செவ்வாய், ஏப்ரல் 23, 2013

அன்னைக்கு நானொரு பிள்ளை-1

அன்னைக்கு நானொரு பிள்ளை-1
ஏப்ரல் 24 ன் மகத்துவம் 

பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் கோயில் கொண்டிருக்கும்
ஸ்ரீஅன்னை அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் 1985-86 ஆண்டுகளில் அவரைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. அதுவும் தமிழ்நாட்டில்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக வெளிக்கிளம்பிய அரவிந்த கோஷ் என்னும் வங்காளி இளைஞர், ‘அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு’ என்னும் வழக்கில் கைது செய்யப்பட்டர். (1908ல்). அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் புரட்சி உணர்வு பொங்கியெழுந்த சில இளைஞர்கள் தமக்குள் ஒரு ரகசியக் குழுவை அமைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தனர். தமது முக்கிய நடவடிக்கையாக, கல்கத்தாவின் போலீஸ் நிலையம் ஒன்றை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க முற்பட்டனர். அதில் ஒரு போலீஸ் அதிகாரி இறந்தார். இங்கிலாந்தில் படித்து, பரோடாவில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டே பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் பத்திரிகைகளில் தீவிரமான கட்டுரைகளை எழுதி வந்த அரவிந்த கோஷ் தான் அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்திருக்க வேண்டும் என்று அனுமானித்து அவரைக் கைது செய்தது போலீஸ். அலிப்பூர் தனிமைச் சிறையில் ஓராண்டுக் காலம் இருந்த பின்னர், பிரபல வழக்கறிஞராக இருந்த சித்தரஞ்சன் தாஸ், அரவிந்தருக்காக ஆஜராகி வாதாடி, அவரை விடுவித்தார்.

பிறந்தது முதலே இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த கொள்கைகளோ, பழக்கவழக்கங்களோ எவ்விதத்திலும் அவர்மீது படிந்துவிடாதபடி, ஒரு ஆங்கிலேயனைப் போல சிறப்பு ஆசிரியர்கள் மூலம் படிப்பிக்கப்பட்டவர், அரவிந்தர். அவரது தந்தை, ஆங்கில அரசில் செல்வாக்கு மிக்கதொரு மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். தன் மகனை ஒரு ஐ.சி.எஸ் அதிகாரியாக்க வேண்டுமென்ற கனவோடு மிக இளம் வயதிலேயே  அவரை லண்டனுக்குத் தன் நண்பர்வீட்டில் வைத்துப் படிக்க வைத்தவர் அவர். எனவே அரவிந்தர் இங்கிலாந்திலிருந்து முதல் முறையாக இந்தியா வந்திறங்கிய போது அவருக்கு இந்தியாவின் ஆன்மிகமோ, இந்திய மக்கள் மீது பிரிட்டிஷ் அரசு செலுத்திவந்த கொடுங்கோன்மையோ சற்றும் தெரிந்திருக்கவில்லை.

ஆனால் பம்பாய்த் துறைமுகத்தில் அவரது கப்பல் இறங்கிய மாத்திரத்திலேயே அவர் நெஞ்சில் அன்றுவரை கண்டறிந்திராத பேரமைதி ஒன்று இறங்கிவந்து தன்னைப் பூரணமாகச் சூழ்ந்துகொண்டதை உணர்ந்தார். அன்று முதல் படிப்படியாக அவர் ஆன்மிகப் பாதையை நோக்கி மெல்ல நடக்கலானார். அதுவரை தனக்குத் தெரியாதிருந்த தாய்மொழி வங்காளியையும், ஆன்மிகப் பொக்கிஷமான சமஸ்கிருதத்தையும் ஆனாஆவன்னாவிலிருந்து கற்கலானார். சிறிது காலத்திலேயே சுயமாக அம்மொழிகளில் கட்டுரை எழுதும் ஆற்றல் பெற்றார். 

ஆனால், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்து வந்த அரவிந்தருக்கு, இந்தியாவின் அன்றைய வறுமை, பேதைமை, விழிப்பின்மை போன்ற துயரங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், அதன் மீது திணிக்கப்பட்ட ஆங்கில அரசாட்சி தான் என்று புரிந்துகொண்டார். எனவே ஆங்கில அரசை வீழ்த்துவதற்கான முதல் கட்டமாகத் தனது ஆங்கில அறிவைக் கூர் தீட்டி, இளைஞர்களைக் கவரும் விதமாகப் பல கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அரசியல் விடுதலை பெற்றாலன்றி ஆன்மிக முயற்சிகள் வெற்றி பெறாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அப்படிப்பட்ட நேரத்தில் தான் சிறைப்படுத்தப்பட்டார்.

காவல் சிறையில் இருந்த அன்னாட்களில், அரவிந்தருக்குச் சொல்ல முடியாத மனக்கலக்கம் ஏற்பட்டிருந்தது. ‘இறைவனே, இந்தியா சுதந்திரம் பெற்றிடவும் அதன் பயனாக ஆன்மிக முன்னேற்றம் அடைந்திடவும் உழைப்பதன்றோ எனது தேடலாக இருந்தது! அம்முயற்சி வெற்றி பெறாதவாறு என்னைச் சிறையில் அடைத்துவிட்டாயே!’ என்று மனதில் நிறைந்திருந்த இறைமையை நோக்கி முறையிட்டார். ‘இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! வழக்கு விசாரணைக்கு வரும்போது, நீதிபதி முன்பு நான் என்ன பேசவேண்டுமென்று தெரியவில்லையே! எப்படி என்னை விடுவித்துக் கொள்வது?’ என்று குழம்பினார். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

பகவத்கீதையில் வில்லாளி அர்ஜுனனுக்குக் கீதையைப் போதித்த இறைவன் கிருஷ்ணனையே முழுமுதற்கடவுளாகக் கருதியவர் சுவாமி விவேகானந்தர். அந்த விவேகானந்தரே சிறைச்சாலையில் அவரது எதிரே சுவற்றில் காட்சி கொடுத்தார். அவருக்குத் தேவையான ஆன்மிகப் பயிற்சியை சுமார் பதினைந்து நாட்கள் வழங்கிய பிறகு அவர் மறைந்தார். அது மட்டுமா?

‘அரவிந்தனே, ஒரு முக்கிய காரியம் நிறைவேற வேண்டியே நீ இங்கு வரவழைக்கப்பட்டிருக்கிறாய். இந்திய சுதந்திரம் நீ போராடித்தான் வரவேண்டுமென்றில்லை. அது உரிய நேரத்தில் நிகழும். நீ செய்ய வேண்டிய காரியம் வேறொன்று உண்டு. அதற்குப் பயிற்றுவிக்கவே உன்னை இங்கு வரவழைத்தேன்’ என்று ஸ்ரீகிருஷ்ணன் அவர்முன்பு தோன்றி மறைந்தான். மாயக்கண்ணன் அல்லவா!

ஆனால் மீண்டும் மீண்டும் அவன் வந்து கொண்டே இருந்தான். ஆன்மிகமே அவரது எதிர்காலத் தேடலாக இருக்கப் போவதைத் தினமும் ஸ்ரீகிருஷ்ணன் அவருக்குப் போதிக்கலானன். ‘நீதிமன்றத்தில் என்ன பேசவேண்டுமென்று தானே குழம்பினாய்? மயங்காதே. நீ என்ன பேசவேண்டுமோ, அது ஏற்கெனவே உனக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்தான்.

விசாரணை நாள் வந்தது. அரவிந்தர் சாட்சிக் கூண்டில் நிற்கிறார். ‘என்ன பேசினேன் என்று எனக்கே தெரியாது. வார்த்தைகள் என்வாயிலிருந்து வந்துகொண்டே இருந்தன’ என்கிறார். அது மட்டுமன்றி இன்னொரு புது அனுபவமும் அவருக்கு ஏற்பட்டது. தன் முன்னால் அமர்ந்திருக்கும் நீதிபதியாக ஸ்ரீகிருஷ்ணனே இருக்கக் கண்டார். சுற்றிலும் இருந்த போலீஸ் அதிகாரிகளும், நீதிமன்ற ஊழியர்களும், தனக்காக வாதாடவந்த வழக்கறிஞரும், ஏனைய பொதுமக்களும் கூட, ஸ்ரீகிருஷ்ணனாகவே அவருக்குக் காட்சியளித்தனர்.   

வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டிலிருந்த சில அடைப்படை முரண்பாடுகளைக் குறிப்பிட்டு அவற்றைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகக் கொள்வதாகக் கூறி, அரவிந்தரைக் குற்றமற்றவரென்று விடுவித்தார். அரசியல் போராட்ட வீரராக நுழைந்தவர், ஆன்மிகவாதியாக மாறுவதற்கான இறை போதனையோடு ஓராண்டு சிறைவாசத்திலிருந்து வெளிவந்தார்.

சிறைமீண்ட அரவிந்தருக்குக் கல்கத்தா மக்கள் ‘உத்தர்பாரா’ என்ற இடத்தில் பெரும் வரவேற்பு கொடுத்தனர். அங்கு தான், சிறையில் தனக்கு என்ன நடந்தது, எப்படி ஸ்ரீகிருஷ்ணன் தன்னோடு தினமும் ஆன்மிக உரையாடல் நிகழ்த்தினான் என்பதை அரவிந்தர் வெளி உலகுக்கு எடுத்துரைத்தார். (‘உத்தர்பாரா சொற்பொழிவு’ என்ற தலைப்பில் சிறு நூலாக அரவிந்த ஆசிரமத்தில் அது கிடைக்கிறது).

ஆனால், போலீஸ் தரப்பும், அரசு இயந்திரமும் தமது தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. வேறு ஒரு புது வழக்கில் அரவிந்தரைச் சிக்கவைத்திட முயற்சி நடப்பதாகத் தெரிந்ததும், சில நாட்கள் கல்கத்தாவிலேயே தலைமறைவாக இருந்தார். அம்மாதிரி நீண்டகாலம் இருக்கமுடியாது என்பதால், மாற்று வழிகளைச் சிந்திக்கலானார். அப்போது, அலிப்பூர் சிறையில் அவரை ஆட்கொண்ட அதே குரல், “பாண்டிச்சேரிக்குப் போ” என்றது. இருள் மூடிய ஓர் இரவில், திசை தெரியாத ஆன்மிகத் தேடலை நோக்கி, வங்கக் கடலில் துவங்கியது ஒரு படகுப் பயணம்.

அன்னாளில், பாண்டிச்சேரிப் பிரதேசம், ஃபிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆகவே, இந்திய சுதந்திர வீரர்கள், ஆங்கிலேயரின் கைகளில் பிடிபடாமல் இருக்கத் தஞ்சம் புகும் நகரமாகப் பாண்டிச்சேரி விளங்கியது. “ஆனால் நான் பாண்டிச்சேரிக்கு வந்தது, அரசியல் கைதிலிருந்து தப்புவதற்கல்ல. இறைவனின் ஆணைக்குரலை ஏற்றே நான் வந்தேன்” என்று அரவிந்தர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

அரவிந்தரின் படகு பாண்டிச்சேரியை அடைந்தபோது அவரை முதன்முதலில் வரவேற்றவர் யார் தெரியுமா? மகாகவி பாரதியார் தான்! (ஏப்ரல் 1910).

‘ஒரு மாபெரும் ரிஷி இன்று வரப்போகிறார், வாருங்கள், அவரை வரவேற்போம்’ என்று தனது நெருங்கிய நண்பர்களோடு சென்று அரவிந்தரை எதிர்கொண்டு அவரை ஒரு தனி இல்லத்தில் குடிவைத்ததில் பாரதிக்குப் பெரும் பங்கு உண்டு. அதை விடவும், அரவிந்தரின் யோகமுயற்சியின் ஆரம்ப நாட்களில், ஸ்ரீகிருஷ்ண வடிவத்திடமிருந்து அவரைப் பராசக்தி வடிவத்திற்குத் திருப்பியவரும் பாரதியார் தான் என்றால் தவறில்லை. இந்த உலகைப் படைத்த பேரன்னை, ஆதிபராசக்தியே என்ற கொள்கையில் அரவிந்தர் முனைப்போடு தவமியற்றத் தொடங்கினார். பாண்டிச்சேரியில். அவரது சகோதரரும் சில நண்பர்களும் அதே வீட்டில் தங்கியிருந்தனர்.

“பாண்டிச்சேரிக்குப் போ” என்ற குரலால் அழைத்துவரப்பட்ட அரவிந்தருக்கு, தான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று புலப்படவில்லை. பாரதியாரின் தொடர்பு அவரைப் பராசக்தியிடம் கொண்டுசென்றது. பாரதியார் அவருக்குத் திருக்குறள், நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் போன்ற இலக்கியங்களைக் கற்பித்தும் பகவத்கீதை குறித்து உரையாடியும் அவரின் ஆன்மதாகம் தணியாதவாறு பார்த்துக்கொண்டார். ஆனாலும், அரவிந்தருக்கு ஏதோ ஒரு குறை யிருப்பதாகவே பட்டது. இந்தியாவின் வறுமையும் பிணியும் அறியாமையும் நீங்கிடுவதற்கான புதியதொரு யோகமுயற்சியைக் கண்டறியவேண்டும் என்று தனக்குள் பீறிட்டெழும் பேரவா, ஏனோ வல்லமையற்று இருப்பதாகத் தோன்றியது. வெறுமையாக நாட்கள் கழிந்தன.

அலிப்பூர் சிறைச்சாலையில் தினமும் தனக்குக் காட்சிகொடுத்து ஆட்கொண்ட இறைசக்தி ஏன் இப்பொழுது தன்னிடம் மீண்டும் வரவில்லை என்பது அவருக்குப் புரியாத புதிராக இருந்தது.

அந்தப் புதிருக்கு விடையாக வந்தார், ஃபிரான்சிலிருந்து ‘மிர்ரா அல்ஃபாஸா’ என்ற பெண்மணி. கண்ட உடனேயே இவர் தான் பராசக்தியின் வடிவம் என்று புரிந்துகொண்டார், அரவிந்தர். (மார்ச் 29, 1914).

முதல் முறையாக அரவிந்தரைக் கண்டவுடன், மிர்ராவுக்குத் தோன்றியதும் அதே போன்றதோர் ஆன்ம உணர்வு தான். ‘இவர் தான் இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி நாயகன்’ என்று அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். ‘தன்னையே முழுமையாகச்  சரணாகதியாக்கிய அத்தகைய நமஸ்காரத்தை நான் கண்டதில்லை’ என்று அரவிந்தர் எழுதினார்.

அந்த மிர்ரா அல்ஃபாசா அம்மையார், அரவிந்தரின் யோக முயற்சிக்கான ஆத்ம சக்தியாய்ப் பரிணமித்திடவும், “ஸ்ரீஅன்னை” என்னும் புனிதப்பெயர் தாங்கியவராய்ப் பின்னாளில், அரவிந்தருக்குப் பிறகு அவருடைய பூரண யோகத்தைப் பூமியில் நிறைவேற்றிடவும் உறுதி பூண்டவராய், பாண்டிச்சேரிக்கு நிரந்தரமாகத் தங்கிட வந்த நாள் தான், ஏப்ரல் 24ம் தேதி. (1920). அரவிந்த ஆசிரமத்தில் அது ஒரு புனித நாளாகக் கருதப்படுகிறது.         
(தொடரும்)

குறிப்பு: ஸ்ரீ அன்னை அரவிந்தர் எனது வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை இந்தத் தொடரில் எழுத இருக்கிறேன். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அல்ல.

எனது இல்லத்தில் அன்னை அரவிந்தர்
© Y.Chellappa

1 கருத்து:

  1. சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் அறியாதவை... வியப்பாகவும் உள்ளது... மேலும் அறிந்து கொள்ள தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு