(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும்
வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ
அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல்
என்ன ஆயிற்று இந்தியாவுக்கு? மாலனின் கேள்வி
கார்ப்பொரேஷன் வங்கியில் என்னுடன் இருபது
வருடங்களுக்கு மேலாக அதிகாரியாக உடன்பணியாற்றிய தோழர், கே. சீனிவாசன். கிளை
மேலாளராகப் பணியாற்றியபோதும் மக்கள் தொடர்புப் பணிகளிலேயே அவர் முனைந்து செயல்பட்டதால்
அவருடைய தனித்திறமையைப் பயன்படுத்திக்கொள்ளும்வண்ணம் அவரை மக்கள் தொடர்புத்
துறையிலேயே அதிகாரியாகப் பணியமர்த்தினார்கள். புதுடில்லியில் அவரும் நானும் ஒன்றாக
மூன்றாண்டுகள் பணிபுரிந்தோம். அந்தக் குறுகிய காலத்தில் சவுத் பிளாக்கிலும் நார்த்
பிளாக்கிலும் அவருக்குத் தெரியாத அதிகாரிகள் இல்லை என்றே சொல்லிவிடலாம். அடையாள
அட்டை இல்லாமல்கூட அவரால் உள்ளே சென்று வரமுடியும். அந்த அளவுக்கு உயர் பதவியில்
இருந்தவர்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
பின்னாளில் மதிப்பிற்குரிய அப்துல் கலாம்
அவர்கள் குடியரசுத் தலைவரானபோது, சீனிவாசன் அவருடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானர்.
திடீரென்று ஒருநாள் தன் வங்கிப்பதவியைத்
தூக்கி எறிந்துவிட்டு PRIME POINT FOUNDATION என்ற
மக்கள்தொடர்பு சார்ந்த ஆலோசனை வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். கல்லூரிகள்,
நிறுவனங்கள் என்று பல இடங்களிலும் தன் திறமை சார்ந்த துறையில் சொற்பொழிவுகள்
நிகழ்த்தினார். “PReSENSE” என்ற பெயரில் ஒரு ஆங்கில
மின்னிதழையும், “NEWGENதமிழன்” என்ற பெயரில் ஒரு தமிழ் மின்னிதழையும் மாதந்தோறும்
தலைமை தாங்கி நடத்திவருகிறார். ஆனால் இதழில் எழுதுபவர்கள் எல்லாரும் இளைஞர்களே.
பின்னிருந்து வழிகாட்டுதல் மட்டுமே சீனிவாசனின் பணி. கண்ணில் பார்க்க முடியாத, கும்பகோணம்
டிகிரி காப்பியின் மணம் போல - இவ்விரு இதழ்களிலும் சீனிவாசனின் உழைப்பு தன்னை
நுட்பமாகத் தெரிவித்தபடி இருக்கும்.
தன் இமாலய முயற்சியாக ஆண்டுதோறும் சிறந்த
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு SANSAD RATNA என்ற
விருதை வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தையும் ஆரம்பித்தார் சீனிவாசன். அது இன்றுவரை
தொடர்கிறது.
அவருடைய பிரைம் பாயிண்ட்டு பௌண்டேஷன், சென்னை
ஐ.ஐ.ட்டி.யுடன் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சனிக்கிழமை ஒரு தேசீயக்
கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ‘அரசியல், ஜனநாயகம், ஆள்கை’ (Politics, Democracy and Governance) என்பது தலைப்பு. நடைபெறவிருக்கும் 2014 மக்களவைத்
தேர்தலில் பங்கு பெறும் பல்வேறு அணிகளின் நிலைப்பாடுகள் என்ன என்பதைக் கண்டறியும் நோக்கில் கருத்தரங்கின்
ஒரு அம்சமாக அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் இணைந்த விவாதம் நடைபெற்றது. ஒரு
பார்வையாளனாக நான் பங்குபெற்றேன்.
முன்வரிசையில் -இடது கோடியில் நான், நீலச்சட்டையும் ஆழ்ந்த ரசிப்புமாக கே.சீனிவாசன் |
இந்த விவாதத்தில் அதிமுக ஆதரவில்
அண்மையில் மாநிலங்களவை உறுப்பினரான மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், திமுக அணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மக்களவை
உறுப்பினர் தொல்.திருமாவளவன், பாஜகவின் எச்.ராஜா,
காங்கிரஸின் ஏ.கோபண்ணா, ஆம்
ஆத்மி கட்சியின் டேவிட் பருண் குமார், ‘புதிய தலைமுறை’
ஆசிரியர் மாலன் ஆகியோர் பங்கேற்றார்கள். சமூக ஆர்வலர் பானு
கோம்ஸ் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
அப்போது அரசியல்வாதிகள்,
எடுத்ததற்கெல்லாம் ஊடகங்களையே குறை சொல்லிக்கொண்டிருப்பதைத் தன் தார்மீகக்
கோபத்தின் மூலம் எதிர்த்து உரத்த குரலில் கேள்வி கேட்டார், பிரபல
பத்திரிகையாளரும், தொலைக்காட்சியாளருமான மாலன் அவர்கள். அவர் கேட்ட
கேள்விகளுக்கு அங்கு யாராலும் பதில் கூற முடியவில்லை. உங்களுக்குப் பதில் தெரிகிறதா?
“வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை
நம்முடைய கொள்கை ஒன்று, செயல்வேறாக இருக்கிறது. நாம் இனிமேல்
இந்தியாவுக்குக் கிழக்கே இருக்கும் நாடுகளில் கவனம் செலுத்தவேண்டும் என்று சில
ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொள்கை முடிவு எடுத்திருந்தோம். அதில் எந்த முன்னேற்றமும்
இல்லை. ஆசியானில் நம்மால் இன்னமும் முழுத்தகுதி உடைய உறுப்பினராக மாற முடியவில்லை.
மிகப்பெரிய ஜனநாயக நாடு, மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது
பெரிய நாடு, வாங்கும் சக்தி கொண்ட மக்களைக் கொண்ட மூன்றாவது
பெரிய நாடு, உலகில் மூன்றாவது பெரும் படை கொண்ட நாடு
என்றெல்லாம் நமக்குப் பெருமை இருந்தும் உலக நாடுகள் நம்மை எப்படிப் பார்க்கின்றன?
“நம்மால் ஒரு தேவயானி பிரச்சினையின்போது கூட அமெரிக்காவை சமாதானப்படுத்த முடியவில்லை. இலங்கையிடம் எப்படி நடந்து கொள்கிறோம். நாம் முன்பு பொருளாதார ரீதியிலும் மற்ற விஷயங்களிலும் பலவீனமாக இருந்தபோது கூட நாம் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. ரஷ்யா, அமெரிக்கா பெரிய ஆதிக்கம் செலுத்தியபோது கூட நேருவால் அணிசேரா அணியை உருவாக்க முடிந்தது. அணுகுண்டு வெடித்தபோது அமெரிக்கா விதித்த தடைகளை இந்திரா காந்தியால் சுலபமாக அலட்சியப்படுத்த முடிந்தது. அம்மாதிரி துணிச்சல் இப்போது இந்தியாவுக்கு ஏன் இல்லை? நமக்குப் பக்கத்தில் இருக்கும் ஈரானில் இருந்துகூட பைப் மூலமாக பெட்ரோல் எடுத்து வரமுடியவில்லை....”
நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில படங்கள்
இங்கு இடம் பெறுகின்றன. முழு விவரங்களை –ஆங்கிலத்தில் படிக்க: http://www.sansadratna.in/2014/02/political-leaders-and-media-experts.html என்ற சுட்டியைத் தொடவும்.
தமிழில் படிக்க: http://www.puthiyathalaimurai.com/this-week/2947 என்ற சுட்டியைத் தொடவும்.
புத்தகம்
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள்
திருக்கோயிலில் நான்கு மாடவீதிகளையும் அணைத்தபடி அறுபத்துமூவர் திருவிழா
நடந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில் அமிர்தம்
சூர்யாவின் ‘வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்’ தொகுப்பிலிருந்து ஒரு கவிதை கண்ணில் பட்டது. (நான்கு நாட்கள்
முன்புதான் டிஸ்கவரியில் இந்நூலை வாங்கினேன்.)
இக்கவிதையைப் படித்த பிறகு மயிலாப்பூர்வாசிகளும் அறுபத்துமூவர் விழாவை
ஏற்கெனவே பார்த்துள்ள நண்பர்களும் இதைத்
தற்செயல் நிகழ்வு (coincidence) என்று சொல்லலாமா என்று விவாதிக்கலாம்.
அன்று நீ நகரமான தினம்
கிழக்கு மாடவீதியில்
அதிகாலையில் உறக்கத்திற்கு
தவமிருக்கும் காமம்தாங்கியின்
அந்தரங்க வலி அறையினுள் முடங்க
மோகவலையை வாசலில்
வீசிவிட்டு காத்திருப்பாள்
இரவு போஜனத்திற்கு
கண்ணி வைத்து கிழப்பரத்தை.
மேற்கு மாடவீதியில்
புட்டத்தைத் தட்டும்
கடைக்காரனின் அவமதிப்பை
உதறிவிட்டு
ஒற்றை ரூபாய் பிச்சையை
வாங்கிச் செல்லும் அரவாணிக்கு எதிரே
பக்தி வழிய பல்லக்கில்
தூக்கி வருவர்
அர்த்த நாரீஸ்வரரை.
தெற்கு மாடவீதியில்
கஜனின் மனோபலத்தை உறிஞ்சி
50 காசுக்கு ஆசியளிக்கும்படி
இரும்புச் சங்கிலியில் பதுக்கி வைத்த
பாகனின் மன(த்)திடம்
“யானைக்குக் காமம் வந்தால்..?”
கேட்டபடியே
உப்புநீர் மினுக்கும் கருப்பன்
இழுத்துப் போவான்
சுமை வண்டியையும் பசியையும்.
வடக்கு மாடவீதியில்
கேள்விகளெல்லாம் தொலைந்து போனால்
வாழ்க்கைக்கு பைத்தியம் பிடித்துவிடும்
விடை தேடுகையில் மரணம் கொத்தாதென்று
கேள்விகளை அடைகாத்திருப்பவனிடம்...
“எல்லார்க்கும் புரியும்படி ஒரு கதையெழுதி
போடப்படாதா? கட்டில் மீது
தூங்கும் பூனையை விரட்ட” –
என்பாள்
அடுப்பின்வெளி பார்த்தபடி.
வீதிகள் கூடும் மையத்தில்...
திசைவீதிகள் ஆரங்களாய் மாற
சிவ கோபுரத்தை அச்சாணியாய் செருகி
நகர சக்கரத்தை சுழற்றிவிடும்
கரங்களில் தெரியும்
பசியின் உக்கிரம்.
அதன் ருசியை உணர்ந்த
முதல் தருணம் நினைவிருக்கிறதா
அன்றுதான்
நீ நகரமான தினம்.
சினிமா & தொலைக்காட்சி : (மன்னிக்கவும், பார்க்க நேரமில்லை!)
பத்திரிகை
தேர்தல் வந்தாலும் வந்தது, ஒவ்வொரு பத்திரிகையும்
போட்டி போட்டுக்கொண்டு செய்திகளைத் தருகின்றது. சில பத்திரிகைகள் செய்தியைத் தாமே
உருவாக்குகின்றன. ‘சதக், சதக்’ என்று கத்தியால் குத்தினான் என்று நேரில் பார்த்த
மாதிரி தினத்தந்தியில் வருமே அதுபோல்.
தினமலர் எப்போதுமே முன்னோடிதான், எட்டு பக்க
இணைப்பு ஒன்றைத் தேர்தலுக்காகவே தினமும்
தருகிறது. புதுப்புது கேலிச்சித்திரங்கள் வெளியாகின்றன. இன்றைய (12-3-2014
புதன்கிழமை) இணைப்பில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தி வந்துள்ளது.
அதாவது, தி.மு.க. சார்பில் வரும் 2014 பாராளுமன்றத்
தேர்தலில் வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளவர்கள் யார்யாரால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள்
என்ற ரகசியத் தகவல் அதில் இடம்பெற்றுள்ளது. தினமலர் படிக்காதவர்களின் நன்மையை
முன்னிட்டு அந்த விவரத்தை இங்கு தரவேண்டியவனாகிறேன்:
மொத்தமுள்ள 35 வேட்பாளர்களில், மு.க.ஸ்டாலினின்
நேரடி சிபாரிசு பெற்றவர்கள்: 10 பேர். ஸ்டாலின் மனைவி சிபாரிசு மூலம் வந்தவர்கள்: 7 பேர். ஸ்டாலின் மைந்தர் உதயநிதியின் சிபாரிசைப் பெற்றவர்கள்: 7
பேர். ஸ்டாலின் மருமகன் சபரீஷனின் சிபாரிசால் வந்தவர்கள்: 9 பேர். (மகனை விட
மருமகனுக்கு அதிகக் கௌரவம் அளிப்பதுதானே
தமிழ்ப்பண்பு.) ஆகமொத்தம் 33.
தென் சென்னையில் போட்டியிடும் டி.கே.எஸ்.இளங்கோவன்,
நடுசென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் ஆகிய மீதமுள்ள இரண்டு பேர் விஷயத்தில்தான்
சிக்கல் வருகிறது. இவர்கள் யாருடைய சிபாரிசால் வந்தவர்கள் என்று தெரியவில்லையாம். இவர்களில்
ஒருவர், கலைஞர் மூலம் வந்திருக்கலாமாம். அந்த ‘இன்னொரு வாழைப்பழம்’ யாரால் எப்படி
வந்தது? தெரியவில்லை..
ஆனால், தி.மு.க. ஒரு கட்டுக்கோப்பான கட்சி. (இல்லையென்றால்
சொந்த மகனையே இடைநீக்கம் செய்வாரா கலைஞர்?) யாரை வேட்பாளராக அறிவித்தாலும்
கீழ்மட்டத் தொண்டர்கள் கவலைப்படாமல் வெறும் வயிற்றில் ஒரு தேநீர் குடித்துவிட்டுக்
கட்சிவேலை பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். அதுதான் அக்கட்சியின் பலம். ஆனால் ஒரே
ஒரு கவலை: கலைஞரே சொல்லியும் குஷ்புவுக்குக் கொடுக்கவில்லையாமே, பாவம், அப்படி
என்னதான் தவறு செய்துவிட்டார் அந்தப்
பெண்மணி? ஜெயப்ரதாவும் விஜயசாந்தியும்
ரோஜாவும் வெற்றிபெறும் தருணத்தில் குஷ்பு மட்டும்
ஜெயிக்க மாட்டாரா என்ன?
சிரிப்பு
(நன்றி: தினமலர்- தேர்தல் இணைப்பு-
12.3.2014)
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால்,
கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’
அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
© Y Chellappa
Email: chellappay@yahoo.com
மாலனின் கேள்வி மனதைச் சுடுகிறது.
பதிலளிநீக்குஎதை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்
முதுகெலும்பில்லாத அரசியல் தலைமையே அனைத்துச் சீரழிவுகளுக்கும் மூல காரணம். தங்கள் வருகைக்கு நன்றி!
நீக்குஐஐடி கூட்டத்தில் பெரும்கூட்டம் போலிருக்கிறதே... தில்லி பரவாயில்லையோ...? பானை சோற்றுக்குப் பதமாக கவிதைகள் அருமை. கருணாநிதிக்கேகூட தெரியாததெல்லாம் தினமலருக்குத் தெரிந்து விடுகிறது. பாவம் கருணாநிதி.
பதிலளிநீக்குஅப்படியெல்லாம் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள் நண்பரே! முதல் வரிசையில் அமைப்பாளர்கள் மட்டும் இருந்தனர். அங்குமிங்கும் அவர்கள் ஓடாடிக்கொண்டே இருந்ததால் முதல் வரிசையில் சில இருக்கைகளே அமரப்பட்டன. மற்றபடி, மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் அரங்கத்தில் இருந்தனர். இளைஞர்கள் மிகுதி! பெண்பால் இளைஞர்கள் அதனினும் மிகுதி. போதுமா?
நீக்குமாலன் அவர்களின் கேள்விகள் சிந்திக்க வேண்டியவை...
பதிலளிநீக்கு// கட்டில் மீது தூங்கும் பூனையை விரட்ட // ரசித்தேன்...
சிரிப்பு - உண்மை...!
ஆம் நண்பரே! கணவர் எழுதும் கதைகளைப் பூனை விரட்டத்தான் மனைவியர் பயன்படுத்துகிறார்கள் என்றால் அது கணவரின் தரத்தைக் காட்டுகிறதா, இல்லை, கதைகளின் தரத்தைக் காட்டுகிறதா என்று தெரியவில்லையே!
நீக்கு//மிகப்பெரிய ஜனநாயக நாடு, மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது பெரிய நாடு, வாங்கும் சக்தி கொண்ட மக்களைக் கொண்ட மூன்றாவது பெரிய நாடு, உலகில் மூன்றாவது பெரும் படை கொண்ட நாடு என்றெல்லாம் நமக்குப் பெருமை இருந்தும் உலக நாடுகள் நம்மை எப்படிப் பார்க்கின்றன?//
பதிலளிநீக்குdumping கிடங்காக! ஒரு உதாரனம்....வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்ட பல மருந்துகள், மாத்திரைகள் இங்குதானே உலா வருகின்றன!
தேர்தல் கவிதை செம நக்கல்! கூடவே ஒரு சின்ன வருத்தமும் இழையோடிருப்பது அருமையாக உள்ளது!
அமிர்தம் சூர்யாவின் கவிதைகள் யதார்த்தத்தை பளிச்சென்று உறைக்கும்படி, உரைக்கின்றன!
எல்லா பகிர்வுகளுமே மிக அருமையாக உள்ளன! நன்றி!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
நீக்குகண்ணில் பார்க்க முடியாத, கும்பகோணம் டிகிரி காப்பியின் மணம் போல - //
பதிலளிநீக்குநீங்க வேறே இப்போல்லாம் பேர் தான் பெத்த பேரு! காஃபி சிக்கரி மணம் தான் வீசுகிறது! :)))))
எனக்கு ரசனையே இல்லையோ? :)))))))
அடடே, கேள்வியும் கேட்டு, பதிலும் சொல்லிக்கொள்கிற பெருந்தன்மை உங்களைப்போல் யாருக்கு வரும்? (2) கும்பகோணம் டிகிரி காப்பியைத் தயவு செய்து குறை சொல்லாதீர்கள். 1974இல் கும்பகோணம் வெங்கட்டா லாட்ஜில் குடித்த டிகிரி காப்பியின் மணமும் சுவையும் இன்னமும் என் நாவில் இருக்கிறது. கையை எரித்துவிடும் சூட்டிலிருந்த பித்தளை டபராவிலிருந்து, அதே சூட்டில் இருந்த காப்பியை தம்ளருக்குள் ஊற்ற முடியாமல் நான் தவித்த தவிப்பும் இன்றும் நினைவிருக்கிறது. (3) உங்களுக்கு நல்ல டிகிரி காப்பி வேண்டுமென்றால் மாம்பலத்தில் கிடைக்கிறது. அடுத்தமுறை சென்னை வரும்போது மறக்காமல் வாங்கிக்கொள்ளவும். கூரியரில் அனுப்புவதெல்லாம் சரியில்லை. வழியிலேயே மணம் போய்விடும். (4) தங்கள் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கும்ஹூம், வெங்கட்டா லாட்ஜே இப்போ இல்லையே! :)))) 74 இல் நானும் குடிச்சிருக்கேன்! இப்போக் கும்பகோணத்திலேயும் சரி, கும்பகோணம் டிகிரி காஃபி என்ற பெயருள்ள கடைகளிலும் சரி, சிக்கரி காஃபி தான் கிடைக்குது! :))))) கூரியரிலே பொடி வாங்கி அனுப்பிடுங்க. ரெட்டை பாக்கிங் போட்டு! :))))))
நீக்குமாட வீதிகளில் கவிதை ரசித்தேன். இப்போதெல்லாம் அரசியல் பற்றிப் பேசும் தகுதியை (அது அல்லது நான் )இழந்துவிட்டோமா தெரியவில்லை. திருச்சி ஜங்ஷனை விட்டு வெளியே வந்தால் ரூ 8-/ க்கு நல்ல சுவையான ஃபில்டர் காஃபி கிடைக்கிறது டிகிரி யா டிப்லொமாவா தெரியாது
பதிலளிநீக்குஜங்க்ஷனில் கிடைக்குதா? அப்படீங்கறீங்க?? பார்க்கலை. ஜங்க்ஷனுக்குப்போகும் வாய்ப்புக் குறைவு. இங்கே ஶ்ரீரங்கத்திலேயே ஏறி, இறங்குதல் எல்லாம் ஆயிடும். வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கலாம். :))))
நீக்குமுதல் கேள்விக்கு பதில் : சரியான தலைமை அமையாததுதான்.
பதிலளிநீக்குஅமிர்தம் சூர்யாவின் கவிதைகள் முகத்தில் அறைகின்றன.
அரசியலுக்குள் நான் புக விரும்பவில்லை!!!
//இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழே உள்ள தமிழ்மணம்.....//
நான் படிக்கும் பதிவுகள் அனைத்துக்கும் எனது வாக்கு அவசியம் உண்டு.
இப்பதிவுகளில் என் மனதில் நின்றது அன்று நீ நகரமான தினம் கவிதை. ஓர் ஆற்றாமையை சிறிது சிறிதாக நாம் இழந்துகொண்டிருக்கும் சுயத்தை உள்ளதுஉள்ளபடி வெளிப்படுத்துகின்றன இக்கவிதை வரிகள்.
பதிலளிநீக்குதேர்தல் கவிதை - அருமையாக உள்ளது!..
பதிலளிநீக்குடிகிரி காஃபி..{?} இந்த முறை குவைத்தில் இருந்து தஞ்சைக்குத் திரும்பிய போது சென்னையிலிருந்து நெடுஞ்சாலை வழி நெடுக கும்பகோணம் டிகிரி காஃபி என்ற விளம்பரத்துடன் கடைகள் தான்,,,,
அலுத்துப் போய் ஒரு விளம்பரத்துக்குள் நுழைந்தால் - ............. !? டிகிரியும் இல்லை.. (gmb ஐயா சொன்ன மாதிரி) டிப்ளமோவும் இல்லை..
இன்னும் தஞ்சையில் அருமையான டிகிரி காஃ,பி ஐயன் கடைத்தெருவில் கிடைக்கின்றது.