புதன், பிப்ரவரி 08, 2017

நண்பர்கள் வேறு தோழர்கள் வேறு

 பதிவு எண் 09/2017
நண்பர்கள் வேறு தோழர்கள் வேறு

-இராய செல்லப்பா

காலை மணி எட்டேகால். இப்போது கிளம்பினால்தான் கல்லூரிக்கு ஒன்பது மணிக்குள் செல்லமுடியும்.  வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

வண்டி என்றால் ஏதோ டொயோட்டா, பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ என்று எண்ணிவிடாதீர்கள். அந்தக் காலத்தில் நாட்டில் இருந்ததே அம்பாசடர், பியட் இரண்டுதான். இரண்டும் என்னிடம் இல்லை.

ராயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் அப்போதெல்லாம் பிரபலம். மைசூரிலிருந்து வரும் ‘ஜாவா’வும் பிரபலம்தான். அந்த இரண்டும் கூட என்னிடம் இல்லை. ஸ்கூட்டர் ? அப்போதுதான் ஒன்றிரண்டு ஸ்கூட்டர்களை பூனாவில்    தயாரித்து வந்ததாகக்  கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் ஊரில் ஒருவரிடமும்  இல்லாத ஒன்று என்னிடம் மட்டும் எப்படி இருக்கும்?

ஆகவே, என்னுடைய ‘வண்டி’ என்பது நூற்று எண்பது ரூபாய்க்கு வாங்கி, இருபது ரூபாய் மேற்கொண்டு செலவு செய்து, ஓடக்கூடிய நிலையில் சர்வ அலங்காரங்களும் பொருந்தியதாகச் செய்யப்பட ஒரு செகண்ட் ஹேண்ட் கூட இல்லை, தேர்ட் அல்லது போர்த் ஹேண்ட் ‘ஹெர்குலிஸ்’ சைக்கிள்தான்!

இராணிப்பேட்டையில் இருந்து மேல்விஷாரம் வரையான ஏழு அல்லது எட்டு மைல் தொலைவை அது தன்னுடைய வேகத்தில் கடந்துசெல்லும்படியான சுதந்திரத்தை அதற்கு வழங்கியிருந்தேன். இல்லையெனில் அது திடீர் முடிவெடுத்து வழியிலேயே நின்றுவிடும். அநேகமாக ‘செயின்’ சிக்கிக்கொண்டுவிடும். டயர் பஞ்ச்சராகிவிடும். அல்லது தேய்ந்துபோயிருந்த ‘பிரேக்’ கட்டை தவறி விழுந்துவிட்டதால், நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும்.  சாலை ஓரப் புளியமரமாகப் பார்த்து நிறுத்தியாகவேண்டும். ஆனால் முற்பிறவியில் (அதுவோ, நானோ) செய்த புண்ணியத்தின் பயனாக  முதல் வகுப்பு ஆரம்பிக்கும் முன்னால் என்னைக் கல்லூரிக்குள் கொண்டுபோய்விடும் வல்லமை அதற்கிருந்தது.

இன்னபல சிறப்பம்சங்கள் கொண்ட என்னுடைய சைக்கிளைத் தான் ஸ்டார்ட் செய்தேன் அப்போது. அந்த நேரம் பார்த்துத்தானா “தம்பி, நில்லுங்க, நில்லுங்க” என்றபடி தோழர் ரேணு  அங்கு வரவேண்டும்?

தோழர் ரேணு, எனது அரசியல் நண்பர்.

ஈவெகி சம்பத் தனது தமிழ் தேசீயக் கட்சியை காங்கிரசோடு இணைத்திருந்த நேரம். அவரோடு கவிஞர் கண்ணதாசன் அப்போதுதான் காங்கிரசில் சேர்ந்திருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனும் அவரோடு இணைந்து செயல்பட்ட நேரம் அது. இளைஞர்களைக் கொண்டு ‘வெண்புறா மன்றம்’ என்ற அமைப்பை எல்லா ஊர்களிலும் ஆரம்பித்து காங்கிரசுக்கு ஆதரவான சமூகநலப் பணிகளைச் செய்வது கவிஞரின்  உத்தேசம். 

அதன்படி இராணிப்பேட்டையில் நானும், எல்.ஐ.சி  ஊழியரான கஜராஜ் மற்றும் ஈஐடி பாரி கம்பெனியைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து எவரெஸ்ட் தியேட்டர் எதிரில் இருந்த ஒரு மாடி அறையில் வெண்புறா மன்றத்தின்  இராணிப்பேட்டை கிளையைத் தொடங்கினோம். சென்னை சென்று கவிஞரைச் சந்தித்து, பொதுக்கூட்டம் நடத்துவதற்குத் தேதி வாங்கிவந்தோம். அக்கூட்டத்திற்கான அனைத்து கட்டமைப்பு வேலைகளையும் முன்னின்று நடத்தியவர் தோழர் ரேணுதான்.

அவருக்கு வயது முப்பதிலிருந்து முப்பந்தைந்து இருக்கலாம். சற்றே உயரமானவர். அல்லது மெலிந்திருந்த அவரது உடல்வாகு அவரை அப்படிக் காட்டியிருக்கலாம். இராணிப்பேட்டையில் பெரும்பாலான வறுமைக்கோட்டுக்குக் கீழிருந்த மக்கள் செய்துவந்த தொழிலையே அவரும் செய்துவந்தார். அதாவது, பீடி சுருட்டுவது. மகாராஜா பீடி பாக்டரியிலிருந்து ஒவ்வொரு மாலையும் பீடி இலைகளும் ஒட்டுவதற்கான லேபிள்களும் வாங்கிவருவார். மறுநாள் அழகாகச் சுருட்டப்பட்ட பீடிகளாக, ‘மகாராஜா பீடி’ என்ற லேபில்கள் ஒட்டப்பட்டு, முப்பத்திரண்டு பீடிகள் கொண்ட கட்டுக்களாக அவை பாக்டரிக்குத் திரும்பியாகவேண்டும். உடனே கூலி கொடுத்து விடுவார்கள். வீட்டில் இருந்த எல்லாரும் சேர்ந்துசெய்யும் சுயதொழில் அது.
மன்றம் விஷயமாகத் தோழர் ரேணு வைச் சந்திக்க அவரது குடியிருப்பிற்கு ஓரிருமுறைகள் போயிருக்கிறேன். தரையெல்லாம் பீடி இலைகள் உதிர்ந்திருக்க, ஒரு முறத்தில் சுருட்டி முடிக்கப்பட்ட பீடிகள் இறைந்திருக்க, ஒட்டும் பசையானது  விரல்களில் பாதி உலர்ந்தும் உலராமலும் வழிந்துகொண்டிருக்க,  சற்றே அவிழும்  நிலையில்  இருந்த  லுங்கியை இறுகப் பற்றிக்கொண்டு, வாயெல்லாம் பல்லாக, “வாங்க தம்பி வாங்க” என்று அவசரமாக எழுந்துவரும் தோழர் ரேணுவை அப்போதெல்லாம் சந்தித்திருக்கிறேன்.

காங்கிரஸ் கூட்டங்களில் தவறாது முன்னிற்பார். மற்றபடி, அரசியல் அல்லாத பொதுக்காரியங்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் உடன்வந்து நிதி திரட்டித் தருவார்.  கையில் அவரே உண்டியலை ஏந்திக் கொள்வார். “கூச்சப்படாம வாங்க” என்று தைரியம் கொடுப்பார். நிதி என்றால் நூறு, ஆயிரம் என்று எண்ணவேண்டாம்.  அதிக பட்சமாக ஒரு ரூபாய் நோட்டுக்கள் சில  மட்டுமே அந்த உண்டியலில் விழும். மற்றதெல்லாம் நாலணா எட்டணா நாணயங்கள் தாம். (அன்று ரூபாய்க்கு நான்கு கிலோ அரிசி கிடைக்குமே!)

அப்படிப்பட்ட தோழர் ரேணு  என்னைத் தேடிக்கொண்டு வந்தது ஆச்சரியமாக இருந்தது. அதேசமயம் அவரை உட்காரவைத்துப் பேசும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லையே என்று ஆதங்கமாகவும் இருந்தது.

ஸ்டார்ட் செய்த வண்டியை நிறுத்தி, “வாங்க தோழரே, என்ன விஷயம்? “ என்றேன். “கல்லூரிக்கு நேரமாகிவிட்டது..” என்று இழுத்தேன்.

அவருக்கு முகம் சுண்டினாற்போல் தோன்றியது. “சரிங்க, அப்படின்னா சாயந்திரம் மன்றத்துக்கு வரும்போது பேசலாம்” என்றார்.

யாரிடமும் தனிப்பட்ட உதவி கேட்டு அவர் போவதில்லை என்று நண்பர்கள் கூறியதுண்டு. ஆனால் இன்றைக்கு  ஏதோ உதவி கேட்டுத்தான் வந்திருப்பதாக என் உள்ளுணர்வு சொல்லியது.

அவருக்கு நெருக்கமாகச் சென்றேன். “பரவாயில்லை சொல்லுங்கள்” என்றேன்.

சொல்லலாமா கூடாதா என்று தயக்கத்துடன் கொஞ்சநேரம் அவர் போராடியிருக்கவேண்டும். பிறகு சொன்னார்: “ராஜசேகர் சாரைப் பார்த்தேன். அவர்தான் உங்களைப் பார்க்கச் சொன்னார்..” என்று அடங்கிய குரலில் கூறினார். “நேற்று பாக்டரியில் ஒரு விபத்தாம். அதனால் இன்றும் நாளையும் பீடி இலைகள் சப்ளை இல்லை. இரண்டுநாள்  தொழில் இல்லை. ஒரு இருபது ரூபாய் கொடுத்தால் நல்லது.  போய்த்தான் அரிசி வாங்கவேண்டும்” என்றார்.
படத்திற்கும் பதிவிற்கும் சம்பந்தமில்லை!
சென்னை வலையுலக  நண்பர்கள் (2௦13)
ஓ, ராஜசேகர் சொன்னாரா? ஒருவாரம் முன்புதான் எனக்கு லோன் ஸ்காலர்ஷிப் வந்ததும், அந்தப் பணத்தில் உடனடியாக நூறு ரூபாய் என்னிடம் அவர் கடனாகப் பெற்றதும், என் தகப்பனாரிடம் அதைச் சொல்லமுடியாமல் சொல்லி நான் திட்டு வாங்கியதும் நினைவுக்கு வந்தது. இப்போது மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்ய ஆரம்பித்திருக்கிறாரோ?

ஆனாலும், தோழர் ரேணு மிகவும் நல்லவர். அவருக்கு எப்படியாவது உதவி செய்யத்தான் வேண்டும் என்று தோன்றியது. அரிசி வாங்கவும் காசில்லாமல் குடும்பத்தலைவர் படும் சங்கடத்தை என் தகப்பனார் பலமுறை அனுபவித்திருக்கிறார். சுயமரியாதைக்கு சவால் விடும் சங்கடம் அது. உடுக்கை இழந்தவன் கை போல யாராவது உதவமாட்டார்களா என்று ஏங்கிநிற்கும் தருணம் அது.

நல்லவேளையாக, வீட்டுச் செலவுகள் போக, ஸ்காலர்ஷிப் பணத்தில் மீதியான தொகை   இருபத்திரண்டு ரூபாய் என்னிடம் அப்போது இருந்தது. அதில் இரண்டு ரூபாயை மட்டும் அவசரச் செலவுக்காக வைத்துக்கொண்டு, இருபதை அவரிடம் கொடுத்தேன். அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி.

“நீங்க கல்லூரி மாணவர். ஒங்க கிட்ட கடன் கேக்கறது சங்கடமா இருக்கு. ஆனா வேறே வழியில்லே. மத்தவங்க யாருமே இல்லேன்னுட்டாங்க. இன்னைக்கி ஒங்களால எங்க வீட்டுல அடுப்பெரியப் போகுது. அந்தப் புண்ணியம் ஒங்களுக்குத் தான்... இன்னும் ஒரு மாசத்துக்குள்ள திருப்பிடுவேன்.  வரட்டுமா?” என்று என் கையைப் பிடித்து அழுத்தமாகக் குலுக்கிவிட்டுக் கிளம்பினார் தோழர் ரேணு.
****
இது நடந்து இரண்டு வருடங்களாகி விட்டன. இந்த இடைவெளியில் வெண்புறா மன்றத்தின் சார்பில் நான்கு கூட்டங்கள் நடத்திவிட்டோம். கவிஞர் கண்ணதாசனே ஒருமுறை வந்தார்.  குமரி அனந்தன்  ஒருமுறை. சின்ன அண்ணாமலை ஒருமுறை. நாத்திகம் ராமசாமி ஒருமுறை. எல்லாவற்றிலும் தோழர் ரேணுவுக்குப் பங்கிருந்தது.

கூட்டம் நடக்கும் இடத்தை நகரசபை ஊழியர்களைக்கொண்டு சுத்தப்படுத்துவது முதற்கொண்டு, தென்னக்கீற்றுகளை வாங்கிவந்து மேடைக்கு மேல்கூரை அமைப்பது உட்பட, மைக் செட் கட்டுவதுவரை அவரது மேற்பார்வையில் தான். எதற்கும் காசு வாங்கமாட்டார். ஒன்றிரண்டு முறை தேநீர் கேட்பார். எப்போதாவது இரண்டு ‘பொறை’யும் சாப்பிட்டதுண்டு. காலை முதல் இரவுவரை அவரது உணவுப்பழக்கம் இவ்வளவே.

அது மட்டுமல்ல, கூட்டத்தில் பேசுவதற்கான முதன்மை பேச்சாளர் வரத் தாமதமானால், ஓடிப்போய் மைக்கைப் பிடித்துக்கொண்டு, “நமதருமை தோழர்.. பெருந்தலைவரின் தொண்டர்.....இதோ வருகிறார், வருகிறார், வந்துகொண்டே இருக்கிறார்... காவேரிப்பாக்கத்தைக் கடந்துவிட்டார்...வழியெல்லாம் மக்கள் கூட்டம்... இதோ வாலாஜாப் பேட்டையை நெருங்கிவிட்டார்..” என்று உச்சபட்சக் குரலில் மீண்டும் மீண்டும் அறிவிப்புகள் செய்வதும் அவரது அரசியல் தொண்டின் ஒரு பகுதி.

அப்போதெல்லாம் ரகசியமாக என் காதில்வந்து சொல்வார்: “தம்பி கொஞ்சம் பொறுத்துக்குங்க, அடுத்த மாசம் கொடுத்திடறேன்” என்று.   சைகையால் ‘பரவாயில்லை’ என்று சொல்லுவேன். அவ்வளவே. அவரது கஷ்டம் எனக்குத் தெரியாதா?
****

சரியாக மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. எனது பட்டப் படிப்பு முடிந்து திருவண்ணாமலை அருகில் ஒரு பள்ளியில் பயிற்சிபெறாத கணித ஆசிரியராக வேலை கிடைத்து, நான் கிளம்பிக்கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை ஏழுமணி இருக்கும். தோழர் ரேணு அவசரமாக ஓடிவந்தார்.

என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “ரொம்ப சந்தோசம் தம்பி! ஒங்களுக்கு வேலை கிடைச்சுட்டதாமே! சொல்லவே இல்லையே!” என்றார்.

“சொல்ல முயன்றேன்; ஆனால்  ஒருவாரமாக உங்களை எங்கேயும் பார்க்கமுடியவில்லையே” என்றேன்.

அவர் வெளியூர் போயிருந்தாராம். 

சட்டைப்பையில் கைவிட்டு நான்கு ஐந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து என்னிடம் கொடுத்தார். “ரொம்ப மன்னிக்கவேண்டும் தம்பி. ஒரு மாசத்துல தரேன்னு சொல்லி வாங்கினேன். மூணு வருஷம் ஆயிட்டுது. ஒரு செலவு போனா ஒரு செலவு வந்துடுது. அதாங்க இவ்ளோ லேட்டாயிட்டுது..” என்று வருத்தமான குரலில் சொன்னார்.

இருபது ரூபாய் என்பது அன்றைக்கு மிகப் பெரிய தொகை. அதை வேண்டாம் என்று மறுக்கும் நிலையில் என் பொருளாதாரம் இல்லை. எனவே பெற்றுக்கொண்டேன். “ஒங்கள என்னிக்கும் மறக்கமாட்டேன் தோழரே! வெண்புறா மன்றத்தோட வெற்றிக்கே நீங்கதான் காரணம் “ என்று பாராட்டினேன். “அடுத்த கூட்டத்திற்கு தபால் போடுங்கள்” என்று முகவரியைக் கொடுத்தேன்.

“ஊருக்கு வரும்போது எங்கூட மறக்காம டீ சாப்பிடணும்” என்று அன்போடு கேட்டுக்கொண்டு விடை பெற்றார்,  தோழர் ரேணு.
****

அதிகாலையில் பஸ் நிலையத்தை நோக்கிச் செல்லும்போது நண்பர் ராஜசேகரின் வீட்டைக் கடந்துதான்  செல்லவேண்டி இருந்தது. 

திறந்த சன்னல் வழியே வெளிச்சம் தெரிந்தது. தூங்கி விழித்த முகத்தோடு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார் ராஜசேகர். “குட் மார்னிங்” என்றேன். சன்னலையும் மீறி வாடை அடித்தது அவரது முண்டா பனியன். 

“அடடே, இவ்ளோ சீக்கிரமா போறீங்களே, மன்னிக்கணும், எங்க போறீங்கன்னு கேட்கக் கூடாது இல்லீங்களா?..” என்றவர், என் கையில் இருந்த பெரிய பெட்டியையும் பைகளையும் பார்த்தவுடன், “..இப்ப புரிஞ்சிட்டது! வேலை ல சேரப்போறீங்க, அதானே? ஆல் தி பெஸ்ட்!” என்றார். "வீட்டுல எல்லாரும் சௌக்கியங்களா?" என்றார்.

மூன்று வருடங்களுக்கு முன் வாங்கிய நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுப்பது பற்றி மூச்சு விடுவாரோ என்று பார்த்தேன்.  ஒருவேளை கதவைத் திறந்து, “வாங்க காப்பி சாப்பிடலாம்” என்று கூப்பிடுவாரோ என்று எதிர்பார்த்தேன். ஒரு நப்பாசையில் சற்றே நின்றேன்.

நண்பரோ ஜன்னல் கம்பிகளின் வழியே என் முகத்தை நெருங்கியவராக, “ஒங்களுக்குக் கூட ஏதோ நான் பாக்கி வச்சிருக்கேன் இல்ல? எவ்ளோன்னு   ஞாபகம் வரல்லே. டயரியைப் பாத்தா தெரியும். எப்படியும் அடுத்த தீபாவளி போனஸ்ல கொடுக்க முடியுமான்னு யோசிச்சிட்டிருக்கேன். எங்க முடியுது, போங்க! கல்யாணம் ஆனாத்தான் இந்தக் கஷ்டம் எல்லாம் ஒங்களுக்கும் தெரியும் தம்பி!  அதனால தான் சொல்றேன், சீக்கிரமா கல்யாணம், கில்யாணம்னு  பண்ணித் தொலைச்சுடாதீங்க, மீளவே முடியாது! அது சரி, ஒங்களுக்கு எத்தனை மணிக்கு பஸ்?” என்றார்.

அருவருப்புடன் அவர் முகத்தை நோக்கினேன். “ஆறு  மணிக்கு. அதாவது இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

பஸ்ஸில் அமர்ந்தேன். டிக்கெட் வாங்குவதற்குச் சட்டைப்பையைத் தொட்டபோது, தோழர் ரேணு கொடுத்த இருபது ரூபாய்கள் முள்ளாய்க் குத்தின.
***** 
email: chellappay@gmail.com 

15 கருத்துகள்:

  1. இந்த விளிம்பிலும், அந்த விளிம்பிலுமாக நண்பர்கள்! சில நேரங்களில் சில மனிதர்கள்! ஹூம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், இப்படி இன்னும் பல மனிதர்களை நீங்களும் சந்தித்திருக்கக் கூடும்....

      நீக்கு
  2. நல்லதொரு தோழரை அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஒரு நண்பர்...!

    பதிலளிநீக்கு
  3. மிக மிக அருமையான பகிர்வு, மிக அழகான எழுத்து நடை. :)

    பதிலளிநீக்கு
  4. பொதுவாக கம்யூனிஸ்ட் நண்பர்கள்தான் தோழர் என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் ஒரு நேர்மை இருக்கக் கண்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். எனக்குத் தெரிந்த (தமிழகத்தைச் சேர்ந்த) கம்யூனிஸ்ட்டுகள் பலரும் நேர்மையானவர்களே! ஆனால் அவர்களில் பலரும் வலது கம்யூனிஸ்ட்டுகள் தாம்!

      நீக்கு
  5. ஊருக்காக உழைப்பவர்களுக்கு தந்தாலும் தப்பில்லை ,ஊதாரிகளுக்கு கொடுத்த பணம் என்றுமே திரும்பாது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் எவ்வளவோ பேருக்குக் கொடுத்து ஏமாந்திருக்கிறேன் ஐயா! என்ன செய்வது, ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஒரு விலை இருக்கிறதே!

      நீக்கு
  6. நல்ல அனுபவம். எனக்கும் இது போல நிகழ்ந்துள்ளது

    பதிலளிநீக்கு
  7. இதே போன்ற அனுபவங்கள் சார் எங்கள் இருவருக்குமே ஏற்பட்டிருக்கிறது. அதில் ஏமாந்த தருணங்களும் நிறைய உண்டு. சரி ஏதோ அவருக்கு நாம் எப்போதோ கடன்பட்டிருப்போம் போல என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு (இது போன்ற தருணங்களில் அடேங்கப்பா நம்ம ஊர் தத்துவங்கள் என்னமா உதவுகிறது!!) கடந்து செல்லத்தான் வேண்டியுள்ளது. உங்கள் அனுபவ விவரணம் அருமை சார். கம்பூனிஸ்ட் ஆட்கள் நல்ல நேர்மையாகத்தான் இருக்கிறார்கள். கேரளத்தை விட தமிழ்நாட்டில் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  8. Amam nandri maravathavan nanban thuyarathil full kuduppavan thozhan.

    பதிலளிநீக்கு
  9. Amam nandri maravathavan nanban thuyarathil full kuduppavan thozhan.

    பதிலளிநீக்கு