வெள்ளி, ஏப்ரல் 26, 2013

புதுமைப்பித்தனின் ‘உம்....உம்’ கதைகள்

தமிழ் எழுத்துலகத்திற்கு இரண்டு மாபெரும் எழுத்தாளர்களைத் தந்த பெருமை, கடலூருக்கு உண்டு. ஒருவர், ஜெயகாந்தன். இன்னொருவர், அவரது எழுத்துலக முன்னோடியான  புதுமைப்பித்தன்.

கடலூர் பாடலீஸ்வரர் கோவில் 
அதெப்படி, புதுமைப்பித்தன் திருநெல்வேலியைச் சார்ந்தவர் என்றல்லவா சொல்வார்கள் என்று நீங்கள் கேட்கலாம். தாசில்தாராக இருந்த அவரது தந்தை, பணி ஓய்வு பெற்ற பின் சென்றடங்கிய இடமே, திருநெல்வேலி. அப்போது புதுமைப்பித்தனுக்கு வயது பன்னிரண்டு. ஆகவே பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு, திருநெல்வேலியில் ஆனது. ஆனால் அவர் பிறந்தது, திருப்பாப்புலியூர் என்று அழைக்கப்படும் கடலூரில் தான் ! சொக்கலிங்கம் பிள்ளையின் மகன் விருத்தாசலமாக அவர் பிறந்தார். (1906ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ம் தேதி). ஆம், இன்று தான் அவரது 107 வது பிறந்த நாள்!
****


புதுமைப்பித்தனைப் பற்றி இக்கால இளம்தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்க வழியில்லை. இரண்டு தலைமுறைகளுக்கு முற்பட்டவர் ஆயிற்றே!

தமிழ்ச் சிறுகதையின் கௌரவமிக்க தலைமை இடத்தை அலங்கரிக்கும் ஒருசில எழுத்தாளர்களில் புதுமைப்பித்தனுக்கு முக்கிய இடம் உண்டு.

1933ல் ‘குலோப்ஜான் காதல்’ என்ற சிறுகதையுடன் அறிமுகம் ஆனவர். 1934ல் சென்னை வந்தார். அப்போது இலக்கிய உலகின் சூரியனாக விளங்கிய ‘மணிக்கொடி’ இதழில் பல கதைகளை எழுதினார். ‘ஊழியன்’, ‘தினமணி’, ‘தினசரி’ என்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். திரைப்படத்துறையில் நுழைந்து, ‘ஜெமினி’ நிறுவனத்தின் அவ்வை, காமவல்லி படங்களில் பங்களித்தார். சொந்தமாக ‘பர்வதகுமாரி புரொடக் ஷன்ஸ்’ தொடங்கினார். எம்.கே.தியாகராஜ பாகவதரின் ‘ராஜமுக்தி’ படத்திற்காக பூனே சென்று சுமார் ஒரு வருடம் தங்கினார். (1947-48) அப்போது காச நோய் பற்றியது. திருவனந்தபுரம் வந்தார். நோய் முற்றி 1948 ஜூன் 30ல் மரணம் அடைந்தார், தன் 42வது வயதில். (அப்போதெல்லாம் காச நோய்க்குச் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை).  மனைவி கமலா 1995ல் இறந்துபோனார். ஒரே மகள் இருக்கிறார். பெயர் தினகரி சொக்கலிங்கம்.
***
புதுமைப்பித்தன் எழுதிய 99 கதைகளைக் காலச்சுவடு பதிப்பகம் (நாகர்கோவில்) 2001ல் செம்பதிப்பாக உரிய விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளது. இவற்றுள் 97 சிறுகதைகளும், ‘சிற்றன்னை’ என்ற குறுநாவலும் ‘அன்னை இட்ட தீ’ என்ற முற்றுப் பெறாத நாவலும் இடம் பெற்றுள்ளன.

(‘புதுமைப்பித்தன் கதைகள்’-இரண்டாம் பதிப்பு-ஜூன் 2001, 824 பக்கம், ரூபாய் 350). பதிப்பாசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி.
***
புதுமைப்பித்தனின் ‘உம்...உம்’ கதைகள் என்ற தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறதல்லவா? என்ன செய்வது, இம்மாதிரியெல்லாம் ஏதாவது வித்தியாசம் இல்லையென்றால் என் வலைப்பூவைத் தொடுவீர்களா?

‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’  புதுமைப்பித்தனைப் பிரபலமாக்கிய கதை. அந்த நாளில் இம்மாதிரி இரண்டு பெயர்களை ‘உம்’ சேர்த்தோ, ‘அல்லது’ சேர்த்தோ கதைத் தலைப்பாக்குவது எழுத்தாளர்களின் வழக்கம். ஆகவே, இதே பாணியில் தலைப்பிட்ட வேறு ஏதாவது கதைகள் உள்ளனவா என்று அவருடைய 99 கதைகளின் பட்டியலைப் புரட்டிய போது கிடைத்தவை மொத்தம் நான்கே நான்கு. இவை தான்  ‘உம்.....உம்’ கதைகள்!

1.       காலனும் கிழவியும் (ப.401)
2.       சாமியாரும் குழந்தையும் சீடையும் (ப.464)
3.       கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் (ப.551)
4.       நிசமும் நினைப்பும் (ப.603)

காலனும் கிழவியும்
யமதர்மராஜனுக்கு ஒரு விதி உண்டாம். பூமியில் யாராவது இறக்கவேண்டிய வேளை வந்தால் தனது ஊழியர்களான கிங்கரர்களை அனுப்புவானாம். ஆனால் ‘போருக்கு முதல்வனையும், ஊருக்கு முதல்வரையும்’ தானே போய்த் தான் அழைத்துக் கொண்டுவர வேண்டுமாம்.

வெள்ளக்கோவில் சுடுகாட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு ஏழைக்கிழவி மருதாயி. ஊரில் அவள் தான் வயதில் மூத்தவள். ஆகவே, அவளுடைய வாழ்நாள் முடியவேண்டிய தருணத்தை சித்திரபுத்திரன் சொன்னபோது, வேறு வழியின்றி யமதர்மராஜனே பாசக்கயிற்றை எடுத்துக்கொண்டு தனது எருமைக்கிடா மீதமர்ந்து கிழவியின் குடிசைக்கு வருகிறான். தன் உண்மை வடிவில் வந்தால் கிழவி பயந்துவிடக் கூடுமென்று ஒரு கருத்த இளைஞனாக வருகிறான்.
கிழவிக்குக் கண் தெரிவதில்லை. தன் பேராண்டி தான் எருமை மாட்டை ஓட்டிக்கொண்டு இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறான் என்று கருதி, அவனைக் கடிந்து கொண்டபின், ‘எலே, மாட்டை தொளுவிலே கட்டி, பருத்தி விதையெ அள்ளி வையி’ என்கிறாள்.

எமன் பாவம், கிழவியின் மேல் பரிதாபப்பட்டு, அவள் சொன்ன மாதிரியே தனது எருமையைத்  தொழுவில் கட்டி, பருத்தி விதையை அள்ளி வைக்கிறான். ‘பூலோகத் தீனி’யைக் கண்டிராத எருமை திருதிருவென்று விழிக்கிறது. பிறகு அமைதியாக குடிசையில் நுழைந்து தன் காரியத்தை முடிக்க எண்ணுகிறான். ஆனால் கிழவியோ ‘எலே, அந்த வெற்றிலை சருகை எடுத்துக் கொடு’ என்கிறாள். கொடுத்துவிட்டு, ‘கிழவி, நான் யார் தெரியுமா? நான் தான்....’ என்று எமன் ஆரம்பிக்கிறான். கிழவியோ, ‘என்ன குடிச்சிபிட்டு வந்தியாலே! எனக்கென்ன கண்ணு பொட்டையாப் போச்சுன்னு நினைச்சிக்கிட்டியாலே?’ என்கிறாள். அவனுக்குக் கல்யாணம் பேசுவதற்கு யாரோ  வந்து போனதாகக் கூறுகிறாள்.

எமனுக்கு பயம் வந்துவிடுகிறது. அதற்குள், அவனது எருமை, கட்டை அவிழ்த்துக் கொண்டு ஓடுகிறது. அதை அடக்கி, கிழவியின் கண்ணில் படாமல் ஓரமாக நிறுத்திவிட்டு, தன் பாசக் கயிற்றை எடுத்துக் கொண்டு கிழவியை நெருங்குகிறான். கிழவியோ ‘எலே! கயிறு நல்லா உறுதியா இருக்கே! கொடு, நாலு ஓலையாவது சேத்துக் கட்டலாம்’ என்று அதைப் பிடுங்கி அவன் மூலமே விட்டத்தில் கொடியாகக் கட்ட வைக்கிறாள். இனியும் தாமதிக்க முடியாது என்று, யமன் தனது உண்மை வடிவை எடுக்கிறான். ‘நான் உன் பேரனில்லை, நான் தான் யமன். உன் உயிரை எடுக்க வந்திருக்கிறேன்’ என்கிறான்.
கிழவி அசரவேண்டுமே, ஊஹூம்! ‘உனக்கு உன் தொழில் சரியாகத் தெரியுமா?’ என்று ஏளனம் செய்கிறாள். உயிரைத் தானே உன்னால்  எடுக்கமுடியும்! ‘நான் இருந்த நெனப்பெ, என்னப் பத்தின நெனப்பெ, நான் வச்சிருந்த பொளங்கின சாமானெல்லாம் ஒன்னோடெ எடுத்துக்கிட்டுப் போவ முடியுமா? என்னமோ எமன் கிமன் இன்னு பயமுறுத்திரியே, ஒன் தொழிலெ ஒனக்குச் செய்யத் தெரியலியே! அதெத் தெரிஞ்சிக்கிட்டு எங்கிட்ட வா!’ என்று காலை நீட்டிக்கொண்டு முழங்காலைத் தடவுகிறாள் கிழவி.

‘என்ன சொன்னாய்! எனக்கா தெரியாது? இதோ பார், உன்னை என்ன செய்கிறேன்’ என்று உறுமிக்கொண்டு எழுகிறான் எமன். அந்தோ! அவன் வீச வேண்டிய பாசக்கயிறு அவனே கட்டிய கொடியாகத் தொங்குகிறதே !
‘உன்னாலெ என் உசிரெத்தானே எடுத்துக்கிட்டுப் போவ முடியும்? இந்த உடலைக்கூடத் தூக்கிட்டுப் போவ உனக்குத் தெறமை இருக்கா?’ என்று அவனைத் திக்குமுக்காட வைக்கிறாள், கிழவி.

தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறுகிறானாம், எமன்.
*****
சாமியாரும் குழந்தையும் சீடையும்
83 வரிகளே கொண்ட ‘சிறு’ கதை இது. கடவுள், மனிதனைப் படைத்து, தன்னிடமிருந்த அறிவையும் மனிதனிடமே கொடுத்துவிட்டான். சிருஷ்டித் தொழிலை நடத்துகிறவனுக்கு அறிவு அவசியம் என்பது அப்போது அவனுக்குத் தெரியாது. இப்பொழுது அவஸ்தைப்படுகிறான். – இது தான் சாராம்சம்.

நிசமும் நினைப்பும்
பதிப்பாளரைப் பார்த்து ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு போக வருகிறார், தமிழ் எழுத்தாளர். பதிப்பாளர் வர நேரமாகிறது. இவருக்கோ கடைசி பஸ் போய்விடுமே என்று கவலை. வேறு வழியில்லாமல் காத்திருக்கிறார். பதிப்பாளர் வந்ததும் நடக்கும் உரையாடல் இது:

(‘எல்.எஸ்.பி.’ என்பது பதிப்பாளர் பெயர். ‘வி.பி.’ என்பவர், எழுத்தாளர்.)
“என்ன வி.பி., மணி பத்தரை ஆயிட்டுது. லாஸ்ட்டு பஸ் போயிடப்படாது; நீ எதுக்கு வந்தேன்னு தெரியும்! நாளைக்குப் பத்து மணிக்கு இந்தப் பக்கமா வா..” என்றார் எல்.எஸ்.பி.

“என்னடா எல்.எஸ்.பி., என்னை ஒனக்குத் தெரியாதா? நாளை இல்லாட்டா, நாளன்னிக்கே வர்றேன்; வெளியே வா ஒரு நிமிஷம்...” என்றுகொண்டே எழுந்து நடையைத் தாண்டி நின்றார் (வி.பி.).
எல்.எஸ்.பி. நடைவாசலில் நின்றார்.

“ஒரு எயிட் அனாஸ் இருந்தாக் குடு” என்றார் எழுத்தாளர்.

கையில் வைத்திருந்த எட்டணாவை எல்.எஸ்.பி. இலக்கிய சேவைக்காகச் சம்பாவனையாக அளித்துவிட்டு, இருளில் மறைந்த திருவுருவத்தைத் திரும்பிப் பாராமல் உள்ளே வந்து உட்கார்ந்தார்.. (பிறகு தனது உதவியாளரிடம் கூறுகிறார்): ”ராமலிங்கம் அந்த பித்துக்குளி கணக்கிலே ஒரு எட்டணா கைப்பத்தெழுது; பொணம் எப்பப் பாத்தாலும் சமய சந்தர்ப்பம் தெரியாமெ வந்து கழுத்தை அறுக்கிறது..”

தமிழ்க் கதாசிரியன் என்றால் மிகக் கேவலமாக நடத்தும் பதிப்பாளர்கள், மாறுபாடாக, ஆங்கிலத்தில் பாடப்புத்தகம் எழுதும் ஆசிரியர்களை எவ்வளவு உயர்வாக நடத்துகிறார்கள் என்பதை இந்தக் கதையில் அருமையாக வர்ணிக்கிறார் புதுமைப்பித்தன். ராயல்டி இல்லாதது மட்டுமல்ல, புரூஃப் ரீடிங்கும் இலவசமாகவே செய்வித்துக் கொள்கிறார்கள். மரியாதையும் கொடுப்பதில்லை என்கிறார். 
1944 டிசம்பர் நவசக்தி ஆண்டுமலரில் வெளியான கதை. அதாவது, 70 வருடங்களுக்கு முன்பு. இப்போதாவது நிலைமை மாறியிருக்கிறதா என்று  தெரியவில்லை.

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
கடவுளுக்குத் திடீரென்று ஓர் ஆசை. பூலோகத்திற்குச் சென்று சிலகாலம் வாழ்ந்து பார்க்கலாமென்று. வருகிறார். கந்தசாமிப் பிள்ளையைப் பார்த்துக் கேட்கிறார் ”ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது?”
“டிராமிலும் போகலாம், பஸ்ஸிலும் போகலாம், கேட்டுக் கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே” என்கிறார், கந்தசாமிப் பிள்ளை.
நடக்கிறார்கள். “ரொம்பத் தாகமாக இருக்கிறது” என்றார் கடவுள்.

“இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ இருக்கிறது காப்பி ஹோட்டல்” என்றார் கந்தசாமிப் பிள்ளை. சரியென்று வருகிறார் கடவுள்.

“சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி” என்கிறார் பிள்ளை.
“தமிழை மறந்து விடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல்” என்றார் கடவுள்.
“அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும்” என்று தமிழ்க் கொடி நாட்டினார் பிள்ளை.

பில்லைத் தன் தலையில் கட்டிவிடுவாரோ என்று பயம் பிள்ளைக்கு. நல்லவேளை, ஒரு புது நூறு ரூபாய் நோட்டை எடுக்கிறார் கடவுள்.
.....இப்படிப் போகிறது கதை.
புதுமைப்பித்தனுக்கு மிக நல்லபேர் வாங்கித்தந்த கதை இது. (‘கலைமகள்’ 1943-அக்டோபர்-நவம்பர் இதழ்களில் வந்தது).
******
இந்த உம்.....உம் கதைகளை விடுங்கள். புதுமைப்பித்தனின் மிகச் சிறப்பான மற்ற கதைகள் பற்றிப் பேசுவோம்.

1934ல் மணிக்கொடியில் வெளியான மூன்றே பக்கச் சிறுகதையான ‘பொன்னகரம்’ தான் அவரை ஒரு சிறந்த எழுத்தாளராக உலகுக்குக் காட்டிய கதை.
இந்நூலின் பதிப்பாளரும் எழுத்தாளருமான சுந்தர ராமசாமியின் கூற்றுப்படி, புதுமைப்பித்தனின் ‘சிகர சாதனை’க் கதைகள்: ’சாபவிமோசனம்’, செல்லம்மாள்’ இரண்டும். அடுத்து, ‘சிற்பியின் நரகம்’ என்கிறார்.
*****
புதுமைப்பித்தனின் கதைகளைப் போலவே  அவர் எழுதிய  
முன்னுரைகளும் மிகவும் உணர்ச்சி பூர்வமானவை. உதாரணத்திற்கு ஒன்று:

“(இக்கதைகள்) யாவும் கலை உத்தாரணத்திற்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள்தாம் இவை.
“இம்மாதிரி எச்சரிக்கை செய்ய வேண்டிய நிலைமை யாதோ எனின், இரண்டொரு வருஷங்களுக்கு முன் நான் ‘புதுமைப்பித்தன் கதைகள்’ என ஒரு கோவையை வெளியிட்டேன். என்மீது அபிமானமுடையவரும், கலையின் ஜீவன் சேமமாக இருக்கவேண்டும் என்ற ஆசையில் அதற்குத் தம் கையாலேயே ஏழடுக்கு மாடம் கட்டி அதை சிறைவைக்க விரும்பியவருமான கலாரசிகர் ஒருவர், எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் நான் எப்பொழுது கதைகள் எழுதுவதை நிறுத்திக் கொள்ளப் போகிறேன் என்று ஆவலோடு கேட்டுவிட்டார். அதற்குப் பதில் சொல்லுவது மாதிரி இப்போது இந்தக் கதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறேன்....”
****
இதுவரை புதுமைப்பித்தனை நீங்கள் படிக்காமல் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் காலச்சுவட்டின் இந்தத் தொகுப்பை வாங்கிப் படித்துவிடுங்கள். 
(அவருடைய அடுத்த பிறந்த நாள் வருவதற்குள்).

இல்லையென்றால் தமிழ் இலக்கியத்தின் தலையாய ஒரு பகுதி உங்களுக்குத் தெரியாமலே போய்விடும்.

****
(இன்னொரு மாபெரும் வரலாற்று உண்மையை நான் மறைத்து விட்டதாக யாரும் கருதிவிடக்கூடாது என்பதால் சொல்கிறேன்: கடலூர் தான் என் மனைவியின் ஊரும்).
****
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

3 கருத்துகள்:

  1. அசர வைத்த கிழவி...

    பல நூல்கள் சிறு சிறு சுவாரஸ்யமான (முன்னுரை உட்பட) விமர்சனங்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. புதுமைப் பித்தன், இன்றைய எழுத்தாளர்கள பலருக்கும் வழிகாட்டி.
    குறைவான வாழ்க்கை நிறைவான எழுத்து.

    பதிலளிநீக்கு