திங்கள், ஜூன் 17, 2013

இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கற்பழிப்பு

அமெரிக்கா என்ன சொல்கிறது?

நியூயார்க் டைம்ஸ் ஜூன் 11 இதழில் வெளியான கட்டுரையின் சில அம்சங்களை இங்கே தருகிறேன்:
நியூயார்க்கில் சென்ட்ரல் பார்க்கில் சைக்கிள் பெண் 
சென்ற டிசம்பர் மாதம் புதுடில்லி பேருந்தில் ஒரு மாணவி கூட்டுப் பலவந்தத்திற்கு ஆளாகி மரணமடைந்த செய்தி வெளியானதன் பின்னணியில், இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண் பயணிகளின் எண்ணிக்கை 2013ன் முதல் காலாண்டில் 35 சதம் குறைந்துவிட்டது.

தற்போது இந்திய அரசு, பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு வன்மையான தண்டனை தரும் வகையில் புதிய சட்டம் இயற்றியிருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனாலும், பெண்களுக்கெதிரான குற்றங்களில் வெளிச்சத்துக்கு வராதவை மிகுதி என்றே கருதப்படுகிறது. 

பொதுவாக இந்தியப் பெண்கள் தாம் கற்பழிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றாலும்,  சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்மணிகளும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

அண்மையில் மலைவாழ்விடமான மணாலியில் முப்பது வயது அமெரிக்கப் பெண் ஒருத்தி சில இளைஞர்களால் கற்பழிக்கப்பட்டாள். (உடனடியாக காவல் துறை செயல்பட்டு நேபாளத்தை சேர்ந்த அம்மூவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது).

மார்ச் 15 அன்று மத்தியப்பிரதேசத்தில் 39 வயதான ஸ்விஸ் பெண் ஒருத்தி கற்பழிக்கப்பட்டு அவள் கணவனும் தாக்கப்பட்டார். இது நடந்த நான்கே நாளில், ஆக்ராவில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த பிரிட்டிஷ் பெண் பயணி, தன்னை ஓட்டல் உரிமையாளர் கற்பழிக்கக்கூடும் என்று தகவல் தெரிந்ததால் அச்சமுற்று பால்கனியிலிருந்து கீழே குதித்தார்.

ஒரு சர்வதேச நிறுவனத்தின் சார்பில் ஆய்வுப்பணிகளுக்காக உதய்ப்பூர் வந்திருக்கும் 24 வயது பெண்மணியான சான்ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த காரின் அபாரிஸ், “என்ன நடக்குமோ அன்ற அச்சத்துடனேயே நான் நடமாடுகிறேன். பெண் என்றாலே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆழமான வெறுப்புணர்ச்சி இங்கு நிலவுவது திகிலூட்டுகிறது” என்கிறார்.

வெளிநாட்டுப் பயணிகள் கொண்டுவரும் அன்னியச் செலாவணி இந்தியாவுக்கு மிகவும் தேவைப்படுவதாக உள்ள நிலையில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன.

சென்ற ஆண்டு 64 லட்சம் வெளிநாட்டு பயணிகள் இந்தியா வந்தனர். ஆனால் இது, பரப்பளவில் சிறியதான ஃப்ரான்ஸ் நாட்டுக்கோ, ஏன், நியூயார்க் நகரத்திற்கோ ஓராண்டில் வரும் பயணிகளின் எண்ணிக்கையை விட மிகமிகக் குறைவாகும்.

சுற்றுலாத்துறை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதம் வழங்குகிறது. நிரந்தர வருமானமுள்ள இந்தியர்களில்  10 சதம் பேர் இத்துறையைச் சார்ந்துள்ளனர்.  தவிர, அன்றாடம் காய்ச்சிகளான சுமார் 6 கோடி முதல் 7 கோடி பேர் தங்கள் வாழ்வுக்கு சுற்றுலா பயணிகளையே நம்பியுள்ளனர்.

மத்திய மானில அரசுகள் பல நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது தெரிகிறது. சுற்றுலா துறை கட்டணமில்லாத  ‘அகில இந்திய பன்மொழி உதவி நிலைய எண்’ ஏற்படுத்தவிருக்கிறது.

தாமஸ் குக் நிறுவனம், ‘மகளிர் மட்டும்’ என்ற பாதுகாப்புள்ள பயணங்களை அமைத்து தருகிறது. பயணிகளுக்கு இலவசமாக அலைபேசியும் தருகிறது. அதில் பயணப்பாதையில் உள்ள காவல் நிலையம், மருத்துவமனை, மற்றும் ஹெல்ப்லைன் ஆகியவற்றின் தொலைபேசி எண்கள் முன்பதிக்கப்பட்டிருக்கும்.

புதுடில்லியிலுள்ள ‘இம்ப்பீரியல்’ என்னும் சொகுசு ஓட்டல், தனியாக வரும் பெண் பயணிகளுக்காகவென்று தனி வராண்டாவில் தனியறைகளை ஒதுக்குகிறது. விமானநிலையத்திலிருந்து இவர்களை அழைத்துவரும் கார்களையும் பெண்களே ஓட்டிவருவர்.

கேட்வே ஆஃப் இந்தியாவைச் சுற்றி பார்த்துக்கொண்டிருந்த நெதெர்லாந்தைச் சேர்ந்த 26 வயது பெண்மணி நடீன் ஹெவிஜர் கூறினார்: “இந்தியாவில் யாரும் தனித்தனியாகப் பயணம் செய்துவிடாதீர்கள் என்று எங்களுக்கு அறிவுரை கூறப்பட்டிருக்கிறது. வேறு எந்த நாட்டுப் பயணத்தின்போதும் இப்படிக் கூறப்படவில்லை”.

“பாழ்பட்டிருக்கும் தனது பிம்பத்தை விரைவில் இந்தியா மீட்டெடுக்கவேண்டும். பெண்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரையில் உலகிலுள்ள வேறெந்த நகரமும் போலத்தான் இந்திய நகரங்களும் இருக்கின்றன” என்ற நம்பிக்கையை உலகம் உணரும் வகையில் முயற்சிகள் விரைந்து நடைபெற்றாக வேண்டும்” என்று முடிக்கிறது, நியூயார்க் டைம்ஸ்.
****  
இக்கட்டுரைக்குப் பின்னூட்டமாக, இன்றைய நியூயார்க் டைம்ஸ் (ஜூன் 17) இதழில் கலிஃபோர்னியாவிலிருந்து பேட்ரிசியா டாம்ப்ரிக் என்ற பெண்மணி எழுதிய கடிதம்:

“உங்கள் கட்டுரை நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. இந்தியா செய்யவேண்டுவது தன் பிம்பத்தை நேர்படுத்துவது அல்ல. பெண்களை இந்தியா எவ்வாறு நடத்துகிறது என்பதை  முழுமையாக ஆராய்ந்து எல்லாவற்றையும் சீர்திருத்தி அமைத்தாக வேண்டும் என்பதே.”
**** 

1 கருத்து: