பதிவு எண் 13/2017
மனைவி அமைவதெல்லாம்....
-இராய செல்லப்பா, நியூஜெர்சியில் இருந்து
காஸ்
தீர்ந்துவிட்டது; மின்சாரம் இல்லை. ஓட்டலில் இருந்து உணவு தருவித்துக்கொள்ளலாம்
என்றால் உடனே ஒப்புக்கொள்ளவேண்டாமா? அரைமணி நேரம் விவாதம் நடத்தவேண்டுமா?
போகட்டும், சாப்பிட்டபிறகு அந்த பிளாஸ்டிக்
டப்பாக்களைக் குப்பைக்கூடையில் போடாமல் அடுக்களையிலேயே சேகரித்துவைக்கவேண்டுமா? ஏற்கெனவே
பல வருடங்களாய் சேர்த்துவைத்ததை என்ன செய்வதாக உத்தேசம்?
சில
பாடல்கள் மனைவிகளுக்குப் பிடிக்கலாம். சில பாடல்கள் கணவர்களுக்குப் பிடிக்கலாம். ‘சரவணபவ
என்னும் திருமந்திரம்- தனை- சதா ஜெபி என் நாவே’ என்ற பாடலை அடிக்கடி பாடவேண்டும்
என்று கணவன் எதிர்பார்க்கலாம். அதே சமயம் ‘வெங்கடாசல
நிலயம் – வைகுண்ட்ட புர வாசம்’ என்று அவன் எப்போதாவது முணுமுணுக்கும்போது கண்களை
உருட்டி மிரட்டலாமா? புரந்தரதாசர் கோபித்துக்கொள்ள மாட்டாரா?
தகப்பனார்
கொடுத்த பொருட்களை ஆசையோடு பராமரிப்பது நல்லதுதான். அதற்காக அவர் கொடுத்த டயாபெட்டீசையும் விடாமல்
பிடித்துக்கொள்ள வேண்டுமா? மூன்று வேளை
உணவை ஐந்து வேளையாகச் சாப்பிடுங்கள் என்று டாக்டர் சொன்னதைக் கடைப்பிடிக்க
வேண்டாமா? காலை உணவை எட்டு மணிக்குள் சாப்பிடவேண்டாமா? அட ராமா, இதை யாரிடம்போய்ச்
சொல்வது?
சில
மனைவிகள், சன் டிவியின் அழுகை
சீரியல்களைப் பார்ப்பதில்லை. ஆனால், பிள்ளைகளும் பெண்களும் வாங்கிக்கொடுத்துவிட்டார்கள்
என்பதற்காக எப்போதும் மொபைலில் விளையாடிக் கொண்டிருக்கலாமா? மூளை விளையாட்டு
நல்லதுதான், அல்செய்மர் போன்ற மறதிவியாதிகளை கொஞ்சகாலத்திற்குத் தள்ளிவைக்கும்தான், என்றாலும், விரல்களுக்கும்
கண்களுக்கும் வேறு வேலை கொடுக்கலாமே!
சில
கணவர்கள் இதை (வெளிப்படையாக) ஒப்புக்கொள்ள மறுக்கலாம், என்றாலும், ஓட்டல்
சாப்பாட்டை விட, மனைவி கையால் சாப்பிடுவது சுகமானதே என்று ஒரு சில கணவர்கள் கருதுவதுண்டு அல்லவா? அதை
உணர்ந்து செயல்படும் மனைவிமார்கள் எத்தனை பேர்? இன்று என்ன சமைக்கவேண்டும் என்பதை
உங்கள் வீட்டில் நிர்ணயம் செய்பவர் யார்? பழனிச்சாமி முதல்வராக இருக்கலாம், ஆனால், பரப்பன
அக்ரஹாரா அல்லவா முடிவுகளை எடுக்கிறதாம்? மாதம் ஒருமுறைதான் பொங்கல்-வடை செய்வது,
திடீர் திடீரென்றுதான் அப்பளம் போட்ட
வத்தல் குழம்பு வைப்பது, எப்போதாவதுதான் சேனைக்கிழங்கு வறுவல் செய்வது - போன்ற
முடிவுகளை எடுப்பது யார்?
அவ்வப்பொழுது
கணவனை முதுகு தேய்க்கும் கருவியாகப் பயன்படுத்துகிறார்களாம் சில மனைவிகள்.
தொலையட்டும், கணவனுக்கும் முதுகு உண்டு என்பதை அவர்கள் உணர்வதுண்டா?
கூவத்தூரில்
எம் எல் ஏக்கள் அடைபட்டுக்கிடக்கும் செய்தியை அதிர்ச்சியோடு டிவி-யில்
பார்த்துக்கொண்டிருக்கும்போது ‘அவளுக்குப்
பேரன் பிறந்திருக்கிறானாம்’ என்று மனைவி சொன்னால்
‘அவள்’ என்பது யாரைக் குறிக்கும் என்று
இவனுக்குப் புரியுமா? திருதிருவென்று முழித்தால் அதற்காக அவனை வெருட்டுவது சரியா? இவளைத்தவிர
வேறொரு பெண்ணை மனத்தாலும் நினைக்கமாட்டேன் என்று மணமான முதல் நாளே சபதம்
செய்தவனாயிற்றே! அதை கடைப்பிடிப்பது தவறா?
நல்ல
பழக்கங்கள் உடைய கணவர்கள் நாட்டில் அபூர்வம் என்பார்கள் பெரியவர்கள். நானும் ஓர் அபூர்வப் பிறவி என்று உங்களுக்குத்
தெரியும்தானே! உதாரணமாக, இன்று என் மனைவிக்குப் பிறந்தநாள். (பிப்ரவரி 22). ஆனால்,
எத்தனையாவது பிறந்தநாள் என்று சொன்னேனா? பெண்களின் வயதை வெளியில் சொல்லக்கூடாது
என்ற நல்ல பழக்கம் என்னிடம் இருக்கிறதல்லவா?
ஹாப்பி
பர்த்டே டு யூ, விஜயலட்சுமி!
![]() |
நியூயார்க் மெட்ரோ மியூசியம் - 2௦௦5 |
****