புதன், பிப்ரவரி 15, 2017

14 நாவல்கள் எழுதிய முடிதிருத்தும் கலைஞர்

பதிவு எண் 11/2017

14 நாவல்கள் எழுதிய முடிதிருத்தும் கலைஞர்
 -இராய செல்லப்பா

சென்னையில் இருந்தபோது  முப்பது நாட்களுக்கு ஒருமுறை நூற்று இருபத்தெட்டு ரூபாய் செலவழிக்கவேண்டிய காரியம் ஒன்றை நான் செய்யவேண்டிவரும். ஒரு சில நாட்கள் தாமதமானாலும் என்னவோ போலிருக்கும். எல்லாரும் நம்மையே ஒருமாதிரியாகப் பார்ப்பதாகத் தோன்றும்.

ஆனால் அந்தக் காரியத்தை விரும்பியபோது செய்துவிட முடிகிறதா? செவ்வாய்க்கிழமையா, கூடாது: சனிக்கிழமையா கூடாது , மாலை நேரமா, கூடாதுஎன்று எத்தனை நெருக்கடிகள்! எல்லாவற்றையும் மீறிக்கொண்டு கிளம்பினால் நமக்குப் பழக்கப்பட்ட கலைஞர் அங்கே இருக்கமாட்டார். வடகிழக்கு மாநிலத்திலிருந்து குள்ளமான வெள்ளைவெளேர் இளைஞர் ஒருவர் நம்மை வணக்கத்தோடுஆயியேஎன்பார். பெரும்பாலும் நம்மிடம்தான் அவர் தொழில் கற்றுக்கொள்ளபோகிறார் என்று அப்போதே தெரிந்துவிடும். (கிரீன்  டிரெண்ட்ஸ்என்ற சிகையலங்காரக் கூடத்தில் அடிக்கடி ஆள் மாறிக்கொண்டே இருப்பார்கள்). வந்ததுதான் வந்தோம், இந்த இளைஞனே செய்யட்டுமே என்று துணிவோடு முடிவெடுத்துத் தலை கொடுத்தால் அடுத்த சில நாட்களுக்குக் கண்ணாடியில் நம் உருவம் வேறுமாதிரியாகத் தெரிவதாகப் பிரமை ஏற்படும்.
ஒரு எழுத்தாளர் முடி இன்னொரு எழுத்தாளர் கையில்

மேற்கு மாம்பலத்தில் இருந்தவரை வேறு மாதிரி சிக்கல். வீட்டருகே மூன்று முடிதிருத்தும் நிலையங்கள் இருக்கும். காலையில் ஆறுமணிக்குச் சரியாகக் கிளம்பி,  கூட்டம் குறைவான கடைக்குள் நுழையவேண்டும். பத்து நிமிடம் தாமதமானாலும் மேற்கொண்டு கூட்டம் வந்துவிடும். அலுவலகம் செல்பவர்கள் அதிகம் உள்ள இடமாயிற்றே! எப்படியும் ஒருமணி நேரமாவது முடிதிருத்தும் அழகியலுக்குச்  செலவிட்டாக வேண்டும். சில சமயம் நம்மைவாங்க சார்என்று  பலமாக வரவேற்று தொழில்-நாற்காலியில் உட்கார்த்தி, சற்றே வாடையடிக்கும் ஒரு கறுப்புத் துணியை மேலே போர்த்தி, அது நகர்ந்துவிடாமல் இருக்க ஒரு வெள்ளைப் பட்டையைக் கழுத்தில் சுற்றி அழுத்திவிட்டு,  ‘ரெண்டே நிமிஷம் சார்! ஒரு டீ குடித்துவிட்டு வந்துவிடுகிறேன்என்று கலைஞர் போவதுண்டு. அரைமணி நேரத்திற்குப் பிறகே வருவார். அதுவரையில் கடைக்கு வரும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு அவர் எங்கே போயிருக்கிறார் என்று பதில்சொல்லும் பொறுப்பு நம்மைச் சேர்ந்ததாகிவிடும்.

ஒவ்வொருமாதமும் ஒவ்வொரு கடையாக மாறிவிடுவதால், தலைமுடியின் தனித்தன்மையை இழந்துவிட்டதுபோல் மனத்திற்குள் உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும். அதை ஆமோதிப்பதுபோல் வீட்டிற்குத் திரும்பியவுடன், ‘இந்த லட்சணத்திற்குத் தான் அவனுக்கு நூறு ரூபாய் அழுதீர்களா? இதை நானே இலவசமாகச் செய்திருப்பேனே!’ என்ற பாவனையில் இல்லத்தரசியார் பார்வையால் கொதிப்பார். விடுங்கள், இதெல்லாம் நீங்கள் அனுபவிக்காததா?

நியூஜெர்சி வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. கடும் பனிப்பொழிவு அவ்வப்பொழுது ஏற்படுகிறது. மற்றபடி பூஜ்ஜியம் முதல் ஐந்து டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவுகிறது.   இன்று போகலாம், நாளை போகலாம் என்று தள்ளிப்போட்டதில் இரண்டு காதுகளும் மறையும்  அளவுக்கு வளர்ந்துவிட்டது. வேறு வழியில்லை, இன்று மாலைக்குள் நடத்திவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.

இரண்டுவருடங்கள் முன்பு நியூஜெர்சியில் சீனப்பெண்கள் நடத்தும் அழகு நிலையத்தில் முடிதிருத்திக்கொண்டது நினைவுக்கு  வந்தது. சுமார் நாற்பது நாற்காலிகள் இருக்கும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த பேதமும் கிடையாது. எங்கு வேண்டுமானாலும் அமரலாம். சில ஆண்கள்  சரியான நேரம் வரை பொறுத்திருந்து, இரண்டு பக்கமும்  பெண்கள் அமர்ந்தபிறகு நடுவிலிருக்கும் நாற்காலியை  ஓடிச்சென்று கைப்பற்றுவதுண்டு. முடிதிருத்தும் கலைஞர்கள் அனைவரும் பெண்களே. அவர்கள் பேசும் சீன-ஆங்கிலம்  வாடிக்கையாளர்களுக்குப் புரியாது. இவர்கள் பேசுவது  அவர்களுக்குப் புரியாது. என்றாலும் வாடிக்கையாளர்களை மரியாதையோடு நடத்துவார்கள். ‘ஷார்ட்டா, லாங்கா?’ என்று கேட்பார்கள். ஏதோ ஒன்று செய்வார்கள். முடிந்துவிட்டது என்பார்கள். தலைக்கு முன்னும் பின்னும் கண்ணாடி காட்டுவார்கள். டிப்ஸ் மூன்று டாலர் கொடுக்கவேண்டும். வெளியில் பில் போடுபவரிடம் பன்னிரண்டு டாலர் கொடுக்கவேண்டும். எல்லாம் பதினைந்து நிமிடத்திற்குள் முடிந்துவிடும். அந்த இடத்திற்கே போகலாம் என்று முடிவுசெய்தேன்.
விட்டோ வின் முன்னால் இருப்பது அவரது கதை-நோட்டு
அப்போதுதான் அன்றைய உள்ளூர் செய்தித்தாளில் ஒரு குறிப்பிட்ட முடிதிருத்தும் கலைஞரைப் பற்றி வந்திருந்த செய்தியைக் கவனித்தேன். அவர் பெயர் விட்டோ (VITO) க்வாட்ட்ரோச்சி  (QUATTROCCHI). நியூஜெர்சியில் கார்ல்ஸ்டட்  (KARLSTADT) என்ற பகுதியில் முடிதிருத்தும் நிலையம் நடத்திவருகிறார். இத்தாலிக்காரர். மிக முக்கியமான விஷயம், அவர் இதுவரை பதினான்கு நாவல்கள் எழுதியிருக்கிறார் என்பதே!

இதுவரை எழுத்தாளர்களுடன்  உணவருந்தியிருக்கிறேன்ஒரு குறும்படத்தில் நடித்திருக்கிறேன். சுற்றுப்பயணம் போயிருக்கிறேன். ஆனால் ஒரு எழுத்தாளரிடம் முடிதிருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியதில்லை. இன்று அமெரிக்காவில் கிட்டப்போகிறது. அழைத்துப்போக ஒப்புக்கொண்டார் மருமகன்.  

*****
க்வாட்ரோச்சியின் பெற்றோர், இத்தாலியின் சிசிலி நகரில் இருந்து நியூயார்க்கில் குடியேறிய சில வருடங்களில் விட்டோ பிறந்தாராம். ஏழு வயதில் சிசிலிக்கே சென்று விட்டாராம். ஆனால் அங்கிருந்த சூழ்நிலை பிடிக்காமல் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பிவிட்டாராம். அப்போதெல்லாம் நியூயார்க்கில் வந்து நுழையும் வசதியற்ற இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் ஒரே இடம், முடிதிருத்தும் நிலையங்கள் தானாம். பெரும்பாலும் இத்தாலி, ஸ்பெயின், மெக்சிக்கோ நாட்டவர்களால் நடத்தப்படுபவை.. அப்படியாகத்தான் இவர் முடிதிருத்தும் தொழிலில் இறங்கினாராம். அதுவே பிடித்துப்போய்விட்டதால், முதலில் ரூதர்போர்டு என்ற இடத்தில் வாடகைக்கு நாற்காலி பிடித்துத் தொழில் செய்தாராம். பிறகு சொந்தமாகக் கடை துவங்கினாராம். மணமாகி,மூன்று குழந்தைகள். (‘எல்லாரும் பெரியவர்களாகி விட்டார்கள்-  பறந்துவிட்டார்கள்’).  விட்டோவிற்கு வயது சுமார் அறுபத்தைந்து இருக்கும். ஐம்பது வருடங்களாக அமெரிக்க வாசம். கடந்த பதினைந்து வருடங்களாக கார்ல்ச்ஸ்டட்டில் கடை வைத்திருக்கிறார்.

அழகியல் அமைப்போடு அமைந்த கடை. நான்கு நாற்காலிகள் இருந்தன என்றாலும் தொழில்செய்பவர் விட்டோ ஒருவரே. வாடிக்கையாளர்களிடம் பக்குவமாகப் பழகுபவர் என்பதாலும், பல வருடங்களாக அதே இடத்தில் இருப்பவர் என்பதாலும், தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் வேறு எவரிடமும் போவதில்லை. ஆனால் அதிக வருமானம் வருவதாகச் சொல்வதற்கில்லை. ஆண்டுக்கு ஐம்பதாயிரம் டாலர் வரும் என்றார். நடுத்தர மக்களின் வருவாயை விடச் சற்றே குறைவுதான். ‘ஆனால் எனக்குச் செலவு குறைவுதான்! கடை உரிமையாளரும்  வாடகையை ஏற்றுவதில்லை. ஒருவாறு சமாளிக்கிறேன் என்றார்.

நியூஜெர்சியில் முடிதிருத்தும் தொழிலில் கடை திறக்க வேண்டுமானால், அதற்குரிய
படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். தொழிலில் 1200 மணி நேர அனுபவம் இருக்கவேண்டும். அப்போதுதான் உரிமம் கிடைக்குமாம். ‘இப்போதெல்லாம் பெண்கள்தான் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள். அழகுக்கலை நிபுணர்கள் என்ற பெயரில் கடையைத் திறப்பவர்கள், அதன் ஒருபகுதியாக முடிதிருத்துவதையும் வைத்துக்கொள்கிறார்கள். எனவே என்னைப் போன்றவர்கள் தொழில் நடத்தி வெற்றிகாண்பது இனிமேல் முடியாத காரியமேஎன்கிறார் விட்டோ.

என் தலையைப் பார்த்தவர் , ‘குறைவாகவா? சுமாராகவா?’ என்றார். ‘சுமாராகவே இருக்கட்டும். அடுத்த மாதமும் உங்களைப் பார்க்க வர விரும்புகிறேன்என்றேன்தொழிலைத் தொடங்கினார். பத்து நிமிடத்தில் கச்சிதமாக வேலை முடிந்தது. தொழில் செய்துகொண்டே பேசினோம்.

******
நான்: இன்றைய செய்தித்தாளில் உங்களைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

விட்டோ: (சற்றே வெட்கத்துடன்): ஆமாம், நண்பர்கள் சொன்னார்கள். நான் பத்திரிக்கை வாங்குவதில்லை. இணையத்தில் படிப்பேன்.
முதல் நாவல் அவர் கையில்; பதினான்காவது நாவல் என் கையில்!
உங்களுடைய பதினான்காவது நாவல் என்று போட்டிருந்தார்கள்! ஆச்சரியமாக இருந்தது. நானும் ஒரு எழுத்தாளன் தான். இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன். சென்னை என்ற ஊர்.

விட்டோ: தென் இந்தியாவா? என்னுடைய சர்ச்சில் சில இந்தியர்கள் வருகிறார்கள். அவர்கள் மலையாளம் பேசுகிறார்கள்.

தென் இந்தியாவில் நான்கு பெரிய மொழிகள் உண்டு. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் . தமிழ் பேசுகிறவர்கள்  ஏழு கோடி மக்கள். அதாவது எழுபது மில்லியன் மக்கள். ஒன்பது நாடுகளில் இருக்கிறார்கள்...

விட்டோ: தெரியுமே! கனடாவில் இருக்கிறார்கள். ஸ்ரீலங்காவில் இருந்து நியூயார்க்கில் தொழில் செய்கிறார்கள்.

எழுத்துத் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்? முடிதிருத்துதல், எழுதுதல் என்று இரட்டைக் கலைஞராக எப்படி இயங்க முடிகிறது?

விட்டோ: சிறு வயதில் இருந்தே எனக்குப் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டு. என்னுடைய சிசிலி நகருக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த பெரும்பாலான இளைஞர்கள் ரவுடித்தனம், போதை மருந்து விற்பனை, திருட்டுக்கள் என்று வாழ்க்கை நடத்துவதைக் கண்டேன். கொலை என்பது சர்வசாதாரணம். ‘காட்ஃபாதர்’  படம் பார்த்திருபீர்களே!  ‘மாஃபியாஎன்ற இத்தாலி வார்த்தை இப்போது உலகம் எங்கும் பிரபலம் அல்லவா? அந்த மாஃபியா கும்பல் ஒவ்வொரு தெருவிலும் இருக்கும். ஒரு கும்பலுக்கும் இன்னொரு கும்பலுக்கும் ஆகாது. மோதல் ஏற்பட்டுவிட்டால், அது யாருடைய மரணத்திலாவதுதான் முடியவேண்டும். பத்து பன்னிரண்டு வயதிலேயே ஒருவன் ஏதேனும் ஒரு மாஃபியாவில் உறுப்பினராகி விடுவான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அது என்னை மிகவும் பாதித்த விஷயம்அமெரிக்காவில் வரும் திரைப்படங்களில் பாதிக்குமேல் இந்த மாஃபியா படங்களாகவே இருக்கும். என்னுடைய அனுபவத்தையும் கற்பனையையும் கலந்து நாவலாக எழுதவேண்டும், அதை யாராவது படமாக எடுக்கவேண்டும்  என்ற பேராசை -அடங்காத ஆசை இருந்துகொண்டே இருந்தது...

முதல் புத்தகத்தை எழுதத்தூண்டிய பொறி எதுவாக இருந்தது?

விட்டோஜார்ஜ் பெரினி (GEORGE PERENI) என்பவர் எனது இளம்வயது நண்பர். வாடிக்கையாளர். அப்போது ஃபார்லே டிக்கின்ஸன் (FARLEIGH DICKINSON) பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தார். பல்கலை வெளியீடான LUNCH என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். நான் அப்போதுதான் வியட்நாமில் இருந்து திரும்பிவந்திருந்தேன்...

பொறுங்கள், நீங்கள் வியட்நாம் யுத்தத்தில் கலந்துகொண்டீர்களா?

விட்டோ: ஆமாம். வெளிநாட்டுக்காரர்கள் யார் வந்தாலும் உடனே வியட்நாம் போகிறாயா என்பார்கள். சரி என்றால் உடனே ராணுவத்தில் சேர உத்தரவு கொடுத்துவிடுவார்கள். குடியுரிமை கொடுப்பார்கள். போர் முடிந்து நான் அமெரிக்கா திரும்பியபோதுதான் இந்த இலக்கிய நட்பு ஏற்பட்டது. LUNCH பத்திரிகையின் ஆசிரியரைப் பார்க்கவேண்டும் என்று ஃபார்லே டிக்கின்ஸன் போனேன். எனது எழுத்தார்வம் அப்படித்தான் வளர்ந்தது. அன்றுமுதல் ஜார்ஜ் பெரினியும் நானும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அவர் ஒரு கவிஞர். ஆனால் 2007-இல் தான் எனது முதல் புத்தகம் வெளியாகியது. ‘SINS OF THE FATHERS’ என்ற அந்த நாவல், சிசிலி நகரத்து மாஃபியா கும்பல்கள் தோன்றியதற்கான  மூலகாரணம், அவர்களின் தந்தையர்களின் ஒழுங்கற்ற வாழ்வே என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஓரளவுக்கு அது எனது வாழ்க்கையின் உண்மைச் சம்பவங்களால் நிறைந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

எந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?

விட்டோ: எல்லா நேரமும் எனக்கு வாடிக்கையாளர்கள் வருவதில்லையே! அப்போதெல்லாம் இந்த நோட்டுப் புத்தகத்தில் பென்சிலால் எழுதிக்கொண்டே போவேன். ஆரம்பிப்பதுதான்  தெரியும், எப்போது முடிப்பேன் என்று தெரியாது. (நோட்டுப் புத்தகத்தைக் காண்பிக்கிறார். மணிமணியாக, அடித்தல் திருத்தல் இல்லாத எழுத்து). இப்படித்தான் இந்த பதினான்காவது நாவலை எழுதிமுடிக்க இரண்டு ஆண்டுகள் ஆயின! THE RISE AND FALL OF THE SEWER KING என்பது தலைப்பு. என்னுடைய எல்லா நாவல்களுமே சிசிலி நகரத்தையும் அங்குள்ள மாஃபியா சூழ்நிலையையும் பற்றியதாகவே இருக்கும்.

ஒரே மாதிரி கதைக்களத்தை எடுத்துக்கொண்டால் வாசகர்களுக்கு போரடிக்காதா?

விட்டோ: அப்படி அவசியமில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மாஃபியா. மேலும், இரண்டு வருடத்துக்கு ஒருமுறைதான் என் புத்தகம் வரும். வாசகர்களும் மாறிவிட்டிருப்பார்கள் அல்லவா?

உங்களுக்கு எந்த மாதிரியான வாசகர்கள் இருக்கிறார்கள்? உதாரணமாக, அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். ஐரோப்பிய, மெக்சிக்க, ஆசிய, ஆப்ரிக்கக்  குடியேறிகள் இருக்கிறார்கள். எந்த வகையறாவிடம் உங்கள் புத்தகங்கள் போய்ச் சேருகின்றன?

விட்டோ: (திகைப்புடன்): அப்படியெல்லாம் நான் சிந்தித்ததே கிடையாது! உண்மையைச் சொல்லப்போனால், அந்த விஷயமே எனக்குத் தெரியாது! என்னுடைய பதிப்பாளரைத்தான் கேட்கவேண்டும்.
***** 
அவரது பதிப்பாளர், www.LULU.com என்ற ஆன்லைன் பதிப்பாளர். அதாவது  on-demand self- publishing house. அதாவது, விட்டோ, ஒரு நாவலை எழுதியவுடன் லுல்லு விற்கு அனுப்பிவிடுவார். அவர்களே படித்து, பிழை திருத்தம் செய்து, அட்டைப்படமும் தயாரித்து, தங்களின்  இணையதளத்தில் வெளியிட்டுவிடுவார்கள். மின்னூலாக வாங்கலாம். அல்லது கிண்டில் போன்ற கருவிகளில் மாத வாடகைக்குப் படிக்கலாம். அல்லது, அச்சிட்ட பிரதிதான் தேவை என்றால், இணையத்தில் பணம் செலுத்தியவுடன், மூன்றாது நாள் புத்தகம் உங்கள் வீடுவந்து சேரும்! இம்மாதிரி self- publishing house நிறுவனங்கள் அமெரிக்காவில் நிறைய உண்டு. ஆனால் நீங்கள் முன்பணம் செலுத்தவேண்டும். உங்கள் புத்தகப் பிரதியைப் படிக்க ஒரு கட்டணம், பிழை திருத்த ஒரு கட்டணம், பக்க வடிவமைப்புக்கு ஒரு கட்டணம், அட்டைப் படத்திற்கு ஒரு கட்டணம், முதலாவது மாதிரிப் பிரதி தயாரித்துக் கொடுக்க ஒரு கட்டணம் என்று, முன்னூறு பக்கமுள்ள நூலின் முதல் மாதிரிபிரதியைப் பெறுவதற்கு நீங்கள் சுமார் இராண்டாயிரம் டாலர்கள் செலுத்தவேண்டி வரும். செலுத்தினால் ஆறு அச்சுப்பிரதிகள் உங்களுக்கு அன்பளிப்பாகத் தருவார்கள். அமேசான் முதலிய பல்வேறு தளங்களில் விற்பனையாகுமாறு வசதிசெய்து தருவார்கள். சுமார் நானூறு புத்தகக் கடைகளுக்கு அறிமுகம்செய்து வைப்பார்கள். உங்கள் புத்தகத்தைப் பற்றி நீங்களே பேசுவதுபோல் ஒரு விடியோ தயாரித்து அதையும் புத்தக விற்பனைத் தளத்தில் இணைப்பார்கள்...அது சரி, எழுத்தாளனுக்கு வருமானம் கிடைக்குமா என்றால், கிடைக்கும். விற்பனையாகும் மின்னூல்களின் விலையில்  ஐம்பது சதமும், அச்சுப் பிரதிகளின் விலையில் அறுபது சதமும்   ராயல்ட்டியாகக் கிடைக்கும். காப்புரிமை, எழுத்தாளருடையதே.

ஆனால், விட்டோவுக்கு இவ்வளவு செலவு செய்து தன் புத்தகத்தை வெளியிடும் வசதி இல்லையே! எனவே தான் லுல்லுவைத் தேர்ந்தெடுத்தார். கையெழுத்துப் பிரதியை அவர்களுக்கு அனுப்புவதோடு வேலை தீர்ந்தது. ஆரம்பத்தில் பல திருத்தங்கள் செய்துதரச் சொல்லி திருப்பி அனுப்புவார்களாம். மூன்றாவது புத்தகத்தில் இருந்து அம்மாதிரி திருத்தங்கள் வராதபடி எழுதுவது இவருக்குப் பழகிவிட்டதாம். ஆனால் ஒரு பிரதியை அனுப்பினால் எப்போது வெளியிடுவார்கள் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். தன்னால் அழுத்தம் கொடுக்க முடிவதில்லை என்றார் விட்டோ.

பதினான்கு புத்தகம் எழுதியிருக்கிறீர்களே, எவ்வளவு பிரதிகள் விற்றிருக்கும்? வருமானம் வருகிறதா?

விட்டோ: எவ்வளவு விற்கிறது என்று தெரியாது. வருடத்துக்கு ஒருமுறை கணக்கு அனுப்புவார்கள். இரண்டாயிரம், மூன்றாயிரம் டாலர்கள் வரும். பிரபலமான பதிப்பாளராக இருந்தால் நிறைய விற்கும். நிறைய வருமானம் கிடைக்கும். எனக்கு அவ்வளவு பிரபலம் இன்னும் வரவில்லையே! மேலும் நான் இணையத்தின் மூலமாகத்தானே விற்கிறேன்!

*****
சுயமாக எழுத்துத்தொழிலை மட்டுமே மேற்கொண்டு வாழக்கை நடத்துவது உலகில் எங்குமே முடியாத காரியமாகத்தான் இருக்கிறது. தமிழில் ஐந்நூறு புத்தகம் எழுதியவர்கள்  குறைந்தது பத்து எழுத்தாளர்களாவது  இருக்கிறார்கள். ஆனால் ஒருவரும் சொல்லிக்கொள்ளும்படியான வசதியில் இல்லை. ஆங்கிலத்திலும் இதேபோல் தான். மிகவும் பிரபலமான இருபது எழுத்தாளர்களை விட்டால் மற்றவர்கள், சோற்றுக்காக இன்னொரு தொழிலைத்தான் செய்யவேண்டியிருக்கிறது. சினிமா, அரசியல் போன்ற  பளபளப்புகள்  இல்லாதவர்கள் எழுதிச் சம்பாதிப்பது அரிதாகவே உள்ளது. எனவே விட்டோ க்வாட்ரோச்சி, இன்னும் முடிதிருத்தும் தொழிலை விடாமல் இருப்பதில் ஆச்சரியமென்ன?

எழுத்தாளர் என்ற முறையில் உங்களுக்கு  ஏதேனும் மனவருத்தம் உண்டா?” என்று கேட்டேன்.

அதற்குள் அவரது வழக்கமான வாடிக்கையாளர் ஒருவர் நுழைந்தார். “Hi, how do you do?”  என்று என்னைப் பார்த்தார். அமெரிக்காவில் ஒருவர் மற்றவரை முதலில் பார்க்கும்போது கேட்கும் சம்பிரதாயமான வார்த்தைகள்.  “I’m good. How are you?” என்றேன். விட்டோவின் பதினான்காவது நாவலைப் பற்றி பத்திரிகையில் வந்த செய்தியைக் கேள்விப்பட்டு வந்திருக்கிறேன்; இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன்என்றேன்.

ஆமாம், இவர் நிறைய எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால்  ஒரு  நாவலையும் படிக்கக் கொடுக்க மாட்டேன் என்கிறார்என்று சொன்னவர், “நாளை வருகிறேன்விட்டோஎன்று நகர்ந்தார்.

பாருங்கள் சார்! இப்படித்தான் சிலபேர் இருக்கிறார்கள். காசுகொடுத்துப் புத்தகம் வாங்குவதே இல்லை. சிலபேர் இங்கேயே பலமணி நேரம் உட்கார்ந்து முழுப் புத்தகத்தையும் படித்துவிடுவார்கள். முடிவெட்டிக் கொள்வது கூட கிடையாதுஎன்று சிரித்தார் விட்டோ. அந்தச் சிரிப்பில் இருந்த ஆழ்ந்த கவலை  தமிழ் எழுத்தாளர்களுக்குப் புரியாததா? ஐந்நூறு பிரதிகள் அச்சிட்டுவிட்டு அதில் முன்னூறு பிரதியை நண்பர்களுக்கு இலவசாகக் கொடுக்கும் வர்க்கம் அல்லவா நம்முடையது? இந்த வர்க்கம் அமெரிக்காவிலும் இருக்கிறது என்பது நமக்குப் பெருமை தானே?

****
விட்டோவின் கடைக்கு நாங்கள் போனபோது பகல் மணி பன்னிரண்டு. இப்போது மணி  ஒன்றே முக்கால். பேரனைப் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துக்கொண்டு வரவேண்டிய நேரம் ஆகிவிட்டது. மருமகன் எழுந்தார்.

திடீரென்று  மாஃபியா, க்வாட்ரோச்சி என்ற வார்த்தைகள் எதையோ நினைவூட்டுவதுபோல் தோன்றியது. கேட்கலாமோ கூடாதோ என்ற தயக்கத்துடனேயே கேட்டேன்: “நண்பர் விட்டோ, இந்த க்வாட்ரோச்சி என்ற பெயரில் எங்கள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியோடு சமபந்தப்பட்ட ஒரு இத்தாலியர் இருந்தாரே, ராணுவத் தளவாடங்களுக்கு கமிஷன் ஏஜண்ட்டாக இருந்தார் ... உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.

தெரியாமல் என்ன நண்பரே! அவர் என்னுடைய தூரத்து உறவினர்தான். இறந்துவிட்டார். ‘க்வாட்ரோச்சிகுடும்பம், இத்தாலியின் மிகக் கொடூரமான மாஃபியா கும்பல் என்பது உலகிற்கே தெரியுமே! மற்றபடி, எனக்கு ராஜீவ் காந்தி பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாதுஎன்றார்.

அவருடைய பதினான்காவது நாவலின் ஒரு பிரதி அவரிடம் இருந்தது. அதைக் கேட்டு வாங்கினேன். இருபது டாலர் என்றார். கையொப்பமிட்டுக் கொடுக்கச் சொன்னபோது அவருக்கு உடல் புல்லரித்தது. அவர் ஆட்டோகிராப் செய்ததே இல்லையாம்! யாரும் கேட்டிருக்கவில்லை போலும். ‘பை’ சொல்லிவிட்டு வெளியேறும்போது அவசரமாக என்னிடம் வந்தார். “என்னுடைய சில நாவல்களை ஒரு நண்பர் ஹாலிவுட் தயாரிப்பாளரிடம் கொடுத்திருக்கிறார். சினிமா இல்லையென்றாலும் டிவி சீரியல்-ஆவது வருமா என்று பார்க்கலாம்” என்றார். வாழ்த்தினேன்.

*****
வீட்டிற்குத் திரும்பினேன். கதவைத் திறந்த துணைவியார் ஒன்றும் சொல்லாமல்  முதலில் என் தலையையும், பிறகு என்  கையில் இருந்த க்வாட்ரோச்சியின் தடிமனான நாவலையும் வியப்போடு பார்த்துப் புன்னகைத்தார்புத்திசாலித்தனமான காரியங்களை நான் செய்யும் அபூர்வ நேரங்களில் உதிரும் புன்னகை அது.

*****
email: chellappay@gmail.com

15 கருத்துகள்:

  1. ஆமாம்.. முன்பாதி எல்லாம் நாங்களும் அறிந்தது தானே..

    அப்புறம் எழுத்தாளருடன் உரையாடல் அழகு.. அருமை..

    பதிலளிநீக்கு
  2. நல்ல தொகுப்பு.

    ஒரு விசயம். தமிழ் போல் இல்லாமல் ஆங்கிலத்திற்கு பரந்த வாசக பரப்பு இருக்கிறது. நல்ல திட்டமிடலும் நெட்வோர்க் இருந்தால் நாவலாசிரியாக வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.

    பதிலளிநீக்கு
  3. போற்றுதலுக்கு உரியவர்
    வியப்பாக இருக்கிறது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. உங்களின் சந்திப்பு அவருக்கு நிச்சயமாக பல ஊக்கங்கள் தந்திருக்கும்...

    பதிலளிநீக்கு
  5. இயல்பாக சலூனுக்குள் செல்கிறீர்கள். இருவருக்கும் இடையில் இயல்பான உரையாடல். ரசித்துப் படித்தேன்.

    // ஐந்நூறு பிரதிகள் அச்சிட்டுவிட்டு அதில் முன்னூறு பிரதியை நண்பர்களுக்கு இலவசாகக் கொடுக்கும் வர்க்கம் அல்லவா நம்முடையது? இந்த வர்க்கம் அமெரிக்காவிலும் இருக்கிறது என்பது நமக்குப் பெருமை தானே?//

    உங்கள் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு சரிதான். நமது வலைப்பதிவு எழுத்தாளர்களின் புத்தக வெளீயீட்டு அனுபவங்கள் என்று எழுதச் சொன்னால் கொட்டி தீர்த்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  6. ரசனை. சுவாரஸ்யம். பாராட்டப்பட வேண்டியவர்.

    பதிலளிநீக்கு

  7. முடி திருத்துதல் எழுதுதல் இரட்டை கலைஞர்..அருமை.

    பதிலளிநீக்கு

  8. முடி திருத்துதல் எழுதுதல் இரட்டை கலைஞர்..அருமை.

    பதிலளிநீக்கு
  9. பொதுவாக முடி திருத்துபவர்கள் நம் நாட்டில் அரசியல்களில் ஈடுபாடு உடையவர்கள் நான் வெல்லிங்டனில் இருந்தபோது நாட்டு நடப்புகளை என் முடி திருத்தும் நண்பன் மூலமே அறிந்திருக்கிறேன் எழுதிப் பணம் சம்பாதிப்பது எளிதில் கை கூடாதது வெங்கட்ஜியின் பதிவுக்குஎழுதிய பின்னூட்டத்தில் உங்களுக்கு முடிவெட்டும் நேரம் நெருங்கி இருந்ததை கோடியிட்டுக் காட்டியிருந்தீர்கள்

    பதிலளிநீக்கு
  10. வித்தியாசமான கலைஞர்தான் !
    அடுத்ததா ,அவர் புத்தகத்தின்விமர்சனத்தை எதிர்பார்க்கலாமா :)

    பதிலளிநீக்கு
  11. நல்ல எழுத்தாளரைக் கண்டு நீங்கள் உரையாடிய, பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது. உங்களின் கேள்விகளுக்கு அவர் மறுமொழி கூறிய பாங்கு பாராட்டத்தக்கவகையில் இருந்தது.

    பதிலளிநீக்கு
  12. ஐயா,
    முடி திருத்துவதோடு முடிந்தவரை தம் எழுத்துக்கள்மூலம் சரித்திர சாதனை புரிந்திருக்கும் அவருக்கு என் வாழ்த்துக்கள் . என்னோடு பணிபுரிந்த ஒரு ஜமைக்காவை சார்ந்த பொறியாளர் திடீரென தமது வேலையை ராஜினாமா செய்துவிட்டார், அவரிடம் அடுத்து என்ன , எங்கே வேலை செய்யபோகின்றீர்கள் என்றதற்கு, முடி திருத்தம் செய்யும் கடை ஆரம்பித்து அதில் நானே பணிபுரிபோவதாக சொல்லியதோடு அடுத்த மாதமே ஒரு சலூன் கடையை ஆரம்பித்து நடத்திகொண்டுவருகிறார்.

    பொறியில படிப்பு இதற்கும் கைகொடுக்குமா?

    ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம், நம்ம ஊரில் செவ்வாய் கிழமைகளில் ஏன் முடி வெட்டக்கூடாது என்கிறார்கள்?


    கோ

    பதிலளிநீக்கு
  13. படைப்பாளிகளுக்கு
    கேள்வி பதில்
    சிறந்த வழிகாட்டல்

    பதிலளிநீக்கு
  14. உங்களுக்கு நல்ல ரசனை. நன்றாகவும் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    க்வாட்'ரோச்சி என்ற பெயரைப் படித்தவுடனேயே, இத்தாலி வம்சமோ என்றெல்லாம் யோசித்தேன். பத்திரிகைகள் படித்திருந்தால் அவருக்குத் தெரிந்திருக்கும். புத்தகம் எழுதுவதற்குப் பதில் அதன் கருப்பொருளாகவே ஆகியிருந்தால் எங்கேயோ போயிருப்பார் என்று. (மாஃபியா, அவரை இந்தியா தப்பிக்கவிட்டது, சோனியா குடும்பம் இத்தாலியைச் சேர்ந்தது என்பதையெல்லாம் முடிச்சுப்போட்டு நினைக்கத் தோன்றியது)

    பதிலளிநீக்கு
  15. நல்ல சுவாரஸ்யமான அனுபவம் சார்! அதை மிக அழகாக எழுதியும் உள்ளீர்கள் நீங்கள்...

    பதிலளிநீக்கு