வியாழன், ஜனவரி 09, 2014

ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ( ‘அபுசி-தொபசி’-20)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
தினமலர் நாளிதழில் வரும் ஆசிரியர் கடிதங்கள் அருமையானவை. அரசியல் நிகழ்வுகளைப் பகுத்தறிவுகொண்டு ஆராய்ந்து மிக எளிமையாக எழுதிவிடும் சிலரை அப்பகுதியில் காணலாம். எடுத்துக்காட்டாக இந்த இரண்டு கடிதங்கள். நேற்றைய (08-01-2014  புதன்) இதழில் எட்டாம் பக்கம் இடம்பெற்றவை.

மதுரையிலிருந்து முனைவர் மீனாட்சி பட்டாபிராமன் எழுதியது:

 ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு மூன்று வாரிசுகளாம். அந்த ராஜா, தன் ராஜ்ஜியத்தை வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுத்தபோது அவர்களுக்குள் மனஸ்தாபமாம்.

அதனால், ராஜா நிம்மதி இழந்து, மனம் கலங்கி வயதான காலத்தில் மிகவும் துயருற்றார்.

இது, ஷேக்ஸ்பியர் எழுதிய, ‘லியர் அரசன்’ என்ற நாடகத்தின் கதை. நீங்கள் இதை கருணாநிதியின் கதை என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல.

ஒன்று புரிகிறது...எல்லா நாட்டிலும், எல்லா காலத்திலும் நடக்கக் கூடியது தான், இந்த வாரிசுச் சண்டை என்பது உறுதியாகிறது.

நாலு காசு வெச்சிருக்கிற அப்பன்களுக்கே நிம்மதி இல்லை என்றால், பின், நாட்டையே கூறு போட்டுக் கொடுத்தவரைப் பற்றி என்ன சொல்ல..!

...எது எப்படியோ, கருணாநிதியின் நிலைமை பரிதாபத்திற்குரியதுதான். ‘முன்னால் போனால் முட்டுது, பின்னால் வந்தால் இடிக்குது’ என்றாகி விட்டது.

அண்ணன், தம்பி, தந்தை, தாய் என்பதெல்லாம் பதவி முன் செல்லாது. பாசம், நேசம், அன்பு, பிரியம் எல்லாம் காசைக் கண்டால் பகலவனைக் கண்ட பனித்துளியாய் பறந்தோடி விடும். ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா, அவசரமான உலகத்திலே..’ என்று கவியரசர் அன்றே பாடிவிட்டாரே!

நாகை மாவட்டம், மங்கைநல்லூரிலிருந்து எஸ்.சண்முகநாதன்:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சுற்றி ஒரு மாயவலை பின்னப்பட்டிருக்கிறது. அந்த வட்டத்திற்குள் உள்ளவர்கள் அவரை ‘ஆகா, ஓகோ’ என்று புகழ்பவர்களாகவே இருக்கின்றனர். அவரை அணுகும் நிலையில் இருக்கும் அதிகாரிகளோ மிகவும் சொற்பம். அவர்களும் முதல்வரின் மனநிலை அறிந்து மிகவும் ஜாக்கிரதையாக பேசவும் நடந்து கொள்ளவும் வேண்டியுள்ளது.

காட்சிக்கு எளியவராகவும், கடுஞ்சொல் அல்லராகவும், முதல்வர் இல்லாமையால், அவரால் கட்சியிலும் ஆட்சியிலும் நடப்பனவற்றை உள்ளது உள்ளபடி தெரிந்துகொள்ள முடிவதில்லை. முதல்வரின் மனநிலை எப்படி இருக்குமோ, அவரது கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்ச உணர்விலேயே சக அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பல விஷயங்களில் வாய்மூடி மவுனிகளாக இருந்துவிடுகின்றனர்.....

துதிபாடிகளின் பாடலில் மதிமயங்கி, தனித்து போட்டி என்று முதல்வர் பேசி வருவது அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ என்பது வள்ளுவம்.

புத்தகம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘ராணிமுத்து’ (மாதமிருமுறை) வாங்கினேன். ஜனவரி  2014  இதழ். 740 வது இதழாம்! முதல் இதழில் அகிலனின் நாவல் ‘பெண்மனம்’ வந்ததாக நினைவு. சுமார் இருபது ஆண்டுகள் அந்த இதழை வைத்திருந்தேன். அகிலனுக்கு உடம்பெல்லாம் பூரிப்பு. ‘ஒரு நாவல் வெளிவந்தவுடனே ஒரு லட்சம் பேர் படித்துவிடுகிறார்களே! இப்படியொரு அதிசயம் தமிழ்நாட்டில் நிகழ்ந்துவிட்டதே!’ என்று ஆதித்தனாரைப் பாராட்டினார். இன்று சுமார் இரண்டு லட்சம் பிரதிகளாவது விற்கும் என்று நினைக்கிறேன். முதல் பத்தாண்டுகளில் இலக்கியத்தரமான ஆசிரியர்களின் நூல்களை மட்டுமே வெளியிட்டுவந்த  ராணிமுத்து, பின்னால், யாருடைய எழுத்தையும் வெளியிட முன்வந்தது. பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியது. வெறும் நாவலாக மட்டும் வெளியிட்டு வந்தவர்கள், இப்போதெல்லாம் அதை ஒரு மாதமிருமுறை பத்திரிகையாகவே ஆக்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. சிறுகதை, கவிதை மற்றும் துணுக்குகள் என்று அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.
அதிலிருந்து ஒரு துணுக்கு: (பக்கம் 95)

மன்னனின் நன்றி

தாஜ்மகால் உருவாகக் காரணமாக இருந்த பேரரசர் ஷாஜகான், ஒரு கோடை காலத்தில், பகல் நேரத்தில், தனிமையில் இருந்தபோது தாகத்தால் தவித்தார். அப்போது பணியாளர்கள் யாரும் அருகில் இல்லாததால், அவரே கிணற்றுக்குச் சென்று நீர் இறைத்தார். பழக்கம் இல்லாததால், இறைக்கும் ராட்டினத்தில் கை சிக்கிக்கொண்டு சிரமப்பட்டு வெளியே எடுத்தார். அப்போது கடவுளை நினைத்து, “ஆண்டவரே...கிணற்று நீரைக்கூட சரியாக இறைக்கத் தெரியாத என்னைப் பேரரசராக ஆக்கிய  உமக்கு நன்றி” என்று தொழுதார்.
                    – லே.நா.சிவகுமார், சென்னை

உருக்கமான ஒரு கவிதை: (பக்கம் 53):
நீ வருவாய் என..
....
நகச்சாயம் பூசும்போது
சந்தித்தோம்
நரைச்சாயம் பூசும் முன்
சந்திப்போமா?

கருவறை சொந்தங்களால்
நீ கடல்தாண்டி
பறந்துவிட்ட போதும்...

கரையோரம் காத்திருக்கிறேன்
கிளிஞ்சல்களோடு கிளிஞ்சல்களாக
நீ வருவாய் என்..!
-    ஜோதி வசந்த், வத்தன்காடு.

கவிஞருக்கு வாழ்த்துக்கள்!

ஒரே ஒரு விஷயம்.. ராணிமுத்து மாறிக்கொண்டே இருந்தாலும், அதில் மாறாமல் இருப்பது ஜெயராஜ் வரையும் பெண்களின் ஓவியம் தான். அருகில் உள்ள படத்தை பாருங்கள். ஜெயராஜ் மாறவே மாட்டாரா?

சினிமா & தொலைக்காட்சி
  அடுத்த இதழில் பார்க்கலாம்.

பத்திரிகை
‘கலைமகள்’ ஜனவரி  2014  இதழில் கேள்வி-பதில் பகுதியிலிருந்து:

கேள்வி: சங்ககாலப் பாடல்களின் அர்த்தம் சுவையானதா?


பதில்: நன்றாகக் கேட்டீர்கள் போங்கள். சங்ககாலப் பாடல்களின் சுவையே தனியானது.

நல் வரி இறா அல் புரியும் மெல்லடை
அயிர் உருப்பு உற்ற ஆடமை விசயம்
கவவொடு பிடித்த வகையமை மோதகம்
-    இது மதுரைக்காஞ்சி  624  வது பாடல் ஆகும்.

“வரி உடைய தேன்கூடு போன்ற மெல்லிய அப்பமும் சர்க்கரைப் பாகுடன் பதமான சூட்டுடன் தேங்காயும் பருப்பும் உள்வைத்துப் பொதிந்து செய்யும் கொழுக்கட்டை” எனப் பொருள் விரியும். நாக்கில் தண்ணீர் ஊறுகிறதா இல்லையா? சுவையானதாகத் தெரிகிறதா?

உபரித்தகவல்: விஷயம் என்பதிலுள்ள ‘ஷ’ எழுத்தை நீக்கி ‘விசயம்’ என்று சொல்கிறார்கள். செய்தி சொல்லவோ, ஒரு சங்கதி சொல்லவோ ‘விஷயம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘விசயம்’ என்றால் சங்ககாலப் பாடல்படிச் சர்க்கரை (கரும்புச் சாறு) என்ற பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

 (இது வியமாக –மன்னிக்கவும்- வியமாக- நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?)

ஜனவரி 5 ஆம் தேதி ‘தினத்தந்தி’ படித்துகொண்டிருந்தேன். அதில் இறையன்பு எழுதிக்கொண்டிருக்கும் ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’ தொடர்கட்டுரை வெளியாகியிருந்தது. இந்த வார வாசகம்: “எப்போதும் போடுகிற மூதேவிதான் போடவில்லை. ஒருநாளும் போடாத மகராசியுமா போடவில்லை?” என்பது. அந்தக் கட்டுரையிலிருந்து  ஒரு சிறு பகுதி:

நல்லவர்களாக இருப்பவர்களையே நாம் புண்படுத்துகிறோம். அவர்களையே குறை சொல்கிறோம். எப்போதும் செய்யாதவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

அலுவலகத்தில்கூட அதிகம் பணி செய்கிறவர்களுக்கே, அதிகப் பணி கொடுக்கப்படுகிறது. அவர்களே அதிகம் திட்டு வாங்குகிறார்கள். புதிய முயற்சி செய்பவர்களுக்கே குறிப்பாணைகள் (memos)  வழங்கப்படுகின்றன.

ஒன்றும் செய்யாதவர்களுக்கு ஒரே ஒரு திட்டுதான். ‘ஒன்றும் செய்யவில்லை’ என்பதே.

என்னுடைய தந்தை, அக்காள், தங்கைகளை அனுசரிப்பவர். அனைவரும் எப்போது சேலம் மாநகர் வந்தால் எந்த விஷயமாக இருந்தாலும் எங்கள் வீட்டில்தான் தயங்குவார்கள். பாகம் பிரிப்பது முதல் சோகம் பகிர்வது வரை என் தந்தையின் தோள்களே அவர்களுக்குத் தூண்கள். அவருக்கு ஒரு சகோதரர் இருந்தார். அவர் விருந்துக்கு மட்டும் வந்து, யாருக்கும் மருந்துக்கும் உதவாமல் வாழ்ந்தவர்.

எந்த சுப நிகழ்ச்சி நடந்தாலும் இரண்டு சகோதரர்களுக்கும் என் அத்தைமார்கள் சமமாகவே ஒரே விலையில் வேட்டி, புடவை வாங்கி மரியாதை செய்வார்கள்.

உபகாரம் செய்கிற என் அப்பா, அவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கவும், பிழைகள் புரிந்தால் சுட்டிக்காட்டவும் செய்வார். அதனால் அவர்களுக்கு எதுவும் செய்யாமல் எல்லோரிடமும் நாக்கினால் மட்டும் நாதஸ்வரம் வாசிக்கும் அவரையே அதிகம் பிடிக்கும்.

என் அப்பா அவர்களுக்கு ‘எப்போதும் போடும் மூதேவி’.

அதிகார வட்டத்திலும் இதைப் பார்க்கலாம்.

எந்த மாவட்ட ஆட்சியர் அதிகமாய் நடவடிக்கை எடுக்கிறாரோ, அவருடைய அலுவலகத்தில்தான் அதிகம் கூட்டம் இருக்கும்.

அவர் இருக்கும்போதே இருபதாண்டு முன்னால் புதைத்த எலும்புக்கூடுகள் எல்லாம் எழுந்து ஆட்டம் போடும். கிடைத்தற்குரியவரைச் சக்கையாகப் பிழியவேண்டாமா? பால் தருகிற பசுவை ரத்தம் வரும்வரை கறக்காமல் விடுவோமா?

ஆட்சியாளர்கள், செய்பவர்களாக இருக்கும்போதே சுவரொட்டிகள் முளைக்கும். கோரிக்கைப் பேரணிகள் நடக்கும். மனு கொடுப்பவர்கள் தோரணை, நலத்திட்ட உதவி வழங்குபவரைப் போல இருக்கும்.

செயல்வீரர்களாக இருக்கும் அதிகாரிகளை மக்கள் சோர்வடையச் செய்துவிடுவார்கள்.

அவர்கள் வீட்டுமுன்பு இரவு நேரத்தில் வந்து மனுகொடுக்க முந்தியடிப்பார்கள்.

எளிமையான மனிதர்களைச் சுடத்தான் நாம் துப்பாக்கிகளைத் தூக்குகிறோம். சுட்டாலும் அவர்கள் மன்னித்து விடுவார்கள் என்ற மனப்பான்மை.

மதமோ, சாதியோ, இனமோ பக்கபலமாக இல்லாமல் உண்மையை மட்டுமே உயர்த்திப் பிடிப்பவர்கள் உலகுக்குக் கிள்ளுக்கீரையாகவே இருக்கிறார்கள்..
****
என்ன அற்புதமான எழுத்து!   இளைஞர்களைக் கவர்ந்த எழுத்தாளராக இறையன்பு விளங்குவதில் ஆச்சரியம் என்ன?

சிரிப்பு

“தலைவருக்கு தமிழ் ஆர்வம் முத்திப் போச்சு!”
“எப்படி?”
இந்தியாங்கிற பேரை, தமிழ்யான்னு மாத்தணும்ங்கிறாரே!”
-    சுபானு.
    (நன்றி: தினமலர்-வாரமலர் ஜனவரி 5, பக்கம் 15)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.

© Y.Chellappa

13 கருத்துகள்:

  1. //நீங்கள் இதை கருணாநிதியின் கதை என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல. // நல்ல இடைச் செருகல். (எழுத்தாளர் திரு சுஜாதாவின் நினைவு வந்தது. அதுவும் அப்போதுதான் காமக்கிழத்தனின் பதிவாகிய சுஜாதாவின் “உயிரின் ரகசியம்” த்திற்கு பின்னூட்டம் இட்டுவிட்டு வந்தோம்.)
    ரொம்ப அருமையாக அரசியல் பேசி பொருத்தமான பாட்டுடன் மங்களம்......!!!!!
    “ஆண்டவரே...கிணற்று நீரைக்கூட சரியாக இறைக்கத் தெரியாத என்னைப் பேரரசராக ஆக்கிய உமக்கு நன்றி” என்று தொழுதார். இப்போது இருக்கும் நம் நாடாளும் அரசர்கள், அரசிகள் என்ன சொல்லி கடவுளுக்கு நன்றி சொல்லுவார்களோ?!!

    கவிதை அருமை! பகிந்த்தற்கு மிக்க நன்றி!

    அதுதானே ஜெயராஜின் முத்திரை! அப்படி இல்லையென்றால் இதை யார் வரைந்தார்கள் என்று ஒரு குழப்பம் வந்துவிடாதா?!
    சங்க காலப் பாடல்களின் சுவை நிஜமாகவே தனிச் சுவைதான்! புதிய தகவல். உபரித்தகவல் எல்லாமே புதியது, இனிதான நாக்கில் நீர் ஊறவைத்தத் தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!
    இறையன்பின் எழுத்துக்கள் எப்போதுமே மிக மிக அருமையாகவும், ஆழமாகவும், ஆளுமையுடனும் இருக்கும்! அதையும் தாங்கள் இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!
    நல்ல ஜோக்!




    பதிலளிநீக்கு
  2. மின் அஞ்சலில் கொடுத்திருந்த சுட்டி முந்தைய பதிவைக் காட்டியது.இறையன்பு சொல்வது சுவையாக இருந்தாலும் என்ன சொல்ல வருகிறார். “என்றைக்கும் போடும் மகராசியாக இருக்கக் கூடாது” என்றா.?இந்த விஷயம் விசயமாகிறதோ இல்லையோ விடயமாக பலரது பதிவுகளில் பயணம் செய்கிறது/ தொகுப்புக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், file name திருத்த மறந்துவிட்டேன். மன்னிக்கவும். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  3. தினமலர் நாளிதழில் வந்தவைகளை நேற்றே படித்தேன்...

    கவிதை அருமை... கவிஞருக்கு வாழ்த்துக்கள்...

    இறையன்பு என்றும் சிறப்பு...

    சிரிப்பு செம...!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா.

    முனைவர் மீனாட்சி பட்டாபிராமன் தினமலருக்கு எழுதிய கதை இந்த காலத்தில் மட்டுமல்ல வருங்காலங்களிலும் பொருந்தும்
    நீ வருவாய் என.. என்ற தலைப்பில் எழுதிய கவிதை மிகவும் உணர்வுமிக்க வரிகள்.. சங்கப்பாடல்களில் காதலும் வீரமும் செறிந்த பாடல்கள் கேட்கும்போது மனதுக்கு ஒரு இரசனையை கொடுக்கும்.... புத்தகம் பற்றிய பதிவுகளையும் மிக நன்றாக அபுசி-தொபசி’சிந்தித்து எழுதியுள்ளிர்கள் .. வாழ்த்துக்கள் ஐயா..
    த.ம 5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே!

      நீக்கு
  5. தினமலரில் வரும் கடிதங்கள் கூட - அல்லது வந்ததாக வெளியிடப்படும் கடிதங்கள்கூட - தினமலர் பாணியிலேயே இருப்பதை மாதிரிக்குக் காட்டியிருப்பதாகவே நான் இதைக் கொள்கிறேன். கருணாநிதியைச் சாடுவது, ஜெயலலிதாவை பூச்செண்டால் அடிப்பது.
    ஜெயராஜ் மாறவில்லையா என்ற கேள்வி சரியில்லை, ஜெயராஜ் அப்படியே வரைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது ராணிமுத்து.
    அது சரி, இறையன்பு இப்போது தலைமைச் செயலராமே... அவர் எழுதுவதை அவரே கடைபிடிக்கிறாரா என்று யாரேனும் கூற இயலுமா...

    பதிலளிநீக்கு
  6. பல்சுவை விருந்தாக இப்பதிவு அருமை
    வாரம் இரண்டு பதிவு
    பதிவர்களுக்கு நல்விருந்து
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் சுவை!

    //சினிமா & தொலைக்காட்சி அடுத்த இதழில் பார்க்கலாம்.//

    ஓ... தாங்களும் இதழ் (பத்திரிகை) ஆரம்பித்து விட்டீர்களா, பலே!

    பதிலளிநீக்கு
  8. கவிதை அருமை... கவிஞருக்கு வாழ்த்துக்கள்...
    இறையன்பு என்றும் சிறப்பு...
    நன்றி ஐயா
    த.ம.9

    பதிலளிநீக்கு
  9. “ஆண்டவரே...கிணற்று நீரைக்கூட சரியாக இறைக்கத் தெரியாத என்னைப் பேரரசராக ஆக்கிய உமக்கு நன்றி” என்று தொழுதார். -இந்த சொற்றொடர் காலங்காலமாகப் பொருந்தி வருவதே உண்மை.

    பதிலளிநீக்கு