புதன், பிப்ரவரி 01, 2017

சுபாவதாரம் -3 சற்றே நீண்ட சிறுகதை

பதிவு 7/2௦17

சுபாவதாரம் -3

சற்றே நீண்ட சிறுகதை

- இராய. செல்லப்பா

சுபாவதாரம்-2 படிக்க இங்கு சொடுக்கவும்

ஜெயராமன் திகைத்துப்போய் நின்றான். சரியான நேரத்தில் கடவுள்தான்  தன்னைக் காப்பாற்றி யிருக்கிறார். மோதிரத்தை மட்டும் சுபாவிடம் கொடுத்துவிட்டிருந்தால்..? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் திருட்டுப்பெண்ணா சுபா?

“எனக்கு இந்த நெலம வந்ததுக்கு  நீங்கதான் காரணம். பொழுது விடிஞ்சா என்மேல போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கப் போறாங்களாம். அப்டி நடந்தா நான் உயிரோடு இருக்கமாட்டேன். என் மரணத்துக்கு நீங்க ரெண்டுபேரும்தான் காரணம்னு எழுதிவச்சிட்டு தூக்கமாத்திரை சாப்ட்டுடுவேன். ஒங்களப் பழிக்குப் பழி வாங்குவேன்” என்றாள் சுபா.

அவளின் ஆவேசம் பீதியைக் கொடுத்தது. வங்கியின் விதிப்படிதானே அவன் நடந்து கொண்டான். அதில் என்ன தவறு? இந்தப் பெண் அனுபவமுதிர்ச்சி இன்மையால் குழம்பிப்போயிருக்க வேண்டும். அல்லது ‘முக்கியமான ஆஸ்பத்திரி செலவு’ என்றாளே, அதைச் சரிக்கட்டப் பணம் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்க வேண்டும்.. இவளைச் சமாதானமாகத்தான்  வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

“சுபா, தயவுசெஞ்சு அவசரப்பட்டு எதுவும் செஞ்சுடாதீங்க. பொழுது விடிஞ்சதும் நானே நந்தினிகிட்ட ஒங்க நெலமையை எடுத்துச்சொல்லி எல்லாப் பிரச்சினைக்கும் நல்ல முடிவெ கண்டுபிடிக்கறேன்.  என்னெ நம்புங்க.  ஒருவேள காலைவரைக்கும் பொறுக்கமுடியாதுன்னா, நீங்க இருக்குற முகவரியைக் கொடுங்க. இப்பவே வர்றேன்..” என்று மென்மையாக, நிறுத்தி நிறுத்திக் கூறினான். அது அவளைப் பாதித்திருக்கவேண்டும்.

சில  நிமிட மௌனத்திற்குப்பின் அவளே பேசினாள். “சரிங்க சார், நாளைக்கிப் பன்னெண்டு மணிக்குள்ள ஒங்கள வந்து பாக்கறேன்.  அதுவர நந்தினி மேடம்கிட்ட எதுவும் பேசாதீங்க. நான் இப்ப ஒங்ககிட்ட பேசினதையும் சொல்லிடாதீங்க” என்று உத்தரவிடுவதுபோல் கூறினாள்.

ஆனால் மறுநாள் சுபா வரவில்லை. நந்தினியும் போனில் அகப்படவில்லை. அதன் பிறகு நந்தினி அடிக்கடி வந்துபோனாலும் சுபாவைப் பற்றிய பேச்சே எழவில்லை. தொலைந்த பொருள் கிடைத்துவிட்டது என்றோ, அல்லது ஒரு திருடி ஒழிந்தாள் என்றோ நிம்மதி அடைந்திருக்கவேண்டும். அந்த சுபாவா மீண்டும் வருகிறாள்? அதுவும் நந்தினியுடன்? இதில் ஏதோ ஒரு புதிர் ஒளிந்திருப்பதாகவே தோன்றியது. நினைக்க நினைக்கக் குழப்பம்தான் மிஞ்சியது.
****
சந்தா ரங்கமணி, வங்கியின் எதிர்வீட்டில் குடியிருப்பவர். முன்னாள் பாடகி. இந்நாள்  ஆன்மிகச் சொற்பொழிவாளர்.  ஜெயராமனைப் போலவே மணமாகாதவர்.  அடிக்கடி அவனைச் சந்தித்து நலம் விசாரிப்பார்.

“ஜெயராமன்! ரிடயர்மெண்ட் என்றால் வாழ்க்கையே முடிந்து போனதாகச் சிலர்  கருதுவார்கள். அது சரியில்லை. ஒரு வாழ்க்கை முடிந்து, இன்னொரு சுவாரஸ்யமான வாழ்க்கை தொடங்குவதாக வைத்துக்கொள்ளலாமே!  ஆகவே, நடக்காத திருமணத்தையோ, இல்லாத பிள்ளை குட்டிகளையோ நினைத்து வேதனைப்படாதீர்கள். அப்படிப்பட்ட சுமைகள் இல்லாதவரை நீங்கள் பாக்கியசாலிதான்” என்பார்.

“வங்கியிலிருந்து ஓய்வு பெற்றபின்பு ஆன்மிகத்திலோ, சமூக சேவையிலோ  ஈடுபட நினையுங்கள். விட்டகுறை தொட்டகுறையாகப் புதிய பந்தங்கள் ஏற்பட்டு உங்களை வழிநடத்தும்.  இன்னும் விளக்கம் வேண்டுமென்றால்  போன் செய்யுங்கள். வரட்டுமா?” என்று கிளம்பினார் வசந்தா.

ஆனால் அதற்குள் அவன் சாந்தகுமாரியைச் சந்திக்க நேர்ந்துவிட்டதே!

சாந்தகுமாரி, கணக்கியலில் பட்டம்பெற்றவள். இருபத்துமூன்று வயதில் மணமாகி, இரண்டே வருடத்தில் இரத்தப் புற்றுநோய்க்குக் கணவனைப் பறிகொடுத்தவள். வாழ்வின் அடுத்த படி இன்னதென்று தெரியாமல் குழம்பி நின்றவளை ஆதரவுக்கரம் நீட்டி அணைத்துக்கொண்டது, இறுதிக்கட்ட கேன்சர் நோயாளிகள் பாதுகாப்பு அறக்கட்டளை’. நிச்சயம் மரணத்தைத் தழுவப்போகிறார்கள் என்று தெரிந்தபின்னும் அந்நோயாளிகளைக் கனிவோடு உபசரித்து, அமைதியான சூழ்நிலையில்  அவர்களின் இறுதிமூச்சு பிரிவதற்கு உதவவேண்டும் என்னும் லட்சியத்துடன் அந்த அறக்கட்டளை இயங்கிவந்த கட்டிடத்திற்கு ‘அமைதி நிலையம்’ என்று பெயர்.

தனது சுயநலமில்லாத சேவையினாலும், சுறுப்பான நடவடிக்கைகளாலும்  படிப்படியாக அதன் முழுநேரச் செயலாளரானாள் சாந்தகுமாரி. ஒத்த கருத்துடைய இளைஞர்களையும் பெரியவர்களையும் தேடித்தேடி அறக்கட்டளையின் உறுப்பினராக்கினாள். அப்படித்தான் ஜெயராமனிடமும் வந்தாள்.

நெஃப்டில் பணம் அனுப்புவது எப்படி என்று கேட்க வந்தவள், அரைமணி நேரப் பேச்சில் அவனுடைய ஜாதகத்தையே தெரிந்துகொண்டுவிட்டாள். “உங்களைப் போன்ற குடும்பச்சுமை இல்லாத வாலண்டியர்கள் தான் எங்களுக்கு வேண்டும். ஒருதரம் நேர்ல வந்து  பாருங்க. மரணத்தோட பிடில இருக்கிற நோயாளிகளுக்குப் பணம் காசு வேண்டாம். பக்கத்துல இருந்து ரெண்டு வார்த்தை ஆறுதலாப் பேசினாலே போதும்” என்று சாந்தகுமாரி விளக்கியபோது மறுக்கமுடியவில்லை அவனால்.

‘அமைதி நிலைய’த்திற்கு அடிக்கடி வரலானான் ஜெயராமன். சாந்தகுமாரியோடு சுமார் இருபது இளைஞர்களும் ஆறு நர்சுகளும் அங்கு சம்பளமின்றிச் சேவை செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட நோயாளிமீது முழுப் பொறுப்பு எடுத்துக்கொள்ளவேண்டும். அவரவர் வேலைநேரத்திற்கேற்ப காலையோ, மாலையோ, நடுப்பகலோ வந்து இரண்டுமணிநேரம் செலவழிக்கவேண்டும். மற்ற சமயங்களில் ஊதியம்பெறும் ஊழியர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

சுமார் ஐம்பது வயதுள்ள கஸ்தூரி என்ற நோயாளியைக் கவனிக்கும் பொறுப்பு ஜெயராமனுக்கு வழங்கப்பட்டது.  

மார்பகப் புற்றுநோயால் அறுவை சிகிச்சைக்கு ஆளாகி ஐந்து வருடங்களுக்கு முன்பு வலது மார்பகத்தை இழந்தவள் கஸ்தூரி. இப்போது இரண்டாவது மார்பகத்திலும் அது பரவிவிட்டது. இனி அறுவை சிகிச்சையாலும் பலனில்லை என்று தெரிந்ததால் அவளை ‘அமைதி நிலைய’த்திற்கு அனுப்பிவிட்டார்கள். முதலில் சில நர்சுகள் அவளுக்காகப் பணிசெய்ய முன்வந்தாலும், சில வாரங்களிலேயே நோய் முற்றி, மோசமான வாடை அடிக்க ஆரம்பித்ததால், தங்களுக்கும் தொற்றிவிடுமோ என்ற பயம் ஏற்படவே  அவளைத் தவிர்க்கத் தொடங்கினர். சரியானதொரு வாலண்டியர் அவளுக்கு உடனடியாகத் தேவைப்பட்டது. அந்த நிலையில்தான் ‘அமைதி நிலைய’த்திற்குள் வந்தான் ஜெயராமன்.

ஒரு வெள்ளிக்கிழமை மாலை, வங்கி முடிந்து, நிலையத்திற்கு வந்த ஜெயராமன், “ஐயோ, வலி தாங்க முடியவில்லையே” என்ற அலறலைக் கேட்டு  வேகமாக உள்ளே ஓடினான். கஸ்தூரிதான் கதறிக்கொண்டிருந்தாள். அவள் மார்பகத்தைச் சுற்றியிருந்த “பேண்டேஜ்” துணி, சீழும் இரத்தமுமாகக்  காட்சியளித்தது. நர்ஸ்கள் யாரும் அங்கில்லை. “சிஸ்டர், சிஸ்டர்” என்று சிலமுறை கூவியும் யாரும் வரவில்லை. கஸ்தூரியோ வலியினால் சித்ரவதைபட்டுக் கொண்டிருந்தாள். “சமயபுரம் மாரியம்மா, என்னை சீக்கிரம் அழைச்சிக்க மாட்டியா? என்னால தாங்க முடியல்லியே” என்று மிச்சம் மீதி இருந்த சக்தியை எல்லாம் ஒன்றுதிரட்டிக் கேவிக்கேவி அழலானாள். சாதாரணமாக ஐந்தடி இரண்டங்குலம் உயரம் இருக்கும் அவள், இப்போது குறுகிப்போய் எட்டுவயதுச் சிறுமியாகக் காட்சியளித்தாள். கேன்சர் அவளைச் சிறுகச்சிறுகத் தின்று, சதையே இல்லாத வெற்று எலும்புகளின் தொகுதியாக்கி இருந்தது.  தலைமயிர் முற்றிலுமாக அழிந்து மண்டையோட்டுச் சதை வெளிறித் தெரிந்தது. வற்றி ஒடுங்கிப்போன தன் கைகளால் மார்பகத்தை இறுக்கிப் பிடித்துக்கொள்ள எத்தனித்தாள். ஆனால் விரல்களைத்தான் அசைக்க முடிந்தது.  “அம்மா- அம்மா” என்று அரற்ற மட்டுமே முடிந்தது. ஒவ்வொரு அரற்றலுக்கும் மார்பகத்திலிருந்து மேலும் சீழ் வடியலாயிற்று.

இரண்டாம் மாடியின் கடைக்கோடியில் மூன்று சன்னல்கள் கொண்ட அந்த அறையையில் நல்ல காற்றோட்டம் இருந்தது. ஆனால் அங்கிருந்து அழைத்தால் யாருக்கும் எளிதில் கேட்காது.     

ஜெயராமனுக்கு இந்த அனுபவம் புதிது. இதுவரை எந்தப் பெண் நோயாளியையும் அருகிலிருந்து பார்த்ததில்லை. தாயை இளம்வயதிலேயே இழந்துவிட்டவன். திருமணமாகாததால் பெண் ஸ்பரிசமே தெரியாதவன். அப்படிப்பட்டவன் இப்போது கஸ்தூரிக்கு எவ்வாறு அவசரமாகப்  பணிவிடை செய்வதென்று தோன்றாமல் ஒருகணம் விழித்தான்.

சன்னல் வழியாகக் கீழே நோக்கினான். யாருமில்லை.  இவளை இப்படியே விட்டுவிட்டுக் கீழே ஓடிப்போய் யாரையாவது அழைத்து வரலாமென்றால், அதற்குள் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடுமோ என்று பயந்தான். 

சிறிது தயக்கத்திற்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தான். அறைக்கதவைத் தாழிட்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு ஃபிளாஸ்க்கில் வெந்நீர் இருந்தது. தன்  கைகளைக் கழுவித் துடைத்துக்கொண்டான். அலமாரியிலிருந்து புதிய பேண்டேஜ் துணியையும், காயத்தைக் கழுவும் “பெட்டாடின்” சொல்யூஷனையும் எடுத்தான். சுவரில் மாட்டியிருந்த ஷீரடி சாய்பாபாவை தியானித்துக்கொண்டு கஸ்தூரியை நெருங்கினான்.

அப்போதுதான் அவள் அவனைப் பார்த்தாள். அந்நியமான ஓர் ஆண் தன்னருகில் நிற்கிறானே என்ற நினைவே இல்லாதவளாய், “வணக்கம் சார்” என்றாள். “ஏதாவது செய்யுங்க, என்னால முடியலே. ப்ரெஸ்ட்டு ரொம்ப வலிக்குது” என்றாள். கையெடுத்துக் கும்பிட முயன்றாள். இப்போதும் சில விரல்கள் மட்டுமே அசைந்தன. “நர்சுங்க யாரும் இல்லயா?” என்றாள் ஈனமான குரலில். பிறகு மயக்கமுற்றவளாய்க் கண்ணயர்ந்தாள்.  

அவளிடம் என்ன பேசுவதென்று ஜெயராமனுக்குத் தெரியவில்லை. தன்னிச்சையாக வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். மார்பை மூடியிருந்த பழைய துணியை அகற்றினான். வலி தாங்காமல் அவள் கதறினாள். சீழும் ரத்தமும் துணியோடு கலந்து மார்போடு உலர்ந்துபோயிருந்ததால், மெல்ல மெல்லவே இழுக்கமுடிந்தது. அந்த இழுப்பினால் மார்பிலிருந்து மேலும் சீழ் வடியலாயிற்று. அந்த அசைவில் அவள் கண்கள் திறந்துகொண்டன. “இன்னும்.. இன்னும் கொஞ்சம் அழுத்தமா தொடைச்சுடுங்க” என்று முனகினாள். பிறகு “ரொம்ப நன்றி” என்றாள்.  

காயம் துடைக்கும் சொல்யூஷனை லேசாகத் தடவினான். புற்றுநோயால் சிதைந்துபோன மார்பகம் வெறும் கூழாகக் கிடந்தது. இல்லாதுபோன இன்னொரு மார்பகத்தின் மேலும் அதன் பாதிப்பு தென்பட்டது. கை போன போக்கில் மருந்தைத் தடவினான்.  அது அவளுக்கு ஆறுதலைத் தந்திருக்கவேண்டும். இரு கண்களையும் வெகு முயற்சியோடு விரித்துப் பார்த்துவிட்டு மூடிக்கொண்டாள். புதிய பேண்டேஜ் துணியை மேலேவைத்து, தனக்குத் தெரிந்தவரையில் அழுத்தமாகக் கட்டினான். மீதமிருந்தவற்றை அலமாரியில் வைத்துவிட்டு வெந்நீரால் கைகளைக் கழுவிக்கொண்டான். பிறகு என்ன நினைத்தானோ தெரியவில்லை அவள் அருகில் ஒரு ஸ்டூலைப் போட்டு அமர்ந்துகொண்டான். “கஸ்தூரி” என்று மெதுவாக அழைத்தான்.

அதற்குள் அவளுக்குத் தூக்கம் வந்திருக்கவேண்டும். மீண்டும் அழைத்தான். அசையவில்லை. மெல்ல எழுந்து சன்னல் அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான்.

ரவு ஏழுமணிக்குத்தான் அறையில் நுழைந்தாள் சாந்தகுமாரி. நின்றுகொண்டிருந்த ஜெயராமனையும்,  தூங்கிக்கொண்டிருந்த கஸ்தூரியையும் பார்த்தாள். “ஓ, நீங்க தான் “டிரஸ்ஸிங்” பண்ணினீங்களா ? குட், நல்லாத்தான் பண்ணி இருக்கீங்க” என்றாள்.

அதற்குள் கஸ்தூரியின் உடம்பிலிருந்து சீழ் வாடை எழுந்து அறை முழுவதும் பரவியது.  இருவராலும் நிற்கவே முடியவில்லை. எழுந்து வராண்டாவுக்கு வந்தனர். “இதுதாங்க டெர்மினல் பேஷண்ட்கிட்ட இருக்கிற பிரச்சினை. மணிக்கொருதரம் டிரஸ்ஸிங் பண்ணியாகணும். இந்த நாத்தம் பொறுக்க முடியாமத்தான் நர்சுங்க வரமாட்டேன்னு சொல்றாங்க. பெரும்பாலும் நானேதான் பண்ணிடுவேன்....” என்றாள் சாந்தகுமாரி கவலயுடன். “பாவம் கஸ்தூரி, இப்ப நல்லாத் தூங்குறா பாருங்க!”  

கேன்சர் நோயாளிகளை – அதுவும்- மார்பகத்தில் கேன்சர் வந்த பெண்களை- ஜெயராமன் இதுவரை பார்த்ததில்லை. கஸ்தூரியைப் பார்த்தவுடன் அவனுக்கு மனமே ஆடிப்போய்விட்டது. இவ்வளவுதானா வாழ்க்கை என்று விரக்தியடைந்தான். தானும் சாந்தகுமாரிபோல சேவைக்கே இனி வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டால் என்ன என்ற உத்வேகம் எழுந்தது.

அவளுடைய இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, “சாந்தகுமாரி, ஒரு நர்ஸ் செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் எனக்குச் சொல்லிக்கொடுங்கள். கஸ்தூரியை இனிமேல் நானே கவனித்துக் கொள்கிறேன்” என்றான்.

சாந்தகுமாரியின் முகத்தில் நன்றியின் வெளிச்சம் தெரிந்தது. “ரொம்ப சந்தோசங்க. எல்லாப் பயிற்சியையும்  இன்னும் மூணே நாள்ல சொல்லித் தந்துடுவோம். இனிமே கஸ்தூரிக்கு நல்லகாலமே” என்று சொன்னவள், பல்லைக் கடித்துக்கொண்டாள். “அதாவது, இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்ல காலமே” என்றாள் சோகத்துடன். “டெர்மினல் கேன்சர் பேஷண்ட்டுக்கு எப்போ கடைசிநாள்னு யாராலயும் சொல்ல முடியாது. பாவம், கஸ்தூரி. ரொம்ப நல்லவ....”

கண்களைத் துடைத்துக்கொண்டாள் சாந்தகுமாரி.

“கஸ்தூரியின் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன். குடும்பம், பெற்றோர்கள்...படிப்பு என்று  ஏதாவது தெரியுமா?” என்றான் ஜெயராமன்.

“இப்போது நேரமில்லை, நாளைக்குச் சொல்லட்டுமா?” என்றாள் சாந்தகுமாரி.

9 கருத்துகள்:

  1. இன்னொரு சுவாரஸ்யமான வாழ்க்கை தொடங்குமா...?

    ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  2. விறுவிறுப்பாகச் செல்லும்போது அடுத்த பதிவில் நிறைவுறும் என்றுள்ளது. ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. மார்பகப் புற்று நோயின் வீரியத்தை விளக்கி இருக்கிறீர்கள் உண்மையிலேயே அப்படியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நேரில் பார்த்த ஒரு சில மார்பகப் புற்று நோயாளிகளின் இறுதிக்கட்ட அனுபவங்களில் இருந்துதான் இந்தக் கதையே உருவானது!

      நீக்கு
  4. இந்தப் பதிவை ஃபேஸ்புக்கில் பார்த்து எப்படி எனக்குத் தெரியாமல் ப்பொனது என்று நினைத்து உங்கள் செல்லபொபா டயரிக்கு ஃபாலோவர் ஆகி விட்டேன் இனி தவற வாய்ப்பில்லை

    பதிலளிநீக்கு
  5. அப்பப்பா... படிக்கும்போது நெஞ்சு பதறியது... என்ன நடக்குமோ...

    பதிலளிநீக்கு
  6. மூன்று பதிவுகளையும்
    இன்றுதான் சேர்த்துப் படித்தேன்
    வெகு வெகு அற்புதம்

    மூன்று பதிவுகளில் ஒவ்வொன்றும்வெவ்வேறு
    உணர்வுகளை பிரதிபலித்த விதமும்
    அதைப் படிப்பவர்களும்
    உணரும்படியாகச் சொல்லிச் சென்ற விதமும்
    மனம் கவர்ந்தது

    வாழ்த்துக்களுடன்

    (நான் மார்ச் 15 இல் நியூஜெர்ஸி ( ராவே )வருவதாக
    உத்தேசம் உள்ளது, இயலுமாயின் சந்திப்போம் )

    பதிலளிநீக்கு
  7. //சேவையினாலும், சுறுப்பான நடவடிக்கைகளாலும்//

    ஒரு "சுறு" கம்மியாய் இருக்கு.

    விட்டுப்போயிருந்த கதையைத் தொடர்ந்து படிக்க வந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு