சனி, மே 18, 2013

நாக. வேணுகோபாலன் கவிதைகள்

தொண்ணூறுகளில் நான் புதுடில்லி கரோல்பாகில் பணியாற்றியபோது தில்லித் தமிழ்ச்சங்கத்தில் மிகுந்த தொடர்புடையவனாக இருந்தேன். அப்போது அறிமுகமானவர் நாக. வேணுகோபாலன்.

எங்கள் இரண்டாம் தலைமுறைகள் அமெரிக்கா வந்துவிட்ட நிலையில், நியூஜெர்சியில் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

தமிழ்ப் புத்தாண்டு தினமான 2013 - ஏப்ரல் 14ம் தேதி விருந்துக்கு வந்தார், மனைவி, மகன், மருமகள், பேத்தியுடன். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. (முன்னதாக ஒரு நாள் நாங்களும் அவருடைய மகன் இல்லத்தில் அதே இரண்டுமணி நேரம் செலவிட்டோம்).

நாக. வேணுகோபாலன் சென்னை லயோலாக் கல்லூரியில் படித்தவர். (பச்சையப்பா என்று முன்பொருமுறை நான் எழுதியது சரியில்லை). ‘லயோலா மண்ணில் தமிழ் விளையாது’ என்று எல்லாரும் சொல்லிக்கொண்டிருந்த வசைமொழி இவரால் பொய்த்தது. சட்டக் கல்லூரியில் நடந்த அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்று அதனால், கல்லூரிகளுக்கான சுழற்கோப்பையை லயோலாவுக்குப் பெற்றுத் தந்தார், வேணு. (அதே ஆண்டு கட்டுரைப்போட்டியில் இதே சாதனையை இவரது அறை நண்பர் பெரி.சாத்தப்பன் நிகழ்த்தினாராம்).



பின்னால் மத்திய அரசின் பணியில் சேர்ந்து ‘வீடு பெற நில்’ என்று அரசின் ஒதுக்கீட்டுக்காகக் காத்திருந்து கடைசியில் சரோஜினி நகரில் ஒரு வசதியான (!) அடுக்குவீட்டில் அவர் அடைக்கலமானார். பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் டில்லியிலும் நியூஜெர்சியிலும் இருப்பது போக, நிரந்தர வாசம் சென்னையில் பழைய மகாபலிபுரச் சாலையில். என் வீட்டிலிருந்து அரை மணி தூரத்தில்.

நாக. வேணுகோபாலன் சிறந்த கவிஞர். தில்லித் தமிழ்ச் சங்கத்தில் என் தலைமையில் நடைபெற்ற கவியரங்கங்கள் எல்லாவற்றிலுமே அவருக்கு ஓரிடம் இருந்தது. ஜாங்கிரி மாதிரி எழுதலாம், ஏனோ வெல்லச்சீடை மாதிரி குறைவாகவே எழுதுவார். இப்போது ஓய்வில் இருப்பதால் நிறைய எழுதப்போகிறேன் என்றார். கையில் இப்போதெல்லாம் ‘ஐ-பேடு’ வைத்திருக்கிறார். (விரைவில் ஒரு வலைப்பூ துவங்கவும் உத்தேசம் இருக்கலாம்).

நல்ல கவிதையின் ரசிகர். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எனது ‘வேர்வை கவிதையடா’ விலிருந்து மேற்கோள் காட்டுவார். லோதி கார்டனில் பாரதியாரின் சிலை முன்பு ‘பாஞ்சாலி சபதம்’ படிக்கும் செப்டெம்பர் 11 - டிசம்பர் 11 களில் தவறாமல் பங்கெடுப்பார். குடும்ப நண்பரான வண்ணதாசனுக்கு சாகித்ய அகதெமி கிடைக்கவில்லையே என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். (இவர் வாய் முகூர்த்தம், அவருடைய தகப்பனாரான தி.க.சி.க்குக் கிடைத்தது. பிற்பாடு வண்ணதாசனுக்கும் கிடைத்துவிட்டது).

தொண்ணூறுகளில் இருந்தமாதிரியே உடம்பையும் தமிழ்ப்பற்றையும் மாறாமல் வைத்திருக்கும் வேணுகோபாலனின் கவிதை ஒன்று நான் தொகுத்த “தலைநகரில் தமிழ்க்குயில்கள் ” நூலில் (1991) இடம்பெற்றது.

