வரவழைத்து, அவர்கள் உயரத்தில் மேலே சென்று சந்தனக்கட்டை, ஊதுபத்தி வைத்து வணங்குவர். ஒரு கோபுரத்தில் அவர் உடலும், மறு கோபுரத்தில் மரங்களும் அடுக்கி இறுதியாக எரிப்பர். இதை பர்மிய மக்கள் விழா எடுத்துக் கொண்டாடுவர்’ என்று கூறினார்.

(நாங்களும்) வரிசையில் நின்று, ஏணியில் ஏறி, துறவிக்கு ஊதுபத்தி வைத்து சிறிதுநேரம் அமைதியாக நின்று, வணங்கி, அஞ்சலி செலுத்தினோம். பின் அருகில் உள்ள மரக்கோபுரத்தில் சென்று அனைவரும் சிறுசிறு கட்டுக்களாக (மரக்கட்டைகளை) வைத்தனர். நாங்களும் சென்று கட்டைகளை வைத்து மண நிறைவடைந்தோம். பர்மிய மக்களின் குருபக்தி உண்மையிலேயே நெஞ்சைத்தொட்டது. ஆனால் அங்கு பேச்சுக்களே காணப்படவில்லை. தண்டரா சப்தங்கள் (மட்டுமே) ஒலித்துக் கொண்டிருந்தது.

யங்கூன் தங்கப் புத்தர் ஆலயம்

யங்கூன் நகரில் ‘சூலே பக்கோடா’ கோயில், யங்கூன் நகரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் அகன்ற உயரமான உயர்கோபுரங்களில் தங்க மெருகூட்டி இரவும் பகலும் பளபளக்கும் வண்ணம் அமைத்துள்ளனர். அந்தப் பொன்னொளிர் கோபுரங்களைக் காண்பதற்கு கண்கோடி வேண்டும்.

நம் இந்திய மண்ணில் தோன்றிய புத்தபகவானின் கருத்துக்கள், கொள்கைகள் பல, உலகின் பல பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதை எண்ணும்போது இந்திய மண்ணில் பிறந்தவர்கள் நாம் என்ற எண்ணம் பெருமை பூக்கிறது.

கோயில் நுழைவாயிலில் அயலவர் என்று கண்டுவிட்டால் டாலர் கட்டணம் செலுத்தவேண்டும். (எனவே பர்மியர்களைப்போல கைலியைச் சட்டைக்குமேல் கட்டி பர்மியத் தமிழர்களாக மாறினோம்.)

எங்கு நோக்கினும் புத்தர் சிலைகள். சிறிய பெரிய வடிவங்களில் புத்தரின் அருட் கடாட்சத்தைக் காணமுடிகிறது.

மேல்தளத்தில் கோயிலைச் சுற்றி சிறிய புத்தரும் புத்தருக்கு அருகில் நீரூற்றுக்களும் வந்துகொண்டிருந்தன. என்ன என்று வினவியபோது, நாம் நினைத்தது நிறைவேற நம் வயது எத்தனை ஆண்டோ அத்தனை குவளையில் நீர் பிடித்து புத்தர்மீது ஊற்றி குளிரவைத்ததும் நினைத்தது நடக்கும் என்று கூறினர். யானும் புத்த பகவானை வேண்டி எனது வயதுக்கேற்ப 43 (குவளைகள்) கணக்கிட்டு நீர் ஊற்றி மகிழ்ந்தோம்.

தண்டாயுதபாணி திருக்கோயில்

யங்கூன் நகரத்தில் ஆறரை தண்டாயுதபாணி கோயில் உள்ளது.   மிகப் பெரிய கோயில். அந்தக் கோயிலைக் கண்டாலே எந்த அளவு வருமானம் கண்டு உருவாக்கியிருப்பார்கள் என்பதை அறியமுடியும்.

கோயிலின் ஓர் அறையில் இரும்புப் பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இரும்பு கதவு போட்டு மூடிவைத்துள்ளனர். மியான்மாரில் தொழில்செய்த செல்வச் சீமான்களின் கருவூலங்கள். கலவரத்தின்போது பெருமக்கள் அனைவரும் கோவிலில் பெட்டிகளை போட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று நாடு திரும்பியவர்கள். அந்தப் பெட்டிகள் பச்சை நிறத்தில் அப்படியே இருந்தது கண்களில் நீரைப் பெருக்கெடுக்க வைத்தது.

கலவரத்தால் ஓடியவர்கள் போக, இருந்த அறுவரில் ஒருவராக இராமநாதன் செட்டியார் கோயிலில் இருந்தார். எங்களை கோயிலுக்குள் வரவேற்று இலைபோட்டு வடை தேநீரும் வழங்கினார்.

பல்வேறு செய்திகளையும் அங்கிருந்த பெருமக்களிடம் கலந்துரையாடினோம். விட்டுச் சென்ற சொத்துக்களைஎல்லாம் மீட்பதற்கு வழியுண்டா என்ற கணைகளையும் தொடுத்தோம். செட்டிமக்கள் வழிவந்த பெருமகனே நம் நிதியமைச்சர், தமிழர் சொத்துக்களைஎல்லாம் மீட்பதற்குரிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவேண்டும் என்றார்....

© Y.Chellappa


குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில், மேல்நோக்கிய கட்டைவிரல் மீது அழுத்தவும். நன்றி.

23 கருத்துகள்:

 1. அடடா... துணைவியாரின் மகிழ்ச்சிக்கு காரணம் அது தானா...? அதனால் உங்களுக்கு நல்லது...! ஹிஹி....

  சுண்டல் சிறுவனின் நிலை வருந்த வைத்தாலும், அவனின் எண்ணம் மகிழ்ச்சி...

  பெருங்கவிக்கோ வா மு சேதுராமன் தகவல்கள் சிறப்பு... திருக்குறளின் உரை நூலை வாங்க வேண்டும்... முகவரிக்கு நன்றி... அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. மின் நூல் - உங்களுக்கும் உதவலாம் :

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

  நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 3. புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்குவதோடு அல்லாமல் அந்த அனுபவங்களையும் சுவைபடத் தொகுத்திருக்கின்றீர். வாங்கும் புத்தகங்கள் எல்லாவற்றையும் முழுவதையும் படிப்பீர்களா இல்லை ஆங்காங்கே மட்டுமா.?கொடுத்து வைத்தவர்...! என் போன்றோரின் புத்தகங்கள் விற்பனை ஆகிறதா இல்லையா. தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை போலிருக்கிறது./ பர்மா மண்ணிலே அயலவர் என்றால் டாலர் கட்டணம் செலுத்தவேண்டும். ஆகவே பர்மியத் தமிழர்களாக மாறினோம்./ எப்போதுமே இருக்கும்மண்ணின் மைந்தர்களாக இருக்கமாட்டோமே. இந்த முறை தொகுப்பு ரசித்தேன். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் மகிழ்ச்சி என் பாக்கியம். (2) எல்லாப் புத்தகங்களையும் நிச்சயம் படித்துவிடுவேன். தொண்ணூறு சதமாவது படித்துவிட்ட பின்புதான் அந்தப் புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன். துரதிர்ஷ்டவசமாக, எப்போதுமே என்னிடம் படிக்கப்படாத புத்தகங்கள் இருபத்தைந்தாவது இருக்கும். இளமையில் படிக்க நேரமும் மனவலிமையும் இருந்தபோது இந்த அளவுக்குப் புத்தகங்கள் வெளிவரவில்லை. வந்த புத்தகங்களை வாங்கிப்படிக்கவோ பொருளாதார நிலை இடம் தரவில்லை. நூலகத்தில் இருந்தவற்றை மட்டுமே படிக்கமுடிந்தது. இப்போது பணம் இருக்கிறது, புத்தகங்கள் கிடைக்கின்றன- இலவசமாகவும் கூட..... படிக்கத்தான் நேரமும் மனத்தெம்பும் குறைவாக இருக்கிறது. வாழ்வின் விசித்திரம்!
   (3) யாருடைய புத்தகம் விற்பனைஆகிறது என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்! ஆனால், மறைந்த எழுத்தாளர் ராஜெந்திரகுமாரின் 'வால்கள் நடத்திய மண்டகப்படி' எங்கே கிடைக்கும் என்று ஒரு இளைஞர் கடைகடையாகச் சுற்றிக்கொண்டிருந்தார். வழிகாட்ட யாரும் இல்லை. Moral of the story: எப்படியாவது பிரபலமாகிவிடுங்கள். புத்தகம் விற்கும்.(4) மண்ணின் மைந்தர்கள் பற்றிய உங்களின் குறும்பு வார்த்தைகளை ரசித்தேன்! வருகைக்கு நன்றி!

   நீக்கு
 4. மிகச் சிறப்பான, தகவலுடன் விமர்சனம் ஐயா!பகிர்வுக்கு
  மிக்க நன்றி!தங்களைத் தாயகம் கடந்த தமிழ் கருத்தரங்கில் காண முடியவில்லையே! எதிர்பார்த்தோம்!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னித்துவிடுங்கள் நட்புத்தம்பதியரே! ரயில் டிக்கட் முன்பதிவு செய்து ரத்து செய்ததில் நூற்றி அறுபத்தைந்து ரூபாய் இழப்புதான் மிச்சம். எதிர்பாராத காரணமாக நான் சென்னையை விட்டு வெளியே போகமுடியாத சில வேலைகள் ஜனவரி 20, 21 இல் வந்துவிட்டன. எனவே கோவைக்கு வர இயலாமல் போயிற்று. எனது ஆர்வம் சிதைந்து போயிற்று. தங்களைப் போன்ற நல்லோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் தவறிப் போயிற்று. பரவாயில்லை, உலகம் மிகச் சிரியதுதானே! மீண்டும் எங்காவது சந்திப்போம். நன்றி.

   நீக்கு
 5. நான் வ.மு. சே. திருவள்ளுவரைச் சந்தித்து வந்தேன். அவரது நூல்களையும் வாங்கி வந்தேன். தாங்கள் அவரது தந்தையைச் சந்தித்து வந்துள்ளீர்கள். அந்தத் தொகுப்பைக் கல்லூரிக்கு கல்லூரியின் அனுமதி பெற்று வாங்குகிறேன் என்று கூறி வந்தேன்.

  அழகாகன கோவையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முதல் வருகை எனக்குப் பேருவகையையைத் தருகிறது. தனித்திறமை படைத்த பெருங்கவிக்கோவின் நூல்கள் எல்லா நூலகங்களிலும் இடம்பெறவேண்டும். இன்றில்லாவிடினும் நாளை, காலம், அவற்றிற்கு உரிய மதிப்பைப் பெற்றுத்தரும். நாம் கருவிகளாக இருப்போமே! வாழ்த்துக்கள்.

   நீக்கு
 6. சுண்டல் சிறுவன் மனதை நெகிழச் செய்துவிட்டான் ஐயா

  பதிலளிநீக்கு
 7. நீங்கள் அதிகப் புத்தகங்கள் வாங்கியது எனக்கும் மகிழ்ச்சியே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் உள்நோக்கம் புரிகிறது அன்பரே! ஆனால் புத்தகங்களைப் படித்துவிட்டுப் பத்திரமாகத் திருப்பித்தந்துவிடவேண்டும் எனபதை நினைவூட்டலாமா?

   நீக்கு
 8. அந்த பர்மா தமிழர்களின் கருவூலப் பட்டிகளின் நிலை அறிந்து மனம் மிக்க வேதனையுற்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே! அண்மையில் நகரத்தார்கள் ஏதோ ஒரு சங்கம் அமைத்து முயற்சித்துக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. பார்க்கலாம்!

   நீக்கு
 9. தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் பெருங்கவிக்கோ அறிமுகம் ஆனவர் .அவருடன் பழகும் பேறு உங்களுக்கு கிடைத்து இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைத்தேன் !
  த .ம 9

  பதிலளிநீக்கு
 10. எனது கல்லூரிப் பருவத்தில் நூலகத்தில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் கவிதைகளை கட்டுரைகளைப் படித்து இருக்கிறேன். நல்ல தமிழ் உணர்வாளரான அவருடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அவரைப் பற்றியும் அவரது நூல்கள் குறித்தும் பகிர்ந்தமைக்கு நன்றி!

  // ஒரு சுண்டல் சிறுவன், இன்னொரு சுண்டல் சிறுவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான், ‘இன்னும் பத்து ரூபாய் சேர்ந்துவிட்டால் போதும், ‘முத்து காமிக்ஸ்’ புத்தகம் வாங்குவேன்’ என்று. //

  படிக்கும் ஆர்வம் கொண்ட அந்த ஏழை சிறுவனுக்கு நீங்களே அந்த புத்தகத்தை வாங்கிக் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். (தப்பாக நினைக்க வேண்டாம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக! ஆனால் அந்தச் சிறுவன் ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டேயிருந்தான். கடைசிநாள் என்பதால் கூட்டம் அதிகம். தனது வியாபாரத்தில் அவன் கண்ணாக இருந்தான். சுயமாக அவன் சம்பாதித்து, தனக்குப் பிடித்தமான புத்தகத்தை வாங்கும்போது அவன் அடையும் மகிழ்ச்சிக்கு நிகர் இருக்கமுடியுமா? அதேசமயம் நீங்கள் சொன்னமாதிரியான நல்ல சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேனே என்று நிச்சயம் வருந்துகிறேன். அடுத்தமுறை நானே வாங்கிக் கொடுப்பேன். அப்போது உங்களையும் நினைவுகூர்வேன். நன்றி நண்பரே!

   நீக்கு

 11. 'தாத்தா வீட்டு வெள்ளரி' நூல் வெளியீட்டு இருக்கிறீர்கள். வாழ்த்துகள். பொன். வாசுதேவன் அரங்கில்தான் நான் விமலாதித்த மாமல்லன் சிறு கதையும், வா. மணிகண்டன் மின்னல் கதையும், தேனம்மையின் அன்னபட்சியும் வாங்கினேன். தங்களது புத்தகம் அங்குதான் வெளியீட்டு இருக்கிறீர்கள் என்ற தகவல் தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேன்.

  அகநாழியில் வாங்கிவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடைசிநேர அவசரங்கள். தங்களுக்குத் தொலைபேசியில் தெரிவிக்க விட்டுப் போய்விட்டது. பொறுத்துக்கொள்ளுங்கள். வாங்கிப் படித்தபின் எழுதுங்கள். நன்றி.

   நீக்கு