வெள்ளி, ஆகஸ்ட் 19, 2022

மணிகர்ணிகா (19) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா (19) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  116  வது நாள்:  05 -8-2022)


இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.

இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (14) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


மயூரியும் திலகாவும் பைக் விபத்தில் சிக்கியதால் மெடிக்கல் லீவ் போட்டுவிட்டதில் அதிகம் பாதிக்கப்பட்டவர் அந்த வங்கியின் கிளை மேலாளர் சண்முகம்தான். இருக்கும் ஆறு கிளார்க்குகளில் இரண்டு பேர் இப்படி நீண்டநாள் மெடிக்கல் லீவில் போனால் கவுண்ட்டர்களை நிர்வகிப்பது எப்படி?


சென்னை விமான நிலையம் 

இன்னொருத்தி - மணிகர்ணிகா- எப்போது வேண்டுமானாலும் லீவில் இருப்பவள், விரைவில் ராஜினாமா செய்யப்போவதாகவும் சொல்கிறாள். அவளுக்குப் பதிலாக மீனா குல்கர்னி வந்துவிட்டாள் என்பது உண்மையே. ஆனால் அவளை 'பிசினஸ் டெவலப்மெண்ட்டு'க்காகவே பெரும்பாலும் பயன்படுத்துவதால் கவுண்ட்டர் வேலைக்கு அவளை அமர்த்தமுடியாது. அத்துடன் மீனா வந்தபிறகு வங்கியின் பிஸினசும் அதிகரித்துவிட்டது. தலா ஐயாயிரம் பணியாளர்களைக் கொண்ட ஐந்தாறு மென்பொருள் கம்பெனிகளின் சம்பளப் பட்டியல் சேவிங்ஸ் கணக்குகளை அவள் வங்கிக்குப் பெற்றுக் கொடுத்திருந்தாள். அதனாலும் வேலைப்பளு கணிசமாக அதிகரித்தது. 

வங்கி அமைந்த இடம், வணிகம் அல்லாத குடியிருப்புப் பகுதி என்பதால், நேரில் வரும் வாடிக்கையாளர்களில் அதிகம் பேர் பெண்களும் வயதானவர்களுமே இருந்தனர். வங்கியில் செலவழிப்பதற்கு அவர்களுக்குப் போதுமான நேரம் இருந்தது. எனவே காலி நாற்காலிகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு சேவை வழங்கமுடியாது.   


நிலைமை கட்டுக்கடங்காமல் போகும்போல் இருந்ததால், சண்முகம், தனது ரீஜினல் மேனேஜர் ஜான் நாயுடுவுக்குப் போன் செய்தார். பொறுமையாகக் கேட்டுக்கொண்ட நாயுடு, “எதற்கும் மாலினியிடம் பேசுங்கள், சர்ப்ளஸ் ஸ்டாஃப் எந்த பிராஞ்சில் இருந்தாலும் கொடுக்கச் சொல்கிறேன்” என்று போனை வைத்துவிட்டார்.


இது வழக்கமாக ரீஜினல் ஆபீசில் மேற்கொள்ளப்படும்  ‘பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் உத்தி’ என்பது சண்முகத்துக்குத் தெரியாதா? எனவே, நாயுடுவின் பர்சனல் லைனுக்குப் போனில் வந்தார்.


சண்முகம் அப்படிச் செய்வார் என்று நாயுடுவுக்கு மட்டும் தெரியாதா என்ன? அவரும் பல்வேறு கிளைகளில் மேலாளராக இருந்தவர் தானே!  “என்னங்க ரீஜினல் மேனேஜர் சார்! ஸ்டாஃப்  ஷார்ட்டேஜா?” என்று சிரித்தார். 


“வணக்கம் சார்! உங்களால் சிரிக்க முடியும்! ஏனென்றால் அங்கே கவுண்ட்டர் கிடையாது, கஸ்டமர்களும் வரமாட்டார்கள்….” என்று சோகமாகச் சிரித்தார் சண்முகம். “எப்போது விஜயவாடா போகிறீர்கள்? நான் எப்போது உங்கள் நாற்காலிக்கு வருவது? அப்படியாவது இந்த ஸ்டாஃப்  ஷார்ட்டேஜ் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்காதா என்று பார்க்கிறேன்.” 


“மாலினி, மாலினி” என்று நாயுடு அழைப்பது சண்முகத்துக்கு கேட்டது. அவள் வந்ததும், “மாலினி, உங்க எதிர்கால ரீஜினல் மேனேஜர் ரொம்பக் கோவமா இருக்கார். ஸ்பெஷல் கேஸாக அவருக்கு மட்டும் ஒரு கிளார்க் ரெண்டு மாசம் டெபுடேஷன் ஏற்பாடு பண்ணிவிடுங்கள். இல்லையென்றால் நாளைக்கு உங்கள் பாடுதான் திண்டாட்டம்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.


மாலினி போனை வாங்கிப் பேசினாள். “வணக்கம் சார்! இன்னும் இரண்டே நாள் கொடுங்கள். ஈரோட்டிலிருந்து மாளவிகா கெல்லீஸ் பிராஞ்சில் ஜாயின் ஆகிறாள். அதே நாளில் உஷா மாணிக்கம் உங்கள் ஆபீசுக்கு வருவாள். சந்தோஷம் தானே?”     

   

“ஐய்யய்யோ, திரும்பவும் லேடி ஸ்டாஃப்பா? வேண்டாம்மா!  எனக்கு ஒரு ஆண்பிள்ளையாகப் பார்த்து அனுப்புங்கள். இங்கு என்னைத்தவிர எல்லாரும் பெண்கள்தான்!” என்று வேண்டினார் சண்முகம்.


மாலினி நல்ல பெண். நல்ல ஞாபகசக்தி. சென்னை மண்டலத்தில் இருக்கும் இரண்டாயிரம் ஊழியர்களின் ஜாதகமும் அவளுக்கு மனப்பாடம். குறிப்பாகப்  பெண் ஊழியர்களில் யார் யார் எப்பொழுது மெட்டர்னிட்டி லீவ் எடுக்கக்கூடும் என்ற பட்டியலை ரீஜினல் மேனேஜருக்கு எந்த நிமிடமும் அவளால் அப்டேட் செய்யமுடியும். அதனால் எச்.ஆர். கடமைகளை அவளால் திறமையாக நிறைவேற்றமுடிந்தது.


பொதுவாகவே கிளைமேலாளர்கள் எச்.ஆர். டிபார்ட்மெண்ட்டில் குழைந்து பேசித்தான் காரியம் சாதித்துக் கொள்வார்கள். அதுவும் மாலினி போன்ற திறமையான அதிகாரியிடம் புன்சிரிப்புடன்தான் பேசுவார்கள். சண்முகத்திடம் அவளும், அவளிடத்தில் சண்முகமும் சற்றே அதிக சுதந்திரம் எடுத்துக்கொண்டு பேசுவதுண்டு. 


“சார், உங்களுக்கு ‘மேல்’ கிளார்க் தான் வேண்டுமென்றால் அதற்கு ஒரு மேலான யோசனை சொல்லட்டுமா?” என்றாள்.


“என்ன, என்ன?” என்று ஆவலாகக் கேட்டார் சண்முகம்.


“யாராவது ‘ஃபீமேல் கிளார்க், ‘மேல்’ ஆவதற்கு சிகிச்சை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறாளா என்று பார்க்கவேண்டும்.”   


சண்முகம் சிரித்தார். நாயுடுவும் சிரித்தார். மாலினியும் சிரித்தாள். “உனக்கென்னம்மா, சிரிப்பே! என் பாடு எனக்குத் தானே தெரியும்? அது சரி, எப்போது கல்யாண சாப்பாடு? ஜாதகம் கேட்டாலும் தரமாட்டேன் என்கிறாய்!” 


“என்னிடத்தில் கேட்கிறீர்களே, மணிகர்ணிகாவிடம் கேட்டீர்களா?” என்று மடக்கினாள் மாலினி. 


“அவள்தான் ரிசைன் பண்ணப்போகிறாளே! எனக்கு உன்னைப் பற்றித்தான் அக்கறை!”


மாலினி அலுத்துக்கொண்டாள். “அமெரிக்கா மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கள்! அத்துடன், மயூரியும் திலகாவும் மெடிக்கல் பில் அனுப்பிவிட்டார்கள். டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்கள். அதனால் சீக்கிரம் ‘ஃபிட்டாகி’ வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் வீட்டிற்கு ஆள் அனுப்பிப் பாருங்களேன்” என்று யோசனை சொன்னாள். 


சண்முகம் யோசிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் போன் செய்தார். பதில் இல்லை. அரைமணி நேரம் கழித்து மீண்டும் போன்செய்தார். அப்போதும் பதில் இல்லை. தானே நேரில் போய்ப் பார்த்துவிடுவது என்று தீர்மானித்தார். நலம் விசாரித்த மாதிரியும் இருக்கும்.


சரி, மணிகர்ணிகா இப்போது எங்கிருக்கிறாள் என்ற கேள்வியும் எழுந்தது. துபாய்க்குத் தான் போயிருக்கவேண்டும்.


*** 

ஹோட்டல் அறையில் தனிமையில் அழுதபடித் தனது கடந்தகால நினைவுகளை மனக்கண்ணில் பார்த்துக்கொண்டிருந்த மணிகர்ணிகாவுக்கு, அன்று நவீனின் காரில் தான் மாதவிக்கு அளித்த பரிசுப் பை கிடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. 


அப்படியானால்? மாதவியும் துபாயில்தான் இருக்கிறாளா? இரண்டரை வருடம் முன்பு பார்த்தது தான். எம்பிஏ-படிப்பை முடித்துப் பட்டம் வாங்கியிருப்பாள். பன்னாட்டுக் கம்பெனியொன்றில் நிச்சயம் நல்லவேலை கிடைத்திருக்கும். 

ஆனால் தன்னிடம் எதையும் ‘ஷேர்’ செய்யவில்லையே! முகநூலோ, வாட்ஸப்போ, ட்விட்டரோ எதிலும் தன் வேலையைப் பற்றியோ, துபாயில் இருப்பது பற்றியோ அவள் ‘அப்டேட்’ செய்யவில்லையே! 


தாங்கள் பார்க்கவந்த அபார்ட்மெண்ட் அருகில் காரை நிறுத்தினான் நவீன். இவளோ தன் மனத்தில் இருந்த சந்தேகத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனைப் பின்தொடர்ந்தாள். 


அது ஓர் அழகான குடியிருப்புப் பகுதி. ஐந்து நிமிடம் நடந்தாலே கடற்கரை வந்துவிடும். முதல் மாடியில் இருந்தது அவன் பார்த்த வீடு. 


“இந்த வீட்டின் பொறுப்பு, இரண்டாம் மாடியில் இருக்கும் ஒரு மொராக்கோ பெண்மணியிடம்தான் உள்ளது. பாத்திமா டக்ளஸ் என்று பேர். அவளைப் பார்த்து அறிமுகப்படுத்திக்கொண்டு சாவி வாங்கிக்கொள்ளலாமா?”  


மணிகர்ணிகா மௌனமாக அவனைத் தொடர்ந்தாள். அந்த மொராக்கோ பெண்மணி - பாத்திமா டக்ளஸ்-  நடுத்தர வயதினள். நல்ல அழகி என்று முதல் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடுவார்கள். அழகான ஆங்கிலம் பேசினாள். ஓர் அமெரிக்கக் கம்பெனியின் சிஇஓ. நவீன் பார்த்திருந்த வீட்டின் சாவியைக்  கொடுத்தாள். மணிகர்ணிகாவைப் பார்த்து, ‘வெல்கம்’ என்றாள். 


மூவருக்கும் ஜிஞ்சர் டீ எடுத்துவந்தாள். “பன் வித் சீஸ், அல்லது பிஸ்கட்ஸ் - வேண்டுமா?” என்றாள்.


நவீன் “நோ, தேங்க்ஸ்” என்றான். மணிகர்ணிகா ஏதும் பேசாமல் டீயை அருந்தினாள். அமைதியான மனத்தில் அந்தப் பரிசுப்பை ஏற்படுத்திய சலனம், குளத்தில் எறிந்த கல்போல வட்டமாகப் பரவி விரிந்துகொண்டே சென்று, மனம் முழுவதையும் ஆக்கிரமித்தது. யாருடனும் பேசும் மனநிலையில் இல்லை அவள்.


“நீங்கள் பார்த்திருக்கும் வீடு மிகவும் அழகானது. என்வீடு மாதிரியேதான், ஆனால் அந்த ஓனர் நிறைய கலை வேலைப்பாடுகளைச் செய்திருக்கிறார். நானும் கூட வந்து காட்டட்டுமா?” என்றாள் பாத்திமா.  


ஒவ்வொரு அறையாகக் காட்டி அங்கிருந்த கலைப் பொருட்களைப்  பற்றி விவரித்தாள். உரிமையாளர் கையெழுத்திட்ட ஒப்பந்த ஆவணமும் அங்கிருந்ததை எடுத்துக் கொடுத்தாள். 


மணிகர்ணிகாவுக்கு அந்த வீடு திருப்திகரமாகவே இருந்தது. ஆனால் பெர்த்தில் அவர்கள் இருந்த வீட்டுக்கு இது ஒரு மாற்றுக் குறைவுதான். 


சாவியைப் பெற்றுக்கொண்டு, பாத்திமாவுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். வழியில் எங்கும் வாயே திறக்கவில்லை மணிகர்ணிகா. 


அவர்கள் ஹோட்டலை அடைவதற்கும், பாத்திமாவிடமிருந்து போன் வருவதற்கும் சரியாக இருந்தது. நவீன் முகம் கழுவப்  போயிருந்ததால் மணிகர்ணிகாவே எடுத்து, “ஹலோ” என்றாள். 


“ஹாய், மணி!  எ குட் நியூஸ் டு நவீன்! அவரிடமே சொல்லட்டுமா, இல்லை உங்களிடம் சொன்னால் பரவாயில்லையா?”


“குட் நியூஸ் தானே! என்னிடமே சொல்லுங்கள். அவர் வருவதற்கு நேரமாகலாம்” என்றாள் மணிகர்ணிகா.


“ஓகே, அப்படியானால் அவரிடம் சொல்லுங்கள், அவர் சிபாரிசு செய்த மாதவி என்ற கேண்டிடேட்  எங்கள் கம்பெனியில் சி.எஃப்.ஓ. போஸ்ட்டுக்கு செலக்ட் ஆகிவிட்டார் என்று!” 


மணிகர்ணிகாவுக்கு ஏனோ உடம்பெல்லாம் எரிவது போல் இருந்தது. 


பாத்திமா மேலும் தொடர்ந்தாள். “இந்தத்  தகவலை முதலில் மாதவிக்குத்தான் சொல்ல முயன்றேன். ஆனால் அவளை போனில் பிடிக்க முடியவில்லை. அதிகாரபூர்வ ஈமெயில் நாளைக்குத் தான் போகும். அதனால்தான் நவீனிடம் இதை உடனே ஷேர் செய்ய விரும்பினேன் ... பை!” என்று முடித்தாள் பாத்திமா.


காரில் அந்தப் பை  எப்படி வந்தது என்ற சஸ்பென்ஸ் இப்போது உடைந்துவிட்டது. மாதவி இங்குதான் இருக்கிறாள். இதே காரில் பயணித்திருக்கிறாள். எத்தனை நாட்களாகவோ? எங்கு தங்கியிருக்கிறாளோ? தனியாகவா, அல்லது நவீனுடனா? 


நவீனுடன் அவள் தனிமையில் இருந்திருப்பாளா? அந்த எண்ணமே  அவள் உடலெங்கும் பூச்சி ஊர்வதுபோல அருவருப்பான உணர்வைக் கொடுத்தது. 


எதற்காக நவீன் இதையெல்லாம் தன்னிடம் மறைக்கவேண்டும்? அல்லது, மாதவிதான் தன்னிடம் ஏன் இதையெல்லாம் கூறவில்லை? இவர்களுக்குள் இன்னும் என்னவெல்லாம் இரகசியங்கள் இருக்குமோ?


இவனைப் புரிந்துகொள்ள மூன்று வருடம் வேண்டும் என்று  தோன்றியதே, அப்படியே இருந்திருக்கக் கூடாதா நான்? அவசரப்பட்டு நெருக்கத்துக்கு இடம் கொடுத்துவிட்டேனோ?  


குளியலறைக்குச் சென்ற நவீன், தான் பார்த்த வீடு மணிக்காவுக்குப் பிடித்துவிட்ட மகிழ்ச்சியை வெதுவெதுப்பான வெந்நீரில் ஆற அமரக் குளித்தபடி அனுபவித்துக்கொண்டிருந்தான்.


அரைமணி நேரம் கழித்து அவன் வெளியில் வந்தபோது, மணிக்கா அங்கு இல்லை. சென்னை செல்லும் விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தாள். 

(தொடரும்)

     -இராய செல்லப்பா, நியூஜெர்சியில் இருந்து 


இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (20) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்


வியாழன், ஆகஸ்ட் 18, 2022

மணிகர்ணிகா (18) இன்று வர மாட்டாள்- தொடர்கதை

மணிகர்ணிகா (18) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  115  வது நாள்:  04 -8-2022)


இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.

இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (14) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


தன்னுடைய செக் திருட்டுப் போய்விட்டதாகவும், அதைப்  பயன்படுத்தி யாரோ தன் கணக்கிலிருந்து இருபதாயிரம் ரூபாயைத் தனக்குத் தெரியாமல் எடுத்துவிட்டதாகவும், அதைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் வினோதா மேடம் கையெழுத்திட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு கோபால்சாமியே நேரில் வந்துவிட்டார், கருணாமூர்த்தியைப் பார்க்க.


செங்கல்பட்டு கோர்ட் இதைவிடச் சிறியதாக இருக்கும்!

“ரொம்ப நன்றி சார்! இவ்வளவு சீக்கிரம் திருடனைப் பிடித்ததற்கு”  என்று பணிவாகக் கூறினார். “என் மனசிலிருந்த குற்ற உணர்ச்சி இப்போதுதான் நீங்கியது.”


கருணாமூர்த்தி அவரை நிமிர்ந்து பார்த்தார். “சரி, பணத்தைக் கோர்ட்டில் வந்து வாங்கிக்கொள்ளும்படி சம்மன் வரும். அப்போது வந்தால் போதும் என்று அந்த மேடத்திடம் சொல்லிவிடுங்கள்” என்கிறார்.


“அதற்கு எவ்வளவு நாள் ஆகும்? பத்துப் பதினைந்து நாள் ஆகுமா?” என்று அப்பாவியாகக் கேட்டார் கோபால்சாமி.


 கருணாமூர்த்தி ஏளனமாகச் சிரித்தார். “எப்படியும் ஆறு மாசத்துக்குள் கிடைத்துவிடும். அதுவரையில் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லிவிடுங்கள்” என்று எழுந்தார்.


“அய்யய்யோ, ஆறு மாசமா? கொஞ்சம் தயவு பண்ணி ஒரு மாசத்திற்குள் கிடைக்கும்படி செய்யுங்களேன். நாங்கள் எல்லாம் வயதானவர்கள்” என்று கெஞ்சினார் கோபால்சாமி.


“அப்படியானால் கோர்ட்டுக்குப் போகாமலே செட்டில் பண்ணிவிடலாமா? அதற்கு சம்மதமா என்று கேளுங்கள்!”


“சம்மதம் என்றுதான் அந்தம்மா சொல்வாள்! இந்த வயதில் யாரால் கோர்ட்டு கீர்ட்டு என்று அலையமுடியும்?”


“அப்படியானால் முயற்சிசெய்கிறேன்” என்றவர், உள்ளே திரும்பி ஒரு போலீஸ்காரரை அழைத்து, “ஏம்ப்பா, கணேஷு, கோர்ட்டுக்குப் போகாம இருபதாயிரம் ரூபாயை செட்டில் பண்ணிக் கொடுக்க ஏதாச்சும் வழியிருக்கா?” என்று கேட்டார்.

 

கணேஷு என்ற அந்தப் போலீஸ்காரர் பதறிக்கொண்டு, “அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க சார்! எல்லாம் முறையா நடக்கணும். இல்லாவிட்டால் மேலிடத்துக்குத் தெரிந்தால் சீரியஸாக ஆக்ஷன் எடுப்பாங்க!” என்றார்.   


“அப்படியானால்..” என்றவர், கோபால்சாமி பக்கம் திரும்பி, “ஆறு மாசம் நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும். வேற வழியில்லை” என்றார். 


கோபால்சாமி பதற்றத்துடன், “எப்படியாவது பார்த்து முடிச்சுக் குடுத்துடுங்க சார்! அடுத்த வாரம் கெடைக்கறாப்பல செஞ்சுடுங்க” என்று தழுதழுத்த குரலில் கூறினார். 


“இவர் செய்யக்கூடாதுன்னு சொல்றாரே சாமி! என்னைவிட  அனுபவஸ்தர் சொல்லும்போது நான் மீறமுடியுமா?” என்று கணேஷுவைக் கைகாட்டினார் கருணா.  “கணேஷு, வயசானவங்க, ஏதாவது பண்ண முடியுமான்னு பாரேன்” என்றார்.


புரிந்துகொண்ட கணேஷு ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தார். மரத்தடியில் நின்றார். கோபால்சாமி அவரைப் பின் தொடர்ந்தார். ஏதோ பேசினார்கள். இரண்டாயிரம் ரூபாய் செலவுக்கு ஒப்புதல் அளித்தார் கோபால்சாமி. “நம்ம பணம் நமக்கு கெடைக்கறதுக்கே நாம்ப செலவழிக்கவேண்டியிருக்கு” என்று முனகினார்.


அப்போதுதான் அங்கு வந்தாள் பரமேஸ்வரி. அவளைக் கண்டதும் அங்கிருந்த போலீஸ்காரர்கள் எல்லாரும் “வணக்கம் பரமேஸ்வரி அக்கா” என்று வரவேற்றார்கள். 


கருணா கேட்ட ஐம்பதாயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தாள் பரமேஸ்வரி.  “ஏன் சார், இன்னிக்கு தான் என்கிட்டே கேக்கணும்னு தோணிச்சா ஒங்களுக்கு?” என்று ஒரு மாதிரியாகச் சிரித்தாள். பெரிய அதிகாரிகளிடம் மட்டுமே அவள் வெளிப்படுத்தும் சிரிப்பு அது.


“என்ன பண்றது பரமேஸ்வரி! நீங்க எப்படி எப்படியெல்லாமோ சம்பாதிக்க முடியுது. நாங்க சம்பளக்காரங்க, எப்படி பொழைக்கறது? விலைவாசி ஏறிக்கிட்டே போகுதில்ல? கடனை வாங்கித்தான் காலம் தள்ள வேண்டியிருக்குது” என்று அலுத்தபடியே பணத்தை வாங்கி, எண்ணினார் கருணா. “என்னமே இது, வட்டி கழிக்காம கொடுத்திருக்க?” 


“அட போங்க சார்! எல்லாரையும் போல உங்களை நடத்த முடியுமா?” என்று குழைந்த பரமேஸ்வரி, “அப்ப நான் வரட்டுங்களா?”  என்று கிளம்பினாள். அதற்குமுன் உள்ளிருந்த சில போலீஸ்காரர்களை அழைத்து,”சாருக்கு என்னப் பத்திச்  சொல்லிடுங்க. என் வாய் ரொம்ப பொல்லாதது. ஒழுங்கா சம்பளத்தன்னிக்கு வட்டி வந்து சேர்ந்துடணும்” என்று கருணாவுக்குக்  கேட்கும்படி பலமாகச் சொன்னபடி வெளியேறினாள். 


கணேஷை அழைத்து இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்தார். “இந்தாய்யா, நீயே செட்டில் பண்ணிடு” என்று கோபால்சாமியைக் காட்டினார். 


“இருபதாயிரம் பெற்றுக்கொண்டேன்” என்று கையெழுத்து போட்டுக்கொடுத்தார் கோபால்சாமி, கையில்  பதினெட்டாயிரத்தை வாங்கிக்கொண்டு.    

**** 

சிறு குற்றங்களுக்கான செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான் கிரீஷ். 


நீதிபதியை நோக்கி அரசு வக்கீல் கூறினார்: “மைலார்டு, இவர்மீதுள்ள குற்றம் ஏடிஎம்-மில் பதினைந்தாயிரம் ரூபாயைத் திருடினார் என்பது.” 


நீதிபதி ஆச்சரியமாகக் கேட்டார்: “வெறும் பதினைந்தாயிரமா? ஏடிஎம்-மில் லட்சக் கணக்கில் அல்லவா பணம் இருக்கும்?”


அரசு வக்கீல் சுதாரித்துக்கொண்டு, “இவர் ஏடிஎம்-முக்கு உள்ளிருந்து எடுக்கவில்லை, வெளியில் இருந்து எடுத்திருக்கிறார்” என்றார்.


நீதிபதி முறைப்பாக, “தயவு செய்து விளக்கமாகச் சொல்லுங்கள். ஒவ்வொருமுறையும் நான் கேட்டு அதன் பிறகு நீங்கள் பதில் சொல்வதாக இருக்கவேண்டாம்”  என்றார் கோபத்துடன்.    


“சாரி சார்” என்ற அரசு வக்கீல் நடந்ததை எடுத்துச் சொன்னார். அவர் சொன்னதை மனதில் வாங்கிகொள்ளச் சில நிமிடங்கள் எடுத்துக்கொண்ட நீதிபதி, “என் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொல்லுங்கள்” என்றவர், “இவர் திருடியதாகச் சொல்லப்படும் பணம் யாருக்குச் சொந்தமானது?” என்று கேட்டார்.


“ஏடிஎம்-முக்கு சொந்தமானது” என்றார் அரசு வக்கீல்.


தன் தலையில் இலேசாகத் தட்டிக்கொண்டார் நீதிபதி. “ஏடிஎம் என்பது ஒரு மெஷின். அதற்கு எப்படி ஐயா பணம் சொந்தமாக இருக்க முடியும்?” என்றார். 


அரசு வக்கீலுக்கு அப்போதுதான் உறைத்தது. “தாங்கள் சொல்வது சரி ஐயா! அது ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம். ஆகவே பணம் அந்த வங்கிக்குச் சொந்தமானது” என்றார்.

    

“குட்! அப்படியானால் தனக்குச் சொந்தமான பணத்தை அந்த வங்கி, தன்னுடைய ஏடிஎம்-முக்கு வெளியில் வைத்திருந்ததா? அதை இவர் திருடினாரா?”


“இல்லையில்லை சார்!” என்று அரசு வக்கீல் பரபரப்புடன் சொன்னார். “இந்த நபர் தன்  கார்டை ஏடிஎம்-முக்குள் நுழைத்தவுடனே பணம் ஓடிவந்து விழுந்தது. அதை இவர் எடுத்துக்கொண்டார்.”


“அதாவது, இவர் தன்னுடைய கார்டை நுழைத்தவுடன் பணம் வந்து விழுந்தது என்கிறீர்கள். இல்லையா?”


“ஆம் ஐயா!”


“அப்படியானால் இது இவருடைய பணமாகவே ஏன் இருக்கக் கூடாது?”


“இல்லை என்றுதான் ஏடிஎம் பாதுகாவலர் தங்கராசு சாட்சி அளித்திருக்கிறார்.”


தங்கராசு சாட்சிக் கூண்டில் ஏறினார். கிரீஷ் தன் கார்டை உள்ளே நுழைத்தவுடனேயே  பணம் வந்து விழுந்ததைப் பார்த்ததாகவும்,  அவசரம் அவசரமாக அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு கிரீஷ் பைக்கில் கிளம்பியதால் தனக்கு சந்தேகம் ஏற்பட்டு 100க்கு போன் செய்ததாகவும் கூறினார். 


“ஏடிஎம்-மில் பணம்  எடுக்க கஸ்டமர்கள் வரும்போது அவர்கள்  என்ன செய்கிறார்கள் என்று பார்க்கும்படி உங்களுக்கு பேங்கிலிருந்து உத்தரவு இருக்கிறதா?” என்றார் நீதிபதி.


“இல்லை ஐயா! நாங்கள் பார்க்கவே கூடாது என்றுதான் உத்தரவு  இருக்கிறது.”


“அப்படியானால் இவர் செய்ததை மட்டும் பார்க்கவேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?’  

  

இதற்கு தங்கராசுவால் பதில் கூற முடியவில்லை. பேசாமல் இருந்தார்.


நீதிபதி அரசு வக்கீலின் பக்கம் திரும்பினார். “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.”


அரசு வக்கீல் கூறினார்: “அதாவது, இவருக்கு முன்பாக யாரோ ஒரு கார்டுதாரர், தனக்கு வரவேண்டிய பணத்தை எடுக்காமல் போய்விட்டிருக்கிறார். அந்தப் பணம், இவருடைய கார்டைப் போட்டவுடன்  இவருக்கு கிடைத்திருக்கிறது.”


நீதிபதி நிமிர்ந்து உட்கார்ந்தார். “அதாவது, இந்தப் பணம், இன்னொரு கார்டுதாரருக்குச் சொந்தமான பணம் என்கிறீர்கள். சரியா?”


“ஆம் ஐயா!”


“அந்த கார்டுதாரர் யார், அவருடைய கம்ப்ளெயிண்ட் எங்கே?”


“அவர் யார் என்று தெரியாது ஐயா! உலகத்தில் எந்த நாட்டிலிருந்து வரும் கஸ்டமர்களும் எந்த ஒரு ஏடிஎம்-மிலும் பணம் எடுக்கலாம் என்ற விதி இருப்பதால், அந்த நபரைக் கண்டுபிடிப்பது கடினம் என்று பேங்க் தரப்பில் சொல்கிறார்கள் ஐயா!”


நீதிபதிக்கு பயங்கரமான எரிச்சல் வந்தது. “உங்களுக்கு வேலை  அதிகம் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் இம்மாதிரி ‘சில்லி’ கேஸ்களை எடுத்து வந்திருக்கிறீர்கள். முதலில் பணம், இந்த வங்கிக்கு சொந்தம் என்றீர்கள். இப்போது யாரோ ஒரு கார்டுதாரருக்கு சொந்தம் என்கிறீர்கள். அவரை யாரென்று கண்டுபிடிப்பது சிரமம் என்கிறீர்கள். அப்படியானால் இவரை எப்படித் திருட்டுக் குற்றத்தில் கைதுசெய்தீர்கள்?” 


அரசு வக்கீல் குழைந்தார். “ஐயா, தனக்கு சொந்தம் அல்லாத ஒரு பொருளை ஒருவன் எடுத்தால் அது திருட்டு என்று சட்டம் சொல்கிறதல்லவா?”


“இருங்கள். என் முன்னால்   இன்னொரு முக்கியமான கேள்வி இருக்கிறது.  நீங்கள் சொல்வதுபோல, சம்பந்தமில்லாத ஒருவருக்கு, ஏடிஎம் உள்ளிருந்து பணம் வந்து விழுந்தால், அதை அவர் என்ன செய்யவேண்டும் என்று அந்த வங்கி விதிகளை வகுத்திருக்கிறதா? அதைப் பற்றி அறிவிப்பு ஏதும் செய்திருக்கிறதா?” என்றார் நீதிபதி.

      

அரசு வக்கீல் தங்கராசுவின் முகத்தைப் பார்த்தார். அவரோ, “அப்படி எந்த உத்தரவையும் நான் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை” என்று உறுதியாகச் சொன்னார்.


அரசு வக்கீலைப் பார்த்து நீதிபதி தன்  தீர்ப்பைப்  படித்தார்: 


“ஏடிஎம்- முக்கு வெளியில் கிடந்த பணம் இது என்பதற்கு ஒரே சாட்சி, ஏடிஎம் காவலரின் வாக்குமூலம்தான். ஆனால் கார்டுதாரர்கள் ஏடிஎம்-மில் நுழைந்து என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க அவருக்கு அனுமதி கிடையாது. காரணம் கார்டுதாரரின் அந்தரங்கம் பாதுகாக்கப்படவேண்டும். அத்துடன், இவ்வாறு வெளிவரும் பணத்தை என்ன செய்யவேண்டும் என்பது பற்றி சட்டபூர்வமான ஒழுங்குமுறை எதையும் அந்த வங்கி இதுவரை வெளியிட்டதாகத் தெரியவில்லை. அத்துடன், எந்தக் காரணத்தால் இப்படி சம்பந்தமில்லாமல் பணம் வெளியில் வந்து விழுகிறது என்று  அந்த வங்கிதான் கண்டுபிடிக்கவேண்டுமே யன்றி எந்த ஒரு கார்டுதாரர்மீதும் அந்தக் கடமையை அது திணிக்கமுடியாது. இந்தக் காரணங்களால், வங்கியின் நிர்வாகக் குறைபாட்டின் காரணமாக ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியை ஒரு திருட்டு என்று சட்டபூர்வமாக அங்கீகரிக்க இயலாது. எனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரீஷ் நிரபராதி என்று இந்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்கிறது. பணம் பதினைந்தாயிரம் அவரிடமே கொடுக்கப்படவேண்டும்.”


“அதே சமயம், ஏடிஎம் பாதுகாவலரின் அவசர நடவடிக்கையால் கிரீஷ் கைதுசெய்யப்பட்டு இரண்டுநாள் லாக்கப்பில் இருக்க நேரிட்டதற்கு நஷ்ட ஈடாக ரூபாய் ஒரு லட்சம் இந்த வங்கி அவருக்கு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கிறேன். 


“இந்த வழக்கின் விவரங்களையும் தீர்ப்பின் பிரதியையும் இந்திய ரிசர்வ் பேங்கிற்கு அனுப்பி, எதிர்காலத்தில் ஏடிஎம்-முக்கு  வெளியில் வந்துவிழும் பணத்தை என்ன செய்யவேண்டும் என்பதற்கு சட்டத்திற்கு உட்பட்ட விதிகளை ஏற்படுத்தி, அவற்றை எல்லாப் பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடவேண்டுமென்றும் இந்த நீதிமன்றம் விரும்புகிறது.”


நிம்மதியாக முகத்தைத் துடைத்துக்கொண்டான் கிரீஷ்.     


“என்ன மேன், விடுதலை ஆயிடுச்சி! சந்தோஷம் தானே?” என்றார் பாதுகாவலுக்கு வந்த போலீஸ்காரர். 


“சந்தோஷம் தாங்க.”


“வாயில சொன்னா எப்படி? கையில இருபதாயிரம் இருக்குல்ல, எங்களையும் கொஞ்சம் கவனிக்கிறது.”   


“மொதல்ல நீங்க நஷ்ட ஈடு ஒரு லட்சத்தை வாங்கிக்குடுங்க. அப்ப நிச்சயமா கவனிக்கறேன்” என்றான் கிரீஷ். பிறகு என்ன தோன்றியதோ, “வாங்க” என்று அருகில் இருந்த ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்றான். “வேண்டியதை சாப்பிடுங்க!”


இருவரும் முழு திருப்தியோடு சாப்பிட்டு முடித்தனர். போலீஸ்காரர்  விடைபெற்றுக்கொண்டு போனார். சர்வரிடம் “பில் கொண்டு வாருங்கள். ஏன் தாமதம்?” என்றான் கிரீஷ்.


“உங்கள் பில்லுக்கு அவர் பணம் செலுத்திவிட்டாரே!” என்று பின்வரிசை நாற்காலியில் இருந்த ஒருவரைக் காட்டினார் சர்வர். 


திரும்பிய கிரீஷின் வியப்பு திகைப்பாக மாறி, முகமெல்லாம் வியர்த்தது. செய்வதறியாமல் எழுந்து நின்றான்.  


“வணக்கம், கிரீஷ்! வெளிய வந்தாச்சா?” என்று விஷமமாகச் சிரித்தார், சாதாரண உடையில்  இருந்த கருணாமூர்த்தி.

(தொடரும்)

  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.



புதன், ஆகஸ்ட் 17, 2022

மணிகர்ணிகா (17) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

 மணிகர்ணிகா (17) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  114 வது நாள்:  03-8-2022)

   

இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (14) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


ஆஸ்திரேலியாவில் இரண்டு வருடங்கள் வானத்தில் மிதக்கும் மேகங்களைப் போல வெகு சீக்கிரமாக ஓடிவிட்டன. தங்களுடைய சொந்தக் கம்பெனி என்பதால் நவீனுடன் மணிகர்ணிகாவும் இரவு பகல் பாராமல் உழைத்தாள். உண்மையில் மென்பொருள் என்பது இலக்கியம் படிப்பதைவிடவும் சுலபமானது என்று அவளுக்குப் புரிந்தபோதுதான் எப்படி ஆயிரக்கணக்கானவர்கள் அத்துறையைத் தேர்ந்தெடுத்துப்


துபாய் -உயரமான கட்டிடம்


படிக்கிறார்கள் என்ற இரகசியம் தெரிந்தது. ஆனால் அதை மேற்கொண்டு ஆழமாகப் படிக்கவேண்டிய அவசியம் அவளுக்கு ஏற்படவில்லை. சந்தையில்தான் மென்பொருள் ஆசாமிகள் ஏராளமாகக் கிடைக்கிறார்களே!

எனவே அவள் மென்பொருள் எழுதும் வேலையை விட்டுவிட்டு, அதன் விற்பனையை அதிகரிக்கும் வேலையைக் கையில் எடுத்துக்கொண்டாள். சில மாதங்களிலேயே அவளுக்கு அதில் நல்ல தேர்ச்சி ஏற்பட்டுவிட்டது. நவீனுக்கும் அவளது தொழில் முதிர்ச்சி வியப்பளித்தது. ஆதரவற்ற பெண்ணாக, சிறிது தன்னம்பிக்கைக் குறைபாட்டுடன்  நேர்காணலுக்கு வந்த மணிகர்ணிகாவா இவள் என்று அதிசயப்பட்டான். இவ்வளவு அறிவும் விடாமுயற்சியும் உடைய பெண்ணைப் பார்க்கக்  கொடுத்துவைக்காமல் அகால மரணத்துக்குள்ளான தன் அத்தையை எண்ணியெண்ணிக் கண்ணீர் வடித்தான். இனி வாழ்நாள் முழுவதும் இவள் கண்ணீர் வடிக்காதவண்ணம் காப்பேன் என்று மனதில் உறுதி பூண்டான். 


அவளுக்குச் செய்து கொடுத்த உறுதிமொழிக்காக இந்த இரண்டு வருடமும் அவளது விரலைக் கூடத் தீண்டாமல் இருந்தான் நவீன்.  பல் முளைக்காத சிறுகுழந்தை பெரிய ஆப்பிளைக் கையில் வைத்துக்கொண்டு ஏங்குவதுபோல் இருந்தது அவன் நிலைமை. 


அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்காதா என்ன? மூன்று வருடங்கள் என்று எதற்காக அவனுக்கும் தனக்கும் இடையே திரை போட்டுக்கொண்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஒரே நோக்கம் அவனைப் புரிந்துகொள்வது. அத்துடன் தன்னுடைய சொத்தைப் பெறுவதுமட்டுமே அவர்களின் இலட்சியமாக இருக்குமா என்ற சந்தேகம் விலகவேண்டும். இந்த இரண்டுமே இப்போது நிறைவேறிவிட்டது.  மாமாவும் மாமியும் உண்மையிலேயே தங்கமானவர்கள். அதிலும், சில மாதங்களுக்கு முன்பு ரங்கநாத்துக்கு அதே வங்கியில் சேர்மன் ஆகப் பதவி உயர்வு கிடைத்துவிட்டதால், அவருடைய ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை. “எல்லாம் இந்தக் குழந்தை வந்த அதிர்ஷ்டம்” என்று மணிகர்ணிகாவைக் கொண்டாடினார் அவர். 


நவீனைப் பொறுத்தவரையில், அவனது நேர்மையான, ஒளிவு மறைவற்ற சுபாவம் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவனைப் பற்றி அவளுக்குத் தெரியாத இரகசியம் ஒன்றுமேயில்லை என்னும் அளவுக்கு அவன் அவளோடு இழைந்தான். இவ்வளவு நல்லவனைப் பட்டினிபோட்டுவிட்டேனே என்று அவள் வருந்தாத நாளில்லை. 


அதே சமயம், தன் தடையுத்தரவைத் தானே வாபஸ்பெற்றால் அவர்கள் தன்னை இளப்பமாக நினைப்பார்கள் என்ற தயக்கமும் அவளுக்கு இருந்தது. நவீன் வந்து தன்னிடம் கேட்கட்டுமே என்ற வீம்பும் அடிமனதில் இருந்தது. பொறுமையாக நாட்களைக் கடத்தினாள்  மணிகர்ணிகா.


அப்போதுதான் அந்த முடிவை எடுத்தான் நவீன்.


ஒரு பிரபலமான அமெரிக்க வன்பொருள் (ஹார்ட்வேர்)   கம்பெனி துபாயில் தன் அலுவலகத்தைத் திறக்க விரும்பியது. அதன் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்த வங்கிகளோ, வெறும் வன்பொருளை மட்டும் வாங்க விரும்பவில்லை. அதற்கான மென்பொருளையும் சேர்த்து விற்பனையும் பராமரிப்பும் கொண்ட முழுமையான ஒப்பந்தம் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தன. அதை முன்னிட்டு நவீனுடன் அந்தக் கம்பெனி வர்த்தகக் கூட்டுறவு   ஏற்படுத்திக்கொள்ள முன்வந்தது. நவீனுக்கு அது ஓர் எதிர்பாராத அதிர்ஷ்டம். ஆகவே உடனே ஒப்புக்கொண்டான். அதற்காக உடனே அவன் துபாய் புறப்பட்டான். 


ஆறுமாதம் கழித்து, பெர்த்திலுள்ள தங்கள் நிறுவனத்திற்கு ஒரு சிஇஓ -வை நியமித்து, அவருக்கு முக்கியத் தகவல்களைப் பரிச்சயமாக்கிக் கொடுத்த பின், தானும் துபாய்க்குப் புறப்பட்டாள் மணிகர்ணிகா. 


பாவம், நவீன், அவனை இனிமேலும் பாடுபடுத்தக்கூடாது. ஆஸ்திரேலியாவில் கொடுத்த அதே உழைப்பை இப்போது அவன் துபாயிலும் கொடுத்தாகவேண்டும். வேலை என்று வந்துவிட்டால் அவனுக்குப் பசி தாகம் உறக்கம் எதுவுமே கவனத்தில் வராது. போதும், இனிமேல் அவனுக்கு மனைவியாக மட்டுமே இருந்துவிடுவது என்று தீர்மானித்தாள்  அவள். ஆபீஸ் வேலை அவளுக்கு வேண்டாம். தனக்கு ஒளிமயமான வாழ்வைக் கொடுத்தவனுக்கு ஆயுள்முழுதும் துணையாக நிற்பதே இனிமேல் அவளுடைய இலட்சியமாக இருக்கும். 


துபாயில் இறங்கினாள் மணிகர்ணிகா. ஓட்டல் அறையை அவன் முன்னரே பதிவுசெய்திருந்ததால் நேராக அங்கு விரைந்தாள். அவனுக்குச் சிறப்புச் சலுகையாக அந்த அறையை ஒரு மாத காலத்திற்கு அமர்த்தியிருந்தது அந்த அமெரிக்கக் கம்பெனி.


“நவீன், நான் வந்துவிட்டேன். நீங்கள் எங்கிருக்கிறீர்கள்?” என்று போன் செய்தாள்.


“ஹாய், வந்துவிட்டாயா மணிக்கா மை டார்லிங்!” என்று ஆரம்பித்த நவீன் அவளிடம் பேசியதையெல்லாம் இங்கு வெளியிட நாகரிகம் தடுக்கிறது. “சாப்பிட்டுவிடாதே! நான் ஒருமணி நேரத்தில் அங்கிருப்பேன்” என்று முடித்தான்.  


ஆசாமி ரொம்பத்தான் துள்ளுகிறார் என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள் அவள். தான் மட்டும் பிடி கொடுத்துவிட்டால்  இன்று என்னவெல்லாம் நடக்கும் என்று கற்பனை செய்தாள். அதிலேயே அவள் கன்னம் சிவந்துவிட்டது. அங்கிருந்த இரண்டு படுக்கைகளில் முதலாவதில் சாய்ந்து படுத்தாள்.   


கதவு தட்டப்பட்டது. திறந்தாள். வேகமாக வந்து தன்னை அணைத்துக்கொள்வான், முத்தமிட்டுக் கொஞ்சுவான்  என்று எதிர்பார்த்தவளுக்குப் பெருத்த ஏமாற்றம். நவீன் மிகவும் ஜாக்கிரதையாக அவள் கைகளைத் தொடாமல் விலகிப் போய் இரண்டாவது படுக்கையில் அமர்ந்து சிரித்தான். “ஆறுமாசம் நல்லாப் போச்சா?” என்று கேட்டான் குறும்புத்தனமான சிரிப்புடன்.  


“அதாவது, நம்ப ஒப்பந்தப்படி இன்னும் ஆறுமாசம்தான் இருக்குன்னு ஞாபகப்படுத்தறீங்களோ?” என்று வெறுப்போடு கேட்டாள்  மணிகர்ணிகா. 


அவளுக்குப் பதில் சொல்லாமல், “ஹே கூகுள், கால் ரூம் சர்வீஸ்” என்றான். கூகுள் அசிஸ்டண்ட் கேட்டபடி ரூம் சர்வீஸை இணைத்தது. “பொங்கல், வடை, ஆனியன் ஊத்தப்பம்” என்று அவள் முகத்தை மறுபடியும் குறும்பாகப் பார்த்தான். ‘அதுவே சரி’ என்பதுபோல் அவள் தலையசைத்தாள்.


அவனோ, “ரூம்  சர்வீஸ்!  பொங்கல், வடை, ஆனியன் ஊத்தப்பம் தவிர வேறென்ன இருக்கிறது?” என்றான், தன் குறும்புப் பார்வையை விடாமல், அவளை வெறுப்பூட்டுவது போல.  


‘ஓஹோ, ஆசாமி ஃபுல் ஃபார்மில்  இருக்கிறார்’ என்று மனதிற்குள் குதூகலித்தாள் அவள். 


ரூம் சர்வீஸ் தன்னிடம் உள்ள எல்லா ஐட்டங்களின் பெயர்களையும் சொல்லிமுடித்த பிறகு, “வெல், இரண்டு செட் ஆனியன் ரவா மசாலா அனுப்புங்கள், பிளஸ், டூ காபி” என்றான் நவீன்.


அவள் அவனை முறைத்துப்பார்த்தாள். பிறகு, “ரவா தோசா என்றாலே எனக்குப் பிடிக்காது. ஆர்டர் பண்ணின ரெண்டையும் நீங்களே சாப்பிடுங்கள்” என்று கோபமாகச் சொல்லிவிட்டுப்  படுக்கையில் நன்றாகப் படுத்து, கழுத்துவரை போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள். 


“ஹஹ்ஹஹ்ஹா” என்று குறும்பாகச் சிரித்தவன், “மேடம் மணிக்கா அவர்களே! நான் ஆர்டர் செய்த ரெண்டு மசாலாவும் எனக்கு மட்டும்தான்! உங்களுக்கு நான் எதுவும் ஆர்டர் செய்யவில்லை. புரிகிறதா?” என்று அவளை நெருங்கி, தானும் அதே கட்டிலில் படுத்துக்கொள்ள முனைந்தான். 


அவள் அவனைக் கோபத்தோடு அகற்றினாள். அவனோ விடாமல் அவளை நெருக்கினான். அவள் விருட்டென்று, போர்வையை உதறிக்கொண்டு எழ முயன்றாள். அவனோ அவளை அதே வேகத்தில் படுக்கையில் தள்ளினான். அதற்கு அவள் எதிர்வினை ஆற்றுவதற்குள் ரூம் சர்வீஸ் ஆள் கதவைத் தட்டவே, இருவரின் ஆட்டமும் சட்டென்று நின்றுபோய் இருவர் முகத்திலும் அசட்டுச் சிரிப்பு தோன்றியது.


அந்த ஆள் போனதும், நவீன் அவளை இறுகப் பற்றிக்கொண்டான். “இன்னும் ஆறுமாசம் பொறுக்கவேண்டுமா மேடம்?” என்று அவளை அணைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான். ஏற்கெனவே உணர்ச்சி வசப்பட்டிருந்த அவளால் அவனைத் தவிர்க்க முடியவில்லை. “இப்போதேவா?..” என்றாள் மெல்லிய குரலில்.


“ஆமாம்” என்ற நவீன், “ஆம் இப்போதே தான். இல்லையேல் சூடு ஆறிவிடுமே” என்றான்.   பிறகு, “நான் ரவா தோசையைச் சொன்னேன்” என்றான்.


திரும்பவும் அவளுக்கு ஏமாற்றம். அவசரமாக எழுந்து பாத்ரூமுக்குள் போய்த் தாழிட்டுக்கொண்டாள். வெகுநேரம் ஆகியும் கதவைத் திறக்கவில்லை. உள்ளிருந்து விசும்பல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அதன் பிறகு ஷவரில் இருந்து தண்ணீர் கொட்டும் சப்தம் பெரிதாகக் கேட்டது.  


நவீன் பதறிப் போனான். அவளோடு கொஞ்சநேரம் விளையாடவேண்டும் என்பதுதான் அவனுடைய திட்டம். இவளோ  இப்படி சீரியஸாக எடுத்துக்கொண்டு…! 


மெயிண்ட்டனன்ஸ் ஆசாமியை வரவழைத்தான். பாத்ரூமுக்குரிய டுப்ளிகேட் சாவி கிடைத்தது. மணிகர்ணிகா வெளியில் வந்தாள். அவள் முகத்தில் பயம் தெரிந்தது. ஆடை முழுதும் நனைந்துபோயிருந்தது. 


“நீங்கள் இவ்வளவு மோசமான ஆள் என்று தெரியாமல் போய்விட்டது. பாத்ரூம் கதவு பூட்டிக்கொண்டு திறக்கவே முடியவில்லை. எவ்வளவு நேரம் கதவைத் தட்டுவது?” என்று கோபமாக வெடித்தாள்.  


‘அட, இந்தப் பிரச்சினைக்கு இப்படியொரு கோணம் இருக்கிறதா’ என்று வியப்படைந்த நவீன், இப்போது கிடைத்த வாய்ப்பைத்   தவறவிடவில்லை. தடித்த டர்க்கி டவலை அவள்மீது அழுத்தமாகப் போர்த்தினான். 


இரண்டு செட் ஆனியன் ரவா தோசையும் ஆறிப்போய்விட்டதைப் பொருட்படுத்தும் நிலையில் அவர்கள் இல்லை. 

*** 


ஆறுமணி சுமாருக்கு வெயில் சற்றே தாழ்ந்தபோது இருவரும் வெளியில் புறப்பட்டார்கள். தங்குவதற்கு ஒரு அபார்ட்மெண்ட்டை அவன் தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அதைப்  பார்வையிடப் போனார்கள், கம்பெனி சார்பில் அவனுக்குத் தரப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காரில்.


“பிஎம்டபிள்யூ என்றதும் ரொம்ப உயர்வாக நினைத்துவிடாதே! துபாயில் இது நம்ப ஊர் ஆல்ட்டோ, சாண்ட்ரோ மாதிரி” என்று சிரித்தான் நவீன். 


ஆஸ்திரேலியாவில் அவர்களிடம் இருந்தது டொயோட்டா கார். அவளுக்கு மிகவும் பிடித்த சிகப்புநிறம். இதுவோ நீல நிறம். 


“உனக்குப் பிடிக்கவில்லை என்றால் இதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். டொயோட்டாவே வாங்கிவிடலாம்” என்றான் நவீன். “காரணம், ஆறுமாதம் முன்னதாகவே ஒப்பந்தத்தை ரத்துசெய்தீர்களே அதற்காக!” 


மணிகர்ணிகா வெட்கத்துடன் சிலிர்த்துக்கொண்டாள். “இந்த ‘நீங்கள் வாங்கள் போங்கள்’ எல்லாம் நிறுத்தப்போகிறீர்களா, இல்லை, ஓடும் காரில் இருந்து குதித்துவிடவா?”    


தன்னுடைய வலது கையால் அவளுடைய இடது கையை அழுத்திக்கொண்டு, “ஓகே, ஓகே..” என்று சமாதானம் செய்தான் நவீன். 


அவளுடைய பார்வை தற்செயலாகக் காரின் பின்சீட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த ஏதோ ஒரு பொருள் அவளைக் கவர்ந்தது. முகத்தை நன்றாகத் திருப்பி அதைப் பார்த்தாள்.  அது ஒரு லேடீஸ் ஹேண்ட்பேக்! மாதவிக்கு அவள் பரிசளித்த அதே ஹேண்ட்பேக்!

 (தொடரும்)


  • இராய செல்லப்பா,  நியூஜெர்சியில் இருந்து.


செவ்வாய், ஆகஸ்ட் 16, 2022

மணிகர்ணிகா (16) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா (16) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  113 வது நாள்:  02-8-2022)


வீடியோவில் தன் தங்கை மகள் மணிகர்ணிகாவைப் பார்த்தபோது மறைந்துபோன தன் உடன்பிறந்த தங்கையைப் போலவே அச்சு அசலாக அவள் இருந்ததைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார் ரங்கநாத்.   அவருடைய மனைவி சாமுண்டீஸ்வரியும் ஆமோதித்தாள். 


“மணிக்கா, இப்பவே ஓடிவந்து உன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் போல் பரபரப்பாக இருக்கிறது எனக்கு” என்றார் ரங்கநாத். “எனக்கும்தான், கண்ணம்மா!” என்றாள் சாமுண்டீஸ்வரி. ஒரு ஸ்டார் ஹோட்டலின் அறையிலிருந்து அவர்கள் பேசினார்கள்.


பிரிந்த குடும்பம் ஒன்றுசேரப்போகும் தருணம் என்பதால் மாதவி வீடியோவில் வராமல் தூரமாக நின்றுகொண்டு அவர்கள் பேசுவதைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். நவீன் ஆனந்தப் பரவசத்தில் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. 


பெர்த் நகரம், ஆஸ்திரேலியா 

“மணிக்கா, ஒன்று கேட்கட்டுமா? நீ எப்போது உன்னுடைய சொத்துக்களை ஏற்றுக்கொள்ளப் போகிறாய்? அதை உன்னிடம் கொடுத்தால்தான் எங்கள் மனத்திலுள்ள பாரம் நீங்கும். விஜயவாடாவில் பதினாலு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் ஒரு பிசினஸ் பார்க் கட்டவேண்டுமென்று நவீன் விரும்புகிறான். நீ அதைப் பார்க்கவேண்டாமா? அல்லது உன் விருப்பம் வேறாக இருந்தால் அதன்படியே செய்யலாம்…..” என்று ரங்கநாத் தொடர்ந்தார். 


“நீ தாண்டா கண்ணு எங்க வீட்டுக்கு ராணி! நீ என்ன சொல்றியோ அதையே நவீன் செய்வான். அதனால் நீ ஒருதரம் விஜயவாடா  போய், இடத்தைப் பார்த்துவிடு. அப்புறம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் நம்ப வீட்டையும் பார்க்கவேண்டும்….” என்றாள் சாமுண்டீஸ்வரி.     


இருவர் கண்ணிலிருந்தும் இன்னும் கண்ணீர் வழிந்துகொண்டுதான் இருந்தது. 


மணிகர்ணிகாவின் முகத்தில் உணர்ச்சி வசப்பட்டதற்கான அறிகுறி கொஞ்சமும் இல்லை. தெளிவாக இருந்தாள். கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டபின் பேச ஆரம்பித்தாள்.


“மாமா, மாமி! உங்களையெல்லாம் சந்திக்க முடியும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. என் வாழ்க்கையில் இது ஓர் அற்புதம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இந்தப் புது வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதில் எனக்குத்  தயக்கமாக இருக்கிறது. காரணம் பெற்ற பெண்ணையே கொல்லத்  துணிந்தவர் தாத்தா என்னும்போது, அவருடைய ரத்தக்கறை படிந்த சொத்தை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? இருபது வருடம் தந்தை தாயின் அன்பையே காணாத எனக்கு, இந்தச் சொத்தை ஏற்றுக் கொள்வதால்  இழந்த அன்பெல்லாம் திரும்பக் கிடைத்து விடுமா?  எனக்கு வேண்டவே வேண்டாம். அதில் பிசினஸ் பார்க் கட்டினாலும் சரி, பெரிய அரண்மனையே கட்டினாலும் சரி, அது உங்கள் இஷ்டம். ஆனால் நான் ஒரு  முடிவுக்கு வந்திருக்கிறேன்..” என்று நிறுத்தினாள். மூவரும் அவள் முகத்தையே கவனமாகப் பார்த்தார்கள்.


மணிகர்ணிகா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். முகத்தில் உறுதியை வரவழைத்துக்கொண்டாள். பிறகு பேசினாள்:


“மாமா, மாமி, நவீன் உங்கள் மூவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. நீங்கள் இத்தனை வருடமாக என்னைத் தேடிக் கொண்டிருப்பதும், சொத்தைப் பாதுகாத்து வைத்திருப்பதும், நவீனுக்கு என்னைத் திருமணம் செய்ய முன்வந்திருப்பதும்   வேறு எந்தக் குடும்பத்திலாவது நடக்குமா என்று தெரியாது. முகமே தெரியாத ஒருத்திக்காக நவீனும் இவ்வளவு நாட்கள் திருமணம் செய்துகொள்ளாமல் காத்திருப்பதும் அதிசயமான விஷயமே. அந்த ஒரே ஒரு காரணத்திற்காக ….” என்று ஒருகணம் நிறுத்தி, நவீனின் முகத்தை உற்றுப் பார்த்தாள். மாதவியும் அவள் சொல்லப்போவதைக் கேட்கக் காதுகளைத் தீட்டிக்கொண்டாள்.


“சொல்லும்மா, சொல்லும்மா” என்றார்    சாமுண்டீஸ்வரி.


“அந்த ஒரே காரணத்திற்காக நவீனைத் திருமணம் செய்துகொள்ள நான் சம்மதிக்கிறேன். ஆனால்…” 


சாமுண்டீஸ்வரி பரபரப்புடன், “நீ  சம்மதிச்சதே போதும்டி கண்ணு! ஒன் கண்டிஷன் என்னவா இருந்தாலும் நாங்க ஏத்துக்கறோம். தெளிவாச் சொல்லிடும்மா” என்றாள். 


“நான் இப்பத்தான் கல்லூரியில்  இருந்து வெளி உலகுக்கு வந்திருக்கிறேன். ஒரு வேலையில் சேர்ந்து என் சொந்தக் காலில்  நிற்கவேண்டும். அதன் பிறகுதான் திருமணத்திற்கு என் மனம் தயாராக முடியும். அத்துடன் நவீன் என்பவரைப் பற்றி ஆனா ஆவன்னா கூட எனக்குத் தெரியாது. அதே போல் என்னைப் பற்றி, என்னுடைய குணாதிசயங்களைப்  பற்றி, என் வாழ்க்கையின் லட்சியங்களைப் பற்றி அவருக்கோ உங்களுக்கோ எதுவும் தெரியாது. ஆகவே முதலில் நாங்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளவேண்டும்…”


ரங்கநாத்துக்கு மெய் சிலிர்த்தது. “மணிக்கா, ஒங்க அம்மாவை அப்படியே உரிச்சு வச்சிருக்கே நீ! அவளும் இப்படித்தான். ஒரு வார்த்தை பேசினாலும் அதையே கடைசி வரை உறுதியா பேசுவா. அவளை மாத்தவே முடியாது…” என்றவர், “அந்தப் பிடிவாத குணம்தானே அவளுக்கு எமனா முடிஞ்சுது! அதனால கொஞ்சம் விட்டுப் பிடிக்கிற குணம் இருக்கணும்மா..” என்றார்.


அதற்குள் சாமுண்டீஸ்வரி குறுக்கிட்டு, “கொழந்தை என்ன சொல்றாளோ கேளுங்களேன், என்ன அவசரம்?” என்றாள்.


மணிகர்ணிகா தொடர்ந்தாள். “அதற்கு எங்களுக்கு மூன்று வருடம் தேவைப்படும் என்று தோன்றுகிறது. அதுவரை பொறுப்பாரா மிஸ்டர் நவீன்?” என்றாள் அவனைப் பார்த்து, புன்னகையுடன்.


‘சபாஷ்! நீ புத்திசாலி!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் மாதவி.


நவீன் “உனக்காக மூன்று வருடம் காத்திருப்பது எனக்கொன்றும் பெரிய விஷயமில்லை. நீதான் பார்த்தாயே, இப்போது இருநூறு என்ஜினீயர்களை ரெக்ரூட் செய்திருக்கிறேன். கம்பெனியை விரிவுபடுத்தியாகவேண்டும். அதற்கு நிச்சயம் மூன்று வருடம் எனக்கும் தேவைப்படும்தான். ஆனால்…” என்று தன் தந்தையை நோக்கினான். “ஆஸ்திரேலியா…” என்றான்.


“ஆமாம், மணிக்கா, உன்னுடைய முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இத்தனை வருடம் உனக்காகப் பொறுத்திருந்தோம், இன்னும் மூன்று வருடம் பொறுக்கமாட்டோமா? பொறுக்கிறோம். ஆனால் எங்கள் பொறுமைக்காக நீ ஒரு சலுகையை வழங்கவேண்டும்” என்றார் ரங்கநாத். 


நவீன் தொடர்ந்தான். “மணிக்கா, என் கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது. அதே போல் துபாயிலும் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் கிடைத்திருக்கிறது. முதலில் ஆஸ்திரேலியாவைக் கவனிக்க வேண்டும். அதற்கு உன்னுடைய சலுகை வேண்டியிருக்கிறது” என்றான். 


மணிகர்ணிகா புரியாமல் விழித்தாள். 


“ஆஸ்திரேலியாவுக்குப் போவதென்றால் விசா வாங்கவேண்டும். தனி நபர் விசாவை விட கணவன், மனைவி இருவரும் சேர்ந்து விண்ணப்பித்தால்  ‘ஃபேமிலி விசா’ கிடைப்பது சுலபம். அதனால்….”


“அதனால்?” என்றாள் மணிகர்ணிகா.


“அதனால் எனக்கு உடனடியாக  ஒரு ஃபேமிலி வேண்டும்” என்றான் நவீன். அப்போதுதான் மணிகர்ணிகாவுக்குப் புரிந்தது.


“உங்கள் அவசரத்தைப் பார்க்கும்போது எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது. எப்படியாவது என்னை உங்கள் மனைவியாக்கிக்கொள்ள வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறீர்களோ என்று தோன்றுகிறது, மிஸ்டர் நவீன்!”


மாதவி அலுத்துக்கொண்டாள். ‘அடி அசட்டுப் பெண்ணே! அனாதையாக இருந்தவளுக்கு அதிர்ஷ்டம் கூடிவருகிறது. விலகி விலகிப் போகிறாயே!’


ரங்கநாத் நிலைமையைப் புரிந்துகொண்டார். தானே நேரில் வந்து மணிகர்ணிகாவைச் சந்தித்தால்தான் மேற்கொண்டு காரியங்கள் நடக்கும். “இரண்டே நாள் பொறு, மணிக்கா! நானும் உன் மாமியும் பெங்களூர் வருகிறோம். நேரில் பேசினால் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும். அதுவரை நீ தங்குவதற்கு பெங்களூரில் சரியான இடம் இருக்கிறதா? இல்லை, சர்வீஸ் அபார்ட்மெண்ட் நல்லதாகப் பார்த்து ரிசர்வ் செய்யட்டுமா?”


தன்னை மீறிக்கொண்டு  விஷயங்கள் வேகமாக  நடப்பது மணிகர்ணிகாவுக்கு வியப்பாகவும் திகைப்பாகவும் இருந்தது. மாதவி ஏதாவது ஆலோசனை சொல்வாளோ என்று அவளைத் தேடினாள்.


“இன்னும் ஒருவாரம் என்னோடு நீ தங்கலாம். அடுத்த வாரம் தான் நான் மும்பாய் போகிறேன்” என்றாள் மாதவி.


****

சொன்னபடியே நேரில் வந்தார்கள் மாமாவும் மாமியும். அவர்களைப்  பார்த்தவுடன், தான் பார்த்தறியாத தந்தையையும் தாயையும் பார்த்ததுபோலவே இருந்தது மணிகர்ணிகாவுக்கு. அவர்களின் பாசத்தில் நெகிழ்ந்து போனாள். 


தான் ஒரு வங்கியில் எக்சிக்யூட்டிவ் டைரக்டராக இருப்பதாகச் சொன்னார் ரங்கநாத். அது எப்படிப்பட்ட பதவி என்று அவளுக்குத் தெரியவில்லை. “அப்படியா, உங்கள் வங்கியில் எனக்கு ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறேன்” என்றாள் பெருமிதத்துடன். 


சாமுண்டீஸ்வரிக்கு அவளுடைய அப்பாவித்தனத்தைக் கண்டு சிரிப்பு வந்தது. “மணிக்கா, நீ நினைத்தால் அதை இரண்டு லட்சம் ஆக்கலாம், ரெண்டு கோடி ஆக்கலாம். நீ பணக்காரி என்பதை மறந்துவிடாதே” என்றாள். “ஆனால் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன என்பதை நீ தெரிந்துகொள்ளவேண்டும்.  நவீன், தாமதம் பண்ணாம ஆகவேண்டியத கவனி.”


நவீன் அவளருகில் வந்து உட்கார்ந்தான்.   அது ஏர்போர்ட் அருகில் இருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல். காலை ஒன்பதுமணி. சர்வரிடம் “பொங்கல் வடை, வெங்காய ஊத்தப்பம்” என்றான். 


“எனக்கு ஆர்டர் செய்துவிட்டீர்கள். உங்களுக்கு?” என்றாள் மணிகர்ணிகா.  


“அப்படியா? உங்களுக்கும் அதுதான் பிடிக்குமா?” என்று ஆச்சரியப்பட்டான் நவீன். “நான் எனக்காகத்தான் ஆர்டர் செய்தேன். பரவாயில்லை, இந்த ஒரு விஷயத்திலாவது என்னோடு ஒத்துப்போகிறீர்களே!” என்றவன், “பொங்கல் வடை, வெங்காய ஊத்தப்பம் இன்னொரு செட்” என்று சர்வரிடம் கூறினான்.  


“நவீன், என்னை நீ என்று சொன்னாலே போதும். நீங்கள் எல்லாம் வேண்டாம். அது சரி, என்னை எதிலும் ஒத்துப்போகாதவள் என்று முடிவே கட்டிவிட்டீர்களா?” என்று கோபமாகக் கேட்டாள்.


“உஷ், உன்னுடைய மாமா, மாமி நம்மையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். மெதுவாகப் பேசு. நான் சண்டை போடுவதாக அவர்கள் நினைத்துவிடக் கூடாது.”


“அதற்காக? நான்தான் சொல்லிவிட்டேனே, கல்யாணத்திற்கு இன்னும் மூன்று வருடம் வேண்டும் என்று? பிறகு ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?”


“பொங்கல் அருமையாக இல்லை?” என்று பேச்சை மாற்றினான் நவீன். “இந்த இஞ்சியையும் முழு மிளகையும் ஒரு கடி கடித்துவிட்டுப்  பொங்கலைச் சுவைத்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது தெரியுமா?”


அவனை ஒரு வெட்டு வெட்டினாள் மணிகர்ணிகா. “அப்படியா, இந்தாருங்கள், என்னுடைய இஞ்சியையும் மிளகையும் நீங்களே கடித்துக்கொள்ளுங்கள்” என்று ஸ்பூனை அவனிடம் நீட்டினாள்.    

 

அவனோ அதை லபக்கென்று தன்  வாய்க்குள் போட்டுக்கொண்டு ஸ்பூனைத் திருப்பிக்கொடுத்தான். 


“என்ன இது, உன்னுடைய மிளகிலும் இஞ்சியிலும்  காரமே இல்லை! இனிப்பாக அல்லவா இருக்கிறது? என்ன அதிசயம்!” என்றான் அவள் முகத்துக்கு அருகில் தன்  முகத்தை வைத்துக்கொண்டு.


அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. மெல்லிய குரலில், “போதும், நான் இன்னும் உங்கள் மனைவியாகி விடவில்லை என்பது நினைவிருக்கட்டும். இந்த அசட்டு உளறல்களை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றாள்.


“அதானே, உண்மையைச் சொன்னால் பெண்கள்  ஒப்புக்கொள்ள  மாட்டார்கள் என்று காந்தியடிகள் சொன்னது நிஜமாகிறது” என்றான் நவீன் குறும்பாக. 


“அப்படியா, காந்தியடிகள் எங்கே, எப்போது, யாரிடம் சொன்னார் என்று ஆதாரம் காட்ட முடியுமா?”


“விடு, காந்தியடிகள் இல்லாவிட்டால்  கண்ணதாசன் சொல்லியிருப்பார். எங்கோ படித்தது. இதையெல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்கக் கூடாது….சரி, இனிப்பான மிளகும் இஞ்சியும் இன்னொரு ஸ்பூன் கிடைக்குமா?” என்றான்.


“டொக்கு” என்று வலதுகை ஆள்காட்டி விரலை மடக்கிக் காட்டினாள் மணிகர்ணிகா. குழந்தைகள் விளையாடும்போது ஒருவர் மற்றவரைக் கேலிசெய்யும் விதம் அது.


அதற்குள் தங்கள் காலை உணவை முடித்துவிட்ட ரங்கநாத்தும் சாமுண்டீஸ்வரியும் அவர்களை நெருங்கி, “இன்னும் முடியவில்லையா? அவசரமில்லை, நிதானமாகச் சாப்பிடுங்கள். நாங்கள் அறையில் காத்திருக்கிறோம்” என்று கிளம்பினார்கள்.


மறுநாள் தாங்கள் செய்யவேண்டிய முக்கியமான கடமையைப் பற்றி மன ஒற்றுமையோடு நவீனும் மணிகர்ணிகாவும் அங்கிருந்து எழுந்திருக்க மேலும்  ஒரு மணிநேரம் ஆயிற்று. 


அதன்படி, முதலில் இஸ்கான் கோவிலுக்குச் சென்று அந்த ராதா-கிருஷ்ணரின் சந்நிதியில் வாழ்நாள் முழுதும் தன்னைப் பிரிய மாட்டேன் என்று தனக்குச் சத்தியம் செய்து தரவேண்டும் என்றாள். அப்படியே செய்தான் நவீன.


பிறகு அனைவரும் கோலார் கிளம்பிச் சென்றார்கள். ரங்கநாத்தின் வங்கிக்கிளையின் மேலாளர் ஜான் நாயுடு அவர்களை வரவேற்று, திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். வங்கியின் கடைநிலை ஊழியராக இருந்த ராஜா சாட்சிக் கையெழுத்திட்டார். பத்தே நிமிடத்தில் முடிந்துவிட்ட சடங்கின் முடிவில் நவீனும் மணிகர்ணிகாவும் கணவன்-மனைவி ஆகிவிட்ட சான்றிதழ் கிடைத்து, அடுத்த பத்து நாட்களில் அவர்களுக்கு ஆஸ்திரேலியா செல்வதற்கு ஃபேமிலி விசா கிடைத்துவிட்டது. 


இந்த சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காக மாதவியை அழைத்தாள் மணிகர்ணிகா. தன்னுடைய அன்பின் வெளிப்பாடாக முழுதும் தோலினால் ஆன, பிரான்சில் செய்யப்பட்ட, ஒரு விலை உயர்ந்த தோள்பையை, பிரிகேட் ரோடில் ஓடிப்போய் வாங்கிவந்து கொடுத்தாள். மாதவிக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. மணிகர்ணிகாவை அணைத்து முத்தமிட்டாள் அவள்.    

ராஜாவுக்கு அவர் கேட்டபடியே சென்னைக் கிளைக்கு மாறுதல் கிடைத்துவிட்டது. ஜான் நாயுடுவுக்குச் சென்னை மண்டலத்தின் ரீஜினல் மேனேஜராகப் பதவி உயர்வு கிடைத்தது.  மணிகர்ணிகாவின் பதிவுத் திருமணம் ரகசியமாக இருக்கவேண்டிய விஷயம் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன? 


அடுத்த மாதம் நவீனுடைய மென்பொருள் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தன் அலுவலகத்தைத் தொடங்கியது. குடியிருப்பதற்கு ஈஸ்ட் பெர்த் பகுதியில் ஒரு அழகான வீட்டை வாடகைக்கு எடுத்தான் நவீன். சமையலறையும் வரவேற்பறையும் நூலகமும் தரைத்தளத்தில் இருந்தன. முதல் மாடியில் நவீனும் இரண்டாவது மாடியில் மணிகர்ணிகாவும் தனித்தனியாகத் தங்கினார்கள். மூன்று வருடம் முடியும்வரை அப்படித்தான் இருக்கவேண்டும் என்பதுதானே அவர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம்?


(தொடரும்)

       -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து 

    

இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (17) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.