திங்கள், ஜூன் 24, 2013

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்: 4 முக்கிய வழக்குகள் (1) (updated 26 June 2013)


சுப்ரீம்கோர்ட், வாஷிங்டன்
2013 கோடை விடுமுறைக்குமுன் அமெரிக்க சுப்ரீம்கோர்ட் தீர்மானிக்கவிருக்கும் மூன்று முக்கிய வழக்குகள் இவை என்று அமெரிக்க பத்திரிகைகள் தினமும் எழுதிவருகின்றன. இவ்வழக்குகள் பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கும் தன்மையுள்ளவை என்பதால் இவற்றின் தீர்ப்புக்கள் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றன.

1.   ஷெல்பி கவுண்ட்டி வெர்ஸஸ் ஹோல்டர் (Shelby County Vs Holder)

2.   ஃபிஷர் வெர்ஸஸ் யுனிவர்சிடி ஆஃப் டெக்ஸஸ்
             (Fisher vs University of Texas)

3.   ஹாலிங்க்ஸ்வொர்த் வெர்ஸஸ் பெர்ரி (Hollingsworth vs Perry)

4.   யு.எஸ் வெர்ஸஸ் விண்ட்ஸர் (US vs Windsor)

ஓரளவு எளிய மொழிநடையில் எனக்குப் புரிந்த அளவுக்கு இவற்றைப் பற்றிய சில விவரங்களை இங்கு தருகிறேன். விவரம் அறிந்தவர்கள் இதில் ஏதும் கருத்துக் குறைபாடு இருந்தால் பூர்த்திசெய்யலாம்.

முதல் வழக்கு: வாக்குரிமை குறித்த வழக்கு -ஷெல்பி கவுண்ட்டி வெர்ஸஸ் ஹோல்டர்  (Shelby County Vs Holder)


இந்த வழக்கின் பின்னணியைத் தெரிந்துகொள்வோமா?
முதலில் இந்திய அரசியல் அமைப்பைக் கவனிப்போம். இந்தியாவில் பாதுகாப்பு, வெளியுறவு, நிதி, வாக்குரிமை போன்ற விஷயங்களில் மத்திய அரசு மட்டுமே சட்டம் இயற்றமுடியும். சில விஷயங்கள் மானில அரசுகளின் உரிமையெல்லைக்குள் மட்டுமே வரும். (உதாரணம்: மதுக்கடைகள், விற்பனை வரி விதித்தல்). இதனால் தான் குஜராத்தில் நிரந்தர மதுவிலக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் மதுவெள்ளம் புரண்டோடுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை. வேறு சில விஷயங்களில் மத்திய அரசு, மானில அரசு இருவருக்குமே உரிமையெல்லை உண்டு. (உதாரணம் கல்வி). மானில அரசு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் மீது அதிகாரம் செலுத்த முடியும். ஆனால் சி.பி.எஸ்.சி. பள்ளிகளின் மீது மத்திய அரசு தான் அதிகாரம் உடையது.

அமெரிக்காவில் நிலைமை சற்று வித்தியாசமானது. ஆபிரகாம் லிங்க்கன், ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் நிறவேற்றுமையைக் களைந்திட அமெரிக்காவில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றதை அறிவர். அப்போரின் விளைவாக படிப்படியாக 50 மானிலங்களையும் ஒன்று சேர்த்து ‘யு.எஸ்.ஏ’ என்ற ஒன்றிணைந்த அரசு அமைத்தபோது எந்த மானிலமும் தான் விரும்பினால் இக் கூட்டாட்சியை விட்டு விலகிக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட்டது. (ஆனால் இன்று வரை எந்த மானிலமும் அதற்குத் துணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

என்றாலும் பல ஆண்டுகள் வரை, தென் மானிலங்களில் கறுப்பின மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவில்லை. பெண்களுக்கு ஓட்டுரிமை தரலாம் என்ற சட்டம் 1920ல் கொண்டுவரப்பட்டாலும் அது பல மானிலங்களில் நடைமுறைக்கு வர மேலும் பல ஆண்டுகள் ஆயின. (ஒரு சுவையான செய்தி. 1776இலேயே நியூஜெர்சி மானிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட்து. ஆனால் ஒரு நிபந்தனை: அவரது வங்கிக்கணக்கில் 50 பவுண்டு பணம் இருக்கவேண்டும். பணவீக்கத்தைக் கணக்கிட்டால் இன்றைய நிலையில் இது சுமார் 8000 டாலருக்கு சமம். மஸாசூசெட்ஸ் மானிலத்தில் ஒரே ஒரு பெரும் பணக்காரப் பெண்மணிக்கு மட்டும் அப்போது வாக்குரிமை இருந்த்தாம்).

மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) காந்திய வழியில் போராடியதன் விளைவாக கறுப்பின மக்களுக்கு வாக்குரிமையை உறுதிப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்று தான் அமெரிக்க மத்திய அரசு இயற்றிய “வாக்குரிமை சட்டம் -1965”. இது 2006ல் மீண்டும் 25 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நம்நாடு உள்பட எல்லா ஜனநாயக நாடுகளிலும் உள்ள முக்கிய குறைபாடு, வாக்காளர்களைப் பதிவு செய்யும் முறையைப் பொறுத்தது.  எந்த நாடாவது, வாக்குரிமைக்குத் தகுதியுள்ள எல்லா வாக்காளர்களையும் நாங்கள் பதிந்துவிட்டோம் என்று மார்தட்ட முடியுமா? இந்தியாவைப் பொறுத்தவரை, வாக்காளர்  பதிவுக் கடமை மானில அரசிடம் உள்ளது. அது, அக்கடமையை நகரசபைகளுக்கும் பஞ்சாயத்துக்களுக்கும் சுமத்தியுள்ளது. இதற்கென ஏற்படுத்தப்படும் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பதிவில் ஈடுபடுகின்றனர். இதை இன்னொரு அதிகாரி சரிபார்ப்பார். அனால் இந்த் இன்னொரு அதிகாரி செய்வதென்ன? பெரும்பாலும் ஏதாவதொரு அரசியல் கட்சிகு சார்புள்ளவராகவே நடந்துகொண்டு, புதிய வாக்காளர்களை மட்டுமின்றி, வீடு மாறாமல் இருக்கும் பழைய வாக்காளர்களையும் பட்டியலிலிருந்து நீக்கி விடுவார். இறுதிப்பட்டியல் வரும்போது விடுபட்டவர்கள் குய்யோ முறையோ என்று கத்த வேண்டியது தான்.

இதைத் தவிர்ப்பதற்காக தமிழக அரசு ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியது.  இணையத்தின் மூலம் தங்கள் பதிவை அனுப்பலாம் என்று. புகைப்படத்தையும் இணையத்தின் மூலமே அனுப்பவேண்டும். உடனே உங்களுக்கு ஒரு ரசீது (‘அக்னாலெட்ஜ்மெண்ட்) வழங்கப்படும். சில மாதங்களில் ஓர் அதிகாரி உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து உங்களுக்கு அடையாள அட்டை வழங்குவார். இது தான் திட்டம். மிக எளிய, அரசுக்குச் செலவு குறைவான, மக்களுக்கு மிகவும் பயனுள்ள அருமையான திட்டம் இது.

இதன் படி நான் இணையவழி விண்ணப்பம் அனுப்பினேன். என் வீட்டில் மனைவிக்கும் மகனுக்கும் வாக்குரிமை அடையாள அட்டைகள் இருந்தன. அவற்றின் எண்ணையும் அதில் குறிக்கவேண்டும். குறித்தேன். இந்தியா முழுதும் மாற்றலுக்குரிய வங்கிப்பணியில் இருந்ததால் எந்த மானிலத்திலுமே நான் கடந்த மூன்று முறையாக வாக்கு செலுத்தமுடியாமல் போனது. ஏனெனில் வாக்குப்பதிவு அதிகாரி வரும்போது நான் வீட்டில் இருக்கமாட்டேன். நேரடியாகப் போய் விண்ணப்பம் அளித்தால் வாங்கி வைத்துக்கொண்டு ‘சரிபார்க்க எங்கள் அதிகாரி வருவார்’ என்று சொல்வார்கள். வந்தாரா என்று தெரியாது. மறுபடியும் போய்க் கேட்டால் ‘கொஞ்சநாள் பொறுங்கள்’ என்று பதில் வரும். அதற்குள் அடுத்த மாறுதல் வந்துவிடும்.

சரி, இனி மேலாவது வாக்காளர் அடையாள அட்டை வந்துவிடும் என்று ஆவலுடன் இருந்தேன். வீட்டிலேயே இருந்தேன். (பணி ஓய்வினால்). ஆனால் ஒருவரும் வரவில்லை. நேரில் கேட்டதற்கு ‘நெட்டில் செய்தவர்களுக்குக் கட்டாயம் வந்துவிடும், கவலைப்படாதீர்கள்’ என்று பதில் வந்தது. அதற்குள் தேர்தல் வந்துவிட்டது. ஜெயல்லிதா வந்து விட்டார். அதன் பிறகும் எனது இணையவழிப் பதிவு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஒரு மாதம் கழித்து இணையத்தில் சென்று ‘ஸ்டேட்டஸ்’ பார்த்தபோது ‘விண்ணப்ப எண்’ கேட்டது. என்னிடம் உள்ள ரசீதின் எண்ணைக் கொடுத்தேன். இது தவறான எண்; சரியான எண்ணைக் கொடுங்கள் என்று வந்தது. மறுபடியும் அந்த மின்-ரசீதை அச்சிட்டுப் பார்த்தேன். அதில் இருந்த்து ஒரே ஒரு எண் தான். அதைத் தான் நான் கொடுத்தேன். மீண்டும் அதே பதில். ‘சரியான எண் கொடுங்கள்’ என்று. பிறகு தான் புரிந்தது, வேலை செய்ய சோம்பல் பட்டுக்கொண்டு சில அரசு அதிகாரிகள்,  இந்த இணையத்தை நிர்வகித்தவர்கள் மூலம்  புதியதொரு புரொகிராமை அமைத்திருக்கிறார்கள் என்று. பழையதில் ஆறு இலக்க எண் வழங்கப்பட்டதாக வைத்துக்கொள்வோம், புதியதில் எட்டு இலக்க எண் இருந்தது. ஆகவே முன்னதாக பதிவு செய்தவர்கள் எல்லாம் ‘டெலீட்’ ஆகிவிட்டார்கள். அதாவது ‘ஸீரோ பெண்டென்ஸி’ காட்டிவிட்டார்கள். இனி அடுத்த தேர்தல் வரும்போது தான் கவனிப்பார்கள் போலும்.

அமெரிக்காவிலும் இதே நிலைமை தான். அதாவது, அரசாங்கம் போய் யாரையும் வாக்காளர்களாக சேர்க்காது. நீங்கள் தான் செய்யவேண்டும். (இதிலும் சில விதிவிலக்குகள் இருக்கலாம்). ஆனால் நீங்கள் விண்ணப்பித்தால் உடனே உண்டு இல்லை என்ற பதில் ஒரு வாரத்திற்குள் வந்துவிடும். வரவில்லையென்றால் ஒபாமாவுக்கே மெயில் அனுப்பலாம். (அவரிடமிருந்து இரண்டே நாளில் பதில் வரும்). சிக்கல் என்னவென்றால், சில மானிலங்கள், வாக்காளர் பதிவு முறையைக் கடினப்படுத்திவைப்பது தான்.

இதை இன்னும் சற்று விவரமாகப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில், ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்றால், என்ன மாதிரி விண்ணப்பம் தரவேண்டும் என்பதை மத்திய அரசு (தேர்தல் கமிஷன் மூலம்) நிர்ணயித்து வெளியிட்டிருக்கிறது. அந்த விண்ணப்பத்தின் ஷரத்துக்களை மாற்ற எந்த மானில அரசுக்கும் உரிமையில்லை. அதே போல், அந்த விண்ணப்பத்துடன் என்னென்ன இணைப்புகளைத் தரவேண்டும் என்பதும் மத்திய அரசாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. (ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஓட்டர் ஐ.டி. போன்றவை). இந்த இணைப்புகளைத் தவிர்த்து, கூடுதலாக வேறு ஏதாவது ஒன்றை (உதாரணமாக வீட்டு வரி ரசீது) கொண்டுவரச் சொல்ல மானில அரசுக்கு அதிகாரம் இல்லை.    

அமெரிக்காவில் மத்திய அரசு கொடுத்துள்ள வாக்காளர் விண்ணப்படிவம் மிகவும் எளிமையானது. பெயர் முகவரி  எழுதி, ‘நான் இந்த நாட்டில் வசிக்கிறேன். எனக்கு இன்னாட்டின் சட்டப்படி வாக்காளனாகப் பதிவு செய்துகொள்ள முழுத்தகுதி இருக்கிறது என்று உறுதி கூறுகிறேன். இது பிழையானதென்று பின்னால் அறியப்பட்டால் உரிய தண்டனை பெற ஒப்புதல் அளிக்கிறேன்’ என்று கையொப்பமிட்டு தாக்கல் செய்தால் போதும். வாக்காளர் பதிவு கொடுக்கப்படும். “இத்துடன் வேறு எந்த இணைப்பையும் கோரக்கூடாது” என்று மத்திய அரசின் ஆணை கூறுகிறது.

ஏன் இந்த எளிமை என்றால், இந்த நாட்டில் வாக்காளர்களாகப் பதிவு செய்துகொண்டவர்கள் சுமார் 60 சதம் பேர் மட்டுமே. (அதிலும் தேர்தலில் வாக்களிப்பவர்கள் 50 சதம் கூட இல்லை என்பதை அறிவீர்கள்). எனவே மத்திய அரசின் முன்னிருந்த ஒரே லட்சியம், இதுவரை வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ளாதவர்கள் உடனே பதிவு செய்துகொண்டு ஜனநாயகத்தின் தூணான தேர்தல் முறைக்கு வலு சேர்க்கவேண்டும் என்பது தான். அதைக் கொண்டு வா, இதைக் கொண்டுவா என்று யாரையும் இழுக்கடிக்கக்கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டது.

அமெரிக்காவில் நடைமுறை எப்படியென்றால், மத்திய அரசின் பல சட்டங்களை மானில அரசுகள் அலட்சியப்படுத்துவது தான். தென் மானிலங்களில் கறுப்பினத்தவர் தொகை அதிகம். ஆனால், அவர்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டவர்கள் சொற்பமே. இதனால் அவர்கள் தங்களுடைய கருத்தைத் தேர்தல் நேரத்தில் வன்மையாக வெளியிடமுடியாமல் போயிற்று. வெள்ளை நிறத்தவர் எளிதாக வெற்றி பெற முடிந்தது. இந்த நிலைமையைச் சீர்திருத்த வேண்டும் என்பது தான் ‘வாக்குரிமை சட்டம் 1965’- பிரிவு 5 ன் நோக்கம். (“to banish the blight of racial discrimination in voting.”)
இந்த சட்டம் (அதாவது பிரிவு 5) கூறுவதென்ன?
“கீழ்க்கண்ட மானிலங்களில், வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டவர்கள், மொத்த ஜனத்தொகையில் 50 சதத்திற்கும் கீழாக இருப்பதினால், இந்த மானிலங்கள் (மட்டும்) தாங்கள் நடத்தும் எந்தத் தேர்தலிலும் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கு (இன்றைய தேதியில் அமுலில் உள்ள நிபந்தனைகள் தவிர) புதிய நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தக்கூடாது. அப்படி நடைமுறைப்படுத்த விரும்பினால், மத்திய அரசிடம் முன்-அனுமதி பெற வேண்டும்”.  அந்த மானிலங்களாவன: Alabama, Alaska, Georgia, Louisiana, Mississippi, South Carolina, Virginia, and parts of North Carolina, Arizona, Idaho, and Hawaii.

“நான் ஏன் முன் அனுமதி பெறவேண்டும்? என் மானிலத்தில் வெளிநாட்டவர்கள் ஊடுருவி இருக்கிறார்கள். மத்திய அரசின் ஒற்றைத்தாளைக் கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டு வாக்காளர்களாகி விடுகிறார்கள். இவர்களில் யார் யார் தகுதியில்லாதவர்கள் என்று பின்னால் சோதிப்பது கடினமான பணி. அதற்கு யார் செலவிடுவது? மத்திய அரசு கொடுக்குமா? எனவே, வாக்காளர் விண்ணப்பம் அளிப்பவர்கள், கூடுதலாக சில அடையாளப் பத்திரங்களை இணைக்கவேண்டும் என்று கோருவதில் என்ன தவறு?” என்று கேட்கின்றன இம்மானிலங்கள்.

இதை அனுமதிக்க முடியாது என்று சில தனி நபர்கள் தொடுத்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசு விதித்துள்ள எளிமையான விண்ணப்பம் தவிர வேறு எதையும் கோர மானில அரசுகளுக்கு உரிமை கிடையாது என்று அப்போது கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மானிலங்கள் தம் விருப்பம் போல் வாக்காளர்களுக்குப் புதிய நிபந்தனைகளை விதித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் சிறுபான்மையினரும் ஏழைகளும் தான்.

இந்தப் பின்னணியில் தான் ஹோல்டர் என்பவரிடம் வாக்காளராகப் பதிவு செய்வதற்கு அதிகப்படியான ஆவணங்களைக் கேட்டது, ஷெல்பி என்னும் கவுண்ட்டி. (நம்மூர் தாலுக்கா மாதிரி). அதை எதிர்த்து அவர் வழக்கு தொடுத்து வென்றார். அதை ஒப்புக்கொள்ள மறுத்து ஷெல்பி கவுண்ட்டி சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு தான் நம் முன் இருப்பது.

ஷெல்பி கவுண்ட்டியின் வாதம் இது தான்:
(1)    இந்தச் சட்டமானது, 50 மானிலங்களில் சில மானிலங்களை மட்டுமே குறிவைக்கிறது. எனவே இது, ‘சட்டத்தின் முன் அனைத்து மானிலங்களுக்கும் சம அந்தஸ்து’ என்னும் கோட்பாட்டுக்கு முரணானது.

(2)    இந்தச் சட்டம் 1965க்கு முன்னிருந்த ஜனத்தொகை மற்றும் வாக்காளர் தொகையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது. இந்த அடிப்படை ஆண்டுதோறும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. அதை  மறுவிசாரணை செய்யாமலேயே சட்டத்தை நீட்டித்துக்கொண்டு  வந்திருக்கிறார்கள்.  

(3)    ஒவ்வொரு மானிலத்திற்கும் தன் எல்லைக்குள் தேர்தல் விதிகளை அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் இதனால் பறிபோகிறது. யு.எஸ்.ஏ.என்னும் ஒன்றிணைப்பு ஏற்பட்டபோது மானிலங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு இது முரணானது. மானிலத்தின் மீது மத்திய அரசுக்கு இத்தகைய உரிமையை அரசியல் சட்டம் வழங்கவில்லை.

முடிவு என்ன ஆகும்?
 
சுப்ரீம் கோர்ட் இதுவரை தான் தெரிவித்த கருத்தையே மீண்டும் உறுதிப்படுத்தும் என்று தான் சொல்லப்படுகிறது. அது மட்டுமன்றி, அத்தகைய நிலைப்பாடு தான் இப்போதைய ஆளும்கட்சியான (ஒபாமாவின்) குடியரசுக்கட்சிக்கு வலு சேர்க்கும். சரியான ஆவணங்களின்றி நாட்டில் உலாவரும் குடியேறிகள் பெரும்பாலும் குடியரசுக்கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்பதால் ஒபாமா, க்ளின்ட்டன் உள்ளிட்ட அனைவரும் இவ்வழக்கின் முடிவை ஆர்வமாக எதிர்நோக்குகிறார்களாம்.

அப்படியின்றி, வழக்கின் தீர்ப்பு மாறுபட்டால் அது நாட்டில் பெருத்த சலசலப்பை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது.

இரண்டாவது வழக்கு- ஃபிஷர் வெர்ஸஸ் யுனிவர்சிடி ஆஃப் டெக்ஸஸ்
  (Fisher vs University of Texas)
 
(இம்மாதிரி ஒரு வழக்கை இந்தியாவில் யாரும் போடுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. போட்டால் அவர்களை ஆள்வைத்து அடிப்பார்கள். அமெரிக்காவில் ஓரளவுக்கு சுயசிந்தனையுடன் உணர்ச்சி வசப்படாமல் இயங்கும் நாகரிக சமுதாயம் இருக்கும் காரணத்தால் இது சாத்தியமாகிறது).
அபிகெய்ல் பிஷர் பேசுகிறாள் 


அபிகெய்ல் ஃபிஷர் என்ற மாணவி, டெக்ஸஸ் நகரைச் சேர்ந்த வெள்ளையினப்பெண். இவருக்கு டெக்ஸஸ் பல்கலையில் இடம் கிடைக்கவில்லை. தன்னை விட குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தும் பல கறுப்பின மற்றும் சிறுபான்மையினருக்கு இடம் கிடைத்திருப்பது தனக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகிறது என்றும் இதற்கு காரணம் சிறுபான்மையினருக்குப் பல்கலையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படுவதுதான் என்றும்,  இத்தகைய இட ஒதுக்கீடு,  அமெரிக்க அரசியல் சட்டம் 14வது திருத்தத்தின்படி தனக்கு வழங்கியுள்ள சமத்துவக் கோட்பாட்டுக்கு எதிரானது என்றும் இவர் வழக்கு தொடுத்தார்.

க்ரட்டர் வெர்ஸஸ் பாலிங்கர் (Grutter  vs  Bollinger) என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பின்படியும் இது தவறானது, தனக்கு அனீதியானது என்று அவர் வாதிட்டார். பல்கலைக்கழகமோ தான் பின்பற்றும் மாணவர் சேர்க்கை கொள்கையானது மேற்படி வழக்கில் கோர்ட் பின்பற்றுமாறு சொன்ன கொள்கை தான் என்று பதில் அளித்தது. ‘இனம்’ (race) என்பதையும் ஒரு உள்ளீடாகக் கருத்தில் கொண்டு சேர்க்கைகள் நடைபெறுவதால் பல்கலையின் மாணவர் அமைப்பு  பன்முகப்பட்டதாக அமைந்து அனைவருக்குமே நன்மை பயக்கிறது என்றும் அது தெரிவித்தது. (ஏராளமான பல்கலைக்கழகங்கள் இதே கொள்கையைக் கடைபிடிக்கின்றன).

பல்கலைக்கழகம் எவ்வாறு தனது மாணவர் சேர்க்கைப் பட்டியலை உருவாக்குகிறது என்றும் தெரிவித்தது. அதாவது:

தன் சொந்த மானிலத்தின் மாணவர்கள் விண்ணப்பித்தால் அவர்கள் தத்தம் வகுப்பில் முதல் பத்து சதம் மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் இடம் வழங்கியாக வேண்டும் என்பது மானிலத்தின் சட்டம். (in-state applicants in the top ten percent of their high school class). மீதியுள்ள மாணவர்களைப் பற்றி மட்டுமே பல்கலைக்கழகம்  தனது கோட்பாட்டின்படி சேர்க்கை நடத்தும். அதற்கு இரண்டு குறியீட்டெண்களை அது பயன்படுத்துகிறது:

1.       Academic Index (“AI”) – கல்வித்தகுதி குறியீட்டெண்,
2.       Personal Achievement Index (“PAI”) சுய திறன் குறியீட்டெண்

 “கல்வித்தகுதி குறியீட்டெண்” மாணவர் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடைப்படையில் அமையும்.( based on standardized test scores and high school class rank).
“சுய திறன் குறியீட்டெண்” என்பது மாணவர் எழுதிக்கொடுக்கும் கட்டுரையின் தகுதியைப் பொறுத்தும் அவர் அதுவரை நிகழ்த்தியுள்ள “சாதனை”களின் அடிப்படையிலும் அமையும். இச்சாதனைகளாவன: ஆளுமைத்திறன், பரிசுகள்-விருதுகள் பெற்றமை, வேலை/அனுபவத்தின் கால அளவு, கல்வி தாண்டிய பிற ஈடுபாடுகள்,  மற்றும் “சிறப்பு அம்சங்கள்”. இதில் ‘இனம்’ என்பதும் ஒரு “சிறப்பு அம்சமாக” எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் எந்த ஒரு அம்சத்திற்கும் புள்ளிகள் அளிக்கப்பட்டு அவற்றின் மொத்தம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. “அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு”   (“holistically”) இந்த “சுயதிறன் குறியீட்டெண்” கணிக்கப்படும் என்கிறது பல்கலைக்கழகம்.

ஒரு மாணவன் அதிக மதிப்பெண் வாங்கியிருந்தாலோ, அல்லது மிகவும் குறைந்த மதிப்பெண் வாங்கியிருந்தாலோ, ‘இனம்’ என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இனவாரியான மாணவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற கணக்கு பல்கலைக் கழகத்தில் எடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  

அதிலும், 2005ம் ஆண்டில் க்ரட்டர் வெர்ஸஸ் பாலிங்கர் (Grutter  vs  Bollinger) என்ற வழக்கில் சுப்ரீம்கோர்ட் வழங்கிய ஆணையில் ‘இனம்’ என்பதையும் மாணவர் சேர்க்கைக்கு ஒரு உள்ளீடாகக் கருதலாம் என்று சொன்னபிறகே  இப்பல்கலைக்கழகம் இத்தகைய சேர்க்கைக் கோட்பாட்டை உருவாக்கியது என்றும் கூறியது.

இந்த வழக்கு கீழ்கோர்ட்டில் பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பானது. பல்கலைக்கழகம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நீதிமன்றம் உறுதி செய்தது.  இதை எதிர்த்து மறு ஆய்வு (“rehearing en banc”) செய்யுமாறு அபிகெய்ல் ஃபிஷர் கோரிய மனு நிராகரிக்கப்பட்டது. அதனால் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனார், ஃபிஷர். அது தான் நம் முன் உள்ள வழக்கு.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளிக்கப்போகும் தீர்ப்பு வெள்ளையர் அல்லாத மாணவர்கள் அனைவரையுமே பாதிக்க வல்லதாகும். குறிப்பாக அமெரிக்காவில் வாழும் இந்திய மாணவர்களுக்கு நிச்சயமான பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. (இந்தியாவிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பில்லை).

அமெரிக்க மாணவர் சமுதாயமும் பெற்றோர்களும் இவ்வழக்கின் முடிவை தயக்கம் கலந்த உணர்வோடு எதிர்நோக்குகிறார்கள் என்றால் மிகையாகாது.
       (மற்ற இரு வழக்குகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்).


 

Updated 26 June 2013 (இதோ தீர்ப்பு!)
ஃபிஷர் வெர்ஸஸ் யுனிவர்சிடி ஆஃப் டெக்ஸஸ்
  (Fisher vs University of Texas)

 
இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

“டெக்ஸஸ் பல்கலைக்கழகம் கூறுவதை ஏற்பதற்கில்லை. ‘இனம்’ என்ற ஒன்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே ‘பன்முகத்தன்மை’ யை (diversity in student body) கொண்டுவர வேறு வழிகள் இல்லை என்பதைப் பல்கலைக்கழகம் சரியாக ஆராய்ந்த பிறகு தான் இம்முடிவை எடுத்ததா என்று சரியான தகவல் இல்லை. எனவே நீங்கள் விசாரித்து சொல்லுங்கள்” என்று அம்மானில அப்பீல் கோர்ட்டுக்கு உத்தரவிட்டதுடன் நிறுத்திக்கொண்டு விட்டது சுப்ரீம் கோர்ட்.

‘கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் இப்போது பெரும்பான்மையாகப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்துவருகிறார்கள். அதே இனத்தவர் ஜனாதிபதியாகவே ஆகியிருக்கிறார். எனவே, தனியாக ‘இனம்’ என்ற ஒரு விஷயத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ - என்பது சுப்ரீம் கோர்ட்டின் கருத்து.

ஆனால், பல்கலைக்கழகம் தன் வழக்கமான நடவடிக்கையைத் தொடரக்கூடாது என்று தடை விதிக்கவில்லை. எனவே, இவ்வருட மாணவர் சேர்க்கை ‘இனம்’ என்பதையும் உட்கொண்டே நடைபெறக்கூடும்.

அப்பீல் கோர்ட் தரப்போகும் அறிக்கையைப் பொறுத்து இந்த வழக்கு பின்னொரு நாள் விசாரிக்கப்படலாம்.
 
Updated 26 June 2013 (இதோ தீர்ப்பு!)
ஷெல்பி கவுண்ட்டி வெர்ஸஸ் ஹோல்டர் (Shelby County Vs Holder)

மிகவும் கவலையோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட் அளித்துள்ள தீர்ப்பானது “ஏமாற்றமளிக்கிறது” என்கிறார், ஒபாமா.

சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு தான் என்ன?  

மொத்தமுள்ள 9 நீதிபதிகளில் 4 பேர் எதிராகவும் 5 பேர் ஆதரவாகவும் அளித்துள்ள தீர்ப்பு இது தான்: “வாக்குரிமை சட்டம் 1965ன் 5வது பிரிவுக்கு அடிப்படையாக இருக்கும் 4வது பிரிவு செல்லாது என்று தீர்ப்பளிக்கிறோம்”

அதாவது, Alabama, Alaska, Georgia, Louisiana, Mississippi, South Carolina, Virginia, and parts of North Carolina, Arizona, Idaho, and Hawaii ஆகிய மானிலங்கள் “முன் அனுமதி பெற்றபின்னரே தமது வாக்குரிமை சட்டங்களைத் திருத்தமுடியும்” என்ற விதியானது “தவறு”; 40 வருடங்களுக்கு முன்னிருந்த இனவாரி மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு சட்டம், இன்றைய நிலைமையைக் கருத்தில்கொள்ளாமல் நீட்டிக்கப்பட்டது செல்லாது” என்று ஆகிறது.

அதாவது, இனிமேல் அமெரிக்காவின் எந்த மானிலமும் தன் விருப்பப்படி தேர்தல் விதிகளை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

“பாராளுமன்றம் விரும்பினால் இன்றைய மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி தான் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யலாமே” என்கிறது கோர்ட்.


இதுபற்றி அரசியல் நோக்கர்கள் இப்படிக் கூறுகிறார்கள்:

பொதுவாக வெள்ளை நிறத்தினர், ரிபப்ளிக்கன் கட்சிக்கும், கறுப்பினத்தவர்களும் குடியேறிகளும் ஜனநாயகக் கட்சிக்கும் வாக்களிப்பவர்கள் என்பது பொதுவான நிலைமை (1965ல் இச்சட்டம் கொண்டுவரப்பட்ட போது). இடையிலுள்ள 48 வருடங்களில் இந்த நிலைமையில் பெரிதும் மாற்றம் வந்துவிடவில்லை. ஆனால்    கறுப்பினத்தவர்கள், மற்றும் குடியேறிகளின் தொகை மிகவும் பெருகிவிட்டது. இதனால் (ஒபாமாவின்) ஜனநாயகக் கட்சிக்கு செல்வாக்கு மிகுந்துவிட்டது. அதனால் தான் ஒரு கறுப்பினத்தவர் இங்கு ஜனாதிபதியாக முடிந்தது.

 இனி அம்மாதிரியான வெற்றி அவர்களுக்குக் கிடைத்துவிடாதபடி, ரிபப்ளிக்கன் ஆட்சியில் உள்ள மானிலங்கள்,

(1)    தமது வாக்காளர்களில் கறுப்பினத்தவர்கள், மற்றும் குடியேறிகளாக உள்ளவர்களை எளிதாக வாக்களித்துவிட முடியாதபடி புதுப்புது ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வார்கள்.  

(2)    புதிய வாக்காளர்களின் பதிவுமுறையைக் கடினப்படுத்துவார்கள்.

(3)    ஏற்கெனவே வாக்காளர்களாக உள்ள குடியேறிகளின் ஆவணக்குறைபாடுகளைப் பெரிதுபடுத்தி அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிடவும் முயற்சி செய்வார்கள்.

(4)    சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகளின் எல்லையைத் தாங்கள் வெற்றி பெறக்கூடியதாக மாற்றி அமைக்கவும் கூடும்.

கடைசியாகச் சொன்ன ‘தொகுதிச் சீரமைப்பை” ஜனநாயகக் கட்சி ஆட்சியில் உள்ள மானிலங்களும் (தங்கள் வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்திக்கொள்ள) செய்யக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.


எப்படியோ, நீறு பூத்த நெருப்பாக இருந்த இனப் பிரச்சினையை ஊதி எரியவைத்துவிட்டது  இந்தத் தீர்ப்பு. இதன் விளைவைச் சரியாகக் கையாளாவிட்டால் தீ பெரிதாகலாம் என்று நடுனிலையாளர்கள் அஞ்சுகிறார்கள்.
(c ) Y .Chellappa
email : chellappay@yahoo.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக