செவ்வாய், மார்ச் 21, 2017

இளையராஜாவின் மாபெரும் தவறு

பதிவு எண்  21/2017
 இளையராஜாவின் மாபெரும் தவறு
-இராய செல்லப்பா

இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், இனிமேல் அவருடைய பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு

கடந்த இரண்டு நாட்களாகச் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி இதுதான். இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தமிழ்த் திரையுலகுக்கு ஏராளமான இனிய பாடல்களை வழங்கியுள்ளனர்.
Picture courtesy: the Net
எஸ்.பி.பி. திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து SPB-5 என்ற பெயரில் இசை  நிகழ்ச்சி நடத்தி வருகிறார். தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்:

அமெரிக்காவிலிருந்து அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சியாட்டெல், லாஸ் ஏஞ்சலஸ் மாகாணங்களில் கடந்த வாரம் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். தாங்கள் காட்டிய அன்புக்கு நன்றி.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையராஜாவின் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு சட்ட நோட்டீஸ்களை அனுப்பியிருந்தார்.

என்னுடன் பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தன.

அதில், இளையராஜாவிடம் முன் அனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தால், மேடைகளில் பாடினால், அது காப்புரிமை மீறலாகும். அவ்வாறான உரிமை மீறலுக்குப் பெருந்தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும். சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்பிபி 50 என்ற இந்த நிகழ்ச்சி எனது மகனால் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் டொரண்டோவில் இந்நிகழ்ச்சியை துவக்கினோம். பின்னர் ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபய் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போதெல்லாம் இளையராஜாவிடமிருந்து எனக்கு எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. ஆனால், இப்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதும் மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்பது எனக்குப் புரியவில்லை.

ஏற்கெனவே கூறியதுபோல், எனக்கு இச்சட்டம் குறித்து தெரியாது. இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டியது எனது கடமை. இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை. அதே வேளையில், ஏற்கெனவே ஒப்புக் கொண்டதுபோல் நிகழ்ச்சியையும் நடத்தியாக வேண்டும். இறைவன் அருளால் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் நான் அதிகளவில் பாடியிருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனது நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் பேரன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இத்தருணத்தில், எனது வேண்டுகோள் எல்லாம் இப்பிரச்சினை தொடர்பாக எவ்வித கடுமையான வாதங்களையும் கருத்துகளையும் முன்வைக்க வேண்டாம் என்பது மட்டுமே. இது கடவுளின் கட்டளை என்றால் அதை நான் பணிவுடன் கடைபிடிப்பேன்.

பல்வேறு வெற்றி பாடல்களைக் கொடுத்த இளையராஜா- எஸ்.பி.பி. கூட்டணியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரிவினையால் இசை ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

****
இது பற்றிக் கவிஞர் தாமரை கூறுவதைப் பார்ப்போமா?

திருத்தப்பட்ட காப்பிரைட் சட்டத்தின்படி இப்போதுள்ள சட்ட நிலைமையைக் கவிஞர் தாமரை ஒரு முகநூல் பின்னூட்டத்தில் இப்படிச் சுட்டிக் காட்டியுள்ளார்: ‘ஒரு பாடலின் வருமானத்தில் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே காப்பிரைட் சட்டத்தின்படி பங்கு உண்டு: ஆளுக்கு மூன்றில் ஒரு பங்கு’.
அதாவது, இந்த மூவரைத் தவிர மற்றவர்களுக்கு உரிமை கிடையாது.
குறிப்பாக, திரைப் பாடகருக்கு, தான்  பாடிய திரைப்படலின் மீது காப்பிரைட் கிடையாது. ஏனெனில் அந்தப்பாடலைப் பாடுவதற்கு அவர் ஏற்கெனவே சம்பளம் வாங்கியாகிவிட்டது. பாடும்போது தன் குரலைப்  பயன்படுத்திப் பாடியதற்குத்தான் சம்பளம் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவரது உரிமை முடிந்துவிட்டது. (His rights became extinguished.) ‘எனக்கே உரிய தனிப் பாணியில் பாடினேன், ஆகவேதான் பாடல் சிறப்பாக வந்தது, நான் பாடவில்லை என்றால், இளையாராஜாவே தன் சொந்தக்குரலில் அப்பாடலைப் பாடியிருந்தால், அப்பாடல் பிரபலம் அடைந்திருக்குமா? எனவே, ஒரு பாடலைப் பிரபலப்படுத்துபவன் பாடகன் தான். அவனுக்கு காப்பிரைட்டில் பங்கு உண்டு’ என்று வாதாடுவதற்குச் சட்டத்தில் இடமில்லை.  இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுவே நிலை. ஆகவேதான் எஸ்.பி.பி. தன் ரசிகர்களைப் பொறுமை காக்குமாறு கூறியிருக்கிறார். இளையராஜாவின் மீது கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். 

தான் இசையமைத்த பாடல்களைத் தன்னுடைய அனுமதியின்றிப் பாடுவதற்கு, சம்பந்தப்பட்ட பாடகர்களுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்று இளையராஜா சொன்னால், அவரை ஏதோ மாபெரும் தவறு செய்துவிட்டவர் மாதிரி  முகநூலிலும் வாட்சப்பிலும் நமது வழக்கமான அரைகுறை ஆசாமிகள் வாங்குவாங்குவென்று வாங்குவதில் எந்த அர்த்தமும் கிடையாது. சட்டம் என்ன சொல்கிறதோ அதைத்தான் இளையராஜா சொல்லியிருக்கிறார். அவரை எதிர்த்து எந்தப் பாடகர் எந்தக் கோர்ட்டுக்குச் சென்றாலும்- குமாரசாமியே நீதிபதியாக இருந்தாலும்- அது செல்லாது என்பது தெளிவு.

கும்பலோடு கோவிந்தாவாக, இன்னொரு சினிமாக் கவிஞரான மதன் கார்க்கி (வைரமுத்துவின் மகன்), இதுதான் சாக்கு என்று இளையராஜா மீது இன்னொரு குற்றச்சாட்டை வைக்கிறார்.  பாடலின் காப்பிரைட்டுக்கு அந்த மூவர்தானே சொந்தம், அப்படியானால் பாடலாசிரியருக்கு உரிய காப்பிரைட் பங்குப் பணத்தை இளையராஜா கொடுத்திருக்கிறாரா என்கிறார். அதாவது, வைரமுத்துவுக்கு வரவேண்டிய பங்குத்தொகை இன்னும் இளையராஜாவிடமே இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இது சரி என்றால், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மீது சுற்றம் சாட்டும் இளையராஜா, தன்மீதுள்ள குற்றத்தை உடனே களைய முற்படவேண்டும். 

வைரமுத்துவுக்கும், முத்துலிங்கத்துக்கும் தராவிட்டாலும் பரவாயில்லை, அமரராகிவிட்ட வாலிக்கும், நா.முத்துக்குமாருக்கும் மட்டுமாவது பாக்கியைத் தீர்த்துவிடவேண்டும். அதுதான் சட்டப்படி சரியான நடவடிக்கை. ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கின்.. என்கிறார் வள்ளுவர். அவரும் பாவம், ராயல்டி வாங்காமலே போய்விட்டவர்தானே!
****
சூலமங்கலம் சகோதரிகளின் வழக்கு(1999)

கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் ஆகிய இரண்டு பக்திப் பாடல்களையும்  முதன்முதலில் இசையமைத்துப் பாடி மக்களிடையே பரப்பியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள் என்று அழைக்கப்படும் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி. ஆவர். இப்பாடல்கள் முதலில் இசைத்தட்டுக்களாகவும்,  பிறகு கேசட்டுகளாகவும், பிறகு சி.டி.க்களாகவும் HMV என்றழைக்கப்படும் ‘கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியா’வினால் வெளியிடப்பட்டு, 1975 முதல் இன்றுவரை, உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்து வந்துள்ளன. இன்றும், காலையில் திருப்பதி வேங்கடவனின் சுப்ரபாதமும், சூலமங்கலத்தின் கந்த சஷ்டி கவசமும் ஒலிக்காத பயண வண்டிகள் கிடையாது. அன்றாடம்  குறிப்பிட்ட நேரத்தில் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் சூலமங்கலம் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்.

நல்ல பொருள் ஒன்று வந்தால், உடனே போலிகளும் வருவதுதானே இயற்கை! சூலமங்கலம் சகோதரிகளின் படத்தை மேலுறையில் போட்டு, அவர்கள் பாடியதை  அப்படியே பிரதி எடுத்து,  போலியான சி.டி.க்களைச் சில நிறுவனங்கள் தயாரித்துக் கடைகளில் விற்பனை செய்யலாயினர்.

வேறு சில நிறுவனங்களோ, சூலமங்கலம் பாடிய அதே ராகம் மற்றும் பின்னணி இசையில், வேறு பாடகிகளைப் பாடவைத்து, மேலுறை மட்டும் HMVயில் உள்ள மாதிரியே சூலமங்கலத்தின் படத்தைப் போட்டு விற்பனை செய்தனர். உள்ள பாடியிருப்பது வேறுநபர்கள் என்ற தகவல் மேலுறையில் வெளியிடப்படவில்லை.

இசைத்தட்டுக்களைப் பொறுத்தவரையில் மிகவும் விலை குறைந்த காசெட்டுகளும், சி.டி.க்களும்தான் அதிகம் விற்பனையாகும். உதாரணமாக, HMV-இன் சி.டி. 22 ரூபாய்க்கு விற்றபோது, போலி சிடிக்கள் பத்து ரூபாய்க்கே கிடைத்தன. இதனால் பெருத்த இழப்புக்கு ஆளான சூலமங்கலமும், HMVயும் அந்தப் போலி  நிறுவனங்களைக் கையும் களவுமாகப் பிடித்து வழக்குத்  தொடர்ந்தனர். (ராஜலட்சுமி முன்பே காலமாகிவிட்டதால், அவர் சார்பாகவும் தன் சார்பாகவும்)  ஜெயலட்சுமி இசையமைப்பாளர் என்ற முறையிலும்,  HMV நிறுவனம் தயாரிப்பாளர் என்ற முறையிலும் இந்த வழக்கைத் தொடர்ந்தார்கள்.

இந்த வழக்கில் இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் ஆகிய மூவருக்குமான காப்பிரைட் சட்டம் பற்றிய ஆழமான விவாதம் நடைபெற்றது.

போலிகளை வெளியிட்ட நிறுவனங்கள் பின்வரும் வாதத்தை முன்வைத்தன:

1. சி.டி.யின் ஒரு பக்கம் கந்த சஷ்டி கவசமும் மறுபக்கம் கந்த குரு கவசமும் பாடப்பட்டுள்ளன. இவற்றில், கந்த சஷ்டி கவசம் இயற்றியவர் தேவராய சுவாமிகள். பல ஆண்டுகளாக மக்களின் செவிவழியே பாடப்பட்டுவரும் பக்திப்பாடல் இது. அவர் துறவி. மறைந்தும் விட்டார். எனவே இப்பாடல், சூலமங்கலத்தின் காப்பிரைட் ஆக முடியாது.

2. மறுபக்கத்தில் இடம் பெற்றுள்ள கந்த குரு கவசம், புதுக்கோட்டை சாந்தானந்த சுவாமிகள் இயற்றியது. அவர் ஒரு துறவி. பாடலோ பக்திப்பாடல். உலகையே துறந்துவிட்ட ஒருவருக்கு அவரே எழுதிய பாடலின் மீது மட்டும் எப்படி உரிமை இருக்கமுடியும்? எனவே இப்பாடல் அனைவருக்கும் உரிமை உள்ளதாகவே கருதவேண்டும். இந்தப் பாடலுக்கும் சூலமங்கலம் காப்பிரைட் கோர முடியாது.

3. மேற்படி இரண்டு பாடல்களுக்கும் தானே மெட்டமைத்துப் பாடியிருப்பதால் அவற்றின் காப்பிரைட் தனக்கு வரும் என்று அவர் கோரமுடியாது. ஏனெனில், அவர் பயன்படுத்தியிருப்பது, கர்நாடக இசையின் ராகம், தாளம் போன்றவை.  பல்லாயிரம் ஆண்டுகளாக இலவசமாக இருந்து வருபவை.

சூலமங்கலம் சார்பில் கொடுக்கப்பட்ட வாதம் இது:

1. கந்த சஷ்டி கவசம் என்ற பாடல் மீதல்ல, பாடலுக்கு அமைத்த இசையின்மீதுதான் உரிமை கோருகிறோம்.

2. கந்த குரு கவசம் என்ற பாடலின் மீது எங்களுக்கு உரிமை உண்டு. ஏனெனில், சாந்தானந்த சுவாமிகள் எங்களை அழைத்து, அப்பாடலைப் பிரபலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டு, அப்பாடலின் உரிமையை எங்களுக்கு ஒப்பந்தம் மூலம் அளித்துள்ளார். அதன் பேரில் இசையமைத்துப் பாடியுள்ளோம். எனவே, பாடல், இசை இரண்டுக்கும் எங்களுக்கு முழு உரிமையுள்ளது.

3. நாங்கள் தமிழ்ச் சமூகத்தில் பிரபலமான பாடகிகள். அதன் காரணமாகவே, நாங்கள் இசையமைத்துக் கொடுத்த மேற்படி இரண்டு பாடல்களையும் HMV நிறுவனம் வெளியிட ஒப்புக்கொண்டது. இதற்கான எழுத்துமூலமான ஒப்பந்தம் உள்ளது. எனவே, மேற்படி இரண்டு பாடல்களையும் ஒரே இசைத்தட்டாகவோ, கேசட்டாகவோ வேறு வடிவிலோ வெளிடும் உரிமையை  HMVக்கு மட்டுமே வழங்கியிருக்கிறோம்.

இந்த வழக்கை மிகுந்த ஆர்வமுடன் விசாரித்தார் நீதிபதி கற்பகவிநாயகம் அவர்கள். (தம்பி முருகனின் பாடல் வழக்கை அண்ணன் (கற்பக) விநாயகம் விசாரிப்பது எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!) 

போலி நிறுவனங்கள் வெளிட்ட சிடிக்களையும், சூலமங்கலத்தின் மூல சிடியையும் தனித்தனியே கவனமுடன் கேட்டுக்கொண்ட நீதிபதி, சூலமங்கலம் -HMV சிடி யின் நகல்தான் இப்போலி நிறுவனங்கள் வெளியிட்டிருப்பது என்று முடிவு செய்தார். மேற்கொண்டு அவர்கள் இம்மாதிரி போலித் தயாரிப்புகளை வெளியிடத் தடை உத்தரவு பிறப்பித்தார். கந்த சஷ்டி கவசம்-கந்தகுரு கவசம் இசைத்தட்டின் காப்பிரைட் HMV-சூலமங்கலம் இவர்களுக்கு  மட்டுமே உண்டு என்றும் தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பின்போது காப்பிரைட் சட்டத்தின் பல பிரிவுகளை அவர் விளக்கமாக ஆராய்ந்தார்.

இந்திய காப்பிரைட் சட்டம் 1957 பிரிவு 2 (p) யில் இசை அமைப்பு -Musical Work என்றால் என்ன என்று வரையறுக்கப்பட்டுள்ளது: அது இசையின் எந்த வடிவமாகவும் இருக்கலாம், இசைக்குறிப்புக்களும் (notations) அதில் அடங்கும். ஆனால் இசைக்கான எழுத்துவரிகளோ (lyrics), எப்படி இசைக்கவேண்டும் என்பதற்கான வழிமுறைகளோ அதற்குள் அடங்காது.
பிரிவு 2(d) இல் ஆக்கியோன்/இயற்றியவன் -Author என்பதற்கான வரையறை தரப்பட்டு உள்ளது.
(i) இலக்கியம், நாடகம் எனில், அதை எழுதியவனே, ஆக்கியோன் ஆகிறான்.
(ii) இசை அமைப்பு (Musical work) எனில், இசைத்தொகுப்பாளனே (Composer) அதன் ஆக்கியோன் ஆகிறான்.
இசைத்தொகுப்பாளன் -Composer -என்பதன் வரையறையை, பிரிவு 2(ffa) தருகிறது: இசையைத் தொகுப்பவன்  யாரோ அவனே இசைத்தொகுப்பாளன். (அதாவது மெட்டமைத்து, பாடக்கூடிய விதத்தில் உருவாக்கம் செய்பவன்.) அந்த இசையை அவனேயோ அல்லது வேறு யாரோ பதிவு (record) செய்திருக்கலாம் அல்லது இசைக்குறிப்புக்கள் (notations) எழுதியிருக்கலாம்.

எந்தெந்த ஆக்கங்களுக்கு காப்பிரைட் சட்டம் அமலாகும் என்பதைப் பிரிவு 13(i) கூறுகிறது. முதல்முறையாக ஆக்கப்பட்ட இலக்கியம், நாடகம், இசை, மற்றும் கலை சம்பந்தமான ‘ஆக்கங்கள்’ -works- அனைத்திற்கும்- இந்தியா முழுமைக்கும்- இந்தச் சட்டம் பொருந்தும் என்கிறது.

எல்லாம் சரி, காப்பிரைட் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம், என்ன வரையறை? அதைப் பிரிவு 14 கூறுகிறது.

14 (a) இலக்கியம், நாடகம், இசை, மற்றும் கலை சம்பந்தமான ‘ஆக்கங்களை’ -works-பொறுத்தவரை, காப்பிரைட் என்றால் மேற்படி ஆக்கங்களில் முழுதாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பகுதிக்கோ,  கீழ்க்கண்ட செயல்களை (தானே) செய்யவும் அல்லது செய்யுமாறு (மற்றவர்களுக்கு) உத்தரவிடவுமான விசேஷ உரிமையாகும் (exclusive right):
(i) அந்த ஆக்கத்தைப் பிரதி எடுப்பது (reproduction); மின்மயமான (electronic) அல்லது வேறொரு ஊடகத்தில் சேமித்துவைப்பது.(storing).
(iv) அந்த ஆக்கத்தையோ, அல்லது அதன் பகுதியையோ, திரைப்படமாக்குதல் அல்லது ஒலிப்பதிவு (sound record) செய்தல்.

14 (e) ஒலிப்பதிவு செய்வதானால்:
 (i) original ஒலிப்பதிவுடன் வேறெந்த (பின்னணி முதலிய) ஒலிப்பதிவுகளைக் கலத்தல்.
 (iii) அப்படிச் செய்த ஒலிப்பதிவை மக்களுக்கு வெளியிடல்.

காப்பிரைட்டின் உரிமையாளர் யார் என்பதை இன்னும் வரையறுக்கவில்லையே! அதைப் பிரிவு 17 செய்கிறது. முன்னர் பிரிவு 2(d) இல் ‘author’ -ஆக்கியோன்- என்பதை வரையறுத்தோம் அல்லவா, அந்த ஆக்கியோனைத்தான் காப்பிரைட்டின் முதல் உரிமையாளன் -First Owner of Copyright - என்று பிரிவு 17 சொல்கிறது.

(முதல் உரிமையாளனிடமிருந்து முறையாக ஒப்பந்தம்செய்து கொண்டு இன்னொருவன் அந்த உரிமையைப் பெறலாம். அப்போது அவன் இரண்டாவது உரிமையாளன் என்று அழைக்கப்படுவான்.)

இனி வருவதை முக்கியமாகக் கவனியுங்கள்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் சம்பளம் வாங்கும் பணியாளராக இருக்கிறீர்கள். அப்போது அந்த நிறுவனம் சொன்னதற்கேற்ப, நீங்கள் எந்த work - even creative work - செய்தாலும், அதன் மீது உங்களுக்கு காப்பிரைட் கிடையாது. அந்த நிறுவனத்திற்கு மட்டுமே உண்டு. உங்கள் நிறுவனத்திற்காக ஓர் ஆவணப்படம் எடுக்கலாம், அல்லது, கையேடுகள் அல்லது செய்தி -இதழ்கள் கொண்டுவரலாம், அல்லது நிறுவன ஆண்டுவிழாவில் புதிய நாடகம் ஒன்றை அவர்களுக்காக நடத்திக் கொடுக்கலாம். அவை எதிலும் உங்களுக்கு காப்பிரைட் கிடையாது.

பத்திரிகைகளில்- உதாரணமாக குமுதத்தில்,  உங்கள் கதை  வெளியாகிறது என்றால், அவர்கள் வெளியிட்டபின்,  அதையே இன்னொரு பத்திரிகைக்கு வெளியிடக் கொடுப்பதற்கான  காப்பிரைட் உங்களுக்கு கிடையாது. குமுதத்திற்கு மட்டுமே உண்டு. ஆனால், மேற்படி கதைக்கு சன்மானம் ஏதும் பெறவில்லை என்றால்  உங்களுக்கே காப்பிரைட் சொந்தம். (பிறகு எப்போதாவது புத்தகமாக வெளியிடும்போது, வடிவ மாற்றம் பெறுவதால் அவர்களிடம் அனுமதி பெற வேண்டியதில்லை.)

ஜூனியர் சிங்கர் போட்டிக்காக ஒரு புதிய பாட்டை  அவர்கள் மேடையில் நீங்கள் அரங்கேற்றினால், அதற்குப் பரிசு கிடைக்கவில்லை என்றாலும் அவர்களுக்கே விடியோ-காப்பிரைட் சொந்தம். அவர்களின் அனுமதி பெறாமல் நீங்கள் அதை யூடியூபில் வெளியிடமுடியாது. ஆனால் அதை ஒரு திரைப்படத்தில் பயன்படுத்த நீங்கள் விற்கலாம். அந்த உரிமை உங்களுக்குத்தான் உண்டு.

உங்களுடைய காப்பிரைட் உரிமையை மற்றவர்களுக்கு மாற்றிக்கொடுப்பது பற்றி பிரிவு 18 கூறுகிறது.

காப்பிரைட் உரிமை உள்ள ஒருவர், தனது உரிமையை முழுதுமாகவோ, அல்லது ஒரு பகுதியையோ, ஒருவருக்கோ அல்லது பலருக்கோ, நிபந்தனை இன்றியோ அல்லது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டோ, காப்பிரைட் காலம் முழுதிற்குமோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமோ, மாற்றிக்கொடுக்கலாம். (assignment of right).

இனி, காப்பிரைட் என்பது எவ்வளவு வருடங்களுக்குச் செல்லுபடியாகும் என்று பார்க்கலாம்.

பிரிவு 22 : இலக்கியம், நாடகம், இசை, மற்றும் கலை சம்பந்தமான ‘ஆக்கங்களைப் பொறுத்தவரை, அவை, ஆக்கியோன் உயிருடன் இருக்கும்போதே வெளியிடப்பட்டிருந்தால், அவர் இறந்து அறுபது வருடங்கள் வரை அதற்கான காப்பிரைட் உரிமையானது, அவரிடமே இருக்கும். (அதன் பிறகு பொதுவுடைமையாகிவிடும்.)  

பிரிவு 27: ஒலிப்பதிவுகளை (sound recording)  பொறுத்தவரையில், 
அவையும் வெளியிடப்பட்டு அறுபது ஆண்டுகள் வரை இருக்கும்.

(ஒரு சந்தேகம் எழலாம்: நாவலாசிரியர் இறந்தபிறகு ஒரு நாவல் வெளிவந்தால் அதற்கு எவ்வளவு காலம் காப்பிரைட் இருக்கும்? இதற்குப் பதிலளிப்பது  சுலபமே: ஆக்கியவர் இறந்துவிட்டால், அவரது வாரிசுகள் அல்லவா காப்பிரைட் உடையவர்கள்? ஆகவே, அவர்கள் இறந்த பின் 6 ஆண்டுகள் வரை காப்பிரைட் இருக்கும்.)

(ஒரு புதிர்: பொன்னியின் செல்வனை இப்போது பலர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் காப்பிரைட் எவ்வளவு காலம்?  

பூஜ்ஜியம். ஏனெனில், அது நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல். யாருக்கும் 
காப்பிரைட் கிடையாது. அரசுக்கு மட்டுமே உண்டு. அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் வெளியிட்டுக்கொண்டே இருக்கலாம்.)
****
மேற்படி பிரிவுகளை விவரமாக ஆராய்ந்த பின்னர் நீதிபதி சொல்கிறார்:

1. இசைத் தொகுப்பாளன் - கம்போசர் - தான் ஒரு பாடலின் காப்பிரைட் உரிமையாளன் என்று தெளிவாகிறது. சூலமங்கலம் சகோதரிகள் தான் காப்பிரைட் உடையவர்கள். எனவே அப்பாடலை சிடி யாக வெளியிடும்படி HMV க்கு உத்தரவிட அவரகளுக்கு காப்பிரைட் சட்டம் அனுமதிக்கிறது. எனவே, சூலமங்கலமும் HMVயும் தான் கந்தசஷ்டி-கந்தகுரு கவசம் இசைத்தொகுப்புக்கு காப்பிரைட் உடையவர்கள். மற்றவர்கள் அல்லர்.

2. கந்த சஷ்டி கவசம் மீது யாருக்கும் தனிஉரிமை கிடையாது. அது பல்லாண்டுகளாகப் பாடப்பட்டு வரும் பக்தி இலக்கியம். ஆனால், கந்த குரு கவசம், அதை ஆக்கியவரால், அப்பாடலை இசையமைத்துப் பாடிப் பிரபலப்படுத்துமாறு,  சட்டப்படி சூலமங்கலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. (assigned.) அவர் துறவி என்பதால், இலக்கியப் படைப்பாளிக்குள்ள காப்பிரைட்டை அவருக்கு இல்லை என்று சொல்ல சட்டத்தில் வழியில்லை.

3. பிரதிவாதிகளின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள சிடிக்களை நான் கேட்டேன். அவற்றின் மேலுறைகளையும் பார்த்தேன். அவை சூலமங்கலம்-HMV-யின் படைப்பை நகல் எடுத்தவாறு போலியாக உருவாக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வருகிறேன். பிரதிவாதிகளின் வாதங்களும் தவறானவையாகவும் பொய்யானவையாகவும் இருக்கின்றன.  
எனவே, கந்தசஷ்டி கவசம் மற்றும் கந்தகுரு கவசம் ஆகிய இரண்டு இசைப் படைப்புகளுக்கும் காப்பிரைட் சூலமங்கலம் சகோதரிகளுக்கே உரியது என்று தீர்ப்பளிக்கிறேன்.

சூலமங்கலம் ராஜலட்சுமி vs மெட்டா மியூசிக்கல்ஸ், சென்னை
(AIR 2000 Mad 454 – Bench: M. Karpagavinayagam – Date of Judgement: 16 June, 2000)
****
எனவே, வேறு யாரும் அவற்றைப் பயன்படுத்துவதானால் சூலமங்கலத்தின் அனுமதியோடுதான் பயன்படுத்தமுடியும் என்று தெளிவாகிறது. 

அதேபோல், இளையராஜாவின் இசையமைப்புகளை வேறு யாரும் பயன்படுத்துவதானால், இளையராஜாவின் அனுமதியைப் பெற்றே பயன்படுத்தவேண்டும் என்பது தெளிவாகிறது.  எஸ். பி. பி. அவரது இனிய நண்பராக இருக்கலாம், ஆனால் சட்டத்தின்படி தான் அவரும் நடந்தாகவேண்டும்.  மேற்படி  நிகழ்ச்சிகளின் மூலம்  எஸ்.பி.பி. பல்லாயிரம் டாலர்கள் சம்பாதிக்க இருப்பதால் அதன் ஒரு பகுதி இளைராஜாவுக்குச் சேர்ந்தாகவேண்டும். (அதுவே, இலவச நிகழ்ச்சி என்றால் இளையராஜா வக்கீல் நோட்டீசுக்காகப் பணம் செலவு செய்திருக்க மாட்டார்.)
****
அப்படியானால், பாத்ரூமில் கூட இளையராஜாவின் இசையைப் பாடக்கூடாதா என் மனைவி- என்றால் பாடலாம். ஆனால் அப்படிப் பாடுவதன் மூலம் அவருக்குப் பணவசூல் நடப்பதாகத் தெரிந்தால் இளைராஜாவிடம் அனுமதி பெற்றுவிடுவதே புத்திசாலித்தனம்.
****
எப்போதும் அண்ணனை எதிர்த்துக் கருத்துக்களை வெளியிடும் கங்கை அமரன், இப்போதும் அதையே செய்திருக்கிறார். தியாகராசரின் கர்நாடகப் பாடல்களைப் பாடுகிறோமே, அவருக்கு ராயல்டி கொடுத்தோமா என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை எழுப்புகிறார். சட்டப்படி இளையாராஜா மீது எந்தக் குற்றமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இளைராஜா செய்துள்ள மாபெரும் தவறு ஒன்றுண்டு. ஒன்றே ஒன்று. வயதான பிறகும் தன் சொந்தக்குரலில் சில பாடல்களைப் பாடிவிடுகிறாரே அதுதான்! (‘ஜனனி..ஜனனி’ மாதிரியான பாடல்களைச் சொல்லவில்லை.)
****
© Y Chellappa

Email: chellappay@gmail.com 

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.

31 கருத்துகள்:

  1. Nice analysis.Thanks for clearing the doubts revolving around this hot topic.Still I feel it is indecent of Isai Agnjani Ilayaraja to stop gentleman SPB midway of concert tour.
    Narayanan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. அதெல்லாம் இல்லை. அவருடைய நிகழ்ச்சியில் இவர் தகராறு செய்தாராம், அதனால் இவருடைய நிகழ்ச்சியில் அவர் தகராறு செய்கிறாராம் என்பது போல் பேச்சு உலாவுகிறது. என்றாலும், இளையராஜாவின் நடவடிக்கையால் தமிழ் மக்களுக்கு நல்லதே விளையப் போகிறது. கிடார் பிடித்தவன் எல்லாம் அமெரிக்காவில் பாடகனாக இருப்பதுபோல், போஸ்டர் அடிக்கத் தெரிந்தவனெல்லாம் ஒரு இசைநிகழ்ச்சி என்ற பெயரில் காமராஜர் அரங்கத்தில் நடத்திப் பழைய பாடல்களைப் பாடிப் பிழைப்பு நடத்துகிறார்களே, அது ஓரளவு மட்டுப்படும் என்று நினைக்கிறேன். அதில் பாடுபவர்களுக்கு மற்றும் வாத்தியம் இசைப்பவர்களுக்கு ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்படுகிறது.ஆட்டோ செலவுக்கும் தருவதில்லை. இனி அவர்களும் விழித்துக் கொள்வார்கள். இன்னொன்று, இதனால் புதிய பாடல்கள் பிரபலமாகும். புதிய இசையமைப்பாளர்கள், பாடகர்கள் வெளியே வருவார்கள். இளையராஜாவுக்கு நாம் இதற்காகவே நன்றி செலுத்தலாம்.

      நீக்கு
  2. இதில் குமாரசாமியும் வந்து விட்டதுதான் வேடிக்கை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கந்தனைப் பற்றி எழுதும் போது...வரமாலா இருப்பார்? குமாரசாமி என்பதும் கந்தனின் ஒரு பெயர் தானே?

      நீக்கு
  3. 'நல்ல அர்த்தமுள்ள விளக்கம். ஒரு சந்தேகம்... இசைக் குறிப்பில் சில மாற்றங்கள் செய்தும், பாடல் வரிகளை மாற்றியும் பாட நேர்ந்தால் அப்போது காபிரைட் சட்டத்தை மீறியதாகக் கருதப்படுமா? அதாவது, 'வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்' என்பதற்குப் பதிலாக, 'தங்கச் சதங்கைகள் கொண்ட அலைமகள்' என்று பாடினால். அதேபோல், இசைக் கோர்வையில் சிறு சிறு மாற்றங்கள் செய்தால்.

    திரையிசைத் திலகங்களே (இசையமைப்பாளர்கள்) வேற்று மொழிப் பாடல்களை அல்லது வேற்று மொழி இசையைக் கொஞ்சம் மாற்றி இசையமைத்துவிடுகிறார்களே, அப்போது எப்படி அவருடைய காபிரைட் என்று சொல்லமுடியும்? (உதாரணம்: டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் என்பது போன்ற ப்ரியா படப் பாடல்கள், தேவா சூரியன் படத்துக்கு இசையமைத்த கந்த சஷ்டி ராகத்தில் அமைந்த காதல் பாடல் போன்ற பல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறிய உதாரணங்கள் எல்லாமே காப்பிரைட் மீறல்களே. தண்டனைக்குரிய / அபராதத்துக்குரிய செயல்களே. ஆனால், எதையும் 'TAKE IT EASY' என்ற POLICY நம்மில் அனைவரிடமும் இருப்பதாலும், எதிர்த்துக் கேட்டால் ஆள் வைத்து அடிப்பார்கள் என்ற பயம் இருப்பதாலும், நீதி மன்றத்துக்குச் சென்றால் வருடக்கணக்கில் ஆகும் என்பதாலும் யாரும் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

      நீக்கு
  4. நல்ல விரிவான தகவல்கள்! அப்போ திருவள்ளுவர் பாவம் தான்!! ராயல்டி இல்லாமல் உலகப் பொதுமறையாக்கிவிட்டுப் போயிட்டாரே!! மட்டுமல்ல..
    கீதா: .பாரதியாரின் குடும்பம் குறிப்பாக ராஜ்குமார் பாரதி இன்னும் கோரவில்லையோ??!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதியாரின் குடும்பம் கோரினால் அளவற்ற ராயல்டி அவர்களுக்குக் கிடைக்கும். என்ன செய்வது, அவர்களுக்கு அரசியல் ஆதரவு இல்லையே!

      நீக்கு
  5. இளையராஜா ஒரு நல்ல முன்னுதாரணத்தை வெளிப்படையாக எடுத்திருக்கிறார். மற்ற இசையமைப்பாளர்கள் சத்தமில்லாமல் ஏற்கெனவே அப்படி செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் பல இடங்களிலும் படித்துத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு வாய்ப்பளித்திருப்பது இளையராஜாவின் இந்த நடவடிக்கைதான்.

    ஏற்கெனவே கார்த்திக் ராஜா அழைத்த அவரது இசை நிகழ்ச்சிகளில் எஸ் பி பி பாட மறுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. அதுவும் சுயநலம்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே எஸ் பி பி, ஏ ஆர் ரகுமானுடன் ஏற்கெனவே ராயல்டி பற்றி ஒப்பந்தம் போட்டிருப்பதாக சில திரைத்துறை நண்பர்கள் கூறுகிறார்கள். எனவே இளையராஜாவை மட்டும் கைவிடுவானேன்?

      நீக்கு
    2. நெருங்கிய நண்பராயிற்றே, எங்கே கேட்கப் போகிறார் என்று எஸ் பி பி நினைத்திருக்கலாம். அவரே சொல்லியும் இருக்கிறார். மலேசியா, ரஷ்யா போன்ற நாடுகளில் நிகழ்ச்சி நடத்தும்போது இளையராஜா கேட்கவில்லை.. அமெரிக்காவில் நடத்தும்போது மட்டும் கேட்கிறார் என்று!

      நீக்கு
    3. கொடுப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்ததும் காரணமாக இருக்கலாம். அல்லது, அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டதிட்டங்கள் தெளிவாக இருப்பதால், இப்போது இல்லாவிடினும், எதிர்காலத்தில் அமெரிக்காவில் தனது பாடல்களைப் பாடுபவர்களிடமிருந்து ஒழுங்காக ராயல்டி கிடிக்குமே என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம்.

      நீக்கு
    4. 'கிடைக்குமே' என்று இருக்கவேண்டும்..

      நீக்கு
    5. இளையராஜா இப்படி வெளிக் கொணர்ந்திருப்பது நல்லதுதான் இனி வரும் வளரும் இசைக்கலைஞர்கள் எல்லாம் தெளிவு பெறுவார்கள்...

      கீதா

      நீக்கு
  6. விரிவான விளக்கம் நன்று!

    பதிலளிநீக்கு
  7. அருமை ஐயா
    இசையினைப் பொதுவில் வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
    இவர்களுக்குள் வேறு ஏதோ பிரச்சனை
    ராயல்டியைப் பயன்படுத்தி தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பேரும் சிறந்த கலைஞர்கள். உணர்ச்சி வசப்பட்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டுக்கொடுத்து அதே சமயம் யாருக்கும் இழப்பு இல்லாமல் இந்தச் சிக்கலில் இருந்து வெளிவரவேண்டும் என்பதே நம்மைப் போன்ற ரசிகர்களின் வேண்டுகோள்.

      நீக்கு
  8. எனக்கு எப்பவுமே இருந்த சந்தேகம் இந்தப்பாடல்கள் இல்லையென்றால் தொலைக்காட்சி சானல்கள் என்ன செய்யும் ஒலிக்கப்படும் எல்லாப் பாடல்களுக்கும் சானல்கள் ராயல்டி கொடுக்கிறதா வசூல் முறை எப்படி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில தொலைக்காட்சி சானல்கள் முறைப்படி ஒப்பந்தம் செய்துகொண்டு பணம் தருகின்றன. அரசியல் பலமுள்ள சானல்கள் ஏதும் தருவதில்லை. உன்னால் முடிவதைப் பார் என்று சவால் விடுகின்றன. அத சமயம், புதிதாக வரும் இசையமைப்பாளர்களின் பாடல்களை அதிகம் ஒளிபரப்புகின்றன. இவர்களுக்கு ஏதும் கொடுப்பதில்லை. காரணம், இப்புதியவர்களை திரையில் காண்பித்து அவர்களுக்கு விளம்பரம் தருகிறோமே என்கின்றன. எல்லாமே SURVIVAL OF THE FITTEST தான்!

      நீக்கு
  9. மூளைச் சலவை செய்யும் பதிவு

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தளத்தைப் பார்த்துகொண்டு வருகிறேன். பரிசுத்திட்டங்களுக்குப் பாராட்டு!

      நீக்கு
  10. பதில்கள்
    1. அப்படியா? எனக்கு ஜிமெயிலில் வந்ததே! என்ன ஆயிற்று? அன்புகூர்ந்து இன்னொருமுறை எழுதிவிடுங்கள். நன்றி.

      நீக்கு
    2. இவ்விவாகாரம் தொடர்பாக வந்த கட்டுரைகளில் இதுவே சிறந்தது என்று கருதுகிறேன். நானும் சில காப்புரிமை விதிகளை குறிப்பெடுத்து வைத்திருந்தேன்.ஆனால் என்னால் இவ்வளவு சிறப்பாக எழுதி இருக்கமுடியாது. சூலமங்கலம் சகோதரிகளின் வழக்கை சான்று காட்டி விளக்கியது அருமை.

      நீக்கு
  11. இந்த விஷயத்தை இத்தனை விரிவாக
    ஆழமாக ஆதாரப்பூர்வமாக யாரும்
    எழுதியதாகத் தெரியவில்லை
    இதற்கான உங்கள் உழைப்பு பிரமிப்பூட்டுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு