வெள்ளி, மே 03, 2013

தலாய் லாமா - புதிய நூல்கள் 2

இன்று ஜான்ஸன் நூலகத்திற்கு (ஹேக்கன்ஸாக், நியுஜெர்சி) சென்ற பொழுது திபெத்தின் முன்னாள் அதிபரும், புத்தமதத் தலைவருமான மதிப்பிற்குரிய தலாய் லாமா அவர்களைப் பற்றிய இரண்டு புதிய நூல்கள் படிக்கக் கிடைத்தன.

முதலாவது நூல் - “கருணையென்னும் ஞானம்”
The Wisdom of Compassionby  Victor Chan - 2012 River Head Books
இந்த நூல், தலாய் லாமாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதாகும். அறிஞர்களுடனும், மாணவர்களுடனும் அமெரிக்க, இந்தியா, கனடா, அயர்லாந்து முதலிய நாடுகளில் அவர் பங்குபெற்ற உரையாடல்களின் சிறப்பு அம்சங்கள் தரப்பட்டுள்ளன.

மதம் என்ற ஒன்றை அவர் தனது உரைகளில் எங்குமே தொடவில்லை. ஞானத்தின் குறிக்கோள், கருணையே என்கிறார். எவனொருவன் தன்னிலும் கீழானவனுக்கு இரக்கம் காட்டுகிறானோ அவனே மனிதன். அவனே இறைமையைப் புரிந்துகொண்டவன் என்கிறார். இதயத்தைத் திறந்து வைத்தால் இன்பமும் திருப்தியும் கொண்ட வாழ்க்கையைப் பெறுவது அனைவருக்கும் இயலும் என்கிறார்.

நூலாசிரியர் விக்டர் ஷான், சீன நாட்டினர். பௌத்தர். தலாய் லாமாவுடன் தொடர்ந்து பயணம் செய்து தகவ்லகளைத் திரட்டி இந்நூலை எழுதியிருக்கிறார்.

நூலில் மூன்று பிரிவுகள் உள்ளன.

(1) இல்லாமையை வெல்லுதல்
இல்லாமை என்றால் ‘வறுமை’ என்று தான் சாதாரணமாகப் புரிந்து கொள்கிறோம். வறுமையை வெல்லுதல், மனித வாழ்க்கையின் அடித்தளமான கருத்து. ஆனால், ஒருவனுக்கு  உடல் உறுப்பு இல்லாமல் போவதாக வைத்துக்கொள்வோம், அதுவும் இல்லாமை தானே! அதை எப்படி வெல்லுவது?

அயர்லாந்தில் பல்லாண்டுகளாக இரு பிரிவு கிறிஸ்தவர்களிடையே ஆயுதம் தாங்கிய போராட்டம் நடந்து வருகிறது. அந்தப் போரில் தனது ஒரு கண் பார்வையை இழந்துவிட்டான், பெல்ஃபாஸ்ட் நகரத்து ரிச்சர்டு மூர் என்ற இளைஞன்.

காவலர்களின் ரப்பர் குண்டு, அவனது (வலது) கண்ணின் அடிப்பகுதியை நோக்கிப் பாய்ந்தது. அதனால் கண்பார்வை போய்விட்டது. இது 2000வது ஆண்டில். அவனை 2011ல் சந்திக்கிறார், தலாய் லாமா. (அவருக்கும் இதே போலத்தான் ஒரு கண் பார்வை போயிற்றாம்). ‘நீ எப்படி இருக்கிறாய்’ என்கிறார். ‘மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்கிறான். முதலில் துன்பமாகத்தான் இருந்தது. தன்னைச் சுட்ட அதிகாரி மீது அடக்கமுடியாத ஆத்திரம் மண்டி நின்றது. அப்போதெல்லாம் அவனுக்கு நிம்மதி என்பதே இல்லையாம்.

‘பிறகு எப்படி உன்னிடம் மகிழ்ச்சி வந்து சேர்ந்தது?’ என்ற கேள்விக்கு, ‘நான் அவனை மன்னித்து விட்டேன். அவன் மீதிருந்த கோபத்தை என் மனதிலிருந்து அகற்றி விட்டேன். அப்போது முதல் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றானாம்.

இந்த நிகழ்ச்சியைச் சொல்லும் தலாய் லாமா, உணர்ச்சியானது கட்டுமீறிப்போகும் பொழுது, மூளையின் முடிவெடுக்கும் பகுதி செயல்படாமல் தவறுகிறது. மற்றவர் கருத்துக்கு மதிப்பளிப்பதன் மூலமும், புரிந்து கொள்வதன் மூலமும் பலாத்காரத்தைக் குறைக்கலாம். பேசித் கொள்வதின் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கிறார்.

(2) இதயத்தைப் பயிற்றுவித்தல்
தலாய் லாமா, ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சியாக இருக்க உரிமை உண்டு என்கிறார். மகிழ்ச்சிக்கான பாதை, கருணையால் தான் எழுப்பப்படும் என்கிறார். உன்னுடைய எதிரிகளும் துன்பத்தைக்கண்டு வருந்துபவர்களே, மகிழ்ச்சியை வேண்டுபவர்களே. அவர்களுக்கும் உன்னைப்போலவே துன்பம் தவிர்க்கவும் மகிழ்ந்து வாழவும் உரிமை உண்டு. ஆக, நீ நல்வாழ்வு வாழ வேண்டுமென்றால், (உன் எதிரிகள் உள்பட) எல்லாருமே நல்வாழ்வு வாழ்ந்து தான் ஆக வேண்டும். அது தான் உண்மையான கருணை என்கிறார்.

இந்த இடத்தில், தலாய் லாமாவின் உரைகளைக்கேட்டுத் தன்னை அறியாமலேயே  மனம் மாறிய ஒரு அறிஞரைப் பற்றிக் கூறுகிறார், நூலாசிரியர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலபேர், போலீஸ் விசாரணையின்போது எப்படித்தான் அடித்தாலும் உதைத்தாலும் உண்மையைக் கூற முன்வர மாட்டார்கள். அவர்களைப் ‘பாலிகிராஃப்’ என்னும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவதை நாம் அறிவோம். பால் ஏக்மன் (Paul Ekman)   என்பவர் அத்தகைய சோதனைகளை நடத்தும் அறிஞர். கடவுள், மதம் போன்ற கொள்கைகள் அவருக்கில்லை.   

அவருக்கு வயது எழுபது. அவருடைய மகளுக்கு வயது இருபது. அவள், தலாய் லாமாவின் உரையைக் கேட்க விருப்பம் கொண்டவள். அதனால் ஏக்மனும் வந்திருந்தார்.

“நாம் யாரிடம் அன்பாக இருக்கிறோமோ, அவர்கள் மீது தான் நமக்கு அதிகக் கோபம் வருகிறது. என்ன காரணம் என்று விளக்குவீர்களா?” என்று ஏக்மன் கேட்கிறார்.

இது அருமையான கேள்வியாகப் படுகிறது தலாய் லாமாவுக்கு.

“நமக்கு நெருங்கியவர்களிடம் நாம் அதிகமான எதிர்பார்ப்பை உண்டாக்கிக்கொண்டு விடுகிறோம். இல்லாத குணாதிசயங்கள் அவர்களிடம் இருப்பதாகவும், (மற்றவர்களை விட) அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கலாமென்றும்  நமக்குத் தோன்றிவிடுகிறது. சரியான வழி என்னவென்றால், அவர்களைத் தத்தம் குற்றம் குறைகளோடு ஏற்றுக்கொள்வது தான்.  இதனால் ஏமாற்றங்கள் குறையும். கோபமும் குறையும்” என்று பதில் கூறுகிறார் தலாய் லாமா.

மகளுக்கு இந்த பதில் திருப்தியாக இருந்தது. ஆனால் ஏக்மனுக்கு ? இது ரொம்ப சாதாரணமான விளக்கமாகப் பட்டது.

இதே போன்ற தலாய் லாமாவின் வேறொரு நிகழ்ச்சிக்கு வந்த சிலர், அவரது  பேச்சில் புதுமை இல்லை என்றும், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் கூறி, செலுத்திய கட்டணத்தைத் திரும்பக் கேட்டார்களாம். (அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில், சங்கராச்சாரியாரே பேசினாலும் நுழைவுக் கட்டணம் செலுத்தித்தான் கேட்க முடியும். கேட்பவர்களும் சரி, பேசுகிறவர்களும் சரி, பொறுப்புணர்ச்சியோடு செயல் படுவதற்கான அஸ்திவாரம் அது).

ஆனால் ஏக்மன் பரவாயில்லை என்று தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்தார். ஏனென்றால், மகள் விரும்பி இருந்தாளே!

ஒரு கட்டத்தில் தனக்குள் ஒரு மாற்றம் நிகழ்வதை அவர் உணர்ந்தார். தானும், மகளும், தலாய்லாமாவும் விலக்கமுடியாததொரு கயிற்றினால் ஒன்றாகக் கட்டுண்ட மாதிரி இருந்ததாம். நிகழ்ச்சி முடிந்தபிறகு, தன்னிடமிருந்த ஆத்திர உணர்வு பெரிதும் குறைந்துபோய்விட்டதாக உணர்ந்தாராம்.    

அவரது தகப்பனார் ஒரு கறார் பேர்வழி. சொன்னபடி நடக்கவில்லை யென்றால் அடி, உதை தான். தனது 18 வயதில், அப்படி ஒரு தடவை தந்தையிடம் அடி வாங்கியபோது, ஏக்மனின் கோபம் எல்லை கடந்துவிட்டது. ‘இனி ஒரு தடவை என்மீது கை வைத்தால் திருப்பி அடித்தே விடுவேன், தகப்பன் என்றும் பார்க்கமாட்டேன்’ என்று கோபமாகக் கத்தினார். தந்தைக்கு உண்மையிலேயே பயம் வந்துவிட்டது. போலீசுக்குப் போன் செய்தார். அன்று வீட்டை விட்டுப் போனவர் தான், பிறகு தகப்பனாரைச் சந்திக்கவேயில்லை. 70 வயதாகியும் அந்த ஆத்திர நெருப்பு அணையவேயில்லை அவர் நெஞ்சில். இன்று, அது  தணிந்திருந்ததைக் கண்டாராம்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு புதுடில்லி செல்கிறார். (மனைவியுடன் இந்தியாவில் விடுமுறைக்காக). ‘உங்களிடம் ஏதோ ஒரு அமைதி வந்திருப்பதாகவும், நீங்கள் புது மனிதராகிவிட்டது போலும் உணர்கிறேனே’ சரியா’ என்றாளாம் மனைவி. ‘முன்பெல்லாம் ஆண்டுக்கு நூறு முறையாவது ஆத்திரம் வரும். இப்போது நான்கைந்து முறை தான் வருகிறது. இதன் காரணம் நிச்சயமாக தலாய் லாமாவின் சொற்பொழிவு தான்’ என்கிறார், ஏக்மன்.

(3) கருணையைச் செயல்படுத்துதல்
இபே (eBay) என்னும் இணையச் சந்தையின் நிறுவனரான பியர் ஒமிதியார் (Pierre Omidyar), தமது தனி விமானத்தில் தலாய் லாமா அவர்களை அழைத்துக் கொண்டு புதுடில்லியில் ஒரு நிகழ்ச்சிக்காக வருகிறார். விமானத்திலிருந்து இறங்கிக் காரில் வரும்பொழுது, ஒரு சிக்னலில் ஒரு சிறுமி ஒரு குவளையைக் காட்டி கார்கள்தோறும் யாசிக்கிறாள்.  அவளைக் கண்டுகொள்வார் இல்லை. அவளுக்கு ஏதாவது காசு தர தலாய் லாமாவுக்கு விருப்பம். ஆனால் அவர் தன்வசம் பணம் வைத்திருப்பதில்லையே! ஒமிதியாரைக் கேட்டு சில ரூபாய்களை அவளுடைய குவளையில் போடுகிறார். அது மட்டுமல்ல, விமானத்தில் தான் எடுத்துக்கொண்ட சாக்லெட்டுகள் அவருக்கு நினைவுக்கு வருகிறது. அதையும் கொடுக்கிறார். காசின் மதிப்பறியாத சிறுமி, சாக்லெட்டின் வரவால் பூரிக்கிறாள். அதே நிமிடம், இன்னொரு பெண்குழந்தையைத் தோளில் சுமந்தபடி இவளின் தாய் ஓடோடி வருகிறாள். நெஞ்சார நன்றி சொல்கிறாள். கார் புறப்படுகிறது.

காசு கொடுப்பதும் கருணை தான், சாக்லெட் கொடுப்பதும் கருணை தான். இல்லாதவனுக்கு எது கொடுத்தாலும் அது கருணை தான். கருணையை நம்மால் எப்போதும் செயல்படுத்த முடியும். அதன் முதற்படி தான் ‘இதயத்தைப் பயிற்றுவித்தல்’ என்கிறார் தலாய் லாமா.

கருணையைச் செயல்படுத்திய ஒரு சிறுமியை நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

சீனாவில் இரண்டு பெண் குழந்தைகள். ஒன்று விட்ட சகோதரிகள். டிங்க் (Ting), வாங்க் (Wang) என்று. டிங்க்  சின்னவள், வாங்க் பெரியவள். ஆனால், சின்னவள் தான் அம்மா வெளியில் போனால் பெரியவளைக்  கவனத்துடன் பார்த்துக்  கொள்வாளாம். அவ்வளவு பொறுப்புணர்ச்சி உடையவள்.

பெரியவளான வாங்கின் பெற்றோர் கனடாவில் குடியேறி, அவளுக்கு நல்ல வாழ்வு அமைகிறது. நல்ல பள்ளியில் படிக்கிறாள். சின்னவளான டிங்கோ, சீனாவில் வறுமையில் வாடுகிறாள். ஆனாலும், வயல் வேலைகள் செய்கிறாள். தினமும் சாலையோரம் அமர்ந்து குழந்தைகளுக்கு ஐஸ் விற்கிறாள். கோடை விடுமுறைக்காக சீனா வரும் வாங்க், டிங்க்கைப் பார்த்ததும் அடையாளம் தெரியாமல் திகைக்கிறாள். வெயிலில் தினமும் ஐஸ் விற்றால் மேனி கறுத்துப் போகாமல் என்ன செய்யும்? நானும் உன்னுடன் ஐஸ் விற்கிறேன் என்று இவளும் உதவிக்குப் போகிறாள். ஒரு நாள் முழுதும் விற்றதில் 50 செண்ட்டு தான் கிடைக்கிறது. (அதாவது அரை டாலர்). வாங்க்கினால் தாக்குப் பிடிக்க முடியாமல் உடம்பு களைத்துப் போகிறது. டிங்கோ மகிழ்ச்சியுடன் இருக்கிறாள். இத்துடன் எழுபது டாலர் சேர்த்துவிட்டாளாம், தனக்கு வெயிலுக்கு ஒரு குடையும், தங்கைக்கு பள்ளிக்கூடத்திற்குக் கட்டுவதற்கும் இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தால் போதும் என்கிறாள்.

அப்போது அவர்கள் வசிக்கும் தெருவில் ஒரு வயதான பெண்மணிக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு போகிறார்கள். ஏழைகளிடம் தயாராகப்  பணம் ஏது? எல்லாரிடமும் கேட்கிறார்கள். ஒரு நிமிடமும் தாமதிக்காமல் டிங்க் ஓடிப்போய் தன்னுடைய உண்டியலிலிருந்து தனது  மொத்த சேமிப்பான 70 டாலரையும் கொடுக்கிறாளாம். ‘பள்ளிக்கூடம் திறப்பதற்குள் சம்பாதித்துக் கொண்டால் போயிற்று’  என்று எந்த வருத்தமும் இன்றி வாங்கிடம் சொன்னாளாம் அந்தச் சிறுமி!

கருணை நெஞ்சுக்குள் இருந்தால் போதாது, அதைச் செயல்படுத்தவும் வேண்டும் என்கிறார், தலாய் லாமா.
***

இரண்டாவது நூல்

“இவ்வுலகத்திலிருந்து அவ்வுலகத்திற்கு” (From Here to Enlightenment)    என்ற நூல். தலாய் லாமா அவர்களே எழுதியது.

ஸாங்(க்)க(ப்)பா என்பவரால் 1402ல் எழுதப்பட்ட புத்தமதத்தின் கொள்கைகளை எடுத்துரைக்கும்  ‘TREATISE’ என்ற நூலுக்கு தலாய் லாமா வழங்கிய விளக்கவுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது.  கை நியூலாண்டு (Guy Newland) என்னும் அமெரிக்கப் பேராசிரியர் இதை மொழிபெயர்த்திருக்கிறார்.

(‘From Here to Enlightenment’- Introduction to Tsong-Kha-Pa’s  TREATISE   by Dalai Lama : Translated by Guy Newland-    Published by Snow Lion, Boston- 2012).

நூலின் முன்னுரையைப் படித்தபோது, ‘TREATISE’ என்ற நூலானது, புத்த மதத்தினரின் புனித நூலாகக் கருதப்படுவது தெரிந்தது. (நமது பகவத்கீதை மாதிரி). தமது சொற்பொழிவுகளில் இந்த நூலிலிருந்து தான் எடுத்துக்காட்டுகள் தருவதாக தலாய் லாமா கூறுகிறார். ஸாங்(க்)க(ப்)பா  அந்நாளில் புகழ்பெற்றிருந்த நாலந்தா பல்கலைக்கழகத்தில் பயின்றவராம்.

மா-சே-துங் பதவிக்கு வந்த உடன், 1956ல் திபெத் நாட்டின் மீது சீனா படையெடுத்தது. பௌத்த மதத்தின் சின்னமாக விளங்கிய அம் மலை நாட்டைச் சீனப்படைகள் சின்னாபின்னமாக்கின. ஆறாயிரம் பௌத்த மடங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கில் துறவிகளும் இளைஞர்களும் கொல்லப்பட்டனர். விசாரணையின்றிச்  சிறையில் இன்னும் எவ்வளவோ பேர் வாடுகின்றனர். அந்நாட்டின் தலைவராகவும், புத்தமதத்தின் உயர்ந்த குருவாகவும் விளங்கிய தலாய்லாமா, உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. அந்த 1959 மார்ச் மாதத்தின் ஒரு குளிர்நாளில் தமது நாட்டைவிட்டு வெளியேறும்போது தம்மால் எடுத்துச் செல்ல முடிந்த சொந்தப்பொருட்கள் சிலவற்றுள் மதிப்பு வாய்ந்தது இந்த நூலே என்கிறார், அவர். பொ(ட்)டாலா (Potala)  மடாலயத்தில் இளம்துறவியாக தாம்  சேர்ந்த நாட்களிலிருந்து இந்த நூலைத்தான் தமது வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறாராம்  தலாய் லாமா.

(இந்தியா வந்தவர், பிரதமர் ஜவகர்லால் நேருவைச் சந்தித்துத் தனக்கு அரசியல் ரீதியாக அடைக்கலம் தரும்படி வேண்டினார். ஆனால், சீனாவுடன் நல்லுறவு நாடிய நேரு, அந்த வேண்டுகோளைப் புறக்கணித்தார். தலாய் லாமா நாடற்றவராக மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்தார். இப்போது அமெரிக்காவில் வாழ்கிறார். இந்தியாவுடன் நெருங்கி வருவதுபோல் போக்கு காட்டிய சீனா, 1964ல் நேரு சற்றும் எதிர்பார்த்திராத தருணத்தில் நம் மீது படையெடுத்தது. பெருத்த சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்ட மாபெரும் தோல்வியை இந்தியா சந்தித்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலே உயிர் துறந்தார் நேரு. அவருக்குப் பிறகு இந்திரா காந்தியும் பின்னால் வந்த பிரதமர்களும் இன்றுவரை தலாய்லாமாவுக்கு அடைக்கலம் வழங்கத் துணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

The Great Treatise on the Stages of the Path to Enlightenment
என்பது நூலின் முழுப்பெயர். Tsong-kha-pa’sLam Rim Chen Mo” என்றும் இன்னொரு பெயர் உண்டு.  மஹாநிர்வாணம் என்னும் புத்தமதத்தின் உயரிய கோட்பாட்டை அடையும் வழிகளைக் குறித்த நூல் இது. திபெத்தியர்கள் பின்பற்றிய நெறியில் எழுதப்பட்டது.

திபெத்திய மொழியில் எழுதப்பட்ட இந்நூல், பல வருட முயற்சிக்குப்பிறகு, 2008ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதை அறிவிக்கும் விதமாக, அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள பெத்லெஹேமில் அமைந்திருக்கும் லீஹை(Lehigh) பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து ஆறு நாட்கள் உரையாற்றினார், தலாய் லாமா.

மேலைநாட்டினருக்கு தலாய்லாமா ஆற்றிய மிக நீண்ட உரை அது தான். அந்த உரையின் தொகுப்பே இந்நூல். இதன்பிறகு தான் திபெத்தியர்கள் வழியான புத்தமதம் பற்றிய முழுப் பார்வை மேலைநாட்டினருக்குக் கிடைக்கலானது என்று அமெரிக்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இனி ஸாங்(க்)க(ப்)பா-வைப் பற்றி அறிவோமா?

1357ல் பிறந்தவர். மூன்று வயதிலேயே குழந்தைத் துறவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஏழாவது வயதில் அடுத்த கட்டத் துறவியாக உயர்ந்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர், லோப்ஸங் த்ராக்பா (Lobsang Drakpa -blo bzang grags pa) ஆகும். அந்த வயதிலேயே சிறந்த ஸித்திகளைப் பெற்றிருந்தாராம். பௌத்தநூல்களில் முக்கியமான ‘மஞ்சுஸ்ரீ நாம சம்ஹிதி’ யை ஒப்பிக்கும் ஆற்றலும் இருந்ததாம். தனது 24வது வயதில் ‘முழு’த் துறவியானாராம். பௌத்த மதத்தின் அனைத்து நூல்களையும் அவர் த்ரிகுங்க் மடாலயத்தில் (Drikung Monastery) கற்றுத் தெளிந்தாராம். அ(த்)திஷா அன்ற தெய்வத்தின் அவதாரமாக ஸாங்(க்)க(ப்)பா அறியப்படுவதாகச் சொல்கிறார்கள். மங்கோலியாவில் பா ஸாங்க்கோ (Bogd Zonkhov) என்ற பெயரில் இவரைத் தெய்வமாக வழிபடுகிறார்கள்.


பல்வேறு சூட்சும சக்திகளும் அவருக்குக் கிட்டினவாம். மத விஷயங்களில் சந்தேகம் வரும்போது மஞ்சுஸ்ரீ என்ற போதிசத்துவ  வடிவத்துடன் அவர் பேசித் தெளிவு பெறுவாராம். கௌதம புத்தரே இதுபற்றிக் கூறும்போது, ‘நானும் மறைந்து, எனது போதனைகளும் இல்லாமல் போகும் நாளில், பனிகொட்டும் ஓர் நாட்டில் நீ மானிடனாகப் பிறந்து, மஞ்சுஸ்ரீ புத்தனாக உயர்ந்து, எனது கோட்பாடுகளைக் காப்பதற்கான திருநாட்டை உருவாக்குவாய்’ என்று  தீர்க்கதரிசனம் செய்தாராம். அதன்படியே, திபெத்தில் காண்டென் (Ganden) என்ற இடத்தில் புதியதொரு மடாலயத்தை 1409ல் அமைத்து, ஆண்டுதோறும் ‘மொன்லாம்’ என்ற வழிபாட்டு விழாவை ஏற்படுத்தினார். இந்தப் பீடத்தில் பயின்றவர்களுக்கு ‘கெலூக்பா’க்கள் (Gelugpas)  என்று பெயர். நமது தலாய் லாமாவும் இங்கு தான் துறவு பயின்றவர்.

1419ல், தனது 62வது வயதில் ஸாங்(க்)க(ப்)பா உயிர் துறந்தார். அவரது உரைகள் 18 தொகுதிகளாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் இந்த  Lam Rim Chen Mo” என்று அழைக்கப்படும்The Great Treatise' ஆகும். இவருடைய பௌத்தக் கொள்கைகள் ‘வஜ்ராயனா’ என்று பொதுவாகவும், ‘மத்யாத்மகா’ என்று குறிப்பாகவும் அழைக்கப்படுகின்றன. (இந்தியாவில் பின்பற்றப்படும் பௌத்த வழிமுறைகள், ‘புத்தபாலி(த்)தா’ என்றும், ‘சந்திரகீர்த்தி’ என்றும் அழைக்கப்படும்). (பின்னாளில், திபெத்திலேயே பௌத்த வழிமுறைகள் பெரும் மாறுதலுக்கு ஆளானதாகவும்,  ஸாங்(க்)க(ப்)பா-வின் மத்யாத்மகா முறையானது சிறுபான்மையினருடைய வழிமுறைதான் என்றும், தலாய் லாமா போன்றவர்களின் செல்வாக்கினால் தான், ஸாங்(க்)க(ப்)பா-வின் முறைகள்  மேலை நாடுகளில் பௌத்தமாகக் கருதப்படுகிறது என்றும் ஒரு விமர்சனம் உண்டு.

ஆழ்ந்த மத நூல் என்பதால் உடனடியாக என்னால் அதிகம் படிக்க முடியவில்லை. படித்தவரையில், தெளிவாகப் புரிந்தது. மொழிபெயர்ப்பும் மிக எளிமையாக உள்ளது. புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களும், கல்லூரிகளும் இந்த நூலைத் தவறாமல் பெற வேண்டும்.
****
குறிப்பு:
கர்நாடகாவில், உடுப்பி அருகில் தர்மஸ்தலா என்ற ஊர் உங்களுக்குத் தெரிந்திருக்கும். (மஞ்சுனாதஸ்வாமி கோவிலால் பிரபலமானது). அதன் அருகில் பைலகுப்பே (Bailakuppe) என்ற ஊரில், திபெத்திய அகதிகளுக்காக ஒரு குடியிருப்பு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. ராஜபோகமான குடியிருப்பு இது. அடுத்த முறை உடுப்பி – கொல்லூர்- தர்மஸ்தலா - சுப்ரமண்யா  போகும்போது பார்க்க மறவாதீர்கள். (நமது தொப்புள்கொடி சகோதரர்களாம் இலங்கை அகதிகளுக்கு இதில் நூறில் ஒரு பங்கு கூட வழங்குவதில்லையே, ஏன்?) 

பைலகுப்பேயில் உள்ள திபெத்திய அகதிகளிடமிருந்து திபெத், தலாய்லாமா, சீனப் படையெடுப்பு பற்றிப் பல தகவல்களைப் பெறலாம். கீழ்க்கண்ட வலைதளத்தைத் தொடுங்கள்:
http://tibetoralhistory.org/

© Y.Chellappa
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

3 கருத்துகள்:

 1. இரண்டு நூல்கள் பற்றிய விளக்கங்களுக்கு நன்றி...

  புதிய வலைத்தளத்திற்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 2. படித்தே ஆக வேண்டும் என்ற உணர்வினை ஏற்படுத்தி உள்ளீர்கள். நன்றி நூல்களைப் பெற முயற்சிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. நூல்களை முழுமையாகப் படித்த உணர்வு ஏற்பட்டது. நன்றி

  பதிலளிநீக்கு