திங்கள், மார்ச் 27, 2017

இலஞ்சம் என்னும் அழகு தேவதை

பதிவு எண்   22/2017
இலஞ்சம் என்னும் அழகு தேவதை 
-இராய செல்லப்பா

சென்னை.
வாலாஜா சாலையும் அண்ணா சாலையும் சந்திக்கும் இடத்தில், எல்லிஸ் சாலை துவங்கும் இடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஓட்டல் அது.



தரமான, சுவையான, சைவ உணவு கிடைக்கும். எதிர்ப்புறம் ராஜாஜி ஹால், கலைவாணர் அரங்கம், எம்.எல்.ஏ ஹாஸ்டல் போன்ற அரசு அலுவலகங்களும், பாரகன் - சாந்தி- அண்ணா-தேவி தியேட்டர்களும், ஏராளமான வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் இருந்ததால், பகல் உணவு நேரத்தில் இந்த ஓட்டலில் கூட்டம் சொல்லி மாளாது.

எங்கள் வங்கிக்குப் பகல் உணவு இடைவேளை 2-2.30 வரையான அரைமணி நேரம். ஆனால் இந்த ஓட்டலுக்குச் சென்று இடம் பிடித்து அமருவதற்கே பத்து நிமிடம் ஆகும். என்ன வேண்டும் என்று பணியாளர் வந்து கேட்கப் பத்து நிமிடம், பண்டங்கள் வந்து சேரப் பத்து நிமிடம், சாப்பிடப் பத்து நிமிடம், சாப்பிட்டுவிட்டு பில் வாங்கப் பத்து நிமிடம் என்று ஐம்பது நிமிடமாவது ஆகிவிடும். இதனால் உணவு இடைவேளை முடிந்து வங்கிக்கு ஊழியர்கள் தாமதமாக வருவதாகப் புகார்கள் எழுந்தன.

அவ்வாறு தினசரி ஓட்டலுக்குச்  சென்று உணவு அருந்துபவர்கள் ஏழு அல்லது எட்டு பேர் இருந்தனர். வங்கி மேலாளர் என்ற முறையில் அவர்களுடன் இதுபற்றி விவாதித்தேன். வேறு நல்ல ஓட்டல்கள் அருகில் இல்லையாதலால் மேற்படி ஓட்டல்தான் கதி என்றும், கால தாமதத்தைக் குறைக்க ஏதேனும் ஏற்பாடு செய்வதாகவும் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஓட்டலுக்குப் போனவர்கள் சரியாக 2.30க்குள் வங்கியில் இருந்தார்கள். பல மாதங்கள்வரை இது நீடித்தது. சரிதான், ஓட்டல் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தியிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

தற்செயலாக ஒருநாள் நானும் அவர்களுடன் அந்த ஓட்டலுக்குச் சென்றேன். எங்களைப் பார்த்ததுமே ராஜ மரியாதை போங்கள்! சமையலறையில் இருந்து உணவுப் பண்டங்களை எடுத்துவரும் இடத்தில் இருந்த முதல் இரண்டு மேசைகளை எங்களுக்காகவே முன்பதிவு செய்துவிடுவார்களாம். அருகிலேயே கைகழுவும் அறை இருந்தது. ஓ, இதனால் தான் நேரம் மிச்சமாகிறது என்று புரிந்தது.

இருக்கைகளில் அமர்ந்த அடுத்த நொடியே, நாங்கள் என்ன வேண்டும் என்று கூறாமலேயே, பணியாளர்கள் பண்டங்களைக் கொண்டுவந்து வைத்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மசால் தோசை அல்லது வெங்காய ஊத்தப்பம் வந்தது. அத்துடன் தயிர் வடை. அதன் பிறகு காப்பி. எல்லாம் இருபது நிமிடங்களில் முடிந்து வங்கிக்குத் திரும்பிவிட்டோம். பில் பணத்தையும்,  பணியாளருக்கு டிப்ஸ் ஐம்பது ரூபாயும் ஒருவரே கொடுத்தார். வங்கிக்கு வந்தபின் மற்றவர்களிடம் வசூல் செய்துகொள்வாராம். 

என் பங்கு பதினைந்து ரூபாய் என்றார். அவ்வளவு குறைவாக இருக்காதே, ஒரு மசால் தோசை, ஒரு தயிர் வடை, ஒரு காப்பி என்றால் எப்படியும் இருபத்திரண்டு ரூபாய் ஆகுமே என்றேன். சிரித்தார். ‘அது அப்படித்தான்’ என்றார். ‘பணியாளருக்கு ஐம்பது ரூபாய் டிப்ஸ் கொடுக்கிறோமே எதற்காகவாம்?’ என்றார். குழம்பினேன்.

இன்னொருவர் வந்து விளக்கம் கொடுத்தார். ஓட்டலுக்குக் கிளம்பும் முன்பே, நமக்கு வேண்டிய பண்டங்கள் இன்னதென்று போனில் தெரிவித்துவிட்டால், நாம் போய்ச்சேர்ந்தவுடன் தாமதமில்லாமல் கொண்டுவந்துவிடுவார்கள். டிப்ஸ் ஐம்பது ரூபாய்க்குக் குறையாமல் கொடுக்கவேண்டும். அவ்வளவு அதிகமான டிப்ஸ் கொடுப்பதற்குப் பிரதியுபகாரமாக, பணியாளர்கள் நமக்கு ஒரு நன்மை செய்வார்கள். எப்படி என்றால், மசாலா தோசை சாப்பிட்டால், சாதா தோசைக்கான பணத்தையே பில் பண்ணுவார்கள்.  இரண்டு வடை கொண்ட தயிர் வடை கொடுத்துவிட்டு, ஒற்றை வடைக்கான பணத்தையே கணக்கிடுவார்கள். ஏழெட்டுப் பேர் காப்பி சாப்பிட்டால், மொத்தமாக ஐந்து காப்பி மட்டுமே கணக்கில் சேர்ப்பார்கள்...இப்படி ‘டிஸ்கவுண்ட்’ சிஸ்டத்தை அமல்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

‘நமக்கு மட்டுமா, இல்லை எல்லாருக்குமே இந்த சிஸ்டம் உண்டா?’ என்றேன் அதிர்ச்சியுடன். இனி இவர்களுடன் சேர்ந்து அங்கே போவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன். வழக்கமாக ஒரே அலுவலகத்தில் இருந்து ஒரே நேரத்தில் வந்து உணவருந்தினால் மட்டும் இந்த ஏற்பாடாம். அதுவும் குறிப்பிட்ட சில பணியாளர்களுடன் மட்டுமே செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தமாம்.

அடுத்த ஆறுமாதத்தில் அந்த ஓட்டல் மூடப்பட்டு விட்டது!
****
சென்னையில் கூட்டுறவு வங்கி ஒன்றில் என் தகப்பனாருக்குச் சேமிப்புக் கணக்கு இருந்தது. அவர் இறக்கும்போது அதில் ரூபாய் இருபத்தையாயிரத்துச் சொச்சம் இருந்தது. அவரது வாரிசு என்ற முறையில் அந்தத் தொகையை எனக்குத் தருமாறு உரிய படிவங்களில் விண்ணப்பித்தேன். மரணச் சான்றிதழையும் இணைத்திருந்தேன். வங்கி மேலாளர் எனக்குத் தெரிந்தவர்தான். தனது மேலிடத்திற்கு அனுப்பி விடுவதாகவும், ஒரு வாரத்திற்குப் பிறகு வந்து சந்திக்குமாறும் கூறினார். சில நாள் கழித்து, அவரே அழைத்தார். தாலுகா அலுவலகத்தில் இருந்து வாரிசு சான்றிதழ் பெற்றுத்தரவேண்டும் என்று கூறினார்.


அதுவரை தாலுகா அலுவலகத்திற்கு நான் போனதில்லை. போக வேண்டிய காரணம் உருவாகவில்லை. இப்போது போனேன். தாசில்தாரைப் பார்த்தேன். வாரிசு சான்றிதழுக்கான படிவங்களைப் பூர்த்திசெய்து வைத்திருந்தேன். என்னை ஏறிட்டுப் பார்க்காமலேயே ‘கன்சர்ன்டு கிளார்க்கைப் பாருங்கள்’ என்றார். சம்பந்தப்பட்ட குமாஸ்தாவும் என்னை நேராகப்  பார்க்காமலேயே, என் கையில் இருந்த படிவத்தின் நீள அகலங்களை ஓரக்கண்ணால் அளந்தபடி, ‘லீகல் ஹேர்ஷிப் சர்டிபிகேட் தானே? மாலை ஐந்து மணிக்கு வாருங்கள்’ என்றார். மாலையில் போனபோது, படிவங்களை வாங்கிப் பார்த்தார். வெளியில் விற்கும் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் இரண்டு ரூபாய்க்கு வாங்கி ஒட்டிக்கொண்டு வரச் சொன்னார்.

ஒரு பழைய பெட்டிக்கடைதான் ஸ்டாம்ப் விற்கும் இடம். இரண்டு ரூபாய் ஸ்டாம்பிற்கு மூன்று ரூபாய் கேட்டார் கடைக்காரர். ‘என்னையா இது கொள்ளை லாபம் அடிக்கிறீர்?’ என்று வாதிட்டேன். அரை ரூபாய் குறைத்துக்கொண்டார்.

குமாஸ்தாவிடம் வந்தேன். மீண்டும் படிவங்களைப் பார்த்தார். ‘இறந்து போனவர், வேறு சொத்துக்கள் ஏதும் விட்டுச் சென்றாரா? அப்படியானால் அதையும் இந்தப் படிவத்திலேயே சேர்த்துவிடுங்கள்’ என்றார். ஏதுமில்லை என்றேன். மீண்டும் படிவத்தைப் பார்த்தார். இடையில் தேநீர் வந்தது. குடித்தார். மீண்டும் என்னைப் பார்த்தார். இறந்து போனது யார் என்றார். என் தகப்பனார் என்றேன். உங்களுக்கு சகோதரிகள் இருந்தால் அவர்களிடம் நோ-அப்ஜெக்சன் வாங்கிவர வேண்டும் என்றார். அதையும் இணைத்திருப்பதைச் சுட்டிக்காட்டினேன். முகம் மலர்ந்தார். ‘சரியாகத்தான் செய்திருக்கிறீர்கள். சில பேர்கள் இதற்கே நாலுமுறை வந்து போவார்கள். எங்கள் நேரம் வீணாகும்’ என்றார்.  எனக்கு மகிழ்ச்சி. சரி, வாரிசு சான்றிதழ் நாளை கிடைத்துவிடும் என்று எண்ணினேன்.

‘ரெவின்யூ இன்ஸ்பெக்டரிடம் காட்டி அவரது ஸிக்னேச்சர் வாங்கிவந்து நாளை இதே நேரம் என்னைப் பாருங்கள்’ என்று எழுந்தார் குமாஸ்தா. 

அப்படி ஒரு அதிகாரியை நான் அறிந்ததேயில்லை. அவரை எங்கே பார்க்கலாம் என்றேன். ‘கிராமங்களில் மணியக்காரர் என்பார்கள். நகரங்களில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர். காலை வேளைகளில் இதே ஆபீசில்தான் இருப்பார். வந்து பாருங்கள்’ என்றார். 

மறுநாள், காலையில் இருந்து மாலை வரை காத்திருந்தேன். ‘ஆர்.ஐ. சார் தானே? இதோ வருவார், அங்கே சர்வேக்குப் போயிருக்கிறார்..’ என்றே சொல்லிக்கொண்டிருந்தார்கள். குமாஸ்தாவிடம் வந்தேன். ‘எதற்கும் நாளை வந்து பாருங்கள்’ என்று பற்றற்றவராய்ப் பதில் சொன்னார்.

மறுநாளும் ஆர்.ஐ. வரவில்லை. குமாஸ்தா என்மீது பெரிதும் கருணை கொண்டவராய், உட்காருங்கள் என்றார். உங்களுக்கு இரண்டு நாள் வீணாகிவிட்டது அல்லவா என்றார். அதற்குள் தாசில்தார் அழைப்பதாக அறைக்குள் போனார். வரும்போது கையில் தபால் ஸ்டாம்ப்கள் நிறைய ஒட்டிய மாதிரி ஒரு பெரிய அட்டையைக் கொண்டு வந்தார். அதில் இந்திய ராணுவத்தின் கொடியானது ஸ்டாம்ப் வடிவத்தில் இருந்தது. ஒரு பக்கத்தில் நூறு ஸ்டாம்ப்கள் போல் இருந்தன.

‘கொடிநாள் வருகிறதல்லவா? மூவாயிரம் கொடிகள் விற்கவேண்டும் என்று தாசில்தார் கூறிவிட்டார். இருக்கிற வேலையில் இதை யார் செய்வது? செய்யாவிட்டால் தூக்கி யடிப்பார்கள். சொல்லிப் புண்ணியமில்லை’ என்றார். ‘சரி, நீங்கள் எவ்வளவு வாங்கிக் கொள்கிறீர்கள்? ஒரு கொடி பத்து ரூபாய்’ என்றார்.

ஆண்டுதோறும் கொடிநாள் வருவது தெரியும். எனது அலுவலகத்திலும் கொண்டுவந்து விற்பார்கள். ‘அதற்கென்ன, பத்து கொடிகள் கொடுங்கள்’ என்றேன்.

அவர் சிரித்தார். ‘என்னங்க இது? இருபத்தையாயிரம் ரூபாய் கிளெய்ம் செய்கிறீர்கள். இரண்டாயிரம் ரூபாய்க்காவது கொடி வாங்கவேண்டும்’ என்றார்.

நான் எழுந்தேன். ‘அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? சரி போகட்டும், பத்துக்குப் பதில் இருபதாகக் கொடுங்கள்’ என்றேன். முணுமுணுத்தார். கடைசியில் ஐம்பது கொடிகள் - அதாவது ஐநூறு ரூபாய் - என்று பேரத்தை முடித்தார். ‘ஆனால், வாரிசு சான்றிதழ் நாளை கிடைத்தாக வேண்டும்’ என்றேன். ‘கவலைப்படாதீர்கள். நாளை ஆர். ஐ. வந்தால் நானே கையெழுத்து வாங்கிவிடுகிறேன்’ என்றார். கொடியின் விலை  ஐநூறு ரூபாய் பெற்றுக்கொண்டார். நாளை வரும்போது மறக்காமல் ரிஜிஸ்டரில் எண்ட்ரி போட்டுவிட்டு கொடிகளை வாங்கிக்கொள்ளம்படி கூறினார்.

மறுநாள் போனேன். அலுவலகம் மூடியிருந்தது. மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையாம்!

அதன் பிறகு திங்கட்கிழமை என்னால் போக முடியவில்லை. வெள்ளிக்கிழமைதான் போக முடிந்தது. குறிப்பிட்ட குமாஸ்தா அன்று விடுமுறையில் இருந்தார். நான் அடிக்கடி அவரிடம் வந்துபோனதை நேரில் அறிந்திருந்த பியூன் ஒருவர் ஓடிவந்தார். ‘சார், ஒங்க சர்ட்டிகேட்டு ரெடியா இருக்குது. நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தாரு. இன்னும் ஒருவாரம் அவர் லீவு. அதான் எங்கிட்ட  குடுத்துட்டுப் போனாரு’ என்று ஒரு கவரை நீட்டினார். எனக்கான வாரிசு சர்டிபிகேட் அதில் இருந்தது.  ஆனால் ஐநூறு ரூபாய்க்கான கொடி-ஸ்டாம்ப்கள் இல்லை. கேட்டேன்.

கொடிநாள் ஸ்டாம்ப்புகளா? எங்கிட்ட ஒண்ணும் சொல்லலியே! சார்கிட்ட தான் இருக்கும். எங்க போயிடும்! இன்னொருநாள் வந்து வாங்கிக்குங்க என்றார் பியூன்.

காப்பி சாப்பிடுங்க என்று ஐந்துரூபாய் கொடுத்தேன். அப்போது காப்பி விலை இரண்டு ரூபாய்தான்.

பத்து நாள் கழித்துத்தான் மீண்டும் போக முடிந்தது. குமாஸ்தா என்னை அதற்குமுன் பார்த்ததே இல்லை போல் ஒரு பார்வை பார்த்தார். ‘கொடி’ என்றேன். ‘என்னது’ என்றார். ‘கொடிநாள் ஸ்டாம்ப்’ என்றேன். 

புரிந்துகொண்டவர் போல, வேகமாக தாசில்தார் அறைக்குள் போனார். பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தார். ‘உங்களுக்காக எடுத்து வைத்ததை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டார்கள் போல் இருக்கிறது. நீங்கள் உடனே வந்திருக்கவேண்டும். இப்போது ஸ்டாக் தீர்ந்துவிட்டது. அடுத்த வாரம் புது ஸ்டாக் வந்ததும் என்னை வந்து பாருங்கள்’ என்று கூறிவிட்டு வெளியில்போயே விட்டார். 

*** 
இலஞ்சம் என்பவள் அழகான தேவதையாம். யாரும் அறியாமல் வருவாளாம், யாரும் அறியாமல் போவாளாம். எப்படி, எந்த வடிவத்தில் வருவாள் என்பது அவளைச் சந்தித்தவர்களுக்கு மட்டுமே தெரியுமாம். தன்னை நம்பியவர்களைப் பெரும்பாலும் கைவிடுவதில்லையாம்.

****
© Y Chellappa

32 கருத்துகள்:

 1. இந்த மாதிரியெல்லாம் செய்யப்பிடிக்காமல் தான் வெளியே வந்தேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேறு என்னதான் செய்யமுடியும் நண்பரே? அம்மணமாக ஆடுபவர்கள் நடுவே ஆடை கட்டியவன் முட்டாள் தானே! விட்டு விலகுவது தான் ஒரே வழி. தங்கள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 2. அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாடா! ஒரு வழியாய் வலையுலகத்திற்குள் மீண்டும் வந்துவிட்டீர்கள். நன்றி நண்பரே!

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா

  அற்புதமான கதைக்கரு புதுமையான அனுபவம் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. சர்வரும் ,கஷ்டமரும் இப்படி 'உண்ட ஹோட்டலுக்கு 'இரண்டகம் பண்ணலாமா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிறகுதான் தெரிந்தது, இம்மாதிரி நடவடிக்கை கோயம்புத்தூரில் கூட உண்டாமே! மேற்பார்வை பார்ப்பவர் சரியில்லை என்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

   நீக்கு
 5. பாகற்காய் போல கசப்பானாலும், மிதுபாகற்காய் பிட்ளை போல மிகவும் அருமையான அனுபவமாகவும், அதைத் தாங்கள் வரிக்கு வரி அழகாக நேரேட் செய்து சொல்லியுள்ளவிதம் மிகவும் அற்புதமாகவும் உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள்.

  //இலஞ்சம் என்பவள் அழகான தேவதையாம். யாரும் அறியாமல் வருவாளாம், யாரும் அறியாமல் போவாளாம். எப்படி, எந்த வடிவத்தில் வருவாள் என்பது அவளைச் சந்தித்தவர்களுக்கு மட்டுமே தெரியுமாம். தன்னை நம்பியவர்களைப் பெரும்பாலும் கைவிடுவதில்லையாம்.//

  அழகான தேவதைபோல மிகவும் அழகாகவே சொல்லிவிட்டீர்கள்.

  அவளை சோதிக்காமல் ஆரம்பித்திலேயே அவளுக்குக் கொடுக்க வேண்டியதைக்கொடுத்து, பெற வேண்டியதை பெற்று, வீண் அலைச்சலோ, ஏமாற்றமோ இல்லாமல், தாமதத்தைத் தவிர்த்து, நீங்களும் அவளை நன்கு எஞ்ஜாய் செய்திருக்கலாம். :)

  என்னவோ போங்கோ ... இதெல்லாம் எங்கும் மிகவும் சகஜமாகவும் சர்வ சாதாரணமாகவும் போய்விட்டன. மொத்தத்தில் யாருக்கும் வெட்கமில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "நான் லஞ்சம் வாங்கமாட்டேன் என்று சத்தியம் செய்யலாம். ஆனால், லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்யமுடியாது" என்று ஓர் அரசியல் தலைவர் கூறினார். பீகாரில் என்று நினைக்கிறேன். இப்போது நாடெங்கிலும், ஏன், உலகெங்கிலுமே இதுதான் நிலைமை. தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 6. தேவதை இப்போதும்
  அழகு குறையாமல் வயது கூடாமல்
  அப்படியே இருக்கிறாள்
  விலைதான் கொஞ்சம் கூட...

  (நானும் பத்து நாட்களுக்கு முன்பு
  ஒரு வாரிசு சர்டிஃபிகேட்டுக்கு அலைந்தேன்
  சூட்சுமங்கள் தெரிந்ததால் சீக்கிரம்
  வாங்கிவிட்டேன் விலையைத்தான் குறைக்க முடியவில்லை )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதாவது, உங்களுக்குக் 'கொடி' கிடைத்துவிட்டது என்கிறீர்கள்...சபாஷ்! தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 7. உண்மை தான் சார்...அரசு அலுவலகங்களுக்கு சென்றால் கோபத்தில் யாரையும் திட்டவும் முடியாமல்..அது போல் கொடுமை எங்கும் இல்லை ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயய்யோ! அரசு அலுவலகத்தில் பொய், யாரையும் திட்டி விடாதீர்கள்! அப்புறம் உங்களை ஆயுளுக்கும் BLOCK செய்துவிடுவார்கள்.

   நீக்கு
 8. இந்தக் கொடி விவகாரம் எங்களுக்கும் பெரிய தொல்லை.எங்களுக்கும் 30000 ரூபாய் அளவுக்கு கொடி கொடுத்து விடுவாரகள். இதனை பள்ளிகளுக்கு கொடுத்து விடுவோம். அவர்கள் ஆசிரியர்களுக்கு பிரித்துக் கொடுப்பார்கள்.ஆசிரியர்கள் மாணவர்களிடம் கொடுப்பார்கள்.தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் கொடுக்க முடியாது. மாணவனை பள்ளிக்கு வரவைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஆசிரியர் தினம்,படைவீரர் நாள் குழந்தைகள் தினம் என்று கொடிகளை அள்ளி கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இது போதாதென்று ட்ரேட் ஃபேர் டிக்கெட்டுகள் வேறு. இவற்றை நாங்கள் சுமையாகக் கருதுகிறோம். அவர்களோ இதையே சாதகமாக்கிக் கொள்ளும் சாமார்த்தியத்தை என்ன சொல்ல?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுமை ஓரிடம், சொகுசு ஓரிடம் என்று இதைத்தான் கூறுகிறார்களோ? இதை எதிர்த்து யாரும் கொடி பிடிப்பதில்லையே, ஏன்?

   நீக்கு
 9. முதலிலேயே புரிந்து கொண்டு கொடுக்க வேண்டியதைக் கொடுத்திருந்தால் இத்தனை அலைச்சல் தேவை இருந்திருக்காது ஏன் அனுபவம் கூறுகிறேன் காவேரி நீர் கனெக்‌ஷனுக்கு அப்போது ரூ. 8500/ கொடுக்க வேண்டும் அந்த ஆஃபீஸ் என் வீட்டிலிருந்து சுமர் 12 கி.மீ தூரம் கஷ்டப் பட்டுப் போய்ச் சேர்ந்தால் என் பணத்தை வாங்கி ரசீது தருவதற்கு அது ஒரு வருமானம் தரும் வேலை. என்னிடம் பணம் கேட்கத் தயங்கிய அவர் அவரது கை பேசியில் ரூ.200/ என்று எழுதிக்காட்டினார். அதாவது நான் அதை அவருக்குக் கொடுக்க வேண்டுமாம் போய் வரும் சிரமத்தைப் பார்த்து அந்தப் பணத்தை அவரிடம் கொடுத்து வெற்றிகரமாக ரசீது வாங்கினேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வெற்றியின் ரகசியங்களை அவ்வப்பொழுது பகிருங்கள் ஐயா! மற்றவர்கள் பயன்பெறுவார்கள்.

   நீக்கு
 10. இலஞ்சம் வாங்காத அதிகாரியை இன்று
  மற்றவர்கள் மட்டுமல்ல,அவரது குடும்ப உறுப்பினர்களே எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா?
  பிழைக்கத் தெரியாத மனிதர் என்றுதான் அழைக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது மட்டுமல்ல, அவரது பிள்ளை, பெண்களைத் திருமணம் பேசுவதற்கும் மற்றவர்கள் தயங்குகிறார்கள் என்பதும் மறுக்கவியலாத உண்மை. செலவு செய்வதற்கு அவரிடம் பணம் இருக்குமா என்ற சந்தேகம்...

   நீக்கு
 11. முடிவுரை ! அருமை என்றோ நடந்தது என்றாலும் இன்றும் அதே அவல நிலைதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேறு எப்படி வெற்றி பெற முயற்சிக்கிறார்களாம்?

   நீக்கு
 12. கையூட்டுக் கலாச்சாரம் அருகுபோல் வேரூன்றி விட்டதே! அதை ஒழிக்கவே முடியாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. சரியான உவமை. இலஞ்சமும் அது போன்றதே. ஒரு அதிகாரியின் பதவிக்காலத்தில் அது இல்லாதது போல் இருக்கும். அடுத்தவர் வந்ததும் இன்னொரு புதிய வடிவத்தில் அது முளைத்துவிடும்..ஜனநாயகத்தின் அசைக்கமுடியாத ஐந்தாம்தூண் அது தானோ?

   நீக்கு
 13. அந்த இலஞ்சம் என்ற அழகுத் தேவதை என்னைக் கண்டுஎட்டடி நகர்ந்து விடுறாளே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான பெண்கள் ஓர் ஆணைக் கவரவேண்டுமானால் மச்சம் தேவை என்று என் நண்பன் கூறுவதுண்டு...

   நீக்கு
 14. 2016 ஜனவரியில் இறந்துபோன எங்கள் தந்தைக்கு அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பத்தாயிரத்திற்கும் குறைவான பணத்திற்கு ரூ.10,000/- லஞ்சம் கேட்டிருக்கிறார் தாலுகா அலுவலகத்தில் புரியும் ஒரு பெண்மணி. இத்தனைக்கும் சகோதரர் தேவையான டாகுமெண்ட்ஸ் தயாராக வைத்திருந்தும் இந்த கதி. சகோதரர் கையூட்டு தர மறுத்ததால் இன்னும் தாலுகா அலுவலகத்திற்கு நடந்து கொண்டிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அரசுப் பணியில் இருக்கும் பெண்கள், லஞ்சம் வாங்குவதில் சக ஆண்களையும் மிஞ்சிவிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்....

   நீக்கு
 15. உங்களுடைய கனவுகள் பற்றிய பதிவினை படித்தேன். கனவுகள் பலிப்பதில் என் அனுபவம் தனி விதம். அதை படித்து பார்க்கவும்.பதிவின் தலைப்புகள் 'கனவு பலித்தது' மற்றும் 'பலிக்கும் கனவுகளும் அது தந்த பாடமும்'

  பதிலளிநீக்கு
 16. லஞ்சம் அழகு தேவதைதான் சார்! அழகிற்குள் இருக்குமாமே ஒரு அபாயம் அது போல! இந்த லஞ்சம்தானே இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது.இந்தக் கொடி எல்லாம் பள்ளியில் காசு கொடுத்து வாங்க வைப்பார்கள். அதற்குப் பைசா/ரூபாய் வீட்டில் கேட்டால் தர மாட்டார்கள். வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையில் திண்டாடியிருக்கிறேன்...அதன் பின் எனக்கும் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கச் சென்ற போது இதே அனுபவம் தான். கொடிகளை நீட்டினார்கள். நான் கேள்வி கேட்டதும் இதை வாங்கவில்லை என்றால் உங்கள் உரிமம் புதிப்பிக்கப்படாது, அல்லது தாமதமாகும் என்று சொல்லி விட்டு கூலாக தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினார் அந்த அதிகாரி. எனக்குக் கோபம் தலைக்கேறியது! நான் விண்ணப்பித்தைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். எந்தவித தொடர்பும் இல்லை. மேடைப் பேச்சோ, எழுதுவதோ எதுவும் உதவாது ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது போல....வேறு வழி ஓட்டுநர் பள்ளி மூலம் சென்றால் இன்னும் அதிகம்...அதற்கு இங்கு கொடிக்கு அழுதுவிடலாம் என்று 300 ரூபாய் அதுவும் 100 ஆக வேண்டும் என்று சொல்லி என் கண் முன்னரேயே வேறு இருவருக்கு அது வழங்கப்பட்டது. உரிமம் கிடைத்தது. கொடி?? ஹஹஹ்ஹ் உங்களைப் போலத்தான் தரவே இல்லை...ஸ்டாக் இல்லை என்றார் கூலாக. கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. இப்படி நாமே லஞ்சம் கொடுத்து உடந்தையாகி ஒவ்வொன்றும் வாங்க வேண்டியிருக்கிறதே...அதுவும் அந்த அதிகாரியின் எக்காளச் சிரிப்பின் முன்....நான் தவறு செய்வது போல் கூனிப் போனேன்...

  கீதா

  பதிலளிநீக்கு