வியாழன், மார்ச் 09, 2017

ஒரு நேரடி ரிப்போர்ட்- 2

பதிவு எண் 16/2017
ஒரு நேரடி ரிப்போர்ட்- 2 (நிறைவுப்பகுதி)
சற்று நேரம் கழித்து வெளியில் வந்த தலைவர், என்னிடம் மாடி அறையைக் காட்டி, ‘எல்லா இடங்களையும் ஒன்று விடாமல் சோதனை செய்யவேண்டும். பத்திரங்கள், எஃப்.டி. ரசீதுகள், வங்கிக் கடிதங்கள், செக் புத்தகங்கள், அல்லது இம்மாதிரி காகித ஆவணங்கள் எல்லாவற்றையும் எடுத்து லிஸ்ட் போட வேண்டியது உங்கள் பொறுப்பு’ என்றார்.  
நியூயார்க்கில் எடுத்த படம்
மற்ற இருவரையும் பார்த்து, ‘அலமாரிகள், சூட்கேஸ்கள், பைகள், அட்டைப் பெட்டிகள் என்று எல்லாவற்றையும் இரண்டு பேரும் சேர்ந்து லிஸ்ட் போடுங்கள். பிறகு என் முன்னிலையில் ஒவ்வொன்றாகத் திறந்து உள்ளிருப்பவற்றைப் பார்க்கலாம். தேவையானதை மட்டும் ஃபைனல் லிஸ்ட்டாக எழுதிக்கொள்ளலாம்’ என்றார்.

எனக்கு உள்ளுக்குள் ஆத்திரமாக வந்தது. சாட்சிக்கு ஆள் வேண்டும் என்று சொல்லிவிட்டு எடுபிடி வேலை செய்யச் சொல்கிறாரே என்பது ஒரு காரணம். இந்த ரெய்டை யார் மீது நடத்துகிறோம், தனி மனிதரா, நிறுவனமா, எதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று ரெய்டு நடக்கிறது என்று அடிப்படை விளக்கமின்றி வேலை வாங்குகிறாரே என்பது இன்னொரு காரணம். வங்கியில் எனக்குக் கீழ் இருபத்தைந்து பேர் வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் சரியான விளக்கம் சொல்லாமல் வேலை வாங்கியதில்லை நான்.

‘மன்னிக்க வேண்டும், உங்கள் ஐடி கார்டைப் பார்க்கவேண்டும்’ என்றேன் தலைவரிடம். கொடுத்தார், சற்றே துணுக்குற்றவராக. பெயர்: (ஏதோ ஒரு) அகர்வால். பதவி: சிபிஐ தலைமையகத்தில் சீனியர் இன்ஸ்பெக்டர்.

‘மிஸ்டர் அகர்வால், எங்களை இங்கே அழைத்து வந்தீர்கள் சரி; அதற்கான அதிகாரபூர்வ ஆணையைக் காட்டவில்லையே?’ என்றேன்.

‘அப்படியா, மன்னிக்க வேண்டும், ஜெயின் உங்களிடம் எதுவும் கூறவில்லையா?’

இல்லை என்று தலையசைத்தேன். கல்யாண மண்டபத்தில் என்னை முதலில் பார்த்துக் காரில் ஏற்றிக்கொண்டாரே அவர்தான் ஜெயின். அகர்வாலுக்கு மேலதிகாரி.

‘ஐ யாம் சாரி. மத்திய அரசாங்கத்தின் நிறுவனமான ....இல் மூத்த அதிகாரியாக இருக்கும் திரு. கண்ணப்பன் மீது நிறைய லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு வந்திருக்கிறது. அதன் உண்மை கண்டறிவதற்காக இந்த ரெய்டு நடக்கிறது. இப்போது உள்ளே போனாரே அவர்தான் கண்ணப்பன். போதுமா?’ என்றவர் அதற்கான உத்தரவைத் தன் கைப்பையிலிருந்து எடுத்துக் காட்டினார். மற்ற இருவரும் எட்டிப் பார்த்தனர்.    

கண்ணப்பனும் தம்பியும் இன்னும் அறையில் இருந்து வெளியில் வரவில்லை. அவர்கள் வெளியில் வர மாட்டார்கள். இன்னும் விசாரிக்கவேண்டியது பாக்கி இருக்கிறது. நானும் உள்ளே போகிறேன். முக்கியமான விஷயம் என்றால் கதவைத் தட்டுங்கள். கொடுத்த வேலையைச் சீக்கிரமாக முடித்துவிடுங்கள் என்று கூறியபடி உள்ளே போனார் அகர்வால்.
 ****   
எனக்குச் ‘சப்’பென்று ஆனது. பெரிய கல்லூரியின் அதிபரை விசாரிக்கப் போகிறோம், கோடிக்கணக்கில் நகையும் ரொக்கமும் கண்டுபிடிக்கலாம், வெளியில் சொல்லக்கூடாது என்றாலும் குறைந்த பட்சமாக நம் பட்டத்து ராணியிடமாவது பெருமையாகப் பேசிக்கொள்ளலாம் என்ற கனவுகள் தகர்ந்து போயின. இந்தக் கண்ணப்பன் வெறும் அதிகாரி. ஆயிரமோ பத்தாயிரமோ லஞ்சம் வாங்கியிருக்கிறார் அவ்வளவுதான். இதற்கு ஏன் இத்தனை பில்ட்-அப் என்று புரியவில்லை.

வெளி மாநிலத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது எமது வாடிக்கையாளரான ஓர் அரசு அதிகாரி மீது இப்படித்தான் விசாரணை என்று வந்தார்கள். மாதாமாதம் இவர் ....என்ற ஊருக்கு டிராஃட்  எடுத்து அனுப்பிக்கொண்டிருந்ததாக எங்களுக்குப் புகார் வந்துள்ளது. எனவே அந்த விவரங்களைக் கொடுங்கள் என்றார் விசாரணை அதிகாரி.

இப்படி மொட்டையாகக் கேட்டால் தருவதற்கில்லை. எழுத்துமூலமாகக் கேளுங்கள். எந்தத் தேதியில் இருந்து எந்தத் தேதி வரை தகவல் வேண்டும் என்பதை முக்கியமாகக் குறிப்பிடுங்கள் என்றேன்.

நீங்கள் கேட்பீர்கள் என்று தெரியும். இந்தாருங்கள் அதிகாரபூர்வமான வேண்டுகோள் என்று காகிதத்தை நீட்டினார் அவர். குறிப்பிட்ட அதிகாரி, என்றைக்குக் கணக்கு ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து இன்றுவரை தகவல் வேண்டுமாம்.

வங்கியில் கணினி வந்திராத காலம். நான்கு ஓரமும் சிதைந்துபோன தடிமனான லெட்ஜர்கள் பலவற்றைப் புரட்டிய பிறகுதான் தெரிந்தது, அந்த அதிகாரியின் கணக்கு, இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்திருப்பது! இன்னும் சற்றே தோண்டியபோதுதான் விளங்கியது, அவர் ஐந்து வயதுக் குழந்தையாக இருந்தபோதே தொடங்கிய கணக்கு அது என்று! (அந்த வங்கிக் கிளைக்கு வயது அறுபது.)

பத்துநாள் தவணை கேட்டேன். வயதான ஒரு பியூன் இருந்தார். அவருக்குத்தான் பழைய லெட்ஜர்கள் இருந்த இடம் தெரியும். ஒட்டடைக் குவியல்களுக்கு நடுவே போராடிப் பார்த்து பத்தொன்பது லெட்ஜர்களைக் கண்டுபிடித்தார். அப்படியும் ஒன்றிரண்டு கிடைக்கவில்லை. பெருச்சாளிகள் தின்றுபோட்ட குவியல்களைக் காட்டினார். அதில் இருக்கலாம் என்றார். விடுங்கள், இருப்பதை வைத்துச் சமாளிக்கலாம் என்றேன். புதிதாக இன்னொரு மாநிலத்தில் இருந்து பணியில் சேர்ந்த அதிகாரி ஒருவரை விவரம் சேகரிக்கும் பணியில் அமர்த்தினேன். இம்மாதிரி காலணா பொறாத வேலைகளுக்குப் புதியவர்கள்தான் லாயக்கு என்பது அதிகாரவர்க்கத்தின் அனுபவம். கடைசியாகக் கிடைத்த விவரங்களைப் பட்டியல் இட்டோம். ஏதோ சில வருடங்களில் அவ்வப்பொழுது முன்னூறு அல்லது நானூறு ரூபாய்க்கு டிராஃட் எடுத்திருந்தார் அவர். அவ்வளவே. அதுவும் ஊரில் இருந்த தன் தாயின் பெயருக்கு.

விவரங்களைப் பெற்றுக்கொண்ட விசாரணை அதிகாரி நன்றி சொன்னார். புகார், பொய்யானது என்று தெரியுமாம். ஆனாலும் விசாரித்தாக வேண்டுமல்லவா என்றார்.

‘படுபாவி, வங்கி என்றால் கிள்ளுக்கீரையா? இம்மாதிரி இருபத்தைந்து வருடத்து விவரங்களை எந்த அரசு அலுவலகத்தில் இருந்தும் கேட்டவுடன் பெற்றுவிட முடியுமா?’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். (அவர் போன பிறகுதான்!)

இந்தக் கண்ணப்பனும் அப்படி ஏமாற்றிவிடக்கூடாதே என்று கவலை வந்தது. நான் பங்குபெறும் முதல் ரெய்டு அல்லவா? ஏதாவது கவர்ச்சிகரமான தகவலைக் கண்டுபிடித்துக் கொடு, ஆண்டவனே!
***
மாடி அறைக்குப் போனேன். பெரிய அறை என்று சொல்ல முடியாது. இருபதுக்குப் பதினைந்து இருக்கும். சின்னதாய் ஒரு குளியலறை இருந்தது. துணி உலர்த்தும் கொடி இருந்தது. அதில் நேற்றுக் குளித்தவரின் பனியனும் ஜட்டியும் தொங்கின. பனியன், வாங்கியபோது  வெள்ளை நிறமாக இருந்திருக்கலாம். ஜட்டியின் நிறத்தை வர்ணிக்கப்போவதில்லை. முடியாத காரியத்தில் தலையிடுவானேன்!

சுவரை ஒட்டிப் புத்தக அலமாரி நின்றது. இரண்டு மேசைகள் இருந்தன. ஒன்றில் கணினி. இன்னொன்று எழுதும் மேசை.

மேசை இழுப்பான்களில் இருந்த காகிதங்களை வெளியில் எடுத்தேன். அலமாரியில் புத்தகங்களுக்கு நடுவே செருகப்பட்டிருந்த  துண்டுக் காகிதங்களையும் எடுத்தேன். ஒன்றில் ‘மாலதி: 897…’ என்ற அலைபேசி எண் இருந்தது. ஆனால் ஒன்பதே இலக்கங்கள். பின்புறம் தி.நகர் ஓட்டல் ஒன்றில் இருவர் சாப்பிட்ட 325 ரூபாய்க்கான பில்.

அலமாரிக்கு மேல் இரண்டு பழைய சூட்கேஸ்கள் இருந்தன. குளியலறை பனியனை எடுத்துவந்து தூசியைத் தட்டினேன். உள்ளே வெறும் காகிதங்கள்தான். யார் யாருக்கோ கண்ணப்பன்  எழுதிய கடிதங்களின் கார்பன் காப்பி. மனைவிக்குத் தொடர்ந்து வியாதிகள் படுத்துகிறது, என்ன செய்யலாம் என்று கோயம்புத்தூர் சாமியாருக்கு எழுதிய கடிதத்திற்கும் காப்பி இருந்தது. ஒரு பையன் ஜாதகம், பெண் ஜாதகம் இருந்தது. தெரிந்தவர்களுக்குப் பயன்படுமா என்றால்  இரண்டிலும் செவ்வாய் தோஷம். ஏதோ ஒரு கூட்டுறவு வங்கியில் பத்து ரூபாய் ஷேர்கள் முப்பதிற்கான ரசீது. கூடவே ஒரு நகைக்கடனுக்குப் பணம் கட்டிய ரசீதும் ‘பின்’னியிருந்தது.

வேறு ஏதாவது காகிதங்கள் உண்டா என்று பார்த்தேன். ஒரு மூலையில் தினசரிச் செய்தித்தாள்கள் குவிந்திருந்தன. தேர்தல் நேரத்துக் கருத்துக் கணிப்புகளைக் கொண்ட ‘நக்கீரன்’, ‘ஜூனியர் விகடன்’ இருந்தன. ஸ்டேட் பேங்க் கிரெடிட் கார்டுக்கான  மாதாந்திர பில்கள் கிடைத்தன.
டாட்டா டெலிகாமின் ஏழாவது நினைவூட்டுக் கடிதம்: ‘ஒரு வாரத்திற்குள் பணம் செலுத்தவில்லையென்றால் எழும்பூர் நீதிமன்றத்தில்...’

எல்லாவற்றையும் அறையின் நடுப்பகுதியில் பரப்பினேன்.

அகர்வால் வந்தார். காகிதக் குவியலைக் கண்டதும் முகம் மலர்ந்தார். ‘வெரி குட்’ என்றார். குப்பைக் கூடைகளை ஆராய்ந்தீர்களா என்றார். சிபிஐ காரர்கள் முதலில் குப்பைக்கூடையைத்தான் எடுப்பார்களாம். முக்கியமான துப்பு அங்குதான் கிடைக்குமாம்.

அறையின் ஒரு மூலையில், குளியலறைப் பக்கமாக  ஒரு அழுக்கான பிளாஸ்டிக் குப்பைக்கூடை இருந்தது. அதில் காகிதங்கள் இல்லை. மூடியில்லாத ஷேவிங் கிரீம் டியூப், லேசாகத் துருப்பிடிக்க ஆரம்பித்திருந்த இரண்டு பிளேடுகள், ‘ரின்’ சோப்பின் கடைசித் துண்டுகள், அதிக நீளமில்லாத தலைமுடிக் குவியல், தீர்ந்துபோன தேங்காய்எண்ணெய் பாட்டில், பயன்படுத்தி உடைந்துபோன பல் குத்தும் குச்சிகள் முதலியன இருந்தன.  செத்துப்போன கரப்பான் பூச்சிகள்மீது எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. வீட்டில் வேலைக்காரி இல்லை போலும்.     

கணினி மேசைக்கு அடியில் சற்றே நாகரிகமான குப்பைக்கூடை இருந்தது. காலியான பிரிண்டர் இங்க் கார்ட்ரிட்ஜ்கள், சிடிக்களின்  பிளாஸ்டிக் மேலுறைகள், சுடோக்கு ஆரம்பித்து முடிக்காமல்  கிழித்துப்போட்ட நாளிதழ்த் துண்டுகள், லக்னோ போய்வந்த ரயில் டிக்கட், வங்கியின் இன்னொரு கிளையில் சென்று பணம் எடுத்ததற்காக விதிக்கப்பட்ட நூற்றைம்பது ரூபாயை எதிர்த்து எழுதிய புகார்க்கடிதம், அம்பத்தூர் ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பித்த ரசீது (இரண்டு வருடம் பழையது), டயபடீஸ் ஊசிமருந்து வாங்கிய ரசீது.
   
எல்லாவற்றையும் அகர்வாலுக்குக் காட்டினேன். அம்பத்தூர் ரசீதை எடுத்துக்கொண்டார். லக்னோ ரயில் டிக்கட்டும் இருக்கட்டும் என்றார். கூட்டுறவு வங்கி ரசீதும் அவசியம் என்றார். எதற்கும் இன்னொருமுறை ஆழமாகப் பாருங்கள், முக்கியமான தடயத்தைத் தவறவிடக்கூடாது என்றார். நேரமாகிவிட்டதே, சாப்பிட்டீர்களா? என்றார்.

அப்போதுதான் காலையில் வாங்கிவந்த உணவுப்பொட்டலம் நினைவுக்கு வந்தது. எல்லாரும் கீழே ஒன்றாகச் சாப்பிட்டோம். கண்ணப்பனும் தம்பியும் இன்னும் வெளியில் வரவில்லை.  

***
மாலை ஐந்துமணிக்குத் தேநீர் வந்தது. கண்ணப்பனும் தம்பியும் அகர்வாலும் ஒன்றாக மாடிக்கு வந்தனர். மற்ற இரண்டு அதிகாரிகளும்தான். அகர்வாலின் வழிகாட்டுதலின்படி, ஆவணங்கள் பட்டியல் இடப்பட்டன. தங்க நகைகளோ, வைரங்களோ, ரொக்கமோ, சொத்துப் பத்திரங்களோ எதுவும் கிட்டவில்லை. ஏற்கெனவே கண்டுபிடித்த வில்லங்கச் சான்றிதழ்தான் முக்கியமான ஆவணம். லக்னோ போய்வந்த ரயில் டிக்கட்டும் முக்கியமாகத் தெரிந்தது. இரண்டையும் மேற்கொண்டு விசாரிக்கவேண்டும் என்று சிபாரிசு செய்யப்போவதாக அகர்வால் தெரிவித்தார். எல்லாரும் பட்டியலில் கையெழுத்திட்டோம்.

கண்ணப்பன் வருத்தம் தோய்ந்த முகத்துடன் இருந்ததால் அவரது பனியனை எடுத்து சூட்கேசைத் துடைத்தது பற்றிக் கூறவில்லை. குப்பைக்கூடைகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்வது பற்றி மட்டும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

***
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரம். ஞாயிறு என்றால் இரண்டு அல்லவா? இரண்டாவது தினமலர் படித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் வாரமலரில் ‘அந்தரங்கம்’ படிக்கலாமே என்று தோன்றியது. அப்போதுதான் அலைபேசி ஒலித்தது. பேசியவர்: கண்ணப்பன்!

வணக்கம் சார்!..கண்ணப்பன் பேசறேன். ரெண்டு மாசம் முன்னால நம்ம வீட்டுக்கு ரெய்டுக்கு வந்திருந்தீர்களே... என்றார்.

எனக்கு திடுக் என்றது. இவரோடு பேசலாமா கூடாதா? ஆனால் நான் வெறும் சாட்சி மட்டும்தானே! எனக்கு வேறு பொறுப்புக்கள் இல்லையே, பேசினால் என்ன என்று தோன்றியது. வணக்கம், சொல்லுங்க என்றேன்.

சாதாரணமா ரெய்டுக்கு வந்தா, அடுத்த வாரம் அவங்களுக்கு ஸ்டார் ஓட்டல்ல பார்ட்டி வேணும்னு கேப்பாங்க. அப்புறம், ‘கவனிக்க’ச் சொல்லுவாங்க. அகர்வால் ரொம்ப நல்ல மனுஷன். வேணாம்னுட்டார். ஒங்களத்தான் பிடிக்கவே முடியல்லே.. என்று இழுத்தார்.

அப்படியா விஷயம்? கொக்கி போடுகிறார். மாட்டக் கூடாது என்று முடிவு செய்தேன்.

அட, நீங்க ஒண்ணு. நான் ரெய்டுக்கெல்லாம் புதுசுங்க. அத்தோட, அன்னிக்கு ஒங்க வீட்டுல ஒண்ணுமே கண்டுபிடிக்கலியே. நான் வெறும் சாட்சியாத் தானே வந்தேன். பார்ட்டி கீர்ட்டின்னு என்னெப் பயமுறுத்தாதீங்க என்றேன்.

கடகடவென்று சிரித்தார் கண்ணப்பன். எப்படி ஐயா கண்டுபிடிக்க முடியும்? ரெய்டு வரப்போவது நாலுநாள் முன்னமே எனக்குத் தெரியுமே! எல்லா டாக்குமெண்ட்டும் வேற மாநிலத்துக்குப் போயிட்டுதே! அகர்வாலும் ஒங்கள மாதிரிப் புதுசு. அவருக்கு மேல இருக்கிற ஜெயின் சார் நமக்கு ரொம்ப வேண்டியவராச்சே.

உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது எனக்கு. வேலியே பயிரை மேய்கிறதா?  

எங்க டிபார்ட்டுமெண்ட்டுல இதெல்லாம் சகஜமுங்க. பெரிய தொகை கைமாறிச்சுன்னா நாங்களே ஆளை விட்டு லஞ்சம் வாங்கினார்னு புகார் எழுதச் சொல்லுவம். ரெய்டு வருவாங்க. கவனிச்சுருவோம். அந்த நாள் வரைக்கும் ரெக்கார்டு கிளீன் ஆயிடும் பாருங்க. அப்புறம் கவலைப்பட வேண்டாமே. நீங்க பேங்க்கில இருக்கீங்க. அதனால் ஒங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்ல போல.

ரொம்ப நன்றிங்க. எனக்கு இதெல்லாம் பழக்கமாகவே வேண்டாங்க. ஆளை விடுங்க என்றேன். கை உதறல் இன்னும் நிற்கவில்லை. சிபிஐ யாராவது ஒட்டுக்கேட்கிறார்களோ என்று பயம் வந்தது.

கண்ணப்பன் விடவில்லை. பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே! ஒங்களுக்குன்னு எடுத்து வச்சத இப்ப என்ன செய்றதாம்? என்று சிரித்தபடியே அலைபேசியை அணைத்தார்.
   
‘பொழைக்கத் தெரியாதவன்.’ அகர்வாலைத் தொடர்பு கொள்ளத் தோன்றியது. அவருக்கும் இந்தப் பட்டம் கிடைக்கவேண்டும் தானே?
****
(c) Y Chellappa
email: chellappay@gmail.com

18 கருத்துகள்:

 1. இரண்டு பகுதிகளை இப்போது தான் படித்தேன். நல்ல அனுபவம்.....

  பதிலளிநீக்கு
 2. அடப்பாவிகளா..... என்னவொரு கிரிமினல் மூளை!

  பதிலளிநீக்கு
 3. ஆகா
  இப்படித்தான் எல்லாமும் இயங்குகிறதா

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா

  இரண்டு பகுதியையும் படித்த போது கதைக்கருவும்சொல்லிச் சென்ற விதமும் சிறப்பு ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. இதேபோல் டிமானிடைசேஷனும் முன்னாலேயே லீக் ஆகி இருக்கும் என்று தோன்றுகிறதுஅரசியலில் இதெல்லாம் சகஜமையா

  பதிலளிநீக்கு
 6. ஒரு மர்ம்நாவலை இரண்டே பதிவுகளில், சுவாரஸ்யம் குன்றாமல் படிக்கச் செய்து விட்டீர்கள். இனி நாட்டில் ‘ரெய்டு’ செய்தி என்றால், என்னால் ஆச்சரியமாகப் படிக்க முடியாது.

  பதிலளிநீக்கு
 7. அந்த நாள் வரைக்கும் க்ளீன் ஆக இவ்வாறு ஒரு உத்தி. அருமை.

  பதிலளிநீக்கு
 8. இதெல்லாம் அரசியலில் சகஜம் என்றாலும் அப்பாவிகள் மாட்ட இதுபோன்ற ஆட்கள் சுகமாய் வாழ்கிறார்கள்...

  டிமானிடைசேஷனப்போ பிடிபட்ட அரசியல்வாதிகள் என்ன ஆனார்கள்... யாருக்கும் தெரியாது... எல்லாம் அரசியல் ஐயா....

  பதிலளிநீக்கு
 9. கடவுளே! என்ன ஒரு அனுபவம்! எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 10. சார் இப்போதெல்லாம் ரெய்டு பற்றி படித்தாலே எல்லாமே கண்துடைப்பு என்பது தெரிந்துவிடுகிறதே அப்படித்தானே நம் நாட்டு ஊழல் ரொம்ப புகழ்பெற்றது...

  உங்கள் அனுபவம் அதை உறுதிப்படுத்துகிறது. என்ன மாதிரியான அனுபவம் சார் உங்களுக்கு!

  பதிலளிநீக்கு
 11. அப்பவே அப்படின்னா.. இப்போ என்ன என்ன கோல்மால்களோ... வெளிய இருந்து பார்க்கும் சாமான்யர்களைத்தான் முட்டாளாக்குகிறார்கள் போலிருக்கிறது

  பதிலளிநீக்கு