ஆஸ்ப்ரோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆஸ்ப்ரோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 06, 2017

எத்தனை வலிகளடா இறைவா!

பதிவு எண் 36/2017
எத்தனை வலிகளடா இறைவா!
   -இராய செல்லப்பா

ஐம்பது வருடங்களுக்கு முன்பு விகடன், கல்கி, கலைமகள் இதழ்களில் வரும் முழுப்பக்க விளம்பரங்களில் பட்டுப் புடவைகளோ, பாரம்பரிய வேஷ்டிகளோ,  பெண்களின் மேல்-உள்ளாடையோ, ஆண்களின் கீழ்-உள்ளாடையோ, செயற்கைமுறை கருத்தரிப்பு நிலையங்களோ வந்ததில்லை. டால்டா போன்ற ‘தாவர எண்ணெய்’, கோல்கேட், ஃபோர்ஹான்ஸ் என்ற பற்பசைகளின் விளம்பரங்கள் வரும். பற்பசை என்றால் என்ன, எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்கமாக இரண்டு பக்க விளம்பரமாக இருக்கும்.


மருந்து விளம்பரங்கள்தாம் அதிகம். மூல வியாதிக்கான ‘ப்ரிப்பரேஷன் எச்’, ‘ஹெடென்ஸா’ மருந்துகளின்  விளம்பரங்கள் விடாமல் வரும். அதை உடலின் எந்த இடத்தில் வைத்து, எப்படிப்  பயன்படுத்துவதென்ற விளக்கமும், அதற்கான டியூபும் இலவசம் என்ற முக்கியத் தகவலும் இருக்கும். ஒரு நீரிழிவு மாத்திரை (பெயர் மறந்து விட்டது) விளம்பரம் தவறாமல் வரும். அதில் டயபெட்டிஸ் மெலிட்டஸ் என்றால் என்ன என்று வரிந்து கட்டிக்கொண்டு விளக்கியிருப்பார்கள். கேசவர்த்தினி, மைசூர் சந்தன சோப் விளம்பரங்களும் அப்படியே. இரண்டு பெண்கள் உரையாடுவது போல் பெரிய அளவு விளம்பரங்கள் அவை.

மிக முக்கியமாக ஆஸ்ப்ரோ, அனாசின் என்ற இரண்டு மருந்துகளின் விளம்பரமும் அடிக்கடி வரும் என்பது நினைவில் இருக்கிறது.

இந்திரா காந்தி பதவிக்கு வரும் முன்பு, ‘கை’ சின்னத்திற்கு உரிமை அனாசின் மாத்திரையிடம்தான் இருந்தது! கட்டை விரலை மடக்கி மீதி நான்கு விரல்களையும் நீட்டும் கையின் வடிவம், ‘நான்கு விதமான வலிகளை நொடியினில் போக்கும்’ என்ற (மாதிரி) வாசகத்துடன் இடம் பெற்றிருக்கும். தலை வலி, உடல்வலி என்ற இரண்டும் ஞாபகம் இருக்கிறது. மற்ற இரண்டு வலிகள் என்ன என்பது மறந்துவிட்டது. (எனக்கு அப்போது வராத வலிகளாக இருக்கவேண்டும்!)

இராணிப்பேட்டை- வக்கீல்தெரு சந்தில் குடியிருந்த என் இளமைக் காலத்தில்,  அடுத்திருந்த ஒண்டுக்குடித்தனக்காரர் தர்மேஸ்வரன் சார். (சில வருடங்கள் இருந்தார், பிறகு வீடு மாறிவிட்டார்.) வேலூரில் அல்லது ஆற்காட்டில் வி.பி.திருவேங்கட முதலியார் (‘VBT) கடையில் வேலை பார்த்துவந்தார். அனாசின் மாத்திரைக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. 

விடுமுறை நாட்களில் பார்த்திருக்கிறேன்:  மாலை நான்கு மணி ஆனதும் அவருக்கு அனாசின் மாத்திரை ஒன்றைக் காப்பியுடன் சாப்பிட்டாக வேண்டும். இல்லையென்றால் மனிதர் ஒற்றைத் தலைவலியால் துடித்துப்போவார். முகம் சிவந்து கண்களில் நீர் வழியும். தனது அலுவலகத்தில் மேஜை டிராயரில் எப்போதும் அனாசின் வைத்திருப்பாராம். அவருக்கு உதவுவதற்காகவே என் அப்பா, சில அனாசின் மாத்திரைகளை வாங்கி, உத்தரத்தில் செருகியிருப்பார். (ஓட்டு வீடு!)  

நாடெங்கும் அனாசின் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவந்த காலம் அது. திடீர் திடீரென்று அனாசின் ஸ்டாக் இல்லை என்று தகவல் வரும். உடனே, வெளியூர் போவோரிடம் எப்படியாவது அனாசின் வாங்கிவருமாறு தர்மேஸ்வரன் சாரின் மனைவி பணிவோடு வேண்டிக்கொள்வார். 

ஒருமுறை, தர்மேஸ்வரன் சார் தலைவலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி, இஞ்சியோ சுக்கோ உரைத்து நெற்றியில் ‘பற்று’ப் போட்டார். ஐஸ்கட்டியால் தடவினார். பயனில்லை. உடம்பெல்லாம் வேர்த்துக்கொண்டிருந்தது. ஒன்றிரண்டு மாத்திரை முன்கூட்டியே வாங்கி வைக்காதது ஏன் என்று ஆத்திரப்பட்டுக்கொண்டிருந்தார் தர்மேஸ்வரன். 

அப்போதுதான் விளையாடிவிட்டு உள்ளே நுழைந்த நான், உத்திரத்தில் செருகியிருந்த ஒற்றை அனாசின் மாத்திரையை எடுத்துக்கொடுத்தேன். பல நாளாக அங்கேயே தங்கிவிட்டதால், மழைநீர்பட்டு நனைந்து, பின் வெய்யில் உலர்ந்து, அசோகவனத்து சீதை மாதிரி தனது பிளாஸ்டிக் உறைக்குள் நெளிந்துகொண்டிருந்தது. பிரிக்கும்போதே தூள் தூளாக உதிர்ந்து வந்தது. ஆனால் சார் விடுவாரா? மாத்திரை இல்லையென்றால் அதன் பிளாஸ்டிக் உறையையே மாத்திரையாக பாவித்து சாப்பிடும் அளவுக்கு ஒட்டுறவு கொண்டிருந்தவர் ஆயிற்றே! என்னை மிகுந்த நன்றியுடன் பார்த்தார். உதிர்ந்த மாத்திரையைக் காப்பியில் கலந்து ஒரே மிடக்கில் குடித்தார். தலைவலி போயே போச்! ‘நீ தீர்க்காயுசா இருக்கணும்ப்பா’ என்று வாழ்த்தினார்.  

தர்மேஸ்வரன் சார் இப்போது இருந்தால் இராமானுஜருக்கு அடுத்தபடியாக 120 வருடம் வாழ்ந்த பெருமை அவருக்கும் கிடைக்கும்.

பத்து வருடங்களுக்கு முன்னால் அனாசின் மீது (என்ன காரணத்தாலோ) தடை உத்தரவு வந்ததாக ஞாபகம். இப்போது மீண்டும் கிடைக்கிறது.

(ஆஸ்ப்ரோவும் அதே மாதிரி பயன்படுத்துவோரிடம் போதைத்தன்மையை (addiction) உண்டாக்கிய இன்னொரு மாத்திரை. ஆஸ்ப்ரோ பக்தர் ஒருவரும் அப்போது எங்கள் தெருவில் இருந்தார். அவரைப் பற்றி இன்னொருநாள் பார்ப்போம்.)
****
‘களவும் கற்று மற’ என்று ஔவையார் சொன்னதை அந்நாளில் பள்ளிப் பிள்ளைகள் தவறாமல் கடைப்பிடிப்பது வழக்கம். என்னுடைய பென்சில், ரப்பர், மயிலிறகு, செல்லாத தம்பிடிக்காசு (பிரிட்டிஷ் அரசர் தலை உள்ளது) போன்றவை தவறாமல் களவாடப்படும். தபால்கவர்களில் வரும் தபால்தலைகளைச் சேகரித்து ஜியாமெட்ரி பாக்ஸில் வைத்தால் அவை திடீரென்று காணாமல் போய்விடும்....இப்படி. ஆனால் சுட்டுப்போட்டாலும் எனக்கு அந்தப் பழக்கம் கைவரவில்லை. விட்டுவிட்டேன். ஆனால் ரகசியமாக இரு பையன்கள் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தூரத்திலிருந்தே களவாடும் ஆற்றல் என்னிடம் இருந்தது. அப்படிக் கவர்ந்த ஒரு விஷயத்தை ஒரு நாள் செயல்படுத்த விரும்பினேன்.

என் உறவினர் ஒருவர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவர். காலியான சிகரெட் பெட்டிகளை எனக்குத் தருவார். அதை விளையாடுவதற்குப் பயன்படுத்துவோம். பொன்வண்டுகளைப் பிடித்து அதனுள் வைப்போம். 

‘பெர்க்லி’, ‘பாஸிங் ஷோ’, ‘வில்ஸ்’ என்ற பெயர்கள் எனக்குப் பழக்கமானது அவரால்தான். ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ஒவ்வொருவிதமான வாசனை இருந்ததை அறிந்தேன். பெரியவன் ஆனதும் நாமும் சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற ஆசை வளர ஆரம்பித்தது. அப்போதுதான் நண்பன் ஒருவன் சொன்னான், ‘முதலில் பீடி குடித்து பழகிக்கொள். எடுத்த எடுப்பில் சிகரெட் குடித்தால்  இருமல் வந்துவிடும்’ என்று.

பீடி குடிக்கவேண்டும் என்று நினைத்தால் செயல்படுத்துவது எளிது. ஏனென்றால் காசு கொடுத்து பீடி வாங்கவேண்டியதில்லை. அக்கம்பக்கத்தில் எல்லார் வீட்டிலும் பீடி சுற்றும் வேலை நடந்துகொண்டிருக்கும். லேபில் ஒட்டிய ஈரம் காய்வதற்காக முறத்தில் பீடிகளை உலர்த்தியிருப்பார்கள். நாமே போய் ஒன்றிரண்டு பீடிகளை எடுத்துக்கொள்ளலாம். ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் எங்கே போய்ப் பிடிப்பது? 

தெருவில் பீடி பிடித்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால், பெரியவர்கள் இல்லாதபொழுது, வீட்டின் இருட்டான பகுதியில் நின்றுகொண்டு பிடிப்பது நல்லது என்று நண்பர்கள் ஆலோசனை கொடுத்தார்கள். பீடி பிடித்த வாசனை தெரியாமல் இருக்க மூன்று அனாசின் மாத்திரைகளை விழுங்கவேண்டும் - என்னும் ஆலோசனையைத்தான் நான் ‘கவர்ந்து’ வந்திருந்தேனே!

அந்த நல்லநாளும் வந்தது. உறவினர் வீட்டு திருமணத்திற்கு அனைவரும் போயிருந்தனர். நான் முன்னதாகவே திரும்பிவந்துவிட்டேன். வாசல்கதவைத் தாழிட்டேன். தர்மேஸ்வரன் சார் வீட்டில் எட்டிப்பார்த்தேன். கதவு திறந்திருந்தது. ஆனால் யாரும் இல்லை. நல்ல சமயம் என்று, எங்கள் வீட்டின் மூன்று அறைகளில் கடைசி அறைக்குப் போனேன். அங்கு மின்விளக்கு இல்லை. சன்னலையும் திறப்பது கிடையாது. ஏனெனில் வேண்டாத சாமான்களைப் போட்டுவைக்கும் அறை அது. ஏற்கெனவே ஒரு கட்டு பீடி ஒளித்து வைத்திருந்தேன். அதில் ஒன்றை எடுத்து வாயில்வைத்துக்கொண்டு தீக்குச்சியால் பற்றவைத்தேன். தீக்குச்சியை என்ன செய்வது என்று தெரியாததால் கையிலேயே வைத்திருந்தேன். விரலைச் சுரீர் என்று சுட்டுவிட்டது. அலறிக்கொண்டு கீழே போட்டேன். அதில் வாயிலிருந்த பீடியும் கீழே விழுந்து அணைந்துபோயிற்று. எனவே அடுத்த பீடியை எடுத்தேன். பற்றவைத்த தீக்குச்சியை உடனே கீழே போட்டு மிதித்தேன்.  

பீடியை வாயில் வைத்தேனே தவிர, அதை எப்படிப் புகைக்கவேண்டும் என்று தெரியவில்லை. அடடா, யாரவது பீடி குடிப்பதை ஆற அமர கவனித்தபிறகு இந்த வேலைக்கு வந்திருக்கலாமே என்று தோன்றியது. அதற்காக விட்டுவிடமுடியுமா? இம்மாதிரி வீட்டில் யாரும் இல்லாத வாய்ப்பு மறுபடியும் எப்போது கிட்டுமோ? அதன்றியும், நமது நோக்கம் பீடி பிடிப்பதல்லவே! சிகரெட் பிடிப்பதற்கு முன்-அனுபவம் வேண்டுமென்றல்லவா இதைச் செய்கிறோம்! பீடியை ஜோராக ஒருமுறை உள்ளே இழுத்தேன்.

அவ்வளவுதான், மூக்கு வாய் எல்லாம் புகுந்துவிட்டது புகை. தலைக்குள்ளும் நுழைந்திருக்கும் என்று நினைத்தேன். ஒரே மூச்சுத்திணறல். உடனே பீடியைக் கீழே போட்டேன். என் முகத்தைச் சுற்றி எழுந்த பீடி நாற்றத்தை என்னாலேயே சகிக்க முடியவில்லை. ஓடிப்போய் வாய்க்கொப்பளித்தேன். முன்பே எடுத்துவைத்திருந்த மூன்று அனாசின் மாத்திரைகளை விழுங்குவதற்காகக் குடிதண்ணீர் பானையில் இருந்து தம்ளரில் நீர் மொண்டேன்.

அதுவரை அனாசின் மாத்திரையை நான் விழுங்கியதில்லை. அநேகமாகக் கசப்பாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. எனவே ஒவ்வொன்றாக விழுங்கலாம் என்று முதல் மாத்திரையை விழுங்கினேன். மாத்திரை சற்றே பெரியதாக, சதுர வடிவில் இருந்ததாக நினைவு. இரண்டாவது மாத்திரையை விழுங்கலாம் என்று பார்த்தால், மாத்திரையைக் காணோம்!

தர்மேஸ்வரன் சார் நின்றிருந்தார். ‘காலையிலிருந்து முடியவில்லை. உள்ளேதான் படுத்திருந்தேன். யாரோ பீடி பிடிக்கிறமாதிரி இருந்தது. ஒருவேளை நம்ம போஸ்ட்மேன் தான் வந்திருப்பாரோ என்று கதவைத்திறந்தேன். யாருமில்லை. அதற்குள் எனக்கு வழக்கமான தலைவலி வந்துவிட்டது. உன் டேபிள் பக்கத்தில் ரெண்டு அனாசின் கிடந்தது. எடுத்துக்கொண்டேன். இல்லையென்றால் எவ்வளவு கஷ்டமாகியிருக்கும் தெரியுமா?’ என்றார்.

கஷ்டம் அவருக்கு மட்டுமா? எனக்கும்தான். எனது முதல் சிகரெட்டைப் பிடிக்க மேலும் ஐந்து வருடங்கள் காத்திருக்க நேரிட்டது.
*****
அன்று முதல் இன்றுவரை நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவறாமல் பாதிக்கும் இன்னொரு நோய், மூட்டு வலியாகும்.

மூட்டுவலிக்கு மிகவும் பலனளிக்கும் மருந்துகள், தென்னமரக்குடி எண்ணெய், நாராயணித் தைலம், பிண்டத்தைலம் ஆகியவை. பலநேரங்களில் பிண்டத்தைலத்துடன் நாராயணித் தைலத்தையும் கலந்து,  லேசாகச் சூடுபடுத்திய கரண்டியில் விட்டு, அதனை ஒத்தடமாகக் கொடுப்பது வழக்கம். இந்த மருந்துகளுக்கும் விளம்பரங்கள் வரும். ஆனால் மிகச் சிறிய அளவு விளம்பரங்கள்தாம். வாய்மொழியாகவே இந்த மருந்துகள் பிரபலமாகியிருந்தன.

ஒருநாள் என் பாட்டிக்கு நாராயணித்தைலம் வாங்குவதற்காக நாட்டுமருந்துக் கடைக்குப் போயிருந்தேன். அங்கு எப்போதும் கூட்டமாக இருக்கும். கடை சிறியதுதான் ஆனால் உள்ளே நீளமாக இருக்கும். கடைக்காரருக்குக் கண்பார்வை குறைவு. தைல புட்டிகளைக் கண்ணுக்கு அருகில் வைத்துக்கொண்டுதான் படிப்பார். உள்ளேயிருந்து தன் குரலை உயர்த்தி, ‘ஏம்மா ஒங்களுக்கு என்ன தைலம்?’ என்பார். ‘தென்னமரக்குடி’ என்று பதில் கிடைக்கும். என்னைப் பார்த்து ‘ஏய், பையா, ஒனக்கு என்ன தைலம்?’ என்றார். ‘நாராயணி’ என்றேன். அவருக்குக் கேட்கவில்லை. காதருகில் கையை வைத்துகொண்டு  மீண்டும் ‘என்ன தைலம்?’ என்றார். சற்றே குரலை உயர்த்தி, ‘நாராயணி’ என்றேன். ஒரு சிறிய புட்டியைக் கொண்டுவந்து கொடுத்தார். விலை ஒன்றேகால் ரூபாய்.

அடுத்தநாள்  மாலை, மூன்று வீடுகள் தள்ளிக் குடியிருந்த ஐயங்கார் மாமா, என் தாத்தாவோடு ஏதோ கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘ஒங்க பேரனைக் கொஞ்சம் அடக்கி வையுங்கோ! நேற்று நாட்டு மருந்துக் கடையில் என் பேத்தி நின்றுகொண்டிருந்தபோது, எல்லாருக்கும் கேட்கும்படியாக நாராயணி, நாராயணி என்று பெயர்சொல்லிக் கூப்பிட்டானாம். இது நல்லதற்கில்லை. கண்டிச்சு வைக்கவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
****  
பின்குறிப்பு: பல வருடங்கள் கழித்து, எனக்கு மூட்டுவலி வந்தபோது, மாம்பலத்தில் ஒரு நாட்டுமருந்துக் கடையில் நாராயணி தைலம் வாங்கப் போனேன். அப்போதுதான் தெரிந்தது, அது நாராயணி இல்லை, நாராயணன் என்று. அதாவது சரியான பெயர்: நாராயணத் தைலமாம்.  இன்னும் சரியாகச் சொன்னால், வாத நாராயணத் தைலம்.

© Y Chellappa