அச்சுப்புத்தகங்கள்
படிக்கும் பழக்கம் அமெரிக்காவில் குறைந்துகொண்டே வருகிறது. புதிதாக வெளியாகும் ஓர்
(ஆங்கிலப்) புத்தகத்தின் விலை, கெட்டி-அட்டை (hard cover) யானால்
22 டாலர் முதல் 30 டாலர் வரை இருக்கும். கெட்டி-அட்டை பிரதிகள் விற்றுத்
தீர்ந்ததும் காகித-அட்டை (paperback) பிரதி வெளியிடுவார்கள். அது 16 முதல் 18
டாலர் இருக்கும். இது உண்மையிலேயே அதிக விலையாகும்.

உடனடியாக அமெரிக்காவின்
ஆறு பெரிய பதிப்பாளர்களையும் அழைத்தார். வராதவர்களைத் தானே போய் சந்தித்தார். (1. Simon and Schuster, 2. HarperCollins, 3. Random House, 4. Macmillan, 5. Penguin Group, 6. Hachette Book Group). இனிமேல்
உங்களுக்குப் பொற்காலம் என்றார். எங்களிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு உங்கள்
மின்-புத்தகங்களை ஆப்பிள் மூலமாகவே விற்பனை செய்யுங்கள். புத்தகத்தின் விலையை
உங்கள் விருப்பம் போல் நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். எங்களுக்கு விற்பனை கமிஷன் 30
சதம் கொடுத்துவிடுங்கள் போதும் என்றார்.

எட்டி
க்யூவிடமிருந்து இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்ட நிம்மதியோடு இறுதி மூச்சை
விட்டார், ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா? “சபாஷ்!
வெடிமருந்தின் மீது தீக்குச்சியை எறிந்து விட்டோம்!” (“Wow, we have really lit the fuse on a powder
keg”.)
சரி, அமெரிக்காவின் ஆறு பெரிய பதிப்பாளர்களைப்பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாகத் தெரிந்து கொள்ளலாமா?
அமெரிக்காவின் “ஆறு பெரிய” (the Big Six) பதிப்பாளர்கள்
(c) Copyright: Y.Chellappa
email: chellappay@yahoo.com
தயாரிப்புச் செலவு
அதிகரித்துக்கொண்டே வருவதால் புத்தக வெளியீட்டார்கள் பலத்த இழப்பில்
இருக்கிறார்கள். இதனால் செலவைக் குறைக்க 90 சதம் புத்தகங்கள் சீனாவில் தான்
அச்சடிக்கப்படுகின்றன. டைப் செட்டிங்க் மட்டும் பல வருடங்களாகவே இந்தியா, மெக்ஸிகோ,
பிரேசில் போன்ற வெளிநாடுகள் மூலம் தான் நடக்கிறது. ஒருசில பல்கலைக்கழகங்கள்
மட்டுமே தங்கள் புத்தகங்களை முழுவதுமாக அமெரிக்காவில் தயாரிக்கின்றனர்.
விலை கூடுவதால் அச்சுப்பிரதிகள்
வாங்குவது குறைந்துவருகிறது. இதற்கு மாற்றாக மின்-புத்தகங்கள் பிரபலம் அடைந்து
வருகின்றன. என்றாலும் அவற்றின் பங்கு மொத்த விற்பனையில் 10 சதம் கூட இல்லை. ஆனால் ஆண்டுக்காண்டு
வளர்ச்சிவிகிதம் அதிகரித்துக்கொண்டே வருவதால் 2015ல் சுமார் 25
சதம் புத்தகங்கள், மின்புத்தகமாகவே
விற்கும் என்கிறார்கள்.
அமெரிக்க புத்தகச்
சந்தையின் இன்னொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், மக்கள் புத்தக்கடைகளுக்குச்
சென்று வாங்குவது பெரிதும் குறைந்துவிட்டது. இணைய வழியாகவே சுமார் 50 சதம் புத்தகங்கள்
விற்கின்றன. அமேஸான்.காம் இவ்வகையில் ஏகாதிபத்தியம் செலுத்துகிறது எனலாம். இணையவழி
விற்பனையில் 90 சதம் அதன் வசமே இருக்கிறது. அற்புதமான தொழில்நுட்பமும் வாடிக்கையாளர்
சேவையும் கேட்ட இரண்டே நாளில் கையில் வந்து விழும்படியான வழங்கல் அமைப்பும்
அமேஸானை ஈடிணையற்ற புத்தக விற்பனையாளராக ஆக்கியிருக்கிறது. இதனால் நாடு தழுவிய
புத்தகக் கடைக்காரர்கள் இன்று குறைந்துவிட்டனர். 2005ல் என் முதல் அமெரிக்க பயணத்தின்போது “Borders” என்றும் “Barnes
& Noble” என்றும் இரண்டு கடைகள் அமெரிக்காவின் பல
முக்கிய நகரங்களில் கிளை பரப்பியிருந்தன. 2007ல் வந்த போது நியூஜெர்சியில் இருந்த “Borders” கடை மூடப்பட இருந்தது.
ஒரு மாதம் “Closing Down Sale” என்று
போட்டிருந்தார்கள். அப்போதைய அதிக பட்ச விலையான 18 டாலர் இருந்த புத்தகங்களை ஒரு
டாலருக்குக் கொடுத்தார்கள். சுமை அதிகம் என்பதால் ஐந்து புத்தகங்கள் மட்டுமே
வாங்கினேன். அற்புதமான ஓவியம், சிற்பம், வானவியல் பற்றிய நூறு டாலர் புத்தகங்கள் 20
டாலருக்கே கிடைத்தன. (வாங்க முடியவில்லை. புரட்ட மட்டுமே முடிந்தது). நம்மூரில்
பொன்னியின் செல்வனை வைத்துக்கொண்டு எல்லா பதிப்பாளர்களும் ஆளுக்கொரு சைஸில்
வெளியிடுவதுபோல் இங்கு ஷேஸ்பியரும் சார்ல்ஸ் டிக்கன்சும் வெவ்வேறு வடிவமைப்புகளில்
தனியாகவும் தொகுப்பாகவும் கிடைத்தார்கள். எல்லாமே ஒன்று முதல் ஆறு டாலர்களுக்குள்!
இரண்டு
மாடிக்கட்டிடம். லிஃப்டும் எலிவேட்டரும் உண்டு. குழந்தைகளுக்கான நூல்கள் மட்டுமே
மாடியில் பாதியை ஆக்கிரமித்திருந்தது. எக்கச்சக்கமான வாடகை, மின்செலவு
இருந்திருக்கவேண்டும். “Borders” என்ற பெயரே இன்று மறைந்துவிட்டது.
இப்போது “Barnes & Noble” ஒன்று தான் நாடு தழுவிய புத்தகக்கடை என்கிறது, நியூயார்க்
டைம்ஸ். அப்படியானால் அமேஸானின் வீச்சை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும். புத்தக
விற்பனையில் அது வைத்தது தான் சட்டம். இந்தியாவில் ‘கால்கேட்’ பற்பசை மாதிரி அமெரிக்காவில்
அமேஸான்.காம்.
அமெரிக்க புத்தகச்
சந்தை பற்றி இன்னொரு விஷயம் தெரிந்துகொள்ள வேண்டும். எந்தப் புத்தகமானாலும்
முதலில் கெட்டி-அட்டை பதிப்பாகத்தான் வெளியிடுவார்கள். அதன் விலையில் 55 சதம்
கடைக்காரருக்குக் கிடைக்கும். (கடைக்காரர் தான் விரும்பிய விலைக்கு
விற்றுக்கொள்ளலாம். இதனால் கடைக்குக் கடை புத்தகத்தின் விற்பனை விலை வித்தியாசப்படும்). மீதி தான் பதிப்பாளருக்கு.
(இதற்கு Wholesale Pricing Model என்று பெயர்). இந்த மீதியில் 15 சதம் எழுத்தாளருக்கு.
(45*15%) (அதாவது, அட்டையில் குறித்த விலையில் 7 சதம் மட்டுமே). இந்த ஏற்பாட்டினால்,
கடைக்காரர்களின் ஏகாதிபத்தியம் காரணமாக எந்த கெட்டி-அட்டைப் புத்தகமும் இப்போது 22
டாலருக்குக் குறைவாக விலை குறிக்கப்படுவதில்லை. வெறும் எண்பது பக்கம் மட்டுமே உள்ள
கவிதைப் புத்தகமும் சரி, 300 பக்கமுள்ள நாவலும் சரி, எல்லாமே 22 டாலர் தான் அல்லது
அதை விட அதிகம். இன்னொரு வினோதமான பழக்கம், விற்பனையாகாத பிரதிகளை, 18 மாதம்
வரையில் எப்போது வேண்டுமானாலும் கடைக்காரர் திருப்பிக்கொடுக்கலாம். இத்தகைய விற்பனை
ஏற்பாடுகளால் லாபமடைகிறவர்கள், கடைக்காரர்களேயன்றி பதிப்பாளர்கள் அல்லர்.

இந்த அழிவுச்
சூழ்நிலையில் தான் மின்-புத்தகம் என்னும் காமதேனு வந்து குதித்தது. மின்புத்தகத்திற்காகப்
பதிப்பாளர்கள் அதிகம் செலவு செய்யவேண்டியதில்லை. எனென்றால், மின்புத்தகமாகத் தான்
முதலில் தயாரிக்கப்பட்டு அதுவே அச்சுப்புத்தகமாகிறது. அச்சிடப்பட்ட பிறகு,
டைப்செட்டிங்க் செய்த ஃபைல், கணினியில் ஓர் ஓரத்தில் ஒதுங்கியிருந்தது. அதை
இப்போது பணம்காய்க்கும் மரமாக மாற்றிக்கொள்ள முடியுமென்றால் யார் மாட்டேன் என்பார்கள்?
தொழில் நுட்பத்தால் கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பு இது.
எனவே இந்தக்
காமதேனுவை கடைக்காரர், பதிப்பாளர் என்ற இருவகையினரும் சொந்தம் கொண்டாட
ஆரம்பித்தனர். இங்கும் கடைக்கார்கள் ஒரு படி உயரமாகவே நின்றனர். ஏனென்றால்,
மின்புத்தகம் இணையத்தின் மூலம் தான் விற்க முடியும். அதற்குரிய தொழில்நுட்பக்கட்டமைப்பும்
பணம் பெற்றுத்தரும் (விசா, மாஸ்டர்கார்டு, பே-பால் போன்ற) நிறுவனங்களோடு லாபகரமான
நடைமுறை ஒப்பந்தமும் எந்தப் பெரும்பதிப்பாளரிடமும்
இருக்கவில்லை. அது மட்டுமின்றி, எந்தத் தொழில்நுட்ப ஏற்பாடும் காலம் செல்லச்செல்ல
மேம்படுத்தப்பட வேண்டியதாகும். இதற்கான மென்பொருள், வன்பொருள் கட்டமைப்பும் திறம்
வாய்ந்த ஆள்பலமும் பதிப்பாளர்களின் முதலீட்டு எல்லைக்கு அப்பாற்பட்டவை. எனவே,
இணையத்தில் இம்மாதிரியான ஏற்பாட்டுடன் கூடிய கடைக்காரர் மூலமே மின்புத்தகங்களை
விற்றாகவேண்டும். அத்தகைய ஒரே கடைக்காரர், அமேஸான்.காம் மட்டுமே!
எனவே, மின் புத்தகங்களைப்
பொருத்தவரை அமேஸான் வைத்தது தான் சட்டம் என்பது மட்டுமல்ல, அப்பீல் இல்லாத
நீதிமன்றமும் அதுவே என்றானது.
அச்சுப்புத்தகச்
சந்தையில் தலைமை கொண்டிருந்த அமேஸான், புதிதாக முளைத்த மின்புத்தகச் சந்தையிலும்
தன் தலைமையை உறுதிப்படுத்திக்கொள்ள முடிவு செய்தது. அதற்கு ஒரே வழி, மின்
புத்தகங்களின் விலையைக் குறைப்பதன் மூலம் சந்தையின் வீச்சை அதிகரிப்பது.
அப்போதுதான் மக்களிடையே மின்புத்தகம் வாங்குதல், வசீகரமான மாற்றுவழியாக இருக்க
முடியும்.
இந்த உத்தியின்
அடிப்படையில், அமேஸான், தான் விற்கும் எந்த மின் புத்த்கமானாலும் ஒரே விலையாக 9.99
டாலர் என்று நிர்ணயம் செய்தது. (அதில் 30 சதம் அமேஸானுக்கு. மீதியில் செலவு போக
மிச்சம் பதிப்பாளருக்கு). தன் தயாரிப்புக்கு விலை வைக்கும் அடிப்படை உரிமை
பதிப்பாளரிடமிருந்து பறிக்கப்பட்டது.
இதிலும் வழக்கம் போல
வெற்றி பெற்றவர் கடைக்காரரான அமேஸான் தான். பதிப்பாளர்களுக்கு வேறு வழி
தெரியவில்லை, ஒப்புக்கொண்டார்கள். இன்று வரை இந்த ஏற்பாடு நடைமுறையில் உள்ளது.
பதிப்பாளர்கள் என்ன
நினைத்தார்கள்? ஒரு கெட்டி-அட்டை பிரதியை அமேஸான் மூலம் விற்றாலே பிரதிக்கு எட்டு
முதல் பத்து டாலர் கிடைத்தது. அதற்கு அமேஸான் எவ்வளவோ மெனக்கெட வேண்டும். கேட்பு
நிலையிலிருந்து வழங்கல் நிலை வரை ஒவ்வொன்றிலும் மனிதக் குறுக்கீடு உண்டு.
அப்படியும் புத்தகங்கள் போய் சேராமல் திரும்பிவரலாம், புகார்கள் வரும், அதையும்
நிர்வகிக்க வேண்டும். இத்தனைக்குப் பிறகும் எட்டு முதல் பத்து டாலர் கொடுத்தது
அமேஸான். ஆனால், மின்புத்தகங்களில் இம்மாதிரி நடைமுறை சிக்கல்கள் எதுவுமேயில்லை.
இணையத்தில் வாடிக்கையாளர் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தவுடன், மின்-பணம்
செலுத்தியவுடன், கணினி தானாகவே புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும். பார்சல் திரும்பிவரும் என்றோ, புகார் வரும் என்றோ
கவலையில்லை. எத்தனை லட்சம் பேர் ஒரே நேரத்தில் கேட்டாலும் பதிவிறக்கம் செய்யலாம்.
அதிகப்படி வேலை ஒன்றுமில்லை. எனவே, ஏகாதிபத்தியமாக 9.99 டாலர் என்று
புத்தகத்திற்கு விலை வைத்தது மட்டுமின்றி, 30 சதம் கமிஷனும் பிடுங்கிக்கொண்டு, ஒரு
பிரதிக்கு 6 டாலர் தான் கிடைக்கும் என்ற பரிதாப நிலைக்குத் தங்களைத்
தள்ளிவிட்ட அமேஸானின் தந்திரத்தை எந்தப்
பதிப்பாளரும் ரசிக்கவில்லை. அதிலும் 30 சதம் கமிஷன் என்பது கொள்ளையடிப்பு தான். ஆனால்
அமேஸானை எதிர்க்கமுடியாது. அந்த அளவுக்கு வாங்குவோர் மத்தியில் அமேஸான்
நம்பிக்கையைப் பெற்றிருந்தது. எனவே புதியதொரு மின்-புத்தக விற்பனையாளர் வரமாட்டாரா
என்று ஏங்கிக்கொண்டிருந்தார்கள், பதிப்பாளர்கள்.
மின்புத்தக விற்பனையை
ஊக்கப்படுத்துவதற்காக அமேஸான் இன்னொரு உத்தியையும் செய்த்து. அது தான்
மின்-படிப்பான் என்னும் ஈ-ரீடரான ‘கிண்டில்’ என்னும் மொபைல்போன் அளவுள்ள கருவியைக்
குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியது (2007ல்). இதில் அடிப்படை வடிவைத் தவிர, ‘கிண்டில்
ஒயிட்’ என்னும் மேம்படுத்தப்பட்ட வடிவையும் அண்மையில் வெளியிட்டது. நல்ல
சூரியவெளியிலும் இதை எளிதாகப் படிக்கலாம். ஒருமுறை மின்னூட்டினால் தினம் அரைமணி
நேரம் வீதம் ஒரு மாதம் வரை வாசிக்கலாம். இவை இரண்டும் கருப்பு-வெள்ளையில் மட்டுமே
எழுத்துக்களைக் காட்டும். வண்ணப்புத்தகங்களை அப்படியே படிக்க வசதியாக ‘கிண்டில்-எச்.டி.’
என்ற உயர்விலை வடிவையும் வெளியிட்டுள்ளது. மொத்த மின்புத்தக வாசகர்களில் 55 சதம்
கிண்டில் வழியாகவே படிக்கிறார்கள் என்றால் புத்தக விற்பனை மேலும் வாசிப்பின்
மேலும் அமேஸானின் கிடுக்கிப்பிடி எத்தகையது என்று விளங்கும்.
(அமேஸானுக்குள்ள ஒரே
போட்டியாளர், முன்பே சொன்ன ‘பார்ன்ஸ் & நோபிள்’ தான். அந்த நிறுவனம் தனது
‘நூக்’ என்னும் மின்-படிப்பானை வெளியிட்டுள்ளது. சுமார் 14 சதம் சந்தை அதன் வசம்
உள்ளது. சோனியும் மின்-படிப்பானை விற்கிறது, 1% சந்தைப்பங்குடன். வேறு சில சீன,
கொரியத் தயாரிப்புகளும் உள்ளன).
இப்படிப்பட்ட
சூழ்நிலையில் தான் (அமரர்) ஸ்டீவ் ஜாப்ஸ் தனது ஆப்பிள் ஐ-பேடை
அறிமுகப்படுத்தினார். அது ஒரே நாளில் உலகின் கவனத்தை ஈர்த்து விற்பனையில் சாதனை
படைத்து வருவதை அறிவோம். இதிலுள்ள பல்வேறு அம்சங்களில் ஒன்று, மின்-படிப்பு வசதியாகும்.
அத்துடன் அமேஸான் மாதிரியான மின்-சந்தையை உருவாக்கவும் இதைப் பயன்படுத்த எண்ணியது,
ஆப்பிள். அதேசமயம், ஆப்பிளை இயக்கும் நீண்டநாள் லட்சியமான ‘எங்கும் எதிலும் தலைமை’
என்ற கொள்கையை மின்-சந்தையிலும் நிறுவ வேண்டுமானால் அமேஸானிடமிருந்து மின்-புத்தக
விற்பனையைத் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று தனது உத்தியைத் தெரிவித்தார்
ஜாப்ஸ். உடனே செயலில் இறங்கினார், அவரது உதவியாளர், எட்டி க்யூ (Eddy Cue).
ஸ்டீவ் ஜாப்ஸ் புற்று
நோயால் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக அப்போது தான் பதவி விலகியிருந்தார். மேலும்
அவர் அதிக நாள் உயுரோடு இருக்கமாட்டார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
எனவே, அவர் உயிரோடு இருக்கும்போதே தனது ஐ-பேடு வழியான வர்த்தகம் பெரிதாக
நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன என்ற திருப்தியை அவருக்கு
வழங்கவேண்டும் என்று முடிவு செய்தார் எட்டி க்யூ.


அமேஸானை விடவும்
அமெரிக்கர்களுக்கு நம்பகமான வர்த்தகவடிவம் (brand), ஆப்பிள். எதைத் தொட்டாலும் பொன்னாகக்
கொழிக்கவைக்கும் நிறுவனம். ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மாமனிதரின் படைப்பு. வர்த்தகரீதியில்
கணினிக்கு ‘மௌஸ்’ பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தவர் இவரே. இன்றைக்கும்
ஆப்பிள் கணினி என்றாலே உயர்தொழில்நுட்பம் தான். (ஆப்பிளின் ‘மௌஸ்’ உள்ளிட்ட சில கோட்பாடுகளை
மைக்ரசாஃப்ட் களவாடிவிட்டதாக பலவருடங்கள் வழக்கு நடந்து, கடைசியில் பெருத்த நஷ்ட
ஈடு வழங்கி வெளியில் வந்தது மைக்ரஸாஃப்ட் என்பது நினைவிருக்கலாம்).
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நூற்றுக்கு நூறு செயல்பாட்டால் நிரூபித்துக்கொண்டிருக்கும்
கம்பீரமான நிறுவனம் அது. ‘ஐ-ட்யூன்ஸ்’ மூலம் இசைக்கான புதியதொரு மாபெரும்
மின்சந்தையை ஏற்கெனவே உருவாக்கியிருந்தது. எனவே, ஆப்பிளின் இந்தப் புதிய உத்தி,
அமேஸானின் வியாபாரத் தந்திரத்திற்குச் சரியான மாற்றாகப் பட்டது பதிப்பாளர்களுக்கு.
தங்களை அழிவிலிருந்து காக்க வந்த மீட்பனாக ஆப்பிளை ஏற்றுக் கொண்டு ஆறு பேரும் கையெழுத்திட்டனர். இனி தாங்கள்
ஆப்பிள் மூலம் விற்கப்போகும் மின் புத்தகங்களுக்கு 12.99 முதல் 14.99 டாலர் வரை விலை வைக்கலாமென்றும்
ஒப்புக்கொண்டார்கள்.

அது உண்மையே. இத்தனை
நாள் சொகுசாக லாபம் சம்பாதித்து வந்த அமேஸான் சும்மா இருக்குமா? ஆனால்
முதலாளித்துவ அமெரிக்காவில் இத்தகைய போட்டியை யாரும் தடுக்க முடியாதே! அதனால்
வாசகர்களைத் தஞ்சம் புகுந்தது. அமேஸான்
9.99 டாலருக்கு மின் புத்தகம் தருகிறது, இதை விடக்குறைவாக அல்லவா
போட்டியாளரான ஆப்பிள் தர வேண்டும்?
அப்படியில்லாமல் 12.99 முதல் 14.99 டாலர் என்று 30 சதம் முதல் ஐம்பது சதம் வரை
புத்தக விலையை உயர்த்தியது நியாயமா? இது வாசகர்களின் உரிமையைப் பறிப்பதாகாதா என்று
ஊடகங்களில் பரபரப்பு எழுந்தது. இத்தகைய நடவடிக்கைக்கு அமெரிக்காவின் ஆறு பெரிய
பதிப்பாளர்களும் கூட்டு சேர்ந்தது தான் காரணம், இந்த ‘மோசடிக்கூட்டணி’யை (“CARTEL”) தண்டிக்க வேண்டும் என்று அமேஸான் சார்பிலும் வாசகர்கள்
சார்பிலும் கோரிக்கை வரவே, அரசு ஆப்பிள் மேல் வழக்கு பதிவு செய்தது.
பொதுமக்களுக்குப்
பாதகம் விளைவிக்கும்படியாகவும், போட்டியாளர்களை அழிக்கும் விதமாகவும் செயல்படுவோர்
மீது அரசு வழக்கு தொடுக்கும் முறைக்கு அமெரிக்காவில் Anti-Trust
Case என்று பெயர். ஆப்பிள் மீது இப்போது அமெரிக்க அரசு இவ்வகையான
Anti-Trust Case பதிவு செய்துள்ளது. வழக்கின் முடிவில்
குற்றவாளிகளுக்கு மிகப் பெரிய அபராதம் விதிக்கப்படும். (இந்தியாவிலும்
இம்மாதிரியான நடவடிக்கை எடுக்க ‘காம்ப்பெடிஷன் கவுன்சில் ஆஃப் இந்தியா’ –Competition Council of India (CCI)- என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அண்மையில் கமல் ஹாஸன் தனது
விஸ்வரூபம் படத்தை டி.ட்டி.எச். (DTH) மூலம் முதலில் வெளியிட்டு, அதன் பிறகு தியேட்டர்களுக்குத்
தருவதாக அறிவித்தபோது, அந்தப் புது முயற்சியைத் தடுக்கும் விதமாக தியேட்டர்
அதிபர்கள் செயல்பட்டதால், இந்த ‘காம்ப்பெடிஷன் கவுன்சில் ஆஃப் இந்தியா’ விடம் நடவடிக்கை எடுக்கக்கோரி கமல் புகார் செய்தது நினைவிருக்கலாம்.)
ஆப்பிள் மீதான இந்த
வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது. இதற்குள்ளாகவே ‘ரேண்டம் ஹௌஸ்’ தவிர மற்ற ஐந்து
பதிப்பாளர்களும் அரசுடன் “சமாதானமாகி” விட்டனர். (அதாவது, ‘அய்யா, மன்னித்து
விடுங்கள். நீங்கள் சொல்லும் அபராதத்தைச் செலுத்திவிடுகிறோம், ஆளை விடுங்கள்’
என்று அர்த்தம். ஆனால் தவற்றை ஒப்புக்கொண்டதாகவோ, மறுத்ததாகவோ அர்த்தமில்லையாம்!) ‘ரேண்டம்
ஹௌஸ்’ ஏன் இந்தப் பட்டியலில் இல்லை என்றால் அதுவும் பெங்குவினும் விரைவில்
இணையப்போகின்றன. பெங்குவினுக்கு ஆகிற முடிவைத் தானும் ஏற்பதாக இருக்கலாம்.
ஆனால் இந்த வழக்கின்
பாதகமான முடிவால் பழிக்கு ஆளாகப்போவது ஆப்பிள் நிறுவனம் தானே! அதுவும், எப்போதுமே
வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவதே லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட
ஸ்டீவ் ஜாப்ஸின் நிறுவனமாயிற்றே! மின்புத்தக விஷயத்தில் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு
எதிரானது என்ற பழியை ஏற்றுக்கொள்ளுமா? அது ஸ்டீவ் ஜாப்ஸின் ஆத்மாவுக்குக்
கொந்தளிப்பை உண்டுபண்ணாதா? எனவே ஆப்பிள் நிறுவனம் இந்த வழக்கில் முட்டி
மோதிப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
மின்புத்தகங்களின்
விலையை நிர்ணயம் செய்தது ஆப்பிள் இல்லை, ஆறு பதிப்பாளர்களுடனும் இரண்டு வருடங்களாக
விடாமல் செய்த பேச்சுவார்த்தையின் காரணமாக ஏற்பட்ட ஒரு நிலைப்பாடு தான் என்றும்,
எந்த இரண்டு பதிப்பாளரும் ஒன்றாகச் சேர்ந்து தங்களோடு பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டதில்லை என்றும், எனவே இது ஒரு ‘மோசடிக்கூட்டணி’ (“Cartel”) என்பது ஆதாரமற்றது என்றும் ஆப்பிள் வாதாடுகிறது. பதிப்பாளர்களின்
முடிவையே தான் ஏற்கவேண்டி வந்தது என்கிறது.
அதற்கு ஆதாரமாக,
சைமன் & ஷூஸ்டரின் சி.ஈ.ஓ.வான கரோலின் ரீடி, தனது அதிபருக்கு எழுதிய
மின்னஞ்சலைக் காட்டுகிறது. நாமெல்லாம் புத்தக வியாபாரத்தில் பழம் தின்று கொட்டை
போட்டவர்கள், புதிதாக இந்த வியாபாரத்தில் இறங்கப்போகும் ஆப்பிள் நிறுவனம் என்ன
கிழித்துவிடப் போகிறது என்ற இகழ்ச்சி தொனிக்கும் விதமாக ஆப்பிளை “தம்மாத்தூண்டு
ஆசாமி” (‘minion’)என்று இம்மின்னஞ்சல் குறிப்பிடுகிறது. அதனால், இந்த ஆறு
பதிப்பாளர்களைத் தன் கட்டளைக்கு உட்படுத்தும் மரியாதையோ ஆற்றலோ தனக்கு
இருக்கவில்லை என்கிறது ஆப்பிள்.
நீதித்துறை என்ன
முடிவெடுக்கும் என்பது தெரிய இன்னும் சில
மாதங்கள் ஆகலாம். (தினமும் பேப்பர் பார்த்து விடுங்கள். அல்லது www.nytimes.com சொடுக்குங்கள்.)
வழக்கில் ஆப்பிள்
ஜெயித்தால் அது பதிப்பாளர்களுக்கு வெற்றி. மின் புத்தகம் விலை உடனடியாக ஏறும். நஷ்டம்
வாசகர்களுக்கு. தோற்றால், அமேஸானுக்கு வெற்றி. மின் புத்தகம் விலை ஏறாது. ஆனால்
அதை ஈடுகட்ட கெட்டி-அட்டை புத்தகங்கள் விலை ஏறலாம். தொடர்ந்து காகித அட்டை
பிரதிகளும் விலை ஏறும். எப்படிப் பார்த்தாலும் நஷ்டப்படப்போவது வாசகர்கள் தான்!
முதலாளித்துவ அமைப்பில் வேறு என்ன தான் எதிர்பார்க்க முடியும்?
**** சரி, அமெரிக்காவின் ஆறு பெரிய பதிப்பாளர்களைப்பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாகத் தெரிந்து கொள்ளலாமா?
அமெரிக்காவின் “ஆறு பெரிய” (the Big Six) பதிப்பாளர்கள்
1.Simon and Schuster (சைமன் & ஷூஸ்டர்), 2. HarperCollins (ஹார்ப்பர் காலின்ஸ்), 3. Random
House (ரேண்டம் ஹௌஸ்), 4.
Macmillan (மேக்மில்லன்) ,
5.
Penguin Group (பெங்குவின்), 6.
Hachette Book Group (ஹேஷெட்).
இந்த ஆறு பேரில் Simon and Schuster (சைமன் & ஷூஸ்டர்) மற்றும் HarperCollins (ஹார்ப்பர் காலின்ஸ்) ஆகிய இரண்டு தான் அமெரிக்க
கம்பெனிகள். இரண்டு ஜெர்மன் கம்பெனிகள். ஒன்று பிரிட்டிஷ், இன்னொன்று ஃப்ரெஞ்ச்
கம்பெனி.
Simon and Schuster (சைமன் & ஷூஸ்டர்)
1924ல் நியூயார்க்கில் ரிச்சர்டு சைமனும் மேக்ஸ்
ஷூஸ்டரும் தொடங்கிய நிறுவனம் இது. ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ள இந்நிறுவனம்
இப்போது சி.பி.எஸ். கார்ப்பரேஷன் (CBS Corporation) என்ற ஊடகக் கம்பெனியிடம் உள்ளது. ஆண்டுக்கு இரண்டாயிரத்துக்கும்
அதிகமான புத்தகங்களை 35க்கு மேற்பட்ட பதிப்புப் பெயர்களில் (“இம்ப்ரிண்ட்டு”) வெளியிட்டு
வருகிறது.
HarperCollins (ஹார்ப்பர் காலின்ஸ்)
ஹார்ப்பர் என்ற அமெரிக்க பதிப்பாளரும், காலின்ஸ் என்ற
பிரிட்டிஷ் பதிப்பாளரும் இணைந்ததால் உருவான நிறுவனம் இது. ஹார்ப்பர் நிறுவனத்தை
1817ல் ஜேம்ஸ் ஹார்ப்பர், ஜான் ஹார்ப்பர் என்ற சகோதரர்கள் ‘ஹார்ப்பர் அண்டு
பிரதர்ஸ்’ என்ற பெயரில் நியூயார்க்கில் துவக்கினர். 1962ல் ரோ, பீட்டர்சன் அண்டு
கம்பெனி (Row, Peterson & Company) யுடன் இது இணைந்தது. அதன் பிறகு ‘ஹார்ப்பர் அண்டு ரோ’ என்று
அழைக்கப்பட்டது. தன்னோடு மேலும் பல பதிப்புக் கம்பெனிகளை வாங்கிச் சேர்த்தது.
பின்னர் இந்நிறுவனம் ரூப்பர்ட் மர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தால்
வாங்கப்பட்டது. (நம்ம ஊரில் ஸ்டார் டிவி, விஜய் டிவி, அவுட்லுக் வார இதழ் நடத்தும்
உலகளாவிய ஊடகக் கம்பெனி). பின்னர் பிரிட்டிஷ் பதிப்பாளரான வில்லியம் காலின்ஸ்
அண்ட் கம்பெனியை இது வாங்கியது. அதன் பின்னர் தான் ‘ஹார்ப்பர் காலின்ஸ்’ என்னும்
இன்றைய பெயர் ஏற்பட்டது.
Random House (ரேண்டம் ஹௌஸ்),
இது ஒரு ஜெர்மானிய கம்பெனி. ஆனால் அமெரிக்காவில் மிகவும்
பிரபலமான நூல்களை வெளியிட்ட பெருமைக்குரியது. 1927ல் பென்னெட் செர்ஃப், டானல் லாஃபர்
(Bennett Cerf & Donald Klopfer) என்னும் இருவரால் தொடங்கப்பட்டது. 1960ல் இது நாஃப் (Knopf
) என்ற பதிப்பகத்தையும் பேந்தியன் (Pantheon) என்ற பதிப்பகத்தையும் விலைக்கு வாங்கியது. 1998ல் இந்த ரேண்டம்
ஹௌசை பெர்ட்டல்மான் (Bertelsmann)என்ற ஊடக
நிறுவனம் வாங்கியது. இந்நிறுவனத்தில் இப்போது டெல் (Dell), டயல் பிரஸ் (The Dial Press), டபுள்டே (Doubleday), நாஃப் (Knopf), மாடர்ன் லைப்ரரி (Modern
Library), பேந்தியன் (Pantheon), மற்றும் விண்ட்டேஜ் (Vintage) போன்ற பிரசித்தி பெற்ற இம்பிரிண்ட்டுகள் உள்ளன. (பின்குறிப்பு:
இந்தக் கம்பெனி, விரைவில் பெங்குவினுடன் இணையப் போகிறதாம்).
Macmillan (மேக்மில்லன்)
இதை பிரிட்டிஷ் கம்பெனி என்று தான் நாம்
நினைத்துக்கொண்டிருப்போம், ஆனால் இப்போது இது ஒரு ஜெர்மானியக் கம்பெனி யாகும்.
1843ல் டேனியல் மேக்மில்லன், அலெக்ஸாண்டர் மேக்மில்லன் என்ற சகோதரர்களால்
இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. மிகச் சிறந்த ஆசிரியர்களின் நூல்களை வெளியிட்டு
புகழ் பெற்றது. 1995ல் ஜெர்மானிய ஊடகக் கம்பெனியான ஹாஸ்பிரிங்க் (Holtzbrinck
Publishing Group) இதை கைப்பற்றியது. இதனிடம்
இப்போதுள்ள சில இம்பிரிண்ட்ட்டுகள்: ஃபேபர் & ஃபேபர் (Faber
& Faber), ஹென்றி ஹால்ட் (Henry
Holt and Company),
பால்கிரேவ் (Palgrave Macmillan), சென் மார்ட்டின் (St
Martin’s Press), மற்றும் ஃபரார், ஸ்டிராஸ் & கிரூக்ஸ் (Farrar,
Straus and Giroux) ஆகியன.
Penguin Group (பெங்குவின்)
உலகின் மிகப்பெரிய பதிப்பாளர் என்ற புகழுக்குரிய நிறுவனம்
இது.
1838ல் அமெரிக்காவில் ஜான் வைலி (John
Wiley), ஜார்ஜ் புட்னம் (George
Putnam) என்ற இருவரும் சேர்ந்து ‘வைலி
& புட்னம்’ (Wiley and Putnam) என்ற பதிப்பகத்தை நிறுவினர். பத்து வருடங்களுக்குப் பிறகு புட்னம்
விலகித் தனியாகப் பதிப்பிக்க ஆரம்பித்தார். 1965ல் இது பெர்க்லி புக்ஸ் (Berkley
Books) நிறுவனத்தை வாங்கி, ‘புட்னம் & பெர்க்லி’ என்ற புதிய பெயரில் இயங்கியது.
1975ல் இதை ‘மியூசிக் கார்ப்பரேஷன் ஆஃப்
அமெரிக்கா” விலைக்கு வாங்கியது.1985ல் இது மீண்டும் பிரிட்டிஷ் கம்பெனியான ‘பியர்ஸன்’
வசம் விற்கப்பட்டது. லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு பியர்ஸன் நடத்திவந்த பதிப்பு
நிறுவனம் தான் பெங்குவின். எனவே இப்போது பெங்குவின் அமெரிக்கா என்ற பெயரைப்
பெற்றது. அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ‘வைக்கிங்க்’ என்ற இம்பிரிண்ட்டு இதன்
வசம் உள்ளது.
Hachette Book
Group (ஹேஷெட்).
இது ஒரு ஃப்ரெஞ்ச் கம்பெனியாகும். 1837ல் அமெரிக்காவில்
துவக்கப்பட்ட லிட்டில், பிரௌன் & கம்பெனி (Little, Brown
& Company) என்ற பதிப்பாளர், 1996ல் வார்னர் புக்சுடன் (Warner
Books) இணைந்தது. இதன் புதிய பெயர் தான் “டைம்
வார்னர் புக் குரூப்’ (Time Warner Book Group). இந்த நிறுவனத்தை 2006ல் ஹேஷெட் விலைக்கு வாங்கியது. ஹேஷெட்,
ஃபிரான்சில் 1826ல் லூயிஸ் ஹேஷெட் என்பவரால் துவக்கப்பட்ட புத்தகக் கடையாகும்.
**** (c) Copyright: Y.Chellappa
email: chellappay@yahoo.com
அச்சு நூல்கள் என்பன ஆவணங்களாகப் போய்விடும் காலம்வந்துவிட்டது. அதே நேரத்தில் காலத்தின் கட்டாயத்தால் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவேண்டியது வாசகனின் சூழலாக அமைந்துவிடுகிறது. இது தவிர்க்கமுடியாததே.
பதிலளிநீக்கு