பதிவு 8/2௦17
சுபாவதாரம் -4 (நிறைவுப் பகுதி)
சற்றே நீண்ட சிறுகதை
- இராய. செல்லப்பா
சுபாவதாரம்- 1 படிக்க இங்கு சொடுக்கவும் சுபாவதாரம்-2 படிக்க இங்கு சொடுக்கவும்
சுபாவதாரம்-3 படிக்க இங்கு சொடுக்கவும்
பெற்றோர்களை இளம்
வயதிலேயே இழந்துவிட்ட கஸ்தூரி,
சொந்தக்காரக் குடும்பம் ஒன்றில் வேலைக்காரியாகச் சேர்ந்திருக்கிறாள்.
அவர்கள் இவளைப் படிக்கவைத்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச்
சேர்த்திருக்கிறார்கள். இவளுக்குத் திருமணம் செய்யவும் முயற்சித்தார்கள். ஆனால் அந்த முயற்சி
பலிக்கவில்லை. பெண்ணின் நடத்தை சரியில்லாத காரணத்தால்தான் மாப்பிள்ளை வீட்டார்
வரவில்லை என்று சிலர் வதந்தியைப் பரப்பி விட்டார்கள். அவமானம் தாங்கமுடியாத
கஸ்தூரி, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி ஹைதராபாதிலிருந்த தன்
மூத்தசகோதரி வீட்டிற்குச் சென்றாள். அங்கும் துரதிர்ஷ்டம் விடவில்லை. அவளோ லிவர்
கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தாள். மருத்துவச் செலவைச் சமாளிக்கமுடியாமல் சகோதரியும் அவள் கணவரும்
தற்கொலை செய்துகொண்டு விட்டார்கள். அவர்களுக்கு வயதுவந்த ஒரு பெண் இருந்தாள்.
படிப்பும் சரியாக வரவில்லை. பாவம் கஸ்தூரி, தனக்குப் புகலிடம்தேடிப் போனவள், அக்காவின்
பெண்ணுக்கு வாழ்வளிக்க வேண்டியவளானாள்.
ஒரு பணக்கார வீட்டில்
தங்கி வேலை செய்யும்படியான ஏற்பாட்டில் அந்தப் பெண்ணை விட்டுவிட்டு, கஸ்தூரி
தனக்கொரு சிறிய வேலை தேடிக்கொண்டாள்.
ஆனால் அந்தப் பெண்ணோ சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ஒருவனை நம்பி ஏமாந்தது
மட்டுமின்றி, அவனுக்காகச் சிறுசிறு திருட்டுவேலைகளையும் செய்யத் தொடங்கினாளாம்.
நிலைமை கைமீறிப் போன நிலையில் கஸ்தூரி, யாரிடமும் சொல்லாமல் சென்னைக்குக்
குடிபெயர்ந்து வேலைபார்க்கத்
தொடங்கினாள். இனியும் சகோதரி மகளுக்காகப்
பாடுபடுவதில் அர்த்தமில்லை என்று முடிவுசெய்துவிட்டாள்.
****
“ஆனால் விதி யாரை விட்டது! ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனைக்குப் போன கஸ்தூரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வலது மார்பகத்தில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதை உடனே அகற்றவேண்டும் என்றார்கள். அப்போதுதான் அவளுடைய சகோதரி மகள் இவளை எப்படியோ கண்டுபிடித்து எங்களிடம் கொண்டுவந்து சேர்த்தாள். அறுவை சிகிச்சை நடந்து குணம் தெரிந்தது. இரண்டுவாரங்கள் இங்குதான் இருந்தாள். அப்புறம் என்ன ஆனாள் என்று தெரியாது. இப்போது இடது மார்பகத்திலும் கேன்சர் பாதிக்கத் தொடங்கிவிட்டது. தன் சகோதரி மகளுடன் இங்குவந்து சேர்ந்தாள். பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் சரியான மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் போனதால் இப்போது பாதிப்பு அதிகமாகி, நோயிலிருந்து மீளமுடியாத “டெர்மினல் பேஷண்ட்” என்று இவளை வகைப்படுத்தி இந்த நிலையத்தில் வைத்திருக்கிறோம். இன்னும் எத்தனை நாள் இருப்பாளோ தெரியாது. அவள் விதிப்படி தானே நடக்கும்? எங்களால் இயன்ற மருத்துவத்தை நாங்கள் செய்துகொண்டு வருகிறோம். இறப்பு வருவது நிச்சயம் என்னும்போது, அதை அமைதியாக எதிர்கொள்வதற்கு அவளுக்கு உதவியாக இருக்கிறோம். எங்களால் முடிந்தது அதுதான். சரியான வாலண்டியராக நீங்கள் வந்திருக்கிறீர்கள். இனி எல்லாம் உங்கள் கையில் இருக்கிறது” என்று முடித்தாள் சாந்தகுமாரி.
****
இரவு உணவை எடுத்துக்கொண்டு கஸ்தூரியை எழுப்பினாள் சாந்தகுமாரி. கஸ்தூரியின் அருகில் அமர்ந்துகொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயராமன்.
பாதி உறக்கத்தில்
இருந்தாள். “கஸ்தூரி, கஸ்தூரி” என்று இருமுறை அழைத்தவுடன் சட்டென்று கண்களைத்
திறந்தாள். நல்ல தூக்கத்திற்குப் பின் கிடைத்த நிம்மதியை முகம் காட்டியது. ஜெயராமனின்
கண்களோடு அவள் கண்கள் சந்தித்தபோது மெல்லிய கோடாக ஒரு புன்னகை அவள் உதடுகளில்
அரும்பியது. ஏதோ பேச வாயெடுத்தாள். அதற்குள் சாந்தகுமாரி, “மொதல்ல சாப்பிடு.
அப்புறம் பேசலாம்” என்று தடுத்தாள். இளஞ்சூடான கஞ்சியைச் சிறிய கரண்டியால் மெல்லப்
புகட்டி, சில மாத்திரைகளை விழுங்கக் கொடுத்த பின் டிரஸ்ஸிங் செய்தாள். அவளின் வலதுகையைப்
பற்றியபடியே மீண்டும் உறங்க ஆரம்பித்தாள் கஸ்தூரி.
“அலமாரியில்
கஸ்தூரியின் ஆல்பம் ஒண்ணு இருக்கு. பாக்கலாமா?” என்றாள் சாந்தகுமாரி. கஸ்தூரியின்
இளம்வயது புகைப்படங்கள் ஆல்பத்தின் பெரும்பகுதியை நிறைத்திருந்தன.
அவள்தான் எவ்வளவு அழகு! அப்பா- அம்மா-
அவள் என்று எவ்வளவு இனிமையான
குடும்பம்! பள்ளியில் – கல்லூரியில் –
ரயிலில் – படகில் – குளு, மணாலியில், கொடைக்கானலில், பம்பாய், டில்லியில் – என்று
ஏராளமான படங்கள். ஓவ்வொன்றிலும் அவள் கொள்ளை அழகு. எந்த உடையிலும் அவள் அழகாக
இருந்தாள். தேவதை மாதிரி இருந்தாள்.
“இவள் மட்டும் தனக்கு
மனைவியாக வந்திருந்தால்..”.என்ற கற்பனை ஓடியது அவன் மனதில். அதே சமயம், ஒரு நோயாளியைப் பற்றி இப்படியொரு எண்ணம் எழலாமா என்றும் மனம்
தடுத்தது. ஆல்பத்திலிருந்து கண்களை அகற்றிக் கஸ்தூரியைப் பார்த்தான். வற்றி
மெலிந்துபோன உடல், அவளின் மெல்லிய மூச்சுக்காற்றுக்கேற்ப
அசைந்து கொடுத்தபடி இருந்தது. புற்றுநோய்தான் இவளுடைய அழகை என்னமாய்ச் சிதைத்து
விட்டது!
இன்னும் சில
பக்கங்கள்தான் பாக்கி. அதற்குள் கஸ்தூரியிடமிருந்து கிளம்பிய அலறல் மேற்கொண்டு
ஆல்பத்தைப் பார்க்கவிடாமல் செய்தது.
மூச்சுத் திணறல் ஏற்பட்டு, “ஹூம்..ஹூம்” என்று வழக்கத்தைவிட அதிக ஓசையுடன்
சுவாசம் வெளிப்பட்டது. எதிர்பார்த்த விபரீதம் நடந்துவிடுமோ என்று பயந்த ஜெயராமன், “சாந்தகுமாரி”
என்று சன்னல் வழியாகக் கூவினான். பிறகு ஓடிப்போய் கஸ்தூரியின் தோள்களைப் பிடித்துத்
தலையோடு சேர்த்துத் தூக்கிச் சற்றே உயரமாகப் பிடித்துக்கொண்டான். அவன் மார்பில்
அழுத்தமாகப் பதிந்தது அவள் உடல்.
“ஹூம்..ஹூம்..” என்ற
திணறல் ஓசை நிற்பதாயில்லை. மார்பு மேலும் படபடக்கத் தொடங்கியது. கால்கள்
திடீரென்று வேகமாக அசையத் தொடங்கின. கைகள் தன்னிச்சையாக இவனது கன்னங்களைத் தடவிக்கொண்டே கழுத்தை இறுக்கமாகப்
பற்றிக்கொண்டன. ஜெயராமனுக்கு வியர்த்தது. கண்களில் ஆறாக நீர் வழிந்தது. அதனால்
இருவரது கன்னங்களும் ஒட்டிக்கொண்டதுபோல் ஆனது.
கஸ்தூரியின்
மூச்சுத்திணறல் நிற்பதாயில்லை. ஊசிமருந்தை எடுத்துக்கொண்டு ஒரு நர்சும் அவள்
பின்னாலேயே சாந்தகுமாரியும் வேகமாக வந்தனர். ஜெயராமனின் கழுத்தைச்
சுற்றிக்கொண்டிருந்த கஸ்தூரியின் கைகளை விலக்கி அவளைப் படுக்கவைக்க முயன்றாள் சாந்தகுமாரி. முடியவில்லை.
கஸ்தூரியின் பிடி இறுக்கமாக இருந்தது. ‘கஸ்தூரி, கஸ்தூரி’ என்று அழைத்தாள். எந்த
எதிர்வினையும் இல்லை. எனவே, அவள் இருந்த
நிலையிலேயே ஊசியைச் செலுத்த முன்வந்தாள் நர்ஸ். ஆனால் அதற்குள் கஸ்தூரி,
ஜெயராமனின் கைகளிலிருந்து சரிய
ஆரம்பித்தாள். அவளை இறுகப் பிடித்து படுக்கையில் இட்டனர் சாந்தகுமாரியும் நர்சும். கஸ்தூரியின் நாடியைப்
பிடித்துப் பார்த்த சாந்தகுமாரி “எல்லாம்
முடிஞ்சுபோச்சு, ஜெயராமன்“ என்றாள்.
நிலையத்து ஊழியர்கள்
ஓடிவந்தனர். மருத்துவர் அவளை மேலும் பரிசோதித்து மரணத்தை உறுதி செய்தார். எல்லாருடைய
கண்களிலும் கடைசிமுறையாக வழிந்தது நீர். அவர்களைப் பொறுத்தவரை இது அடிக்கடி நடைபெறும் நிகழ்ச்சி. என்றாலும் ஒவ்வொரு டெர்மினல் பேஷண்ட்டும் ஓர் உயிர்தானே! அதற்கு அஞ்சலி
செலுத்தவேண்டுமல்லவா?
கஸ்தூரியின் உடலைவிட்டு
விலகாமல் நின்றுகொண்டிருந்தான் ஜெயராமன்.
ஊழியர்கள் மெல்ல அவளைப் பிரித்துப் படுக்கையில் கிடத்தினார்கள்.
“சிலர் வாழத் தெரியாமல் வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். சிலர், வாழ முடியாமல் தொலைந்துபோகிறார்கள். ஆனால் யார்,
யாருடன் வாழவேண்டும் என்பது ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் விட்ட குறை, தொட்ட குறை என்கிறோம்” என்று வசந்தா ரங்கமணி எப்பொழுதோ சொன்னது திடீரென்று
நினைவுக்கு வந்தது. கஸ்தூரியின் ஸ்பரிசம் – தன் கைகளால் அவன் கழுத்தை இறுக்கிப்
பிடித்துக்கொண்டது- அப்படியே உயிர்விட்டது- ஒருவேளை இதுதான் விட்ட குறை, தொட்ட
குறையோ?
சாந்தகுமாரி
ஊழியர்களை அழைத்து “நடக்கவேண்டியதை கவனிங்க. அட்மிஷன் ரிஜிஸ்டரப் பாத்து யார் யாருக்குத் தகவல் சொல்லணுமோ
சொல்லுங்க. அநேகமா சுபா ஒருத்திக்குத்தான் சொல்லவேண்டியிருக்கும்” என்றாள்.
“சுபாவா?” என்று
திகைப்போடு கேட்டான் ஜெயராமன்.
“ஆமாம். இவளோட அக்கா
பொண்ணு. இதோ இந்த ஆல்பத்துல கூட இருக்காளே அவ தான்....” என்று ஆல்பத்தின் கடைசி
பக்கத்தைக் காட்டினாள்.
ஆம், நந்தினியின் வைர மோதிரம் திருட முயன்ற அதே சுபா.
“உங்களுக்குத்
தெரியுமா அவளை?”
ஜெயராமன் பதில்
சொல்வதற்குள் நந்தினியிடமிருந்து போன்
வந்தது. “மன்னிக்கவேண்டும் ஜெயராமன் சார்! இன்று தருவதாக இருந்த பார்ட்டியை கேன்சல் செய்துவிட்டேன். ஒரு
துக்கச் செய்தி காரணம்..” என்றாள்.
***
“அமைதி நிலைய”த்தில் ஜெயராமனைப் பார்ப்போம் என்று சுபா கனவிலும் நினைக்கவில்லை. அவனை ஏசியதற்காக நேரில் பார்த்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தாள். இன்றோ தனது சித்தியின் மரணத்தின்போது அவனைப் பார்க்க நேரிட்டுவிட்டதே!
“என்னை
மன்னித்துவிடுங்கள் சார்!..” என்று அவன் கால்களில் விழுந்து அழுதாள். மேற்கொண்டு
பேச வார்த்தை வராதவளாய், ஓடிச்சென்று கஸ்தூரியின் உடலைக் கட்டிக்கொண்டு அழ
ஆரம்பித்தாள்.
அவளைத் தொடர்ந்து
போனான் ஜெயராமன். “இவங்களுக்கு மருந்து
வாங்கத்தான் அன்னிக்கு வைர மோதிரத்த.. “ என்று சொல்ல முயன்ற சுபாவை “உஷ்” என்று தடுத்தான். அடிப்படையில் அவள்
நல்லவளே. சூழ்நிலைதான் அவளைத் தடுமாற வைத்திருக்கிறது. அதனால்தான் நந்தினி அவளை
மீண்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
இளமையில் இருந்த
கஸ்தூரியின் முகத்தையும் நோயால் சிதைந்துபோன இன்றைய முகத்தையும் மனதிற்குள்
ஒப்பிட்டுப் பார்த்தான் ஜெயராமன். அன்று பம்பாய்க்குப் போய்ப் பெண்பார்க்க
முடியாமல் திரும்பிவிட்டோமே, அவளும் இவளைப் போலவே அழகாய் இருந்திருப்பாளோ? ஒருவேளை, அவளே இவள்தானோ? காரணமில்லாமல் குடும்ப வாழ்க்கையைத் தவறவிட்டு
விட்டேனோ? கஸ்தூரிதான் வசந்தா ரங்கமணி சொன்ன புதிய பந்தமோ? இல்லையென்றால்
கஸ்தூரியின் கைகள் தன் கழுத்தை இறுகப் பற்றியபடி மூச்சை நிறுத்திக்கொண்டதற்கு
அர்த்தம்தான் என்ன?
பணியிலிருந்து ஒய்வு பெற்றாகிவிட்டது. இனி என்ன செய்யப்போகிறோம் என்று குழம்பியிருந்தவனுக்கு வெளிச்சம் கிடைத்துவிட்டதாகத் தோன்றியது. ஒரு முடிவுக்கு
வந்தவனாக ஜெயராமன் சொன்னான்: “சுபா, கஸ்தூரிக்கு நான்தான் ஈமச்சடங்கு
செய்யப்போறேன். ஒங்க சொந்தக்காரங்க யாராவது எதிர்ப்பாங்களா?”
சுபாவுக்கு
மட்டுமல்ல, சாந்தகுமாரிக்கும் அது ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. “நாங்க அநாதை
சார். யார் வரப்போறாங்க, யார் எதிர்க்கப் போறாங்க! ஆனா சடங்கெல்லாம் நீங்க செய்யலாமா? ஒங்க வீட்டுல
ஒத்துப்பாங்களா” என்றாள் சுபா.
“என் மனைவிக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்” என்று சொல்ல நினைத்தவன், தன் மொபைலை எடுத்தான். “கனெக்ட்
மீ டு ஜி. எம். மல்ஹோத்ரா ப்ளீஸ்” என்றான்.
“யெஸ், மல்ஹோத்ரா
ஹியர்”.
“சார், வணக்கம்.
என்னுடைய பென்ஷனுக்கு நாமினேஷன் போட வேண்டுமென்று கேட்டீர்கள் இல்லையா? இதோ
எழுதிக்கொள்ளுங்கள். நாமினி பெயர் : சுபா”.
“குட், சரி, ரிலேஷன்ஷிப் சொல்லு".
“சுபா என் தத்துப்
பெண் என்று எழுதிக்கொள்ளுங்கள்”.
“ஈஸ் இட் ?” என்று
மல்ஹோத்ரா அதிர்ச்சியுடன் கேட்டார். அடுத்த நொடி, “ஜெயராமன், இப்போதுதான் நீ எனக்கு
ஒரு குட்நியூஸ் கொடுத்திருக்கிறாய். விஷ் யூ ஆல் தி பெஸ்ட். பதிலுக்கு நானும் ஒரு
குட்நியூஸ் தரட்டுமா?” என்றார்.
“நீ ரெகமண்ட் பண்ணின சுமதிக்கு பியூன் போஸ்ட்
கொடுத்தாகிவிட்டது. தபாலில் ஆர்டர் வரும். போதுமா?”
“நன்றி மல்ஹோத்ரா!
இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். உங்களிடம் நான் கேட்டுப் பெறும் கடைசி
உதவி இதுதான்” என்று பேச்சை முடித்தான் ஜெயராமன்.
நடக்கவே
முடியாததென்று நினைத்தது நடந்திருக்கிறது.
சுமதி ஓர் ஏழைப்பெண்.
கார் விபத்தில் பலியான சந்திரனின் மகள். ஒன்பதாவதுவரை படித்துவிட்டு அக்கம்பக்கம்
வீட்டுவேலை செய்துவந்தவள். குடும்பத்தின் ஒரே நம்பிக்கை. சந்திரனைப் பலிவாங்கிய
விபத்திற்குக் காரணமானவன், குடிபோதையில் வண்டியோட்டிய அதே வங்கியின் உயர்
அதிகாரி ஒருவரின் பதினாறு வயது மகன்தான்.
மிகுந்த முயற்சி செய்து, போலீஸ் கேஸ் ஆகாதபடி செய்தது ஜெயராமன் தான். சுமதிக்காக வாதாடி இந்த
வேலையைப் பரிந்துரை செய்திருந்தான். அவள்
வாழ்வு இனி மலரப்போகிறது.
துயரத்தால்
தளர்ந்துபோய் நின்றுகொண்டிருந்த சுபாவை அருகில் அழைத்தான் ஜெயராமன். “இதோ பாரம்மா,
இன்றுமுதல் நீ என் மகள். இனிமேல் நீ
எங்கும் போகக்கூடாது. நீயும் நானும் இந்த அமைதி நிலையத்தில் நிரந்தரமாகத்
தங்கிவிடலாம், சரியா?”
பதில் சொல்லத்
தெரியாமல் ஜெயராமன்மீது சாய்ந்தபடி விக்கியழத் தொடங்கினாள் சுபா. துக்கம்,
மகிழ்ச்சி இரண்டுமே கண்ணீராக
வழிந்துகொண்டிருந்தன. சாந்தகுமாரிக்கும்தான்.
(முற்றும்)
எதிர் பாராத திருப்பம்... நல்ல முடிவு...
பதிலளிநீக்குகஸ்தூரி அவர்களின் கடைசி நிமிடங்கள் கண்ணீரை வரவழைத்தது...
புற்றுநோய் இதே போல் எனது சகோதரியை காவு வாங்கியது... அந்த கடைசி நேரத்தில் உடன் இருந்தேன்... இதற்கு மேல் எழுத வார்த்தைகள் வரவில்லை...
நல்ல முடிவு சார்....
பதிலளிநீக்குகீதா:முடித்த விதம் அருமை சார். என் இரு அத்த்தைகளும் புற்று நோயால் இறந்தாதார்கள்.....நினைவுகளைத் தவிர்க்க இயல வில்லை
என் முந்தைய கேள்விக்கு என்ன பதில்
பதிலளிநீக்குமனதை கணக்கச் செய்த கதை ஐயா
பதிலளிநீக்குநெகிழ்ந்துபோனேன் நன்றி
துக்கம், மகிழ்ச்சி இரண்டுமே கண்ணீராக...ஒட்டுமொத்த கதையின் கருவின் வெளிப்பாடாக உணர்ந்தேன்.
பதிலளிநீக்குDidukkidum thiruppangal niraindha sirukadhai.Nalla nadai. Vazhthukkal.
பதிலளிநீக்குNarayanan,CDS
வேகமாக எடுக்கப்படும் சில முடிவுகள் இப்படி விவேகமாகவும் ஆவதுண்டு. நல்ல படைப்பு.
பதிலளிநீக்குசுவாரசியமாகவும் இருந்தது மனதை நெகிழ வைப்பதாகவும் இருந்தது.அனைத்துப் பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!
நீக்கு