ஞாயிறு, மார்ச் 19, 2017

கடமை புரிவார் இன்புறுவார்

பதிவு எண் 20/2017
கடமை புரிவார் இன்புறுவார்
-இராய செல்லப்பா

ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய, நகரின் மிகப்பெரிய ஓட்டலில் வங்கி மேலாளர்களின் மாநாடு நடந்துகொண்டிருந்தது.

வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குனரும் ஒருவரே. (எம்.டி.). அவர்தான் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். அடுத்த நிலையில் இருந்தவர், வங்கியின் செயல்முறை இயக்குனர். (ஈ.டி.). அவரும் வந்திருந்தார். ஐந்தாறு பொது மேலாளர்கள் (ஜி.எம்.), சில துணைப்பொது மேலாளர்கள் (டி.ஜி.எம்) என்று பலரும் முன்வரிசையில் இருந்தார்கள்.

அவர்களுக்குப் பின்னால் சுமார் ஐம்பது கிளை-மேலாளர்கள் அமர்ந்திருந்தார்கள். பெருநகர மேலாளர்கள் ஒரு  தொகுப்பாகவும், மாவட்டத் தலைநகர் மேலாளர்கள் இன்னொரு தொகுப்பாகவும், இறுதி வரிசைகளில் கிராமப்புற மேலாளர்களும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல கிராமங்களில் வருடத்தில் பாதி நாட்கள் மின்சாரம் இருக்காது. கணினிகள் இயங்காது. அவர்களிலும்  பலர் ‘கோட்’, ‘சூட்’ அணிந்து வந்திருந்தார்கள். (சில கோட்டுகள் வாங்கிப் பதினைந்து ஆண்டுகள் ஆகியிருக்கலாம்.) பதவி உயர்வுக்கு இதெல்லாம் அவசியமானவை என்று மேலதிகாரிகள் நினைக்கக் கூடுமென்று அவர்கள் கருதினார்கள்.

வாங்கும் பணத்திற்கேற்ப உச்சகட்ட குளிர்சாதன வசதிகள் செய்திருந்தது ஓட்டல் நிர்வாகம். அரங்கம் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. ஆனால் ஓட்டல் அதிகாரிகளிடம் சென்று குளிரைக் குறைக்கும்படி சொல்வதற்கு யாரும் துணியவில்லை. ஏனெனில் தலைவருக்கு இந்தக் குளிர் தேவையாக இருந்தால்? வீணாகக் கெட்ட பெயர் வாங்குவானேன் என்று குளிரைச் சகித்துக் கொண்டிருந்தார்கள்.

புதுமைகளைப் புகுத்தவேண்டும் என்ற ஆர்வமுடையவர்  மண்டல மேலாளர். எனவே மேலாளர்கள் மட்டுமே பங்கேற்கும் அம்மாநாட்டில், குமாஸ்தா (‘கிளார்க்’) மற்றும் கடைநிலை ஊழியர் (‘பியூன்’) வர்க்கத்தைச் சேர்ந்த இருவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர்களுக்குத் தலைவர் கையால் சான்றிதழும், வங்கியின் இலச்சினை பொறித்த, மரச்சட்டத்தில் வெள்ளித்தகடு ஒட்டிய கேடயம் ஒன்றும் வழங்கப்பட இருந்தது. தமது செயல்பாட்டினால் வங்கியின் புகழ் பரவக் காரணமாயிருந்தவர்கள் அவர்கள். குடும்பத்தினரோடு கலந்துகொள்ளலாம் என்று கூறியிருந்ததால், முத்துராமன் (குமாஸ்தா)   தன் மனைவியுடன் வந்திருந்தார். கோவிந்தன் (பியூன்), மனைவியுடன் மூன்று வயதுக் குழந்தையையும் (மாலதி) அழைத்து வந்திருந்தார்.

பொதுவாகவே வங்கிகளில் அதிகாரி வர்க்கத்திற்குப் பொறுப்புக்கள் அதிகம். அங்கீகரிப்பும் அவர்களுக்கே கிடைக்கும். அதனால் குமாஸ்தாக்களும், மற்ற ஊழியர்களும்  தமது கடமைகளை முழுமையாகச் செய்வதில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் உண்டு. சில வங்கிகளைப் பொறுத்தவரை அது உண்மையும் கூட. அதை மாற்றி,  எங்கள் வங்கியில் அந்தஸ்து வேறுபாடில்லாமல் எல்லா ஊழியர்களும் சமமான பங்களிப்பைத் தருபவர்கள் என்று வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பார் தலைவர். அதற்காகவே இவ்விருவருக்கும் கெளரவம் அளிக்க முடிவு செய்தார் மண்டல மேலாளர்.  அதனால் தலைவரிடம் தனக்கு மேலும் நெருக்கம் உண்டாகும் என்றும் எதிர்பார்த்திருந்தார்.
****
நிகழ்ச்சி தொடங்கும் முன்பு தலைவருக்கு இந்த இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டனர். குழந்தை மாலதியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொடுத்தார் தலைவர். நீளமான சாக்லேட் ஒன்றும் கொடுத்தார்.
****
வரவேற்புரையுடன் மாநாடு தொடங்கியது. தலைவர் பேச எழுந்தார். மேலாளர்களை வரவேற்பதற்குமுன்  முத்துராமனையும் கோவிந்தனையும் வரவேற்க விரும்புவதாகக் கூறினார். அதிகாரிகள் மட்டுமே ஒரு வங்கியை நடத்திவிட முடியாது, மற்ற இரு வர்க்கத்தினரும் மிக இன்றியமையாதவர்கள் என்றார். வாடிக்கையாளர்களை முதலில் சந்திப்பது குமாஸ்தாக்கள் தாம். அவர்கள்தாம் வங்கியின் முகம் என்று பாராட்டியதும் அனைவரும் கை தட்டினார்கள். அதைப் பார்த்து குழந்தை மாலதியும்  கைதட்டினாள். அவர்களுக்குச் சான்றிதழையும் கேடயத்தையும் உடனே வழங்கி, மாநாடு தொடங்கும் முன்பு அவர்களை அனுப்பிவிட விரும்பினார்.

முதலில் முத்துராமன் அழைக்கப்பட்டார். அவருக்குக் கேடயத்தை வழங்கிய தலைவர், அவருடைய மனைவியையும் மேடைக்கு வரச் சொன்னார். அந்த அம்மையாருக்கு  ஏகத் திருப்தி.  சான்றிதழை அம்மையார் பெற்றுக்கொண்டார். தலைவருடன் மூவரும் புகைப்படம் எடுத்துகொண்டனர். அம்மையார் எந்த ஊர், என்ன படித்திருக்கிறார், உடல் நலத்தை எப்படிப் பேணுகிறார், வருடாந்தர மருத்துவ பரிசோதனை செய்துகொள்கிறாரா என்று பல கேள்விகளைக் கேட்டு அவர் மனதில் தன்னைப்பற்றி ஒரு மரியாதையான இடத்தை உண்டாக்கிக்கொண்டார் தலைவர் என்றுதான் சொல்லவேண்டும்.

அடுத்து அழைக்கப்பட்டார் கோவிந்தன். அவர் மனைவியும் குழந்தையும் மேடைக்கு வந்தனர். தலைவர் கேடயத்தை வழங்குவதற்கும், குழந்தை அம்மா, பாத்ரூம் போகணும்மா என்று அம்மாவின் சேலைத்தலைப்பை பிடித்து இழுக்கவும் சரியாக இருந்தது. முன்பின் பார்த்தறியாத நட்சத்திர ஓட்டலில் பாத்ரூம் எந்தப் பக்கம் இருக்கும் என்று அந்தப் பெண்மணிக்குத் தெரிய நியாய மில்லையே! சுற்றுமுற்றும் பார்த்து எதோ ஒரு பக்கமாக நகர முயன்றபோதுதான் அந்த விபரிதம் நடந்தது. 

தாங்க முடியாத ஏசி குளிரினால் நடுங்கிக்கொண்டிருந்த குழந்தை மாலதி, பாத்ரூமுக்குப் போவதற்குள் நின்ற இடத்திலேயே சிறுநீர் கழித்துவிட்டாள்! அதாவது மேடைக்குச் சற்று முன்பாகவே.

தலைவர், செயல்முறை இயக்குனர் இருவரும் மண்டல  மேலாளரைப் பார்த்த பார்வை இருக்கிறதே, அப்பப்பா நெருப்புதான் போங்கள்!

ஓட்டல் பணியாளர்கள் அவசரம் அவசரமாக வந்து குழந்தையைக் கையோடு இழுத்துக்கொண்டு போனார்கள். இடத்தைச் சுத்தம் செய்தார்கள். சான்றிதழும் கேடயமும் அவசர அவசரமாக கோவிந்தனுக்கு அளிக்கப்பட்டன. அவர் ‘சாரி சார், சாரி சார்’  என்று சொல்லிக்கொண்டே மேடையில் இருந்து இறங்கினார். புகைப்படமாவது மண்ணாங்கட்டியாவது!

நிலைமையின் இறுக்கத்தைக் குறைப்பதற்காக ஐந்து நிமிட இடைவேளை விடப்பட்டது. மண்டல மேலாளருக்கு செம டோஸ் தரப்போகிறார் தலைவர் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் அமைதியாக இருந்தார். நிகழச்சி நிரல்படி மாநாடு நடக்க ஆரம்பித்தது.

உணவு இடைவேளை வந்ததும் தலைவரிடம் சென்று வருத்தம் தெரிவிக்க முயன்றார் மண்டல மேலாளர். ஆனால் தலைவர் இவர் பக்கம் திரும்பாமல் செயல்முறை இயக்குனருடன் ஏதோ தீவிரமாக விவாதிப்பதுபோல் இருந்துவிட்டார். தன் பக்கம் திரும்பமாட்டாரா என்று காத்திருந்ததில் உணவையே மறந்துபோனார் ம.மே.

சரி, தேநீர் இடைவெளியில் பேசலாம் என்று பொறுத்திருந்தார் ம.மே. ஆனால் விவாதங்கள் சூடுபிடித்தபடி இருந்ததால் அவரவர் இருக்கையிலேயே தேநீரை அருந்தலாம் என்று தலைவர் பணித்துவிட்டார். அந்த வாய்ப்பும் போயிற்று. இருப்புக் கொள்ளாமல் தவித்தார் ம.மே.

அதற்கிடையில்  வங்கியின் முக்கிய வாடிக்கையாளர் ஒருவர் வரவேற்பில் காத்திருப்பதாகத் தகவல் வரவும் ம.மே. அரங்கத்தில் இருந்து வெளியேறினார். சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பியபோது தலைவரைக் காணோம்!

ஒரு முக்கிய வேலையாக உள்ளூர் ஐஏஎஸ் அதிகாரியைச் சந்திக்கவேண்டிக் கிளம்பிவிட்டாராம். அவர் போன சிறிது நேரத்திற்கெல்லாம் செயல்முறை இயக்குனரும் தமக்கு ஓர் அப்பாயிண்மென்ட் இருப்பதாகச் சொல்லி வெளியேறிவிட்டார். மூத்த பொதுமேலாளர் தான் பாக்கியிருந்த நிகழ்வுகளை நடத்தலானார்.

ஒருவழியாக மாநாடு முடிந்தபோது மணி ஏழு. சரியாக உணவருந்தாததால் ம.மே. க்கு பசிமயக்கம் வந்தது. ஒரு வழியாகத் தன் காரை வந்தடைந்தார். வீட்டில் சென்று கட்டிலில் சாய்ந்தபிறகுதான் சற்றே அமைதியடைந்தது உடலும் மனமும்.

இருந்தாலும், தனது அதீத உற்சாகத்தின் காரணமாக, அதிகாரிகள் மட்டுமே பங்கெடுக்கவேண்டிய மாநாட்டில், ஒரு குமாஸ்தாவையும், பியூனையும் அழைத்து வந்து,  அதன் மூலம் தலைவர் முன்னிலையில்   ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டதற்கு தலைமை அலுவலகத்தில் என்ன சொல்வார்களோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது. தலைவரின் மௌனம் அவருக்குத் திகைப்பூட்டுவதாக இருந்தது.

சில வாரங்களுக்குப் பிறகு, வங்கியின் சார்பாக வெளியிடப்படும் செய்திமடலில் மண்டல மேலாளரின் தன்னெழுச்சியான செயலைப் பாராட்டி ஒரு கட்டுரை வந்திருந்தது. எழுதியவர்: மூத்த பொதுமேலாளர். அதிகாரிகள், குமாஸ்தாக்கள், பியூன்கள் என்ற மூன்று வர்க்கத்தையும் ஒன்றிணைத்துக் கொண்டுபோகும் ம.மே.-வின் சிந்தனை, மற்ற மண்டலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதாக பாராட்டப்பட்டிருந்தது.

சிலநாள் கழித்து, அதே கட்டுரையை மேற்கோள் காட்டி, தலைவரின் செயலகத்தில் இருந்து நீல நிறத்தில் தலைவர் கைப்பட ஒரு பாராட்டுக் கடிதமும் வந்தது. அதன் பிறகுதான் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ம.மே.

இன்னொரு கடிதமும் வந்திருந்தது. மூத்த பொதுமேலாளரின் செயலகத்தில் இருந்து, அவரின் கையொப்பத்துடன்.  

ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்த, அவருக்குத் தெரியாததொரு மொழி பேசும் மாநிலத்தில், மிகச் சிறிய மண்டலத்திற்குத் தலைவராக அவரை மாற்றி இருப்பதற்கான உத்தரவு அது! (அதாவது பதவி-இறக்கம் மாதிரியானது!)
****
© Y Chellappa

16 கருத்துகள்:

 1. அந்த நெடிய மௌனத்திற்கு -
  இப்படியும் ஒரு அர்த்தம் போலிருக்கின்றது!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், மேலதிகாரிகளின் மௌனம் இருக்கிறதே, அது மிகவும் ஆபத்தானது.

   நீக்கு
 2. எப்படியோ
  தவித்த மனதிற்கு நிம்மதியும்,
  பதவிஉயர்வும்
  மூத்த பொது மேலாளர் போற்றுதலுக்கு உரியவர்தான்

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. சுயதொழில் புரியும் நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை. வங்கி அதிகாரிகள் நிலைமை ரொம்ப மோசம்.

   நீக்கு
 4. முதலில் பாராட்டு! பின்னர் "பரிசு"!

  பதிலளிநீக்கு
 5. பாதி படிக்கும்போதே ம.மே. பொறுமையாக குழந்தையின் சூசூ நிகழ்ச்சியை ஹேண்டில் செய்யாததால் தலைவரின் கோபத்துக்கு ஆளாகிவிடுவார் என்று தோன்றியது. BOSSகளின் நல்லெண்ணத்தைப் பெறுவதும் தவம் தான் போலிருக்கு. Better எதையும் புதுமையாகப் பண்ணுகிறோம் என்று சொதப்பாமல் இருப்பது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க. சம்பளக்காரன் வாழ்க்கையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி வரும். மேலதிகாரிகளுக்கு அடிமைகள் தானே கீழ் அதிகாரிகள்!

   நீக்கு
 6. அருமையான கண்ணோட்டம்

  மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  பதிலளிநீக்கு

 7. நேரடியாக நிகழ்வில் சம்பந்தப்பட்டவன் போலவே
  இறுதிவரை உணர்ந்து படிக்க முடிந்தது
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 8. ஒரு சிறுகதை போல் அமைந்திருந்தது. பாவம் அவர் அதை தண்டனை என்று கருதவும் முடியாது பதவி உயர்வு என்று மகிழவும் முடியாது.

  பதிலளிநீக்கு