பொன்னித் தீவு-18
-இராய செல்லப்பா
இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்
(18) வாசு வாசு
தன் பெயரை வாசு என்று மாற்றிக்கொண்ட பிறகு உண்மையிலேயே அதிர்ஷ்டம் வந்துவிட்டதாகவே தோன்றியது சுள்ளானுக்கு.
இருக்காதா பின்னே? வாசு என்ற பெயரில் தன் தொழிலைத்
தொடங்கிய அன்றே அவனுக்கு ஆயிரம் ரூபாய் முதல் வருமானம் கிடைத்துவிட்டதே!
அவனுடைய மூலதனம் மூங்கிலால் செய்யப்பட்ட இரண்டு வட்ட வடிவப் பெட்டிகள்
மற்றும் ஒரு சாக்குப்பை, கொஞ்சம் கயிறு. அவ்வளவே. பாம்பு பிடிப்பவனுக்கு வேறென்ன வேண்டுமாம்?
பாம்பின் வாலைப் பிடித்துக்கொண்டு, இலாவகமாக அதன் தலையை மூங்கில் பெட்டியின் மேல்மூடியினால்
மெல்லத் தட்டினால் அது கொஞ்சம் எதிர்த்துவிட்டு அடுத்த கணம் பெட்டியின் அடிப்பகுதியில்
வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்துவிடும். தானாகப் பெட்டியைவிட்டு எழாது.
இரண்டு பாம்புகளுக்குமேல் பிடிக்கவேண்டிய தேவை பெரும்பாலும்
இருக்காது என்பதால் அந்த இரண்டு மூங்கில் பெட்டிகளே வாசுவுக்குப் போதுமானதாக இருந்தது.
அன்றைய வருமானத்துக்குக் காரணம் ராஜா தான்.
ராஜா, தன் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த புலம்பெயர்
தொழிலாளர்களை ஒரு கல்லூரி வளாகத்தில் இருத்தினான் அல்லவா, அங்கு பாம்புகள் உலவுவதாக
ஒரு சந்தேகம் எழுந்தது.
நெடுஞ்சாலையில் இருந்து கல்லூரியின் உள்ளே ஒரு கிலோமீட்டர்
தூரம் அலங்கரிக்கப்படாத இயற்கை மிளிர்ந்துகொண்டிருந்தது. மரங்களும் செடிகளும் சீராகவே
நடப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே பாம்புப் புற்றுகள் சில இருந்தன. கல்லூரி விடுதியின்
பின்புற எல்லையில் ஒரு நீண்ட வயல்பரப்பு இருந்தது. எலிகளைப் பிடிக்க வரும் பாம்புகள் சிலநேரம் கல்லூரிக்குள்ளும்
எட்டிப்பார்ப்பதுண்டு. மாலையில் கல்லூரி முடிந்ததில் இருந்து, காலையில் கல்லூரி திறக்கும்வரை
மனித நடமாட்டம் குறைவு என்பதால் பாம்புகள் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருந்தன.
உள்ளூர்ப் பாம்புகளுக்கு ஆங்கிலம் தெரியாததாலும், பொறியியல்
படித்தால் சரியான வேலை கிடைக்காது என்பதாலும்தான்
பாடம் நடக்கும் நேரத்தில் பாம்புகள் வருவதில்லை என்று விடுதி மாணவர்கள்
நம்பினார்கள்.
தன்னுடைய தொழிலாளர்களின் நலத்தில் மிகவும் அக்கறை கொண்டிருந்த
ராஜா, தனக்குத் தெரிந்த ஒரு குடியிருப்பில் வழக்கமாகப் பாம்பு பிடிப்பவனான வாசுவை அழைத்து வந்தான்.
பாம்பு பிடிக்கும் தொழிலில் வாசு மூன்றாவது தலைமுறையாளன்.
ஆகவே, சில மணி நேரத்திலேயே அலைந்து திரிந்து ஐந்து பாம்புகளைப் பிடித்துவிட்டான். அரைநாள்
வேலைக்கு ஆயிரம் ரூபாய் கேட்டான். “கொரோனாவால எங்கேயுமே போகமுடியலீங்க. ரெண்டு மாசமா
வருமானமே இல்லீங்க. பெரிய மனசு பண்ணிக் கொஞ்சம் போட்டுக்குடுங்க” என்று கெஞ்சினான்.
அத்துடன் பாம்புகள் வராமலிருக்க சில புதர்களையும் அவனே
அகற்றிக்கொடுத்தான்.
ராஜா நன்றியுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினான்.
ஐந்து பாம்புகளும் அதிக விஷமில்லாதவை. நீளமும் குறைவு.
ஆகவே இரண்டே பெட்டிகளில் அடங்கிவிட்டன. அவற்றை எடுத்து சைக்கிளில் கட்டிக்கொண்டு கிளம்பினான்
வாசு.
சாலையில் ஒரு தேநீர்க்கடை கூடத் திறக்கவில்லை. நல்லவேளை சைக்கிளில் வந்த நடமாடும்
தேநீர் வியாபாரி கருணை செய்தான். காகித டம்ளர் மிகவும் சிறியதாக இருந்ததால் மூன்று டம்ளர் தேநீர் வாங்கி அருந்தினான்.
பெட்டியில் அடங்கியிருந்த பாம்புகள் மனித அரவத்தால் சற்று அசைவதுபோல் இருந்தது. இலேசாகப்
பெட்டியைத் தட்டி அவைகளை அடக்கினான். நல்ல வருமானம் சம்பாதித்த திருப்தியில் ஒரு பீடியைப் புகைக்க ஆரம்பித்தான்.
அப்போது தற்செயலாக அந்தப் பக்கம் போன ஒரு காய்கறி வேனில்
இருந்து “டேய் சுள்ளான்!” என்று அழைத்தபடி கீழிறங்கினான் அஜித்மாடன். அவனும் பாம்பு பிடித்துக்கொண்டிருந்தவன்தான். மாடன் என்ற பெயரை,
அஜீத் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தவுடன் ‘அஜீத்மாடன்’ என்று மாற்றிக்கொண்டு முன்னங்கையில்
அஜீத்தின் உருவத்தைப் பச்சையும் குத்திக்கொண்டவன்.
இரண்டு பாம்புகளை வைத்துக்கொண்டே மாதம் இரண்டாயிரம்,
மூவாயிரம் சம்பாதித்துக்கொண்டிருந்தான் அஜீத்மாடன். எப்படியென்றால், ஒரு பாம்பை கலெக்டர் ஆபீஸிலும்
இன்னொன்றை அதற்குப் பக்கத்திலுள்ள தபாலாபீஸ் அல்லது பேங்க் போன்ற இன்னொரு அரசாங்க அலுவலகத்திலும் காலை நேரத்தில்
இரகசியமாக விட்டுவிடுவான். அவை தப்பியோடி விடாதபடி அந்த இடத்திலேயே பிள்ளைபெற்ற பூனை
மாதிரி அலைந்துகொண்டிருப்பான். காலையில் வாசல் பெருக்கவரும் பெண்களிடம் பேச்சுக் கொடுப்பான்.
‘டீல்’ போடுவான்.
அதாவது, அவர்கள் பெருக்குவதை நிறுத்திவிட்டுச் சும்மா
நிற்கவேண்டும். முதலில் வரும் அதிகாரியிடம் ‘சார், ஒரு பாம்பு உள்ளே இருக்கு சார்’
என்று பயத்துடன் கூறவேண்டும். அவ்வளவே. அதற்கு இருபது ரூபாய் பரிசு கிடைக்கும். அதிகாரி
உடனே தன்னுடைய மேலதிகாரிக்கு போன் போடுவான். அவர் இரண்டாயிரம் வரை ‘சேங்ஷன்’ செய்வார்.
அடுத்து நகரசபை துப்புரவுத் தொழிலாளர்களின் துணையோடு பாம்பு பிடிப்பவனைக் கண்டுபிடிக்கவேண்டும்.
இங்குதான் அஜீத்மாடனின் மக்கள்தொடர்பு சாமர்த்தியம்
வெளிப்படும். பாம்பு விஷயமாக யார் அவனை அழைத்தாலும் பத்து சதவிகிதம் கமிஷன் என்று உறுதிப்படுத்தியிருந்தான்.
குறைந்தபட்சம் நூறு ரூபாய். ஆகவே அவர்களே அவனுடைய
‘பிசினஸை’ ரேட் பேசி முடிவெடுத்து, வாங்கியும் கொடுத்துவிடுவார்கள். அதன்றியும், பாம்பைத்
தேடுவதாக ஆபீஸ் முழுவதையும் மேல்கீழாக்கி விடுவான். அதை மறுபடிச் சீரமைக்கும் வேலையில்
பேரம் பேசும் திறமைக்கேற்ப அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். ‘வாழ்-வாழ விடு’ என்ற
உயரிய தத்துவம் அங்கே புலப்பட்டது.
சில சமயம், தான் விட்ட பாம்பை உயிரோடு பிடிக்க முடியாமல்
போவதும் உண்டு. அப்போது தொடர்ந்து தொழில் நடத்துவதற்குப் புதிய பாம்புகளைத் தேடிப்
பிடித்துக்கொடுக்க சுள்ளான் என்கிற வாசுவின் உதவியை நாடுவான். ஒரு பாம்புக்கு நூறு
ரூபாய் கொடுப்பான்.
திருமணமாகாத சுள்ளானுக்கு அதுவே பெரிய தொகை. ஆனால்
மாடனின் மனைவிக்கோ அந்தத் தொழிலே பிடிக்கவில்லை. “ஒரே பாம்பை வைத்து ஊரை ஏமாற்றுகிறாயே,
உனக்கு ஒட்டுமா?” என்பாள். “தொழிலை மாற்றுகிறாயா, இல்லை தாலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு
இன்னொருவனுடன் போகட்டுமா?” என்று திமிராகக் கேட்பாள். அவள் அப்பன் கசாப்புக்கடை வைத்திருந்தான்.
இந்தக் காரணங்களால் அவளை எதிர்க்கமாட்டாமல், காய்கறி வண்டி நடத்தும் வேலைக்குப் போனான்
மாடன் என்கிற அஜீத்மாடன்.
“மாடா! என்னை சுள்ளான் என்று கூப்பிடாதே! இப்போது என்
பேர் வாசு” என்றான் இவன்.
“அதேதான்! நீயும் என்னை இனிமேல் அஜீத்மாடன் என்றே கூப்பிடவேண்டும்”
என்றான் அவன்.
சைக்கிள் தேநீர் வியாபாரி இவர்களின் நட்பான பேச்சைப்
பார்த்து, தானாகவே தலா இரண்டு தேநீர் டம்ளர்களை நிரப்பிக் கொடுத்தான்.
வாசு தன்னுடைய முதல்நாள் பெயர்மாற்ற அதிர்ஷ்டத்தை அவனுக்கு
விளக்கினான். கைவசம் ஐந்து பாம்புகள் இருப்பதாகவும் மாடன் விலைக்கு வாங்கிக்கொள்வானா
என்றும் கேட்டான்.
“அந்த கசமாலம் வேலையெல்லாம் செய்யமாட்டேன். நான் இப்போ
வெஜிடபிள் மர்ச்சண்ட் ! தெரியுமா?” என்றான் மாடன்.
“சரி, வேறு யாருக்காவது வேண்டுமான்னு சொல்லேன்.”
வாசுவை ஏளனமாகப் பார்த்தான் மாடன். “உன்னைப்போல முட்டாள்
யாராவது இருப்பானா? இந்த ஓ எம் ஆர் ரோடில் எவ்வளவு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கின்றன!
ஒவ்வொன்றிலும் ஒரு பாம்பை விட்டுவிடு. ஐந்தில் இரண்டு பேராவது உன்னைக் கூப்பிடுவார்கள்.
வாட்ச்மேனோடு டீல் பண்ணுடா!” என்றான்.
பிறகு, “கோயம்பேடு மார்க்கெட்டை இப்போது திருமழிசைக்கு மாற்றிவிட்டார்கள்.
ரன்னிங் டைம் அதிகம். கத்திரி வெயில் வேறு. காய்கறிகள் வாடிவிடும். நான் வரட்டுமா?”
என்று கிளம்பினான். தன்னுடைய புது நம்பரைக் கொடுத்தான்.
கொரோனா காரணமாகக்
குடியிருப்புகளில் மனித நடமாட்டம் அதிகமில்லாததால் வாசுவால் பாம்பை யாருக்கும்
தெரியாமல் விடுவது சிரமமாக இருந்தது. மிகுந்த
வெறுப்புடன் நாலு பாம்புகளை ஒரு சாக்கடையில் வீசினான். ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு
சிந்தித்தபடியே கிளம்பினான்.
கையில் இருந்த பணம் வேறு அவனை என்னவோ செய்தது. வழியில் திறந்திருந்த ஒரு
டாஸ்மாக்கில் இருநூறு ரூபாயைச் செலவு செய்தபிறகு புதிய தெம்புடன் நடந்தான்.
அதோ, ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு! அதுதான்
யமுனாவின் குடியிருப்பு. ஆயிரம் வீடுகள் இருக்கும். நிறைய தோட்டங்கள், பூஞ்செடிகள்,
மரங்கள். நடுவில் ஒரு சூப்பர் மார்க்கெட். அந்தக்
குடியிருப்புக்காகவே இயங்கிக்கொண்டிருந்தது. வாசுவுக்கு வழி தெரிந்துவிட்டது.
அந்தக் கடையின் பின்வாசல் அருகே நின்று கவனித்தான். ஊழியர்கள் அதிகம் இல்லை. காய்கறிப் பிரிவு பெரியதாக இருந்தது. எல்லாவிதமான காய்கறிகளும் பழங்களும் குவிந்திருந்தன. கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் கீரைகள் ஏராளமாக இருந்தன. ஒரு சன்னலும் திறந்திருந்தது. அதுதான் சரியான இடம் என்று தோன்றியது வாசுவுக்கு. மெல்லப் பாம்பை சன்னல்வழியாக உள்ளே இறக்கிவிட்டான். அது கறிவேப்பிலைக் குவியலுக்குள் போய் ஒளிந்துகொண்டது. மனித வாசனையை நுகர்ந்தால் அது வெளியில் வராது. ஐந்தாறு பெண்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.
வேகமாக வந்து முன்வாசலில் நுழைந்தான் வாசு. ‘தேங்காய் இருக்கிறதா?’ என்று
கேட்டுக்கொண்டே பாம்பு இருந்த பக்கம் போய் ஓரமாக நின்றுகொண்டான்.
****
கையில் பணத்தைச் சுமந்துகொண்டு அகிலாவும் அந்தக் குடியிருப்புக்கு
வந்தாள். இன்று எப்படியும் யமுனாவிடமும் செம்பகத்திடமும் பேசி நெக்லஸ் பிரச்சினைக்கு
ஒரு முடிவு காணவேண்டும் என்ற உறுதியோடு அவள் இருந்தாள்.
செல்வத்திடமும் பேசினாள். இன்று முழுவதும் வீட்டில்தான்
இருப்பதாகப் பதில் வந்தது. ராஜாவையும் வரும்படி கேட்டுக்கொண்டாள். சந்திரன் முக்கிய
சாட்சி என்பதால் அவனையும் வரச் சொன்னாள்.
யமுனாவுக்கு போன் செய்தபோது அவள் சூப்பர்மார்க்கெட்டில்
பழம் வாங்கப் போயிருப்பதாகத் தெரிந்தது. எனவே அகிலாவும், அவளுக்குப் பின்னாலேயே சந்திரனும்
அந்தப் பகுதிக்கு விரைந்தார்கள். கர்ப்பிணியாக இருக்கும் யமுனாவை வெறும்கையோடு பார்ப்பது
சரியில்லை என்று பழங்கள் வாங்க முடிவு செய்தாள்
அகிலா.
செம்பகமும் அதே காரணத்திற்காகத் தானும் யமுனாவிற்குப்
பழங்கள் வாங்க விரும்பினாள்.
கருவேப்பிலைக் குவியலுக்கு அருகில்தான் பழங்கள் விற்கும்
பகுதி இருந்தது. விட்டுவிட்டு அந்தக் குவியலில் இருந்து ஏதோ அசைவது தெரிந்தது. ஆனால் யாரும் குறிப்பாகக் கவனிக்கவில்லை.
வாசு காய்கறிப் பகுதிக்குள் இங்கும் அங்குமாக ஏதோ காய்களை வாங்கவந்தவன்போல் எடுப்பதும் பொறுக்குவதுமாக நடித்துக்கொண்டிருந்தான். கடை உரிமையாளர் அந்தப்
பக்கம் வரவேண்டுமென்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். அதற்குள் பாம்பு எந்தப்பக்கம்
நகருமோ என்று பதற்றத்துடன் இருந்தான். விஷமில்லாத பாம்புதான். ஆனால் மனிதர்கள் சாவது விஷத்தால் அல்லவே, பாம்பென்ற பயத்தினால்தானே!
ஆச்சிக்கு எப்படி மூக்கில் வேர்த்தது என்று தெரியவில்லை.
அவரும் கையில் ஒரு பையுடன் அங்கு வந்தார். ஆனால் அவருக்கு அன்று அவசரமாகத் தேவைப்பட்டது
கறிவேப்பிலைதான்….
செம்பகத்தையும் யமுனாவையும் அகிலாவையும் அந்த இடத்தில்
ஒருசேர பார்த்த ஆச்சி வியப்புடன், “என்னடி கூத்து இது! மூணு பேரும் இங்க கூட்டம் போடறீங்க!” என்றவர், “நானும் வந்துடறேன்.
கறிவேப்பிலை மட்டும் எடுத்தா போதும்!” என்று
கறிவேப்பிலையை நெருங்கினார்.
வாசு உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தான். கறிவேப்பிலையில்
அசைவு அதிகரித்தது.
(தொடரும்)
இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
thindukkal என்பது சரி தானே தலைவரே...?
பதிலளிநீக்குஒண்ணும் புரியலியே சாமி!
நீக்குஎன்னது பாம்பா...? கறிவேப்பிலையில் வேறா...?
பதிலளிநீக்குகருப்பு நிறப் பாம்பு ...ஆகவே கருவேப்பிலையில்...எப்படி நம்ம கதை?
நீக்குஏற்கனவே குரங்கு வந்தது. இப்ப பாம்பும் வந்தாச்சு... நடத்துங்க! :)
பதிலளிநீக்குஇனிமேல் மனிதர்கள்தான் வருவார்கள்! போதுமா?
நீக்குஅஜீத் மாடன் பிசினஸ் நேக் வியக்க வைக்கிறது! சில வருடங்களுக்கு முன் நான் இருந்த குடியிருப்பில் ஒரு இளைஞன் வந்து பாம்பு பிடித்துப் போனான். காசு எதுவும் வாங்க மறுத்து விட்டான்!
பதிலளிநீக்குபிடித்த பாம்பால் அவருக்கு இலாபம் அதிகம் போலும்!
நீக்குஉள்ளூர்ப் பாம்புகளுக்கு ஆங்கிலம் தெரியாததாலும், பொறியியல் படித்தால் சரியான வேலை கிடைக்காது என்பதாலும்தான் பாடம் நடக்கும் நேரத்தில் பாம்புகள் வருவதில்லை என்று விடுதி மாணவர்கள் நம்பினார்கள்....
பதிலளிநீக்குதமிழனுக்கே உரிய நையாண்டி 😀😋
ஆம், கல்லூரி விடுதிகளில் இம்மாதிரி அர்த்தபூர்வமான கருத்துக்கள் அடிக்கடி கிடைக்கும்!
நீக்குஉங்களது இந்தக் கதை பயங்கர நெட் ஒர்க் சார். ஒரு குறுநாவல் சைஸுக்கு புத்தக வடிவு கொண்டு வந்து விடுங்கள். இருக்கவே இருக்கு கிண்டல். அடுத்த பகுதி முடியறத்துக்காக காத்திருக்க வேண்டாம். இப்பவே வேலைய ஆரம்பித்து விடுங்கள். புஸ்தகா.காம் மூலமாகவும் கிண்டல் போகலாம்.
பதிலளிநீக்குபதிவில் வாசிப்பதற்கு வேண்டுமானால் முன் பகுதியை திருப்ப வேண்டியிருக்கே தவிர புத்தகமாக வாசிக்கும் பொழுது அந்தக் குறை தெரியவே தெரியாது. ஒரு சேர ஐந்து பகுதிகள் வாசித்து அதையும் செக் செய்து விட்டேன்.
அப்புறம் என்ன யோசனை?.. வேலையில் இறங்குங்கள்.
தங்கள் ஆசியுடன்...செய்துவிட வேண்டியதுதான்...! விரைவில்!
நீக்குஅஜீதமாடனின் டெக்னிக் அட இப்படியுமா என்று தோன்ற வைக்கிறது. அஜீத் மாடன் பெயரே புன்சிரிப்பை வரவழைத்தது.
பதிலளிநீக்கு//உள்ளூர்ப் பாம்புகளுக்கு ஆங்கிலம் தெரியாததாலும், பொறியியல் படித்தால் சரியான வேலை கிடைக்காது என்பதாலும்தான் பாடம் நடக்கும் நேரத்தில் பாம்புகள் வருவதில்லை என்று விடுதி மாணவர்கள் நம்பினார்கள்....//
ஹா ஹா ஹா நக்கல்..
கீதா
பாம்பு பிடிப்பவர்களின் வழக்கமான பெயர்கள் எனக்கு நினைவுக்கு வரவில்லை. ஆகவே வாசு..மாடன்...என்பதுதான் அவசரமாகக் கிடைத்த பெயர்கள்!
நீக்குஅருமை
பதிலளிநீக்குதொடர்கிறேன் ஐயா
வாசு உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தான். கறிவேப்பிலையில் அசைவு அதிகரித்தது.
பதிலளிநீக்குஎனக்கு திக் திக் என்கிறது.
S.PARASURAMAN ANNA NAGAR.