புதன், மே 22, 2013

அன்னையும் அரவிந்தரும் ஆனந்தபாலாவும்


சென்னை நந்தனம் ஹௌசிங் போர்டு கட்டிடத்தின் எதிரிலுள்ள மாடல் ஹட்மெண்ட் தெருவில் சென்று ‘அன்னை தியான மையம்’ என்று கேட்டால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. 1986 முதல் இன்றுவரை 27 வருடங்களாக ஸ்ரீ அன்னையும் அரவிந்தரும் இந்த மையத்தில் மலர்களோடு மலர்களாக எழுந்தருளி, தம்மைக் காணவரும் அன்பர்களுக்கு அன்பும் அமைதியும் சாந்தியும் சமாதானமும் வழங்கி வருவதை பல்லாயிரக்கணக்கான சென்னைவாசிகள் உணர்வுபூர்வமாக அறிந்துள்ளார்கள்.
இந்த மையம் எழுந்த வரலாறே ஒரு தனிக்கதை.



1986-89ல் நான் சென்னை இந்திராநகரில் கார்ப்பரேஷன் வங்கியின் மேலாளராக இருந்தபொழுது ஸ்ரீ அரவிந்த அன்னையின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. அதற்குக் காரணமாக இருந்த என் மரியாதைக்குரிய குருநாதர் அவர்கள், சென்னையில் மாதம் ஒருமுறை “அன்னை தியானக் கூடல்” ஒன்று ஆரம்பிக்கவேண்டும் என்று தமது விருப்பத்தை வெளியிட்டார்கள்.  அதற்குரிய இடமொன்றைத் தேர்ந்தெடுக்கும் பணியை என்னிடம் வழங்கினார்கள்.

ஆச்சரியப்படத்தக்க விதமாக அந்த இடம் எனது வங்கியின் அருகிலேயே அமைந்தது. இந்திராநகரில் சிறப்பாக இயங்கிவந்த ‘ஹிந்து சீனியர் ஹைஸ்கூல்’ என்னும்  சி.பி.எஸ்.ஈ. பள்ளியின் சிறுவர் விளையாட்டு மேடையை மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கிடைத்தது. (இந்தப் பள்ளியின் தாய்ப் பள்ளியான திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் தான் மகாகவி பாரதியார் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு முதன்முதல் வந்தபொழுது அவரை வரவேற்று உபசரித்ததோடன்றி, அன்னை பராசக்தி வடிவமே வழிபடவேண்டிய வடிவம் என்று அவருக்குத் தெரிவித்தவரும் பாரதியாரே அன்றோ?)

1986 செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு சென்னையின் முதலாவது அன்னை தியானக் கூடல் துவங்கியது. ‘அமுதசுரபி’ இதழில் குருநாதரின் கட்டுரைகளை வெளியிட்டுத் தமிழ்நாட்டில் அன்னை வழிபாட்டை அறிமுகப்படுத்திய  டாக்டர் விக்கிரமனும், அதே முயற்சியில் அப்பொழுது தீவிரமாக இயங்கி, ‘அன்னையின் தரிசனம்’ முதலிய பல நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்த டாக்டர் வாசவனும், தமிழ் மொழிக்காகவும் உலகக் கவிதை வளர்ச்சிக்காகவும் பெரிதும் உழைத்துவரும் டாக்டர் ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் அவர்களும் அந்தக் கூடலுக்கு என்னால் அழைக்கப்பட்டிருந்தனர். முப்பது அல்லது நாற்பது பேர் தான் வந்திருந்தனர். குருநாதரின் விருப்பப்படி அதிக விளம்பரமின்றி ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் அது.

மூவரும் அன்னையின்பால் தாங்கள் கொண்டிருந்த அன்பு கலந்த பக்தியினை வெளிப்படுத்திப் பேசினார்கள். ‘இம்மாதிரி ஒவ்வொரு மாதமும் கூடவேண்டும்; உலகில் புதியதொரு ஞானத்தைக் கொண்டுவந்த அன்னை-அரவிந்தரின் கருத்துக்கள் ஏராளமான மக்கள் மத்தியில் பரவ வேண்டும்’ என்ற பேராசை ஒவ்வொருவர் மனதிலும் இருந்தது.

அரை மணி நேரம் மௌனமாக தியானம் செய்தோம். குருநாதர் சார்பாக பாண்டிச்சேரியிலிருந்து பேராசிரியர் ஒருவர் வந்திருந்து இன்னிகழ்ச்சிக்காகவே குருநாதர் எழுதியளித்த ஒரு கட்டுரையை  வாசித்தார். ஆசிரமத்திலிருந்து மலர்கள் கொண்டுவந்திருந்தார். அவை அன்பர்களுக்கு வழங்கப்பட்டன.

ஆனால் எம்மாதிரியான அமைப்பை ஏற்படுத்தினால் இந்த தியானக் கூடலைத் தவறாமல் ஒவ்வொரு மாதமும் நடத்தமுடியும் என்று யாருக்கும் தெரியவில்லை. சந்தா வசூலிப்பது மாதிரியான பணவிஷயங்கள் இதில் வரவே கூடாது என்று குருநாதர் அறிவுறுத்தியிருந்தார். எனவே அடுத்த கூடலுக்கான செலவுகளை ஒருவர் ஏற்க முன்வந்தார். இப்படியே சில மாதங்கள் தொடர்ந்து நடந்தது.

எனது வங்கிப் பணியின் காரணமாக என்னால் அதிக நேரம் செலவிடமுடியாத நிலையில், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கென்றே ஒருவரைத் தயார்ப்படுத்தினால் தான் அன்னை-அரவிந்தரின் கருத்துக்கள் தூய வடிவில் மக்களைச் சென்றடையும் என்று குருநாதரிடம் தெரிவித்தேன். அம்மனிதர், வேறு எந்தப் பணியிலும் முழுனேரமாக ஈடுபடாதவராக இருப்பது இன்னும் முக்கியம் என்றார் அவர். அப்படிப்பட்ட ஒருவர் இருக்கிறார், அவர் இன்னும் சில மாதங்களில் சென்னை தியானக் கூடலுக்குத் தலைமை ஏற்பார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அந்த அன்பர் தான், அமரர், ஆர். பாலசுப்பிரமணியன் அவர்கள். ‘ஆனந்தபாலா’ என்ற பெயரில் ஒரு சிறந்த எழுத்தாளராக விளங்கியவர். அமர எழுத்தாளர், நா. பார்த்தசாரதி ‘தீபம்’ என்ற இலக்கிய மாத இதழை நடத்தியபொழுது, அவருடைய நிழலாக இருந்து பத்திரிகையின் வெளிப்பாட்டுக்குக் காரணமாக இருந்தவர் அவர் என்பது இலக்கிய அன்பர்களுக்கு நன்கு தெரியும். 

அவர், நந்தனத்திலுள்ள ஹௌசிங் போர்டில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அன்னையின் பணிக்காகத் தன் பதவியிலிருந்து முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். அனேகமாக வாரத்தில் நான்கு நாட்களாவது அதிகாலையில் சென்னையிலிருந்து  பாண்டிச்சேரிக்குச் சென்று, ஆசிரமத்தை தரிசித்துவிட்டு, குருநாதருடன் அமர்ந்து அன்னையின் நூல்களைப் பயின்றும் அன்னை வழிபாட்டு முறைகளைத் தெரிந்துகொண்டும், ஆசிரமத்தில் அன்னை-அரவிந்தர் சமாதியில் சாற்றிய மலர்களை சென்னை அன்பர்களுக்கு வழங்குவதற்காக எடுத்துக்கொண்டு நள்ளிரவில் வீடு திரும்புவதும் அவருக்கு வாடிக்கையானது.

அவர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு கூட்ட நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க ஒழுங்குமுறை நிலவ ஆரம்பித்தது. அன்னை, அரவிந்தர் பற்றிய பேச்சுக்களைத் தவிர வேறு வார்த்தைகளை யாரும் பேசுவதில்லை. அமைதி என்றால் அப்படியொரு அமைதி. வாயாடிக்குழந்தைகள் கூட, தியான நேரமான (காலை) 10 முதல் 10.30 வரையான அரைமணி நேரத்தில் தங்களை மறந்து மௌனமானார்கள். பள்ளி மைதானத்தில் சுமார் இருநூறு பேர்களுக்கே இடம் இருந்தது. அதனால், சில அன்பர்களின் துணையோடு அண்ணா பல்கலைக்கு எதிரில் உள்ள காந்தி மண்டபத்திற்கு  மாதாந்திரக் கூட்டம் மாற்றப்பட்டது. பின்னர் அது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை என்று மாற்றப்பட்டது. சுமார் மூவாயிரம் பேர் அமர்ந்து அரைமணி நேரம் மௌனமாகக் கூட்டு தியானம் செய்வதை அனைவரும் வியந்து பார்த்தனர். அத்தனை பெரிய கூட்டத்திலும் ஒவ்வொருவரும் அன்னை-அரவிந்தரோடு தான் ஒன்றிவிடுவதை மனப்பூர்வமாக உணர்ந்தனர். வாராவாரம் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

(நிர்வாகக் காரணங்களுக்காக காந்தி மண்டபத்தில் விடுமுறைநாளில் கூட்டம் நடத்துவதைத் தவிர்க்குமாறு அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், இந்தக் கூட்டம் பிறகு போயஸ் கார்டன் அருகிலுள்ள ‘ஆஸ்திக சமாஜம்’ என்ற இடத்திற்கு மாற்றப்பட்டு, இன்றளவும் நடந்து வருகிறது).

‘அன்னை என்பவர் தெய்வமல்ல, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான ஆதிபராசக்தியின் அம்சம். எனவே, அவரைத் தொழுபவர்களுக்குப் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளும் சக்தி கிடைக்கிறது. ஒரு பிரச்சினை எழுந்தவுடனே ஓடிவந்து அன்னையிடம் சொன்னால், அது தீர்வதற்கான வழி உடனே புலப்படும்’ என்று பகவான் அரவிந்தர் தன் எழுத்துக்களில் சூட்சுமமாகச் சொல்லியிருப்பதைக் குருநாதர் அடிக்கடி எடுத்துக்காட்டுவார். சென்னை தியான மையம் உண்டானதின் அடிப்படையே அது தான். ஆனால் அது ஞாயிறன்று மட்டும் தானே! அப்படியில்லாமல், ஆண்டின் 365 நாட்களும் அன்னையை விரும்பிய நேரத்தில் சென்று வழிபடும்படியான ஒரு தியான மையம் யாராவது ஓர் அர்ப்பணிப்புள்ள அன்பரின் இல்லத்தின் ஒரு பகுதியாக அமையுமானால் அதுவே அன்னைக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த தொண்டாக இருக்க முடியும் என்று பாலா அவர்கள் எண்ணினார்கள். சிறிய வீடாக இருந்தபோதும் தம்முடைய வீட்டின் முதல் அறையையே அன்னை-அரவிந்தரின் உறைவிடமாக ஆக்கி, தனது இல்லமே சென்னை தியான மையத்தின் முகவரியாக அமைத்துவிட்டார்.

ஆனால் இந்த முடிவினால் திருமதி பாலா அவர்களுக்கும், அவர்களின் இரு குழந்தைகளான ஹேமா, பிரசாத் இருவருக்கும் என்னென்ன இன்னல்கள் தெரியுமா? பள்ளி/கல்லூரி விட்டு வந்தால் மாலையில் தனிமை கிட்டாது. உரத்துப் பேச முடியாது. பாடங்களை வாய்விட்டுப் படிக்க முடியாது. காலை நேரம் அன்னையின் அறையைத் தூய்மைப்படுத்தவேண்டும். சுமார் நூறு எவர்சில்வர் தட்டுக்களைக் கழுவித் துடைத்து, அவற்றில் தரமான, பூச்சி அரிக்காத பூக்களாகத் தேர்ந்தெடுத்து அடுக்கவேண்டும். பூக்கள் வாடாமல் இருக்க அளவாகத் தண்ணீர் ஊற்றவேண்டும். தரையில் தண்ணீர் சிந்திவிடக் கூடாது. ஊதுவத்திகளின் சாம்பல் தரையில் விழக்கூடாது. சுவர் முடுக்குகளில் சிலந்திவலை தெரியக்கூடாது. கை வைத்தால் ஜன்னல்களில் தூசு ஒட்டக்கூடாது. மின்விசிறி மீது சிறிதளவும் கருமை படியக்கூடாது. அன்னையின் அறைக்கதவைத் திறந்து மூடும்போது கீல்களிலிருந்து ஓசை எழக்கூடாது. இதெல்லாம் இந்த இரு குழந்தைகளின் பொறுப்பு.    


திருமதி பாலசுப்ரமணியன் அவர்கள்

காலை எட்டு மணியிலிருந்து இரவு எட்டுமணி வரை அன்னையின் கதவுகள் திறந்திருக்கும் என்பதால், வீட்டைப் பூட்டவே முடியாது. இதனால் தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்குக் கூடச் செல்லமுடியாத நிலை. பாலா அவர்கள் மட்டுமின்றி அவரின் மொத்தக் குடும்பமும் செய்த/ செய்துவரும் தியாகத்தின் பயனாகத்தான் இன்று சென்னை தியான மையம் சிறப்பாக இயங்கிவருகிறது.

அமரர் பாலா அவர்களை நான் மிக நெருக்கத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து கண்டிருக்கிறேன். அன்னைக்காக அவர் ‘ஸ்ரீ அரவிந்த அன்னை’ என்ற மாத இதழையும் நடத்திவந்தார். குருநாதரின் நூல்களை அப்பழுக்கின்றி மனத்தூய்மையோடு இரவு பகல் பாராமல் உழைத்து வெளியிட்டுக் கொடுத்தார். அவரைத் தவிர வேறு ஒருவர் மூலம் அன்னை தொடர்பான ஒரு புத்தகம் வெளியிடப்பட்டு கைக்கு வந்தபோது அதன் தரம் சரியில்லை என்னும் பொருள்பட, “BALA’S  TOUCH  IS  MISSING”  என்று பாண்டிச்சேரியில் பலர் விமர்சித்தார்களாம். அந்த அளவுக்குப் புத்தக வெளியீட்டில் கவனம் செலுத்தியவர் பாலா. அன்னையிடம் வராமல் இருந்திருந்தால்  ஏதாவதொரு இலக்கியப் பத்திரிக்கைக்கு அவர் ஆசிரியராக இருந்திருக்கக்கூடும்.

24 மணி நேரமும் உழைத்திருந்தவர். தன் பிள்ளை, பெண்களுக்காக எவரிடமும் சலுகை கேட்டு நின்றவரில்லை. செய்யும் தொழிலைப் பற்றிய எந்தவொரு துன்பத்தையும் தனக்குள்ளே வைத்திருப்பாரேயன்றி, தனது குடும்பத்தினருடன் கூட விவாதிக்கமாட்டார்.

விளம்பரங்களை விரும்பாதவர். பொருளுக்கு மயங்கிக் கொள்கையைக் கைவிடாதவர். அவர் அணிந்திருந்த வெள்ளை வேட்டியும் வெள்ளை ஜிப்பாவும் மாதிரியே அவர் உள்ளமும் கறைபடியாத வெள்ளைப் பாலாகவே இருந்தது. தன்னைச் சந்திக்கும் அனைவருக்கும் அன்னையின் அன்பைத் தூவியது.

தமிழால் அன்னையை வணங்கும் அனைவரும் தவறாமல் நினைவு கொள்ளவேண்டிய மாமனிதர், அமரர் ‘ஆனந்தபாலா’ என்கிற ஆர். பாலசுப்ரமணியன் அவர்கள்.

பிரசாத்
சென்னையில் இருப்போர், நந்தனம் ஹௌசிங் போர்டு கட்டிடத்தின் எதிரிலுள்ள மாடல் ஹட்மெண்ட் தெருவில் அவரது இல்லத்தில் அமைந்திருக்கும் ‘அன்னை தியான மைய’த்தினுள் நுழைந்தால் உங்களை வரவேற்பதுபோல் அவருடைய சிறிய  புகைப்படம் இருப்பதைக் காணலாம். அவரது மகன் பிரசாத் இன்று பிரசித்தி பெற்ற புகைப்பட/விடியோக் கலைஞராக இருக்கிறார். ஆனாலும், தன்னுடைய புகைப்படத்தைப் பெரிதாக எடுத்து மாட்டிக்கொள்ளவேண்டும் என்ற சாதாரண மனித ஆசை கூட அவரிடம் இருக்கவில்லை என்பது வியப்புக்குரியது.

அவருடைய ஒரே மகள் ஹேமாவை நீங்கள் தியான மையத்தில் பார்க்கலாம். ஹேமாவுக்கு ஒரே மகன். ஹரீஷ். அலைபேசி கோபுரங்களிலிருந்து வரும் கதிர்வீச்சினால் சிறுகச்சிறுக அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்கப் புதுமையான கூடொன்று வடிவமைத்துக் கொடுத்ததற்காக இவனுக்குப் பல பரிசுகள் கிடைத்திருக்கின்றன. (இது பற்றி ‘டெக்கன் ஹெரால்டு’ வெளியிட்ட செய்தியைக் கீழே தந்திருக்கிறேன்).

ஹேமா-குடும்பம்
 இன்று மே 22ம் நாள். அவரது 79ம் பிறந்தநாள். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். 

© Y.Chellappa
Email: chellappay@gmail.com

3 கருத்துகள்:

  1. ஹரீஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    சிறப்பான பகிர்வுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. கட்டுரையைப் படித்து முடித்தபின் ஏதோ தியான மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வெளியே முழுமையான மன நிம்மதியுடன் வந்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. ஹரீஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு