வியாழன், மார்ச் 06, 2014

ஐஸ்வர்யா ரையுடன் நடனமாட வேண்டுமா? ( ‘அபுசி-தொபசி’-32)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்பது பழமொழி. ‘வெண்ணிற ஆடை’யில் ஜெயலலிதாவுடன் அறிமுகமானவர் நிர்மலா. அவரைப் போலவே எம்.ஜி.ஆரிடம் செல்வாக்கு பெற்று விளங்கினார். 1989 இல் போடி சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதாவையே எதிர்த்துப் போட்டியிட்டவர் நிர்மலா. ஆனால் ஜெயலலிதாவோ, திரையிலும் பேர்வாங்கினார், அரசியலிலும் பேர்வாங்கிக் கொண்டிருக்கிறார். நிர்மலாவோ, முட்டி மோதிப் பார்த்துவிட்டு, சாட்சிக்காரனைவிடச் சண்டைக்காரனே மேல் என்று ஜெ. யிடம் சரணடைந்திருக்கிறார். பிப்ரவரி 27 அன்று அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடவிருக்கிறார். இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு, ‘கருப்பு எம்.ஜி.ஆர்.’ விஜயகாந்த்தைத் தாக்குவது - என்று கூறப்படுகிறது. (உடனே, வடிவேலு என்ற பாவப்பட்ட ஜென்மத்தின் நினைவு உங்களுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை!) 

விஜயகாந்த்திடம் நிர்மலாவிற்குப் பிடிக்காத அம்சங்கள் என்ன? ஒரு வேட்பாளரைப் பிரச்சாரத்தின்போது அடித்ததும், சட்டமன்றத்தில் நாக்கைத் துருத்தி, விரலை நீட்டிப் பேசியதும்தான்! “அவருக்கு அரசியல் நாகரிகமும் தெரியலை. அரசியல் தலைவருக்கான லட்சணமும் மிஸ்ஸிங்” என்கிறார் நிர்மலா.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இனி, தி.மு.க. சார்பில் குஷ்புவும், அ.தி.மு.க. சார்பில் நிர்மலாவும் வெளுத்துக்கட்டப் போகிறார்கள். என்னே தமிழர்கள் செய்த பாக்கியம்!

புத்தகம்

ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சியின்போது அகநாழிகை அரங்கில் பேராசிரியர் போ.மணிவண்ணன் அவர்களைச் சந்தித்தேன். அவர்தான், சுமார் ஐம்பது நூல்களை வெளியிட்டிருக்கும்    கோவை ‘தகிதா’ பதிப்பகத்தின் உரிமையாளர் என்பதும், சிறந்த கவிஞர் என்பதும் உடனே தெரிந்த சங்கதிகள். ஒரு எழுத்தாளரைக் கௌரவிப்பது, அவருடைய நூலைக் காசு கொடுத்து வாங்குவதுதான் என்பதால், அதே அரங்கில் விலைக்குக் கிடைத்த  ‘நீ நான் நிலா’ என்ற அவரின் கவிதைத் தொகுதியை வாங்கினேன். செப்டம்பர்  2012 வெளியீடு. 80 பக்கம் 60 ரூபாய். (அலைபேசி:9443751641.) நீளவாக்கில் இல்லாமல் அகலவாக்கில் பைண்டு செய்யப்பட நூல்.


எல்லாமே காதல் கவிதைகள். பாரதியின் பாடல்கள் போல, வாலியின் கவிதைகள் போல, எளிமையான தமிழ். ஆனால் இரண்டு மூன்று எளிமையான சொற்கள் சேர்ந்துவிட்டால் அதில் எங்கிருந்தோ வந்துவிடுகிறது ஓர் ஆழமான கவித்துவம்!

வாத்தியார் என்றால் சாதாரணமாகவே மாணவிகளுக்கு மயக்கம் இருக்கும். அதிலும் வாத்தியாரே கவிஞராக இருந்துவிட்டால்? சம்பந்தப்பட்ட இருதரப்பும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாதிரிக்குச் சில கவிதைகள்:

காற்றில்
மின்சாரம் கசிவதாய்
பலரும் பரபரக்கிறார்கள்
உன்
ஈரக் கூந்தலை
கொஞ்சம்
கட்டி வையேன் (பக்.5)
போ.மணிவண்ணன்
***
ஒரு
தேநீர் இடைவேளையில்
எல்லா இனிப்புகளும் கசந்தன
உன்
நினைவுகளைத் தவிர (பக்.7)
***
இடி
மிரட்டிக்கொண்டே இருந்தது
மின்னல்
எச்சரித்துக்கொண்டே இருந்தது
மழை
தூறிக்கொண்டே இருந்தது
நாம்
நனைந்துகொண்டே இருந்தோம் (பக்.26)
***
இப்போதெல்லாம்
கண் கண்ணாடியுடன்தான்
தூங்குகிறேன்.
கனவில் நீ எழுதப் போகும்
கவிதைகளை
பிழையில்லாமல்
வாசிப்பதற்காக. (பக்.33)
***
என்னை இடைவிடாமல்
எழுதச் சொல்லிவிட்டு
நீ உன் பக்கங்களை
வளர்த்துக்கொண்டே இருந்தாய்
முடிவில்லாமல். (பக்.75)

“காதலித்தவர்களுக்கும், காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்கப் போகிறவர்களுக்கும்” இந்த நூலை அர்ப்பணித்திருக்கிறார், பொன்வண்ணன். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அல்லது இரண்டில் (அல்லது மூன்றிலுமே) நீங்கள் அடங்கக்கூடுமானால், நிச்சயமாகப் படித்துவிடுங்கள் இந்த நூலை!

சினிமா & தொலைக்காட்சி :

ஐஸ்வர்யா ரை- யுடன் நடனமாட வேண்டுமா?

திரைப்பட நடிகைகளில் ஒருபடி மேலானவராகக் கருதப்பட்டவர், மங்களூர்க்காரியான ஐஸ்வர்யா ரை. கண்ணின் உள்ளிருக்கும் பாவை இவருக்கு மட்டும் சற்று பச்சை நிறமாக இருக்கும் என்பதும் ஒரு காரணம். (‘ராய்’ என்பது தவறான உச்சரிப்பு. துளு மொழி பேசும் மக்களில் ஒருபகுதியினரின் குடும்பப்பெயர், 'ரை' - RAI. இவர்களை 'ஷெட்டி' என்றும் கூறுவார்.  ஆங்கிலத்தில்  RAI  என்று எழுதுவதால் ஐஸ்வர்யாவை ‘ராய்’ என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இனியா மாறப்போகிறார்கள்! தொலையட்டும், ராய் என்றாலும், ரை என்றாலும் அவர் என்னமோ அதே ‘ஐம்பது கிலோ தாஜ்மகால்’ தானே!)  (ஸாரி, இப்போது எடை கூடியிருக்கலாம்!)

ஐஸ்வர்யா ரையுடன் நீங்கள் நடனமாடவேண்டுமா? ரஜினிகாந்த்தையே ‘கறுப்பாக இருக்கிறார்’ என்று காரணம் காட்டிப் பல ஆண்டுகள் அவருடன் நடிக்க மறுத்தவராமே, அவருடன் நடனமாடுவது சாதாரணமான விஷயமா? ஆனால், அது உண்மையிலேயே ரொம்பச் சுலபம் என்கிறது அவுட்லுக் பத்திரிக்கை. ஒரே ஒரு கண்டிஷன்: உங்களிடம் இருபதாயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கவேண்டும்.  அது உங்கள் பணமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சஹாரா நிறுவனத்தின் சுப்ரதா ராய் மாதிரி, மக்களிடம் திரட்டிய பணமாகவும் இருக்கலாம். செவ்வாய்க் கிழமை (மார்ச் 03, 2014) அன்று, உச்சநீதிமன்றத்தின் கெடுபிடியான உத்தரவின் காரணமாக  திஹார் ஜெயிலில் அமர்த்தப்பட்ட சுப்ரதா ராய், (இவர் உண்மையிலேயே ROY தான், ‘ரை’ அல்ல!), தன் மகனின் திருமணத்தின்போது ஐஸ்வர்யா ரையுடன் நடனமாடிய படத்தைக் கீழே காண்க:


தனது நிறுவனத்தில் முதல் போட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ராய்க்கு உத்தரவிட்டுள்ளது. எப்போது,  எப்படி, திருப்பித்தரப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஆனால் இன்றுவரை ராயின் செயலைக் கண்டித்து எந்த ஒரு அரசியல் தலைவரும் பேசவில்லை. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த  அரசியல்வாதிகளின் கணக்கில் வராத பணம் சகாராவில் இருப்பதாகவும், அதனால் தான் இதுநாள்வரை அவர்மீது யாரும் நடவடிக்கை எடுக்கக் கோரவில்லை என்றும் தொலைக்காட்சிகள் கூறுகின்றன. மொத்தம் 63,000 ஏக்கர் நிலம் இந்நிறுவனத்திடம்  இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. இதையெல்லாம் திருப்பிகொடுத்துவிடத் தயார் என்றும், ஆனால், பணம் போட்டவர்கள் பலரின் முகவரி தெரியவில்லை என்றும் ராய் கூறியிருக்கிறார்! உடனே உங்கள் முகவரியை அவருக்கு அனுப்புங்கள்! 

ஒருவேளை, ஐஸ்வர்யா ரையுடன் நடனமாடும் அடுத்த பாக்கியம் உங்களுக்குக் கிட்டவும் கூடும்!

பத்திரிகை

பதினைந்து நாள் முன்பு ‘சென்னை - டிஸ்கவரி புக்பேல’ஸில் (அலைபேசி: 9940446650) வாங்கிய காலாண்டிதழ், ‘எழுநா’. புலம் பெயர்ந்தவர்களால் இங்கிலாந்திலிருந்து வெளியிடப்படும் இதழ். ஏ-4 அளவில் எண்பது பக்கமுள்ள பெரிய புத்தகம்.

சாலமன் அருளானந்தம் டேவிட் என்னும் 90 வயதினரான ‘டேவிட் ஐயா’ வின் பேட்டி இடம்பெற்றுள்ளது. ஆர்க்கிடெக்ட்டாகப் படித்துப் பயிற்சிபெற்றவர், காந்திய வழியில் கவர்ந்திழுக்கப்பட்டவர், பிறகு தந்தை செல்வா  அவர்களின் செல்வாக்கினுள் விழுந்தார். படிப்படியாக அது ‘ஈழ விடுதலைக்காகப் போராடிய PLOT என்னும் அமைப்பில் கொண்டு சேர்த்தது. “ஆனால் அமைப்பினுள் சென்ற பின்னர் அனுபவங்கள் வேறு மாதிரி இருந்தன. துப்பாக்கி வழியே சகல கோட்பாடுகளையும் வென்று விடலாம் என்ற மூட நம்பிக்கை ‘பிளோட்டி’ல் இருந்தது. அளவு கடந்து ஆயுதங்களை வழிபடும் மூட நம்பிக்கை எந்த அமைப்பையும் விட்டு வைக்கவில்லை. இது என்னைப் போன்றவர்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கியது” என்கிறார்.

பலமுறை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.  1983 இல் சென்னை வந்தார். “வந்த புதிதில் போராளிகள் என்றால் பெரும் மரியாதை. மக்கள் எல்லாப் போராளிகளையும்  நாயகர்களாகப் பார்த்தார்கள்...ஆனால் ராஜீவ் கொலைக்குப் பிறகு எல்லா நிலைமைகளும் மாறிப் போனது. மரியாதை போனதென்று இல்லாமல், மக்கள் போராளிகளை அச்சத்தோடு பார்த்த காலமும் வந்தது” என்று வர்ணிக்கும் டேவிட் ஐயா, “..இங்குள்ள அரசியல்வாதிகள் தங்களின் தேவைகளுக்கு ஏற்றது போல ஈழ மக்களின் பிரச்சினைகளைப் பேசுகிறார்கள். துரோகமும், வஞ்சகமும், சூதுமான அரசியல் களம் தமிழகத்தினுடையது. பல நேரங்களில், இங்கு வாழ்வதைவிட, சிங்களவன் கையால் குண்டடிபட்டு செத்துப் போயிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது” என்று முடிக்கிறார். சோகம் நெஞ்சைப் பிழிகிறது. விடுதலைப் புலிகள் தரப்பினர் பற்றியே இதுவரை கேட்டிருக்கும் நமக்கு, வேறு தரப்பிலும் ஈழவிடுதலைக்குப் போராடியவர்களின் கதை இவர்போன்றோர் மூலம்தான் தெரியவேண்டும்.

இதே இதழில், இஸுரு சாமர சோமவீர என்ற சிங்களக் கவிஞரின் இரண்டு கவிதைகளை எம். ரிஷான் ஷெரிப் மொழிபெயர்த்திருக்கிறார். என் தாய் என்ற கவிதையில்:

யாரிடமோ அடிவாங்கி உதடு கிழிந்து வீங்கி
நான் வீட்டுக்கு வந்த முன்பொருநாளில்
உங்கள் அரவணைப்புக்குள் எடுக்காது
எனக்கு தனித்து அழ இடமளித்து
எதுவுமே நடவாதது போல நீங்கள்
ஜோதியின் பாடலை ரசித்தீர்கள்...
......
மூக்குக் கண்ணாடியூடாகப் பார்த்து மெதுமெதுவாக
ரிப்பன் அலங்காரங்களைத் தைப்பவள்
சந்தைக்குச் சென்று பேரம் பேசுபவள்
மாலைத் தேநீருக்கு சிற்றுண்டி தயாரிப்பவள்
பூச்செடிகள் வளர்ப்பவள்
ஞாயிறு பத்திரிகைகள் வாசிப்பவள்
நீங்கள்தான் எனது தாய்.

பிறகும்
நானெழுதும் கவிதைகளைப் படிக்காதவள்...

இக்கடைசி வரிகளின் ஏக்கம் நெஞ்சைத் தொடுகிறதல்லவா?

நாடு தொலைத்தவனின் பயணக்குறிப்புக்கள் என்ற அகிலன் நடராஜாவின் கட்டுரை, முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பிறகு இலங்கையிலிருந்து இந்தோனேசியாவின் மூலம் ஆஸ்திரேலியாவிற்குப் பயணப்பட்ட அனுபவங்களைக் கூறுகிறது. எந்த உயிருக்குப் பயந்து ஈழத்தைவிட்டு வெளியேறினார்களோ, அதே உயிரைப் பயணம் வைத்து அபாயகரமான கடல் பயணத்தை மேற்கொள்ளுகிறார்கள், ஆஸ்திரேலியாவிலாவது அகதியாகத் தஞ்சம் கிடைக்குமா என்ற கடைசி ஆசையில்.

“அவுஸ்ரேலிய நேவியின் தொலைபேசி இலக்கம் கிடைக்கிறது. கடலில் இருந்து சட்டர்லைட் தொலைபேசியில் பேசுவதால் வருகிற பிரச்சினையை கிறிஸ்துமஸ் தீவில் போனபிறகு எதிர்கொள்ளலாம். இப்பொழுது அதைப் பற்றி யோசிக்க முடியாது. நான்தான் நேவியின் இலக்கத்திற்கு பேசுகிறேன். பேசுவதல்ல, தரப்பாளில் விழுகிற மழைச் சத்தம், ஊளையிடுகிற காற்று, இரைகின்ற எஞ்சின் சத்தங்களுக்கு எதிராக கத்துகிறேன். எதிர்முனையில் பதில் இல்லை. இன்னொரு முறையும் முயற்சி செய்கிறேன்.  படபடவென்று படகின் நிலையையும் சனங்களின் நிலையையும் எடுத்துச் சொல்லி உதவி கோருகின்றேன். இம்முறை தகவல் பெறப்பட்டது என்றொரு செய்தி கிடைக்கின்றது. எதற்கும் குறுந்தகவல் ஒன்றையும் அனுப்பிவிடுமாறு ரதீஸ் சொல்கிறான். ஷிளிஷி என்பது பொதுவான ஆபத்துநேர குறியீடுதான். ஆனாலும் கடலில் அனுபவமும் முதிர்ச்சியும் உள்ளவர்களுக்கே, அது தெரியும் என்பதால் அப்படியேதும் செய்து பிரச்சினைக்கு உள்ளாகக்கூடாது. படகில் பலர் கை கால்கள் இல்லாமல் உடல் முழுக்க முள்ளிவாய்க்கால் பதிவுகளோடு வருகிறார்கள். அதனால் வீண் சந்தேகங்களும் வரலாம். அதனால் ‘நாங்கள் கிறிஸ்மஸ் தீவை நோக்கி வந்து கொண்டிருக்கிறோம். படகிற்குள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை பெய்து கொண்டிருக்கிறது. எங்களை காப்பாற்றுங்கள்’ என்று செய்தி அனுப்பினேன்.   

கடும் காற்றும் மழையும் மோசமாக இருந்தது. படகின் எல்லாப் பக்கமிருந்தும் தண்ணீர் விளாசி அடித்தது. போதாக்குறைக்கு மழை. எல்லாரும் நனைந்த கோழிகளாயிருந்தோம். நிலைமை பயங்கரமாவதற்குரிய எல்லா வாய்ப்புகளும் பிரகாசமாகத் தெரிந்தன.

ஈரானைச் சேர்ந்த குடும்பம் ‘ஹோதா’ ‘ஹோதா’ என்று முணுமுணுக்கிறார்கள். பிள்ளைகளை அம்மாமார் தமக்குள்ளே அணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேதலித்துப் போயிருக்கிறார்கள்..... தூரத்தில் புள்ளியாக வெளிச்சமொன்று தெரிகிறது. இடையிடையே மின்னுவதால் கடற்படையினராக இருக்கலாம். வேறு கப்பல்களாகவும் இருக்கக் கூடும். வரவர பச்சை வெளிச்சம் பெரிதாகிறது. நேவிதான்.”

“வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்” என்று வைரமுத்து எழுதினாரே, அந்த நிஜம் சுடுகிறது. (படம்: ‘கன்னத்தில் முத்தமிட்டால்’)
****
எப்போதாவது 'குங்குமம்' வாங்குவதுண்டு. இந்த வாரம் ( 10-3-2014)  இதழில் புடவை கட்டிய  (அல்லது சுடிதார் அணிந்த) கவிஞர்களுக்கு அடித்திருக்கிறது யோகம்!  (மகளிர் தினம் வருகிறதே!)

மொத்தம் பதினாறு பெண் கவிஞர்களிடமிருந்து அவர்களுக்குப் பிடித்த கவிதை த் துண்டு ஒன்றை க் கேட்டுவாங்கிப் பதிப்பித்திருக்கிறார்கள். நல்ல முயற்சிதான். இருந்தாலும் வெளியிட்டுள்ள கவிதைகளை  மட்டும் வைத்து இக்கவிஞர்களின் ரசனையைப் பற்றிய முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்று தோன்றுகிறது. இவற்றை விடச் சிறந்த கவிதைகளையும் இவர்கள் அறிந்திருக்கக் கூடும். (விதிவிலக்கு: உமாமோகன்.)




சிரிப்பு
இந்த விளம்பரத்தைப் பாருங்கள். ஆங்கிலத்தில் LOAN AGAINST PROPERTY  என்பதை அப்படியே நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்- 'சொத்திற்கு எதிராக கடன்' என்று. அது சரியில்லையே! தமிழ் வழக்குப்படி, சொத்தின் மீது கடன் என்றுதானே மொழிபெயர்க்க வேண்டும்? 


விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி எழுதும்போதும் பத்திரிகையாளர்கள் இதே தவற்றைச் செய்கிறார்கள்.  'THE MATCH AGAINST ENGLAND'  என்பதை 'இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்' என்று எழுதுகிறார்கள். தமிழ் மரபுப்படி, 'இங்கிலாந்து உடனான ஆட்டம்' என்றுதான் எழுத வேண்டும். தமிழைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் இப்படிப்பட்ட சிறு விஷயங்களைப் பற்றியும் கவலைப்படவேண்டாமா?

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
 © Y Chellappa

16 கருத்துகள்:

  1. இதுவல்லவோ பாக்கியம்... ஹா... ஹா...

    5 + 1 கவிதையுமே அசத்தல்...

    இருபதாயிரம் கோடியா...?

    இன்று அனைத்துமே எதிரியாக / எதிராக ஆகிக் கொண்டதால் இப்படியோ...? ம்... தமிழறிவு அப்படி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே வருகைக்காகவும் கருத்துரைத்ததற்காகவும் .

      நீக்கு
  2. இவ்வாரப் பதிவில் விளம்பரம் பற்றிய பதிவு சிந்திக்கவைத்தது. நேரடி மொழிபெயர்ப்பு என்ற நிலையில் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டு, வேறு பொருளைத் தரும் வகையில் அமைந்துவிடுகின்றன. தாங்கள் கூறுவது போல் சொத்தின்மீது கடன் என்பதே சரி.

    பதிலளிநீக்கு
  3. தலைப்பைப் பார்த்ததும்
    தாவி வந்தவர்களில் நானும் ஒருவன்
    பிறப் பதிவுகள் அற்புதமாக பய்னுள்ளதாக
    இருந்ததால் ஐஸ்வர்ரை டான்ஸ் ஆட முடியாமல்
    போன ஏமாற்றம் அதிகம் பாதிக்கவில்லை
    சுவாரஸ்யமான பயனுள்ள பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஐஸ்வரய ரை போல்தான் ப்ரகாஷ் ( ராஜ் அல்ல ) ரை. இதை அவரே கூறியதாகப் படித்த நினைவு. காதல் கவிதைகள் அழகு சொட்டுகிறது. ஈழ மக்களின் துயரங்கள் துயர் அனுபவித்தவர்கள் எழுதும்போது மனசு வலிக்கிறது. ஆனால் புலம் பெயர்ந்த ஸ்ரீலங்கா வாசிகள்( இவர்கள் ஈழத்தைச் சேராததாலோ) எழுதும் போது அந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. ஐஸ்வர்யா வுடன் நடனம் நான் விரும்பவில்லை. இந்தப் பழம் புளிக்கும்.!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இப்படி சொல்லலாமா? அவர் மிகவும் வருத்தப்பட்டார் .

      நீக்கு
  5. நல்ல பதிவு. நன்றி நண்பரே.
    இஸுரு சாமர சோமவீர உட்பட எட்டுக் கவிஞர்களின் கவிதைகளடங்கிய முழுமையான தமிழ்த் தொகுப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. நையாண்டி அரசியல்!! அருமை!

    சொத்தில்லை ஐஸ்வர்யா ரை யுடன் ஆட! வேண்டுமென்றால் நாம் அவருடன் ஆட நமக்கு அவரைத் தரச் சொல்லுங்கள்! புண்ணியமாகப் போகும்! அவருக்கு, நமக்கல்ல!

    காதல் கவிதைகள் அனைத்துமே "காதல் கனி ரசம்" சொட்டுகிறது! இனிமையுடன்!! ரசித்தோம்!

    சிரிப்பில் உள்ள விளம்பரம் நம் தமிழ் எப்படி ஆகிவிட்டது என்ரு சிந்திக்க வைக்கிறது! அதுவும் தாங்கள் இங்கு அதை விளக்கிக் கூறியதால் இல்லையென்றால் அதுவும் தெரிந்திருக்காது ஸார்.!

    அனைத்துமே தங்கள் நகைச்சுவை, நையாண்டி இடைச்செருகலுடன், ஆஹா! என்றிருந்தன!

    துளசிதரன், கீதா

    த.ம.





    பதிலளிநீக்கு
  7. ///பல நேரங்களில், இங்கு வாழ்வதைவிட, சிங்களவன் கையால் குண்டடிபட்டு செத்துப் போயிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது”///
    மனம் கனக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
  8. இங்கே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எப்படி அரசியல் நடக்கிறது என்பதை தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார் டேவிட் அய்யா !
    நான் ஐஸுடன் ஆடினால் வீட்டிலே கொதிப்பின் சூடு தாங்க முடியாமல் போய்விடுமே ?
    த ம 5

    பதிலளிநீக்கு
  9. என்னே தமிழர்கள் செய்த பாக்கியம்...

    அனைத்தும் அருமை..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு