(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும்
வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ
அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
ஜனவரி பத்தாம் தேதி
வெள்ளிக்கிழமை துவங்கியது, சென்னை புத்தகக் காட்சி. ‘புத்தகத் திருவிழா’ என்பதே
பொருத்தமான வார்த்தை. துவக்க விழா அன்று வெறும் பொதுக்கூட்டம் மாதிரிதான்
இருக்கும் என்பதால் நான் போகவில்லை. அடுத்தநாள், அதாவது சனிக்கிழமை போயிருந்தேன். கடைகள்
எல்லாம் அப்போதுதான் முழுமையாக அமைக்கத் தொடங்கியிருந்தார்கள். புத்தகக்
கட்டுகளைப் பிரித்து அடுக்கும் பணியில் எல்லா ஊழியர்களும் தீவிரமாக இருந்தார்கள். நடுப்பகல்
நல்ல வெயில்நேரம் என்பதால் கூட்டம் அதிகமில்லை. மாலையில் சாரிசாரியாகப் படையெடுக்க
ஆரம்பித்துவிட்டனர் மக்கள்.
கடைகள், சென்ற
ஆண்டைவிடச் சற்று கூடுதலான நீள அகலங்களுடன் இருந்தததாகத் தோன்றியது. பத்ரி போன்ற
தோழர்களின் முன்னெடுப்பு காரணமாக இருக்கலாம். அரங்கின் உள்ளேயே மிகப்பல இடங்களில்
குடிதண்ணீர், காபி, தேநீர் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அனைவருக்கும்
ஆறுதலான விஷயம்.
முதல்நாள் என்பதால்,
சென்ற ஆண்டு விற்காமல் தேங்கிப்போயிருந்த பழையநூல்கள் தாம் பல அரங்குகளில் இருந்தன.
புதிய நூல்கள் நாளைமுதல் வைக்கப்படும் என்றார்கள். ஆனால் எது பழைய நூல்? நாம்
ஏற்கெனவே படித்திருந்தால் அன்றோ அது பழைய நூல்? படிக்காத நூலெல்லாம் புதியநூலே
அன்றோ? மேலும், பழைய நூல்களைக் கண்டுபிடித்து வாங்குவதில் உள்ள தொல்லைகளை நான்
அறிவேன். எனவே கண்ணில் கிடைத்த நல்ல நூல்களை, அவை பழையனவானாலும் வாங்கிவிட்டேன். மூன்றுமணி
நேரம் அலைந்து பதினேழு நூல்கள் தான் வாங்கினேன். அவை பற்றிய ஒரு தொகுப்பு இன்று
இடம் பெறுகிறது. (இதனால் வழக்கமான ‘அபுசிதொபசி’ இன்று இல்லை. மன்னிக்கவும்.)
சிலப்பதிகார ரசனை –
மார்க்கபந்து சர்மா எம்.ஏ.
(வ.உ.சி. நூலகம்,
சென்னை-14 வெளியீடு: 2005, 144 பக்கம், ரூ.55)
இந்த நூலைச் சுமார்
முப்பது வருடங்களுக்கு முன் படித்திருப்பதாக நினைவு. இலக்கிய மாணவர்கள் தவறாமல் படிக்கவேண்டிய
அருமையான ஆராய்ச்சி நூல். இதில் வரும் ‘கண்ணகியின் வயது’ என்ற பகுதியிலிருந்து
சில பக்கங்கள் உங்களுக்காக:
மங்கல வாழ்த்துக்
காதையில், ‘ஈகைவான் கொடியன்னாள் ஈறாறாண்டு அகவையாள்’ எனக்
கூறப்பட்டிருப்பதால், மணம் நிகழுங்காலத்தில், கண்ணகி பன்னிரண்டு வயதுக்கு
உட்பட்டவள் என்று தெரிகிறது. இதன்பின், அடிகள் எங்கும் அவள் வயதைப் பற்றி இவ்வளவு
தெளிவாகக் கூறவில்லை.
‘யாண்டுசில கழிந்தன இற்பெறுங் கிழமையின்
காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென்’ (2:89-90)
இதனால்,
கயமலர்க்கண்ணியும், அவள் காதற் கணவனும் கூடி நடத்திய மாசற்ற மண வாழ்க்கையின்
எல்லையை ஒருவாறு அறிய முடிகிறது. இதை விளக்கிக் காட்ட விரும்பிய அடியார்க்கு
நல்லார், ‘கண்ணகிக்குச் சில யாண்டு கழிந்தன எனவே, மாதவிக்குப் பல்யாண்டு கழிதலுங்
கொள்ளப்பட்டது. இன்னும், மேற் கனாத்திறமுரைத்த காதையில், தேவந்தி, ‘கண்ணகி
நல்லாளுக்கு உற்ற குறையுண்டென்று என்புழி எச்சவும்மை விரிக்க, இவற்கு
அவள் இளமைப் பருவந்தொடங்கி நிகழும் பார்ப்பனத் தோழியாய் மாநாய்கன் மனை வளர்தலின்,
ஒரு காலத்தே குடிபுக்குச் சென்றுழிப்
பிரிவும் ஒரு காலத்தாயிற்று என்பதாகலின், ‘நாலீராண்டு நடந்ததற் பின்னர்’
என்பதை இருவர்க்குமாக்கி, மாதவிக்கு எட்டினிறந்த பலயாண்டு சேறலிற் கண்ணகிக்குச்
சிலயாண்டு கழிந்தவெனப் பொருள் கூறலுமொன்று’ எனக்கூறுகிறார். (சிலப்பு: ஐயர்: பக் 55).
அவருக்கே, தாம் கூறியவற்றில் உறுதியில்லை என்பதை, ‘இதனான் மிக்க பலமின்று;
ஏற்குமேற் கொள்க; இது போலி’ என அவர் கூறுவதாலேயே அறிந்துகொள்கிறோம்....
கண்ணகி
எட்டாண்டுகள் இல்லறம் நடத்தினாள் என்றால், மாதவிக்கு எட்டினிறந்த யாண்டுகள்
கழிந்ததை ஒப்ப வேண்டும். அவ்வாறானால், மதுரைக்குச் சென்றபோது, கண்ணகி, குறைந்தது
முப்பது வயதுடையவளாக இருந்திருக்க வேண்டும். ஆனால்,
(அ) ‘என்னோடு போந்த
இளங்கொடி நங்கை’ ( 15:137)
(ஆ) ‘சிறுமுதுக்
குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்’ (16:68)
(இ) ‘முதிரா முலைமுகத்து
எழுந்த தீயின்’ ( 25:76)
(ஈ) ‘முலைமுகந் திருகிய
மூவா மேனி’ (30:150)
என வருவனவெல்லாம்,
அவள் இளம் பருவத்தினளே என வற்புறுத்துகின்றன. இவற்றுள், ஒவ்வொன்றும் கதையில்
பங்கெடுத்துக் கொள்ளும் வெவ்வேறு பாத்திரத்தால் கூறப்பட்டது.
கண்ணகி, மாதவி இவ்
விருவரோடும் கோவலன் கூடியிருந்த காலத்தின் எல்லையே எட்டாண்டுகளாகும்...
(கண்ணகியின் வயது
குறித்த வேறு நல்ல ஆராய்ச்சி நூல்களை நண்பர்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.)

டாக்டர் எஸ்.
ஆர்.கே. யின் இரண்டு ஆராய்ச்சி நூல்கள்: (1) சிறியன சிந்தியாதான் (தையல் வெளியீடு, சென்னை-12 தொலைபேசி:9884501018 ரூ.90) (2) கம்பன்
கண்ட அரசியல் (‘சாமி புக்ஸ்,
மயிலாப்பூர்’ தொலைபேசி 9841449529, 9382677312. ரூ.60)
இந்த இரண்டு
நூல்களும் பல ஆண்டுகளாக அச்சில் இல்லை. இப்பொழுது வந்துள்ளன. ஆகவே வாங்கிவிட்டேன்.
தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பெரிதும் அறிமுகமான தமிழறிஞர் டாக்டர்
எஸ்.ராமகிருஷ்ணன்.
தமிழுக்குத் தொண்டு
செய்த தமிழீழ அறிஞர்கள் –முதுமுனைவர் இளங்குமரனார் – (தமிழ்மண் வெளியீடு. ரூ.50.)
ஈழத்தில் பிறந்த
தமிழ் அறிஞர்கள் பலர் காலத்தால் அழியாவகையில் தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளனர்.
அவர்களைப்பற்றிய அறிமுகமாக இந்நூல் வெளியாகியுள்ளது. புதிய நூல். நான் வாங்கியது
முதல் பாகம் மட்டுமே. இன்னும் பல பாகங்கள் வந்திருக்கின்றன.
முதல் பாகத்தில்
கீழ்க்கண்டவர்களின் வரலாறு எளிய நடையில் ஆதாரபூர்வமாக எழுதப்பட்டுள்ளது: சைமன்
காசிச்செட்டி, ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, வி.கனகசபை பிள்ளை, சுன்னாகம்
குமாரசாமிப் புலவர், நா. கதிரைவேற் பிள்ளை, ஞானப்பிரகாசர், ஆனந்த குமாரசுவாமி, இலக்கணக்கடல்
சி.கணேசையர், விபுலானந்தர், நவாலியூர் சோமசுந்தரப் புலவர், ந.சி.கந்தையாப் பிள்ளை,
தனிநாயக அடிகள், சு.வித்தியானந்தன்.
இன்று,
தமிழ்நாட்டில், தம் குழந்தைகள் தமிழைப் படிக்கவேண்டாம் என்று பெற்றோர்கள் உறுதியாகவும்
இறுதியாகவும் முடிவெடுத்துவிட்ட நிலையில், தமிழைச் சாகாமல் காக்கும் அரும்பணியில்
நம்மைவிடவும் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்கள் ஈழத்தமிழர்களே ஏன்பதை ஒப்புக்கொண்டுதான்
ஆகவேண்டும். அந்த முயற்சியை அங்கீகரிக்கும் விதமாக இந்த நூலை நான் அனைவருக்கும்
சிபாரிசு செய்கிறேன்.
(தொடரும்).
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
(c) Y Chellappa
email: chellappay@yahoo.com

