செவ்வாய், ஜூன் 25, 2013

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்- 4 முக்கிய வழக்குகள் (2) (updated on 26 June 2013)

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் , வாஷிங்டன் 

இன்று பார்க்கப் போகும்  இரண்டு வழக்குகளும் குடும்ப வாழ்க்கை பற்றிய மாறிவரும் சிந்தனைப்போக்கை ஒட்டியதாகும்.

1.   ஹாலிங்க்ஸ்வொர்த் வெர்ஸஸ் பெர்ரி (Hollingsworth vs Perry)
      2.   யு.எஸ் வெர்ஸஸ் விண்ட்ஸர் (US vs Windsor)

உயிரினங்களின் அடிப்படைப் பண்புகளில் தலையாயதாகக் கருதப்படும் இனப்பெருக்கம் என்ற கொள்கையானது மனிதனைப் பொறுத்தவரையில் தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது எனலாம். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது: (1) சில மனிதர்களால் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை. இதற்கு மருத்துவம் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். (2) சில மனிதர்கள் இனப்பெருக்கம் செய்ய விரும்புவதில்லை. இதற்கும் மருத்துவ மற்றும் பொருளாதாரக் காரணங்கள் இருக்கலாம்.


இந்த இரண்டாம் வகையினர் ஆங்கிலத்தில் LGBT என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

Lesbian – பெண்ணும் பெண்ணும் ஆக சேர்ந்து வாழ்வோர்
Gay – ஆணும் ஆணும் ஆக சேர்ந்து வாழ்வோர்
Bisexual – ஒரு சமயம் ஆண், மறு சமயம் பெண் என சேர்ந்து வாழ்வோர்
Transgender – பால் திரிபு உடையோர் – ‘அரவாணி’கள்

இந்த LGBT யினரின் தொகை உலகெங்கும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவர்களின் வாழ்க்கை முறையை உற்று நோக்கும்போது சமுதாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட பண்புகளிலிருந்து இவர்கள் வெகுதூரம் வந்துவிட்டதாகத் தெரிகிறது. இவர்களை மீட்டு வருவது கடினம் மட்டுமல்ல, தேவையற்ற செயலும் ஆகும் என்பது இன்றைய கருத்தோட்டம்.  இவர்களது விசேஷமான பண்புகளைக் கருத்தில் கொண்டு இவர்களையும் மனித இனத்தின் அசாதாரணமான ஒரு பகுதியாக அங்கீகரித்துவிடுவதே நலம் பயக்கும் என்று மனிதவியலாளர்கள் கருதுகின்றனர். இல்லையெனில் சமுதாயத்தின் மற்ற அங்கங்களால் இவர்கள் சிறுமைப்படுத்தப்படுவது நீடிக்கும்.  இவர்களின் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அது நிரந்தரமான தலைகுனிவை ஏற்படுத்துவதாகவும் அமையும். (எத்தனை அரவாணிகளின் கதைகளைக் கேட்டிருக்கிறோம்! அவர்களின் பெற்றோர்களை நினைத்துப் பாருங்கள்!) அத்தகைய அங்கீகாரத்தின் முதல் படி தான், இவர்கள் தமக்குள் நடத்திக் கொள்ளும் “சேர்ந்து வாழ்தலை” திருமணம் என்ற பழம்பெரும் சமுதாய ஏற்பாட்டுக்குள் கொண்டு வருவதாகும்.
இந்தியா போன்ற சில ஆசிய நாடுகளைத் தவிர உலகின் பல நாடுகளில் இவர்களைச் சூழ்ந்திருக்கும் ஒதுக்கமும் குற்ற உணர்வும் இன்று விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. பிறவியிலேயே உடற்குறையுள்ளவர்களை நாம் வித்தியாசமின்றி ஏற்பதுபோல, LGBT யினரையும் நம்மில் ஒருவராக ஏற்கும் மனப்பாங்கு குறைந்தபட்சம் இளம் தலைமுறையினரிடமாவது பெருகிவருகிறது.  

நாகரிக உலகின் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவில் இத்த்கைய சிந்தனை பல ஆண்டுகளாகவே நிலவுகிறது. ஆனால் அச்சிந்தனைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் எல்லா மானிலங்களிலும் இன்னும் கிடைக்கவில்லை. உதாரணமாக, நியூயார்க், நியூஜெர்சி  மானிலங்களில் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைத் ‘திருமணம்’ என்ற பெயரால் அழைப்பதில்லை. ‘சிவில் யூனியன்’ என்று தான் சட்டம் குறிப்பிடுகிறது. இதனால், இவர்கள் “சேர்ந்து வாழ்வது” குற்றமற்ற ஒன்றாக ஆக்கப்பட்டதே அல்லாது, ‘திருமணம்’ என்ற வார்த்தைக்குரிய மற்ற சட்ட உரிமைகள் இவர்களுக்கு இன்னும் கிட்டவில்லை. போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் எழுந்தவையே இன்று நாம் பார்க்கப்போகும் இரண்டு வழக்குகளும்.

ஹாலிங்க்ஸ்வொர்த் வெர்ஸஸ் பெர்ரி (Hollingsworth vs Perry)

பொதுமக்களைப் பாதிக்கும் முக்கிய விஷயங்களில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மையோர் என்ன தெரிவிக்கிறார்களோ அதையே சட்டமாக்க வேண்டும் என்ற நடைமுறை கலிஃபோர்னியா மானிலத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த மானிலத்தில் தான் ‘ஹாலிவுட்’ என்னும் திரைப்படத் தயாரிப்பு மையம் அமைந்துள்ளது. மாறுபட்ட சிந்தனைகளை ஆதரிப்பது இம்மானிலத்தின் சிறப்பு அம்சமாகும். எனவே இங்கு ஒரே பாலினர் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு குரலும் அதே ஆவேசத்தோடு எழுந்தது. எனவே அதை வாக்கெடுப்புக்கு விட்டனர். (2000வது ஆண்டில்).

“திருமணம் என்ற வார்த்தை, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்வதை மட்டுமே குறிக்கும் என்பதாக கலிஃபோர்னிய மானிலத்தின் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்கிறீர்களா?” என்பது வாக்கு சீட்டில் எழுதப்பட்டு, வாக்காளர்கள் ‘ஆம்’ ‘இல்லை’ என்பதை ‘டிக்’ செய்யவேண்டும் என்று கோரப்பட்டது. (அதற்கு முன் வரை, ‘திருமணம்’ என்ற வார்த்தை வரையறை செய்யப்பட்டிருக்கவில்லை). இதற்கு “தீர்மானம் 22” என்று பெயர்.( Proposition 22).
வாக்காளர்களில் பெரும்பான்மையினர் இத்தீர்மானத்திற்கு ‘ஆம்’ சொன்னதால், இது சட்டமாக ஆனது. அதாவது, திருமணம் என்றால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இருந்தாக வேண்டும். இல்லையேல் அது திருமணம் இல்லை என்று சட்டம் திருத்தப்பட்டது. ஒரே பாலினருக்குத் திருமண உரிமை கிடையாது என்பது உறுதியானது.  

ஆனால் 2008ல் இந்த சட்டத் திருத்தம் செல்லாது என்று அம்மானில சுப்ரீம் கோர்ட் (நம்மூர் மொழியில் “ஹைக்கோர்ட்”)  தீர்ப்பளித்தது. ஒரு ஆணும் ஆணுமோ, அல்லது ஒரு பெண்ணும் பெண்ணுமோ திருமணம் செய்து கொள்வதை இச்சட்டம் தடுப்பதால், ‘சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்’ என்ற அரசியல் சாசனக் கோட்பாட்டுக்கு இது முரணானது என்று நீதிமன்றம் அறிவித்தது. இதையொட்டி, ஒரே பாலினர் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் அவர்களுக்குப் பதிவு சான்றிதழ் வழங்குமாறு அரசுக்கு ஆணையிட்டது. உடனடியாக பதினெட்டாயிரம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிற மானிலங்களில் இருந்தும் இப்படிப்பட்டவர்கள் ஓடோடி வந்து இங்குத் திருமணம் புரிந்துகொண்டனர்.
 
ஆனால் இதை மானில மக்களில் பலர் ஏற்கவில்லை. எனவே அவர்களில் சிலர் அரசிடம் கோரியதன் பேரில், அரசு “மீண்டும் பழையபடி திருமணம் என்ற வார்த்தை, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்வதையே குறிக்கும் என்று கலிஃபோர்னிய மானிலத்தின் சட்டத்தைத் (மீண்டும்) திருத்த வேண்டும்”  என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று வாக்கெடுப்பு நடத்தியது. இதற்கு “தீர்மானம் 8” (( Proposition 8) என்று பெயர்.
நவம்பர் 2008ல் நடந்த இவ்வாக்கெடுப்பில் 52.3 சதம் மக்கள் இதற்கு ‘ஆம்’ போட்டதால், ‘தீர்மானம் 8’ ஏற்றுக்கொள்ளப்பட்டு மானில அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. அதாவது, ஒரே பாலினர் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி செல்லாது என்று மீண்டும் ஏற்பட்டது.   

எதிர்பார்த்தபடியே, ஒரே பாலின தம்பதிகள் இருவர், இதை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். ஆனால் இவ்வழக்கில் கலிஃபோர்னிய அரசு, தான் கலந்துகொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்ததால், நீதிமன்றமானது, ‘தீர்மானம்-8’ கொண்டுவர காரணமாக இருந்தவர்களை அழைத்து நீங்கள் இவ்வழக்கில் இவர்களை எதிர்த்து நிற்க சம்மதமா என்று கேட்டது. அவர்களில் சிலர் சரி என்றதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் முடிவில் ‘தீர்மானம்-8’ அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது ஒரே பாலினருக்கும் திருமண உரிமை உண்டு என்று ஏற்பட்டது.

ஆனால் இது நின்று விடக்கூடிய விஷயமா? ‘இது தவறான முடிவு. இதை மறுஆய்வு செய்யவேண்டும் என்று சிலர் கோர, அது மறுக்கப்பட, இப்போது சுப்ரீம் கோர்ட்டில் அது அப்பீலாக நிற்கிறது.

(‘ஹாலிங்க்ஸ்வொர்த்’ என்பவர் திருமண உரிமை கோரும் ஒரே-பாலினர். ‘பெர்ரி’ என்பவர் இவ்வழக்கில் இவர்களுக்கு எதிராக இருப்பவர்களின் பிரதினிதி).

குறிப்பு: இந்த வழக்கு, ஒரே பாலினர் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை வழங்குவது பற்றியது என்பதை அறிந்தோம். ஆனால், இவ்வாறு திருமணம் புரிந்துகொள்ளும் உரிமையை வழங்கியுள்ள மானிலங்களில் ஒன்றான நியுயார்க்கில் அப்படி திருமணம் புரிந்துகொண்ட ஒரே பாலின தம்பதிக்கு  ஏற்பட்ட சிக்கலை அடுத்த வழக்கில் பார்ப்போம்.

யு.எஸ் வெர்ஸஸ் விண்ட்ஸர் (US vs Windsor)

எட்டி விண்ட்ஸரும் (Edie Windsor) தியா ஸ்பையரும்( Thea Spyer) நியூயார்க்கில் 40 வருடங்களாகச் சேர்ந்து வாழ்ந்து வந்த இரு பெண்கள். இவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது நியூயார்க்கில் அப்போது ஒரே பாலினர் திருமணம் அங்கீகரிக்கப்படாததால் 2007ல் கனடா சென்று அங்கு திருமணம் செய்து கொண்டு அதன் பின் நியூயார்க்கில் தொடர்ந்து வாழலாயினர்.  
2009ல் தியா காலமானார். எனவே அவரது சொத்து எட்டி விண்ட்ஸருக்கு வந்தது. இதற்கு மரண வரி (estate tax) கட்ட வேண்டுமென்று மத்திய அரசு கேட்டது.
(இந்தியாவிலும் இந்த எஸ்டேட் வரி முன்பு இருந்தது. பி.சிதம்பரம் நிதி அமைச்சராக வந்த பிறகு தான் இது நீக்கப்பட்டது. சொத்துக்களை வாரிசுகளுக்கு விட்டு செல்லும் பணக்காரர்கள், இறந்து போனால், பிணத்தை எடுக்கும் முன்பு, வாரிசுகள்  இந்த வரியைச் செலுத்தியாக  வேண்டுமாம். உதாரணமாக ஒருவருக்கு ஏதும் விளையாத 100 ஏக்கர் புஞ்சை நிலம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இன்னிலத்தால் பைசா வருமானம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் இவர் இறந்து போனால், ஏக்கரின் மதிப்பு ஒரு லட்சம் என்று கணக்கிட்டு மொத்த மதிப்பான 100 லட்சத்தின் மீது சுமார் 5 சதம் எஸ்டேட் வரி கட்டியாக வேண்டும். அதாவது 5 லட்ச ரூபாய். பிணத்தை வைத்துக்கொண்டு 5 லட்சம் இவர் புரட்டியாக வேண்டும்! எப்படிப்பட்ட இக்கட்டான நிலை பாருங்கள். தமிழ்நாட்டில் ஒரு பிரபல தொழிலதிபர் இறந்தபோது அவருடைய வாரிசுக்கு இதே நிலை ஏற்பட்டதாம். இதனால் ‘மரண வரி’ என்றே தமிழ் நாட்டில் பத்திரிகைகள் இதைக் குறிப்பிடுவர்).

அமெரிக்காவில் மரண வரி விதிக்கப்படுவது இன்றுவரை அமுலில் உள்ளது. ஆனால் ஒரு விதி விலக்கு உண்டு. அதாவது, கணவன் இறந்தபின் அவர் சொத்து மனைவிக்கோ அல்லது மனைவி இறந்தபின் அவர் சொத்து கணவருக்கோ போகும்போது மரண வரி செலுத்த வேண்டியதில்லை. தன் துணைவியான (வேறு எப்படி சொல்வது?) தியா இறந்த பின் அவளது சொத்துக்கள் அவளைச் சட்டபூர்வமாக மணந்துகொண்ட துணைவியான தனக்கு வருவதில் மரணவரி கட்ட வேண்டிய நியாயம் என்ன, நாங்கள் தம்பதிகள் அல்லவா என்று கேட்டார் விண்ட்ஸர்.

அப்போது தான் வரித் துறை சொன்னது: “மத்திய அரசின் Defense of Marriage Act (DOMA) சட்டப்படி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்துகொள்வது தான் திருமணம் என்று அங்கீகரிக்கப்படும். நீங்கள் இருவருமே பெண்களானதால் உங்கள் கூடுதலை ‘திருமணம்’ என்று அமெரிக்க அரசின் விதிகள் ஏற்காது. எனவே, இறந்துபோன  தியா விடமிருந்து நீங்கள் பெறும் சொத்துக்கு வரி விலக்கு வழங்க முடியாது”.

நியுயார்க் மானிலத்தைப் பொறுத்தவரை இவர்களது திருமணம் சட்டபூர்வமானதே. ஆனால் அது மானிலத்தின் உரிமையெல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும். வேறு மானிலத்திற்குக் குடி போனால் அங்கு இந்தத் திருமணம் செல்லாமல் போகலாம். அதனால் இம்மாதிரி வரிப் பிரச்சினைகள் மட்டுமின்றி வேறு எதிர்பாராத பிரச்சினைகளும் வரலாம். எல்லா மானிலங்களும் ஒரே பாலினர் திருமணத்தை ஒப்புக்கொள்ளும் காலம் வர இன்னும் பல வருடங்கள் ஆகலாம். அது வரை இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொள்வதா? என்று விண்ட்ஸர் மனத்தில் கேள்வி எழுந்தது. அதற்கான விடையாக அவர், அமெரிக்க மத்திய அரசின் DOMA வை எதிர்த்து வழக்கு தொடுத்தார். இச் சட்டம், அரசியல் சாசனத்தால் தமக்கு வழங்கப்பட்டுள்ள ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டுக்கு விரோதமானது  என்று அவர் வாதாடுகிறார்.
****
மேற்படி இரண்டு வழக்குகளுமே ஒரே கேள்வியைப் பிரதிபலிப்பன. அதாவது, ஒரே பாலினருக்கு அனுமதிக்கப்படும் ‘சிவில் யூனியன்’ என்னும் திருமணமுறையில் தம்பதியாகும் இருவருக்கு, வழக்கமான ஆண்-பெண் திருமணமுறையில் தம்பதியாகும் இருவருக்குள்ள அதே உரிமைகள் உண்டா இல்லையா என்ற கேள்வி.

‘உண்டு’ என்று சுப்ரீம் கோர்ட் சொல்லுமானால் அது LGBT யினரின் கரங்களை வலுப்படுத்தும். இதுவரை ஒரே பாலினர் திருமணத்தை அங்கீகரிக்காத மானிலங்கள் இனி அங்கீகரித்தாக வேண்டும். ஏனெனில் அவ்வாறு அங்கீகரிக்காவிடினும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் அத் தம்பதிகளுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. அதே சமயம் இவ்விஷயத்தில் தீவிர எதிர்ப்பு காட்டும் யூதர் மற்றும்  கத்தோலிக்கர்களின் அமைப்புக்கள் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் இறுக்கமாக்கிக் கொள்ளும். அதன் அரசியல் விளைவுகள் அடுத்து வரும் தேர்தலில் (ஒபாமாவின்) ஜனநாயகக் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இன்னும் சில நாட்களில் முடிவு தெரிந்து விடும். பொறுத்திருப்போம்.
*******
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

======================================================================

Updated on 26th June 2013 (இதோ தீர்ப்பு!)
யு.எஸ் வெர்ஸஸ் விண்ட்ஸர் (US vs Windsor)

இந்த வழக்கில் “ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்துகொள்வது தான் திருமணம் என்று கூறும் அமெரிக்க மத்திய அரசின் Defense of Marriage Act (DOMA) என்ற சட்டம் செல்லாது” என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் விண்ட்ஸருக்கு அவர் கோரிய வரிவிலக்கு கிடைக்கும். அதுமட்டுமன்றி, நியூயார்க் டைம்ஸ் தெரிவிப்பதாவது: (1) ‘சிவில் யூனியன்’ என்பதும் ‘திருமணம்’ என்பதும் ஒரே மாதிரியான உரிமைகளையே தம்பதிகளுக்கு வழங்கும் என்று ஆகிறது. (2)இதனால் ‘திருமணம்’ என்ற சொல்லுக்கான வரையறையை இனிமேல் தான் பாராளுமன்றம் புதிதாக நிர்ணயிக்கவேண்டி யிருக்கும். (3)ஒரே பாலினரின் திருமணத்தை இதுவரை  அங்கீகரிக்க சட்டம் இயற்றாத மானிலங்கள் இனி அதற்கான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்.

ஹாலிங்க்ஸ்வொர்த் வெர்ஸஸ் பெர்ரி (Hollingsworth vs Perry)

இந்த வழக்கில், வாதிகளுக்கு வழக்கு தொடுக்கும் தகுதி (standing)கிடையாது என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இதன் பயனாக, ஒரே பாலினர் திருமணம் செல்லும் என்று உள்ளூர் கோர்ட் தீர்மானம்-8ஐ எதிர்த்து வழங்கிய உத்தரவானது உயிர்பெறுகிறது. அதாவது கலிஃபோர்னியா மானிலத்தில் எப்போதும் போல் ஒரே பாலினர் திருமணம் இனி தொடர்ந்து சட்டபூர்வமானதாக இருக்கும்.

மொத்தத்தில்

மேற்படி இரண்டு வழக்குகளிலும் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பானது, அமெரிக்க சமுதாயத்தில் ‘திருமணம்’ என்ற கோட்பாட்டை  இனி பின்வாங்கமுடியாத அளவுக்குத் தூக்கி நிறுத்தியுள்ளது. உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ‘ஒரே பாலினர் திருமணங்கள்’  இனி சலசலப்பை ஏற்படுத்தாது. இதன் உடனடி பாதிப்பு மேற்கத்திய நாடுகளிலும், காலப்போக்கில் உலகம் முழுதிலும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
*****
 

2 கருத்துகள்:

  1. மனிதனின் தேவைகளும் ஆசைகளின் நிறங்களும் மாற மாற எவ்வாறெல்லாம் புதுப் புது பிரச்சினைகள், வழக்குகள் அய்யா. நன்றி

    பதிலளிநீக்கு
  2. வழக்குகளை நுணுகிஆராய்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு