வெள்ளி, ஜூன் 14, 2013

நியூயார்க்கில் இந்த வாரம்
(ஜுன் 9 முடிய)

வாசகர்கள் (?!) மன்னிக்கவேண்டும். 2013 மே 22 முதல் பன்னிரண்டு நாட்கள் உள்நாட்டுப் பயணமாக அமெரிக்காவின் பல பகுதிகளில் பயணம் செய்தோம். அதன் காரணமாகவும், ஒரு வாரப்பத்திரிகையின் சிறுகதைப்போட்டிக்குக் கதை அனுப்பலாமே என்று சில நல்ல (!) இதயங்கள் திடீரென்று கூறிய ஆலோசனையின் நப்பாசையாலும் வலைப்பூவில் எழுதுவது தள்ளிப்போய்விட்டது.

அமெரிக்காவில் இருக்கப்போவது இன்னும் இரண்டே மாதங்கள் தான் என்பதால், மற்ற விஷயங்கள் எழுதுவதை விட்டு, அமெரிக்காவில் பத்திரிகைகளில் வரும் கடிதங்கள், விளம்பரங்கள் , செய்திகள், கட்டுரைகளிலிருந்து சில சுவாரஸ்யமான பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்தக் கட்டுரை. வாரம் ஒருமுறை எழுதலாம் என்றிருக்கிறேன்.



நியூயார்க் பொடானிக்கல் கார்டன் 
(அமெரிக்கப் பயணத்தின் போது ஏராளமாக எடுத்துவிட்ட புகைப்படங்களை இன்னும் வகைப்படுத்தவில்லை என்பதால் பயணக்கட்டுரை தாமதமாகிறது. எனது இன்னொரு வலைப்பூவான ‘இமயத்தலைவனி’ல் அது விரைவில் வெளியாகும்).


கேள்வி-பதில்
கேள்வி(1): எனது அப்பார்ட்மெண்ட்டை விற்பனை செய்ய பலமுறை முயன்றும் முடியாததால் ஒரு புரோக்கர் மூலம் வாடகைக்கு விட்டிருக்கிறேன். குடி வந்தவரோ, வந்த நாளிலிருந்து ஒரே முணுமுணுப்பு தான். புரோக்கர் இதைச் சொன்னார், அதைச் சொன்னார், இது சரியில்லை, அது சரியில்லை என்று எப்போதும் புலம்பல் தான். அது மட்டுமல்லாமல் பக்கத்தில் குடியிருப்பவர்கள் இவரைப் பற்றி நிறைய புகார் சொல்கிறார்கள். வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை, எப்போது பார்த்தாலும் தரையில் துணிகள் கிடக்கின்றன, சமையலறை ‘ஸிங்க்’கில் போட்ட பாத்திரம் போட்டபடியே இருக்கிறது என்கிறார்கள். வராண்டாவில் லிஃப்ட் அருகே நின்றுகொண்டு பல் தேய்க்கிறார்களாம். மற்ற வீடுகளைப் பார்க்க வருபவர்கள் இதைப் பார்த்துவிட்டு இந்த அப்பார்ட்மெண்ட் வேண்டாம் என்று போய்விடுகிறார்களாம். இவர்களைக் காலி செய்யும்படியும் சொல்ல முடியாது, ஏனென்றால் என் செலவுக்கு இந்த வாடகைப்பணத்தை தான் நம்பியிருக்கிறேன். இப்போது நான் என்ன செய்வது?

பதில்: நல்ல கேள்வியம்மா இது! உங்களுக்கு அவர்கள் வாடகையும் கொடுக்க வேண்டும், வீட்டில் எவ்வாறு வாழ்க்கை நடத்துவது என்பதை உங்களைக் கேட்டுத் தான் செய்யவேண்டும் என்றால் நடக்கிற காரியமா இது? வாடகை ஒப்பந்தம் செய்வதற்கு முன் இதெல்லாம் பேசியிருக்க வேண்டுமே யன்றி, இப்போது பேசுவது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே, இந்த ஒப்பந்த காலம் முடியும்வரை பொறுத்திருங்கள். அதன் பிறகு புதிய ஒப்பந்தம் போடும்போது கவனமாக இருங்கள். அல்லது அவர்களை அப்போது காலி செய்யுமாறு முறைப்படி நோட்டீஸ் கொடுங்கள். அப்படியில்லாமல், அவர்களுக்கு நீதி போதனை செய்ய முற்பட்டால் அவர்கள் கோர்ட்டுக்குப் போய்விடக்கூடும். ஜாக்கிரதை!

கேள்வி(2): எனக்கு வெளியூரில் ஒரு வீடு இருக்கிறது. விடுமுறை நாட்களில் போய் ஓய்வெடுப்போம். சனி, ஞாயிறில் அங்கு வந்திருக்குமாறு என் தோழியின் குடும்பத்தை அழைத்தேன். ஒப்புக்கொண்டாள். அதற்குக் கைமாறாக எனக்கும் அவளுக்குமாக ஒரு யோகா பயிற்சி வகுப்புக்கு நுழைவுச்சீட்டு வாங்கியிருக்கிறாள். (கட்டணம் ஏதுமில்லை). இப்போது என்ன தலைவலி என்றால், எனக்கு வெள்ளிக்கிழமை மாலை ஒரு முக்கிய விருந்து வந்து விட்டது. அதை முடித்துவிட்டுப் போவதானால் சனிக்கிழமை நான் போய்ச் சேருவதற்கு நேரமாகிவிடும். யோகா வகுப்புக்கு உரிய நேரத்தில் போக முடியாது. அடுத்த நாளும் வகுப்பு உண்டு, ஆனால் அதில் இடமில்லை என்கிறார்கள். அவள் மனம் புண்படாமல் இதை எப்படிக் கையாளுவது?

பதில்: இதில் பிரச்சினை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. யோகா வகுப்பு தான் முக்கியமென்றால், வெள்ளிக்கிழமை விருந்தைப் புறக்கணியுங்கள். அல்லது, யோகா முக்கியமில்லையென்றால், உங்கள் தோழியிடம் மன்னிக்கச் சொல்லுங்களேன். “எவ்வளவு கவனமாக இருந்தாலும் சிலநேரம் இம்மாதிரி ‘ஷெட்யூலிங்க் எர்ர்ர்’ ஏற்பட்டுவிடுகிறது, கோபமில்லையே?”  என்று கொஞ்சுங்களேன்!

கேள்வி(3): எனக்குப் பதினாலு வயதில் ஒரு பெண் இருக்கிறாள்.  பார்ப்பதற்கு  கொஞ்சம் ஊதினமாதிரி இருப்பாள். ஆனால் சாப்பாட்டு விஷயத்திலும் சரி, விளையாட்டிலும் சரி, அக்கறையாகத் தான் இருக்கிறாள். ஆரோக்கியத்தில் குறைவில்லை. அதனால் அவளுடைய உடல் தோற்றத்தைப் பற்றி விமர்சனம் செய்துவிடக்கூடாது என்பதில் எப்போதுமே கவனமாக இருக்கிறேன். ஒரு நாள் பயணத்தின்போது பின்சீட்டில் அமர்ந்து அவள்பாட்டுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸைத் தின்றுகொண்டிருந்தபோது ,”அதைத் தூக்கி எறி” என்று கத்திவிட்டேன். “ஏன்?” என்றாள் திகைப்புடன். “கண்ணாடியில் உன்னைப் பார்த்துக்கொள்” என்றேன். சொல்லியிருக்க வேண்டாம் தான். அதனால் அவள் பெரிதும் புண்பட்டவளாகி, என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டாள். இப்போது என்ன செய்வது?

பதில்: இது ரொம்ப சிக்கலான விஷயம் தான். இதற்குள் அவளிடம் ஸாரி சொல்லியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவளோடு தனியாக உட்கார்ந்து பேசுங்கள். “இதுநாள் வரை நான் இப்படிச் சொல்லியிருக்கிறேனா? உருளைக்கிழங்கு சிப்ஸைப் பற்றி அன்று காலை படித்தேன். அதன் விளைவாகத் தான் அப்படி நடந்து விட்டது. நீ உணவில் எப்போதும் கவனமாக இருப்பாய் என்று எனக்குத் தெரியாதா? அதுவும் காரில் போகும்போது நீ ஒன்றும் வழக்கமாக சிப்ஸ் சாப்பிடுவதில்லையே! ப்ளீஸ், இந்த நிகழ்ச்சியை இத்தோடு மறந்துவிடு” என்று  அன்போடு கூறுங்கள். இனிமேல் அதிக கவனமாக இருங்கள்.

(நமக்கு) வித்தியாசமான திருமணங்கள்

(1) ‘லாரிஸன் கேம்பெல்’ & ‘கர்ட்டினா கிரீன்’

லாஸ் ஏஞ்சலிஸில் ஒரு தொலைக்காட்சியில் பணியாற்றும் 34 வயதான பெண்மணி ‘லாரிஸன் கேம்பெல்’. ஜர்னலிஸத்தில் மாஸ்டர்ஸ் படித்தவர்.
‘கர்ட்டினா கிரீன்’ என்ற 32 வயது பெண்மணி, அதே ஊரினர். கவிஞர். இசையமைப்பாளர். பிரின்ஸ்டனில் படித்தவர். அவரது பாடலும் இசையும் பல தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டார்கள். (கலிஃபோர்னியா மானிலத்தில் ஒரே பாலினர் திருமணம் அனுமதிக்கப்படுகிறது).
(2) ‘மைக்கேல் ரோர்க்’ & ‘வெஸ்லீ பவெல்’

‘மைக்கேல் ரோர்க்’ 49 வயதான இளைஞர். பட்ட்தாரி. மன்ஹாட்டனில் ஒரு மீடியாக் கம்பெனியின் தலைமை அதிகாரி. இவரது படைப்புகள் பிரபல தொலைக்காட்சிகளில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
‘வெஸ்லீ பவெல்’ 43 வயதான இளைஞர். டியூக் யுனிவர்ஸிடியில் சட்டம் படித்தவர். ஒரு சட்ட நிறுவனத்தில் பங்குதாரர்.   

இவர்கள் இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர். (நியூயார்க் மானிலத்தில் ஒரே பாலினர் திருமணம் அனுமதிக்கப்படுகிறது).

(3) ‘ஐரா ஹெல்ஃப்’ & ‘ஜான் நாபெல்’

‘ஐரா ஹெல்ஃப்’ 61 வயதான ஆண். மன்ஹாட்டனில் ஒரு விளம்பரக் கம்பெனியில்  சீஃப் அனலிஸ்ட்டாகப் பணிபுரிகிறார். கொலம்பியா பல்கலையில் எம்.பி.ஏ.வும், ஸ்டான்போர்டில் மாஸ்டர்ஸும் முடித்தவர்.
‘ஜான் நாபெல்’ 65 வயதான ஆண். பத்திரிகையாளர்.

இவர்கள் இருவரும் அண்மையில் நியூயார்க்கில் மணந்து கொண்டனர். (இருவரும் கடந்த 36 வருடங்களாக சேர்ந்து வாழ்கின்றனர்). 

3 கருத்துகள்:

  1. அனுசரணையான பதில்கள்...

    வித்தியாசமான திருமணங்கள் தான்...

    தொடர வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. நீண்ட நாட்களுக்கும் பின் தங்களின் பதிவினைப் பார்த்ததில் மகிழ்ச்சி அய்யா.
    திருமணங்கள் உண்மையிலேயே வித்தியாசமான திருமணங்கள் அய்யா. தொடருங்கள். தொடர காத்திருக்கின்றோம் அய்யா

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வுகள். ஆவலோடு அடுத்த பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு