புதன், ஜனவரி 15, 2014

சில எழுத்தாளர்கள் - சில ரகசியங்கள் - தருபவர்: க.நா.சு. ( ‘அபுசி-தொ பசி’- 23)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த பொக்கிஷமாகச் சொல்லவேண்டிய நூல், பிரபல எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான க. நா. சுப்ரமணியத்தின் “இலக்கியச் சிந்தனையாளர்கள்” என்ற நூலாகும்.
க நா சு 
தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிகப்படியான விமர்சனங்களைச் சந்தித்த விமர்சகர் க.நா.சு. மணிக்கொடி காலம் தொடங்கி நவீன இலக்கிய காலம் வரையில் நேரிடையான அனுபவம் உள்ளவர். சுயமான ஆக்கங்களால் மட்டுமன்றி, மொழிபெயர்ப்புகளாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். ஆனால் அவருக்கே உரிய நையாண்டி துள்ளும் விமர்சனங்களால் தமக்குரிய புகழைப் பெறாமலே போனவர். 

சென்னையிலும் டில்லியிலுமாக வாழ்ந்தவர். புத்தகக்கடை நடத்திக்கொண்டே பத்திரிகையும் நடத்தியவர். உலக இலக்கியங்கள் பற்றி எழுத் முழுத்தகுதி பெற்ற ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் இவர் முதன்மையானவர்.

“இலக்கியச் சிந்தனையாளர்கள்” என்ற இந்த நூல், பல ஆண்டுகள் முன்பே வெளிவந்ததாகும். இருபத்தியொன்று இலக்கியாசிரியர்களின் வரலாற்றைக் கதை போல ஆற்றொழுக்காகக் கூறும் இந்நூலை இதுவரை எப்படிப் படிக்காமல் இருந்தேன் என்பது எனக்கே புரியாத விஷயம்.

இன்று நம்மிடையே இல்லாத சில தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும், க.நா.சு.வின் அற்புதமான தமிழ்நடையையும்  நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதற்காகவே சில எடுத்துக்காட்டுகள் தருகிறேன்:

‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி: (பக்.26)

கல்கி, டி.கே.சி. நட்பு பிரசித்தமானது. அந்த மாதிரி ஒரு நட்பை இப்போது காண்பது அரிது. கல்கி பத்திரிகை ஆரம்பிக்க இருந்தபோது டி.கே.சி. என் நண்பர் விநாயகத்திற்கும் எனக்கும் கடிதம் எழுதி எங்கள் இருவரையும் முதல் சந்தாதாரர்களாகச் சேரச் சொன்னார். அந்தச் சமயத்தில் அவர் அரண்மனைக்காரன் தெருவில் ராமாயணம் பற்றி தொடர் பிரசங்கங்கள் செய்யும்போது, ஒரு சாயங்காலம் கைகேயி என்று ராமாயணத்தில் வரும்போதெல்லாம், தன்னையும் அறியாமலே, கல்கி, கல்கி என்று சொல்லிக் கொண்டிருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது.

கல்கி பத்திரிகை நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில் என்னை ஒரு நீதிபதியாக நியமித்து, வந்த 1500 சிறுகதைகளையும் சிதம்பரத்திற்கு என் பார்வைக்கு அனுப்பி வைத்தார். அப்போது கல்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பகீரதன் என்பவர் (பின்னாளில் கங்கை, சத்தியகங்கை இதழ்களின் ஆசிரியர்) போட்மெயிலில் சிதம்பரம் வந்து, நடுநிசியில், என் வீட்டுக் கதவைத் தட்டி, “நான் தான் பகீரதன் – கொண்டு வந்து விட்டேன்!”  என்று கதை மூட்டையை என் வீட்டில் போட்டது நினைவிருக்கிறது. 

இந்தக் கதைகளை சிதம்பரம் போலீசார் – அது 1942-ல்- நான் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்கிறேன் என்று என் வீட்டில் சோதனை செய்தபொழுது அலசி அலசிப் பார்த்தார்கள்....

பெருமளவில் தமிழர்களையும் தமிழையும் பாதித்த பத்திரிகாசிரியர் கல்கிதான் என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவருக்கு முன் சுப்ரமணிய பாரதி ஒருவர்தான் அப்படி தமிழையும் தமிழர்களையும் பாதித்திருக்கிறார்!

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்: (பக்.21-22)

மாஸ்தி என்கிற மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் கன்னடத்தில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், விமர்சனம் என்றெல்லாம் எழுதிப் புகழ் பெற்றவர்; ஆனால், வீட்டில் தமிழ் பேசுகிறவர்....

பல இலக்கியக் கூட்டங்களில் ஆங்கிலத்தில் ஆணித்தரமாகப் பேசித் தான் சொல்ல வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி வாதாடுவதில் மிகவும் வல்லவர். பம்பாயில் நடந்த ஒரு அனைத்திந்திய இலக்கியாசிரியர் மாநாட்டில் பேச்சாளர்கள் அளவுக்கு மீறிப் பேசிப் பேசி, சாப்பாட்டு டயத்தையும் அரைமணிக்கு மேல் தாண்டி விட்டார்கள். அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாஸ்தி, “இத்தனை நேரம் நீங்கள் சொல்வதை நான் கேட்டாகி விட்டது. பசியோ, பசி இல்லையோ நான் சொல்வதை அரைமணி கேட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். பிறகுதான் கலைய வேண்டும்” என்று அவர் பேச ஆரம்பித்ததும், அரைமணி பசி தாகத்தையும் மறந்து விட்டு எல்லோரும் அசையாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு நினைவு இருக்கிறது.

கு.ப.ராஜகோபாலன்: (பக்.28)

நெல்லைநேசன் என்கிற பெயரில் பி.ஸ்ரீ. ஆச்சாரியா, சுப்ரமணிய பாரதியாரைப் பற்றி ‘அவர் ஒரு தமிழ் தேசியக்கவி; உலக மகாகவி என்று சொல்லுவதற்கு அவரிடம் ஒன்றும் இல்லை’ என்று எழுதிவிட்டார்.  அதைப் படித்துவிட்டு வ.ரா.விடம் “இப்படி எழுதியிருக்கிறாரே!” என்று குறை கூறப்போன ஒரு கோஷ்டி எழுத்தாளர்களையும் வ.ரா. கோபித்துக் கொண்டார். “அவர் இப்படிச் சொல்லிவிட்டார். சரி, அதைக் கேட்டுக்கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பாரதி உலக மகாகவிதான் என்று ஸ்தாபித்து எழுதமுடியுமானால் எழுதுங்களேன்” என்றார். இப்படி எழுதப்பட்டவைதான் ‘கண்ணன் என் கவி’ என்கிற நூலில் உள்ள பாரதி பற்றிய இலக்கியத்தரமான கு.ப.ரா.வின் விமர்சனக் கட்டுரைகள்.

பின்னர் வேறு யாரோ ஒருவர் பி.ஸ்ரீ.யின் (அக்)கட்டுரையை அந்தப் பத்திரிகாசிரியர் பிரசுரித்தது பற்றிக் குறை கூறியபோது கு.ப.ரா. “கருத்துச் சுதந்தரத்தைச் சொல்ல அவருக்கு உரிமையுண்டு. கருத்துக்கள் வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டால்தான் உண்மை தெரியவரும்” என்று சொன்னதை நான்  கேட்டிருக்கிறேன்.

“செக்ஸ் என்பது எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒரு அம்சம். கதை, நாவல் என்று உள்ளதை உள்ளபடி எழுத முயல்கிறவன் செக்ஸை மட்டும் தவிர்க்க முயன்றால் அவன் நல்ல இலக்கியாசிரியன் அல்ல என்றே நான் சொல்லுவேன்...செக்ஸில் ஆபாசம் இல்லை. இலக்கியத்தரமாக எழுத வராதபோது செக்ஸ் மட்டும் அல்ல, மற்ற விஷயங்களும் கூட ஆபாசமாகி விடுகின்றன” (என்கிறார் கு.ப.ரா.)

‘தாய்’ என்று அவர் எழுதிய ஒரு சிறுகதையை ‘அது மோசமாக இருக்கிறது’ என்று அன்றையப் பெரிய பத்திரிகைகள் வெளியிட மறுத்தன. கல்யாணமாகாமலே ஒரு குழந்தையைப் பெற்றுவிட்ட ஒரு பெண் தன் குழந்தையைத் தியாகம் செய்யவேண்டிய காலகட்டம் வந்தபோது, “நான் என் குழந்தையைத் தியாகம் செய்ய மாட்டேன். தகப்பனில்லாவிட்டால் என்ன? தாய் நான் இருக்கிறேனே!” என்று முடிவு செய்கிற கட்டம் அற்புதமாக வந்திருக்கிறது. இந்தக் கதையை நான் என் ‘சூறாவளி’யில் வெளியிட்டேன் என்பது எனக்கு இன்று நினைத்துப் பார்க்கும்போதுகூடப் பெருமையாக இருக்கிறது.

புதுமைப்பித்தன்: (பக்.12)

‘சூறாவளி’ என்று என் முதல் பத்திரிகைக்குப் பெயர் வைத்தது புதுமைப்பித்தன்தான். ‘மணிக்கொடி’ நின்றுபோன பிறகு அவருக்கு எழுத ஒரு பத்திரிகை வேண்டும் என்கிற காரணத்துக்காகவே  பத்திரிகை உலகுக்குப் புதியவனான நான் ஆரம்பித்த பத்திரிகை அது. ‘தினமணி’யில் முழுநேர எழுத்தாளராக அவர் 35, 40 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். சூறாவளியில் அந்நியச் செய்திகள் வாரா வாரம் எழுத  அவருக்கு நான் 50 ரூபாய் மாதத்துக்குத் தந்தேன். ஆனால், ஆறே மாதங்கள் தான் தர முடிந்தது....

தஞ்சாவூரில் நான் அய்யன்குளத்துக்கு எதிர் வீட்டில் மேலவீதியில் குடியிருந்தபோது, திருநெல்வேலி போத்தி கடை அல்வா என்று சொல்லி அரை வீசை அல்வா வாங்கி வந்திருந்தார். நான் அவருக்கு அம்பி அய்யர் கடை அல்வா வாங்கித் தந்தேன். பருப்பும் சோறும்தான் தனக்கு அவசியம் என்று உரிமையுடன் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.....

திருவனந்தபுரத்தில் இருந்து நண்பர் ரகுநாதன் அவரின் கடைசி நாட்களில் அவருடன் கூட இருந்து உதவியவர். அவர்தான் “மருந்துச் செலவுக்குக்கூட சிரமப்படுகிறது. பண உதவி தேவை” என்று எனக்கு கார்டு எழுதி, அதை அடித்துவிட்டு, “இன்று புதுமைப்பித்தன் காலமானார்” என்று 1948-ல் எனக்கு எழுதினார்.

ஆர்.கே.நாராயணன்: (பக்.40)

ஆர்.கே.நாராயணன், காசு பணம் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஒரு சிறுகதைத் தொகுப்புக்காக அவர் கதை ஒன்றை உபயோகித்துக்கொள்ள அனுமதி கேட்டபோது தனக்கு இத்தனை பணமாவது குறைந்தபட்சம் கொடுத்தால்தான் கதையை உபயோகித்து கொள்ளலாம் என்று எழுதி விட்டார். பிரசுராலயத்தார் ஒத்துக் கொள்ளாததால் அவர் கதை இல்லாமலேதான் என் தொகுப்பு வெளிவந்தது.

டெல்லியில் ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது ஒரு பெண்மணியை அறிமுகம் செய்துவைத்தார். நான் அந்தப் பெண்மணியின் முக்கியத்துவத்தைப் பற்றித் தவறாக நினைத்துவிடப்போகிறேன்  என்று அவர் போனபின், “அவர் ஒரு பத்திரிகை நடத்துகிறார். எதற்காக நடத்துகிறார் என்று எனக்குத் தெரியாது. அவருக்கும் தெரியாது என்றுதான் எண்ணுகிறேன்!” என்றார்.

ஆர்.ஷண்முகசுந்தரம்: (பக்.42)

பதினைந்து வருஷப் பழக்கத்தில் ஷண்முகசுந்தரத்தைப் பற்றிச் சொல்லுவதற்கு நிறையவே ரசமான விஷயங்கள் எனக்குத் தெரியும்...

பணம் கேட்டு யாரிடமிருந்தும் வாங்குவதை ஷண்முகசுந்தரம் ஒரு கலையாகப் பயின்று இருந்தார். தவறிப்போய்க்கூடத் திருப்பித் தந்து விடுகிறேன் என்று சொல்லிக் கேட்கமாட்டார். ஏனென்றால் திருப்பித் தந்துவிடுவது என்பது நடக்காத காரியம் என்று அவருக்குத் தெரியும். நான் இதை ஒரு குறையாகக் கூறவில்லை. இந்தக் கலையின் ஒரு பகுதியையாவது நான் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கும் ஏற்பட்டதுண்டு.

ஒரு சமயம் “ஒரு கில்ட் சங்கிலி கேட்கிறாள் குழந்தை. அதை வாங்கிக் கொடுக்காவிட்டால் அடுத்த வாரம் இருக்கிற பரீட்சைக்குப் படிக்காமல் போய்விடுவாள்” என்று என்னிடம் 15 ரூபாய் கேட்டார். பணத்தை இப்படி வீணடிப்பானேன் என்றதற்கு, “பரீட்சை முக்கியமா? பணம் முக்கியமா?” என்று கேட்ட அவருக்குப் பதில் சொல்ல முடியாமல், என் மனைவியிடம் 15 ரூபாய் கடன் வாங்கி அவருக்குக் கொடுத்தனுப்பினேன்.

தன தேவைகளுக்கு மத்தியிலே என் தேவைகளையும் மறந்துவிட மாட்டார். இப்படித்தான் அவர் சந்திக்கின்ற பல பிரசுராலயத்தாரிடம் சொல்லி (இன்ப நிலையம், வைரம், குயிலன்) என் நூல்கள் சிலவற்றையும் பதிப்பிக்க ஏற்பாடு செய்தார். ஒரு நாவலை முடித்துவிட்டு, முடிந்த கையோடு, “300 ரூபாய்க்கு வேலை முடிந்தது” என்று சொல்லிக்கொண்டு வருவார்... 

‘நாகம்மாள், ‘அறுவடை’, ‘சட்டி சுட்டது’ போன்ற நாவல்களை எழுதிய ஷண்முகசுந்தரத்தை மறந்துவிடுகிற தமிழர்கள் துரதிர்ஷ்டக்காரர்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ச.து.சுப்பிரமணிய யோகி (பக்.44)

‘தமிழ்க்குமரி’ என்ற அற்புதமான கவிதைத்தொகுப்பு ஒன்று வெளியிட்டிருந்தார், ச.து.சு.யோகி..... வால்ட் விட்மனின் Leaves  of Grass  என்கிற கவிதை நூலின் பல பகுதிகளை ‘மனிதனைப் பாடுவேன்’ என்கிற தலைப்பில் மொழிபெயர்த்து அற்புதமான இலக்கிய சேவை செய்திருக்கிறார்...

அவருக்குக் கவிதை, இலக்கியம், மாஜிக், யோகம், சாஸ்திரம், மரபு எல்லாம் கைவந்த கலைகள். திருமூலர் மரபில் 49-ஆவது தலைமுறையினராக வந்த சித்தர் என்று தன்னைக் கூறிக்கொள்வார்...

திருமூலர் திருமந்திரத்தில் அணுவைப் பிளப்பதற்கு விஞ்ஞான வழி சொல்லியிருப்பதாக ஆராய்ந்து சொல்லி சர்க்காருக்கு ஒரு தீஸிஸ் செய்து கொடுத்து இரண்டாயிரம் ரூபாய் பணம் வாங்கினார்...ஒரு விஞ்ஞான கூடம் ஏற்படுத்தித் தந்தால் திருமூலர் வழியில் அணுவைப் பிளந்து காட்ட இயலும் என்று அதற்குப் பத்து லட்சம் செலவாகும் என்று ஒரு திட்டம் வகுத்து விஞ்ஞான நிலையத்துக்கு அவர் எழுதிய யோசனைக்குப் பதில் வரவில்லை.

பி.எஸ்.ராமய்யா: (பக்.53)

தமிழில் சிறுகதைகள் எழுதிச் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்று செய்து காட்டியவர் பி.எஸ்.ராமய்யா. தினமணி கதிர், குமுதம் போன்ற பத்திரிகைகளில் வாரம் ஒரு கதையாக ஒரு ஆண்டு எழுதியிருக்கிறார். அதே போல ஆனந்த விகடனுக்கு வாரம் ஒரு கதையாக இரண்டு ஆண்டுகள் விடாப்பிடியாக எழுதியிருக்கிறார்.

‘ஆனந்த விகடன் பொன்விழாக் காலத்தில் உங்களைக் கூப்பிட்டு கௌரவிக்கவில்லையே’ என்று ஒரு நண்பர் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் மிகவும் சரியான பதில். “கதைகள் எழுதியபோதே எனக்குப் பணம் தந்து கௌரவித்து விட்டார்களே!”

இவருடைய பல கதைகள் திரைப்படமாகியுள்ளன. 'போலீஸ்காரன் மகள்' அவற்றில் முக்கியமான வெற்றிப்படம்.
****
இந்த நூலை நீங்கள் படிக்காவிட்டால் தமிழ் இலக்கியவாதிகளில் சிறந்த பலபேரைப் பற்றிய, வேறு எங்கும் எவராலும் கூறமுடியாத சில செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ளாமல் போவீர்கள் என்பது உறுதி.

“இலக்கியச் சிந்தனையாளர்கள்” – க.நா.சுப்பிரமணியம். (144 பக்கம், ரூ.90, பானு பதிப்பகம், திருச்சி -தொலைபேசி – 9842236935 - 2008  வெளியீடு.)

19 கருத்துகள்:

 1. ஒவ்வொருவரைப் பற்றியும் சுருக்கமாக சொன்னதே சுவாரஸ்யம் + அறியாதவை + வியப்பாக உள்ளது...! நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 2. அருமையான புத்தகத்தை
  அற்புதமாக அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி
  அவசியம் வாங்கிப் படித்துவிடுவேன்
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 3. சிறப்பானதொரு அறிமுகம்! குறித்துக் கொள்கிறேன். நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 4. //கு.ப.ரா. “கருத்துச் சுதந்தரத்தைச் சொல்ல அவருக்கு உரிமையுண்டு. கருத்துக்கள் வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டால்தான் உண்மை தெரியவரும்” என்று சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்.///

  சுவாரஸ்யமான பகிர்வுகள்...பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 5. அருமையான புத்தகம்
  அற்புதமான அறிமுகம்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 6. அருமையான பொக்கிஷத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. //“அவர் ஒரு பத்திரிகை நடத்துகிறார். எதற்காக நடத்துகிறார் என்று எனக்குத் தெரியாது. அவருக்கும் தெரியாது என்றுதான் எண்ணுகிறேன்!” என்றார்.//


  ஐயா... படித்துச் சிரித்தேன்;
  நினைத்து நினைத்துச் சிரிக்கிறேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சொல்லி சர்க்காருக்கு ஒரு தீஸிஸ் செய்து கொடுத்து இரண்டாயிரம் ரூபாய் பணம் வாங்கினார்//

   இந்திய சர்க்காருக்கா?
   மேஜிக் பி.சி.சர்க்காருக்கா?

   நீக்கு