திங்கள், ஜனவரி 20, 2014

தாகூரின் காதல் பரிசும், எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை நினைவுகளும் ( ‘அபுசி-தொ பசி’- 24)

(புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கியவற்றுள் சில நூல்களைப் பற்றி இன்றும் தொடர்கிறேன்.)
எத்தனை முறை படித்தாலும் திகட்டுவதில்லை சில கவிதைகள், மொழிபெயர்ப்பாக இருந்தாலும் கூட! ரவீந்திரநாத் தாகூரின் ‘காதல் பரிசு’ மாதிரி.


தாகூருக்கு எத்தனையோ மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. (கனடாவிலிருந்து ஜெயபாரதன், 'திண்ணை'யில் தொடர்ந்து தன் மொழிபெயர்ப்புகளை வெளியிடுகிறார்.) என்றாலும், அந்த நாளில் வி.ஆர்.எம்.செட்டியார் அளித்த மொழிபெயர்ப்பு தான்  ‘classic’  எனலாம். அத்தகைய ஒரு மொழிபெயர்ப்புதான் இது. வி.ஆர்.எம்.செட்டியார் மேற்பார்வையில் சா.அருணாசலம் மொழிபெயர்த்திருக்கிறார்.

எல்லாமே கவிதைகள். அழகிய உரைநடையில் அமைந்த மொழிபெயர்ப்பு. உதாரணத்திற்கு சில பகுதிகள்:
***
என்னிடமிருந்ததைக் கொண்டு எனது தட்டை நிரப்பி உன்னிடம் கொடுத்துவிட்டேன். உனது திருவடிகளுக்கு நாளை நான் எதைக் கொணர்வேன் என அறியாது திகைக்கின்றேன். பூக்கும் காலத்திற்குப் பின், மலர்களை இழந்த வெறுங்கிளைகளோடு வானத்தை நோக்கி நிற்கும் மரம்போல், நான் நிற்கிறேன்.

ஆனால் எனது முன்னைய நிவேதனங்களில், முடிவற்ற கண்ணீர் வெள்ளத்திலே சாம்பி வாடாத மலர் ஒன்றுகூட இல்லையா?

வெறுங்கையனாய் நான் உன்னிடம் வேனிற்காலத்தில் விடைபெறும்போது, நீ அதை நினைந்து உனது கண்களால் எனக்கு ஆசி வழங்குவாயா? (பக்.22)
***
வாத்துக்கள் ஆர்ப்பரிக்கவும், புறாக்கள் சூரிய ஸ்நானம் செய்யவும், மாலைப் பொழுதிலே மீன் பிடிப்போரின் சிறிய மரக்கலங்கள் புல்பரந்த கரையின் ஓரமாக நிழலில் தங்கும் தனிமையான நீர்நிலைகளின் மணற்பாங்கான கரையையே நான் நேசித்தேன்.

மூங்கில் புதர்களின் ஓரத்தில் நிழல் பரவியதும் பெண்கள் பாத்திரங்களோடு, சுற்றிவரும் சந்துகளின் வழியாக வந்து தங்குவதுமான மரங்கள் அடர்ந்த கரையை நீ நேசித்தாய்.

இருகரைக்கும் ஒரே பாடலைப் பாடிக்கொண்டும், ஒரே ஆறுதான் நம்மிருவரிடையேயும் ஓடியது. விண்மீன்களை நோக்கியவண்ணம் தனிமையாக மணலில் படுத்துக்கொண்டு நான் அதைக் கேட்டேன்.

காலைக் கதிரவனின் ஒளியிலே, சரிவான கரையின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு நீயும் அதைக் கேட்டாய். நான் கேட்ட சொற்களை நீ அறியாய். உன்னிடம் அது பேசிய மறைமொழி, எனக்கு என்றும் இரகசியமாகவே உள்ளது. (பக்.20)
***
வசந்த காலத்தில் ஒருநாள், நேரம் தவறி, குழந்தையின் மாறும் மனநிலையோடும், உனது குழலிசையோடும் மலர்களோடும், நீ தோன்றினாய். நீர்க்குமிழிகளாலும் அலைகளாலும் எனது காதல் செந்தாமரையை அலைத்து, என் நெஞ்சை வாட்டினாய். உன்னுடன் வாழ்வின் இரகசியத்தில் புகுமாறு, நீ என்னை அழைத்தாய். ஆனால் கோடைகாலத்தில் அசைந்தே முணுமுணுக்கும் இலைகளினூடே, நான் துயின்றேன். நான் எழுந்ததும் வானத்தில் மேகங்கள் திரண்டன. காய்ந்த சருகுகள் காற்றில் பறந்தன. மழையோசையின் அதிர்ச்சியிலே, உனது நெருங்கிவரும் காலடிகளைக் கேட்கிறேன். மரணத்தின் இரகசியத்தில் உன்னுடன் கலந்து சேருமாறு நினது அந்தரங்க அழைப்பையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். நான் உன்னருகில் வந்து என் கரங்களை உன் கரங்களோடு பிணைத்து நிற்கும்போது, உனது விழிகள் கனல்கின்றன. உனது கூந்தலிலிருந்து நீர் சொட்டுகிறது.(பக்.46)

காதல் பரிசு – வ.உ.சி. நூலகம், சென்னை வெளியீடு, (044-28476273 / 9840444841) பக்கம் 64, ரூ.25.

எம்.ஆர்.ராதா

தமிழ் திரைப்பட உலகில் இட்டு நிரப்ப முடியாத இடைவெளியை உண்டாக்கி மறைந்தவர் எம்.ஆர்.ராதா.  1967இல் தி.மு.க. ஆட்சிக்குவரக் காரணமாயிருந்தவை இரண்டு: ஒன்று, இந்தி எதிர்ப்பு. இரண்டாவது, எம்.ஜி.ஆரை. எம்.ஆர்.ராதா சுட்டது. கையிலும் மார்பிலும் கட்டுக்களோடு எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுவந்த படம் தான் சராசரிக்கும் கீழான மக்களின் நெஞ்சைத்தொட்டு அவர்மீதான அனுதாபத்தைத் திமுகவுக்கு வாக்குகளாக மாற்றியளித்தது என்றால் மறுப்பதற்கில்லை. அதே அலையில் தான் எம்.ஜி.ஆர். பின்னாளில் தனிக்கட்சி அமைக்கவும் ஆட்சியைப் பிடிக்கவும் முடிந்தது. எனவே எம்.ஜி.ஆர். மட்டுமின்றி, செல்வி ஜெயலலிதாவும் கைகூப்பிக் கும்பிடவேண்டியவர் எம்.ஆர்.ராதா.

இந்த வழக்கில் சிறைசென்று திரும்பியதும், வெளிவந்த நூல்தான், விந்தன் எழுதிய “நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்”.  அதில் ராதா கூறுகிறார்:

(பக்.158) ‘நல்ல இடத்து சம்பந்தம்’ படத்திலே எனக்கு ஈடுகொடுத்து நடித்தவர் சவுகார் ஜானகி. அவரை என்னிக்கும் என்னால மறக்க முடியாது. அவருக்கும் எனக்கும் இடையே மூன்று வருஷ காலத்துக்குமேல்  கலையுலகத் தொடர்பு இருந்தது. அந்தக் காலத்திலேயே அவருடைய காருக்கு ஒரு காலன் பெட்ரோல் சும்மாப் போடறேன்னு நான் சொன்னாக்கூட அவர் அதை ஏத்துக்க மாட்டார். ‘நான் விரும்பறது உங்களுடைய நடிப்புக்கலையை; ஓசிப் பெட்ரோலை இல்லே’ன்னு சொல்லி விடுவார்...

(பக்.161) கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவிலே தேவர் பால் வித்துக்கிட்டிருந்த காலத்திலிருந்து அவரை எனக்குத் தெரியும். நல்ல மனுஷர்; தெய்வ பக்தி உள்ளவர். அறிவு சம்பந்தமாப் பேசறதைவிட ஆத்திகம் சம்பந்தமா பேசறதுதான் அவருக்குப் பிடிக்கும். நான் பெரியார் பக்கம் இருக்கிறவன் இல்லையா? அதாலே ஆரம்பத்தில் என்னைக் கண்டு கொஞ்சம் மிரண்டார். என்னைப் போட்டுக் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ எடுத்தப்புறம் நான் வம்புக்காரன் இல்லேங்கறது அவருக்குப் புரிஞ்சுப் போச்சு. அதுக்கப்புறம் அவர் என்னை வைச்சிப் பல படங்கள் எடுத்தார். எடுக்கிற படத்துக்குப் பேசிய தொகையை முதலிலேயே கொடுத்துடற ப்ரொட்யூசர் அவர் ஒருத்தர்தான்....

(பக்.166) (என் வழக்கைப் பற்றி) ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே நான் மனம் விட்டுச் சொல்லி விடணும்னு நினைக்கிறேன். அதாவது, நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டு நினைவை இழந்தவன் நான்தான். அந்த நிலையிலே என்னையும் முதல்லே ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க. அங்கே நினைவு திரும்பி நான் கண் விழிச்சிப் பார்த்தப்போ, கீதா மட்டும் என் பக்கத்திலே இல்லே; அண்ணா, கலைஞர் கருணாநிதி எல்லாருமே இருந்தாங்க. அவங்களிலே யாரும் அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, என்னைக் கண்டிச்சி ஒரு வார்த்தை சொல்லல்லே! அதிலே எனக்கு ஒரு திருப்தி.....

நம் காலத்தின் மறக்கமுடியாத அரசியல், சினிமா நினைவுகளை மறுபடியும் அசைபோட உதவும் நூல்.

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்- வ.உ.சி. நூலகம், சென்னை வெளியீடு, (044-28476273 / 9840444841) பக்கம் 168, ரூ.100.

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.

© Y.Chellappa

23 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    இரண்டு புத்தகங்களின் குறிப்பை பார்த்தால் நன்றாகத்தான் இருக்கிறது... அதிலும் தாகூரின் காதல் பரிசு பற்றி சில எடுத்துக்காட்டுக்கள் கூறியுள்ளிர்கள் மிக நன்றாக உள்ளது... கட்டுரையாக தொகுத்து வழங்கியமைக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு
  2. ரசிக்க வைக்கும் விமர்சனங்கள் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. #அண்ணா, கலைஞர் கருணாநிதி எல்லாருமே இருந்தாங்க. அவங்களிலே யாரும் அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, என்னைக் கண்டிச்சி ஒரு வார்த்தை சொல்லல்லே! அதிலே எனக்கு ஒரு திருப்தி.....#
    இதுக்கு என்ன காரணம்னு நீங்களாவது சொல்லுங்க செல்லப்பா சார் !
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்த காரணம் தானே நண்பரே! அண்ணா, கலைஞர் இருவருமே எம்.ஜி.ஆரின் சினிமாப் புகழுக்கு முன் தாங்கள் தாழ்ந்துபோய்விட்டதாகவே கழிவிரக்கம் கொண்டிருந்தனர். அதிலும் அண்ணாவோ, கலைஞர் முன்னிலையிலும் அதே கழிவிரக்கத்திற்கு ஆளானார். ஏனெனில் அண்ணா கதை வசனம் எழுதி வெற்றி கண்ட படங்கள் சிலவே. ஆனால் கலைஞர் கதை வசனம் எழுதி ஓடாத படங்கள் சிலவே! இதெல்லாம் வரலாறு சொல்லும் கதை. பகவானுக்குத் தெரியாமல் இதெல்லாம் நடக்குமா?

      நீக்கு
  4. பழைய தமிழ் இலக்கிய இதழ்களில் தாகூர் கவிதைகளின் மொழிபெயர்ப்பு கவிதைகளை படித்ததுண்டு. தாகூரின் ‘காதல் பரிசு’ – மொழிபெயர்ப்பு விமர்சனமும், விந்தன் எழுதிய, எம்.ஆர். ராதாவின் சிறைசாலை நினைவுகள் பற்றிய விமர்சனமும், சுருக்கமாவும் விளக்கமாகவும் இருந்தன.

    விந்தனின் இதே நூலினைப் பற்றிய எனது பதிவு இது. “எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்.” http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_14.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ” http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_14.html பதிவைப் பார்த்தேன். மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். யாராலும் எல்லா நூல்களையும் படித்துவிட முடியாது. எனவே, அவ்வப்பொழுது நாம் படித்த நூல்களின் முக்கிய பகுதிகளைக் குறிப்பிட்டுச் சொல்வதன்மூலம் அந்த நூல்களைப் படித்த மாதிரியான அனுபவத்தை வாசகருக்குத் தரமுடியும். மேலும், சக எழுத்தாளருக்கு நாம் செய்யும் சேவையாகவே இதனைக் கருதவேண்டும். நன்றி!

      நீக்கு
  5. இந்தப் பதிவில் வந்துள்ள தாகூரின் காதல் பரிசு என்னுள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சில நூல்களை எழுதிய மொழியிலேயே படித்தால்தான் இலக்கியமாக ரசிக்கமுடியும் என்று எனக்குத் தோன்றுகிறது ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் on hindsight, what is the use. மொத்தத்தில் இந்தவார அபுசி தொபசி எனக்கு ரசிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பவும் கோபித்துக்கொண்டுவிட்டீர்களே! தாகூர், மிகவும் இளம்வயதில் எழுதிய கவிதைத் தொகுதி இது. அனுபவம் கூடியபின் எழுதிய கவிதைகள் இன்னும் சிறப்பாக வந்தன என்பார்கள்.... என்ன இருந்தாலும் மொழிபெயர்ப்பில் மூலத்தின் முழுச்சிறப்பையும் கொண்டுவர முடியாதுதானே!

      நீக்கு
  6. அஞ்சா நெஞ்சர் இராதா அவர்கள்! ஐயமில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ந்த சண்டையை வைத்து எம்.ஜி.ஆர். நல்லவர், எம்.ஆர்.ராதா கெட்டவர் என்று சாமான்யர்கள் பேசிக்கொண்டிருந்த வேளையில், எம்.ஆர்.ராதா என்ற மனிதரின் இன்னொரு பக்கத்தை இந்த நூல் தெரிவிக்கிறது. தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. தாகூரின் ‘காதல் பரிசு’ – மொழிபெயர்ப்பு விமர்சனமும், விந்தன் எழுதிய, எம்.ஆர். ராதாவின் சிறைசாலை நினைவுகள் பற்றிய விமர்சனமும் அருமை

    பதிலளிநீக்கு
  8. இந்த இதழ்(!) அபுசி-தொபசி மிகச் சுருக்கமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. தாகூரின் கவிதை சிலிக்கின்றது பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. தாகூரை அதிகமாக ரசிக்க முடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. தாகூரின் எழுத்து அருமை..அருமை...
    மனதிற்கு மகிழ்வு தருகிறது.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு