ஞாயிறு, ஜூலை 27, 2014

(பதிவு 104) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-3 (இறுதி)

(பதிவு 104) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-3 (இறுதி)

அன்று மாலை பெரிய ஏரிக்கரையின் நான்காவது படிக்கட்டில் அமர்ந்துகொண்டோம். நேற்றை விட இன்று அதிக மென்மையாகவும் இனிமையாகவும் வீசியது காற்று. வறுத்த நிலக்கடலையைக் கொறித்துக்கொண்டே  பேசினோம். ஒரே மாதத்தில் ஐம்பது ரூபாய் சேர்ந்துவிடும் என்று தோன்றியது. அப்படியானால் அதற்கடுத்த மாதத்தில் முதல் புத்தகம் வெளிவந்துவிடும்! கூப்பிடும் தூரத்தில் அல்லவா வெற்றி காத்திருக்கிறது! இப்படிப்பட்ட செயல்திறனுள்ள ஒருவன் எனக்கு நண்பனாகக் கிடைக்க நான் எவ்வளவு கொடுத்துவைத்திருக்க வேண்டும்!


“உனக்கு ஒரு அழகான புனைபெயர் வேண்டுமே! இயற்பெயரில் எழுதினால் நன்றாக இருக்காது” என்றேன்.

கடகடவென்று ஐந்தாறு புனைபெயர்களைச் சொன்னான். அதில் ஒன்றைத் தேர்வுசெய்து வைத்துக்கொண்டோம். பதிப்பகத்திற்குத்  தாயின் பெயரையே வைக்கப்போகிறானாம். தலைமை ஆசிரியரிடம் சொல்லி, வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றான்.  “இப்போதே சொல்லாதே! புத்தகம் அச்சானவுடன் திடீரென்று சொன்னால்தான் உன்னைப்பற்றி உயர்வாக நினைப்பார்கள்!” என்றேன். “அதுவும் சரிதான். நீயும் இதை ரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும்” என்றான்.
****
மறுநாள் காலையும் கொன்றைப்பூ பறிக்கும் வேலை வெற்றிகரமாக நடந்தது. அன்று ஆறு கூடைப் பூக்களாகக் கணக்கில் ஏற்றிக்கொண்டார் பூக்கடைக்காரர்.
****
திங்கட்கிழமை பள்ளிக்குப் போனோம். வழக்கம்போல நான் எல்லாரையும் விட முன்னால் வந்துவிட்டேன். பள்ளி நூலகத்திலிருந்து ரவீந்திரநாத் தாகூரின் புத்தகம் ஒன்றைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது நிழல்போல அருகில்வந்து நின்றார், பள்ளியின் இரவுநேரக் காவற்காரர் முனியப்பா. “பாகுன்னாரா?” என்று தெலுங்கில் கேட்டார். எதற்குக் கேட்கிறார் என்று புரியாமல் “அவுனண்டி (ஆமாம்)” என்றேன்.

“நேத்து ரெண்டுநாளும் நீங்களும் ராஜனும் பண்ணின விஷயம் ஹெட்மாஸ்டர் காதுக்குப் போயிட்டது” என்றார் முனியப்பா.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. இப்படியொரு கோணத்தை நாங்கள் யோசிக்கவேயில்லையே! இப்போது என்ன ஆகும்? பூக்களைத் திருடினோம் என்பாரா? அசெம்பிளியில் எங்களை ஒரு பிடிபிடிப்பாரா? பெற்றோர்களைக் கூட்டிவரச் சொல்வாரா? ராஜன் வேறு இன்னும் வரவில்லையே, இவருக்கு என்ன பதில் சொல்வது?

“பரவாயில்ல தம்பி. நான் பாத்துக்கறேன். என்ன கவனிச்சுடுங்க” என்று பல்லைக் காட்டினார்.

“அப்படீன்னா?”

“ஏன் தம்பி, எனக்கு விஷயம் தெரியாதா? வண்டிக்காரனுங்க வந்து பறிச்சிக்கிட்டுப் போனா கூடைக்கு மூணுரூவா கொடுப்பாங்க. நீங்க சின்னப்பசங்க. அதனால், கூடைக்கு ரெண்டுரூவா குடுத்துருங்க. விஷயம் யாருக்கும் போகாம நான் பாத்துக்கறேன். என்ன மீறிக்கிட்டு ஹெட்மாஸ்டர் ஒண்ணும் பேசமாட்டார்.” நான் திகைத்துப்போய் நின்றேன். எங்களுக்கு வருவதே இரண்டேகால் ரூபாய். அதில் இரண்டுரூபாய் இவருக்கு லஞ்சமா? மீதமிருக்கும்  கால் ரூபாயில் என்னத்தைச் செய்ய முடியும்?

அதற்குள் மாணவர்கள் வரத்தொடங்கிவிட்டார்கள்.

“வரட்டுங்களா, அடுத்த சனிக்கிழமை கார்த்தால நானே வந்து ஒங்களுக்கு ஹெல்ப் பண்றேன். சொன்னத ஞாபகம் வச்சிக்குங்க” என்று நினைவூட்டிவிட்டு நகர்ந்தார் முனியப்பா.

ராஜன் இதற்கெல்லாம் பயப்படுபவனாக இல்லை. “நீ  கவலைப்படாதே. இந்த ஆள் வாரத்தில் ஒருநாள்தான் காவல் காக்க வருகிறான். மற்ற நேரங்களில் குடித்துவிட்டு விழுந்துகிடப்பான். இவன் சொல்வதை ஹெட் மாஸ்டர் கேட்கவே மாட்டார்” என்று உறுதியுடன் கூறினான். அவனுடைய நெஞ்சுரம் என்னை வியக்கவைத்தது.

வெள்ளிக்கிழமை வந்தது. மாலை கேம்ஸ் பீரியட். கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கையில் முனியப்பா வந்தார். நான் பந்தைத் துரத்திச் செல்வதுபோல் போக்குக் காட்டிவிட்டு ஓடி வகுப்பறையில் ஒளிந்துகொண்டேன். ராஜனிடம் ஏதோ பேசினார். அவன் அலட்சியமாகப் பதில் சொல்வது தெரிந்தது. மீண்டும் அவர் ஏதோ சமாதான பாவனையில் பேசுவதும், இவனோ கண்டிப்பாக அவரை அலட்சியப்படுத்துவதும் நன்றாகத் தெரிந்தது. நாளை என்ன நடக்குமோ என்ற பயம் என்னைச் சூழ்ந்தது. 
***
அடுத்தநாள்.  சனிக்கிழமை.

கவனமாகப் பார்த்துக்கொண்டே பள்ளியின் உள்ளே வந்தோம். 
யாருமில்லை. 

இரவுக் காவலுக்கு வந்திருந்தால் முனியப்பா அங்கே இருந்தாக வேண்டும். ஆனால் இல்லை. ராஜன் சொன்னதுபோல், குடித்துவிட்டு எங்காவது கிடக்கிறாரோ என்னவோ.

ராஜன்  விறுவிறுவென்று மரம் ஏறினான். பூக்களைப் பறித்து வீழ்த்தினான். கோணிப்பையில் வைத்துக் கட்டினோம். அதற்குள் திடீரென்று மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. எனவே கோணிப்பையைத்  தலைமை ஆசிரியர் அறைக்கு முன்னால் கதவில் சாத்தி வைத்தோம். நனையாது. ஒதுங்கி நின்றோம். 

முனியப்பாவை இன்னும் காணவில்லை. இந்த மழையில் எங்கு வரப்போகிறார்! ‘அவனைப் பற்றி ஏன் பயப்படுகிறாய்?’ என்றான் ராஜன். ஆனால் ஏதோ ஒரு விபரீதம் நடக்கலாம் என்ற பயம் என்னை விட்டபாடில்லை.

அப்போது ஒரு கார் வந்து நின்றது. தலைமை ஆசிரியர் வந்து இறங்கினார். அதே சமயம், முனியப்பாவும் எங்கிருந்தோ வந்துசேர்ந்தார்.  எனக்கு இதயம் நின்றுவிடும்போல் ஆனது. இது முனியப்பா செய்த சதிதான். கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டோமே என்ன ஆகுமோ? ராஜனுக்கும் கைகால் உதற ஆரம்பித்தது.

முனியப்பா, தலைமை ஆசிரியருக்குத் தெரியாமல் எங்களைப் பார்த்துப் பரிகாசமாகப் புன்னகைத்தபோது ராஜன் முகத்தில் பொங்கிய ஆத்திரத்தைப் பார்க்கவேண்டுமே!

“பாய்ஸ், வாட் ஆர் யூ டூயிங் ஹியர்?” என்று தலைமை ஆசிரியர் கேட்டதும்தான் எங்களுக்கு உயிர்வந்தது. அவர் தற்செயலாகத்தான் வந்திருக்கிறார்.

“குட்மார்னிங் சார்” என்று இருவரும் ஒரே நேரத்தில் சொன்னோம். மேற்கொண்டு பேசாமல் நின்றோம்.

“இவ்வளவு காலைப் பொழுதில் இங்கு என்ன செய்கிறீர்கள்?” என்றார் தலைமை ஆசிரியர்.

ராஜனுக்கு எப்படித்தான் அற்புதமான யோசனைகள் தோன்றுமோ! “அது ஒண்ணுமில்லை சார்...” என்று இழுத்தான். பிறகு முனியப்பாவைப் பொருள்பொதிந்த பார்வையோடு நோக்கினான். அதற்குள், முனியப்பா விரைந்துவந்து, “இவங்க என்ன சொல்றாங்கன்னா..” என்று ஆரம்பிக்கவும், தலைமை ஆசிரியர் ஒரு அதட்டல் போட்டார். “நீ இரு, அவங்க சொல்லட்டும்” என்றார்.

கடகடவென்று மனப்பாடச் செய்யுளை ஒப்பிப்பதுபோல் பேசினான் ராஜன். “சார், இந்த முனியப்பாவுக்கு நேற்று உடம்பு சரியில்லை. இரவுக் காவலுக்கு வேறு யாரையும் ஏற்பாடு செய்ய முடியவில்லையாம். அதனால் எங்கள் வீட்டிற்கு வந்து என்னை இந்த ஓர் இரவு மட்டும் பள்ளிக்கூடத்தில் காவல் இருக்கிறாயா என்று கேட்டார். காலை எட்டுமணிக்குள் வந்துவிடுகிறேன் என்றார். என் அப்பாவும் சரி என்றார். அதனால் நான் என் நண்பனையும் அழைத்துக்கொண்டு நேற்று ராத்திரி முதல் இங்கே காவல் இருக்கிறேன் சார். பாவம் சார் முனியப்பா” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டான்.

அவ்வளவுதான், தலைமை ஆசிரியர் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. “என்ன, முனியப்பா! உனக்கு எவ்வளவு வயசு ஆயிற்று! இந்தச் சின்னப் பிள்ளைகளைக் காவலுக்கு வைக்க எப்படித் தோன்றியது உனக்கு? ஏதாவது ஆகியிருந்தால் அவங்க வீட்டுக்கு யார் பதில் சொல்வது? ஏன் என்னிடம் தகவல் சொல்லவில்லை? இனிமேல் இப்படி நடந்துகொண்டால் உன் வேலை போய்விடும், தெரிந்ததா?” என்று கோபமாகக் கூறினார். அவருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டபடி ராஜனும் முனியப்பாவை நோக்கி ‘பழிக்குப் பழி’ என்பதுபோல் ஏளனமாகப் பார்த்தான். நான் ராஜனையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

முனியப்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “சரீங்க சார்..” என்று பரிதாபமாகக் கூறியபடி முகத்தைக் கவிழ்த்துக்கொண்டார்.
          
மழை நின்றுவிட்டது. இனிமேல் முனியப்பா நம்முடைய வழியில் குறுக்கிடமாட்டார் என்று நம்பிக்கை உதித்தது. தலைமை ஆசிரியர் சீக்கிரம் கிளம்பினால் போதும், நாங்கள் கோணிப்பையை எடுத்துக்கொண்டு பூக்கடைக்குப் போய்விடலாம்.. ஆனால் அவரோ, டிரைவரைக் கூப்பிட்டு, “நீ போய் எல்லாருக்கும் காப்பி வாங்கி வா” என்று அனுப்பிவிட்டு, தன் அறைக்குள் நுழையப்போனார். கதவருகில் ஒரு கோணி நிறையக் கொன்றைப்பூக்கள் இருப்பதைப் பார்த்து வியப்புடன் எங்களைப் பார்த்தார். “நீங்களா பறித்தீர்கள்?” என்றார்.

அவ்வளவுதான், ராஜன் பெருமிதத்துடன் கூறலானான்: “ஆமாம் சார்! எப்படியும் முனியப்பா காலையில் வரும்வரை நாங்கள் இருந்தாக வேண்டும். சும்மா இருப்பானேன் என்று பூப்பறித்து வைத்தோம். உங்களுக்கு வேண்டுமா சார்?” என்றான்.

“வெரி குட்! அப்படித்தான் இருக்கவேண்டும். நேரத்தை நாம் வீணாக்கவே கூடாது!” என்று பாராட்டினார் தலைமை ஆசிரியர்.

அதற்குள் காப்பி வந்தது. “பாய்ஸ்! யூ டிசர்வ் திஸ் காப்பி” என்று எங்களுக்கு முதலில் கொடுத்துவிட்டுப் பிறகு தானும் அருந்தினார். காரில் ஏறிக்கொண்டார். “முனியப்பா, அந்தக் கோணியை எடுத்து காரில் வை” என்றார். பிறகு டிரைவரிடம், “பூக்கடையில் கொடுத்துவிடலாம். பத்து ரூபாய் கிடைக்கும் இல்லையா?” என்றார்.
****
இது உண்மைக்கதையா என்று கேட்கிறார்கள். இதில் உண்மையும் உண்டு. கதையும் உண்டு. இதில் வரும் நான் உண்மை. தேன்கனிக்கோட்டை உண்மை. நண்பன் ராஜன் உண்மை. (பெயர்தான் வேறு.) அவனுடைய இலக்கியதாகம் உண்மை. கொன்றைப்பூ விற்பனைசெய்து புத்தகம் வெளியிடத் திட்டமிட்டது உண்மை. முன்னூறு பிரதிகளுக்கு ஐம்பது ரூபாய் ஆகும் என்றது உண்மை. 

ஆனால் அதைச் செயல்படுத்துவதற்குள் நான் திரும்பவும் இராணிப்பேட்டைக்குப் போய்விட்டேன் ( பாட்டி இறந்துபோனதால்). அடுத்த வருடம் அவனைச் சந்தித்தபோது விசாரித்தேன். ‘ஒரே ஒருநாள் பூப்பறித்து வந்ததுடன் சரி, மேற்கொண்டு தொடரவில்லை’ என்றான். ‘கடல் எரிந்த மர்மம்’ என்ன ஆயிற்று என்று சொல்லவில்லை. அநேகமான அவன் எழுதி முடித்திருக்கமாட்டான் என்றுதான் தோன்றுகிறது.  'நீ போனபிறகு எனக்குச் சரியான நண்பர்கள் கிடைக்கவில்லை. எல்லாரும் என்னை ஏளனம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். என் திறமையை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்' என்று வருத்தப்பட்டுக்கொண்டான். 'ஒருநாள் இவர்கள் முகத்தில் கரியைப் பூசும்விதமாகப் பெரிய சாதனைகள் செய்யத்தான் போகிறேன், பார்த்துக்கொண்டே இரு!' என்றான்.

பிறகு பள்ளிப்படிப்பு முடிந்து நான் கல்லூரிக்குப் போனேன். பி.எஸ்.சி. முடித்தேன். பயிற்சிபெறாத பட்டதாரி ஆசிரியராக ஓராண்டுக்கும் மேல் இருந்தேன். எம்.எஸ்.சி. தொடர்ந்தேன். வங்கி அதிகாரியானேன். ஆனால் அவனைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. (அவன் கல்லூரிக்குச் செல்லவில்லை என்று கேள்விப்பட்டேன். ஊர்மாறி விட்டதாகவும் கேள்விப்பட்டேன். ஒருவேளை ஏதாவது வியாபாரத்தில் இறங்கியிருக்கலாம்.) அவனாவது என்னைச் சந்திக்க முயன்றிருக்கலாம். அவன் மட்டுமல்ல, தேன்கனிக்கோட்டையில் இருந்த பள்ளிக்கால நண்பர்கள் எவருமே  என்னைத் தொடர்புகொள்ள முயன்றதாகத் தெரியவில்லை.- ஒரே ஒரு விஸ்வநாதனைத் தவிர.

வங்கிப்பணியில் சேர்ந்த பிறகு காலம் என்னை இந்தியா முழுதும் கொண்டு சென்றது. எங்காவது ராஜனையோ மற்ற நண்பர்களையோ பார்க்கமுடியுமா என்று ஏங்குவேன். பயனில்லை.

என்னை அவர்கள் வெறுத்திருக்க முடியாது. பள்ளிக்கால நட்புக்கு expiry date அவ்வளவுதான் என்று ஆறுதல் கொள்ளவேண்டியதுதானோ? ஆனால் பொறுக்க முடியவில்லையே! அவர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லையே! இளமை நினைவுகள் அழிய மறுக்கின்றனவே!

இன்று நான் குடியிருக்கும் தொகுப்பு வீடுகளின் இரண்டுபுறமும் கொன்றை மரங்கள் பூக்கத்தொடங்கி  மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. தேன்கனிக்கோட்டையில் பார்த்த அதே அடர்சிகப்புக் கொன்றைப்பூக்கள். தினமும் அவைதான் நண்பன் ராஜனை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. அவனுடைய முகம் மறந்துவிட்டது. புகைப்படமும் இல்லை. ஐம்பது வருடங்களுக்கு முந்தைய அவன் உருவம் இன்று மாறியிருக்கலாம். காலம் அவனைத் தனது இலட்சியத்திலிருந்து புறத்தே கொண்டுபோய் விட்டிருக்கலாம். ஆனால் எங்கிருந்தாலும் அவன் போராடிக்கொண்டுதான் இருப்பான், புதுமையான செயல்களைச் செய்துகொண்டுதான் இருப்பான் என்று தோன்றுகிறது. அவனது கனவுப் புத்தகம் - பொன்னியின் செல்வனைவிட நீளமான நாவல் - வெளிவராமல் போனதுதான் நெஞ்சில் கரிக்கிறது.  

என்னால் முடிந்ததெல்லாம், மீதமிருக்கும் அவனது நினைவுகளை, அவை முழுதாக மறக்கப்படுமுன், எழுத்தில் இறக்கிவைப்பதுதான். 

இன்று நான் எழுதும் எழுத்துக்கு ஒரு காலத்தில் அவனுடைய நட்பு உந்துசக்தியாக இருந்ததற்கான மிகச் சிறிய நன்றியறிதல் இது.  அவன் எங்கிருந்தாலும் வாழ்க!
***
© Y.Chellappa

19 கருத்துகள்:

 1. முடிவில் ஆதங்கம் மனதை வருத்தப்பட வைத்தது...

  அவர் என்ன தொழில் செய்தாலும், தனது சமயோசித புத்தி திறமையால் சிறப்பாக இருப்பார்....!

  பதிலளிநீக்கு
 2. கொன்றைமர வேர்களின் ஆழம் ,உங்கள் நட்பிலே கண்டேன் .கொன்றை மரப் பூக்களின் அழகை உங்கள் எழுத்திலே கண்டேன் .கொன்றை மர உயரத்தை உங்கள் நன்றியில் கண்டேன் ...எனக்கும் ராஜனைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது ,அவர் நிச்சயம் வருவார் !
  த ம 1

  பதிலளிநீக்கு
 3. சார்! கமல் ஒரு படத்தில் குஷ்புவின் சின்ன வயசு ஃபோட்டோவைக் கொடுத்து கம்ப்யூட்டரில் போட்டு இப்போது எப்படி இருப்பார் என்று அறிவார் இல்லையா அப்படி நீங்கள் செய்து பார்த்தால் என்ன? அப்படி வரும் ஃபோட்டோவை முகநூலில் போட்டு தேடிப்பார்க்கலாம்.

  அந்தக் கொன்றைப்பூ மீண்டும் வருவார்! உங்கள் நட்பு அந்தக் கொன்றைப் பூக்களில் இருப்பதை அவர் கொன்றைப்பூக்களைப் பார்க்கும் போது நினைக்காமலா இருப்பார் சார்?!!!!

  அருமையான கதை சார்! // பள்ளிக்கால நட்புக்கு expiry date அவ்வளவுதான் என்று ஆறுதல் கொள்ளவேண்டியதுதானோ? // மிகவும் ரசித்தோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹூம், இந்தப் பள்ளி ஆசிரியர்கள் சுத்த மோசம்! (உங்களைச் சொல்லவில்லை!) பள்ளிக்கால நட்பை வாழ்நாள் முழுதும் தொடர்வது எப்படி என்று மாணவர்களுக்குப் போதிக்கவேன்டாமா?

   நீக்கு
 4. தங்களின் நண்பர் எங்கிருந்தாலும் நல் வாழ்வு வாழட்டும்
  வாழ வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
 5. 'ராஜன் வாழ்க' என்று எழுத வேண்டும் என்றுதான் எனக்கும் தோன்றியது. நீங்களும் கடைசி வரியில் அதைத்தான் சொல்லி இருக்கிறீர்கள். சுவாரஸ்யம்தான்.

  பதிலளிநீக்கு
 6. இளமைக் கால எழுத்தாளரை இந்த உலகம்
  அறியாமலேயே போய் விட்டதே!
  பரிதாபம்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவருக்கு என்ன மாதிரியான சோதனைகள் ஏற்பட்டிருக்கவேண்டும் என்று தெரியவில்லை. கடல் எரிந்த மர்மத்தை நான் தெரிந்துகொள்ளவே முடியாமல் போய்விட்டது உண்மையில் எனக்கு மிகுந்த வருத்தமே!

   நீக்கு
 7. கொன்றைப்பூவாய் பூத்துச்சொரியும் பால்ய கால நட்பு அழகு..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், இளமைக்கால நட்புகள் - எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைத்த நட்புகள்- வந்த மாதிரியே மறைந்துபோவது எவ்வளவு வருத்தமான செய்தி!

   நீக்கு
 8. //இது உண்மைக்கதையா என்று கேட்கிறார்கள்.//

  இந்தக் கேள்வியை கதை(?!)யின் முதல் பகுதியில் கேட்டவன் நான்தான். அதற்கான பதிலை, 3-ஆம் பகுதியின் இறுதியில் தந்தமைக்கு நன்றி ஐயா!

  - ------------------ ------------------------------------------------------ ------------------------------------ ------------------------------------

  Mohamed Nizamudeen24 ஜூலை, 2014 8:34 முற்பகல்
  இது உண்மைக் கதையா கற்பனைக் கதையா என்று தெரியவில்லை.
  எனினும் சுவாரஸ்யம்....

  http://www.chellappatamildiary.blogspot.com/2014/07/102-1.html#comment-form

  பதிலளிநீக்கு
 9. நீண்ட கால நினைவுகளை மிகவும் யதார்த்தமாக முன்கொண்டு வைத்துள்ளீர்கள். படிக்கும் ஒவ்வொருவரும் ஏங்கும் அளவு தங்களின் எழுத்து உள்ளது. முற்றிலும் பதியா முகம் ஆனால் தொடரும் நினைவுகள். இதுதான் நட்பு. முடிவு மனதை அதிகம் தொட்டுவிட்டது.

  பதிலளிநீக்கு
 10. உடல்நலக் குறைபாடு அறுவைச் சிகிச்சை ஆதலால் வலைத் தளங்களுக்கு
  சென்றுவர முடியாத நிலையில் உள்ளேன் ஐயா விரைவில் வருவேன் இனிய
  நற் கருத்தையும் விரைந்தே தருவேன் .தங்களின் ஆக்கங்கள் மென்மேலும்
  சிறந்து விளங்க என் இனிய வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 11. மீண்டும் மீண்டும் பூப்பது நல்லதுதானே? மகிழ்ச்சிதானே?

  பதிலளிநீக்கு