திங்கள், மார்ச் 17, 2014

எம்.ஜி.ஆருக்குச் சம்பளம் ரூ.200, நம்பியாருக்கு ரூ. 600! ( ‘அபுசி-தொபசி’-35)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்  
தமிழருவி மணியன் நடத்தும் ‘ரௌத்திரம்’ மாத இதழ் இப்போதுதான் பார்க்கிறேன். அவருடைய தமிழ் எழுத்தைப் பல்வேறு நூல்கள் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் படித்திருக்கிறேன். என்றாலும் ஒரு பத்திரிகை ஆசிரியராக அவரது மேதைமையை ‘ரௌத்திர’த்தில் தான் பார்க்கிறேன். தமிழை வெறுப்பவர்கள் மட்டுமே தமிழருவி மணியனின் எழுத்தை வெறுக்கமுடியும்.

இந்த இதழில் வை.கோ.வுடன் ஒரு நீண்ட பேட்டி வெளியாகியுள்ளது. அதிலிருந்து சுவையான ஒரு பகுதி: (வை.கோ. பேசுகிறார்)

“நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. கலைஞரின் பாதுகாப்பு அரணாகவே நான் இருந்திருக்கிறேன். டெல்லி நிலநடுக்கத்தின்போது, அவரைக் கையில் ஏந்தி வெளியே ஓடிவந்தேன். அவர் மீது உளி வீசிய சம்பவத்தில், குற்றவாளியை ஓடிப் பிடித்து, அடித்து உதைத்தேன். அவரின் நிழலாய் அலைந்தவன். தொலைக்காட்சிப் பெட்டி உடைப்பு, விமான மறியல் போன்ற போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று சிறைப்பட்டபோது ஒரு திமுக பிரமுகர், என்னால்தான் இப்படி சிறைக்கு வர நேர்ந்தது என்று என்னைத் திட்டினார். ஒருநாள் சிறை வாழ்வைக் கூட ஏற்க முடியாத அவர் பின்னர் திமுகவில் மந்திரியாகக் கூட வலம் வந்தவர். இப்படி அவர் ஏசிப் பேசுகிறார் என்று கலைஞரிடம் கூறியபோது, ‘அதற்கெல்லாம் கவலைப்படவேண்டாம். எனக்குப் பின்னர் யார் இருக்கிறார் கட்சியை நடத்த. சிலவற்றை கண்டு கொள்ளாமல் விட்டுவிட வேண்டும்’ என்று ஆறுதல் படுத்தியவர்தான் கலைஞர்.  பின்னர் அவர் மனநிலையில் மாற்றம் வருகிறது. ஸ்டாலினுக்குப் போட்டியாக நான் வந்து வந்துவிடுவேனோ என்று நினைத்திருக்கலாம். 1987-88ல் ஸ்டாலினுக்கு கூட்ட ஏற்பாடுகளைச் செய்தவனே நான்தான். ஸ்டாலின் வருவதற்கு நான் ஒன்றும் தடையாக இருக்க நினைத்ததில்லை. ஒரு கட்டத்தில் கூட்டங்களில் பேசக் கூட கட்சியில் எனக்கு மறைமுகத் தடை விதிக்கப்பட்டது.

1992ல் உட்கட்சித் தேர்தலில் நான் முன்னிறுத்திய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தங்கவேலு வெற்றி பெறுகிறார். கலைஞர் நிறுத்திய வேட்பாளர் தோல்வியுறுகிறார். தங்கவேலு வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடியவர்களைப் பார்த்து, நீங்களெல்லாம் அதிமுகவுக்கு செல்லலாம் என்று சாடினார்.

‘வைகோவுக்கு ஆதரவாக கலைஞரைக் கொல்ல புலிகள் சதி’ என்று மத்திய உளவுத்துறை ஊர்ஜிதமாகாத ஓர் அறிக்கையைத் “தயாரித்து” அனுப்ப, அதை, திமுகவில் குழப்பம் ஏற்படட்டும் என்று ஜெயலலிதா கலைஞருக்கு அனுப்புகிறார். இந்தச் செய்தியைப் பத்திரிகைகளுக்கு அறிவித்துவிட்டு, பாதுகாப்பை ஏற்றுக் கொள்கிறார்.

எனக்கு உலகமே சூனியமானது போன்ற ஓர் உணர்வு; ‘கும்பகர்ணனைப் போல் இந்தத் தம்பி இருப்பான்’ என்று அறிக்கை கொடுத்துவிட்டு, வேண்டாம் இந்த வீண் பழி அரசியல் என்று விலகியிருக்க நினைத்தவன் வீட்டு முன் திமுக தொண்டர்கள் அணி திரண்டனர். நொச்சிக்குப்பம் தண்டபாணி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்க வேண்டும் என்று சுடுகாட்டில் உரையாற்றவேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டது....”

தவறாமல் இளைஞர்கள் படிக்கவேண்டிய தமிழ் இதழ், ரௌத்திரம்.

புத்தகம்
மேற்கு மாம்பலத்தில் ராம்ஸ் மாருதி குடியிருப்பில் இருக்கும் எனது நண்பர் ஒருவரைப் பார்க்கும்போது சரசுராம் என்ற இளம் எழுத்தாளரைச் சந்திக்க நேர்ந்தது.   தற்போது திரைத்துறையில் பிசியாக இருப்பவர். ‘இன்னொரு மழைக்கு முன்பு..’ என்ற கவிதை மாதிரி தலைப்புள்ள, சிறுகதை தொகுப்பு வந்திருப்பதாகச் சொன்னார். தற்செயலாக அந்த நூலை டிஸ்கவரியில் பார்த்தேன். வாங்கிவிட்டேன். (மித்ரா வெளியீடு, சென்னை. தொலைபேசி: 044-23723182, 24735314. ரூ.75.பக்கம் 136)


தேர்ந்த எழுத்தாளர். பதினேழு கதைகள் கொண்ட இத்தொகுப்பில், பதினேழுமே சிறந்த கதைகளாக இருப்பது ஆச்சரியம்தான். பத்திரிகைகளில் வெளிவருவதற்காக எழுதப்பட்டவையாதலால் ஒவ்வொன்றும் அளவில் சிறியவை. ஆனால் அளவில் சிறிய கடுகும் ரசத்திற்குத் தாளித்தால் வாசனை தூக்கியடிப்பதுபோல், கதை படித்து முடித்தபின் அதன் தாக்கம் எளிதில் விலக மறுக்கிறது.

கதைகளின் ஆரம்பங்கள் நேர்த்தியாகவும் வாசகனை ஈர்த்துப் பிடிப்பதாகவும் அமைந்துள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும். உதாரணத்திற்கு “அர்த்தத்தைத் தேடி...” என்ற கதையின் ஆரம்பம் இது (பக்.21):

விளக்கை அணைக்காமல் மனைவியின் முகத்தருகில் நெருங்கியது தப்பென ரவிக்குத் தோன்றியது. அவள்தான் முதலில் தாடியில் நரையைக் கண்டு பிடித்தாள். நிஜமாஎன ரவி கன்னத்தை அதிர்ச்சியோடு தடவிப் பார்த்தான். உடனடியாகக் கட்டிலைவிட்டு எழுந்துகொண்டான்.

“கவலைப்படாதீங்க...அப்புறம் மொத்தமும் நரைச்சிரும். முகத்துக்கும் சேர்த்து இனி ‘டை’ அடிக்கலாம்..”

“கிண்டலா...இது பித்த நரை.”

“பித்தம் தலைக்குத்தான் ஏறும். முகத்திலயுமா பரவும்?”

“வயசு ஆயிடுச்சுங்கறையா?”

“பின்ன ஆகலையா? பனிரெண்டு வயசுல ஒரு பையன். ஞாபகமிருக்கா..”

ரவி அவளைத் தலையணையால் செல்லமாக அடித்தான். அதில் அவள் நரியைக் கண்டுபிடித்த கோபமும் இருந்தது. லட்சுமி திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

வாழ்த்துக்கள் சரசுராம்! உங்கள் திரைப்படம் எப்போ வரும்?

சினிமா
எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிக்கவந்தபோது அவருக்கு யாரும் சிகப்புக் கம்பளம் விரிக்கவில்லை. பல படங்களில் எடுபிடியான வேடங்களே கிடைத்தன. மேற்கொண்டு வாய்ப்பு தேடித்தான் அவர் நடனம், இசை, சண்டை பயிற்சி போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். அப்படியும் வாய்ப்புக்கள் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டவில்லை.

எம்.ஜி.ஆர். சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் கழித்துதான் வந்தார், எம்.என். நம்பியார்.  சக்தி நாடக சபாவில் இவர் நடித்த ‘கவியின் கனவு’ நாடகத்தில் நம்பியாருக்கு வில்லன் வேடம். ராஜகுருவாக இவர் நடித்ததை பார்த்து ஜூபிடர் பிக்சர்ஸார் தங்களது படங்களில் நடிப்பதற்கு இவரை மாதம் அறுநூறு ரூபாய் சம்பளத்தில் அமர்த்திக்கொண்டார்கள். இதே ஜூபிடரில் அப்போது நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., பி.எஸ்.வீரப்பா, டி.வி.நாராயணசாமி போன்றோருக்கு மாதச் சம்பளம் இருநூறு ரூபாய்தான்!
திறமைக்கு அந்தக் காலத்தில் அவ்வளவு மரியாதை!
     (ஆதாரம்: ‘கலைமகள்’ மார்ச் 2014 இதழில் எஸ்.சுந்தரதாஸ் எழுதிய கட்டுரை.)


கலைஞரைப் பிரச்சாரத்திற்குப் போகவேண்டாமென்று சொல்லிவிட்டாராம் இளையவர். பொழுதுபோக வேண்டுமல்லவா? அவருக்காகவோ என்னவோ,  ‘நாம் இருவர்’ படம் இன்று (16.3.2014) திரையிட்டார்கள். குமாரி கமலா நடித்து ஏ.வி.எம். தயாரித்த மகத்தான வெற்றிப்படம். இதைப் படிக்கும் உங்களில் பலர் அப்போது பிறந்திருக்க மாட்டீர்கள். தேசபக்திக்கும் நடனத்திற்கும் பாரதியார் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.

ஒரு காட்சி திரைப்படமாவது எப்படி என்று காட்டுவதுபோல் அதில் ஒரு நகைச்சுவை காட்சி. அசோகவனத்தில் சீதை அமர்ந்திருக்கிறாள். அசோக மரத்தின்மீது அனுமார் அமர்ந்திருக்கிறார். பத்து தலை இராவணன் வந்து நின்று சீதையை மிரட்டுகிறான். இதுதான் காட்சி. நகைச்சுவை நடிகரோ அதிகம் புகழ்பெறாதவர். சீதையாக நடிப்பவரோ புகழ்பெற்ற தெலுங்கு நடிகை. கையில் வாட்ச் கட்டிக்கொண்டிருக்கிறார். அதிகமான வளையல்கள் அணிந்திருக்கிறார். நடிக்கும்போது கூட அவற்றை எடுக்க மறுக்கிறார். இயக்குனரும் தயாரிப்பாளரும் புதியவர்கள். ‘பிச்சைக்காரியாக நடித்தாலும் நான் இவற்றைக் கழற்றமாட்டேன்’ என்கிறார். அசோகவனத்தில் சீதை எப்படி ஏழ்மையாக இருக்கவேண்டுமென்று சொன்னபோது, நகைச்சுவை நடிகரையும் இயக்குனரையும் திட்டிவிட்டு நான் நடிக்கமாட்டேன் என்று எழுந்துபோய்விடுகிறார்!

வலைப்பூ எழுதும்  நண்பர்களில் பலர், சினிமாவில் உதவி இயக்குனர்களாக இருக்கிறார்கள். சிலருக்கு இயக்குனர் பதவியும் கிடைத்துக்கொண்டு வருகிறது. பாவம், இந்த ஜூனியர்கள், பழம் தின்று கோட்டை போட்ட சீனியர் கலைஞரகளிடம் என்ன மாதிரி திட்டு வாங்குகிறார்களோ? ஆனால் அதை வெளியில் சொல்லமாட்டார்கள். மனதிற்குள்ளேயே விழுங்கிவிடுவார்கள்.

தொலைக்காட்சி

இன்று மெகா டிவியில், மகளிர் தினத்தை முன்னிட்டு,  சாதனை புரிந்த மகளிருக்கான மெகாவிருதுகள் வழங்கப்பட்ட நிகழ்வைக் காட்டினார்கள். அனுபவமுள்ள சின்னத்திரை கலைஞர் லதாராவ் தொகுத்தளித்தார். பாரம்பரிய உடையான சேலை அணிந்து, ஆரம்பம் முதல் இறுதிவரை கண்ணைவிட்டு விலகாத இளஞ்சிரிப்புடன், உதடுகளைச் சுழித்தும் சுருக்கியும் அற்புதமான தமிழில், சுத்தமான உச்சரிப்பில்,  இந்தக் கன்னடப்பெண் தொகுத்தளித்தது, ‘சூப்பர் சிங்கர்’ தொகுப்பாளினிகளுக்கு    வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பது உறுதி.

விருது பெற்ற ஒவ்வொரு சாதனையாளரைப் பற்றியும் ஐந்து நிமிடத்திற்குக் குறையாத ஆவணப்படம் சேர்த்திருந்தது மனதுக்கு நிறைவளித்த விஷயம்.  ‘கந்த சஷ்டி கவசம்’ பாடிய சகோதரிகளில் இன்றும் நம்மோடிருக்கும் மூத்த சகோதரியான சூலமங்கலம் ராஜலட்சுமிக்கு விருது வழங்கியதாகும். இப்படிப்பட்ட அங்கீகாரம் தனக்குக் கிடைத்ததை நெகிழ்ந்து வரவேற்று நன்றி சொன்னார் அந்த முதுபெரும் பாடகி. மிகச்சிறந்த நடிகையான லட்சுமிக்கும் விருது வழங்கப்பட்டது.  அதை அவர் வாங்கிக்கொண்டு, உடனே,  வழங்கிய திருமதி தங்கபாலுவிடமே கொடுத்துவிட்டார். “மற்றவர்கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சாதனை செய்தவர்கள். அதனால் விருதுக்குத் தகுதியானவர்கள். நான் என்ன சாதனை செய்தேன்? இன்றுவரை நடித்து, பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். இது என் தொழில். இதற்காக ஏன் விருது கொடுக்கவேண்டும்?” என்பது அவர் கொள்கை. வாழ்க லட்சுமி!

பின்னணிக் குரல் கொடுக்கும் நடிகை நித்யா, குழந்தை நடிகையாக இருந்து ‘கோழி ஒரு கூட்டிலே’, ‘முத்தான முத்தல்லவோ’ போன்ற பாடல்களால்  பிரபலமாகி, இன்று திறமையான தயாரிப்பாளராக இருக்கும் குட்டி பத்மினி, எங்கள் வட ஆற்காடு மாவட்டக்காரரான பிரபல பாடகி வாணி ஜெயராம்   போன்றவர்களுடன் மேலும் பலர் விருது பெற்றனர்.  94 வயதிலும் யோகா பயில்விக்கும் ஆசிரியை ஒருவருக்கும் விருது வழங்கிக் கௌரவப்படுத்தியது, மெகா டிவியின் நேர்மையையும் மனிதாபிமானத்தையும் காட்டுவதாக இருந்தது.  

பத்திரிகை

தமிழில் கேள்வி-பதில் என்ற பகுதிக்கு இலக்கியத்தரம் வழங்கியவர், கல்கண்டு தமிழ்வாணன். அவருக்குப் பிறகு, கேள்வி-பதில் என்றாலே, சோவின் துக்ளக்தான் நினைவுக்கு வரும்.

ஆதாரபூர்வமான பதில்களை அளிக்கும்போதும், சிறிது நையாண்டி தடவாமல் அவரால் பரிமாற முடியாது. அது மட்டுமன்றி, தன்னையே நையாண்டி செய்துகொள்வதும் சோவின் பழக்கம். 19.3.2014 இதழிலிருந்து ஒரு சுவையான பதில்:


கேள்வி: (த. நாகராஜன், சிவகாசி): முக்காலமும் உணர்ந்த திரிகால ஞானியே! பாவம் என்றால் என்ன? புண்ணியம் என்றால் என்ன?

சோ வின் பதில்: காலை, மதியம், மாலை என்ற மூன்று சாப்பாட்டு வேளைகளையும் தெரிந்து வைத்திருப்பதால் என்னை திரிகால ஞானியாகக் கருதுகிறீர்கள் போலிருக்கிறது; இருக்கட்டும். பாவம் என்றால் -  மாட்டிக்கொள்வது; புண்ணியம் என்றால் – தப்பித்துக் கொள்வது.

சிரிப்பு
தலைவருக்கு ஜெனெரல் நாலட்ஜ் கம்மியா....எதை வச்சு அப்படிச் சொல்ற?”
“லோக் ‘பால்’ மசோதா கொண்டு வரும்போது, தண்ணி கலக்காம பார்த்துக்கணும்கிறாரே!”
-    குமார்.   (நன்றி: தினமலர்- வாரமலர்- 16.3.2014 பக்.11)
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
 © Y Chellappa

11 கருத்துகள்:

 1. சம்பளம் பெரிதல்ல,அந்தத் துறையில் தளராது முன்னேறி உச்சத்தைத் தொட்ட
  எம்.ஜி.ஆர் அவர்களின் உழைப்புப் போற்றத் தக்கது.
  அனைத்தும் அருமை ஐயா

  பதிலளிநீக்கு
 2. இன்னொரு மழைக்கு முன்பு - ரசனை... மெகா டிவி தகவலுக்கும் நன்றி ஐயா...

  நிஜ வாழ்விலும் இருவரும் ஹிரோக்கள்...!

  சோ அவர்களின் பதிலும் கலகல...

  பதிலளிநீக்கு
 3. அற்புதமான அறியாத பல சுவாரஸ்ய
  தகவல்களுடன் பதிவு மிக மிக அருமை
  பதிவிற்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. நம்பியார் பற்றிய தகவல் எனக்கு மிகவே புதிது. என்னா ஒரு வில்லனா அவர் வாத்யாருக்குக் கெடைச்சார்...! மற்ற தகவல்களும் ரசனைக்கு விருந்தாகவே இருந்தன.

  பதிலளிநீக்கு
 5. வைகோவின் பேட்டி இப்போது பெரியவருக்கு ஒரு குத்து வைப்பது போல இருக்கிறது!

  இன்னொரு மழைக்கு முன்பு..புத்தகத்தின் தலைப்பு நீங்கள் சொல்லியிருப்பது போல் கவித்துவமாக இருப்பதால் அவரது திரைப்படத்தையும் அப்படி எதிர்பார்க்கலாமோ!!?

  ஆஹா! தலவருக்கே ரூ 200 தானா? வில்லன் நம்பியாருக்கு ரூ 600 ஆச்சரியமாக இருக்கிறது! இப்போது உள்ள திரையுலகை ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை! ஒரு படம் ஹிட் கொடுத்தாலே ஹீரோவின் சம்பளத்தைக் கேட்டால் தலை சுத்தி மயக்கமே வந்து விடுகிறது! நிஜமாகவே அந்தக் காலம் பொற்காலம்தான்! திறமைக்கு மதிப்பளித்ததால்!

  சோ! அவரை நினைத்தாலே சிரிப்புதான்! எதைச் சொன்னாலும் அதில் நையாண்டி இல்லாமல் இருக்காது! கேள்வி பதில் சூப்பர்! அதுதான் சோ! அவரதுமுகமதுபின் துக்ளக் இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படியான ஒன்றாகத்தான் இருக்கிறது இப்போதுள்ள அரசியலுக்கும் பொருத்தமாகத்தான்....அதனால் 'திரிகால ஞானியே' என்றால் சரிதானோ?!!!

  சிரிப்பு அருமை! நல்ல காலம் தலைவர் திரைப்பட நடிகை "அமலா பால்" கேள்விப்படவில்லை போலும்!

  த.ம.+

  பதிலளிநீக்கு
 6. ஆஹா என்ன இது இந்தப் பதிவிற்கு எல்லாம் நெகட்டிவ் ஓட்டு விழுந்திருக்கிறது! என்ன நடக்கிறது இங்கே!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் நேற்று நெகடிவ் வோட்ஒன்று விழுந்தது ,எல்லாம் அந்த 'பக்தி'யின் கைங்கர்யம்தான் போல் இருக்கிறது !
   த .ம +1

   நீக்கு
 7. தெரியாத பல தகவல்கள். வாழ்த்துக்கள் நண்பரே. வாணி ஜெயராம் நம்ம மாவட்டத்துக்காரரா?!
  த.ம. 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் ஊரிலிருந்து கொஞ்ச தூரம் தான் . வேலூர் அவரது ஊர்!

   நீக்கு