இருநூறு ரூபாய்க்குச் சிறுகதைப் புத்தகம் வெளியிடுகிற ஆசிரியர் என்றால் உலகம்
அறிந்தவராகத் தானே இருக்கவேண்டும்! அவருக்கு அறிமுகம் எதற்கு என்ற கேள்வி எழலாம்.
என்ன செய்வது, என்னைப் போன்ற
பிறவிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள், புத்தகம் வாங்கி ஓராண்டு ஆகியும் படிக்க எடுக்காமல் இருக்கும் அதிசுறுசுறுப்பானவர்கள் (அல்லது சோம்பேறிகள் ?)-
அவர்களுக்கு அறிமுகம்
வேண்டியது தானே!
தமிழ்ச் சிறுகதை உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான தி. ஜானகிராமன்,
மாலனின் 'வித்வான்' என்ற கதையைப் படித்துவிட்டு, "சிறுகதையின் அடிவானத்தை எவ்வளவு தொலைவிற்கு ஒரு
தேர்ந்த கலைஞன் தள்ள முடியும்" என்று வியந்திருக்கிறார். பிரபஞ்சனோ, ஒரு படி மேலே போய், "எழுத்துக்கு ஒரு விளைவு உண்டு; அது சக்தி பொருந்திய பட்சத்தில், இந்தக் கதைகள், தமிழ் இலக்கிய உலகில் சாஸ்வதம் பெறும்"
என்று நம்பிக்கை கொள்கிறார்.
