செவ்வாய், மார்ச் 07, 2017

ஒரு நேரடி ரிப்போர்ட்-1

பதிவு எண் 15/2017
ஒரு நேரடி ரிப்போர்ட் -1
-இராய செல்லப்பா

காலை ஏழு மணிக்கு மயிலாப்பூர் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்திற்கு வந்துவிடவேண்டும் என்பது உத்தரவு.
 
எச்சரிக்கை: படத்திற்கும் பதிவிற்கும் தொடர்பில்லை!
பெட்டியோ, கைப்பையோ, அலைபேசியோ, காமிராவோ கொண்டுவரக் கூடாது. சட்டையிலோ, பேண்ட்டிலோ மணிபர்ஸ், டயரி, காகிதங்கள் இருக்கக்கூடாது. பேனா, பென்சிலும் கூடாது. காலை உணவும்,  பகல் உணவுக்குப் பொட்டலமும் தரப்படும். இரண்டு தண்ணீர் பாட்டில்கள் உண்டு. இடையில் யாருடனும் நேரடியாகவோ, அலைபேசி, தொலைபேசி மூலமோ பேச அனுமதியில்லை. தெரிந்தவர்கள் யாரையாவது பார்த்துவிட்டால், தெரியாத மாதிரி நடந்துகொள்ள வேண்டும். அருகில் நெருங்கக் கூடாது. எங்கே போகிறோம் என்றோ, எப்போது திரும்புவோம் என்றோ கேட்கக் கூடாது. போகும் இடத்தில் யாருடனும் பேசக்கூடாது. எதையும் தொடக்கூடாது. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டக்கூடாது.

எனக்கு அனுபவம் இல்லையே என்றேன். இதற்காகவே படைக்கப்பட்டவன் போல் ஒரு நண்பன் இருக்கிறான், அவனை எடுத்துக் கொள்ளுங்களேன் என்றேன். அடிக்கடி பாத்ரூம் போகவேண்டி வருமே என்றேன். மணிக்கு ஒருமுறையாவது அலைபேசியில் என்னைக் கடிந்து கொள்ளாவிடில் என்னவளுக்குப்  பைத்தியம் பிடித்துவிடுமே என்றேன். ஹூஹூம்! மேலிடத்து முடிவு, நீங்கள்தான் வருகிறீர்கள் என்று பதில் வந்தது.  

அன்று முகூர்த்த நாள் இல்லை. கல்யாண மண்டபம் காலியாக இருந்தது. லேசாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலும் வரிசையாக உயரமாக அடுக்கியிருந்த நாற்காலிகளும் சன்னல் வழியாகத் தெரிந்தன. ஆயினும் வாகன நிறுத்தம் நிரம்பி வழிந்தது. பக்கத்து ஓட்டலுக்கு வந்த வாகனங்கள்.

என்னைப் போல வேறு யாராவது வந்திருக்கிறார்களா என்று பார்த்தேன். இரண்டுபேர் நின்று கொண்டிருந்தார்கள்.

ஒருவர், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியாம். (பத்து வருடம் முன்பு?) மைசூர்க்காரர். மைத்துனிக்கு நிச்சயமாகி இருக்கிறதாம். மண்டபம் கிடைக்கும் நாளில் முகூர்த்தம் வைக்கலாம், கிடைக்கும் இல்லையா என்றார். உதட்டைப் பிதுக்கினேன். பெரிய இடம், கஷ்டம் என்றேன். கமல்ஹாசன் சொன்னால் கிடைக்காதா என்றார். கமல்ஹாசனின் கார் மெக்கானிக், அவரது டிரைவரின் பக்கத்து வீட்டுக்காரருக்கு நண்பராம்.

இன்னொருவர் இலக்கிய ரசிகர். இந்த வருடம் கம்பன் விழா எப்போது என்று விசாரிக்க வந்தாராம். அந்த மண்டபத்தில் தான் நடப்பது வழக்கம். விழா முடிந்தபிறகு, வழக்கம் போல்  இரவுச் சாப்பாடு உண்டு தானே என்றார். சப்பாத்தி போடுவார்களா என்றார். தெரியாது என்றேன்.

மணி ஏழு பத்து ஆகிவிட்டது. யாரையும் காணோமே, என்னடா இது சென்னைக்கு வந்த சோதனை என்று யோசித்துக்கொண்டே ஒரு காப்பி சாப்பிட்டு வைக்கலாம் என்று ஓட்டலுக்குள் நுழைந்தேன். சர்வர் ஒருவர் ஓடிவந்து உள்ளே போகுமாறு கை காட்டினார். அங்கே ‘பேமிலி ரூம்’ அடையாளத்தின் அருகில் மூன்று பேர் நின்றுகொண்டிருந்தார்கள். எல்லாரும் புதியவர்கள்.

என் பெயரைச் சொல்லி ‘வணக்கம்’ என்றார் அவர்களில் வயதான ஒருவர். குழுவின் தலைவராக இருக்கலாம். ‘அடையாள அட்டை கொடுங்கள்’ என்றார். கொடுத்தேன். ‘ஒரு பொங்கல் வடை காப்பி உங்களுக்காக ஆர்டர் கொடுத்திருக்கிறோம். பத்து நிமிடத்திற்குள் முடியுங்கள். பகல் உணவும் தண்ணீரும் காருக்கு வந்து விடும்’ என்றார். சரிதான், நமக்கு முன்பே வந்து வயிற்றை நிரப்பிக்கொண்டு நம்மை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.  

மற்ற இருவரை அறிமுகப்படுத்தவில்லை. என்றாலும் மரியாதைக்காகப் புன்முறுவல் காட்டினேன். நான் சாப்பிட்டு முடித்த மறு நிமிடமே கார் கிளம்பியது.

யாரோ என்னைக் கடத்திக்கொண்டு போவதுபோல் உணர்ந்தேன். குழுவின் தலைவர், யாருடனோ அலைபேசியில் மெல்லப் பேசினார்.  ‘ஓ, அந்த .... கல்லூரியா?’ என்றார். டிரைவர் காதுக்குள்  ‘பூந்தமல்லி போங்க’ என்றார்.

அப்போதுதான் எனக்குப் புரிந்தது. ஏதோ ஒரு சிபிஐ ரெய்டுக்கு நம்மையும் அழைத்துப் போகிறார்கள் என்று. சொல்லித் தொலைக்கக்கூடாதா? ரெய்டுகளின் போது வங்கி அதிகாரி ஒருவர் கட்டாயம் சாட்சியாக இருக்கவேண்டும் என்ற விதியை மத்தியப் புலனாய்வுத் துறை பின்பற்றி வருவதாக அப்படிப் போய் வந்த  நண்பன் ஒருவன் சொன்னதுண்டு. பூந்தமல்லியில் உள்ள ...கல்லூரிக்கு இன்று ரெய்டு நடத்தப் போய்க்கொண்டிருக்கிறோம்!

பூந்தமல்லியில் என்னென்ன கல்லூரிகள் இருக்கின்றன என்று மனதிற்குள் வரிசைப்படுத்தினேன். சுமார் பத்து முதல் பன்னிரண்டு இருக்கும். எந்தக் கல்லூரிக்கு  இந்த ரெய்டோ? மருத்துவக் கல்லூரியாகத்தான் இருக்கும். அங்குதான் ஏராளமாகப் பணம் புரளும்.

வந்திருப்பவர்களில் தலைவர் மாதிரி இருந்தவர்,  நிச்சயம் சிபிஐ அதிகாரியாகத்தான் இருக்கவேண்டும். அடுத்தவர் இவருடைய உதவியாளராகவும், இன்னொருவர், வருமானவரி அதிகாரியாகவும் இருக்கலாம் என்று எண்ணினேன். அது சரிதான் என்று பின்னால் தெரிந்தது.

ரெய்டு என்றால் எப்படி ஆரம்பிப்பார்கள்? முன் அறிவிப்பின்றி கல்லூரிக்குப் போவோம். நிர்வாக இயக்குனரின்  அறையைத் திறக்கச் சொல்வோம். காவலாளி மறுப்பார். சிபிஐ அதிகாரி தனது ஐடி கார்டை நீட்டுவார். உடனே கதவு திறக்கப்படும். அதே சமயம் காவலாளி வெளி கேட்டை இழுத்துப் பூட்டிவிட்டு கல்லூரி உரிமையாளருக்கு போன் போடுவார். கல்லூரி நடத்துபவர் ஆளும் கட்சியாக இருந்தால் ரெய்டை நிறுத்தச் சொல்லி டில்லியிலிருந்து தகவல் வரும். எதிர்க்கட்சியாக இருந்தால் முடிந்தவரை நோண்டச் சொல்லி ஆணை வரும். எதுவாக இருந்தாலும் மூட்டை கணக்கில் ஆவணங்களோ, மற்ற காகிதங்களோ கட்டப்படும். அவற்றைப் பட்டியலிட்டு ஒன்று இரண்டு என்று எண்கள் கொடுத்து அந்தப் பட்டியலை எல்லா அதிகாரிகளும் கையெழுத்திட வேண்டும்.... என்று திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். இன்று எப்படி நடக்கப் போகிறதோ?

ஆனால் கார் பூந்தமல்லிக்குப் போகும் வழியில் அண்ணா நகர் வளைவின் அருகில் நின்றுவிட்டது. சிபிஐ அதிகாரி இறங்கினார். என்னையும் இறங்கச் சொன்னார். அப்போது இன்னும் இரண்டு கார்கள் அணைப்பதுபோல் வந்து நின்றன. அதில் ஒன்றில் என்னை ஏறச் சொன்னார். ‘நீங்கள் வேறு டீமில் போகிறீர்கள்’ என்றார். இப்போது போகப்போவது அடையாறுக்காம். இன்னொரு காரில் அவர் ஏறிக்கொண்டார். ரெய்டு போகிறவர்கள் இப்படித்தான் திடீர் திடீரென்று திட்டத்தையும் ஆட்களையும் மாற்றுவார்களாம். அப்போதுதான் சஸ்பென்ஸ் காப்பாற்றப்படுமாம்.

அண்ணா நகரில் இருந்து அடையாறு போவதற்குள் இன்னும் ஒரு திருப்பம். இப்போது வேளச்சேரி  செல்ல வேண்டுமாம். அங்கு எந்த இடத்தில் ரெய்டு என்று யாருக்கும் தெரியவில்லை. டிரைவரிடம் சொல்லியிருப்பார்கள் போல. காரில் இருந்த மற்ற இரண்டு பேரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஒருவர் சுயதொழில் செய்யும் ஆடிட்டர். இன்னொருவர் மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் என்னைப் போலவே நடுத்தரநிலை அதிகாரி. இருவருக்கும் முதல் அனுபவமாம். பதற்றத்துடன் இருந்தார்கள். என்னைப் பற்றி அவர்களுக்குத் தெரியாததால், எனக்கு முன் அனுபவம் இருப்பதாக எண்ணிக்கொண்டு சில கேள்விகள் கேட்டார்கள். வாய்மீது விரலை வைத்து ‘உஷ்’ என்றேன். ரகசியம் காக்கவேண்டும் அல்லவா? அப்போதிலிருந்து அவர்கள் இருவரும் என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

வேளச்சேரி எனக்கு அவ்வளவு பழக்கமில்லாத பகுதி. பல வருடங்களாகப் பராமரிப்பிலேயே இருக்கும் முக்கியச் சாலை ஒன்றின் வழியாக வண்டி நகர்ந்தது. பிறகு சில சந்துகளைக் கடந்து பள்ளமான ஒரு குடியிருப்புப் பகுதியை அடைந்து ஒரு சாதாரணமான வீட்டின் முன்பு நின்றது. தனி வீடு. ஒற்றை மாடி. இரண்டு தென்னை மரம். தலைமேல் செல்லும் மின்கம்பிக்கு இசைவாகக் கிளை வெட்டியிருந்த பாதாம் மரம். ஒரு சைக்கிளும், ஒரு ஸ்கூட்டியும் தென்னை மர நிழலில் இளைப்பாறின. ஸ்கூட்டியின் மேலிருந்த சாய்பாபா ஸ்டிக்கரில் காகம் எச்சமிட்டிருந்தது.

சுஜாதா பாஷையில் ஒரு ‘மத்யமர்’ வீடு.  இங்கு போய் ரெய்டு நடத்தி என்னத்தைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்!

வாசல் கேட் பூட்டப்படவில்லை. நான்கு பேரும் உள்ளே போனோம். அதாவது, நாங்கள் மூவரும், டிரைவரும். டிரைவர்தான் சிபிஐ அதிகாரி என்று அப்போதுதான் தெரிந்தது. உடனே அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டோம்.

அழைப்புமணி அடித்ததும் கதவு திறக்கப்பட்டது. திறந்தவருக்கு வயது ஐம்பது இருக்கும். ‘அண்ணன் இதோ வந்துவிடுவார். நீங்களெல்லாம் யார்?’ என்று கேட்டார். சற்றே திகைப்புடன், சோபாவில் உட்காரச் சொன்னார். ‘அண்ணி வெளியூர் போயிருக்கிறார்கள். பிள்ளைகள் பள்ளிக்கூடம் போயிருக்கிறார்கள்’ என்றவர், ‘காப்பி சாப்பிடுகிறீர்களா?’ என்றார்.

இது யாருடைய வீடு என்பதுபோல் தலைவரின் முகத்தைப் பார்த்தோம். ரெய்டு நடக்கும் வீட்டில் காப்பி குடிப்பது ஒழுங்குமுறைக்கு விரோதமானதா என்ற கேள்வியும் எங்கள் பார்வையில் இருந்தது. ‘இல்லை, காப்பி குடித்துவிட்டுத்தான் வந்தோம். ஒருமணி நேரத்திற்குப் பிறகு தேநீருக்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்’ என்றார் தலைவர்.

தம்பி பதற்றத்துடன் இருந்தார். ‘ஒன்றும் இல்லை; என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா?’ என்றார்.

‘அண்ணனிடம் சில விஷயங்கள் பேச வேண்டும், அவ்வளவுதான்’ என்றார் தலைவர். உள்ளே போக முயன்ற தம்பியை, ‘மன்னிக்க வேண்டும்; அண்ணன் வரும்வரை இந்த இடத்தைவிட்டு நீங்கள் நகரவேண்டாம்’ என்றார். திகைப்புடன் ஒரு நாற்காலியில் அமர்ந்தார் தம்பி. அப்போது அலைபேசியில் அவருக்கு ஓர்  அழைப்பு வரவும், எடுத்து ‘ஹலோ’ என்பதற்குள் அவரிடம் இருந்து அலைபேசியைப் பறித்துக் கொண்டார் தலைவர். பிறகு, தானே பேசினார். ஸ்பீக்கரைப் போட்டார். ‘ஹலோ’ என்றார்.

‘ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு. உங்கள் அலைபேசி எண்ணுக்கு ஒரு லாட்டரி விழுந்திருக்கிறது. விவரம் அரிய நாளை மாலை அக்கார்டு ஹோட்டலுக்கு வருவீர்களா?’ என்று இளம்பெண் ஒருத்தி அமுதமாய்ப் பொழிந்தாள். 

அழைப்பை வெட்டிவிட்டு அலைபேசியைத் தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டார் தலைவர். தம்பி திகைத்து நின்றார். 


அண்ணன் என்று குறிக்கப்பட்டவர் சற்று நேரத்தில் வந்தார். அவர் முகத்தைப் பார்ப்பதற்குள் அவரை அணைத்தபடியே எதிரில் இருந்த அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டார் தலைவர். தம்பியும் அவசரமாக உள்ளே போனார். 


இதன் (அடுத்த) நிறைவுப் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்


14 கருத்துகள்:

 1. ஆமாம்... அடுத்த பதிவு எப்போது...?

  ஆவல் தாங்க முடியவில்லை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த பதிவு இரண்டு நாளைக்குப் பிறகுதான் நண்பரே! உங்களைப் போல நம்மிடம் சரக்கு ரெடியாக இருப்பதில்லையே!...

   நீக்கு
 2. இப்போதெல்லாம் எதிர் பாராத சஸ்பென்சுகளின் காலம் போல் இருக்கிறது தொடர்கிறேன் சஸ்பென்ஸ் அவிழக் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன் ஐயா

  பதிலளிநீக்கு
 4. தலைவர் உள்ளே கூட்டிப் போய் பேரம் பேசினாரா ?படிந்ததா?ரைடு நடந்ததா இல்லையா :)

  பதிலளிநீக்கு
 5. பயங்கர சஸ்பென்ஸ்! நல்லவேளை, இரண்டாவது பகுதி வந்தபிறகு வந்திருக்கிறேன். அங்கு படிக்கச் செல்கிறேன். முதலில் அங்கிருந்துதான் வருகிறேன். ஆனாலும், லிங்க் தனி விண்டோவில் திறக்குமாறு இருந்திருந்தால் நலம்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  ஐயா
  கதை மிக அருமைபடித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. நல்ல இடத்தில் இன்டெர்வெல் விட்டிருக்கிறீர்களே இதோ போகிறோம் அடுத்த பகுதிக்கு!!

  கீதா: ஹப்பா தாமதமாக வந்ததும் நல்லதாயிற்று!! த்ரில்லர் சஸ்பென்ஸ் எல்லாம் என்னால் அடுத்து எப்போது என்று நகம் கடித்துக் கொண்டு வெயிட் பண்ண முடியாது!!! இதோ அடுத்த பகுதிக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல வேளை, இப்போதாவது வந்தீர்களே! வாடிக்கையாளர்கள் வராமல் போகிறார்களே என்று கவலைப்பட்டேன்...

   நீக்கு