Updated 26 June 2013 (இதோ தீர்ப்பு!)
ஃபிஷர் வெர்ஸஸ் யுனிவர்சிடி ஆஃப் டெக்ஸஸ்
(Fisher vs University of Texas)
இந்த வழக்கில் இன்று சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
“டெக்ஸஸ் பல்கலைக்கழகம்
கூறுவதை ஏற்பதற்கில்லை. ‘இனம்’ என்ற ஒன்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே
‘பன்முகத்தன்மை’ யை (diversity in student body) கொண்டுவர வேறு வழிகள் இல்லை
என்பதைப் பல்கலைக்கழகம் சரியாக ஆராய்ந்த பிறகு தான் இம்முடிவை எடுத்ததா என்று
சரியான தகவல் இல்லை. எனவே நீங்கள் விசாரித்து சொல்லுங்கள்” என்று அம்மானில அப்பீல்
கோர்ட்டுக்கு உத்தரவிட்டதுடன் நிறுத்திக்கொண்டு விட்டது சுப்ரீம் கோர்ட்.
‘கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் இப்போது
பெரும்பான்மையாகப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்துவருகிறார்கள். அதே இனத்தவர்
ஜனாதிபதியாகவே ஆகியிருக்கிறார். எனவே, தனியாக ‘இனம்’ என்ற ஒரு விஷயத்திற்கு ஏன்
முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ - என்பது சுப்ரீம் கோர்ட்டின் கருத்து.
ஆனால், பல்கலைக்கழகம் தன் வழக்கமான
நடவடிக்கையைத் தொடரக்கூடாது என்று தடை விதிக்கவில்லை. எனவே, இவ்வருட மாணவர்
சேர்க்கை ‘இனம்’ என்பதையும் உட்கொண்டே நடைபெறக்கொடும்.
அப்பீல் கோர்ட் தரப்போகும்
அறிக்கையைப் பொறுத்து இந்த வழக்கு பின்னொரு நாள் விசாரிக்கப்படலாம்.
Updated 26 June 2013 (இதோ தீர்ப்பு!)
ஷெல்பி கவுண்ட்டி வெர்ஸஸ் ஹோல்டர் (Shelby County Vs Holder)
மிகவும் கவலையோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில்
சுப்ரீம்கோர்ட் அளித்துள்ள தீர்ப்பானது “ஏமாற்றமளிக்கிறது” என்கிறார், ஒபாமா.
சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு தான் என்ன?
மொத்தமுள்ள 9 நீதிபதிகளில் 4
பேர் எதிராகவும் 5 பேர் ஆதரவாகவும் அளித்துள்ள தீர்ப்பு இது தான்: “வாக்குரிமை சட்டம் 1965ன் 5வது
பிரிவுக்கு அடிப்படையாக இருக்கும் 4வது பிரிவு செல்லாது என்று தீர்ப்பளிக்கிறோம்”
அதாவது, Alabama, Alaska, Georgia, Louisiana, Mississippi, South Carolina, Virginia, and parts of North Carolina, Arizona, Idaho, and Hawaii ஆகிய மானிலங்கள்
“முன் அனுமதி பெற்றபின்னரே தமது வாக்குரிமை சட்டங்களைத் திருத்தமுடியும்” என்ற
விதியானது “தவறு”; 40 வருடங்களுக்கு முன்னிருந்த இனவாரி மக்கள் தொகையைக் கருத்தில்
கொண்டு எடுக்கப்பட்ட ஒரு சட்டம், இன்றைய நிலைமையைக் கருத்தில்கொள்ளாமல்
நீட்டிக்கப்பட்டது செல்லாது” என்று ஆகிறது.
அதாவது, இனிமேல்
அமெரிக்காவின் எந்த மானிலமும் தன் விருப்பப்படி தேர்தல் விதிகளை மாற்றி
அமைத்துக்கொள்ள முடியும்.
“பாராளுமன்றம்
விரும்பினால் இன்றைய மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி தான் என்ன செய்யவேண்டுமோ அதை
செய்யலாமே” என்கிறது கோர்ட்.
இதுபற்றி
நியூயார்க் டைம்ஸ் மற்றும் அரசியல் நோக்கர்கள் இப்படிக் கூறுகிறார்கள்:
பொதுவாக
வெள்ளை நிறத்தினர், ரிபப்ளிக்கன் கட்சிக்கும், கறுப்பினத்தவர்களும் குடியேறிகளும்
ஜனநாயகக் கட்சிக்கும் வாக்களிப்பவர்கள் என்பது பொதுவான நிலைமை (1965ல் இச்சட்டம்
கொண்டுவரப்பட்ட போது). இடையிலுள்ள 48 வருடங்களில் இந்த நிலைமையில் பெரிதும்
மாற்றம் வந்துவிடவில்லை. ஆனால்
கறுப்பினத்தவர்கள், மற்றும் குடியேறிகளின் தொகை
மிகவும் பெருகிவிட்டது. இதனால் (ஒபாமாவின்) ஜனநாயகக் கட்சிக்கு செல்வாக்கு
மிகுந்துவிட்டது. அதனால் தான் ஒரு கறுப்பினத்தவர் இங்கு ஜனாதிபதியாக முடிந்தது.
இனி
அம்மாதிரியான வெற்றி அவர்களுக்குக் கிடைத்துவிடாதபடி, ரிபப்ளிக்கன் ஆட்சியில் உள்ள
மானிலங்கள்,
(1)
தமது வாக்காளர்களில்
கறுப்பினத்தவர்கள், மற்றும் குடியேறிகளாக உள்ளவர்களை எளிதாக வாக்களித்துவிட
முடியாதபடி புதுப்புது ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வார்கள்.
(2)
புதிய
வாக்காளர்களின் பதிவுமுறையைக் கடினப்படுத்துவார்கள்.
(3)
ஏற்கெனவே
வாக்காளர்களாக உள்ள குடியேறிகளின் ஆவணக்குறைபாடுகளைப் பெரிதுபடுத்தி அவர்களை
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிடவும் முயற்சி செய்வார்கள்.
(4)
சட்டமன்ற,
பாராளுமன்றத் தொகுதிகளின் எல்லையைத் தாங்கள் வெற்றி பெறக்கூடியதாக மாற்றி
அமைக்கவும் கூடும்.
கடைசியாகச்
சொன்ன ‘தொகுதிச் சீரமைப்பை” ஜனநாயகக் கட்சி ஆட்சியில் உள்ள மானிலங்களும் (தங்கள்
வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்திக்கொள்ள) செய்யக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படியோ,
நீறு பூத்த நெருப்பாக இருந்த இனப் பிரச்சினையை ஊதி எரியவைத்துவிட்டது இந்தத் தீர்ப்பு. இதன் விளைவைச் சரியாகக்
கையாளாவிட்டால் தீ பெரிதாகலாம் என்று நடுனிலையாளர்கள் அஞ்சுகிறார்கள்.
Updated on 26th June 2013
யு.எஸ் வெர்ஸஸ் விண்ட்ஸர் (US vs Windsor)
இந்த வழக்கில் “ஒரு
ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்துகொள்வது தான் திருமணம் என்று கூறும் அமெரிக்க மத்திய
அரசின் Defense of
Marriage Act (DOMA) என்ற சட்டம் செல்லாது” என்று சுப்ரீம் கோர்ட் இன்று
தீர்ப்பளித்துள்ளது. இதனால் விண்ட்ஸருக்கு அவர் கோரிய வரிவிலக்கு கிடைக்கும். அதுமட்டுமன்றி,
நியூயார்க் டைம்ஸ் தெரிவிப்பதாவது: (1) ‘சிவில் யூனியன்’ என்பதும் ‘திருமணம்’
என்பதும் ஒரே மாதிரியான உரிமைகளையே தம்பதிகளுக்கு வழங்கும் என்று ஆகிறது. (2)இதனால்
‘திருமணம்’ என்ற சொல்லுக்கான வரையறையை இனிமேல் தான் பாராளுமன்றம் புதிதாக
நிர்ணயிக்கவேண்டி யிருக்கும். (3)ஒரே பாலினரின் திருமணத்தை இதுவரை அங்கீகரிக்க சட்டம் இயற்றாத மானிலங்கள் இனி
அதற்கான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்.
ஹாலிங்க்ஸ்வொர்த் வெர்ஸஸ்
பெர்ரி (Hollingsworth vs
Perry)
இந்த வழக்கில்,
வாதிகளுக்கு வழக்கு தொடுக்கும் தகுதி (standing)கிடையாது என்று
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இதன் பயனாக, ஒரே பாலினர் திருமணம் செல்லும் என்று
உள்ளூர் கோர்ட் தீர்மானம்-8ஐ எதிர்த்து வழங்கிய உத்தரவானது உயிர்பெறுகிறது. அதாவது
கலிஃபோர்னியா மானிலத்தில் எப்போதும் போல் ஒரே பாலினர் திருமணம் இனி தொடர்ந்து
சட்டபூர்வமானதாக இருக்கும்.
மொத்தத்தில்
மேற்படி இரண்டு
வழக்குகளிலும் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பானது, அமெரிக்க சமுதாயத்தில்
‘திருமணம்’ என்ற கோட்பாட்டை இனி
பின்வாங்கமுடியாத அளவுக்குத் தூக்கி நிறுத்தியுள்ளது. உளவியல் ரீதியாகவும்,
பொருளாதார ரீதியாகவும் ‘ஒரே பாலினர் திருமணங்கள்’
இனி சலசலப்பை ஏற்படுத்தாது. இதன் உடனடி பாதிப்பு மேற்கத்திய நாடுகளிலும்,
காலப்போக்கில் உலகம் முழுதிலும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
****
அறியாத தகவல்கள் அய்யா. நல்லதே நடக்கட்டும். நன்றி
பதிலளிநீக்குஇதன் தாக்கம் கண்டிப்பாக உலகின் அனைத்துப்பகுதிகளிலும் உணரப்படும் என்பதே உண்மை.
பதிலளிநீக்கு