மொழிபெயர்ப்புத் துறையிலும் கால்பதித்திருக்கிறார். கே.ஏ.அப்பாஸின் How Films Are Made என்ற நூலை “திரைப்படங்களின் கதை” என்று மொழியாக்கம் செய்ததில் தொடங்கி, அனிதா தேசாயின் "கடலோரக் கிராமத்தின் கதை" (Story of a Seaside Village), சலீம் அலியின் "ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி" (Fall of a Sparrow) ஆகியவை முக்கியமானவை. “குலோபா எலியரசியும் பலூன்களும்” என்று ஒரு குழந்தை கதையையும் மொழிபெயர்த்திருக்கிறார். அர்ஜுன் தேவ், இந்திராதேவ் மற்றும் சுப்தா தாஸ் ஆகியோர் தொகுத்த The Human Rights Document என்ற நூலை “மனித உரிமைகள்: ஒரு அடிப்படை நூல்” என்ற பெயரில் மொழிபெயர்த்தது தான் சவாலாக இருந்தது என்கிறார். (எல்லாம் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடுகள்).

தமிழ்ப் புத்தாண்டன்று பேசிக் கொண்டிருந்த போது தன்னுடைய இரண்டு (புதிய) கவிதைகளை நினைவு கூர்ந்தார். இரண்டுமே பெண்களைப் பற்றியது. (ஆண்கள், வேறு யாரைப் பற்றி எழுதுவர்?)

இரண்டுக்கும் சேர்த்து ஒரே தலைப்பு: “காலம் தோறும் தாய்”.

முதல் கவிதையில் திருமணம் முடிந்து புகுந்தவீட்டிற்குச் செல்லும் மகளின் பிரிவைப் பாடுகிறாள், தாய். இரண்டாவதில், அதே மகள் தலைப் பிரசவத்திற்குக் காத்திருக்கும் நிலையில் பாடுகிறாள். முன்னது வெண்பா. பின்னது, புதுக் கவிதை. இதோ அந்தக் கவிதைகள்:
******************************************************************
காலம் தோறும் தாய்
-நாக. வேணுகோபாலன்

சனமாகிப் போயிருக்கும் சத்தமிடும் வீடெல்லாம்
மணமாகிப் போயிருக்கும் மாலைகளும் சந்தனமும்
கனமாகிப் போயிருக்கும் இவளொருத்தி நெஞ்சுமட்டும்
மணமாகிப் போவாள் மகள்.
***
ஒரே கூரையின் கீழிருந்து
ஒருவனே ஆன கடவுளுக்கு
இரு பெண்கள்-
இரு பிரார்த்தனைகள்.

உள்ளே கிடப்பவள் – தன் மகவுக்காக.
வெளியே நடப்பவள் – தன் மகவுக்குமாக.
******************************************************************
வேணுகோபாலனிடம் நல்ல கவிதைகள் இன்னும் நிரம்பவும் உண்டு. ஐபேடும் இருப்பதால் (மின்வெட்டு இல்லாத நேரங்களில்) கொஞ்சம் முயற்சித்தால் அவற்றை வெளியில் கொண்டு வந்துவிடலாம்.

கூடுதல் செய்தி: என்னைவிடச் சற்று முன்னதாகவே சென்னை திரும்புகிறார் வேணுகோபாலன். (இந்த மாத இறுதியில்?)

நட்புக்கு நன்றி !
****
Email: chellappay@yahoo.com

3 கருத்துகள்:

  1. உள்ளே கிடப்பவள் – தன் மகவுக்காக.
    வெளியே நடப்பவள் – தன் மகவுக்குமாக. ....
    தாய்மை உணர்வினைப் படம் பிடித்துக் காட்டும் வரிகள் அய்யா.
    தங்கள் நண்பரிடம் கூறி வலைப் பூ வினை உடனே தொடங்கக் கூறுங்கள் அய்யா. வாசிக்கக் காத்திருக்கின்றோம்

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே! தங்கள் ஆசையை அவரிடம் தெரிவித்துவிட்டேன். ஆவன செய்வதாகக் கூறியிருக்கிறார். அவருடைய வலைப்பூவிற்கு ஒரு நல்ல பெயரையும் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். அவர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு தளத்தை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு