அப்போதெல்லாம் அடிக்கடி இந்திய சுப்ரீம் கோர்ட்டின் பெயர் பத்திரிகைகளில்
அடிபட்டுக்கொண்டிருந்தது. முக்கிய காரணம், யாருக்கு வேண்டுமானாலும் ஜாமீன்
வழங்குவது தான்.
புதுடில்லி சுப்ரீம் கோர்ட் |
எப்படிப்பட்ட குற்றவாளியானாலும் சரி, கீழ் கோர்ட்டும் மானில ஹைக்கோர்ட்டும்
ஜாமீன் வழங்க மறுத்தால் உடனடியாக புதுடில்லிக்குப் போய் சுப்ரீம் கோர்ட் மூலம்
ஜாமீன் பெற்று விடுவார்கள். அதனால் பொதுமக்கள் மத்தியில் சுப்ரீம் கோர்ட் என்றாலே
மரியாதை குறைந்து கொண்டிருந்த சூழ்நிலையில் வெளியான நகைச்சுவை துணுக்கு அது:
ஒரு விவசாயி போலீஸ் ஸ்டேஷனில் நின்று “ஐயா, என்னுடைய மாட்டைக் காணவில்லை,
கண்டுபிடித்து கொடுப்பீர்களா?” என்கிறான். அதற்கு போலீஸ்காரர், “இதோ பாரய்யா! இதெல்லாம்
சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகவேண்டிய விஷயம். நாங்கள் தலையிட முடியாது” என்கிறார்.
இந்தியா மட்டும் என்றில்லை, அமெரிக்காவிலும் இதே கதை தான். சுப்ரீம் கோர்ட்
என்றால் மக்கள் மத்தியில் குழப்பமான பிம்பம் தான் பதிந்திருக்கிறது. ஒருவேளை,
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்களுக்கான தர்ம நியாயங்களைப் பத்திரிகைகள் சரியாக
விளக்குவதில்லையா? அல்லது பத்திரிகைகள் தங்கள் முதலாளிகளுக்கு ஒவ்வாத தீர்ப்புகளை
சுருக்கமாகவே வெளியிட்டு, ஒத்துவரும் தீர்ப்புகளை மட்டும் விரிவாக வெளியிடுகிறார்களா?
ஜனநாயகமா, பணநாயகமா?
எவ்வளவோ உயர்ந்த லட்சியங்களுடன் ஜனநாயகம் என்ற கொள்கை இந்தியா, இங்கிலாந்து,
அமெரிக்கா போன்ற நாடுகளில் வேரூன்றியிருந்தாலும், அது உண்மையில் பணநாயகமாகத் தான்
செயல்படுகிறது என்பதை அறிவோம்.
இந்தியாவில் ஏழைகள் தேர்தலில் நின்று எளிதாகப் பதவிக்கு வரமுடியும். (பதவி
முடியும் தருவாயில் அவர்களில் பலர் ஏழைகளாக இருப்பதில்லை). அமெரிக்காவிலோ, வருவதற்கு
முன்னரே அவர் பணக்காரராக இருந்தாக வேண்டும், அல்லது, தன்னை எதிர்த்து நிற்கும்
வேட்பாளரை விட அதிகப் பணம் தேர்தல் நிதியாக சேகரித்துக் காட்ட வேண்டும். அப்போது
தான் ஜெயிக்க முடியும். தேர்தல் சமயத்தில் அமெரிக்கப் பத்திரிகைகள் எந்த வேட்பாளர்
எவ்வளவு பணம் சேர்த்திருக்கிறார், அதில் அன்று வரை செலவழித்தது எவ்வளவு, மீதம்
இருப்பது எவ்வளவு என்று ஒவ்வொருநாளும் விவரமாக வெளியிடுகின்றன.
அமெரிக்காவில் அரசியல் கட்சித்தலைவர்களுக்கு செல்வாக்கு கிடையாது. அவர்களால்
தன் மகனையோ மகளையோ மைத்துனியையோ வேட்பாளராக நியமிக்க முடியாது. ஒவ்வொரு தேர்தலின்
போதும் அடிமட்டத்திலிருந்து யார் வேண்டுமானாலும் போட்டியிட்டு, அதற்குரிய பல
கட்டங்களைக் கடந்து இறுதிக்கட்டத்தில் ஜெயித்தால் மட்டுமே வேட்பாளராக நிற்பதற்குரிய தகுதியைப் பெற்றதாகும். அதன் பிறகே அவரைத் தனது
அதிகாரபூர்வ வேட்பாளராக அவருடைய கட்சி அறிவிக்கும்.
இப்படி, பல கட்டத் தேர்வுமுறையால் பணச்செலவு ஏராளம். அதை வேட்பாளர்தான் எப்படியாவது
செய்தாக வேண்டும். ஆகவே வசதியுள்ளவர்களிடமிருந்து நன்கொடை பெற்றால் தான்
சமாளிக்கமுடியும். ஆனால் வேட்பாளர் பெறும் நன்கொடைகளுக்குப் பல நெறிமுறைகள் உண்டு.
ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் நன்கொடை பெற வழியில்லை, ஏனெனில் அன்றாடம் கணக்கு
காண்பிக்க வேண்டுமே!
அதே சமயம், அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் விருப்பம்போல்
நன்கொடை வழங்கத் தயாராக இருந்தன. ஆனால்,
ஆண்டுக்கு இவ்வளவுக்கு மேல் தரக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்து வந்தது.
இக்கட்டுப்பாட்டை நீக்கினாலொழிய வேட்பாளர்களுக்கு நிதிவசதி கிடைக்க முடியாது
என்பதால், ஒரு புதிய நடைமுறையைக் கொண்டுவந்தார்கள். அதாவது, வேட்பாளருக்குத் தானே
நேரடியாக நன்கொடை தரக்கூடாது? வேட்பாளரை ஆதரித்தோ அல்லது எதிர்தரப்பு வேட்பாளரைக்
குறைகூறியோ பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கலாமே! அந்தப் பணம் ஊடகங்களுக்குத்
தானே போகிறது, அதை அனுமதிக்கலாம் என்று கொண்டுவந்தார்கள்.
இதற்காகத் தான் ‘சூப்பர் பிஏசி’ (Super PAC-Political Action Committee) எனப்படும் அரசியல்
குழுக்களை ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஏற்படுத்தியது. யார் வேண்டுமானாலும் இந்த அமைப்புகளுக்கு
எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை தரலாம்.
இது வேட்பாளருக்குத் தந்த நன்கொடையாகக் கருதப்படமாட்டாது.
இது போதாதா? கம்பெனிகளும், ஊழியர் சங்கங்களும் ஏன், அறக்கட்டளைகளும் கூட,
தங்களுக்குச் சார்பாக சட்டம் இயற்றுவிக்கவோ, அல்லது பாதகமான சட்டத்தைத் திருத்தவைக்கவோ
எந்தக் கட்சி வாக்களிக்கிறதோ அந்தக் கட்சியின் ‘சூப்பர் பிஏசி’க்கு வாரி வழங்கலானார்கள்.
இது, ஜனநாயகத்துக்கு எதிரான ஊழல் அல்லவா, பணநாயகத்தை நிறுவனப்படுத்தும் திட்டமல்லவா, இந்தப் புதிய
நன்கொடை முறையைத் தடுத்தாக வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் “சிட்டிஸன்ஸ்
யுனைட்டெட்” (Citizens United)
என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
இப்படிப்பட்ட வழக்கை எந்த அரசியல் கட்சியாவது ஜெயிக்க விடுமா? எல்லாருக்குமே
பாதகம் அல்லவா எற்படும்? போராடினார்கள். இறுதியில் ‘5 க்கு 4’ என்று
மெஜாரிட்டியில் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்- வாஷிங்டன்
அதாவது, “சூப்பர் பிஏசி-க்கு யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை தரலாம். அதை வேட்பாளரின் கணக்கில் சேர்க்கத் தேவையில்லை.
அது மட்டுமல்ல, அத்தகைய நன்கொடைக்கு உச்சவரம்பை நிர்ணயிக்கத் தேவையில்லை” என்று
இறுதி முடிவை அறிவித்துவிட்டது சுப்ரீம் கோர்ட். இதன் விளைவாக கம்பெனிகளும் ஊழியர்
சங்கங்களும் எந்தவொரு வேட்பாளரை ஆதரித்தோ எதிர்த்தோ, தாங்களாகவே விளம்பரங்கள்
கொடுக்கலாம், அல்லது அது போன்ற விளம்பரங்கள் கொடுக்கும் பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு
வரையில்லாத நன்கொடை வழங்கலாம் என்று ஆனது. இந்த முடிவு ஜனவரி 2010ல் வந்ததால் இவ்வழக்கிற்கு
“Citizens United vs Federal Election Commission 2010” என்று பெயர்.
2008-2012 நான்காண்டுகள் ஒபாமாவின் முதல் பதவிக்காலம். அப்போது வழங்கப்பட்ட
தீர்ப்பு இது. 2012ல் மீண்டும் பதவிக்கு வந்தார் ஒபாமா. எனவே இந்த வழக்கின்
முடிவால் அதிக லாபம் பெற்றவர் அவராகவே இருக்கக்கூடும்.
இதற்கு முன்னதாக
SpeechNow.org vs Federal Election
Commission என்ற வழக்கில் தேர்தல் முடிவுகளைத்
தனக்கு சாதகமாக்கிக் கொள்வதற்காக வேட்பாளர்கள் சார்பாக விளம்பரங்கள் வெளியிடும்
அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கும்
தனிநபர்கள் மீது இவ்வளவு தொகை தான் நீ நன்கொடை தரலாம் என்று கட்டுப்படுத்துவது,
பேச்சுரிமைக்குத் தடை விதிப்பதற்கு சமம், ஆகவே செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.
இத்தீர்ப்பின்
விளைவாகத் தோன்றியவை தான் ‘சூப்பர் பிஏசி’ என்னும் சர்வ வல்லமை பொருந்திய
அமைப்புகள். ‘பிஏசி’ யானது நன்கொடைகள் பெறலாம், ஆனால் சுப்பர் பிஏசிக்கள் செலவு
மட்டுமே செய்யலாம். அறக்கட்டளைகள் (‘non-profits’ in USA) இத்தகைய சுப்பர் பிஏசிக்களுக்கு எவ்வளவு
வேண்டுமானாலும் நன்கொடை தரலாம், ஆனால் அந்தப் பணம் தங்களுக்கு எப்படி யார் மூலம்
வந்த்து என்பதை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை! அறிவுஜீவிகள் நாடு அரசியலில்
புதியதொரு ஊழலைத் தோற்றுவிப்பதில் எத்தகைய வழிகாட்டுகிறது பாருங்கள்! (அதே சமயம்,
இந்த அறக்கட்டளைகள், வேறு யாருக்கு நன்கொடை வழங்கினாலும், அந்தப் பணம் யாரால்
வசூலித்துத் தரப்பட்டது என்பதை வெளியிட்டாக வேண்டுமாம்!
இந்த விபரீத நிகழ்வுகளைக்
கட்டுப்படுத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையோடு Citizens United என்ற
அமைப்பு வழக்கு தொடுத்தது. சூப்பர் பிஏசிக்களுக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடை
கொடுக்கட்டும். ஆனால் தயவு செய்து ஒரு அறக்கட்டளையோ கம்பெனியோ ஓராண்டில் இவ்வளவு
தான் மொத்த நன்கொடை தரலாம் என்று ஓர் உச்ச வரம்பை நிர்ணயிக்கவேண்டும் என்று
கோரியது. குறிப்பிட்ட அளவுக்குமேல் வழங்கும் நன்கொடையை ‘லஞ்சமாக’ (Corruption)
அறிவிக்கவேண்டும் என்று கோரியது. இதைத் தான் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து
தீர்ப்பளித்தது.
2012ல் ஒபாமா வெற்றியடைந்த தேர்தலின்
போது எல்லா சுப்பர் பிஏசிக்களும் செய்த மொத்த செலவு 378 மில்லியன் டாலர் ஆகும்.
ஒபாமாவுக்கு ஆதரவான ஒரு ஆசிரியர்
சங்கம் (NEA – National Education Association) தன்
பங்குக்கு அளித்த நன்கொடை 10.8 மில்லியன் டாலர். தவிர 1.7 மில்லியன் டாலரை தனித்தனியாக வேட்பாளர்களுக்குக்
கொடுத்திருக்கிறது. இந்த அமைப்பில் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
15 லட்சம் பேரை உறுப்பினராகக் கொண்ட இன்னொரு
ஆசிரியர் சங்கம் (AFT – American Federation of Teachers) 5.8 மில்லியன்
டாலர் அளித்ததாம். தவிர, வாஷிங்டனில் “பேரம் பேச” (lobbying) 6.6 மில்லியன் டாலர் செலவழித்ததாம்.
இப்படி எத்தனையோ சங்கங்கள்!
***** நியூயார்க் டைம்ஸ் ஜூன் 16 ஞாயிறு இதழில் இது பற்றி வந்த விவாதக் கடிதங்களின் சாராம்சத்தை இங்கு தருகிறேன்.
‘சிடிஸன்ஸ் யுனைடெட்’ சார்பில் ஜானத்தன் மர்காலிஸ் (Jonathan Margolis) கூறுகிறார்:
சுப்ரீம் கோர்ட்
என்பது இன்னாட்டின் மிக முக்கியமான நிறுவனம். ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த பல
வழக்குகள் இன்னும் முடிக்கப்படாமல் தேங்கி நிற்கின்றன. தன் முடிவுகள் வெளியுலகை
எந்த அளவுக்குப் பாதிக்கும் என்ற தன்னுணர்வேயில்லாமல் பல வழக்குகளில் முடிவு சொல்லியிருக்கிறது,
சுப்ரீம் கோர்ட். பிரபல நகைச்சுவையாளர் அனடோல் ஃப்ரான்ஸ் சொன்னது நினைவுக்கு
வருகிறது: ’சட்டம் தன் பேரறிவின் காரணமாக அனைவரையும் சமமானதாகக் கருதுகிறது. ஆகவே
தான், பாலங்களின் அடியில் ஏழைகளும் உறங்கக்கூடாது, பணக்காரர்களும் உறங்கக்கூடாது என்கிறது.’
இந்தப்
பின்னணியில் தான் Citizens United vs Federal Election Commission 2010 வழக்கில் “அளவுக்கு அதிகமாக அளிக்கப்படும் நன்கொடையை
லஞ்சமாகக் கருத வேண்டியதில்லை” என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு கோபத்தையும்
கேலியையும் கிளப்பியது. இவ்வழக்கில் வாதியின் சார்பில் சுமார் நூறு வருட (அரசியல்
நன்கொடை) நிலவரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதையெல்லாம் கருத்தில்
கொள்ளவேயில்லை சுப்ரீம் கோர்ட் என்கிறார்கள்.
மக்களைப்
பொருத்தவரை சில முக்கியமான வழக்குகளின் முடிவுகளையே உற்று நோக்குகிறார்கள். உதாரணமாக:
குடியேறிகளுக்கு வாக்குரிமை (Voting Rights), நிறம்சார்ந்த
வேற்றுமை களைதல் (Affirmative Action), சுய பாலினர்
திருமணம் (Same-sex Marriage) போன்றவை. ஆனால், சுப்ரீம் கோர்ட்டைப் பொறுத்தவரை எந்த
முடிவு எடுக்கப்படுகிறது என்பதை விட எந்த வழிமுறையில் எடுக்கப்படுகிறது என்பதைப்
பொறுத்தே நாட்டில் அதன் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும். வழக்குகளை முடித்துவைப்பது
தான் நீதிபதிகளின் தலையாய பணியென்றாலும், சமுதாயத்தில் தங்கள் நிறுவனத்தின்
உயர்நிலையைப் பாதுகாப்பதும் அவர்களின் பொறுப்பேயாகும். மக்கள் மனதில்
நீதிமன்றத்தின் (இழந்த) பெருமையை மீட்டெடுக்கவேண்டும் என்ற நிலை ஏற்படுமானால் அப்பழியை
நீதிபதிகள் தாம் ஏற்கவேண்டும்.
இப்பழியை
விலக்கவேண்டுமானால், எந்த வழக்கில் முடிவு சொல்வதற்கு முன்னும் தம் முடிவு
வெளியுலகத்தின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறதா என்று சோதிப்பது அவசியம்.
ஒவ்வொரு
நீதிபதியும் தன் மேஜைமீது நீதிபதி ராபர்ட் ஜாக்ஸன் சொன்ன இவ்வாசகத்தை
எழுதிவைத்துக்கொள்ள வேண்டும்: “நாம் தவறு செய்யவே முடியாதவர்கள் என்பதால் நாம்
இறுதியானவர்கள் அல்லர். நாம் இறுதியானவர்கள் என்பதாலேயே தவறு செய்ய முடியாதவர்களாகக் கருதப்படுகிறோம்”. (We are not FINAL
because we are INFALLIBLE but we are INFALLIBLE because we are FINAL).
இல்லினாய்
பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிற்றுவிக்கும் பேராசிரியர் ஜேஸன் மஸான் (Jason Mazzone,
Professor at the University of Illinois College of Law) இதற்கு மறுப்பு சொல்கிறார்:
“தாங்கள் விரும்பிய தீர்ப்பை நீதிமன்றம் வழங்காத போதெல்லாம் இம்மாதிரி
விமர்சனம் வருவது வாடிக்கையே. இவர்கள் மற்ற நேரங்களில் சும்மா இருப்பது ஏன்?
உதாரணமாக, (கைது செய்யப்பட்ட) விரும்பத்தகாதவர்களை (நெறிமுறையின் படி இல்லை என்று
காரணம் காட்டி) விடுதலை செய்து தெருவில் நடமாவிடுவதன் மூலம் பொது மக்களுக்கு
ஆபத்தை விளைவிக்கும் தீர்ப்புகள் எவ்வளவோ வருகின்றனவே! தங்கள் நிறுவனங்களை
எதிர்த்து ஊழியர்கள் போடும் வழக்கில் வருடக்கணக்காக தீர்ப்பை ஒத்திப்போடுவதன்
மூலம் மக்கள் வரிப்பணம் பாழாகிறதே! தீவிரவாதிகளைக் கைது செய்ய அரசு சட்டம்
கொண்டுவரும்போது பல நேரங்களில் ஓட்டையான காரணங்கள் காட்டி நீதிமன்றம் அதைத் தடுத்துவிடுகிறதே! அதையெல்லாம் யாராவது விமர்சிக்கிறார்களா?
“நீதிமன்றம் என்பது என்னுடைய
விருப்பத்தையோ, அவருடைய விருப்பத்தையோ நிறைவேற்ற வேண்டியது அவசியமில்லை. கையிலுள்ள
வழக்கில் சட்டம் என்ன சொல்கிறது என்று விளக்கும் பணியை மட்டும் நீதிமன்றம்
செய்யட்டும். அது போதும்” என்கிறார்.
**** ஒபாமா கட்சியைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் லூயிஸ் ஸ்லாட்டர் (Louis Slaughter, from New York) தன் கருத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்:
“சுப்ரீம் கோர்ட்டின் கீழுள்ள மற்ற நீதிமன்றங்களில்
பணிபுரியும் நீதிபதிகளைக் கட்டுப்படுத்த ஒழுக்க விதிகள் உண்டு. (‘Code of Conduct for
US Judges’). ஆனால் இவ்விதிகள் தங்களைக் கட்டுப்படுத்தாது
என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவித்திருக்கிறார்கள். இது சரியில்லை.
நாட்டின் உச்ச நீதிமன்றம், நாடு முழுவதையும் கட்டுப்படுத்தக்கூடிய முக்கிய
வழக்குகளில் நடுநிலையாக தீர்ப்பு சொல்லவேண்டிய கடமையில் இருப்பதால், அதன்
நீதிபதிகள் மிக உயர்ந்த பட்ச ஒழுக்கத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். இதில் அவர்கள்
வழுவுவதை நாம் அனுமதிக்கமுடியாது. இதற்காகவே புதியதொரு சட்ட வரைவை விரைவில்
அறிமுகப்படுத்தப்போகிறோம்”.
*** இந்தியாவில் ஏதாவதொரு மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி பணிமூப்பு பட்டியலில் இடம் பெற்றவர்களில் ஒருவர் தான் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைய முடியும். அமெரிக்காவில் இம்மாதிரி ஒழுங்குமுறை அமுலில் இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளுக்கு ஓய்வு வயது கிடையாது என்பதால், ஒரு நீதிபதி இறந்தால் மட்டுமே அல்லது தானாக விலகினாலோ அல்லது சட்டபூர்வமாக நீக்கப்பட்டலோ தான் காலியிடம் ஏற்படும். அப்போது ஜனாதிபதியானவர் தனக்கு விருப்பமானவரை (அதாவது, தன் கட்சியைச் சேர்ந்தவரை, அல்லது தன் கட்சிக்கு அதிக நன்கொடை வழங்கியவர்களின் ஆதரவு பெற்றவரை) நீதிபதியாக நியமிப்பார். இவர்கள் நிச்சயமாக சட்டம் படித்தவர்களாக இருக்கவேண்டும் என்பது தான் அவசியமே தவிர, நீதித்துறையில் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டிய அவசியமில்லை. பெரும்பாலும் அரசின் சட்டத்துறையில் அதிகாரிகளாகவோ, சட்டக் கல்லூரிகளில் ஆசிரியர்களாகவோ, சட்டம் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதியவர்களாகவோ இருப்பார்கள்.
இப்படி
நியமிக்கப்பட்டவர்கள், பாராளுமன்றத்திற்கு அழைக்கப்படுவார்கள். ‘நீதித்துறை
கமிட்டி’ என்ற கமிட்டியின் முன் அமர்ந்து அதன் உறுப்பினர்கள் கேட்கும்
கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும். இக் கமிட்டியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும்
இருப்பர். அவர்கள் இந்த வேட்பாளரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். நம்மூர்
சர்வீஸ் கமிஷன் இண்ட்டர்வியூ மாதிரி தான் நடக்கும். ‘லாஸ் ஏஞ்சலிஸில் வெங்காயம்
பவுண்டு என்ன விலை” என்று கூட கேட்பார்கள். தோராயமான பதில் கூறாவிட்டால், ‘இது
கூடத் தெரியாமல் நீதிபதியாகி நீ என்ன செய்வாய்’ என்பது போல் முகம்காட்டுவார்கள்.
இவருடைய பழைய வாழ்க்கையைத் தோண்டியெடுத்து ‘அந்தப் பெண்ணோடு உனக்கு தொடர்பு இருந்ததா’
என்பார்கள். ‘முப்பது வருடம் முன்பு நீ வருமான வரியில் பத்து டாலர் பாக்கி
வைத்தாயாமே, ஆறு வருடம் கழித்து தான் அதைக் கட்டினாயாமே’ என்று
கொந்தளிப்பார்கள். (எதிர்க்கட்சியின்
நோக்கம் ஜனாதிபதியைச் சிறுமைப்படுத்துவது தானே!) சில நாட்கள் இம்மாதிரி தொடர்
விளையாட்டு நடக்கும். இடையில் எதிர்க்கட்சி பத்திரிகைகளும் டி.வி.க்களும் இவருக்குப்
பதவி கிடைக்காது என்று ஆரூடம் சொல்வார்கள். ஆளும்கட்சி பத்திரிகைகளும்
டி.வி.க்களும் ‘ஆஹா! கேட்ட கேள்விகளுக்கெல்லாம் என்னமாய் பதில் சொல்லுகிறார்! இதுவரையில்
வந்ததிலேயே இவர் தான் மிகச் சிறந்த வேட்பாளர்’ என்ற ரீதியில் எழுதுவார்கள். கடைசியில்
கமிட்டி இவரை நீதிபதியாவதற்குத் தகுதியானவர் தான் என்று அறிவிக்கும். இதற்கு “Confirmation” என்று பெயர். அவ்வளவு தான், அவர் நீதிபதியாகிவிடுவார். இனி
சாகும்வரை அவரை யாரும் ஒன்றும் செய்யமுடியாது!
இந்தப்
பின்னணியில் ஒரு கடிதம்:
“இப்போதெல்லாம்
நீதிபதியாகிறவர்கள் சிறிதும் கோர்ட்
அனுபவம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். வெறும் புத்தக அறிவு தான். அவர்களின்
தீர்ப்பு உண்மை உலகின் நிலைமையைப் பிரதிபலிப்பதாக இல்லாமல் போவதற்கு இது ஒரு
காரணமாக இருக்கலாம்” என்கிறார், நியூயார்க்கிலிருந்து ஒரு வாசகர்.
“சாகும் வரை பதவி என்ற கோட்பாடு, சில நீதிபதிகளுக்கு
வரையறையற்ற, அரசியல் சார்புள்ள தீர்ப்புகளை வழங்கும் துணிச்சலை வழங்கிவிடுவதாகத்
தோன்றுகிறது. எனவே பதவிக்காலத்தை 20 வருடம் என்றோ, அல்லது குறிப்பிட்ட வயது
பூர்த்தியானதும் ஓய்வு பெறவேண்டுமென்றோ ஒவ்வொரு ஜனாதிபதியும் தான் பதவிக்கு
வந்தவுடன் நிர்ணயிக்கலாம்” என்று ஆலோசனை சொல்கிறார், வாஷிங்டனிலிருந்து இன்னொரு
வாசகர்.
*** இந்தியாவில் பிரிட்டிஷ் நீதித்துறையின் மாதிரி பின்பற்றப்படுகிறது. இந்திய அரசியல் சட்டம் உலகிலேயே மிகப் பெரிய எழுத்துச் சட்டமாகும். நீதிபதிகளின் சுய சிந்தனைக்கு அதிக வேலையில்லை. எழுத்தில் இருப்பதைப் பொறுத்து முடிவு சொன்னால் போதும். அப்படியும் பல நேரங்களில் தவறான தீர்ப்புகள் வருவதுண்டு. அமெரிக்காவில் எழுத்துச்சட்டம் குறைவு என்பதால் நீதிபதிகள் தாங்கள் விரும்பியபடி தீர்ப்பளிக்கும் கட்டாயம் அதிகம். சட்ட மாணவர்கள் இதை நினைவில் கொள்ளவேண்டும்.
****
Email: chellappay@yahoo.com
இதுவரை அறியாத தகவல்கள் அய்யா. நன்றி. ஆனால் நீதிபதிக்கு ஓய்வு வயது கிடையாது என்பது சரிதானா அய்யா?
பதிலளிநீக்குபிஏசி பற்றிய தகவல்கள், விளக்கங்களுக்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்குசுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, பிரபலமான பல்கலைகழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் ஓய்வு வயது (mandatory retirement) கிடையாது. சாகும்வரை பதவியில் இருக்கலாம். பொதுவாக எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைமை தான். எண்பது வயதிலும் வேலை செய்பவர்களைப் பார்க்கலாம்.
பதிலளிநீக்குநம்மூர் மாதிரி appointment orderல் ‘You will retire at age 60’ என்று இங்கு போடுவது கிடையாது. எனவே உங்களால் முடிந்தமட்டும் வேலை செய்துகொண்டே இருக்கலாம். சிறிது காலமாகத்தான் இன்னிலைமையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
(2) அப்படியானால் எல்லா அலுவலகங்களிலும் கைத்தடி வைத்துக்கொண்டு தள்ளாடிச் செல்பவர்கள் நிறைய பேர் இருப்பார்களா என்றால் இல்லை. காரணம், இங்குள்ள மனிதர்களின் மனோனிலை. அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருப்பார்கள். அல்லது, அவர்களுடைய கம்பெனி இன்னொரு கம்பனியால் எடுத்துக்கொள்ளப்படும். அப்போது இவர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள்.
(3) இங்கு ஒரு மாத சம்பளம் கைமேல் கொடுத்துவிட்டால் அடுத்த நிமிடமே வேலையை விட்டு நின்றுவிட வேண்டியது தான். கேள்வி கேட்க முடியாது. சில பெரிய கம்பெனிகளில் மூன்று மாத நோட்டிஸ் தருவார்கள். அல்லது மூன்று மாத சம்பளம் உடனே தந்து விடுவார்கள். எனவே அமெரிக்காவில் எவ்வளவு தாழ்ந்த பதவியானாலும் சரி, உயர்ந்த பதவியானாலும் சரி, அதிக பட்சம் மூன்று மாத நோட்டீசில் தான் அவர்கள் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
அன்புள்ள..
பதிலளிநீக்குவணக்கமுடன் ஹரணி.
இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையான கட்டுரை இது.
தெளிவாக எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. மிகப் பயனான தகவல்கள்.
ஆனால் இந்தியத் தேசத்தைப் பொறுத்தளவில் பின்வருவனவற்றை நீதித்துறையில் கருதிப் பார்க்கவேண்டியுள்ளது.
1. முறையான நீதிமுறை. அதாவது உண்மையான நியாயம் உரியவருக்குக் கிடைப்பதில் மேற்கொள்ளவேண்டிய முறையான விசாரணை.
2. பணம் சிபாரிசுகளால் நியாயத்தை மறைக்காத தன்மை.
3. யாராக இருந்தாலும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்கிற நிலைப்பாட்டின் நம்பகத்தன்மையை உறுதிச்செய்வது.
4. தவறு செய்தவருக்குக் கண்டிப்பாக தண்டனை உண்டு என்பதை எந்நிலையிலும் மாறாது பின்பற்றல். வழங்குதல்.
5. தீர விசாரித்தல். நேர்மையாக விசாரித்தல். முறையான குற்றப்பத்திரிகை உண்மையானது சமர்ப்பித்தல்.
6. எந்த வசதியும் இல்லாத ஏழை நீதிமன்றத்தை நாடினால் அவனுக்கும் உரிய நீதி எவ்விதத் தடையுமின்றி நியாயாமாக அவனுக்குக் கிடைக்கவேண்டும்.
இதுபோல பல உள்ளன. அதேபோன்று நீதிபதிகளின் வயது வரம்பு அவசியம். வயது வரம்பில்லை என்று வந்துவிட்டால் கடைசிவரை ஒரே மாதிரியான தீர்ப்பே கிடைக்கும். எனவே நீதிபதிகள் மாறும்போது சிந்தனைகள் மாறும். தீர்ப்புக்கள் மாறும்.
நன்றிகள் ஐயா.
அருமையான பயனான கட்டுரைக்கு மறுபடியும் மகிழ்ச்சியும் நன்றிகளும்.
நன்றி, நண்பரே! நீங்கள் சொன்ன கருத்துக்களில் ஒன்றைக்கூட நான் மறுக்கமுடியமா என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் நியாயம் கிடைப்பது இருக்கட்டும், அது எத்தனை வருடம் கழித்து கிடைக்கும், அந்தத் தாமதத்தால் எற்படும் பாதகங்களுக்கு யார் பொறுப்பு என்னும் கேள்விகளுக்கு விடை கிடைத்தபாடில்லை. அதுவரை பணமும் பதவியும் நீதிக்கு விலை பேசுவதை எப்படித் தவிர்ப்பது என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குநீதிமன்றம் என்ற நிலையில் இன்றும்கூட பெரிய மாற்றம் வந்துவிடவில்லை. நிதியுள்ளவர்களுக்குத் தான் நீதி.
பதிலளிநீக்குதேர்தலைப் பொறுத்தவரை நம் நாடும் எந்நாட்டிற்கும் சளைத்ததல்ல என்பதைத் தங்களின் ஆழமான பதிவு உணர்த்துகிறது.