சீனாவில் மா-சே-துங்
ஆட்சிக்காலத்தில் இருந்து (1979 முதல்) அமுலில் உள்ள ஒரு சட்டம், நகர்ப்புறங்களில்
உள்ளவர்கள் இரண்டாவது குழந்தை பெற அனுமதி மறுக்கிறது. கிராமப்புறங்களில்
உள்ளவர்களுக்கு மட்டும், முதல் குழந்தை பெண்ணாக இருந்தால், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளத் தடையில்லை.
இதன் விளைவு என்ன? இரண்டாவது முறையாக கருவுற்ற நகரத்துப் பெண்டிர்,
கிராமங்களுக்குச் செல்லலாயினர். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் கிராமத்தில்
பிழைப்பதற்கு வழி வேண்டுமே! மேலும், பிள்ளை பெறும் பொருட்டே இவர்கள் இடம்
மாறினார்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் தண்டனையும் கிடைக்கலாம்.
எந்த விதிக்கும் ஒரு
விலக்கு உண்டல்லவா? அது தான் அபராதம். நகரத்துப் பெண்டிர் இரண்டாவது முறையாகக் கரு
தரிக்க நேரிட்டால், அபராதமாக இரண்டு லட்சம் யுவான் செலுத்த வேண்டும். அதாவது
31,000 டாலர்கள்.
பணம்
படைத்தவர்களுக்கு இது சாதகமாக அமைந்து விட்டது. இரண்டாவது முறை கரு தரித்தல் பற்றி
சிறு சந்தேகம் இருந்தாலும் இவர்கள் முன்கூட்டியே இந்த அபராதத்தைச்
செலுத்திவிடுவார்களாம். (குழந்தை பிறக்கவில்லையென்றால் திரும்பக் கிடைக்குமா
என்பது பற்றி தகவல் இல்லை).
உலக மக்கள் தொகை
பற்றித் தீவிரமாகச் சிந்தித்த ஓர் அமெரிக்கப் பொருளாதார அறிஞர், கென்னத்
பௌல்டிங்க் (Kenneth Boulding), மேற்படி சீனச்
சட்டத்தையே சற்று சீர்திருத்தியது போல, மக்கள் தொகையை நெறிப்படுத்த இன்னொரு வழியை
ஆலோசித்தார்:
-“இனப்பெருக்க
லைசென்ஸ்” (Marketable Procreation
License) என்று ஒரு லைசென்ஸ் ஏற்படுத்துவது. இது பங்குச்
சந்தையில் செலாவணியாகக் கூடிய பங்குகளாக விற்பனை செய்யப்படும்.
-அந்தந்த நாடுகள்
தத்தம் மக்கள் தொகைப் பெருக்கத்தைப் பொருத்து இந்தப் பங்கின் விலையை நிர்ணயம்
செய்யலாம்.
-எவ்வளவு பங்குகள்
வாங்கியிருந்தால் எவ்வளவு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதை அந்தந்த நாடுகளே
நிர்ணயிக்கும்.
-முதல் முறையாக
இப்பங்குகள் வெளியிடும்போது ஒரு பங்கின் விலை ரூபாய் ஆயிரம் என்று நிர்ணயிக்கலாம்.
(எடுத்துகாட்டுக்காகச் சொல்கிறேன்). அடுத்த பத்தாண்டுகளில் எவ்வளவு குழந்தைகள்
நாட்டில் பிறக்கவேண்டும் என்பதை ஒரு நிபுணர் குழு மூலம் அறிந்து அதற்குரிய அளவே
பங்குகள் வெளியிடப்பட வேண்டும். முதல் முறை வெளியிடும் பொழுது நாட்டிலுள்ள அனைத்து
பெண்களுக்கும் தலா ஒரு குழந்தை என்ற வீதத்தில் மட்டுமே இது விற்கப்படும்.
-முதல் குழந்தை
பெறுவதானால் , 5 பங்குகளும், இரண்டாவது குழந்தை யென்றால் 25 பங்குகளும், மூன்றாவது
குழந்தை யென்றால் 100 பங்குகளும் வைத்திருக்க வேண்டும் என்று விதிக்கலாம்.
(எடுத்துகாட்டு தான்).
-பங்குச் சந்தையில்
இதன் விலை மற்ற பங்குகளைப் போலவே தினந்தோறும் ஏறும், இறங்கும் விதமாக அமைக்கலாம்.
சரி, இப்படியொரு
திட்டம் அமுலானால் என்ன பயன் உண்டாகும்?
1) ஏழைகள் ஒரு குழந்தைக்கு மேல் பெற
முன்வரமாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். அவர்கள் தங்களிடமுள்ள பங்குகளை
விற்பதன் மூலம், பொருளாதார வளம் பெறுவதோடு, அதிகக் குழந்தைகளைப் பெற்று
வளர்ப்பதனால் உண்டாகும் செலவினங்களிலிருந்தும்
விடுதலை பெறுவார்கள். இதனால் ஏற்கெனவே இருக்கும் தங்களின் மற்ற குழந்தைகளை வசதியாக
வளர்க்கமுடியும். அவர்களுக்கு நல்ல கல்வி வழங்கவும் முடியும். அத்துடன்,
பெற்றோர்கள் மீது அதிக பொறுப்புணர்ச்சியை இது திணிக்கும். தற்போது உலகில் உள்ள
பிரச்சினையே, ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தம் ஜனத்தொகைப் பெருக்கத்தில் கட்டுப்பாடு
இல்லாமல் இருப்பது தான்.2) ஏழைகள் மட்டுமின்றி, விதவைகளும், குழந்தை பெறும் வயதைக் கடந்த பெண்களும், குழந்தை பெற அனுமதியில்லாத மதம் சார்ந்த பதவிகளில் இருக்கும் பெண்களும் (Nuns) தங்களிடம் உள்ள பங்குகளை விற்கலாம், அல்லது தருமம் செய்யலாம். இதன் மூலம் பங்குகளின் விலை ஓரளவுக்கு நிலைப்படுத்தப்படும். யார் வேண்டுமானாலும் யார் பெயரில் வேண்டுமானாலும் பங்குச் சந்தையில் இப்பங்குகளை வாங்கலாம், விற்கலாம். வங்கிகளில் போடும் வைப்புத்தொகையை விட இது அதிக மதிப்புடையது என்பதால், இந்தப் பங்குகளை வாங்குவதற்கு அதிகப் போட்டி இருக்கும். அதனால் விலை ஏறும்.
3) ஒரு குழந்தை பெற்றவுடன் அதற்குரிய பங்குகளை அரசிடம் சமர்ப்பித்துவிட வேண்டும். அத்துடன் அந்தப் பங்குகள் அழிக்கப்படும். இதனால், இருப்பில் உள்ள பங்குகள் நாள்தோறும் குறைந்துகொண்டே வரும். அதனால், பங்கின் விலை ஏறும்.
4) வசதியானவர்கள் என்ன விலை கொடுத்தும் பங்குகளை வாங்கிக் குழந்தை பெற்றுக்கொள்ள முற்படுவார்கள். இதனால் சமுதாயம் மேன்மை பெறும். அம்பானிகளும் டாட்டாக்களும் அதிகக் குழந்தை பெறுவதன் மூலம் நாட்டில் அதிகக் கம்பெனிகள் உருவாகி, அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். வறுமை குறையும்.
5) பங்குகளின் விலை ஏற, ஏற, நாட்டில் குழந்தை பெருக்க வீதம் குறையத் தொடங்கும். அது மட்டுமின்றி, அரசாங்கத்தின் திட்டமிடல் சரியான பாதையில் செல்லவும் (Focussed Planning) இது உதவும்.
6) குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களுக்குச் செலவு செய்யும் தொகையை, இனி, கர்ப்பிணிகளின் நலனுக்காகவும், பிறந்த குழந்தைகளின் நலனுக்காகவும் செலவிடலாம். இதனால் மக்களின் நீண்டகால ஆரோக்கியம் மேன்மையுறும்.
மிஷிகனிலும் கொலராடோவிலும் பேராசிரியராக இருந்த
கென்னத் பௌல்டிங்க் கவிஞராகவும் இருந்தவர். அதனாலோ என்னவோ அவருடைய மேற்படி
திட்டத்தை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. (ஆனால் கிட்டத்தட்ட இதே போன்ற
திட்டம் உலகம் மாசுபடுதலைத் தவிர்ப்பதற்கான ‘கார்பன் டிரேடிங்க் பாண்டு’கள் என்ற
வடிவில் அமுலாகியுள்ளது).
போக்குவரத்துக் குற்றங்களுக்குத் தண்டனை
வழங்குதல்
40 கி.மி. வேகத்தில் போகவேண்டிய பாதையில் 60
கி.மி.வேகத்தில் வண்டியோட்டுவது குற்றம்.
இதனால் வண்டியோட்டி மட்டுமின்றி வேறு பலரும் உயிரிழக்க நேரிடலாம். எனவே தான் பல
நாடுகளில் இக்குற்றங்களுக்குச் சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது. எடுத்துகாட்டாக,
இங்கிலாந்தில் 2000-ம் ஆண்டில் டேனியல் நிக்ஸ் (Daniel Nicks) என்பவருக்கு ஆறு வாரம் சிறை தண்டனையும் இரண்டு
வருடம் உரிமம் ரத்தும் விதிக்கப்பட்டது. தன்னுடைய ஹோண்டா ஃபயர்பிளேடு
மோட்டார்சைக்கிளில் 282 கி.மி. வேகத்தில் போனார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.
இதே போல், 2007ல் அதே நாட்டில் டிமோத்தி பிராடி
(Timothi Brady) என்பவர் தனது போர்ஷே காரில் 277 கி.மி.வேகத்தில் போனதற்காக 10
வாரம் சிறை தண்டனையும் 3 வருட உரிமம் ரத்தும் விதிக்கப்பட்டார்.
கனடா நாட்டில் 1910ல் அப்போதைய பிரதமரின் மனைவி
லேடி லாரியர் என்பவர், 10 மைல் மட்டுமே போகவேண்டிய பகுதியில் அதை விட வேகமாக
வண்டியோட்டியதால் அபராதம் விதிக்கப்பட்டார். (நான் பொய் சொல்லவில்லை, நம்புங்கள்).
மேற்படி நிகழ்ச்சிகள், ‘குற்றம் புரிந்தால்
தண்டனை’ என்ற தார்மிகக் கொள்கையை நிறுவுகின்றன. ஆனால் ஃபின்லாந்திலோ இந்தக் கொள்கை
‘சந்தை’ப்படுத்தப்படுகிறது. அதாவது, அபராதம் மட்டுமே, வேறு தண்டனை கிடையாது. அது
மட்டுமல்ல, குற்றம் புரிந்தவரின் அப்போதைய வருமானத்தைப் பொறுத்து அபராதம்
விதிகப்படும். அதன்படி உலகிலேயே அதிகமான தொகையை அபராதமாகச் செலுத்தியவர், ஜூஸி
ஸலனோஜா (Jussi Salanoja). 40 கி.மி. மட்டும் போவதற்கான
பாதையில் இவர் 80 கி.மி. வேகத்தில் வண்டி ஓட்டினாராம். (இத்தகைய குற்றத்தை நம்
நாட்டில் ஈ.சி.ஆர். ரோட்டில் அரசாங்க பஸ்களும், அமைச்சர்களின் கார்களும் தினமும் புரிந்து கொண்டிருக்கக்கூடும்). இறைச்சி
விற்கும் பெரிய கம்பெனியொன்றின் முதலாளிக்கு இவர் ஒரே வாரிசு என்பதால், அவரது
அன்றைய வருமானத்தை ஒட்டி, அவருக்கு 1,70,000 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.
பாரிஸ் நகரில் மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கட்
விலை 2 டாலர். டிக்கட் வாங்காமல் பிடிபட்டால் அபராதம் 60 டாலர்கள். பயணிகள்
டிக்கட் வாங்கவும் தயாரில்லை, அபராதம் செலுத்தவும் தயாரில்லை. எனவே ஒரு நிறுவனம்
புதுமையான திட்டத்தை இவர்களுக்குக் கொடுத்தது. அதன்படி, பயணிகள் மாதச் சந்தாவாக
எட்டரை டாலர் செலுத்தவேண்டும். அதன் பிறகு டிக்கட் வாங்காமல்
மெட்ரோவில் பயணிக்கலாம். ஒருவேளை பிடிபட்டால் இந்த நிறுவனத்திற்குப் போன் செய்தால்
போதும். அவர்களுடைய ஆள் வந்து உரிய அபராதத்தை செலுத்தி மீட்பார். அல்லது நீங்களே
அபாராதம் செலுத்திவிட்டு, அந்த ரசீதைக் காட்டிப் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
(மும்பாயிலும் இத்தகைய திட்டம் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இது சட்ட
விரோதமானது).
********மேற்சொன்ன எடுத்துகாட்டுகளைக் காட்டி நூலாசிரியர் மைக்கேல் ஸாண்டல் கூறுவது இது தான்.
அபராதம் செலுத்தும் திறனுள்ளவன் எந்தக் குற்றத்தையும் செய்துவிடலாம் என்கிற நிலைமை இன்று ஊக்குவிக்கப்படுகிறது.
சந்தை மதிப்பீடுகள் வரவர அதிகப்படியான அளவில்
நம் வாழ்வியல் நெறிகளைப் பாதித்து வருகின்றன. என்னென்ன நெறிகளை அவை தொடவே கூடாதோ,
அவற்றையும் தொட்டுப் பார்ப்பதன் மூலம் இயல்பான வாழ்க்கையை நாம் வாழ்வதிலிருந்து
பிறழ்ந்து போக நேரிடுகிறது. இதைத் தான் ‘தார்மிகம் சந்தைப்படுத்தப்படுகிறது’
என்கிறார்.
******அவர் காட்டும் இன்னொரு நிகழ்வு, சீனாவில் பொது மருத்துவமனைகளில் காண்பதாகும். அங்கு மருத்துவ மனைகளில் நீண்ட வரிசைகள் எப்போதுமே இருக்கும் என்பதால், வரிசையில் நிற்பதற்கென்றே ஆட்களை வழங்கும் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறதாம். இணையத்தின் மூலம் உங்களுக்கு வசதியான நேரத்தை முன்பதிவு செய்துகொண்டு உரிய பணம் செலுத்தினால் போதும், உங்களுக்காக ஒருவர் அந்த வரிசையில் நின்றுகொண்டிருப்பார். நீங்கள் போய் அவருடைய இடத்தைப் பெற்றுக்கொள்ளலாம். (நம்ம ஊரில் ரயில் நிலையங்களில் தத்கால் வரிசைகளில் நடக்காத விஷயமா!)
சீனாவில் இன்னொரு புதுமையான கம்பெனியும் நடந்து
வந்ததாம். (டியாஞ்சின் அப்பாலஜி). யாருக்காவது நீங்கள் மனவருத்தம்
உண்டாகும்படி நடந்துகொண்டு விட்டீர்கள். அவரிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும்
என்று உள்ளம் உறுத்துகிறது. ஆனால் கௌரவம் இடம் கொடுக்கவில்லை என்றால், இந்தக்
கம்பெனிக்குச் சொல்லி அனுப்பினால் போதும். குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு, அந்
நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட ஆசாமியிடம் உங்கள் சார்பாகப் போய்
நிலைமையை விளக்கிச் சொல்லி மன்னிப்புக் கேட்பாராம். விஷயத்தின் தீவிரத்தைப்
பொருத்தும், மன்னிப்பு கேட்கப்பட வேண்டியவரின் சமூக/அதிகார அந்தஸ்தைப் பொருத்தும்
கட்டணம் வித்தியாசப்படுமாம்.
ஆஸ்கார் பரிசு மிகவும் கௌரவம் வாய்ந்த ஒன்றாகக்
கருதப்படுகிறது. ஆனால் பரிசாக வழங்கப்படும் உலோக உருவம் உண்மையில் அதிக விலை
கொண்டது அல்லவாம். என்றாலும் அதைப் பெற்றவரின் அந்தஸ்து அவரது மரணத்திற்குப் பிறகு
அந்த உலோக உருவத்திற்குப் பல லட்சம் டாலர்கள் மதிப்பை உண்டாக்கி விடுகிறது.
எடுத்துகாட்டாக, 1999ல் (யாரோ ஒருவரால் விற்பனைக்கு வந்த) ஆஸ்கார் பரிசு உருவச்
சின்னத்தை 15,40,000 டாலர்களுக்கு ஏலம் எடுத்தாராம், பாடகர் மைக்கேல் ஜாக்ஸன். GONE WITH THE WIND என்ற படத்திற்கு வழங்கப்பட்ட விருதாம் இது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட
உடனேயே ஆஸ்கார் பரிசு வழங்கும் நிறுவனம், தனது விதிகளில் புதிதாக ஒன்றைச்
சேர்த்ததாம். பரிசு பெற்றவர்கள், எக்காரணம் கொண்டும் அந்தச் சின்னத்தை
விற்பனைக்குக் கொண்டுவரக் கூடாது என்பதே அப்புது விதி.
****டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மாதிரி ‘கிஃப்ட் கார்டு’ என்ற அட்டை மேலை நாடுகளில் பிரபலமானது. வால்மார்ட்டு, டார்கெட், லைஃப்ஸ்டைல், பார்னஸ் அண்டு நோபிள், மாதிரியான கடைகளில் 98 டாலர் கொடுத்தால் 100 டாலர் மதிப்புள்ள கிஃப்ட் கார்டு கிடைக்கும். இதை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் பரிசாகக் கொடுக்கலாம். அவர்கள் அந்தக் கடையிலேயோ அல்லது அவர்களின் கூட்டாளிக் கடைகளிலேயோ 100 டாலருக்கு வேண்டிய பொருள்களை வாங்க முடியும். (இந்தியாவில் வங்கிகள் மூலம் இம்மாதிரி கிஃப்ட் கார்டுகள் வழங்கப்படுகின்றன).
நூலாசிரியர்
என்ன கூறுகிறார் என்றால் கிஃப்ட் கார்டைப் பெறுகின்றவர்களில் பெரும்பான்மையினர்,
அவற்றைத் தாங்கள் பயன்படுத்துவதில்லை, குறைந்த விலைக்கு விற்று காசாக்கி
விடுகிறார்கள் என்பதே. இதற்கென்றே பல
கம்பெனிகள் இயங்குகின்றனவாம். (இதில் சட்ட விரோதம் ஏதுமில்லை). பரிசு வழங்கல் என்னும் புனிதமான செயல் எப்படி சந்தைப்
படுத்தப்பட்டுவிடுகிறது என்று அங்கலாய்க்கிறார். 100 டாலர் மதிப்புள்ள கிஃப்ட்
கார்டை 80 டாலருக்கு வாங்கிக்கொள்ள நிறைய கம்பெனிகள் உள்ளனவாம்.
***இதை விடப் புதுமையான விஷயம், இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாத விஷயம் ஒன்றை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அது ஆயுள் காப்பீடு பற்றியது.
நம் நாட்டில் அரசுத்
துறையிலும் சரி, பெரிய கம்பெனிகளிலும் சரி, ஊழியர்களுக்கு ‘குரூப் இன்ஷூரன்ஸ்’
என்னும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் உண்டு. இதன்படி, பணியில் இருக்கும்போது ஒருவர்
மரணமடைந்தால், ரூபாய் ஒரு லட்சமோ, இரண்டு லட்சமோ அல்லது அதை விட அதிகமோ, இன்ஷூரன்ஸ்
கம்பெனி வழங்கும். இதை ஊழியரின் வாரிசுகள் பெறுவர். இதற்காக சம்பந்தப்பட்ட
கம்பெனிகளே பிரீமியம் தொகையைச் செலுத்துகின்றன. அல்லது அதன் ஒரு பகுதியை ஊழியரின்
மாதச் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்கின்றன. உதாரணமாக, வங்கி ஊழியர்களுக்கு
மாதம் 36 ரூபாய் பிடித்தம் செய்வதன் மூலம் அவர்கள் மரணம் அடைந்தால் ரூபாய் 4
லட்சம் வரை கிடைக்க வழியுண்டு.
அமெரிக்காவிலும் பெரிய
கம்பெனிகளில் இதே மாதிரி இன்ஷூரன்ஸ் திட்டம் உண்டு. ஆனால், ஊழியர் இறந்தால் அந்த
இன்ஷூரன்ஸ் பணம் கம்பெனிக்குத் தான் போகுமேயன்றி, இறந்துபோன ஊழியரின்
வாரிசுகளுக்குக் கிடைக்காதாம் !
நியு ஹாம்ப்ஷயர்
மானிலத்தின் டில்டன் (TILTON) என்ற ஊரில் வால்மார்ட் என்ற
சூப்பர் மார்க்கெட்டின் கிளை இருக்கிறது.
இதில் பணியாற்றிவந்த மைக்கேல் ரைஸ் என்ற ஊழியர் பணியில் இருக்கும்போது
இறந்துபோனார். கடையில் ஒரு வாடிக்கையாளர் வாங்கிய டி.வி. செட்டை அவரது வண்டியில்
ஏற்றும் பொழுது அது இவர் மேல் விழுந்து உடனடி மாரடைப்பினால் இறந்து போனார். அப்போது
அவருக்கு வயது 48 தான்.
அவரது பெயரில் 3 லட்சம்
டாலருக்கு இன்ஷுரன்ஸ் இருப்பது வாரிசுகளுக்குத் தெரிந்தது. தரச் சொல்லிக்
கேட்டார்கள். இன்ஷூரன்ஸ் கம்பெனியோ, பாலிஸியில் வால்மார்ட் பெயரில் beneficiary’s interest பதிவாகியிருப்பதால், பணம்
வால்மார்ட்டுக்கு ‘செட்டில்’ செய்யப்பட்டு விட்டதாக அறிவித்தது. எனவே
வால்மார்ட்டின் மீது வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் வால்மார்ட்டுக்குத் தான்
வெற்றி. அதன் வாதம் என்ன தெரியுமா?
“ஒரு ஊழியரைத்
தேர்ந்தெடுத்துப் பணியில் அமர்த்தி அதன் மூலம் அவருக்குப் பல்வகையான அனுபவங்களை
நாங்கள் வழங்கியிருக்கிறோம். அதன் விலையாகத்தான் அவரது ஆயுளின் பேரில் இன்ஷூரன்ஸ்
எடுக்கிறோம். திடீரென்று அவர் இறந்து போனால், அவரைப் போலவே திறமையுள்ள ஒருவரைத்
தேர்ந்தெடுக்கவும், உரிய பயிற்சிகள் வழங்கவும் நாங்கள் செலவிட வேண்டாமா? ஆகவே தான்
எங்கள் கம்பெனியை beneficiary ஆக நாங்கள் பதிவு செய்துள்ளோம். அது மட்டுமின்றி, இந்தப்
பாலிஸிக்காக ஒரு டாலரும் அந்த ஊழியரிடமிருந்து பெறவில்லை. தான் செலுத்தாத
பிரிமியத்தின் பலனை அவர் எப்படிக் கோர முடியும்?”
நீதிமன்றம், ஊழியரின்
வழக்கை நிராகரித்தது. அது தான் அமெரிக்கா!
இந்த வழக்கிற்குப் பிறகு,
பத்திரிகைகள் வேறு பல கம்பெனிகளில் இம்மாதிரி நடக்கிறதா என்று ஆராய்ந்தன. அனேகமாக
எல்லா கம்பெனிகளிலும் இதே நிலைமை தானாம்! இதை விடக் கொடுமை, எந்த ஊழியரின்
பெயரிலும், அவரது அனுமதியோ கையொப்பமோ இன்றியே இத்தகைய பாலிசிகளைச் சம்பந்தப்பட்ட
கம்பெனிகள் எடுக்கமுடியும் என்பதே.
ஊழியரிடம் பிரீமியத் தொகை பெறாத வரையில், அவரது பெயரில் கம்பெனி எடுக்கும் ஆயுள்
இன்ஷூரன்ஸ் பாலிஸியைப் பற்றிய தகவல்களை அவருக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை என்று
தீர்ப்பே இருக்கிறதாம்!
இந்த ஏற்பாட்டினால், தனது
ஊழியர்கள் மட்டுமின்றி, தனக்கு காப்பி டீ பீட்ஸா வழங்கும், அல்லது, கூரியர்
டெலிவரி செய்யும் ஊழியர்களின் பெயரிலும் பல பெரிய கம்பெனிகள் தாங்களே பிரீமியம்
செலுத்தி, பாலிசியைத் தங்கள் பெயரில் வசப்படுத்திக் கொண்டுள்ளனவாம். (வால்மார்ட்
மட்டுமின்றி, நெஸ்லே, ப்ராக்டர் & கேம்பிள், வால்ட் டிஸ்னி என்பவையும் இவ்வகைக் கம்பெனிகளில் சில என்கிறார்
ஆசிரியர்).
இந்தப்
பாலிசிகளைத் ‘துப்புரவாளர் பாலிசி’ (JANITOR’S INSURANCE) என்று இளக்காரமாகக்
கூறுகிறார்களாம். ஆனால் பணத்திற்கு முன்னே எந்த இளக்காரம் செல்லுபடியாகும் ? எண்பது
பில்லியன் டாலருக்கும் அதிகமாக இந்த பாலிசிகளில் இருக்கிறதாம்.
சட்டமே
அங்கீகரித்த பிறகு இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் சும்மா இருப்பார்களா? தங்கள் பாலிசிகளை
இன்னும் புதுமையாக்கி விற்றுக் கொண்டிருக்கிறார்களாம். ஒரு மிகப் பெரிய வங்கி,
தன்னிடம் கிரெடிட் கார்டு பெற்றுக்கொண்டவர்களின் பேரிலும், சேவிங்க்ஸ் மற்றும்
எந்த வகையான அக்கௌண்ட்டு வைத்திருந்தாலும் சரி, அவர்களின் பேரிலும் அவர்களுக்கு
எந்தத் தகவலும் தெரிவிக்காமலேயே, இம்மாதிரியான துப்புரவாளர் பாலிசி
எடுத்திருக்கிறதாம்!
-இந்தப்
பாலிசியின் இன்னொரு அம்சம் என்னவென்றால், ஊழியர் சாகும் வரையில், கம்பெனி
பிரீமியம் செலுத்திக்கொண்டே இருக்குமாம், அவர் கம்பெனியை விட்டு விலகிய பிறகும்!
ஏனென்றால், அந்தப் பிரீமியம் தொகையை அந்தந்த வருடத்து லாபத்திலிருந்து
கழித்துவிடலாம். இதனால் வரிச் சலுகை கிடைக்கிறது. ஊழியர் என்றைக்கு இறந்தாலும்
அப்போது கிடைக்கும் மொத்தத் தொகை அந்த வருடத்து வருமானமாகக் கணக்கிடப்படும். அதற்கும் வரி கிடையாது! இப்படி இரண்டு வகையிலும் கம்பெனிகளுக்கு
லாபமே!
இதைத்
தான், ‘தார்மிகம் சந்தைப்படுத்தப்படுகிறது’ என்கிறார், ஆசிரியர். ஆயுள் இன்ஷூரன்ஸ்
என்பது, இறந்தவரின் வாரிசுக்கு ஒரு நல்வாழ்வு வழங்கவேண்டும் என்னும் உயரிய
நோக்கத்துடன் ஏற்பட்டது. ஆனால் அது என்ன மாதிரியெல்லாம் ஆகி விட்டது பாருங்கள்,
என்கிறார்.
***இந்தியாவில், ஆயுள் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் அமெரிக்கா மாதிரியான, தொழிலாளர் விரோதமான, தார்மிக மோசடிகள் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், இங்கு, யாருக்கு ஆயுள் இன்ஷூரன்ஸ் வேண்டுமோ, அவரது கையொப்பமிட்ட விண்ணப்பம் வந்தாக வேண்டும். அது மட்டுமின்றி, இறந்தவரின் நேரடி வாரிசுகளான, மனைவி, மக்கள் (அல்லது சம்பந்தப்பட்டவரின் மதம் அல்லது பழக்கவழக்கங்களையொட்டி யார் வாரிசோ அவர்) மட்டுமே பாலிசி முதிர்வுத் தொகையைப் பெற முடியும். வங்கி அல்லது கடன் வழங்கு நிறுவனத்தின் பெயர் ‘BENEFICIARY’ என்று பாலிசியில் குறிப்பிட்டிருந்தாலும், அந்த BENEFICIARY யானவர், நேரடி வாரிசுகளின் பணத்திற்கு ‘டிரஸ்டி’ யாகத் தான் செயல்படவேண்டும் என்று வரையறுக்கப்பட்ட தீர்ப்புகள் உண்டு. எனவே தொழிலாளர் விரோதமான அமெரிக்க இன்ஷூரன்ஸ் பழக்கங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்படுவதில்லை.
****
நீங்கள் அடிக்கடி விமானப் பயணம் செய்பவராக இருந்தால், விமான நிலையப் புத்தகக் கடைகளில் இந்த WHAT MONEY CAN’T BUY என்ற நூல் பிரதானமாக வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு மணிப் பயணத்தில் சரளமாகப் படித்து முடித்துவிடக் கூடிய, சிந்தனையைக் கிளப்பும் நூல் இது.
“WHAT MONEY CAN’T BUY” –The Moral Limits of Markets” - by Michael J Sandel -Published by: Farrar, Strauss & Giroux (2012)
******
© Y.Chellappa
email: chellappay@yahoo.com
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?
ஏதோ நினைத்தேன்... ஸ்ஸ்ஸ்... பெருமூச்சு தான் வருகிறது ஐயா...
பதிலளிநீக்குWHAT MONEY CAN’T BUY - நல்லதொரு நூல் விமர்சனம்... அறிமுகத்திற்கும் மிக்க நன்றி...
நூல் அறிமுகத்திற்கு நன்றி அய்யா
பதிலளிநீக்குநூல் விமர்சனம் மூலமாகப் பல பயனுள்ள தகவல்களை அறியமுடிந்தது. நன்றி.
பதிலளிநீக்கு