பொன்னித் தீவு-17
-இராய செல்லப்பா
முன்னோர்களுக்குத் திதி கொடுக்க இராமேஸ்வரம் போவதென்று புஷ்பாவின் தந்தை விநாயகம் முடிவெடுத்ததுதான் அவளுடைய வாழ்க்கைப் பாதையையே புரட்டிப்போட்டுவிட்டது.
விடியற்காலை இரயிலில் இருந்து இறங்கி, அவசரம் அவசரமாக ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு விநாயகமும் புஷ்பாவும் தங்கினார்கள். ஆறுமணிக்கு வேனில் வந்து அவர்களை தனுஷ்கோடிக்கு அழைத்துப் போவதாக இராமநாத அய்யர் (புரோகிதர்) சொல்லியிருந்தார். அதற்குள் அரைமணிநேரம் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு, அறையிலேயே குளித்துவிட்டுக் கிளம்பவேண்டும்.
“இங்குதான் ஸ்ரீராமர், மணலால் சிவலிங்கம் பிடித்து, அதற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தாராம். அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன தெரியுமா?” என்றார் அய்யர்.
அய்யர் சொன்னபடி, மணலை எடுத்துக் கடல்நீரைவிட்டுப் பிசைந்து ஒரு லிங்க உருவை அமைத்திருந்தார் விநாயகம். அய்யர் சொன்ன மந்திரங்களை, அர்த்தம் தெரியாமலும், வார்த்தைகள் புரியாமலும் உச்சரித்தபடி அந்த லிங்கத்திற்கு வில்வமும் பூக்களும் தூவிக்கொண்டிருந்தவர், “தெரியாது சாமி!” என்றார்.
இது கூடத் தெரியாதா என்பதுபோல அவரைப் பார்த்த அய்யர், “ரொம்ப சிம்பிள்! இங்கு இப்படி ஒரே ஒரு முறை லிங்க பூஜை செய்தால் போதும், இராம பக்தர்களுக்கும் பிரார்த்தனை பலிக்கும், சிவ பக்தர்களுக்கும் பலிக்கும்! அதுதான் விசேஷம்!” என்று விளக்கினார்.
விடுதியின் அறையை அடைந்தபோது சுற்றுலாத் தலங்களுக்கே உரிய ‘புரோக்கர்’ பட்டாளம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலுடன், அதற்கான வாகனவசதிகள் பற்றிய முழு விவரத்துடன் அவர்கள் மொய்த்துக்கொண்டிருந்தனர். அப்துல்கலாம் நினைவிடத்தை மறக்காமல் பார்க்கவேண்டும் என்று பலமுறை நினைவுபடுத்தினார்கள்.
விதி யாரை விட்டது? அவர்களில் ஒரு நபர் மட்டும் புஷ்பாவிடம் நெருங்கி “வணக்கம் தங்கச்சி! உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டதா?” என்று மெதுவாகக் கேட்டார். சுமார் முப்பது வயதிருக்கும். படித்த இளைஞர். பெயர் பூபதி என்று சொன்னார்.
அதற்குள் விநாயகம், “பிளஸ் டூ முடிச்சிருக்கு. சர்வீஸ் கமிஷனுக்கு அப்ளை பண்ணியிருக்கு” என்றார்.
அவ்வளவுதான், பூபதியின் முகத்தில் தோன்றிய ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று தோன்றியது புஷ்பாவுக்கு.
"கவலையை விடுங்கள் சார்! உங்கள் நல்ல காலம்தான் இன்று நீங்கள் இராமேஸ்வரம் வந்ததும் என்னைப் பார்க்க நேர்ந்ததும்! சர்வீஸ் கமிஷன் போஸ்டிங் எல்லாம் இராமேஸ்வரத்தில்தான் முடிவுசெய்வதாக வாட்ஸப்பில் வைரலாகி இருக்கிறதே, பார்க்கவில்லையா?” என்றார் பூபதி.
மேலும் தொடர்ந்தார். “நமக்கு வேண்டிய அண்ணன் ஒருவர், சென்னையில் அரசாங்க டிரைவராக இருக்கிறார். ரொம்ப செல்வாக்குள்ளவர். திமுக வானாலும் சரி, அதிமுக வானாலும் சரி, அவ்வளவு ஏன், பிஜேபி யிலும் கூட அவரால் நமக்கு வேண்டியதைச் செய்துகொடுக்க முடியும். நீங்கள் சென்னையில் இருப்பது வசதியாய்ப் போயிற்று. நீங்கள் ரூமுக்குப் போங்கள். நான் அண்ணனிடம் பேசிவிட்டு அய்யர் வீட்டுக்கு வந்து மற்ற விஷயங்களைத் தெரிவிக்கிறேன். ஆனால் ஒன்று, காரியம் முடிகிறவரையில் நமக்குள் இது இரகசியமாக இருக்கவேண்டும்!” என்று கூறிவிட்டு பூபதி அவசரமாகக் கிளம்பினார்.
சடங்குகள் முடிந்து பகல் உணவும் முடிந்து அய்யர் வீட்டு மாமியிடம் மொத்தச் செலவுக்கும் ‘செட்டில்’ செய்த பிறகு, வெளியில் வந்தனர் விநாயகமும் புஷ்பாவும். பூபதி அவர்களுக்காகக் காத்திருந்தார்.
சில முக்கிய விவரங்களைச் சொன்னார். அதற்கான செலவையும் சொன்னார். விநாயகத்திடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால் ஒரு ஏக்கர் புன்செய் நிலம் தரிசாக இருந்தது. “அது போதுமே! அண்ணனிடம் இப்போதே பேசுகிறேன்” என்று பூபதி சற்றுத் தொலைவு சென்று அலைபேசியில் பேசினார். பிறகு மகிழ்ச்சியோடு ஓடி வந்தார்.
“நீங்கள் சென்னை வந்தவுடன் இந்த நம்பருக்கு போன் பண்ணச் சொன்னார் அண்ணன். அநேகமாக இரண்டே மாதத்தில் உங்களுக்கு ஆர்டர் வந்துவிடுமாம்!” என்று உத்தரவாதமளித்தார் பூபதி.
புஷ்பாவுக்குத் தெரியாமல் பூபதியின் கையில் நான்கு ஐந்நூறு ரூபாய்களை வைத்து அழுத்தினார் விநாயகம்.
ஒரு நல்ல நாளில் போலீஸ் துறையில் உதவியாளராகச் சேர்ந்தாள் புஷ்பா.
விநாயகத்தின் நிலம், அண்ணன் சொன்ன மகளிர் அணிச் செயலாளர் ஒருத்தியின் பெயரில் கிரயம்
செய்யப்பட்டது. மிகுந்த அன்போடு விநாயகத்தின் கையிலும் பத்தாயிரம் ரூபாய் தரப்பட்டது.
கைச்செலவுக்கு வேண்டுமல்லவா?
புஷ்பா வேலைக்குப் போகவேண்டும் என்று நினைத்தவளே அல்ல. அதேசமயம் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை. தூங்குவதிலும், தோழிகளோடு பேசுவதிலும், சினிமா பார்ப்பதிலும் கொஞ்சகாலம் கழித்து விட்டு, திருமணமாகி செட்டில் ஆகிவிடவேண்டும் என்பதே அவள் கனவாக இருந்தது.
இராமேஸ்வரம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அதிலும் அவளுக்குப் பிடிக்காத போலீஸ் துறையில் அவளைக் கொண்டு வந்து நுழைத்து விட்டது.
***
"உனக்கு
என்னடி புஷ்பா, போலீஸ்
துறையில் இருக்கிறாய்! உட்கார்ந்த இடத்திலேயே ஆயிரக்கணக்கில்
வரும்! ரெண்டே வருடத்தில் சொந்த வீடு கட்டி விடுவாய்" என்று பொறாமைப்பட்டாள் தோழி
மோகனா. வேலையில்லாதப் பட்டதாரி. (அவள் இதுவரை இராமேஸ்வரம் போனதில்லை.)
எரிச்சலாக வந்தது புஷ்பாவுக்கு. "சொல்லமாட்டாயா பின்னே? ஒரு கிராமத்தில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறேன். இன்ஸ்பெக்டருக்கு நான் தான் டீ போட்டுக் கொடுக்க வேண்டும். சம்பளத் தேதியில் கைமாற்று வேறு வாங்கிக்கொண்டு விடுவார். திரும்பிவராது! நானாவது வீடு கட்டுவதாவது!"
மோகனாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். மேலதிகாரிகளைப் பார்த்து நீ 'தொழில்'நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும். அதன்பிறகு பாரேன், மாதமொரு நெக்லஸ் செய்துகொண்டு விடுவாய்" என்று நம்பிக்கை அளித்தாள் மோகனா.
நெக்லஸ் என்றவுடன் 'செல்வம்- யமுனா- ராஜா' என்ற முக்கோணம் புஷ்பாவின் மனதில் நிழலாடியது.
யமுனாவின் புகாரை விசாரிப்பதற்காக அவள் வீட்டுக்குப் போன இன்ஸ்பெக்டர் கண்ணன், திரும்பி வந்து புஷ்பாவிடம், "டைம் வேஸ்ட்! நெக்லஸ் பிரச்சினை தீர்ந்து விட்டதாக யமுனாவின் தகப்பனார் கூறிவிட்டார்" என்று சுரத்தில்லாமல் தெரிவித்திருந்தார்.
அந்தப் பின்னணியில் மோகனாவின் பேச்சைக் கேட்டவுடன் புஷ்பாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
இன்ஸ்பெக்டருக்குத் தெரியாமல், தானே போய் யமுனாவிடமும் மற்றவர்களிடமும் விசாரணை செய்தால் என்ன? இன்ஸ்பெக்டரும் அப்படித்தானே, மற்ற அதிகாரிகளுக்குத் தெரியாமல், தானே சில விஷயங்களைக் கையாள்கிறார்? சில கேஸ்களில் சமரசமும் செய்து வைக்கிறார்?
சும்மாவா வந்தது இந்தப் பதவி? இரண்டு ஏக்கர் நிலம் அல்லவா அதற்கான விலை? அந்தப் பணத்தை எப்படித்தான் மீட்பது?
***
கதவைத் திறந்த யமுனாவுக்குப்
புஷ்பாவைக் கண்டதும் ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியாகவும்
இருந்தது. அன்று போலீஸ் ஸ்டேஷனில் சாதாரண உடையில் இருந்தவள்,
இன்று போலீஸ் யூனிபாரத்தில் வந்திருந்தது யமுனாவுக்குச்
சற்றே பயத்தையும் ஊட்டியது.
அந்த நேரம் பார்த்து அவளைத்தவிர யாருமே வீட்டில் இல்லை. பரமசிவமும் பார்வதியும் அதே குடியிருப்பில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஓர் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர். செல்வம், அவசரமாக அழைக்கப்பட்டு அவனுடைய அலுவலகத்திற்குச் சென்றிருந்தான்.
“வாங்க புஷ்பா!” என்று அவளை அமரச் செய்த யமுனா, “என்ன குடிக்கிறீர்கள்? டீயா இல்லை ப்ரூ காப்பியா?” என்றாள்.
சற்றே மேடிட்டிருந்த அவளுடைய வயிற்றைப் பார்த்து விஷயத்தை ஊகித்தவளாக, “விசேஷம் போல் இருக்கிறதே! கங்கிராஜுலேஷன்ஸ்!” என்ற புஷ்பா, “எனக்குக் காப்பிதான் பிடிக்கும்” என்றாள்.
வெட்கம் கலந்த புன்னகையைப் பதிலாக அளித்த யமுனா இருவருக்கும் காப்பி கொண்டுவந்தாள். அருந்தியபின் புஷ்பாவிடம் “நீங்களும் போலீஸ் உமனா? நான் யாரோ என்று இருந்தேன்” என்றாள்.
அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் புன்னகை செய்தாள் புஷ்பா. “அதிருக்கட்டும், உங்கள் கணவர் இல்லையா?” என்றாள்.
“ஒருமாதமாக ஒர்க் ஃப்ரம் ஹோம் தான், இன்றுதான் அவசர வேலையாக ஆபீஸ் போயிருக்கிறார்.”
நல்ல சமயம், இதை நழுவ விடாதே என்று புஷ்பாவின் உள்மனது சொன்னது. எழுந்து நின்றாள்.
“சரி, விஷயத்துக்கு வரட்டுமா? நெக்லஸ் தொலைந்துபோனது பற்றி புகார் கொடுக்க வந்தீர்களே, அப்புறம் என்ன ஆயிற்று? உங்கள் கணவர் என்ன சொல்கிறார்?”
யமுனாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. நெக்லஸ் இன்னும் கிடைக்கவில்லை என்ற உண்மையைச் சொன்னால், தன் கணவரை அழைத்து இவள் விசாரிக்கக்கூடும். கிடைத்துவிட்டதென்று பொய் சொல்வதற்கும் துணிச்சல் வரவில்லை.
“அன்றைக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அப்பாவிடம்தான் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு எல்லா விஷயமும் தெரியுமே” என்று விட்டேற்றியாகப் பதில் கூறினாள்.
இப்போது புஷ்பாவுக்கு இலேசான
பயம் தொற்றிக்கொண்டது. ஒருவேளை இன்ஸ்பெக்டரே இந்த வழக்கை ‘ஒருவாறு’ முடித்துவிட்டிருந்தால், தான் வந்து போனது அவருக்குத்
தெரிந்துவிட்டால் பிரச்சினையாகிவிடுமே!
“ஆமாம், ஆனால் கேஸை நாங்கள் முடிக்கவேண்டும் அல்லவா? அதனால்தான் கேட்கிறேன். நெக்லஸ் ஒன்றுதான் காணாமல்போனது என்றும் அதுவும் கிடைத்துவிட்டது என்றும் நீங்கள் ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் எங்கள் வேலை முடிந்துவிடும். அதற்காகத்தான் இன்ஸ்பெக்டர் என்னை அனுப்பினார்” என்று சமாளித்தாள் புஷ்பா.
“ஒரு நிமிடம்” என்று பால்கனிக்குப் போனாள் யமுனா. “இந்தப் பாழாய்ப்போன குடியிருப்பில், பால்கனியில்தான் டவர் கிடைக்கிறது” என்றபடி அப்பாவுக்குப் போன் செய்தாள்.
மணியொலிப்பது கேட்கிறது, ஆனால் எடுப்பாரில்லை. மீண்டும் முயற்சித்தாள். அப்போதும் பலனில்லை.
“அப்பா வரும்வரை உட்காருங்களேன். அவரில்லாமல் நான் எதுவும் எழுதித்தர இயலாது” என்றாள் யமுனா.
தன் நிலைமையைச் சிக்கலாக்கிக்கொள்ள விரும்பாத புஷ்பா, “இல்லை யமுனா! நான் இன்னும் மூன்று கேஸ்களை விசாரிக்கவேண்டும். நேரமில்லை. சரி, நாளை வருகிறேன். உங்கள் கணவரை விசாரித்தே ஆகவேண்டும்” என்று மிடுக்கோடு கிளம்ப எத்தனித்தாள்.
“அவரை ஏன் விசாரிக்கவேண்டும்? இன்ஸ்பெக்டரே கேஸ் முடிந்துவிட்டதாகக் கூறினாரே!” என்று தயக்கத்தோடு சொன்ன யமுனா, அவள் வெளியே போகாதபடி கதவருகில் நின்றுகொண்டாள்.
அந்தநேரம் பார்த்துதானா ஆச்சி வரவேண்டும்!
“வாங்க போலீஸ்காரம்மா! நெக்லஸ் விஷயமா வந்தீங்களா? செல்வம் சார்கிட்டப் பேசினீங்களா?” என்று எடுத்துக்கொடுத்தார் ஆச்சி.
இவர் யார் என்பதுபோல் ஆச்சியைப் பார்த்தாள் புஷ்பா. தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஆச்சி, “ஒரு நிமிஷம் இரும்மா!” என்று சமையல் அறைக்குள் நுழைந்து யமுனாவுக்குக் கண்சாடை காட்டினார்.
பிறகு மெல்லிய குரலில், “இங்க பாரு, இந்த போலீஸ்காரங்க இப்படித்தான் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அன்னிக்கு இன்ஸ்பெக்டர் வந்தாரு, இன்னிக்கி இவளை மட்டும் அனுப்பியிருக்காருன்னா காரணம் புரியல்லியா ஒனக்கு?” என்று யமுனாவைக் கேட்ட ஆச்சி, மெல்லிய குரலில், “ஒரு ஐந்நூறு இருந்தால் குடுத்து அனுப்பிடலாம். விஷயம் முடிந்துவிடும். இல்லாட்டி ஒங்க வீட்டுக்காரர் கம்பெனிக்கே போய் விசாரிக்கணும்னு நிப்பாங்க! எவ்வளவு அசிங்கம் பாரு!” என்றார்.
ஐந்நூறு கைமாறியது. “இதெல்லாம் எதுக்குங்க” என்று நாணத்தோடு கேட்பதுபோல் கேட்டாலும், கொடுத்ததை வாங்கிச் சட்டையின் உள்பையில் பத்திரமாக அழுத்திக்கொண்டாள் புஷ்பா.
ஒன்றும் இல்லாத விஷயத்துக்கே ஐந்நூறு ரூபாயா என்று அதிசயித்தாள். மனம் மோகனாவுக்கு நன்றி சொன்னது. அடுத்த விசிட் எங்கே போகலாம் என்று மனதிற்குள் தேடலானாள்.
மிகுந்த ஜாக்கிரதை உணர்வோடு ஆச்சி யமுனாவிடம் இரகசியமாகக் கூறினார்: “இதையெல்லாம் உன் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிராதே! இவரைத் தெரியும் அவரைத் தெரியும் என்று விஷயத்தைப் பெரிதாக்கிவிடுவார். அப்புறம் உன் கணவன் பேர்தான் ரிப்பேர் ஆகும்!”
பிறகு, “அயன்காரனிடம் நேற்று நாலு சேலை கொடுத்தேன். பொறுப்பில்லாதவன்! இன்னும் கொண்டுவரவில்லை. நான் வரட்டுமா?” என்ற ஆச்சி, துக்கம் விசாரிப்பவர் போல் முகத்தை வைத்துக்கொண்டு, “யமுனா, அந்த நெக்லஸ் எங்கதாம்மா போச்சு?” என்றார்.
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குவேறு வழி? அந்தமான் தீவில் பயணித்தீர்கள், இனி பொன்னித்தீவிலும் பயணிக்கவேண்டியதுதான்! நன்றி நண்பரே!
நீக்கு'தொழில்'நுட்ப வேலை ஆரம்பமாகி விட்டதே...
பதிலளிநீக்குஆமாங்க, இன்னும் என்னவெல்லாம் தொழில் நுட்பம் வருமோ என்று பயமாகத்தான் இருக்கிறது. தங்கள் வரவுக்கு நன்றி!
நீக்குஆ ஆச்சி இங்கும் புகுந்துவிட்டாரா?
பதிலளிநீக்குகீதா
அதையேன் கேட்கிறீர்கள்? கொரோனா காரணமாக ஆச்சிக்கு ஊர்வம்பு பேசுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். விரைவில் உங்கள் ஊருக்கு வர ஈ-பாஸ் கிடைக்குமா என்று கேட்கச்சொன்னார்கள்!
நீக்குபுஷ்பா வேலை வாங்கிய ரகசியம் வெளியாகி இருக்கிறது. இன்னும் என்னென்ன விஷயங்கள் கிளம்புமோ?
பதிலளிநீக்குநாம் நன்றாக முடிவெடுத்தாலும், சுற்றி இருப்பவர்கள் குழப்புவதே பாதி!
ஆச்சி...பலே ஆச்சியாக இருக்கிறாரே!
பதிலளிநீக்குதொடர்ந்து படிக்கிறேன்.
S.PARASURAMAN ANNA NAGAR