திங்கள், மார்ச் 13, 2017

பாதிக்கிணறு தாண்டினேன்

பதிவு எண் 17/ 2017
பாதிக்கிணறு தாண்டினேன்  
-இராய செல்லப்பா

ஹைதராபாத்தில் நான் பணியில் இருந்தபோது, நேரத்தை வீணாக்காமல்  ஏதேனும் மேற்படிப்பு படிக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது. மங்களூரில் எனது நண்பர்கள் சிலர், மாலைநேரக் கல்லூரியில் சட்டப்படிப்பு (BL) சேர்ந்திருந்த நேரம் அது. ஊருக்குள்ளேயே தனியார் சட்டக்கல்லூரி ஒன்று மாலைநேர வகுப்புகளை நடத்திவந்தது அவர்களுக்கு வசதியாகப் போனது. தரமான கல்லூரியாகவும் அது இருந்தது.

வங்கிப் பணிக்குரிய CAIIB என்னும் படிப்பின் இரண்டு பாகங்களையும் பணியில் சேர்ந்த மூன்றாண்டுகளுக்குள்ளேயே வெற்றிகரமாக நான் முடித்திருந்தேன். அதில் Commercial Law, Banking Law and Practice என்ற இரண்டு பாடங்கள் இருந்தன. BL படிப்பின் பாடப்பகுதியில் நான்கில்  ஒரு பங்கை  இந்த இரண்டின் வழியாகவும் படித்திருந்ததால், BL எளிதாகப் படிக்கமுடியும் என்ற நம்பிக்கை எழுந்தது. வங்கியில் சேரும் முன்பு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியபோது, இந்திய அரசியல் சட்டத்தை அக்குவேறு ஆணிவேறாகப் படித்திருந்தேன். அதுவும் BL படிப்பிற்கு உதவிகரமாக இருக்கும் என்று தோன்றியது. எனவே சட்டம் படிக்கவேண்டும் என்ற அடங்காத ஆவல் எனக்குள் எழுந்தது.

ஆனால் ஹைதராபாத்தில்  மாலைநேரக் கல்லூரி அப்போது இருக்கவில்லை. எனவே அஞ்சல்வழிக் கல்விதான் பயின்றாகவேண்டும். அஞ்சல்வழியாகக் கல்வி போதிக்கும் தொலைதூரக் கல்விமுறையை  இந்தியாவில் மூன்றோ நான்கோ பல்கலைக்கழகங்கள்தான் துவக்கியிருந்தன. அவற்றில் மிகவும் பிரபலமாக இருந்தவை டில்லிப் பல்கலையும், மதுரை காமராசர் பல்கலையும்தான். உண்மையில் காமராசர் பலகலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி போதிப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாக மற்ற பல்கலைக்கழகங்களே  பாராட்டும் நிலை அப்போது இருந்தது. டில்லியில் BL அஞ்சல்வழியில் இல்லை. மதுரையில் இருந்தது. எனவே அது பற்றிய விவரங்களைத் தேடினேன்.

கணினி வந்திராத நேரம். இணையம் உதிக்காத நேரம். தனியொருவருக்குத் தொலைபேசி இணைப்பு வாங்க ஆறு முதல் பத்தாண்டுகள் ஆன நேரம். எனவே தகவல் பரிமாற்றம் என்பது அஞ்சல்வழியாகத்தான் நடக்கும். மதுரைக்கு அஞ்சல் அனுப்பினேன். நம்பியபடியே ஒரு மாதம் ஆகியும் பதில் வரவில்லை. எம் வங்கியின் மதுரைக் கிளையில் இருந்து ஒருவரை நேரில் அனுப்பி விசாரிக்கச் சொன்னேன். அவர் கொடுத்த தகவல் இது:

மதுரை காமராசரில் முதலில் BL படிப்பு அஞ்சல்வழியில் ஆரம்பிக்கப்பட்டதாம். அதற்கு மிகுந்த வரவேற்பும் இருந்ததாம். அதில் பயின்று பட்டம் பெற்றால், நீதிமன்றத்தில் வாதாடும் தகுதியும் உண்டாம். இது தங்களின் எதிர்காலத்திற்கு வேட்டு வைக்கும் என்று அஞ்சிய   BL நேரடிக் கல்வி மாணவர்கள், அரசியல்ரீதியாக அழுத்தம் கொடுத்து இப்படிப்பைக்  கைவிடுமாறு செய்துவிட்டார்களாம்.  அதற்குப் பதில், BGL என்னும் ‘பொதுச் சட்டங்களில் இளநிலை படிப்பு’ இப்போது நடத்தப்படுகிறதாம் என்று தெரிவித்த அவர், அதற்கான விண்ணப்பத்தையும் வாங்கி அனுப்பியிருந்தார். ஆனால் இதைப் படிப்பதால் நீதிமன்றத்தில் வாதாடும் தகுதியைப் பெறமுடியாது. வெறும் ஏட்டுப்படிப்புக்குத்தான் உதவியாக இருக்கும் என்பதையும் தெரிவித்தார். இன்னொன்றும் சொன்னார்: எனது முகவரி தமிழ்நாட்டிற்குள் இருக்கவேண்டுமாம். மாநிலத்திற்கு வெளியே உள்ளவர்களை அஞ்சல்வகுப்பில் சேர்க்க அனுமதியில்லையாம். யு.ஜி.சி. இன் விதியாம். (இப்போது இல்லை.)

கறுப்பு அங்கி அணிந்துகொண்டு, கைகளை நீட்டிக்கொண்டு, கனம் கோர்ட்டார் அவர்களே.. என்று பராசக்தி வசனம் பேசும் ஆசை எனக்கு இருந்ததில்லை. கிடைத்தவரை போதும் என்று தோன்றியது. சட்டம் என்பது இருட்டறை என்று ஒருவரும், சட்டம் என்பது கழுதை என்று ஒருவரும் சொன்னதை வள்ளுவப் பெருந்தகையிடம் சொன்னபோது அவர் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று ஒரே போடாகப் போட்டார். அதற்காகத்தான் சட்டம் படிக்க விரும்பினேன். உடனே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினேன். பணமும் செலுத்தினேன். சென்னையிலுள்ள வீட்டு முகவரியைத்தான் பதிந்தேன். 

சில மாதங்களுக்குப் பிறகு என்னை மாணவனாக ஏற்றுக் கொண்டதற்கான சான்றுகளும், பாடப்பகுதிகளின் விவரங்களும் வந்தன. பல்கலைக் கழகத்தின் பெயர்பொறித்த அடையாள அட்டையில் என் பெயரும் பதிவெண்ணும் எழுதி அனுப்பியிருந்தார்கள். தேர்வு மையத்தில் நுழைய அடையாள அட்டை அவசியமாம். சட்டம் படிக்கவேண்டும் என்னும் உறுதியை எனக்குள் தொடர்வதற்கான உந்துசக்தியாக அந்த அட்டையை அடிக்கடி எடுத்துப் பார்க்க ஆரம்பித்தேன்.

ஆனால்  எனது உற்சாகம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அஞ்சல் மூலம், பாடப் பகுதிகள் சிறுசிறு புத்தகங்களாக வரத்தொடங்கின. ஒவ்வொன்றிலும், ஏராளமான அச்சகப் பிழைகள். ஆங்கில வாக்கியக் கட்டமைப்பில் இருந்த எழுத்துப் பிழைகளை விடுங்கள். அதை எப்படியும் புரிந்துகொண்டு சரியான ஆங்கிலத்தை நம்மால் எழுதிவிட முடியும். (நான் தமிழ் மீடியத்தில் பயின்றவன் என்பதால், எனக்கு ஆங்கில அறிவு சராசரியை விடவும் அதிகமாகவே இருந்தது!)  ஆனால் எண்களில் காணப்பட்ட அச்சுப் பிழைகள்தாம் மூளையைக் குழப்பியது. உதாரணமாக, ஒரு பாடத்தில் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 632 இன் படிஎன்று அச்சாகியிருந்தது. அது தவறாக இருக்கலாமோ என்ற ஐயம் எழுந்தது. அது 6-3-2 அல்ல, 6-2-3 அல்லது 3-2-6 அல்லது 2-3-6 ஆக இருக்கவேண்டும் என்று தோன்றியது. மனைவியின் முதல்நாள் கண் மை, கணவனின் மறுநாள் கன்னத்தில் பளிச்சென்று வெளிப்படுவதுபோல,   ஏற்கெனவே படித்திருந்த அரசியல் சட்டப்படிப்பு இன்னும் மறக்காமல் இருந்தது. உடனே BARE ACTஐ ப் புரட்டினேன். நான் நினைத்தபடியே அது 632 அல்ல, 326 தான்.

உடனே ஒருவிதப் பரபரப்பு என்னை ஆட்கொண்டது. சட்டத்திற்கு அடிப்படையே செக் ஷன் எனப்படும் பிரிவுகள்தான். அதிலேயே பிழை என்றால்? என்னடா  மதுரைக்கு வந்த சோதனை என்ற தொடர் என் மாதிரியான அஞ்சல்வழி மாணவன் உருவாக்கியதாகத்தான் இருக்கவேண்டும். மதுரை காமராசரை நம்புவதில் பயனில்லை என்று தோன்றியதால், சம்பந்தப்பட்ட BARE ACTகளை எல்லாம்  தனித்தனியாகவும், விளக்க உரையுடன் கூடியதாகவும் ஏராளமான புத்தகங்களை வாங்கிக் குவித்தேன். என் வங்கிக்கு மிக அருகிலேயே சட்ட நூற்கள் விற்கும் புத்தகக்கடை இருந்ததால் அது சாத்தியமாயிற்று. (அப்போது பெரும்பாலான சட்டப் புத்தகங்கள், அலகாபாத்தில் உள்ள பதிப்பகங்களால் வெளியிடப்பட்டவை. ஒன்றிலாவது  சின்னதாகவேனும் ஒரு பிழை இருக்கவேண்டுமே! கிடையாது. இன்றளவும் சட்டப் புத்தகங்கள் என்றால் அலகாபாத் பதிப்பகங்கள் அதே அளவு ஒழுங்குடன் வெளியிடுகின்றன என்கிறார்கள்.)

BGL க்கான பாடங்களை மொத்தம் சுமார் முப்பது, நாற்பது சிறு புத்தகங்களாக அவ்வப்பொழுது அனுப்பிக்கொண்டிருந்தார் மதுரை காமராசர். சில சமயம் 27ஆவது புத்தகம் வந்துவிடும். 23ஆவது வந்திருக்காது. வரும் வரும் என்று காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடிதம் அனுப்பினால் வீண்செலவு. பதிலே வராது. ஆனால், படிப்புக் காலம் முடிந்து சில மாதங்கள் ஆனபிறகும் இம்மாதிரி விடுபட்ட புத்தகங்கள்  வந்துகொண்டே இருந்தன. அனுப்புகை  எழுத்தர் தன் பணியைக் குறையின்றி முடித்துவிட்டார்.  ஆனால் எழுத்துப் பிழையும் எண் பிழையும் இல்லாத ஒரே ஒரு புத்தகமாவது வந்துவிட்டால் போதும், நான் பிறவி எடுத்த பயன் கிட்டும் என்று ஏங்கினேன். அருளவில்லை மதுரை காமராசர்.

தேர்வு நேரம் வந்தது. ஏப்ரல் மாதம். வங்கிகளில் மார்ச் இறுதி முதல் ஏப்ரல் பதினைந்து வரை  தணிக்கை நடக்கும் நேரம். விடுமுறை கிடைப்பது கடினம். அதிலும், என்னைப்போல் (அப்போது) மேலாளர்களாக இருப்பவர்களுக்கு  விடுமுறை என்றால் தலைமை அலுவலகம் அனுமதிக்கவேண்டும். மண்டலத்தலைவர் மட்டும் அனுமதித்தால் போதாது. கெஞ்சிக் கூத்தாடி ஒரு வாரம் விடுமுறை பெற்றேன். சென்னைக்கு வந்தேன். தேர்வு நடக்கும் பள்ளிக்குச் சென்றேன். அங்கே தேர்வு நடப்பதற்கான அறிகுறியே இல்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தலைமை ஆசிரியரும் இல்லை. நல்லவேளை, சிறியதொரு அறிக்கை  அங்கே ஒட்டியிருந்தார்கள். ‘இங்கு நடக்கவிருந்த தேர்வுகள், அருகிலுள்ள ...பள்ளியில் நடைபெறும்’ என்று இருந்தது. நேற்றைய தேதியிட்ட அறிவிப்பு. அவர்களுக்கு என்ன சங்கடமோ! புதிய மையத்தைக் கண்டுபிடித்து உரியநேரத்திற்குள் அரங்கில் நுழைந்துவிட்டேன்.

தேர்வு எழுத வந்திருந்தவர்கள் சுமார் நூறு பேர்தான்.  பலர் முதல்முறையாகவும், சிலர் இரண்டாவது மூன்றாவது முறையாகவும் எழுதுபவர்களாக இருந்தார்கள். நான் நன்றாக எழுதினேன். இரண்டுநாள் கழித்து நடந்த அடுத்த தாளிலும் நன்றாகவே எழுதினேன். நான்கு தாள்களுக்குப் பணம் கட்டியிருந்தாலும் இரண்டுடன் நிற்கவேண்டியதாயிற்று. ஏனெனில், மற்ற  இரண்டு தாள்களும் நான்கு நாள் இடைவெளிக்குப் பிறகுதான் நடக்கவிருந்தன. எனக்கு அதுவரை விடுமுறை இல்லை.

உரிய நேரத்தில் தேர்வு முடிவுகள் வந்தன. முதல் தாளில் அறுபதும், இரண்டாவதில்  நாற்பது சொச்சமும் என்றும் ஞாபகம்.

சட்டப் படிப்பு என்பது கணக்குப் படிப்பு மாதிரி. பொதுவாக, பேப்பர் திருத்துவோர்  மதிப்பெண்களைக் குறைக்க வழியில்லை.

கேள்வியில் கொடுக்கப்பட்டுள்ள சட்டச் சிக்கல் எது என்பதை இனம் காணுதல் முதல் பகுதி. அது, எந்தச் சட்டத்தின் எத்தனையாவது  பிரிவில் வருகிறது என்பது இரண்டாம் பகுதி. அதை எவ்வாறு தீர்க்கவேண்டும் என்ற எனது சிபாரிசு மூன்றாவது பகுதி. அதுபோன்ற வழக்குகளில் ஏற்கெனவே தீர்ப்புகள் வெளியாகியிருந்தால், அந்த வழக்குகளின் பெயரையும் சுருக்கமான விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என்பது நான்காம் பகுதி. இந்த நான்கையும் நான் சிறப்பாகவே செய்திருந்தேன். எனவே எப்படி நாற்பதும் அறுபதும் வந்தது என்று கவலைப்பட்டேன். தொலையட்டும், நாம் படிப்பது அறிவு வளர்ச்சிக்குத்தானே என்று ஆறுதல் கொண்டேன்.

அடுத்த ஆண்டு, மொத்தம் எட்டுத்  தாள்களுக்குப் பணம் கட்டினேன். இம்முறையும் விடுமுறை ஒருவாரம்தான் கிடைத்தது. ஆனால், தேர்வு அட்டவணைப்படி  நான்கு தாள்களை அந்த வாரத்தில் எழுதமுடியும் என்பது மகிழ்ச்சியளித்தது. ஆனால் அதற்கும்  எனக்குச் சோதனை வந்தது. இரண்டு தாள்கள் எழுதியபிறகு, அலுவலகத்தில் அவசரமான காரியமாகத் திரும்பிவரச் சொன்னார்கள். விடுமுறை ரத்து செய்யப்பட்டதாக தந்தி வந்தது. ஆனால் எந்த அவசரக் காரியமும் அங்கே இருக்கவில்லை என்று போனபிறகுதான் தெரிந்தது. கேட்டால், அவருக்கும் மேலாக இருந்த இன்னொரு அதிகாரி அனுப்பிய தந்தியாம் அது. இளைஞர்களின் உயர்கல்விமீது அடங்காத ஆத்திரம் கொண்டவர் அவர். 

எப்படியோ, எழுதிய இரண்டு தாள்களும் மிக நன்றாக எழுதியிருந்தேன். எப்படியும் எண்பது மதிப்பெண்ணுக்குக் குறையாது என்று நம்பினேன்.

ஆனால் தேர்வு முடிவுகள் வரவேண்டிய சமயத்தில் ஓர் அதிர்ச்சி அறிவிப்பு வந்தது. ‘சில தேர்வு மையங்களில் ஓழுங்கான முறையில் தேர்வு நடக்கவில்லை என்பதால், அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்வதாக’ அறிவிப்பு வந்தது. அடப்பாவிகளா! வெளிமாநிலத்தில் இருந்து விடுமுறையும் ரயில் செலவும் செய்துகொண்டு வருபவனின் துன்பத்தை உணரவே மாட்டீர்களா?

சட்டப் படிப்பு இவ்வாறாகப் பாதிக் கிணற்றுடன் நின்றுவிட்டது. மீதிக்கிணற்றைத் தாண்டவேயில்லை நான்.  

உடனடி ஊர் மாற்றம், பதவி உயர்வு, கணினித்துறையில் மாற்றம், அதற்கேற்ற கடமைப் பெருக்கம், இலக்குக்களைப் பின்தொடர்ந்து ஓடுதல், குழந்தைகளின் கல்வி...அதனால் வேறு பணிகளுக்கு நேரமின்மை...என்று சூழ்நிலைகள் மாறிவிட்டன.

இப்போதெல்லாம் யாரும் பாதிக்கிணறு தாண்டுவதில்லை என்று கேள்விப்படுகிறேன். அஞ்சல்வழிக் கல்வியில் பதிவுசெய்த சில நாட்களிலேயே சில முகவர்கள் உங்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, தேர்வை எப்படி எழுதினாலும் சரி, நீங்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை வாங்கித்தர முடியும் என்று உறுதி யளிக்கிறார்களாம். செலவும் அதிகமில்லை என்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீதியின் தரம் தாழ்ந்து போவதைத் தடுக்கமுடியும் என்று தோன்றவில்லை.
****
(c) Y Chellappa

email: chellappay@gmail.com

26 கருத்துகள்:

 1. எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது ஐயா... ஆனால் தங்களின் சூழ்நிலை காரணமாக முடியாமல் + முடிக்காமல் போனது குறித்து மிகவும் வருத்தம்... அப்புறம் :

  என்னவொரு உதாரணம் - கண் மை...! ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்..மை..யை ரசித்தீர்களா? என்ன இருந்தாலும் உங்களைப்போல காதல் களஞ்சியமான பாடல் தொகுப்புக்கு நான் எங்கு போவேன்? ஏதோ என்னால் முடிந்த சிறு உதாரணம்..அவ்வளவே! நன்றி.

   நீக்கு
 2. ஆஹா நீங்கள் சட்டப்படிப்பு முடித்து இருந்தால் உங்களை பதிவர்களுக்கான வக்கீலாக நியமித்து இருக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். சட்டமோ அல்லது CA வோ படித்தவர்கள், பணி ஒய்வு பெற்றாலும் வாழ்நாள் முழுதும் ஏதாவதொரு வகையில் வருமானத்தைத் தேடிக்கொள்ள முடிகிறது. மற்ற படிப்புகள் அப்படியில்லையே.தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 3. ஐயா, தற்சமயம் தாங்கள் சென்னையில் உள்ளீர்களா அல்லது நியூ ஜெர்ஸியில் உள்ளீர்களா ? நான் தற்சமயம் நியூ ஜெர்ஸி வந்துள்ளேன். தங்களை சந்திப்பதில் ஆர்வமாக உள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி நண்பரே! எனது மின்னஞ்சல் chellappay@gmail.com மூலம் உங்கள் முகவரியும் தொடர்பு என்னும் தெரிவியுங்கள். நாம் சந்திக்கலாம். நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி நண்பரே! என்ன செய்வது, உரிய முயற்சிகளை எடுத்தாலும், மிகச் சிறிய விஷயங்களைக்கூட நம்மால் செய்யமுடியாமல் போய்விடுவது வாழ்க்கையின் புதிர் என்பதா, விதி என்பதா?

   நீக்கு
 5. பதிவின் கடைசி வாக்கியம் “நச்”

  பதிலளிநீக்கு
 6. பட்டம் வாங்காவிட்டால் என்ன ஐயா
  பாட நூல்களைப் படித்துப் படித்து தங்களுக்குள்ளும் வழக்கறிஞர்
  நுழைந்துவிட்டார் அல்லவா

  பதிலளிநீக்கு
 7. பட்டம் வாங்காவிட்டால்கூட படித்துவிட்டீர்களே...வித்தியாசமான அனுபவம்தானே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா! கவனத்தோடும் மரியாதையோடும் அணுகினால், கல்வி யானது நம்மோடு கூடவே வருகிறது. பட்டம் பெற்றாயா என்று அது கேட்பதில்லை. தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 8. நல்லதொரு சட்ட ஆலோசர் கிடைக்காமல் போக வழி செய்த அந்த கால கிரஹத்தை இப்போது காலம் கடந்துவிட்டதால் சொக்கநாதரைப் பழிக்கவும் சொல்ல முடியாமல் போனது!!

  உங்கள் ஆர்வமும் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் பாராட்டப்பட வேண்டியவை சார்..உங்களுக்கு இப்போது பல விஷயங்கள் தெரிந்திருக்குமே சார். சார் பட்டம் வாங்குவதை விட நாம் கற்கும் ஆர்வம் கொண்டிருதால் மரணம் வரை கற்றுக் கொண்டே போகலாம் சார்...அது உங்களிடம் நிறையவே இருக்கிறது. அதனால்தான் பல விஷயங்களைப் பற்றியும் எழுதவும் முடிகிறது...பாதிகிணறு இல்லை சார் முழு கிணறும் தாண்டிவிட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வலைப்பதிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். .... ஏன் தாமதம்?
   பாராட்டுக்களால் புல்லரிக்கவைத்துவிட்டீர்கள்....

   நீக்கு
 9. "இப்படிப்பட்ட சூழ்நிலையில் குமாரசாமிகள் உருவாவதைத் தடுக்க முடியும் என்று தோன்றவில்லை." என்பதில் இடி இடிக்கிறதே!
  சிறப்பான கண்ணோட்டம் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்றுக்கொடுத்ததைத்தானே அவரால் செயலில் காட்ட முடியும்? குமாரசாமி நல்லவர்தான். அவருடைய கல்விமுரையில்தான் கோளாறு இருந்திருக்கவேண்டும்.

   நீக்கு
 10. ரொம்ப நல்லா உங்கள் அனுபவத்தை எழுதியிருக்கீங்க. இளமையாக எழுதுவதின் ரகசியம் உங்கள் கன்னத்திலிருந்து தெரிந்துகொண்டேன்.

  சமீபத்துல கேள்விப்பட்டேன். மூன்றெழுத்து புகழ் பெற்ற கல்லூரி (சென்னை) 5 லட்சம் கொடுத்தால், ஒவ்வொரு வருடமும் 75%க்கு மேல் மார்க்குகள் போட்டுவிடுகிறார்களாம். கம்ப்யூட்டர் சயன்ஸில், 75%க்கு மேல் வாங்கியிருந்தால், புகழ் பெற்ற நிறுவனங்களில் (இன்ஃபொ.. டி.சி.. ) கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ந்தெடுத்துவிடுகிறார்களாம். வேலை நிச்சயம் என்பதால், சிலர் இந்த முறையிலும் அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்களாம். நிறைய பேருக்கு, பட்டம்தானே தேவையாயிருக்கு.

  என்ன.. பாவம்.. குமாரசாமியைப்போய் இப்படிச் சொல்லிட்டீங்க. அவர், தீர்ப்பு வாசிப்பதற்குமுன், தான் எழுதிய தீர்ப்பை ஆஞ்சனேயர் கோவிலில் வைத்து அர்ச்சனை செய்ததாகச் செய்தித் தாளில் படித்தேனே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா, என் கன்னத்திற்கும் ஒரு ரசிகரா! பிறவி எடுத்த பயனை அடைந்தேன்!(2) சில கல்லூரிகளில் பணம் வாங்கிக்கொண்டு மார்க் போடுவது உண்மைதான் என்று சொல்கிறார்கள் மாணவர்கள். குறிப்பாக, ஆஸ்பத்திரி வைத்திருக்கும் டாக்டர்கள், தங்களுக்குப் பிறகு அதை நடத்துவதற்கு தமது வாரிசுகள் யாராவது டாகடருக்குப் படித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஒரு மார்க் அதிகம் போட்டால் ஐம்பதாயிரம் என்ற அளவில் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம். அரசாங்க கோட்டாவில் இடம் கிடைத்துவிடுமே! இல்லாவிடில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்குப் பத்து லட்சம் ஆகுமே!

   நீக்கு

 11. நீதிமன்றத்தில் ஏன் நல்ல வக்கீல்கள்
  குறைபாடு என்பதற்குக் கூட
  இந்தக் கட்டுரையை ஒரு விளக்கமாகக்
  கொள்ளலாம் எனப்படுகிறது

  எந்த விஷயத்தையும் மிக ஆழமாக
  எழுத முடிகிற இரகசியத்தையும்...

  பதிலளிநீக்கு