புதன், ஏப்ரல் 03, 2013

"ரம்பையும் நாச்சியாரும்" - சா.கந்தசாமி

நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள புதிய நூல்(டிசம்பர் 2012),  "ரம்பையும் நாச்சியாரும்". (144 பக்கம், ரூபாய் 100).

1998ல் 'விசாரணைக் கமிஷன்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது  பெற்ற எழுத்தாளர் - சா.கந்தசாமி எழுதியது. 14 சிறுகதைகள் கொண்ட தொகுதி.

சிந்தனையைத் தூண்டும் முன்னுரையுடன் நூல் துவங்குகிறது.

"(ஒரு கதை) எழுதப்பட்ட பின் அவன் 
(எழுத்தாளன்) படைப்பில் இருந்து அன்னியனாகி விடுகிறான். அவனே எழுதியது என்றாலும் எழுதப்பட்ட பின்னர் அவனும் ஒரு வாசகன் தான். அதற்கு மேல் அதில் அவனுக்கு சம்பந்தம் இல்லை. அவன் எழுத்து எல்லோருக்கும் பொதுவாகி விடுகிறது. அதற்கு மொழியில்லை. தேசம் கிடையாது. எந்த மொழியில் மொழிபெயர்த்து எந்த தேசத்தில் படித்தாலும் அது படிக்கிறவன் கதை தான்...."

அதாவது, ஒரு கதை வெளியிடப்பட்டு விட்டபின் அதை ஏற்பதும்
மறுப்பதும் விமர்சிப்பதும் வாசகனின் உரிமை. எழுதியவனுக்கு  அதில் எந்த அதிகாரமும் கிடையாது என்கிறார் சா.கந்தசாமி.


நமக்கு மகிழ்ச்சி தானே. தன்னுடைய கதைகளை விமர்சிக்கும் முழு உரிமையையும் நமக்கே தந்துவிடும் எழுத்தாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்!

ஆவணப் படங்களும் குறும்படங்களும் எடுப்பது சா.க'வின் முக்கிய திறமையாகும். அதே திறமையை இந்த சிறுகதைகளிலும் தெளித்திருக்கிறார்.

தனது 28-வது வயதில் நண்பர்களுடன் சேர்ந்து  'கோணல்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார், சா.க. அதில் இவரது மூன்று கதைகள் இடம்பெற்றிருந்தன. இலக்கிய விமர்சகர் க.நா.சு., இந்த சிறுகதைத் தொகுப்பு, தமிழ்ச் சிறுகதைகளில்
ஏற்பட்டிருந்த தேக்கத்தை  உடைத்து முன்னே எடுத்துச் சென்றது என்கிறார். இப்போதைய தொகுப்பு, சா.க.வின் 72-வது வயதில் வெளியாகிறது. இன்றும் அதே விமர்சனம் பொருந்துவதாகவே எனக்குப் படுகிறது.

இயற்கையோடியைந்த காடும் மலையும் தோட்டங்களும் இவருக்குக் கதைக் களமாகின்றது. முன்கூட்டியே  ஊகித்துச் சொல்லமுடியாத மனித உணர்வுகளும் நடவடிக்கைகளும் கதைகளின் போக்கைத் தீர்மானிக்கின்றன. சில கதைகளின் முடிவு வாசகனுக்கே விடப்படுகிறது. சில கதைகள்  நான்கு முறை பார்த்தாலும் புரிபடாமல் போகும் மணிரத்தினத்தின் படங்கள்
போல சூட்சுமமானவையும் கூட.

நூலின் தலைப்பாக வரும்   "ரம்பையும் நாச்சியாரும்" கதையில் இரண்டு பெண்கள் வருகிறார்கள். ஒருத்தி, மைசூர் பூலோக ரம்பை என்ற மணமாகாத முதிர்கன்னி. இன்னொருத்தி, மணமான,
இளவரசி குந்தவை நாச்சியார். (சோழர் காலத்து இளவரசி அல்ல!). கதாநாயகன் தன்மையில் சொல்லுவதாக வரும் கதை இது. தான்  'ஒரு மாதிரி' என்று தன்னை அறிமுகப்படுத்திக்  கொள்கிறான். மணமாகி மனைவியை இழந்தவன். ('நடுத்தர
வயதில் ஒரு ஆண்மகன் மனைவியை இழப்பது போன்ற
கொடுமை ஏதுமில்லை. அது அவனுக்கு மட்டும் தான் இழப்பு
என்பதில்லை. எல்லோருக்கும் இழப்புத்தான்.') இல்லறத்தில் திருப்தியின்றி இருப்பதாக அவனிடம் சொல்கிறாள், குந்தவை. அதே நேரத்தில் ரம்பையிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் சொல்கிறாள். இவன் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அவர்களை அழைத்துப் போக ஏற்பாடு செய்கிறான். அதன் உள்நோக்கம் என்ன, இரண்டு பெண்களாலும் அவனுக்குக் கிடைக்கும் அனுபவம்  என்ன என்பதையெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. ஐம்பது
வருடங்களுக்கு மேலாகப் பண்படுத்தப்பட்ட ஒரு வடிவத்தில் இந்த சிறுகதையைத் தருகிறார், சா.க.

ஆனால் இந்த சிறுகதைத்  தொகுதியின் முத்திரைக் கதைகள்  என்று சொல்லவேண்டுமானால் அவை இந்த மூன்று கதைகள்
தாம்:

'வனம்': கதையின் இறுதி வரிகள் இவை:  'மாணிக்கமுத்து பெரிதாக அலறிக்கொண்டு கடுக்காய் மரங்களுக்கிடையில் ஓட ஆரம்பித்தான். கருப்பு நாய் பல்லை இளித்துக் கொண்டு சீறியது. அவள் கையில் இருந்த செருப்பால் நாயை அடித்தாள். அது கத்திக் கொண்டு ஓடியது. கிராம மக்கள் மாணிக்கமுத்துவையும், கருப்பு நாயையும் விரட்டிகொண்டு காட்டில் ஓடினார்கள்.' ஏன் ?

'அறிவழகன்': நல்லதற்குக் காலமில்லை என்பது தான் கதையின் உள்ளுறை. அதைப்  புரியவைக்க ஒரு முருகேசனைக்
கொன்றிருக்க வேண்டுமா என்பது தான் கேள்வி.

'தர்மத்தின் வாழ்வு': தள்ளுவண்டியில் பிஸ்கட் விற்கும் கேசவ்லால், முன்பின் தெரியாத பீகாரிலிருந்து ஓடிவந்த ஒரு சிறுவனைத்  துணையாக வைத்துக்கொண்ட கதை இது. அதிகாரம், பணம் இரண்டு மட்டுமே இன்று மனித நீதிக்கு உத்தரவாதம் தர முடிகின்ற யதார்த்தத்தை விளக்கும் கதை.

சா.கந்தசாமியின் அருவி போன்ற நடை, நூலைக் கையில்
எடுத்தால் முடித்துவிட்டுத் தான் வைக்கத் தோன்றுகிறது. மொத்தத்தில் ஒரு நல்ல நூல். மறவாது படியுங்கள்.
******

2 கருத்துகள்: