செவ்வாய், ஏப்ரல் 30, 2013

அன்னைக்கு நானொரு பிள்ளை - 3

அன்னைக்கு நானொரு பிள்ளை - 3

ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் தோன்றுதல்

1926 நவம்பர் 24ம் தேதி தான் அரவிந்த ஆசிரமம் அதிகாரபூர்வமாக ஏற்பட்டதாகக் கருதலாம். ஏனெனில் அன்று தான் தனது யோகத்தின் முக்கிய கட்டமாக, ஸ்ரீஅரவிந்தர், வெளியுலகத்திலிருந்து முழுமையாகத் தன்னைத் துண்டித்துக்கொண்டு ஆன்மிகத் தவத்தில் ஈடுபடலானார்.

1950 டிசம்பர் மாதம் 5ம் தேதி தமது பூத உடலைத் துறக்கும் வரையிலான 25 வருடங்களில் இரண்டே முறை தான் வெளியுலகுக்குத் தோற்றமளித்தார்.

முதல் முறை: 1947 ஆகஸ்ட்டு 15ம் தேதி, இந்தியா சுதந்திரம் பெற்றபோது அறிக்கை வெளியிட்டு பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிப்பதற்காக.

இரண்டாவது முறை: 1950 ஆகஸ்ட்டு 15 அன்று அவரும் அன்னையும் ஒன்றாக அமர்ந்து புகைப்படத்திற்குக் காட்சி தந்தது. (அந்தப் புகைபடம் தான் அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் ஒரே புகைப்படம்).

அன்னை அவர்கள், ஆசிரமம் என்பதாகப் பெயரளவில் இருந்த நிறுவனத்தை மேற்கொண்டபொழுது அரவிந்தரின் 24 சீடர்கள் உடன் இருந்தனர். அவ்வளவு பேர் புழங்குவதற்கும், அமைதியான முறையில் தியானத்தில் ஈடுபடுவதற்கும்,  புத்தக அலமாரிகளுக்காகவும் போதுமான இடம் இருக்கவில்லை என்பதால், தமது சொந்தப் பணத்தில் இரண்டு கட்டிடங்களை வாங்கி ஒன்றாக இணைத்து இன்றிருக்கும்படியான ஆசிரமக் கட்டிடத்தை உருவாக்கினார்.

‘அருளிலார்க்கு அவ்வுலகமில்லை’ என்றார் வள்ளுவர். ஆனால், ‘அவ்’வுலகத்தேடலில் ஈடுபட்டவர்களுக்கும் ‘பொருள்’ தேவை யல்லவா? அதற்காகப் பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டுமாறு அன்னை தமது சீடர்களை ஊக்குவித்தார். அச்சகம், காகிதத் தொழிற்சாலை, பெட்ரோல் பங்க்கு, ஊதுவத்தி செய்தல், துணிகள் மற்றும் ஆடைகள் நெய்தல், கலைப்பொருட்கள் தயாரித்தல், அரவிந்தர்-அன்னை நூல்களை சிறப்பாக வெளியிடுதல், டைரிகள்-கேலண்டர்கள் வெளியிடுதல் போன்ற பொருளாதார நடவடிக்கைகளை துவக்கிவைத்தும் ஊக்கப்படுத்தியும்  ஆசிரமத்தைச் சுயசார்பு கொண்ட நிறுவனமாக வளர்த்தார், அன்னை. தன்னுடைய பெரும்செல்வத்தை இதற்காகவே செலவிட்டார். இந்த வளர்ச்சி ஒரே நாளில் வந்ததல்ல. படிப்படியாக அதனுடைய இயற்கையான பரிணமிப்பாக ஏற்பட்டது தான்.     

இன்று பல கோடி ரூபாய்கள் பற்றுவரவு செய்யும் மாபெரும் நிறுவனமாக ஆசிரமம் ஆல்போல் தழைத்து விளங்குகிறது.
****
மனித வாழ்க்கையின் இன்னல்கள், துயரங்கள், பிரச்சினைகள் அனைத்திற்கும் முடிவு காண்பதற்கான ஒரு சோதனைச்சாலை யாகவே ஆசிரமம் இயங்குவதாக அன்னை குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே ஆசிரமத்தில் அடிக்கடி உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடும் கைகலப்பும் நிகழ்வதுண்டு. ‘இங்கு ஒரு பிரச்சினையை நாம் முடிவுக்குக் கொண்டுவந்தால், உலகமெங்கும் அதுபோன்ற பிரச்சினைகள் இனி முடிவுக்கு வந்துவிடும் என்று பொருள்’ என்பது அன்னையின் வழிகாட்டும் வாசகம்.

 
ஆனால் பெரும்பாலான பிரச்சினைகளுக்குப் பணமும் பணம் செய்வதற்கான வழிகளுமே மூலகாரணிகளாக இருப்பதை உணர்ந்த அன்னை, இத்தகைய லோகாயதமான விஷயங்களில் நேரமும் மனித சக்தியும் செலவாகாதபடி, இறைவனை நாடும் இலட்சியம் ஒன்றிலேயே அனைவரும் ஈடுபடத்தக்க ஒரு குடியிருப்பை உருவாக்கவேண்டும் என்று விரும்பினார்கள்.அதற்காக அவர்கள் உருவாக்கிய புதிய கிராமமே, ‘ஆரோவில்’ என்பதாகும். (இதற்கும் ஆசிரமத்திற்கும் நிர்வாக சம்பந்தம் ஏதும் இல்லை).
 
சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாகப் பாண்டிச்சேரியினுள் நுழையும்பொழுது, பாண்டிச்சேரிக்கு சுமார் ஆறு கிலோமீட்டர் இருக்கும்போதே இடதுபுறமாக ‘ஆரோவில்’ பெயர்ப்பலகையைக் காணலாம். நெடுஞ்சாலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும். ஆன்மிக விஷயங்களுக்காகவே, உலகெங்கிலுமிருந்து வந்த அன்பர்கள், பேதம் மறந்து, உடல் உழைப்பினாலும் செயல் திறமையாலும் இவ்வூரை ஒரு இயற்கையெழில் கொஞ்சும் சுறுசுறுப்பான ஊராக மாற்றியமைத்து இருக்கிறார்கள். (இது தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்த ஊராகும்).

அங்கு, ‘அன்னை ஆலயம்’ என்னும் ‘மாத்ரிமந்திர்’ என்ற தங்கவண்ணக் கோள வடிவக் காட்டிடம் முக்கியமானதாகும். உள்ளே அமர்ந்து தியானத்தில் ஈடுபட அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் முன்கூட்டியே அவர்களுக்கு எழுதி அனுமதிபெற வேண்டும். மேற்கொண்டு தகவல்களை இந்த வலைத்தளத்தில் பெறலாம்: http://www.auroville.org/

எனது குடும்பத்தாரோடு இரண்டாண்டுகள் முன்பு ஆரோவில் சென்றிருந்தபோது எடுத்த சில படங்களை இங்கு பார்க்கலாம்.     


ஸ்ரீ அன்னை – அரவிந்தரைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஆங்கிலத்தில் உள்ள ஆசிரமத்து வெளியீடுகளைப் படிக்க வேண்டும்.


ஸ்ரீ அன்னை அவர்கள் நிகழ்த்திய உரையாடல்களை  17 தொகுதிகளாகவும் (ரூ.4800), ஸ்ரீ அரவிந்தரின் நூல்களை 37 தொகுதிகளாகவும் (ரூ.7500) வகைப்படுத்தி ஆசிரமம் வெளியிட்டிருக்கிறது. ஆன்மிகப் பொக்கிஷமான இந்நூல்கள் அனைத்தையும் இன்று ஒரு காசு செலவின்றி உங்கள் கணினிக்குள் pdf வடிவில் இறக்கிக் கொள்ள முடியும். அதற்கான வழி இதோ:

http://www.sriaurobindoashram.org/ashram/mother/writings.php

ஸ்ரீ அரவிந்தரின் மிக முக்கியமான யோக நூல், ‘லைஃப் டிவைன்’ ( Life  Divine  ) ஆகும். ஆனால் அரவிந்தரின் ஆங்கில உரை நடை, ஆங்கிலேயர்களுக்கே சற்று திகைப்பை ஏற்படுத்தக்கூட்டியது என்பதைப் புரிந்துகொண்டு படிக்கமுற்படுதல் நல்லது. இந்த நூலைப் பற்றியும் குருநாதர் கர்மயோகி அவர்கள் தமிழில் நூலாக எழுதியிருக்கிறார்கள். அதைப் படித்தபின் ஆங்கில மூலத்தை அணுகினால் நல்ல பயன் தரும்.

அரவிந்தர், தமது கடினமான உரைநடையிலிருந்து பெரிதும் மாறுபட்டு, சற்றே எளிய நடையில் எழுதிய கவிதை நூல், ‘சாவித்திரி’ ஆகும். சத்தியவான்-சாவித்திரி யின் கதை நமக்குத் தெரிந்தது தான். அதையே தத்துவக் கருத்துக்களோடு பொருத்தியும், தனது யோகக் கண்டுபிடிப்புகளைப் புகுத்தியும், தாமும் ஸ்ரீ அன்னையும் இந்த மண்ணுலகிற்கு வந்த ஆன்மரகசியத்தின் விரிவாகப் படைத்த காவியம் தான் ‘சாவித்திரி’. இதற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவிருந்த நேரத்தில் ஸ்ரீ அரவிந்தர் திரு உடல் நீத்ததால், பரிசு இல்லாமல் போனது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.   

குருநாதர் கர்மயோகியின் எழுத்துக்கள்

எளிய தமிழில் இதுவரை வேறு யாரும் சொல்லாத வகையில் அன்னை-அரவிந்தரைத் தமிழ் உலகுக்கு வெளிப்படுத்திய பெருமை, குருநாதர் கர்மயோகி அவர்களையே சாரும். அவருடைய அமைதியான  வழிகாட்டுதலின் கீழ் இயங்கிவரும் பாண்டிச்சேரியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான ‘மதர்ஸ் சர்வீஸ் ஸொசைட்டி’யின் ‘எல்லாம் தரும் அன்னை’ என்ற நூல்,


அன்னை- அரவிந்த இலக்கியத்தின் ஆரம்பப்பாடமாக அமைந்து, உங்களை நிச்சயமாக அன்னையின் பால் ஈர்த்து ஆசிரமத்தின் அமைதிச் சூழலுக்குக் கொண்டுசெல்லும் என்பதில் ஐயமில்லை.
 

இந்த நூலை கணினியில் இறக்கிகொள்ளவும், மேற்கொண்டு விவரங்களை அறியவும்  http://www.motherservice.org/ என்ற வலைத்தளத்தைக் காணுங்கள்.


 
© Y.Chellappa
Email: chellappay@gmail.com
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

1 கருத்து:

  1. அரவிந்தர் பற்றிய பல அரிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி அயய்யா. அரவிந்தர் நூல்களை பதிவிறக்கம் செய்து கொண்டேன் அய்யா.நன்றி

    பதிலளிநீக்கு