(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும்
வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ
அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல்
காங்கிரசும் கருணாநிதியும் விஜயகாந்தின்
வீட்டு வாசலில் தவம் கிடக்கின்றன. எல்லா முயற்சிகளும் தோற்றுவிட்ட நிலையில் ‘எங்கள்
அணிக்கு வந்துவிடுங்கள்’ என்று பாதிரியார்களை விட்டு வசப்படுத்த முயல்கிறார்
கருணாநிதி. கருணாநிதியைப் பயமுறுத்த 2 ஜி
மற்றும் சிபிஐ போன்ற எத்தனையோ ஆயுதங்கள் காங்கிரசிடம்
இருந்தும், விஜயகாந்த்தைப் பணியவைக்க அவை
பயன்படவில்லை. மனுஷன் ஏதாவது தப்பு செய்தால் தானே! பா.ஜ.க.வும் விஜயகாந்த்திடம்
பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
எந்தக் கட்சியுடனாகட்டும், பேரம்
படிவதற்குக் கேட்கப்படும் தொகையின் அளவுதான் கூட்டணியைத் தாமதப்படுத்திக் கொண்டிருப்பதாகப்
பத்திரிகைகள் சொல்கின்றன. மாநிலச் சட்டமன்றத் தேர்தலின்போது முன்கூட்டியே
பா.ம.க.வுக்கு இட ஒதுக்கீடு செய்துவிட்டு காங்கிரசைச் சிக்கலில் மாட்டிவிட்ட கலைஞரின்
ராஜதந்திரம், இப்போது சாமானியரான விஜயகாந்த்தின் முன்னால் எடுபடாமல் போனது
விந்தையே! ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று சும்மாவா
சொன்னார்கள்?
புத்தகம்
புத்தாண்டு பிறந்ததோ இல்லையோ, சென்னையில் எழுத்தாளர்களும்
பதிப்பகங்களும் ‘செம பிசி’. எங்கு பார்த்தாலும் வெளியீட்டு விழாக்கள் தாம். காலச்சுவடு
ஒருபுறம், உயிர்மை ஒருபுறம், டிஸ்கவரி ஒருபுறம், அகநாழிகை ஒருபுறம். எல்லாரும் ஒரே
சமயத்தில் என்றால் யாரை விடுவது என்ற குழப்பத்தில் வாசகர்கள் தவித்தார்கள். (நான்
உள்பட.)
கடைசியில் சைதாப்பேட்டை அகநாழிகையில்
ஒன்றும் கே.கே.நகர் டிஸ்கவரியில் ஒன்றுமாக இரண்டு விழாக்களில் கலந்துகொண்டேன்.
சனிக்கிழமை (4-1-2014) அன்று அகநாழிகையில் ஐந்து கவிஞர்களின் கவிதை
நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கல்கி தலைமை உதவி
ஆசிரியர் திரு அமிர்தம் சூர்யா கலந்துகொண்டார். விழாவில் வெளியிடப்பட்ட இரண்டு
நூல்களைப் பற்றிய என் சுருக்கமான விமர்சனம் இங்கு இடம்பெறுகிறது. (மற்றவை அடுத்த
அபுசிதொபசியில் காண்க.)
க. இராமசாமியின் “ஏன் என்னைக் கொல்கிறீர்கள்?”
கவிஞரின் முதல் தொகுப்பு இது.
கணினித்துறையில் பணியாற்றும் இளைஞர். அமெரிக்காவிலிருந்து இப்போதுதான் திரும்பி
வந்தாராம். இன்னும் சில நாட்களில் மீண்டும் செல்கிறாராம். புத்தகக்கண்காட்சியில்
தன்னுடைய நூலை நாலுபேர் பாராட்டுவதைப் பார்த்துவிட்டுப் போகக்கூடாதோ?
வித்தியாசமான மனிதராக இருக்கிறார்
இராமசாமி. எல்லாரும் தங்கள் முதலாம் திருமண ஆண்டுவிழாவைக் கொண்டாட வெவ்வேறு வழிகளை
யோசிக்கையில் இவருக்கு மட்டும் ‘ஏன் இன்று முதல் கவிதை எழுதிப் பார்க்கக்கூடாது’
என்ற யோசனை வருகிறது. பாவம்! இவர் எழுதிய முதல் கவிதை என்ன தெரியுமா?
விடுமுறை நாளில்
வேறு வேலை இல்லாததால்
பொழுதுபோக்க வழி தேடி
என் முகம் வரைய
முயற்சி செய்கையில்
வந்த முதல் முகம்
பாமா விஜயம் நாகேஷைப் போலவும்
இரண்டாம் முகம்
சற்று அப்புசாமி தாத்தா போலவும்
மூன்றாம் முகம்
முற்றும் துறந்த முனிவனைப் போலவும்
ஏன் என்று யோசிக்கையில்
அலைபேசியில் வந்த
குறுஞ்செய்தி சொன்னது
Happy Wedding Anniversary!
நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் எல்லாமே ‘மிகச்சிறந்த’
ரகம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. (ஒரு கவிதைக்கும் தலைப்பு கொடுக்கவில்லை இந்தக்
கவிஞர். தாவணியா, புடவையா என்று தெரியவேண்டாமா?)
இலைகளை உதிர்த்து
வான் நோக்கி நின்று கொண்டிருந்தது
வேப்ப மரம்
உதிர்ந்திருந்த
இலையொன்றை
காலில் கொத்திச் சென்றது
வேப்பம்பழத்தை எடுத்துச்
சென்ற ஒரு பறவை
இலைகளற்று நிற்கும்
இம்மரத்தினை
இங்கு விட்டுச் சென்ற பறவை
எங்கு நட்டுக் கொண்டிருக்கிறது
இன்னொரு மரத்தை இப்பொழுது? (பக்கம் 28)
என்ற கவிதையை படிக்கும்பொழுது “ஆகா, இந்த
ஆசாமிக்கு என்னமாய்க் கைவருகிறது கவிதை!” என்று சொல்லாமல் இருக்க முடிகிறதா?
நண்பனுடன் ஊர் சுற்றல்
இரண்டாம் ஆட்டம் சினிமா
சாலையோர உணவு என
மெதுவாகவே நகருகிறது
மனைவி ஊருக்குப் போன பின்
வரும் ஒவ்வொரு மாலையும்
தூக்கம் கலைக்கும்
குழந்தையின் சிணுங்கல்
கொஞ்சம் என்னன்னு பாக்கலாம்ல
இனிக்கும் மனைவியின் கொஞ்சல் என
விரைவாக விடிகிறது
மனைவி ஊரிலிருந்து வந்த பின்
வரும் ஒவ்வொரு காலையும். (பக்கம் 43)
என்ற கவிதையைப் படிக்கும்போது ‘ஐயோ பாவம்’
என்றல்லவா சொல்லவேண்டி இருக்கிறது!
தொலைபேசி நிறுவனங்கள் பல
வந்துவிட்டபோதிலும் இன்றும்கூட அரசுத்துறை தொலைபேசி வேண்டுமானால் லஞ்சம் கொடுத்தே
ஆக வேண்டும் என்ற நிலைமை இருப்பதை நாம் அறிவோம். (நான் மூன்று முறை
அறிந்திருக்கிறேன்!) அது பற்றியதோர் அழகான கவிதை:
கணக்குப் பரிட்சையில் பாஸ் செய்ய
ஒடப்பட்டி பிள்ளையாருக்கு
ஒன்பது தேங்காய்
ராமமூர்த்தி மாமாவின் பேச்சுக்கு
மறுபேச்சு சொன்னதில்லை
எப்போதும்
கவர்மெண்டு உத்தியோகம் கிடைக்க
செவ்வாயும் வெள்ளியும் துர்கைக்கு
நெய் விளக்கு
எதிர்த்த வீட்டு லச்சுமி அக்காவின்
சொல்லுக்கு எதிர்சொல் யாரிடமும்
வந்ததில்லை எப்போதும்
நல்ல பொண்ணு அமைய
நித்திய கல்யாணப் பெருமாள் ஒரு நடை
சேவிச்சுட்டு வந்திருங்கோ
எல்லாருக்கும் சொல்வார்
ஜோசியர் தியாகு மாமா
யாரு யாருக்கோ செய்யறோம் சார்
உங்களுக்கு மாட்டோமா
ஒரு ஐயாயிரம் தந்துருங்க
தொலைபேசி இணைப்பு வேண்டி கேட்ட போது
சொல்லியவர் பேர் கூட
சிவமூர்த்தி என்றுதான் இருந்தது. (பக்கம் 42)
கைக்குள்ளும் மனதிற்குள்ளும்
அடங்கும்படியான கவிதை தொகுப்பு. வாழ்க இராமசாமி!
(72 பக்கம் 6௦ ரூபாய், அகநாழிகை
வெளியீடு). ஆசிரியரின் வலைத்தளம்: http://satturmaikan.blogspot.com மின்னஞ்சல்: ramasamy.kannan@gmail.com
ஷான் எழுதிய “விரல்முனைக் கடவுள்”
ஷான் என்கிற ஷண்முகமும் கணினித்துறையில்
இருப்பவர் தான். (கட்டிடக்கலை படித்துவிட்டு!) அகநாழிகையில் எண்பது ரூபாய்
கொடுத்தால் கிடைக்கும் இந்த நூறு பக்க கவிதை தொகுப்பு எப்படியிருக்கும் என்பதற்குக்
கவிஞரின் முன்னுரையில் இருந்தே உதாரணம் காட்டலாம்: “பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது
கவிதை எழுதத் தொடங்கினேன். அக்ரஹாரத்தில் சுற்றிக் கொண்டிருந்த என் கவிதைகள் நீலத்
தாவணி அணிந்திருந்தன. பிறகு கல்லூரி படிக்கும்போது ஒருநோட்டு முழுக்க கவிதை என்ற
பெயரில் நிறைய எழுதினேன். அவை சுடிதார் அணிந்திருந்தன... அலுவலகத்தில் ஒரு தோழி
என் எழுத்து நன்றாக இருப்பதாகவும் நான் மாதம் ஒரு கவிதையாவது எழுதவேண்டும் என்றும்
உரிமையோடு கேட்டுக்கொண்டார்...”
அந்தத் தோழிக்கு நன்றி சொல்லலாம்.
எல்லாமே சிறப்பான கவிதைகள். ‘அம்முவின்
உலகம்’ ஒரு குழந்தையைப் பற்றியது.
அவள் டாக்டராக மாறினால்
ஊசி போட்டுக் கொள்ள
வரிசை கட்டி நிற்கும் பிளாஸ்டிக்
விலங்குகள்
அவள் ஊதிச் செல்லும் சோப்புக் குமிழிகள்
சந்தோஷமாய்ச் சுமக்கின்றன
அவள் மூச்சின் குட்டிகளை
களைத்துத் திரும்பும் மாலைகளில்
சிறு தொடுகையில்
மோட்சம் தந்து மறைகிறாள்
மகிழ்ச்சி மரத்துப் போன
மனித உலகத்தின் நடுவில்
சிரிப்பைப் பூசிய அவள்
சின்னச்சிறு உலகம்
பொறுக்க முடியாமல்தான்
பள்ளியில் சேர்த்து விட்டோம்.
மழலையின் இனிமையை ரசிப்பதையும் அனுபவிப்பதையும்
தொந்தரவாகக் கருதும் மனநிலையை எங்கிருந்து பெற்றோம் நாம் என்று கேட்கிறார் கவிஞர்.
‘புதிய கோவில்’ என்ற தலைப்பில் ஓர்
அர்த்தமுள்ள கவிதை:
ஊருக்கு வெளியே பாழடைந்த கோவில்
சில நூறு வருடமாய்
சிலந்திகள் சிரித்து வாழும்
சிதிலமான மண்டபம்.....
கள்ளிச்செடி பூத்திருக்கும்
கவனிப்பாரற்ற கருங்கல் தளம்
மாடொன்று படுத்துறங்கும்
மூலவர் இல்லாக் கருவறை....
இறைவன் இல்லை என்று
மனிதன் வெளியேறியதும்
மனிதன் இல்லை என்று
இறைவன் குடியேறிய பாழடைந்த கோவில்.
இதோ ‘ரகசியம்’ என்ற கவிதையின் அழகியல்
நிறைந்த அற்புத வரிகள்:
“யாரிடமும் சொல்லாதே என்று
யாரிடமோ சொல்லும் போதே
கற்பிழக்கின்றன நம் ரகசியங்கள்..”
வாழ்த்துக்கள் ஷான் அவர்களே!
அகநாழிகையின் இன்னொரு கம்பீரமான படைப்பு
இது. ஆசிரியரின் வலைத்தளம்: www.kanavudesam.com மின்னஞ்சல்: shan.mugavari
@gmail.com
சினிமா & தொலைக்காட்சி
பாலு மகேந்திராவின் “தலைமுறைகள்” பார்த்தே
ஆகவேண்டிய படம் என்று தெரிகிறது. இல்லையென்றால் அமுதசுரபியில் டாக்டர் திருப்பூர்
கிருஷ்ணனே அதைப் பற்றி இரண்டுபக்க விமர்சனம் எழுதுவாரா?
தாத்தாவாக வரும் பாலு மகேந்திராவின்
இயல்பு மீறாத நடிப்பு எவ்வளவு பாராட்டப்படுகிறதோ, அதே அளவுக்குக் கதையின் உள்ளுறையும் போற்றப்படுகிறது. திருப்பூர்
கிருஷ்ணன் கூறுகிறார்:
“மத நல்லிணக்கக் கருத்துக்கள் அழுத்தமாகவும்
இயல்பாகவும் சொல்லப்படுகின்றன.
பாதிரியாரும் மாறவில்லை. தாத்தாவும் மாறவில்லை. ஆனால் அடுத்த தலைமுறை தங்களைப்
போல் இராது என்பதையும் இருக்கத் தேவையில்லை என்பதையும் அவர்கள்
புரிந்துகொள்கிறார்கள். படத்தின்
இறுதியில் தாத்தாவின் இறப்பைக் காட்சிப்படுத்தாமல் அதை வார்த்தைகளால் சொல்லி
விலகிவிடுவதும் பாலு மகேந்திராவின் அழகியல் உணர்ச்சியின் வெளிப்பாடு.
“உண்மையில் தமிழ் வாழ என்ன செய்ய வேண்டும்
என்பதை இந்தப் படம் கோடிட்டுக் காட்டுகிறது...”
சுருக்கமாக, “பாலு மகேந்திரா எழதி,
இயக்கி, நடித்துள்ள கவிதை”, என்கிறார் திருப்பூர் கிருஷ்ணன். நீங்கள்
பார்த்துவிட்டீர்களா?
பத்திரிகை
சென்ற வாரம் அமரர் பிரபா ராஜன் நினைவு
சிறுகதை போட்டியில் (இரண்டாம்) பரிசினை நான் பெற்றுக்கொள்ளச் சென்றபோது சந்தித்தவர்
தான் திரு சந்திரா மனோகரன். அவருக்கு மூன்றாம் பரிசு கிடைத்திருந்தது.
மேடையிலிருந்து கீழிறங்கும்போது ஒரு புத்தகத்தை என் கையில் கொடுத்தார். நாற்பது
பக்கமுள்ள சிற்றிதழ். ‘சிகரம்’ என்று பெயர். அவர்தான் ஆசிரியர். காலாண்டிதழ்
ரூபாய் 15. ஈரோட்டிற்கு அருகிலிருந்து வருகிறது.
அழகான வடிவமைப்பு. அதைவிடவும் உள்ளுறையின்
அழகு என்னைக் கவர்ந்தது. ‘சிற்றிதழ் சிறப்பிதழ்’ என்று வந்திருக்கிறது. பல
சிற்றிதழ் ஆசிரியர்கள் தங்கள் இதழ் தோன்றி வளர்ந்து நிலைத்த அல்லது நிலையாது போன
வரலாற்றைச் சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள். எப்படியெல்லாம் அசிங்கப்பட்டிருக்கிறார்கள்!
புதுக்கோட்டையிலிருந்து வரும் ’தாழம்பூ’
என்ற (கையெழுத்து) இதழின் ஆசிரியர் எம்.எஸ்.கோவிந்தராசன் கூறுகிறார்: “நூறாவது
இதழ் மட்டும் கவிஞர் மு மேத்தா அவர்களின் பேட்டியுடன் அச்சில் வெளியிட்டேன். இதில்
விளம்பரம் போடச் சொன்னவர்கள், போட்ட பிறகு பணம் கேட்டதற்கு ‘இதுல விளம்பரம் வந்து
தான் எங்கள் வியாபாரம் பெருகப் போகிறதாக்கும்’ என்று கேலியாகப் பேசி கையை விரித்து
விட்டனர்.”
சிற்பி, வேர்வையை மட்டும் சிந்தி, தான்
மறைந்தாலும் தன் சிற்பங்களால் உயிர் வாழ்கிறான். இந்த எழுத்தாளர்களோ, தங்கள் அனைத்தையுமே
இழந்து சிற்றிதழ் நடத்தி, தங்களோடு அச்சிற்றிதழ்களையும் இழந்திருக்கிறார்கள். ஆனாலும்
இன்னும் அம்முயற்சியில் அயராமல் ஊர்தோறும் சிற்றிதழ்கள் தோன்றிக்கொண்டுதான்
வருகின்றன. அவரவர் தம் வசதியைப் பொறுத்து காசு கொடுத்து வாங்கி ஆதரித்தால் தான்
எழுத்து என்ற செடிக்கு நீர் ஊற்றியவர்களாவோம்.
எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்த செய்தி
என்னவென்றால், ‘சிகரம்’ இதழ் சிறுகதை நூல்களுக்கான ஒரு போட்டியையும்
நடத்துவதுதான்! மொத்தப் பரிசு ரூபாய் பதினைந்தாயிரம். 20-1-2014 க்குள் உங்கள் சிறுகதை நூலின் இரு படிகளை,
தன்முகவரியிட்ட அஞ்சலட்டையுடன் அனுப்பிவைக்கவேண்டும். தகவல்களுக்கு: sigarammagazine@gmail.com வலைத்தளம்: www.sigaramidhazh.blogspot.com
சந்திரா மனோமனோகரனுக்கு வாழ்த்துக்கள்!
கனடாவில் ஓர் தமிழகம்
சென்னை மத்திய கைலாஷ் பஸ்நிறுத்தம். மாலை
மங்கிய நேரம். எனது குடியிருப்பிற்குச் செல்லும் பஸ் வர இன்னும் சில மணித்துளிகள்
இருந்தன. அருகிலிருந்த வண்டிக்காரரிடம் பத்து ரூபாய்க்கு வறுத்த வேர்க்கடலை
வாங்கினேன். ஒரு பழைய குங்குமம் இதழைக் கிழித்துக் கூம்புபோலாக்கி அதில் எண்ணி
இருபது கடலைகளைச் சுற்றிக்கொடுத்தார். கடலைகளைச் சுவைத்தபின் காகிதத்தைப்
பிரித்தேன். அட, நம்ம ஈழக்கவிஞர் சேரனின் பேட்டி! (குங்குமம் 14-1-2013 பொங்கல் சிறப்பிதழ்-
பக்கம் 116)
கேள்வி: கடந்த கால் நூற்றாண்டு புலம்பெயர்
வாழ்க்கை எப்படியிருக்கிறது? அந்த வாழ்க்கையில் பெற்றது என்ன?
பதில்: துவக்க காலங்களில் அலைவும்
உழல்வுமாகத்தான் இருந்தது. ‘காலம் மாறும், பழையபடி ஊருக்குத் திரும்பிவிடலாம்’
என்ற மெல்லிய நம்பிக்கை இருந்தது. பின்னர் அது அற்றுப்போயிற்று. இப்போது
புலம்பெயர் வாழ்வு பல்வேறு சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் தருகிறது. அவற்றுள் முக்கியமானதாக
அமைவது எனக்குக் கிடைத்துள்ள பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், அரசியல்
சுதந்திரம் போன்றவை. இலங்கையில் இது சாத்தியமில்லை.
ஏறத்தாழ இரண்டேகால் லட்சம் தமிழர்கள்
கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். யாழ்ப்பாண நகர எல்லைக்குள் வாழும் தமிழர்களின்
எண்ணிக்கையைவிட, கனடாவின் டொராண்டோ நகரில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம்..."
இதைப் படித்தவுடன் கனடா மீது எனக்கு
ஏற்பட்ட மரியாதை இன்னதென்று சொல்லமுடியவில்லை. அகதிகளாக
வந்தவர்களுக்கும் அனைத்து சுதந்திரமும் வழங்கி, கௌரவமாகவும் வாழ நல்வழி அமைத்துக்
கொடுத்துள்ள கனடாவை எவ்வளவு போற்றினாலும்
தகும்!
சிரிப்பு
‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுகிறவர்கள்,
ஏன் டெல்லி சென்று வருகிறார்கள்?’ என்று காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், பெரியவர்
தி.சு.கிள்ளிவளவனிடம் கேட்டாராம்.
‘டெல்லி ஆபீசில் இரண்டு விதமான சென்ட் பாட்டில்கள்
இருக்கும். கருணாநிதியுடன் கூட்டணி என்றால், அவருக்குப் பிடித்த சென்ட் எடுத்துக்
கொடுப்பார்கள். ஜெயலலிதாவுடன் கூட்டணி என்றால், அவருக்குப் பிடித்தமான சென்ட்
பாட்டிலை எடுத்துக் கொடுப்பார்கள். காங்கிரஸ் தலைவர் டெல்லி போவது சென்ட் பாட்டிலை
வாங்கத்தான்’ என்றாராம் அவர்.
(நன்றி:
ஆனந்தவிகடன் 8-1-14 பக்கம் 41)
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
©
Y.Chellappa
Email:
chellappay@yahoo.com
நன்றி சார்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
அரசியல் பற்றியும் கவிதை நூல்கள் பற்றிய விமர்சனம் மிக அருமையாக உள்ளது.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா
த.ம2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்!
நீக்குநன்றி சார். வந்திருந்து வாழ்த்தியது மட்டுமல்லாமல் தொகுப்பைப் படித்து ஊக்கம் அளித்த அன்புக்கும்.
பதிலளிநீக்குகண்டது கற்க பண்டிதன் ஆவான் என்ற பழமொழி உங்களுக்கு முற்றிலும் பொருந்தும் ,கடலைச் சுற்றிக் கொடுத்த காகிதத்தைக் கூட விட மாட்டேன் என்கிறீர்களே !
பதிலளிநீக்கு+1
நன்றி நண்பரே! ஒருமுறை கவனக்குறைவாக, கடலையைச் சுற்றியிருந்த காகிதத்தின் ஓரத்தைக் கடித்துவிட்டேன். கடலையைவிட அது சுவையாக இருந்தது! (எப்போதுமே காகிதத்தையும் சாப்பிடுவேனோ என்று சந்தேகப்படமாட்டீர்களே)
நீக்குஅருமையான அலசல்.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குபுத்தக விமர்சனம் அருமை... அவரின் தள அறிமுகத்திற்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நன்றி ஐயா! எவ்வளவோ பேர் எவ்வளவோ உயர்வான காரியங்களை யாருக்கும் தெரியாமல் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டவுடன் உலகுக்குத் தெரிவித்தாகவேண்டும் என்ற பரபரப்பு மேலிடுகிறது. முடிந்தவரை செய்கிறேன். (தங்களை விடவா?)
நீக்குதேதிமுக குறித்து கட்சிகளின் மதிப்பீடு அளவுக்கு அதிகம் என்பதுதான் என் மதிப்பீடு. கடந்த தேர்தலில் சுனாமி அலையால் கோபுரத்தில் ஏறிக்கொண்டது. இப்போதும் அது சாத்தியம் என்ற எதிர்பார்ப்பு வீண்.
பதிலளிநீக்குஷான் என்கிற ஷண்முகம் எழுதுவதை பேஸ்புக்கில் நாங்கள் நெருக்கமாக இருப்பதால் அவ்வப்போது வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
புத்தகத்துறை செழிப்பாக இருக்கிற இந்தக் காலகட்டத்தில் நான் சென்னையில் இல்லையே என்பது வருத்தமாக இருக்கிறது.
திரைப்படம்.... ஊஹூம்.... அது எனக்கு எட்டாத சப்ஜெக்ட்.
கதம்பத்திற்கு நன்றி.
இவ்வாரப் பகிர்வில் என்னை ஈர்த்தது பாலுமகேந்திராவின் தலைமுறைகள். அவருடைய பாணி வித்தியாசமான பாணி. காலம் ஆக ஆக இன்னும் மெருகேறுவதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.
நீக்குகவிதைத் தொகுப்பாசிரியர் க. ராமசாமி என் பதிவுகளின் தொடர்பாளராக இருந்தார். கருத்து ஏதும் இட்டதில்லை 2011-ம் வருடக் கடைசியில் எப்படியோ அவரது மின் அஞ்சல் முகவரிதேடிக் கண்டு பிடித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன், எந்த பதிலும் வரவில்லைபடிக்கும் பதிவுகளுக்குக் கருத்து இடுமாறு வேண்டி எழுதி இருந்த கடிதம் உங்கள் பதிவைப் படித்தபோது பொறி தட்டியது போல் நினைவு வந்தது. தொகுப்பு சிறப்பாய் இருக்கிறது. உங்கள் புத்தக வெளியீடு எப்பொழுது.? வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபுத்தகக் கண்காட்சியின்போது நல்ல எழுத்தாளர்கள் முன்னிலையில் நல்லதொரு எழுத்தாளரால் வெளியிடப்படும் என்று பதிப்பாளர் தெரிவிக்கிறார்! ஆனால் அதற்கு முன்பே தங்களுக்கு புத்தகம் வந்து சேரும். நன்றி!
நீக்குநீங்கள் எழுதி முடிக்கவில்லை, அதற்குள் தெமுதிக பிரேமலதாவின் திமுகவுடன் கூட்டணி இல்லை என்ற பேச்சு வெளிவந்துவிட்டது.
பதிலளிநீக்குநல்லதொரு பதிவு.
வாழ்த்துகள்
இதெல்லாம் வெறும் டிராமா நண்பரே! தேர்தல் நாள் அறிவிக்கப்படும் வரை எத்தனையோ டிராமாக்கள் அரங்கேறும்! பார்க்கலாம். எனெக்கென்னவோ விஜயகாந்த்தும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து போட்டியிடும் என்று தோன்றுகிறது. (பல நேரங்களில் நான் நினைப்பது நடந்துவிடுகிறது!)
நீக்குபுத்தக விமர்சனமும் திரைப்பட விமர்சனமும் அருமை
பதிலளிநீக்குவாங்கிப் படிக்கவும் திரை அரங்கில் போய்ப் பார்க்கவும்
முடிவு செய்துள்ளேன்.வாரம் இருமுறை பதிவு என்கிற
அறிவிப்பு மகிழ்வித்தது.
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே!
நீக்குtha.ma 9
பதிலளிநீக்குக.இராமசாமியின் கவிதைகளும் ஷான் உடைய கவிதைகளும் (ஆச்சரியத்தில்) 'அட' போடவைக்கின்றன. இராமசாமியின் கவிதைப் புத்தகம் விலை ரூ.6-தான் என்பதும் அட போட வைக்கின்றது.
பதிலளிநீக்குதங்களின் 01/01/2014 தேதியிட்ட அபுசி-தொபசி சென்று எனது கருத்துரைகளை மீண்டுமொருமுறை படிக்கவேண்டுகிறேன்.
நீக்குநண்பரே புத்தகத்தின் விலை அறுபது ரூபாய்
நீக்கு60 ரூபாயா?
நீக்குதகவலுக்கு நன்றி நண்பரே!
ஈழக்கவி சேரனின் பேட்டியின் பகிர்வு முழுமையாக அறியாவிட்டாளும் ஒரு பகுதி உங்களின் பகிர்வாள் படித்ததிருப்தி சார்! பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஆம் ஐயா, கடலை சுற்றிய காகிதத்தில் தெளிவாகத்தெரிந்த பகுதியை மட்டுமே வெளியிட்டேன்!
நீக்குதாங்கள் எழுதும் எதுவும் சுவை! இதுவும் சுவை!
பதிலளிநீக்குவிடாமல் படித்து ஆதரவளிக்கும் புலவர் ஐயா, நன்றிகள்!
நீக்குநல்ல பதிவு!
பதிலளிநீக்குஎன்னைக் கவர்ந்த டைரக்டர்களில் பாலு மகேந்தார ஒருவர்!
'தமிழ்மணம்+1
ஆம் நண்பரே! அவர் மீண்டும் தலைநிமிர்ந்து பல உயர்ந்த படங்களை இயக்கித்தர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். தங்கள் வருகைக்கு நன்றி.
நீக்கு//ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று சும்மாவா சொன்னார்கள்?// சரியாக்ச் சொன்னீர்கள்!
பதிலளிநீக்கு‘மிகச்சிறந்த’ ரகம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. (ஒரு கவிதைக்கும் தலைப்பு கொடுக்கவில்லை இந்தக் கவிஞர். தாவணியா, புடவையா என்று தெரியவேண்டாமா?) ஹா ஹா...நல்ல sense of humour! ஐயா அவர் ஜீன்ஸ் பாண்டாக்க் கூட இருக்கலாமே!!!
அருமையான கவிதைப் பகிர்வுகள்! அழகான விளக்கவுரை!
திரைப்படம் பார்க்க்த் தூண்டுகின்றது!
கடலையைச் சுற்றிய பேப்பரிலும் அருமையான ஒரு பேட்டி!! கடலைச் சுற்றிய பேப்பரிலும் என்ன இருக்கின்றது என்று தாங்கள் பார்ப்பது போல் நாங்களும் பார்ப்பதுண்டு. நம்மைச் சுற்றி நடக்கும், இருக்கும் எதிலுமே ஒரு விஷயம் இருக்கும்! நாம் அறியவும்,கற்கவும், பகிரவும்!!
நல்ல அரசியல் ஜோக்!!!
எனது நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்து வாழ்த்தி சிறப்பித்த தங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி சார் நீங்கள் விழாவுக்கு வந்திருந்தது என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
பதிலளிநீக்குஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்கு