வியாழன், மே 18, 2017

நான் அவனில்லை!

பதிவு எண் 40/2017
நான் அவனில்லை!
இராய செல்லப்பா

(‘மனசு’ வலைத்தளத்திற்காக எழுதப்பட்டது)

மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதியரை இன்று சந்திக்க நேர்ந்தது. இருவரும் அறுபது வயதுவரை பணிசெய்து முறையாக ஓய்வு பெற்றவர்கள். மகன் இப்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்திருக்கிறார்கள். மரியாதை நிமித்தமான சந்திப்பு.
எழுத்தாளர்,  பேராசிரியர்
இந்திரா  பார்த்தசாரதி அவர்கள்

இருவரும் பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டோம். சொந்த ஊர் எது, மனைவியின் ஊர் எது, எங்கு வேலை செய்தோம், எத்தனை முறை அமெரிக்கா வந்துள்ளோம் போன்ற தகவல்கள். அடுத்து வழக்கமாக அமெரிக்கா வருபவர்கள் கேட்கும் கேள்வி: எப்படிப் பொழுது போகிறது உங்களுக்கு?

அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவிலும் இது ஒரு முக்கியமான கேள்வி. ஒருவன் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் அவனுக்கு நிறைய நேரம் இருப்பதுபோலவும், என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழிப்பது போலவும் ஒரு பிரமையான எண்ணம் பலருக்கும் இருக்கிறது. கண்ணாடியில் பார்க்கிறவனுக்குத் தன்முகமே தெரிவது போல, பணியிலிருந்த போதும் ஓய்வெடுத்தே பழகிவிட்டவர்களுக்கு, யாரைப் பார்த்தாலும் அவர்களும் கை நிறையப் பொழுதை வைத்துக்கொண்டு செலவழிக்கும்விதம் அறியாமல் இருப்பதாகவே தோன்றிவிடுகிறது.
 
இப்படிக் கேள்வி கேட்பவர்களை நான் எளிதாகச் சமாளித்துவிடுவேன்:  இன்னும் ஒரு மாதம் கழித்து நாம் சந்திக்கலாமா? அப்போது, உங்களுடைய பொழுதை நீங்கள் எப்படிக் கழித்தீர்கள் என்று எனக்குச் சொல்வீர்களா? என்று எதிர்க் கேள்வி எழுப்புவேன். அவ்வளவே.

இன்று சந்தித்த தம்பதியரிடம் சொன்னேன்: நான் ஒரு எழுத்தாளனும் கூட. எனவே படிப்பதிலும் எழுதுவதிலும் எனக்குப் பொழுது செலவாகிறது. இருபத்துநாலு மணிநேரமே போதுமானதாயில்லை என்றேன். அந்தப் பெண்மணி ஆர்வத்துடன் கேட்டார்: எந்தப் பெயரில் எழுதுகிறீர்கள் என்று. சொன்னேன்.

தெரியுமே! பல வருடங்களாக நீங்கள் தினமலர் வாரமலரில் தெய்வீகம் பற்றி எழுதிவருகிறீர்களே! ஞாயிற்றுக்கிழமை வந்தால் உங்கள் கட்டுரையைத்தான் நான் முதலில் படிப்பேன் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

எனக்கு வெட்கமாகப் போனது. ஏனெனில் அந்த செல்லப்பா நான் அல்லன். இன்னொருவர். அந்தப் பெண்மணியால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
****
பல வருடங்களுக்கு முன்பு எனது கவிதைத்தொகுதி ஒன்று வெளியானபோது, சென்னையில் ஒரு புத்தகக்கடையில் என்னைப் பார்த்த (அப்போதே) முதுபெரும் எழுத்தாளர் ஒருவர், நலமாக இருக்கிறீர்களா? உங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் நான் தொடர்ந்து படிக்கிறேன். தமிழுக்கு உங்களால் இன்னும் நிறைய சேவைகள் பாக்கியிருக்கிறது என்றார். இந்தியில் இருந்து தமிழுக்கு ஏராளமான  கதைகளை மொழிபெயர்த்து கல்கி, கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி போன்ற இதழ்களில் வெளியிட்டுவந்தவர் அவர். எனக்கு மகத்தான அதிர்ச்சி. 

ஏனென்றால் அதுவரை நான் எந்தப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக எழுதியதில்லை. அவ்வப்போது ஒன்றிரண்டு வந்திருக்கும். அதையும் படித்தவர்கள் உடனே மறந்திருப்பார்கள். அமர இலக்கியம் எதையும் அப்போது நான் படைத்திருக்கவில்லை. இவர் சொல்வதைப் பார்த்தால் நிச்சயம் இது அவர் நினைவில் எழுந்த ஆள்மாறாட்டம்தான் என்று தெரிந்துவிட்டது.     

"மன்னிக்க வேண்டும் ஐயா, அது நானாக இருக்கமுடியாது. ஏனென்றால்... என்பதற்குள் அவர் இடைமறித்தார். இப்படித் தன்னடக்கத்துடன் இருந்துதான் இந்த நிலைமையில் இருக்கிறீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு எப்போதோ சாகித்ய அக்கடெமி கிடைத்திருக்காதா? இவ்வளவு வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டுமா? என்றார் அவர். 

அப்பொழுதுதான் அவர் யாரைச் சொல்கிறார் என்று புரிந்தது. தமிழின் மூத்த எழுத்தாளரும்,  ‘மணிக்கொடி’ பரம்பரையைச் சேர்ந்தவரும், ‘எழுத்து’ இதழின் ஆசிரியருமான சி.சு.செல்லப்பா அவர்களைத்தான் நான் என்று நினைத்துக்கொண்டுவிட்டார், பாவம்! சில மாதங்களுக்கு முன்புதான் சி.சு.செல்லப்பா தமிழ் எழுத்தாளர் என்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிவலோகப் பதவியை அடைந்திருந்தார்.  அந்த விஷயமே அவருக்குத் தெரியவில்லை என்பது எவ்வளவு சோகமான செய்தி!
*****
சென்னை அடையாறில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இந்து சீனியர் உயர்நிலைப் பள்ளியில் அடிக்கடி பேச்சு, கவியரங்கம் என்று ஏதாவதொரு நிகழ்ச்சிக்கு என்னை அழைப்பார்கள். கம்பீரமான ஷெர்வாணி அணிந்து சிங்கம் மாதிரி நடைபோடுவார் அந்தப் பள்ளியின் முதல்வராக  இருந்த வெங்கடாசலம் அவர்கள். ஒரு கவியரங்க நிகழ்ச்சியின் இடைவெளியில் இரண்டு ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். ‘இவரை நாம் அடிக்கடிக் கூப்பிடுகிறோம் அல்லவா? போன மாத நிகழ்ச்சிக்கும் இவர் தானே வந்திருந்தார்?'

இல்லை நண்பரே, போன மாதம் வந்தவர் ‘சிலம்பொலி’ செல்லப்பன்; நான் வெறும் செல்லப்பா மட்டுமே; அவர் வேறு, நான் வேறு; அவர் என்னைவிட பதினைந்து வருடமாவது பெரியவர் - என்று சொல்லவிரும்பினேன். அதற்குள் அவர்கள் கலைந்துவிட்டார்கள்.
*****
வங்கிப்பணியில் இருக்கும்போது எமது வங்கியின் அப்போதைய தலைவர் ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தார். தம் கீழ்ப் பணியாற்றும் மேலாளர் பொறுப்பில் இருந்தவர்களுக்குத் தம் கைப்படப் பிறந்தநாள் வாழ்த்துக்  கடிதங்களை அனுப்புவார். பிறந்தநாளன்று சரியாக வந்துசேரும்.  அதில் சிறு தவறு நடந்தாலும் பொறுக்கமாட்டார்.  என் பிறந்த நாளுக்கும் அதுபோல் வாழ்த்துக் கடிதங்கள் வரும். ஆனால் என் விஷயத்தில் மட்டும் அவருடைய செயலாளர்கள்  ஒரு சிறிய தவறு செய்துவிடுவார்கள். ‘To’ என்ற இடத்தில் செல்லப்பாவிற்குப் பதில், ‘புல்லப்பா’ என்று ஒருமுறை அடித்திருந்தார்கள்.

வங்கியின் தலைவர் இம்மாதிரி வாழ்த்து அட்டைகள் அனுப்பிப் பெயர்வாங்கிவிடுவதைப் பொறுக்காத ஒரு பொதுமேலாளர், தாமும் இம்மாதிரி வாழ்த்து அட்டைகளை  அனுப்பத்தொடங்கினார். அவருடைய செயலாளர் என் பெயரை ‘எல்லப்பா’ என்று டைப் செய்திருந்தார். புல்லப்பா என்று ஒருவர் நிச்சயமாக வங்கியில் இருந்தார். ஆந்திராவைச் சேர்ந்தவர். என்னைவிட பணிமூப்பு மிகுந்தவர். ஆனால் எல்லப்பா என்று ஒருவரும் வங்கியில் இல்லை. மேலும், செல்லப்பா என்ற பெயரில் கடந்த நாற்பது ஆண்டுகளில்  வங்கியில் இருந்தவன் நான் ஒருவனே. ஆனால்...? இம்மாதிரிச் சின்ன விஷயங்களை நாம் பெரிதுபடுத்தினால் தொலைந்தோம். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகள் ஆயிற்றே,  கருடனைப் பார்த்து சௌக்கியமா என்றல்லவா கேட்கும்? 
*****
தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி. ‘சாகித்ய அகாடமி’, ‘சம்ஸ்கிருதி சம்மான்’ விருதுகளைப் பெற்றவர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆகிய படைப்புத்துறைகளில் சிறந்து விளங்குபவர். ‘குருதிப்புனல்’ நாவல், ஒளரங்கசீப்’, ‘ ராமானுஜர்’ நாடகங்கள் போன்றவை, இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

அண்மையில் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானபோது, அஞ்சலி செலுத்தப்போயிருந்தார், இந்திரா பார்த்தசாரதி. அப்போது நடந்ததை அவருடைய  வார்த்தைகளிலேயே பார்ப்போமா?

நண்பரைப் பனிப்பெட்டியில் பார்த்துவிட்டு கனத்த நினைவுகளுடன் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று கேமராவுடன் இரண்டு இளைஞர்கள் என் முன் முளைத்தார்கள்.

‘‘அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?’’ என்றார் ஒருவர்.
கேமரா என்னை உற்றுப் பார்த்தது. தொலைக்காட்சி சேனல் பெயரைச் சொன்னார் இன்னொரு இளைஞர்.

அமரர் அசோகமித்திரன் 
முதலில் மறுத்துவிடலாம் என்ற எண்ணம் தலைத்தூக்கியது. இது நான் என் நண்பருக்குச் செய்யும் தர்மம் அன்று என்ற எண்ணம் அதைத் தடுத்தது. நான் யாரென்று தெரிந்து கேட்கிறார்கள் என்ற லேசான பெருமையும் என் முகத்தில் புன்னகையாக அடையாளம் கொண்டது.
நான் அவரைப் பற்றி இரண்டு நிமிடங்கள் என் கருத்துகளைச் சொன்னேன்.

கேமரா கண் மூடியது. என்னைப் பேசச் சொன்ன இளைஞர் மிகவும் இயல்பான, யதார்த்தமான குரலில் என்னைக் கேட்டார்:
உங்கள் பெயர் என்ன?

நான் யாரென்று தெரியாமலா என்னைப் பேசச் சொன்னார்கள்? புதிதாக வெளியிடப்படும் திரைப்படத்தின் முதல் ‘ஷோ’ முடிந்தவுடன் வெளியே வரும் ரசிக மக்களைத் தொலைக்காட்சி விமர்சகர்கள் கேட்பது போன்ற கேள்வியா என்று எனக்குத் தோன்றிற்று.

அவர்களுக்கு யாரோ சொல்லி யிருக்க வேண்டும். என் பெயரைச் சொல்லி, ‘‘அவர் அதோ போகிறார். கேளுங்கள்’’ என்று கூறியிருக்கக்கூடும். ஒன்று, கேமரா இளைஞர்கள் அந்தப் பெயரை மறந்திருக்கக்கூடும். அல்லது, அந்தக் குறிப்பிட்ட பெயரை உடையவர் நான்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காகக் கேட்ட கேள்வியாகவும் இருக்கலாம்.

நான் என் பெயரைச் சொன்னதற்கு, ‘‘தேங்க்ஸ்’’ சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
இந்த அனுபவம் எனக்குத் தேவை யென்று எனக்குத் தோன்றிற்று. என்னைப் பற்றி நானே மிகைப்பட நினைத்துக் கொண்டிருந்தால், என்னை பூமியின் தளத்துக்குக் கொண்டுவரும் அனுபவம்.
****
எந்த நிமிடத்திலும் ‘நான்’ என்று கர்வப்படுவதற்குத் தமிழ் எழுத்தாளனுக்கு அதிகாரமில்லை என்பதைப் புரிந்துகொண்டீர்கள் அல்லவா? ‘என்னைப் பற்றி நான்’ என்று பெருமையோடு என்னத்தை எழுதுவது?

என்றாலும், என்மீது மிகுந்த பிரியம் கொண்டு பரிவை கே குமார் அவர்கள் என்னை எழுதச் சொன்னதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக என்னைப் பற்றி இதோ சில வரிகள்:

கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். (‘இரா’ என்பது அவருடைய சொந்த ஊரான இராணிப்பேட்டையைக் குறிக்கும். ‘ய’ என்பது தகப்பனார் யக்யஸ்வாமி என்பதின் முதலெழுத்து. மற்றபடி, பழம்பெரும் எழுத்தாளரான ராய சொக்கலிங்கத்திற்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். ‘செல்லப்பா தமிழ் டயரி’ என்ற இணையதளத்தின்மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.

இவருடைய ஆறு புத்தகங்கள் விரைவில் புஸ்தகா நிறுவனத்தின்மூலம் வெளியாகவுள்ளன. (www.pustaka.co.in) (மின்னூல் பதிப்பாளர்கள்).

1 ஊர்க்கோலம் -கட்டுரைகள்;    
2 உண்மைக்குப் பொய் அழகு – சிறுகதைகள்;  
3 சொல்லட்டுமா கொஞ்சம்? -கட்டுரைகள்;   
4 காதல் பூக்கள் உதிருமா? -சிறுகதைகள்;  
5 அபுசி-தொபசி-பகுதி 1;   
6 அபுசி-தொபசி-பகுதி 2.

இவை தவிர மேலும் ஆறு புத்தகங்கள் இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும் நிலையில் உள்ளன. 2013 இல் வலைத்தளம் தொடங்கியிருந்தாலும் 2016 முழுவதும் எழுதாமல் இருந்துவிட்டார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் புத்துணர்ச்சியோடு எழுத ஆரம்பித்துவிட்டார். இதுவரை நாற்பது பதிவுகள் வெளியாகியுள்ளன.
*****
சரி, பொழுது எப்படிப் போகிறது என்ற கேள்விக்கு சற்றே நேர்மையான பதிலைச் சொல்லிவிடலாமா?

கணினித்துறையில் ஆர்வம் உள்ளவன் என்பதால், கடந்த பன்னிரண்டு மாதங்களாக, கணினி மொழிகளைப் படிப்பதில் எனது நேரத்தை அதிகம் செலவிட்டிருக்கிறேன். 

(1) சென்னை ஐஐடி நடத்தும் ஆன்லைன் படிப்பான IMAD- Introduction to Modern Application Development  என்ற படிப்பை வெற்றிகரமாக முடித்தேன் 

(2)  IIT Kharagpur நடத்தும்  Natural Language Processing  என்ற மிகக் கடினமான படிப்பையும் படித்தேன். தேர்வு மட்டும் எழுதமுடியவில்லை. தேர்வுத் தேதியில் அமெரிக்கா வந்துவிட்டேனே.  

(3) Chennai Mathematical Institute நடத்தும்   Design and Analysis of Algorithms என்ற மேலும் கடுமையான படிப்பில் பதிவு செய்துகொண்டேன். ஆனால் முந்தைய படிப்புகளுக்குக் கொடுத்த நேரம்போக, இந்தப் படிப்புக்கு நேரம் மீதி இல்லாததால், முடிக்கமுடியவில்லை. இந்த ஆண்டு முடிப்பேன். 

(4) பைத்தான் என்ற -இன்று மிகவும் அதிகம் டிமாண்டு உள்ள - கணினி மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். Python Language  - Harvard University ( edX course). இதைத்தொடர்ந்து 

(5) Big Data Analytics என்ற இன்னொரு மிகுந்த டிமாண்டு உள்ள படிப்பையும் ஆரம்பித்துள்ளேன். முடிக்க ஆறேழு மாதங்கள் ஆகலாம்.

இவை எல்லாமே கணித மற்றும் கணினித்துறையில் மிக நுட்பமான, அதே சமயம் மிகுந்த உழைப்பைக் கோருகின்ற படிப்புகளாகும். ஆர்வத்தின் காரணமாகவே படிக்கிறேன். எனவே வாரத்தில் ஒன்றுக்குமேல் வலைப்பதிவு எழுதவும் கூட எனக்கு நேரம் இல்லை என்பதுதான் உண்மை நிலை.

இதையே ‘மனசு’ தளத்திலும் படிக்கலாம். நன்றி குமார் அவர்களே!

*****
(c) Y Chellappa

23 கருத்துகள்:

 1. அங்கே படிக்கவில்லை. இங்கே படித்துவிட்டேன். என்னைப் பற்றி நான்! சிறப்பாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. அருமை ஐயா
  தங்களின் படிப்புத் தொடரட்டும் ஐயா

  பதிலளிநீக்கு
 4. தங்களின் ஆர்வத்திற்கு வாழ்த்துகள் ஐயா...

  பதிலளிநீக்கு
 5. தனித்துவம் மிக்கதாக சிறப்பான பதிவு..

  வாழ்க வளம்!..

  பதிலளிநீக்கு
 6. 'நான் அவரில்லை' - ரொம்ப நல்லா இருந்தது. இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு நேர்ந்தது வினோதமானது. இப்போ தொலைக்காட்சி ஊடகங்களில் உள்ளவர்களுக்கு சினிமா நடிகைகளைவிட்டால் வேறு என்ன தெரியும்?

  திரு பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் ஒரு தடவை சொல்லியிருந்தார். ஒரு விழாவுக்கு அவரை அழைத்துவிட்டு (மேடையில் பேச), ஒழுங்காகப் பேச 4 நிமிடம் கூட விடவில்லையா. அலட்சியமாக அவரை நிறுத்தச் சொல்லிவிட்டார்களாம் என்று வருத்தப்பட்டுச் சொல்லியிருந்தார் (இது அவர் இறக்க 7-8 வருடத்துக்குள் நிகழ்ந்தது). இப்போது உள்ள தலைமுறைக்கு முந்தைய தலைமுறையின் மாணிக்கங்கள் கண்ணில் தெரிவதில்லை. வெறும் டி.ஆர்.பி, பிஸினஸ் லைக் என்று அவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

  நீங்கள் படிக்கும் படிப்பெல்லாம், நான் எப்போது படிப்பேனோ (எனக்குத் தொழிலுக்கு அவசியம்.. ஆனால் சோம்பல்). வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குச் சோம்பலா? நம்பமுடியவில்லையே! உங்கள் பணிக்குத் தேவையானதைப் படிக்கவேண்டியது மிக அவசியம் அல்லவா? இன்றே தொடங்குங்கள்! எமது நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 7. நான் உங்கள் பெயர், 'இராயப்பன் செல்லப்பா' என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு வேளை, ராயபுரமாக இருக்கலாமோ என்றும் நினைத்தேன். ஒரு பின்னூட்டத்தில் இதனைக் கேட்டிருந்தேன். இன்றைக்குத்தான் தெரிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 8. இந்தத் தங்களின் பதிவினில் கூடுதலாக பல படங்கள் காட்டப்பட்டுள்ளன என்பதால் மேலும் அழகுக்கு அழகூட்டப்பட்டுள்ளன.

  ’மனசு’ பக்கம் நல்ல மனசோடு நான் இட்டுள்ள பின்னூட்டம் இதோ:

  -=-=-=-

  THE VERY GREAT MAN இராய செல்லப்பா அவர்களின் MATURED எழுத்துக்கள் உச்சி முதல் பாதம் வரை அருமையாக உள்ளன.

  படித்ததும் உச்சி குளிர்ந்து போனேன்.

  அவரைப் பாதம் பணிந்து வணங்கிடுகிறேன்.

  பகிர்வுக்கு நன்றிகள்.


  மீண்டும் என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான நல்வாழ்த்துகள். வாழ்க !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உச்சி குளிரவைப்பதில் தங்களுக்கு இணை தாங்களே! இந்த வெயில் காலத்திற்கு மிகவும் தேவைத்தான். மிக்க நன்றி!

   நீக்கு
 9. நகைச்சுவை ஊடாடிய சுய அறிமுகம்.உங்கள் பொழுதுபோகு பிரமிக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி ஏதாவது படித்துக்கொண்டிருந்தால் மூளை நன்றாக இயங்கும் என்றும், அதனால் அல்செய்மர் போன்ற மறதி நோய்களைத் தள்ளிப்போடலாம் என்றும் சொல்கிறார்களே! அதனால்தான் படிக்கிறேன். குறுக்கெழுத்திலும் மிகுந்த நேரம் செலவழிப்பதுண்டு. ஆனாலும் பயமாகவே இருக்கிறது-ஏனெனில் 'உண்மை அறிவே மிகும்..' என்றல்லவா வள்ளுவர் சொல்லியிருக்கிறார்!

   நீக்கு
 10. என்னைப் பற்றி நானே மிகைப்பட நினைத்துக் கொண்டிருந்தால், என்னை பூமியின் தளத்துக்குக் கொண்டுவரும் அனுபவம்./இதையே நான் குமாருக்கான என்னைப் பற்றி நானில் கூறி இருக்கிறேன் மனசு குமாரின் தளத்துக்கும் விஜயம் செய்தேன்
  ****

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வழியைத்தானே நானும் பின்பற்றுகிறேன் தலைவரே! மிக்க நன்றி.

   நீக்கு
 11. அருமையான அறிமுகம்
  அதற்கான முன்னுரையை மிகவும் இரசித்தேன்

  பணியில் இருந்ததை விட இப்போதுதான்
  அதிக பிஸியாக இருக்கிறீர்கள் என
  நினைக்கிறேன்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், பணியில் இருந்தபோது நாம் செய்தாலும் செய்யாவிட்டாலும் பேர் வந்துவிடும். இப்போதோ, நாமே உழைத்தால்தானே பேரெடுக்க முடியும்? மூளையும் உடலும் ஒத்துழைக்கும்வரையில் எல்லாம் இன்பமே!தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 12. அங்கேயும் படித்தேன்.
  இங்கேயும் படித்தேன்.
  அருமையான கருத்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல்வேறு பணிகளுக்கிடையிலும் நீங்கள் விடாமல் வந்து விமரசிக்கும் உழைப்பு பாராட்டுதலுக்குரியது நண்பரே! மிக்க நன்றி.

   நீக்கு
 13. மிக்க நன்றி நண்பரே! தாங்கள் அமெரிக்கா வந்தும்கூட, தங்களை நேரில் பார்க்க முடியாமல்போய்விட்டது வருத்தமே! சென்னை வந்ததும் சந்திக்கலாம். நன்றி!

  பதிலளிநீக்கு
 14. அற்புதம் சார்.அனுபவங்களை சுவையாக சொல்வதில் வல்லவர் தாங்கள். இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. தங்களுடைய கணினி ஆர்வம் வியக்க வைக்கிறது. வாழ்த்துகள் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 15. அங்கும் படித்திருந்தேன் நண்பரே....

  பதிலளிநீக்கு