சனி, பிப்ரவரி 11, 2017

அஷ்டமி நவமி கௌதமி

 பதிவு எண் 10/2017
அஷ்டமி நவமி கௌதமி
-இராய செல்லப்பா

எப்போது சினிமாத்துறையின் செல்வாக்கு தமிழக அரசியலில் படியத் தொடங்கியதோ, அப்போதுமுதலே தமிழகத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கு  சமயம் பார்த்துக்கொண்டிருந்த சி என் அண்ணாதுரை (பின்னாளில் அறிஞர் அண்ணா), பெரியார் ஈ வெ ரா அவர்களின் பொருந்தாத் திருமணத்தைச் சாக்காக வைத்து ஒரு மழைநாளில் வெளியேறி திமுக என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். அக்காலத்தில் காங்கிரஸ் கட்சியும்  கம்யூனிஸ்ட்டு கட்சியும்தான் தமிழ்நாட்டின்  பலமான அரசியல் கட்சிகளாக இருந்தன. அவற்றோடு போட்டியிட்டு மக்களைத் தம்வசம் ஈர்க்க சினிமாவை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டார் அறிஞர் அண்ணா. அவரோடு மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கேஆர் ராமசாமி, சிவாஜி கணேசன் போன்றவர்களும் இந்த அரசியல்-சினிமா பிணைப்பை வலுப்படுத்தும் சங்கிலிகளாக விளங்கினார்கள். பின்னாளில் சிவாஜி கணேசன் காங்கிரசுக்குப் போனதும், அந்த இடத்தை எம்ஜி ராமச்சந்திரன் பிடித்துக்கொண்டதும் தெரிந்த வரலாறே.
 
படம்: இணையத்தில் இருந்து 
ஆனால் அதுமட்டுமே அறிஞர் அண்ணாவின்  வெற்றிக்குக் காரணமல்ல. இரா நெடுஞ்செழியன், சி.பி.சிற்றரசு, மதியழகன், நாஞ்சில் மனோகரன்,  ஏவிபி ஆசைத்தம்பி, என்வி நடராசன், (இன்னும் எவ்வளவோ பேர்கள் – பெயர் மறந்துவிட்டது) -முதலிய தகுதியுள்ள அரசியல்வாதிகளைத் தன்னுடைய இரண்டாம் கட்டத் தலைவர்களாக உருவாக்கி வழிநடத்தியது இன்னுமொரு தலையாய  காரணமாகும்.

அதே மரபைப் பின்பற்றித்தான், எழுபதுகளில் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது தன்னுடைய சினிமா பிம்பத்தை மட்டுமே நம்பிவிடாமல், திமுகவில் இருந்த மூத்த அரசியல்வாதிகளை ஒருவர் பின் ஒருவராகத் தன்னுடன் இழுத்துக்கொண்டார். அதன் காரணமாகவே அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவராகக் கருதப்பட்ட கலைஞர் கருணாநிதியையே அவரால் வீழ்த்தமுடிந்தது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் எம்ஜிஆரைப் பின்பற்றி எந்த நடிகரும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றால் அதற்கான காரணம் இதுதான். கர்நாடகத்தில் அப்போது பலம்பெற்றிருந்த, எம்ஜிஆரை விடவும் அதிக மக்கள் தொடர்புள்ள, பழகுவதற்கு இன்னும் எளிமையான, அதிக வெற்றிப்படங்களைத்தந்த ராஜ்குமார் கூட அரசியலுக்கு வர சில முயற்சிகளை மேற்கொண்டபோது அவை தோற்றுப்போயின. ஆந்திரத்தில் என்.டி.ராமராவ் முதல்முறை ஒன்றரை ஆண்டும் அடுத்தமுறை ஐந்தாண்டும்  மட்டுமே ஆட்சியமைப்பில்  வெற்றிபெற முடிந்தது. அடுத்தமுறை ஆட்சியைத் தன் சொந்த மருமகனிடமே பறிகொடுக்க வேண்டியாதாயிற்று.வெற்று சினிமா பிம்பம் மட்டுமே அரசியலில் வெற்றியைத் தந்துவிடாது என்ற உண்மை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயம், மக்கள் தொடர்புக்கு மிக முக்கியமான, தவிர்க்கமுடியாத,  காரணியாக அமைந்துவிட்ட சினிமாத்துறையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத  காரணத்தால் தமது அரசியல் வாழ்க்கையை  இழந்த தலைவர்கள் தமிழ்நாட்டில் உண்டு. காமராஜரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், அவர் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சிவாஜிகணேசன், கண்ணதாசன் போன்ற சினிமாக் கலைஞர்களை உரியமுறையில் பயன்படுத்தாமல் அவர்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்காமல் போனதுதான் என்பதை நாம் நன்கறிவோம். அரசியலும் சினிமாத்துறையும் ஒன்றுக்கொன்று இட்டு நிரப்புபவர்களாக இருந்தால் மட்டுமே தமிழக அரசியலில் அது வெற்றியைத் தந்திருக்கிறது.  

இன்று தமிழக அரசியலில் நேர்ந்துள்ள வெற்றிடத்திற்கு முழுப் பொறுப்பும் தன்னை மட்டுமே முன்னிறுத்தி, வேறு எவரையும் இரண்டாம் கட்டத் தலைவர்களாக அங்கீகரிக்க மறுத்த ஜெயலலிதாவின் அகம்பாவத்தையே சாரும். இன்று அமைச்சராக இருப்பவர் நாளை வீதியில் தூக்கி எறியப்படுவார் என்ற நிலையில் எந்த அமைச்சரும் மாவட்டச் செயலாளரும் தன்முனைப்போடு அரசியல் செய்ய முன்வராததில் ஆச்ச்சரியம் என்ன? கட்சி என்பது படிப்படியாகக் குடும்பச் சொத்தாக ஆகியதில் வியப்பென்ன?

ஆனால் அரசியலைக் குடும்பச்  சொத்தாக்குவதற்கான  வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்தளித்த பெருமையைக் கலைஞர் கருணாநிதி அவர்களிடமிருந்து எவராலும் பறித்துவிடமுடியாது. சர்க்காரியா கமிஷனில் ஆரம்பித்து கனிமொழி-மாறன் சகோதாரர்கள்  என்று அது தொடர்ந்து வருகிறது. காந்திஜி, நேருஜி, ராஜாஜி-க்குப் பிறகு 2-ஜி என்பதுதானே தமிழநாட்டில் புகழ்பெற்ற ஜி?

ஆனால் ஒரே வித்தியாசம்: ஜெயலலிதாவிற்குக் குடும்பம் இல்லை. ஆகவே, அவர்மூலம் வந்தவை எல்லாம் அவருக்குக் காவலாக இருந்த இன்னொரு குடும்பத்திற்குப் போய்விட்டன என்கிறார்கள். கலைஞரின் அரசியலுக்கு அவர் குடும்ப வாரிசுகள் இருப்பதுபோல், ஜெயலலிதாவின் அரசியலுக்கு அவரது நிழலாக இருந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதில் வியப்பென்ன?

அப்படி அதிரடியான நியாயத்தை ஓரளவு ஒப்புக்கொண்டாலும், கலைஞரின் அரசியல்ஞானத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். மகனை அரசியல் வாரிசாக அறிவித்தாலும், அவருக்கு உரிய அரசியல் அனுபவத்தைப் படிப்படியாக வழங்கி, தனக்குப் பின் கட்சியை ஏற்று நடத்துவதற்கான தலைமைப் பண்புகளை வளர்த்துவிட்டவர் கலைஞர். ஆனால் அத்தகைய பயிற்சிவகுப்புகள் எதையும் தன் தோழிக்கு எடுத்தாரா ஜெயலிதா என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. அதுதான் இன்றைய குழப்பங்களுக்கெல்லாம் காரணம்.

பன்னீர்செல்வமா, சசிகலாவா என்பதல்ல தமிழ்நாட்டின் பிரச்சினை. அரசியலைப் புரிந்துகொண்டு, மக்கள் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற தத்துவத்தை யாரால் செயல்படுத்தமுடியும் என்பதே கேள்வி. அடிவாங்கிய குழந்தை என்பதால் பன்னீருக்கு  இப்போதுஅனுதாபம் கிடைக்கலாம். ஆனால் தொடர்ந்து தைரியமாக இயங்கவல்ல  பிடிவாதம் அந்தக் குழந்தைக்கு இருக்கிறதா என்பது கவனிக்கப்பட வேண்டியது.  

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகப் பல நடிகர்கள் நடிகைகள் களம் இறங்கி யிருக்கிறார்கள். அவர்களில் முதலாவதாகக் களம் இறங்கியவர், நடிகை கௌதமி. நன்கு படித்தவர். நல்ல திறமையான நடிகை. மார்பகப் புற்றுநோயில் இருந்து கவனத்தோடு மீண்டவர். தெளிவாகச் சிந்திக்கின்றவர். பன்னீர்செல்வம் இவரை உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருகாலத்தில் நாஞ்சில் சம்பத்திற்கு இன்னோவா கொடுத்து கட்சிப் பிரச்சாரம் செய்வித்ததை விட,  கருணாஸை எம்எல்ஏ ஆக்கியதைவிட, மக்களின் மரியாதைக்குரிய கௌதமி போன்றவர்களை இப்போது உடனடியாகத் தமது அணியில்  இணைத்துக் கொள்வது தமிழக அரசியலுக்கு மிகவும் நல்லதென்றே தோன்றுகிறது. அந்தவகையில் தமிழரான ஹேமமாலினிக்கு எம்பி பதவி கொடுத்து, கட்சியின் உயர்மட்டத்தில் வைத்திருக்கும் பாஜக -வின் உதாரணம் கவனிக்கத்தக்கது.
 
படம்: இணையத்தில் கிடைத்தது
சினிமாக்காரர்களை வெறும் கவர்ச்சியாளர்களாக மட்டுமே பார்க்காமல் அவர்களிடமிருக்கும் மக்கள்-ஈர்ப்பு சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.  சிவாஜி கணேசனையும் கண்ணதாசனையும் அங்கீகரிக்காமல் காங்கிரசை தமிழ்நாட்டில் செல்லாத காசாக்கியவர் காமராசர். சினிமா மட்டுமே போதும், தன் கட்சியில் அரசியல்வாதிகள் வேறு யாரும் பலம் பெற்றுவிடக் கூடாது  என்று அதிமுகவை இக்கட்டில் கொண்டுபோய் நிறுத்தியவர், ஜெயலலிதா.  

இருவரிடமிருந்தும் பாடம் கற்பவரே தமிழ்நாட்டிற்குச் சரியான தலைமையை வழங்கமுடியும் என்று தோன்றுகிறது.

6 கருத்துகள்:

 1. புதிய யோசனை கூறியுள்ளீர்கள். நடப்பதைப் பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 2. கட்சிகள் வளருகின்றன
  அமைச்சர்கள் வளருகிறார்கள்
  மக்கள் .........

  பதிலளிநீக்கு
 3. கட்சிகள் வளருகின்றன
  அமைச்சர்கள் வளருகிறார்கள்
  மக்கள் .........

  பதிலளிநீக்கு
 4. கௌதமி இப்போது பாஜகாவுக்கு நெருக்கமாமே பாஜகா காலூன்ற இவர் உதவலாம்

  பதிலளிநீக்கு
 5. யார் வந்தாலும் மக்கள் நலனை முன்னிறுத்தி ஆட்சி செய்தால் மட்டுமே நாற்காலியைத் தக்க வைக்க முடியும் இனி.

  பதிலளிநீக்கு