புதன், ஏப்ரல் 24, 2013

அன்னைக்கு நானொரு பிள்ளை-2

அன்னைக்கு நானொரு பிள்ளை-2

ஸ்ரீஅன்னை என்னும் அவதாரம்


 ஸ்ரீஅன்னை என்று பக்தியோடு அழைக்கப்படும் மிர்ரா அல்ஃபாஸா அம்மையார், ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1878 ஃபிப்ரவரி மாதம் 21ம் நாள் அவதரித்தார். தந்தை மாரிஸ் அல்ஃபாஸா, வங்கித் தொழிலில் இருந்த துருக்கி நாட்டு யூதர். தாயார் மத்தில் இஸ்மலூ, எகிப்து நாட்டு யூதர். மிர்ராவுக்கு ஒரு அண்ணன் இருந்தார். ஃப்ரெஞ்ச் அரசின் அதிகாரியாக ஆஃப்ரிக்கா (காங்கோ) வில் நீண்ட காலம் பணியாற்றி, கவர்னர்-ஜெனரலாக ஓய்வுபெற்றார். (அன்னையின் ஆன்மிக வாழ்க்கையில் இவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை).

சிறு வயது முதலே தான் இந்த உலகத்தைச் சேர்ந்தவள் இல்லை என்ற எண்ணம் மிர்ராவுக்கு இருந்ததாம். உணவருந்தும் வேளையிலோ அல்லது சாதாரணமாக நாற்காலியில் அமர்ந்திருக்கும் பொழுதோ கூட, மிர்ராவுக்கு திடீர் என்று தியான உணர்வு வந்துவிடுமாம். தன்னை மறந்து ஆன்மிக இன்பத்தில் திளைத்துவிடுவாராம். (அவரது அன்னைக்கோ இது எரிச்சல் ஊட்டுவதாகவே இருந்ததாம்). அவருக்கு 11 வயது முதல் 13 வயது வரையிலான பருவத்தில், பல்வேறு ஆன்மிக அனுபவங்கள் ஏற்பட்டு, அதனால் இறைவன் என்ற ஒருவன் இருப்பதையும், முயன்றால் அவனோடு இணைய முடியும் என்பதையும் அவர் புரிந்துகொண்டாராம். தன் உடலை விட்டு வெளியேறி மீண்டும் உட்புகுவதான சித்துவேலையும் அவருக்கு அப்போது கைவந்ததாம்.

ஒவ்வோர் இரவிலும் தன் உடலை விட்டுக் கிளம்பி, தன்னுடைய பொன்னிற ஆடையின் கீழ் பாரிஸ் நகரம் முழுதுமே அடங்கிவிடும்படி விண்வெளியில் அவர் பறப்பாராம். மேலே மேலே அவர் பறக்க, துன்பமும் துயரமும் கொண்ட மக்கள் தாங்களும் பறந்து சென்று அவருடைய ஆடையைப் பற்றிக்கொண்டு தங்கள் துயர் தீர்க்கக் கோருவார்களாம். ஆடையைத் தொட்ட கணமே அவர்களின் துயர் நீங்கி, மலர்ந்த முகத்துடன் இறங்குவார்களாம். இம்மாதிரி கிட்டத்தட்ட ஓராண்டு வரை தனக்கு நேர்ந்ததாக ஸ்ரீஅன்னை (பின்னால்) எழுதினார்கள். (அவரது 13வது வயதில்). அப்போதிருந்தே தனக்கு முற்பிறவி ஞாபகங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பொதுமக்கள் பயிலும் பள்ளிகளில் அவரைப் படிக்கவைக்க அவரது தாயாருக்கு விருப்பம் இல்லை. (அவர், எகிப்திய பாரோ மன்னர்களின் வம்சத்தில் வந்தவர் என்றும் ஒரு கருத்து உண்டு. இல்லை யென்றாலும் கூட, மிக வசதியான குடும்பம் என்பதாலும் இருக்கலாம்). ஆகவே பெரும்செல்வந்தர்கள் பயிலும் ஒரு சிறப்பான பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார்.

14 வயது வந்தவுடன், ஓவியம் பயில அனுப்பப்பட்டார். 16வது வயதில் பாரிஸ் நகரின் உயர்ந்த கலைக்கல்லூரியில் குஸ்டாவ் மோரோ என்ற ஆசிரியரிடம் பயின்றார். தனது ஓவியங்களை பாரிஸ் கலைக்கூடத்தில் அரங்கேற்றவும் செய்தார். 19வது வயதில் (1897ல்) ஹென்றி மொரிஸே என்ற ஓவியரைத் திருமணம் செய்துகொண்டார். (அவரும் குஸ்டாவ் மோரோவின் மாணவர் தான். அவருடைய தகப்பனாரும் மிகப் பிரபலமான ஓவியராம். மிர்ராவின் பாட்டியின் ஏற்பாடு தான் இந்தத் திருமணம்). மிர்ரா- மோரிஸே தம்பதிக்கு ஆண்ட்றீ என்ற ஒரு மகன் பிறந்தார். (இவர் பின்னாளில் பாண்டிச்சேரியில் வந்து தங்கியிருந்து, ஸ்ரீ அன்னை அவர்கள் மறைந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின் 1982ல் மரணமடைந்தார்).

ஆன்மிக அனுபவங்கள்

மிர்ராவுக்கு 19-20 வயது இருக்கையில் ஆன்மிகப் புத்தகங்கள் நிறைய படிக்கக் கிடைத்தன. விவேகானந்தரின் ராஜயோகம் என்ற நூலும் அவற்றில் ஒன்று. ஒருமுறை அவரைச் சந்தித்த இந்திய நண்பரொருவர், ஸ்ரீகிருஷ்ணனை உள்ளுறை தெய்வமாக ஏற்கும்படியும், பகவத்கீதையைப் படித்துப் பின்பற்றுமாறும் கூறினாராம். இவையெல்லாம் ஆன்மிகப் பாதையில் அவரை நாளொருமேனியாக முன்னேற்றிக் கொண்டுவந்தது. அதற்கு உதவுவது போல், பல ஆன்மிக குருமார்கள் அவ்வப்பொழுது தியானத்தில் தோன்றி அவரது ஐயங்களைப் போக்கி வந்தார்களாம்.

அதற்கெல்லாம் சிகரமாக, 1904ம் ஆண்டில் அவரது தியானத்தில் ஒரு மாநிற உருவம் அடிக்கடி தோன்றி அவருக்கு உற்சாகமளித்து வந்ததாம். அதை அவர்கிருஷ்ணா என்று பெயரிட்டு அழைப்பாராம்.

 1905ல் அல்ஜீரிய நாட்டு லெம்ஸன் நகரில் மாக்ஸ் தியோன் என்ற மந்திரவாதியிடம் அவர் மறைபொருளான மந்திரதந்திரங்களை முறையாகக் கற்றுக்கொண்டார். அவரது மனைவியான அல்மா தியோனும் ஒரு மந்திரவாதியே. அவரிடமிருந்தும் மிர்ரா பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார். அடுத்தடுத்து ஏழுமுறை கூடு-விட்டுக்-கூடு-பாயும் ஸித்தியை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.

1908ம் ஆண்டில் மிர்ராவும் ஹென்றியும் விவாகரத்து பெற்றனர். (மகன் ஆண்ட்றீ, தகப்பனாரிடமே தங்கிவிட்டார்). மிர்ரா, தனது சகோதரன் மேத்யூவுடன் பாரிஸின் வால்-டி-கிரேஸ் என்ற தெருவில் 49ம் எண் வீட்டிற்குக் குடிபோனார்.

(2006ம் ஆண்டில் என் மகன் அரவிந்த கார்த்திக், ஒரு இசைப் போட்டிக்காக பாரிஸ் சென்ற போது, இந்த வீட்டை நேரில் பார்க்கும் பேற்றை அவனும், அவனுடன் சென்ற என் மனைவியும் மூத்த மகளும்  பெற்றனர். அப்போது எடுத்த படம் தான் இது. செடிகளுக்குப் பின்னால் இருக்கும் வீடு).

 
1910ல் மிர்ராவுக்கு, தன் ஜீவனின் மையத்திலேயே இறைவன் அமர்ந்திருப்பதாக ஓர் உணர்வு தெரிந்தது. அது முதற்கொண்டு இறைவனை அடைதலே  தன்  இலட்சியமாகக் கொள்ளலானார். ஆன்மிகத்தில் தன்னைப் போலவே நாட்டமும் அனுபவமும் கொண்டிருந்த பால் ரிச்ச்ர்டு என்பவரை 1911ல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து ஆன்மிகத் தேடலில் ஈடுபடலாயினர். ரிச்சர்டு, ஃப்ரெஞ்ச் பாராளுமன்றத்திற்குப் போட்டியிடவிரும்பி, ஃப்ரெஞ்ச் வாக்குரிமையுள்ள பாண்டிச்சேரிக்கு, வாக்கு சேகரிக்கும் பொருட்டு, அதற்குச் சில மாதங்கள் முன்பு தான் வந்து போனவர். அப்போது அரவிந்தரை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். எனவே, அந்த விவரங்களை மிர்ராவிடம் பகிர்ந்துகொண்டார். கேட்கவேண்டுமா? உடனே அந்த அரவிந்த ஞானியைத் தரிசனம் செய்தாக வேண்டுமென்ற தீராத ஆவல் மிர்ராவுக்கு ஏற்பட்டது. ஆனால் நாடுவிட்டு நாடு பயணம் திடீரென்று கிளம்ப முடியுமா? 1914ல் தான் முடிந்தது. ஆனால் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் கடிதம் மூலம் அவரோடு தொடர்பில் இருந்தனர்.

முதல் சந்திப்பு

1914 மார்ச் 7ம் தேதி பாரிஸிலிருந்து கிளம்பி, மார்ச் 29 அன்று பாண்டிச்சேரியை அடைந்தனர், மிர்ராவும் ரிச்சர்டும். அரவிந்தர் தங்கியிருந்த அறைக்கு வந்தனர். அவரைக் கண்ணுற்ற மாத்திரத்திலேயே மிர்ராவுக்குப் புல்லரித்தது. இவர் தான், தினமும் தனக்குத் தியானத்தின்போது தரிசனம் தரும் கிருஷ்ணா என்பதை ஒரே நொடியில் தெளிந்தார். தன் அனைத்து அங்கங்களும் பூமியில் தொடுமாறு நமஸ்கரித்தார்.  இந்தப்  பிரபஞ்சத்தின் ஆதி நாயகன் இவரே என்று புரிந்துகொண்டார். (அதாவது சிவபெருமானின் அவதாரம்).


அரவிந்தர் 1908ல் பாண்டிச்சேரிக்கு வந்துவிட்டிருந்தாலும், ஆன்மிகத்தில் ஏதோ ஒரு புதுவழியை உருவாக்க வேண்டுமென்னும் பேரவாவுடன் முயன்று கொண்டிருந்தாலும், அதுநாள் வரை எந்த குறிப்பிடத்தக்க நிகழ்வும் ஏற்பட்டிருக்கவில்லை. எனவே  மிர்ராவும் ரிச்சர்டும் வந்ததும், அன்றாடம் ஆன்மிகச் சர்ச்சையில் ஈடுபட்டதும் அவருக்கு மிகவும்  ஊக்கம் ஊட்டுவதாகவே அமைந்தது. அது மட்டுமல்ல, ஆர்யா என்ற ஆன்மிகப் பத்திரிகையைத் துவக்கி, அதில் அரவிந்தர் தனது ஆன்மிகக் கருத்துக்களை வெளியிட வேண்டுமென்றும் ரிச்சர்டு தான் ஆலோசனை வழங்கினார். 1914ல் அரவிந்தர் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 அன்று ஆர்யாவின் முதல் இதழ் வெளிவந்தது.

சுமார் ஓராண்டுக்குப் பிறகு, அதாவது 1915 ஃபிப்ரவரியில் அவர்கள் இருவரும் பாரிசுக்குத் திரும்பவேண்டி வந்தது. காரணம், அப்போது துவங்கிவிட்ட முதலாம் உலகப் போர். அடுத்த ஆண்டு அதாவது 1916ல் ஜப்பான் பயணமாகி, 1920 வரையான நான்காண்டுகள் அவர்கள் ஜப்பானில் கழித்தனர். டோரத்தி ஹாக்ஸன் என்ற ஆங்கிலப் பெண்மணியும் அவர்களோடு கூடவே இருந்தார். பின்னாளில் இவருக்கு தத்தா என்ற ஆன்மிகப் பெயரை ஸ்ரீஅன்னை வழங்கினார். மிர்ரா, ஸ்ரீஅன்னையாக அறியப்படும் முன்னரே அவரைத் தன் குருவாக ஏற்று இறுதிவரை உடனிருந்த முதல் வெளிநாட்டு சீடர், தத்தா தான் எனலாம்.

மிர்ரா ஜப்பானில் இருந்தபோது நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரனாத் தாகூரைச் சந்திக்க நேர்ந்தது. தன்னைப் போலவே ஆன்மிக நாட்டம் கொண்டிருந்த மிர்ராவை, இந்தியா வந்து தனது சாந்தினிகேதன் கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அழைத்தார், தாகூர். அது கூடவில்லை. மிர்ராவுக்கு தனது பரிசாக ஒரு டைப்ரைட்டரை வழங்கினாராம்.

1920ல் ஏப்ரல் 24ம் தேதியன்று ஜப்பனிலிருந்து பாண்டிச்சேரி வந்து சேர்ந்தனர், மிர்ராவும் ரிச்சர்டும். அன்று வந்த ஆன்மிக விளக்காம் மிர்ரா அல்ஃபாசா நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட்டார். அந்த நன்னாள் தான் இன்று.

(ரிச்சர்டு துறவறம் பூண்டவர் போல  ஓராண்டு காலம் வட இந்திய யாத்திரை மேற்கொண்டதாகவும்,. ஆனால் அதற்கிடையிலேயே மறுமணம் செய்து கொண்டு விட்டதாகவும் தெரிகிறது. அவருக்கும் மிர்ராவுக்கும் சட்டபூர்வமான விவாகரத்து பின்னர் தான் ஏற்பட்டதாம்).

மிர்ரா மறைந்து ஸ்ரீஅன்னை தோன்றுதல்

தாம்  எந்த ஆன்ம உந்துசக்திக்காகக் காத்திருந்தாரோ, அந்தப்  பெரும்சக்தி தான் மிர்ரா என்பதால், தனது ஆன்மிகத்தேடலைத் தீவிரப் படுத்தலானார் அரவிந்தர். அவரை மக்கள் பகவான் அரவிந்தர் என்றே இப்போது அழைக்க ஆரம்பித்தனர்.

அரவிந்தரின் சீடராக வந்த வெளி நாட்டுப் பெண்மணி என்றே அதுவரை ஆசிரமத்தில் கருதப்பட்டு வந்த மிர்ராவை, அவர் சாதாரணமானவர் அல்லர், அவர் தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என்று அறிவித்தார் அரவிந்தர். அன்று முதல் மிர்ரா என்ற பெயர் மறைந்து ஸ்ரீஅன்னை”' என்றே அவர் அழைக்கப் படலானார்.

1927ல் தி மதர் என்ற சிறிய நூலை எழுதினார் அரவிந்தர். அதில் நாம் வழக்கமாகக் குறிப்பிடும் அலைமகள், கலைமகள், மலைமகள் என்ற மூன்று சக்திகளுக்குப் பதிலாக, உலகில் நான்கு சக்திகள் உலவுவதாகக் கூறுகிறார். அவற்றை முறையே: மகேஸ்வரி, மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி என்கிறார். (அதாவது, ஆதிபராசக்தியானவள், மென்மையாக இயங்கும்போது மகேஸ்வரி யாகவும், ஊழித் தாண்டவமிட்டு அழிக்கும் சக்தியாகும்போது மகாகாளி யாகவும் இரண்டாகப் பிரிவதாக அர்த்தம்). இந்த நான்கு சக்திகளும் ஒன்றாகச் சேர்ந்த அவதாரமேஸ்ரீஅன்னை என்கிறார். அதன் பிறகு தான் எத்தகைய பேரவதாரம் நம் முன்னே மனித வடிவில் நடமாடுகின்றது என்பது ஆசிரமத்திலேயே பலருக்குப் புரிய ஆரம்பித்ததாம்.
ஆரோவில்-நானும் மனைவியும் 
 
(ஒரே காலத்தில் இரண்டு அவதாரங்கள் பூமியில் எப்போதும் நிகழ்ந்ததில்லை. சிவபெருமானாக ஸ்ரீஅரவிந்தரும், ஆதிபராசக்தியாக ஸ்ரீ அன்னையும் அவதரித்தது கலியுகத்தின் துயரங்களுக்கு மாற்றாகவே எனக் கருதவேண்டியிருக்கிறது என்று எனது குருநாதர் கூறுவார்).

1926 நவம்பர் 24ம் தேதி தான் அரவிந்த ஆசிரமம் அதிகாரபூர்வமாக ஏற்பட்டதாகக் கருதலாம். ஏனெனில் அன்று தான் ஸ்ரீஅரவிந்தர், தனது யோகத்தின் முக்கிய கட்டமாக, வெளியுலகத்திலிருந்து முழுமையாகத் தன்னைத் துண்டித்துக்கொண்டு ஆன்மிகத் தவத்தில் ஈடுபடலானார். தன்னைச் சுற்றியிருந்த 24 சீடர்களையும், ஆசிரமம் என்பதாகப் பெயரளவில் இருந்த நிறுவனத்தையும் ஸ்ரீ அன்னையிடம் ஒப்படைத்தார்.
(தொடரும்)

© Y.Chellappa

குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக