பதிவு
எண் 19/ 2017
கனவுகள்
பலிக்கும் நேரம்
-இராய
செல்லப்பா
புலர்ந்தும் புலராத
விடியற்காலை நேரம். பத்தடி தூரத்திற்குமேல் தெளிவாகத் தெரியவில்லை. வயல்காட்டின் நீண்ட வரப்புகளின்
மீது நடந்துகொண்டிருக்கிறேன். இரண்டு பக்கமும் நிலம் உழுது பண்படுத்தப்பட்டு,
நீரும் சேறுமாய் இருந்தது. ஒரு பாத்தியில் நெல் நாற்றுக்கள் பசுமையாய்க் கிடந்தன.
இன்றோ நாளையோ நடவு செய்யக்கூடும்.
யாருடைய வயல் என்று
தெரியவில்லை. ஏன் அங்குப் போனேன் என்றும் தெரியவில்லை. ஆனால் விரைவாக நடந்து
கொண்டிருக்கிறேன். யாரையோ துரத்திப் பிடிக்கப் போவதுபோல் இருக்கிறது. அடிக்கடி ‘நில்,
நில்’ என்று சொல்லிக்கொண்டே போகிறேன். ஒரு கட்டத்தில் வேகமாக ஓடுகிறேன்.
சற்றே வெளிச்சம்
வருகிறது.
எனக்கு முன்னே கடல்போல்
ஒரு நீர்ப் பரப்பு. ஆனால் கடல் அல்ல; கரை காண முடியாத குளமாக இருக்கலாம். நீரின்
வெண்பரப்பு மட்டுமே தெரிந்தது. இன்னும் பத்து நிமிடம் ஓடினால் குளத்தை
அடைந்துவிடலாம் என்று தோன்றியது. வேகத்தைக் கூட்டினேன்.
அப்போதுதான் தெரிந்தது,
எனக்கு முன்னே ஒரு பெண் உருவம் ஓடிக்கொண்டிருப்பதை. மெலிந்த உடல். எளிமையான சேலை.
இழந்துவிட்ட எதையோ தேடிக்கொண்டு போவதுபோல், ஒரே முனைப்பாக, பின்னால் திரும்பிப் பார்க்காமல்
போய்க்கொண்டிருந்தது அவ்வுருவம். குளத்தை நெருங்கிவிட்டது. ஆனால் என் வேகத்திற்கு
அதனால் ஈடு கொடுக்க முடியவில்லை. நானும் குளத்தை நெருங்கிவிட்டேன்.
திடுக்கிட்டு அந்த உருவம் என்னைப் பார்ப்பதற்காகத் திரும்புகிறது. சென்னையில் இருக்கும் என் தாய்!
அடுத்த நொடி என்ன
நடந்தது என்று தெரியாது. பால் பாக்கெட்டைக் கொடுப்பதற்காக வாசற்கதவை ஒரு சிறுவன்
தட்டியபோது கனவு கலைந்துவிட்டது.
முன்பின் தெரியாத ஊரில்,
குளத்தில் விழுவதுபோல் என் தாய் போகும் கனவுக்கு என்ன பொருள் என்று தெரியவில்லை.
பொதுவாகவே கனவுகளை அதிகம் பொருட்படுத்தமாட்டேன் நான். எனவே இக்கனவையும் மறந்துபோனேன்.
அடுத்த வாரம் சென்னை
வந்தேன். தற்செயலாகச் சரியில்லாமல் போனது
அம்மாவின் உடல்நலம். அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துப் போனேன். வயதாகிவிட்டதுதான் காரணம்,
சில நாட்கள் இங்கே அனுமதித்தால் சரிசெய்துவிடலாம் என்றார்கள். ஒருவாரம் அங்கே
இருந்தார். உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது. “நான் பிழைக்க
மாட்டேன் என்று தோன்றுகிறது” என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார். மூன்று இரவுகள்
அவருடனேயே இருந்தேன். குழந்தையாக எனக்கு அவர் செய்த பணிவிடைகளை அவருக்கு நான்
செய்தேன். நான்காவது நாள் அவர் இயற்கை எய்திவிட்டார்.
****
வீட்டில் ஏதோ விசேஷம்.
அநேகமாக மறைந்துபோன முன்னோர் ஒருவருக்குத் திதி கொடுக்கும் நாள் (‘சிரார்த்தம்’)
என்று நினைக்கிறேன்.
நான் சிறுவனாக இருந்தபோது வசித்த அதே இராணிப்பேட்டை, வக்கீல்
தெரு, வீடு. அதே கிணறு. அருகில் பெரிய சிமெண்ட் தொட்டி. நான் இடுப்பில் ஒரு வெள்ளைத்துண்டு
கட்டியிருக்கிறேன். இராட்டினம் சுழல்கிறது. வேகவேகமாகக் கிணற்றிலிருந்து
வாளிவாளியாகத் தண்ணீர் சேந்துகிறேன். தொட்டியை நிறைக்கிறேன். பிறகு மேலும் ஒரு
வாளி தண்ணீரைச் சேந்திக் குளிக்கிறேன்.
அப்போது என் தாத்தா வருகிறார். அப்பாவின்
அப்பா. “நீ போடா, போய்ப் பாடத்தைப் படி. நானே சேந்திக் குளிக்கிறேன்” என்று தண்ணீர் இறைத்துக் குளிக்கிறார். மூன்று நான்கு
வாளித் தண்ணீர் செலவாகிறது. குளித்துவிட்டு அவர் சென்றதும், என் தகப்பனார் வருகிறார். நான்
அருகில் இருந்தும் அவர் என்னைப் பார்க்கவில்லை. தன் பாட்டுக்குப் பேசாமல்
குளித்துவிட்டுப் போகிறார்.
இவ்வளவுதான் கனவு. ஒரு
நாள் காலை ஐந்தேமுக்கால் மணிக்கு நேர்ந்த
கனவு. என் தாத்தா இறந்து இருபது வருடங்கள் ஆகியிருந்தன. தகப்பனார் சென்னையில்
இருந்தார். நோய்நொடி ஏதுமின்றி நலமாக இருந்தார்.
வழக்கம் போலவே கனவை
மறந்துவிட்டேன். ஒரு வாரம் கழிந்திருக்கும். காலை எட்டுமணிக்குக் கலவை
சங்கரமடத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. என் தகப்பனார் பெயரைச்சொல்லி, “இன்று காலை ஆறு
மணிக்கு அவர் இறந்துவிட்டார்” என்றார்கள். சிலநாட்கள்
முன்புதான் ஏதோ வேலையாக வந்து தங்கினாராம். இரவு நெடுநேரம் சில வேத மந்திரங்களைப்
பற்றி விளக்கமாகப் பேசிக்கொண்டு இருந்தாராம். காலையில் காப்பி சாப்பிட்டுவிட்டு சாய்வு
நாற்காலியில் அமர்ந்தவர் எழுந்திருக்கவில்லையாம்.
மங்களூரில் இருந்து
மாலை விமானத்தில் கிளம்பினேன். காஞ்சி மகாபெரியவரின் குருநாதரின் பிருந்தாவனம்
அமைந்திருந்த புனிதமான இடம், கலவை சங்கரமடம். தற்செயலாகத் தங்கப்போன இடத்தில், என்
தகப்பனாரின் ஆவி பிரிந்தது விட்டகுறை தொட்டகுறையோ என்று தோன்றியது. 75 வயது வாழ்கையில்
முதல் அறுபது ஆண்டுகளை வறுமையிலேயே கழித்தவர் அவர். எனினும் ஒருநாளாவது வேதத்தை
மறந்தவரில்லை. அதற்கு வெகுமதியாக இந்த மரணம் என்று தோன்றியது. அதே ஊரில் இறுதிச்சடங்குகளைச்
செய்துவிட்டு வந்தேன்.
****
கனவுகளில், தண்ணீரையும்
நமது முன்னோர்களையோ அல்லது உறவினர்களையோ அருகருகே
பார்க்க நேர்ந்தால், வீட்டில் ஒரு மரணம்
நிகழக்கூடும் என்பது மேலும் பல நேரங்களில் நான் அறிந்துகொண்டதாகும். (அப்படித்தான்
நடக்கவேண்டும் என்று அறிவியல் விதி ஏதும் இல்லை.)
****
கனவுகளில் பாம்புகளைக்
கண்டிருக்கிறேன். வெண்ணிறமான அல்லது தங்கநிறமான பாம்புகள் என்னைச் சுற்றிலும் (அல்லது
எனக்கு முன்னால்) ஓடுவதுபோல் கனவு வரும். -துரத்துவதுபோல் அல்ல- அடுத்த சில
நாட்களில் ஏதாவதொரு பரிசோ, பாராட்டோ, வெகுமதியோ வந்துசேரும். எனக்கில்லாவிடினும்
என் குடும்பத்தினருக்கு.
பாம்புகள் என்னைத் துரத்துவதுபோல் கனவு வந்தால் துன்பமோ,
நோயோ, பொருள் இழப்போ வருவதை நிச்சயமாக அனுபவித்திருக்கிறேன். அதே சமயம் பாம்பு
என்னைக் கடிப்பதுபோல் கனவு வந்தால் அடுத்த சில வாரங்களில் எதிர்பாராவிதமாக என்னுடைய இன்னல்கள், நீண்டநாள் நோய்கள் விலகுவதைக்
கண்டேன். குறைந்தபட்சம், பணியிடத்தில் எனக்குத் தொல்லை கொடுத்துவந்தவர்கள் எதிர்பாரா
விதமாக வேறிடத்திற்கு மாற்றம் பெற்றுச் செல்வதன்மூலம் எனக்கு மன அமைதி கிட்டியதை
உணர்ந்திருக்கிறேன். அலுவலகத்தில், தீராத சில பிரச்சினைகள் எனது முயற்சியின்றியே தீர்ந்ததையும்
அறிந்திருக்கிறேன்.
இப்போதும், தனது வருடாந்திரத் திதிக்குச் சிலநாள் முன்பாக என்
தந்தை என் கனவில் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
***
கனவுகளைப் பற்றி அறிவதில்
இளம்வயதில் இருந்தே எனக்கு ஆர்வம் உண்டு. சிக்மண்ட் பிராய்டு முதல் இன்றுவரும் பல
சைக்காலஜி ஜர்னல்கள் வரை அவ்வப்பொழுது படிப்பதுண்டு. ஆனால், கனவுகள் தோன்றுவதற்கான
காரணத்தையோ, கனவுகளின் பலன்களையோ அறிவுபூர்வமாக, நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், இன்னும் யாராலும்
அறிவிக்க முடியவில்லை. அவரவர் அனுபவத்தில் இருந்து எழும் empirical law -வாகவே கனவுகளின்
படிப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது.
© Y Chellappa
Email: chellappay@gmail.com
