வியாழன், செப்டம்பர் 18, 2014

(பதிவு 107) துளசிதரனுக்கும், யாழ்பாவாணனுக்கும் நன்றி! (அபுசி –தொபசி -45)

(பதிவு 107) துளசிதரனுக்கும், யாழ்பாவாணனுக்கும் நன்றி!  (அபுசி –தொபசி -45) (18-9-2014)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும். இடையில் திடீரென்று நின்றுபோனாலும், மீண்டும் வந்துவிடும்!)

அறிவிப்பு

நண்பர் துளசிதரனுக்கு நன்றி! (http://thillaiakathuchronicles.blogspot.com)

நண்பர் யாழ்பாவாணனுக்கு நன்றி! http://eluththugal.blogspot.com)

திடீரென்று எனக்கு ஒரு விருதை இந்த இருவரும் அறிவித்திருக்கிறார்கள்:  VERSATILE BLOGGER -அதாவது ‘பல்துறைப் பதிவர்’ என்று!
 
பொதுவாக எனக்கு விருதுகள், பரிசுகள் கிடைப்பதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, எனக்குப் பரிசளிக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றுவதில்லை. இரண்டு, பரிசுப் போட்டிகளில் நான் கலந்து கொண்டால்தானே யாராவது பரிசளிக்க முடியும்? எனவே துளசிதரன் மாதிரியான மாநிலம் கடந்த நண்பர்களும், யாழ்பாவாணன் மாதிரியான, கடல் கடந்த நண்பர்களும் தாங்களாகவே முன்வந்து வழங்கும் இந்த விருதுதான் இந்த ஆண்டு நான் பெறும் முதல் விருதாகும்! அவர்கள் இருவருக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்!  (சென்ற ஆண்டு கலைமகள் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது. அது 2013 இன் முதல் மற்றும் ஒரே விருது.)

VERSATILE BLOGGER  - ‘பல்துறைப் பதிவர்’ – என்ற விருதைப் பெற்றவர், தானும் பத்துப் பதிவர்களுக்கு இதே விருதை வழங்கவேண்டுமாம். AMWAY மாதிரி சர்க்குலேஷன் ஸ்கீம் போல் இது தெரிந்தாலும், இதனால் நன்மையே விளையும் என்பதால் இந்த சர்க்குலேஷன் ஸ்கீமை  ஆதரிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

உடனடியாகப் பத்து பதிவர்களைத் தேர்ந்தெடுக்காவிடில், நல்ல பதிவர்களுக்கெல்லாம் வேறு யாராவது இதே விருதை அளித்து, அவர்களின் நல்லெண்ணத்தைத் திருடிக்கொண்டுபோய்விடும்  அபாயம் உண்டு என்பதால், நள்ளிரவானாலும் சரி, தேடிக் கண்டுபிடித்துவிட்டுத்தான் மறுவேலை என்று தொடங்கினேன். அந்தப் பத்து பேரைப் பிடித்துவிட்டேன்.  எனது சிற்றறிவுக்கு எட்டியவகையில், கீழ்க்கண்ட பத்து பதிவர்களும் தொடர்ந்து எழுதிவரும் பதிவர்கள். ஒவ்வொருவரும் தம் துறையில் உயர்வான எழுத்தைத் தருபவர்கள். சிலர், இன்னும் சிறப்பாகத் தமிழுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்று நான் விரும்புவதாலும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

(1)அருள் செல்வப் பேரரசன்

மகாபாரதத்தை, மூலத்திலிருந்து, தமிழில்  தினமும் மொழிபெயர்த்துத் தரும் இமாலயச் சாதனையைச் செய்து வருபவர் இவர். ஒரு பருவம் முடிந்ததும், அதன் பிடிஎஃப் கோப்பை உடனே பதிவிடுவது இவருடைய உயர்ந்த நெஞ்சைக் காட்டுகிறது. அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பிறகு நேரம் வாய்க்கும்போது படித்துக்கொள்ளலாம். இவரது அயராத சாதனையைப் பாராட்டி இவருக்கு VERSATILE BLOGGER  என்று - அதாவது ‘பல்துறைப் பதிவர்’ என்ற விருதை நான் வழங்க விரும்புகிறேன். இவரது தளம்:  http://mahabharatham.arasan.info

(2)பசுபதிவுகள்

கனடாவிலிருந்து எழுதும் கவிஞரும் எழுத்தாளரும் அறிஞருமான எஸ். பசுபதி அவர்களின் வலைத்தளத்தில் இலக்கியமும் இலக்கணமும் வரலாறும் அறிவியலும் வாழ்க்கைச் சரித்திரங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்த வயதிலும் அயராது உழைத்து, அரிய செய்திகளைத் தமிழுலகிற்கு நினைவூட்டும் விதமாகத் தந்து கொண்டிருப்பவர். இவரது இடையறாத சாதனையைப் பாராட்டி இவருக்கு VERSATILE BLOGGER  என்று- அதாவது ‘பல்துறைப் பதிவர்’ என்ற விருதை நான் வழங்க விரும்புகிறேன். இவரது தளம்:  http://s-pasupathy.blogspot.com

(3)தருமி

பேராசிரியரான இவர், ஆழமான கட்டுரைகளை எழுதுபவர். பல்வேறு மதங்களைப் பற்றி இவர் எழுதும் கட்டுரைகளிலிருந்து எனக்குப் பல புதிய உண்மைகள் தெரிந்தன. ஆவேசமான பின்னூட்டங்கள் இவரது எழுத்துக்கு வருவதுண்டு எனபது சிறப்பாகக் கூறவேண்டிய விஷயம். இவரது தளம்:

(4)வகுப்பறை - சுப்பையா வீரப்பன்

இன்று தமிழ்நாட்டில் வெளிவரும் பெரும்பாலான பத்திரிகைகளில் ஜோதிடப் பகுதி இல்லாமல் இருப்பதில்லை. இந்தியாவின் மிகப் பழமையான அறிவுக் கருவூலங்கள், சோதிட நூல்களாகும். அவற்றை முழுமையாகப் படித்து, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதும், மாணவர்களின் சோதிட அறிவை அவ்வப்பொழுது பரிசோதிக்கும் வண்ணம் சில ஜாதங்கங்களைக் கொடுத்து அவற்றில் கேள்வி கேட்பதும், இந்த வலைத்தளத்தின் சிறப்பாகும். ஜோதிடப் பாடங்களை இத்தளத்தில் வரிசையாகக் காணலாம். அவற்றைப் படிப்பதன்மூலம் ஜோதிடக் கலையை ஓரளவு நிச்சயமாகத் தெரிந்துகொள்ளமுடியும். ஜோதிடத்தை எதிர்ப்பவர்கள் கூட, இவற்றைப் படித்து, அடிப்படையான சோதிட அறிவைப் பெற்றால், இன்னும் தீவிரமாக எதிர்க்கவோ அல்லது, தங்கள் கொள்கையைத் தவறென்று உணர்ந்து  மாற்றிக்கொள்ளவோ ஏதுவாகும்.  சுப்பையா வீரப்பனின் தன்னலமற்ற சோதிடத் தொண்டைப் பாராட்டி இவருக்கு VERSATILE BLOGGER  என்று- அதாவது ‘பல்துறைப் பதிவர்’ என்ற விருதை நான் வழங்க விரும்புகிறேன்.  இவரது வலைத்தளம்: http://classroom2007.blogspot.com

(5)முனைவர் மு. பழனியப்பன்
தமிழ்நாட்டின் அரசுக் கல்லூரியொன்றில் பேராசிரியராகப் பணியாற்றும் பழனியப்பன், ஏற்கெனவே புதுவயல் பழனியப்பன் என்ற பெயரில் ஒரு வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருந்தார். அதைச் சற்றே நிறுத்திவிட்டு இப்போது ‘முனைவர் மு பழனியப்பன்’ (http://manidal.blogspot.com) என்ற வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதுகிறார். ‘தமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ’ என்று தனது தளத்தை அறிவிக்கும் பழனியப்பனின் இடையறாத தமிழ்த்தொண்டைப் பாராட்டும் முகமாக, இவருக்கு VERSATILE BLOGGER  என்று- அதாவது ‘பல்துறைப் பதிவர்’ என்ற விருதை நான் வழங்க விரும்புகிறேன். இவரது இப்போதைய தளம்: http://manidal.blogspot.com

(6)சிவசங்கர் எஸ்.எஸ்.

பெரும்பாலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக எழுதிவரும் சிவசங்கர், ஓர் அருமையான எழுத்தாளராவார். மாற்றுக்கருத்தைச் சொல்லும்போதும் மிகுந்த நாகரிகமாகத் தனது நிலையை வெளிப்படுத்துபவர். நக்கீரனில் அடிக்கடி எழுதுபவர். ‘அனுபவங்களின் பகிர்வும், உணர்வுகளின் வெளிப்பாடும்’  இவரது தளத்தில் காணக் கிடைக்கின்றன. இவருடைய அழகிய தமிழ் நடைக்காகவே இவரைப் பாராட்டி,  VERSATILE BLOGGER  என்று- அதாவது ‘பல்துறைப் பதிவர்’ என்ற விருதை நான் வழங்க விரும்புகிறேன். இவரது தளம்: http://ss-sivasankar.blogspot.in

(7) நகைச்சுவை.காம் – சித்தையன் சிவகுமார்

இவரது தளத்தில் ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் நம்மைச் சிரிக்கவைத்து ஆயுளைப் பலப்படுத்துகின்றன. நீங்கள் வள்ளுவரின் நெறியில் வாழ்பவரானால் –அதாவது, ‘இடுக்கண் வரும்போது நகு’கின்ற ஆசாமியாக இருந்தால்- இவரது தளம் உங்களுக்குப் பெரிதும் சுவையானதாகும்.

(தினமும் கூகிள் பிளஸ்சில் பாதிக்குமேலான இடத்தை இவருடைய அறிவிப்புகளே பிடித்துக்கொண்டுவிடுவது பலருக்கு எரிச்சலை உண்டாக்குவதாக ஒரு தகவல் உண்டு. அதனால் என்ன? இருப்பவள் அள்ளிக் கட்டுகிறாள்; இல்லாதவள் ஏன் பொருமவேண்டும்?)

இணையத்தில் பொதுவாகவே, நகைச்சுவைத் துணுக்குகள் என்றால்  ஆபாசமானவையாகவும், ‘ஏ’ ஜோக்குகளாகவும் இருப்பதைப் பார்க்கும்போது இவருக்குக் கோயில்கட்டிக் கும்பிடலாம். அது என் ஒருவனால் ஆகக்கூடிய காரியமல்லவே! அதனால் இவருக்கு  VERSATILE BLOGGER  என்று- அதாவது ‘பல்துறைப் பதிவர்’ என்ற விருதை நான் வழங்க விரும்புகிறேன். இவரது தளம்: http://mdusskadlsk.blogspot.com

(8)ஃபிரான்சில் இருந்து எழுதும் சாமானியனின் கிறுக்கல்கள்:

அண்மையில் இவரது ‘தாய்மண்ணே வணக்கம்’ என்ற பதிவைப் படிக்கமுடிந்தது. இனிமையான தமிழ்நடை!  சுவையான அனுபவங்கள் இருக்கின்றன இவரிடம். உணர்ச்சியோடு அதைச் சொல்லும் இலக்கியநயம் இவருக்கு இயற்கையாகவே வாய்த்திருக்கிறது. அதற்கு நீரூற்றி வளர்த்திடவேண்டும் என்ற நல்லெண்ணத்தால்  இவருக்கு  VERSATILE BLOGGER  என்று- அதாவது ‘பல்துறைப் பதிவர்’ என்ற விருதை நான் வழங்க விரும்புகிறேன். இவரது தளம்: http://saamaaniyan.blogspot.com

(9) கவியாழி கண்ணதாசன்:

எனது நண்பர். ஏராளமான நிலமும் தாராளமான மனமும் கொண்டவர். தொட்டதற்கெல்லாம் கவிதை எழுதிவிடக் கூடிய இவரிடம், (ஒரு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் இருப்பதாலோ என்னவோ) வேகமும் அவசரமும் அதிகம். அதைச் சற்றே நிதானப்படுத்தினால், இவரது எண்ணங்கள் இன்னும் சிறப்பான, இன்னும் அழகான,  கவிதை ஊற்றுக்களாகப் பிரவாகிக்கும் என்பது என் கருத்து. (சில நேரங்களில் என் கருத்தை இவர் ஏற்பதும் உண்டு!)  அந்த நம்பிக்கையோடும், இந்த ஆண்டு வரவிருக்கும் இவரது இரண்டாவது கவிதைத்  தொகுப்பை வரவேற்கும் விதமாகவும்,   இவருக்கு  VERSATILE BLOGGER  என்று- அதாவது ‘பல்துறைப் பதிவர்’ என்ற விருதை நான் வழங்க விரும்புகிறேன். இவரது தளம்:

(10)குடந்தையூர் ஆர் வி சரவணன்:

இவர் எழுத்தாளர்; நாவலாசிரியர்; குறும்படத் தயாரிப்பாளர், இயக்குனர். இத்துடன் பழகுவதற்கு இனிமையான இளைஞரும் கூட. சுறுசுறுப்பானவர். நல்ல கற்பனைவளம் கொண்டவர். சினிமாவில் காலடி வைப்பதற்குத் தயாராக ஒரு காலைப் பூமியிலிருந்து உயரத்திலேயே வைத்துக் கொண்டிருக்கும் குடந்தையூராரின் ஆர்வம் வெல்லட்டும் என்று சொல்லி, அதே சமயம் வலைப்பூவில் எழுதுவதை நிறுத்திவிடக்கூடாது, அந்த வகையில் கேபிள் சங்கரை அவர் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்து, இவருக்கு  VERSATILE BLOGGER  என்று- அதாவது ‘பல்துறைப் பதிவர்’ என்ற விருதை நான் வழங்க விரும்புகிறேன். இவரது தளம்: http://kudanthaiyur.blogspot.com

*****
(குறிப்பு: வழக்கமான பதிவுகள்: அடுத்த இதழில் காண்க.)
© Y Chellappa  (email: chellappay@yahoo.com). 

23 கருத்துகள்:


 1. VERSATILE BLOGGER - ‘பல்துறைப் பதிவர்’ – என்ற விருதை
  சிறந்த வலைப்பதிவர்களுக்கு வழங்கி வருகையில்
  எனக்குக் கிடைத்ததையும்
  சிறந்த வலைப்பதிவர்களுக்கு வழங்கி வருகையில்
  தங்களையும் தெரிவு செய்தேன்!
  தாங்கள் சிறந்த வலைப்பதிவர் என்பதை
  எனக்கு முன்னரே துளசிதரனும்
  ஒப்புதல் அளித்திருப்பதால்
  நான் பெருமை அடைகின்றேன்.
  வாழ்த்துகள்
  தமிழைப் பரப்பிப் பேணுவோம்
  தமிழரென்று
  தலையை நிமிர்த்தி நடைபோடுவோம்!

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும், உங்களால் பகிரப்பட்டவர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. தங்களால் பகிரப்பட்டவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! மூவரை ஏற்கனவே அறிவோம். கவியாழி, குடந்தையூரார் நேரிலேயே.. சாமானியன் சாம் வலைத்தளம் மூலம். மற்றவர்களின் அறிமுகம் எங்களுக்கு உதவப் போகின்றது சார். அதற்கு முன்னதாகவே நன்றிகள். எப்படி உதவப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்!

  பதிலளிநீக்கு
 5. இரண்டு விருதுகள் பெற்ற தங்களுக்கு இரண்டு வாழ்த்துக்கள் ஐயா.
  அன்புடன்
  கில்லர்ஜி
  அபுதாபி.

  பதிலளிநீக்கு
 6. விருது பெற்றதற்கும், அதை பரிந்து கொண்டதற்கும் பாராட்டுக்கள். உங்களிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் விருதுகள் வந்து குவிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. என்னுடைய வலைத்தளத்தைக் குறிபிட்டு எழுதியிருப்பதற்கு மிக்க நன்றி நண்பரே!
  உங்களுடைய தமிழ்ச் சேவை தொடர வாழ்த்துக்கள்
  அன்புடன்
  SP.VR.சுப்பையா

  பதிலளிநீக்கு
 8. பாராட்டுக்கள்.. உங்களுக்கும் - உங்களால்
  பாராட்டப் பெற்றவர்களுக்கும்...

  வாழ்க நலமுடன்
  வளர்க பலமடன்

  பதிலளிநீக்கு
 9. அய்யா,

  இந்த சாமானியனையும் தங்களின் பட்டியலில் சேர்த்ததில் பெருமகிழ்ச்சி !

  வயது, அனுபவம், அறிவு அனைத்திலும் மூத்தவரான தங்களின் வார்த்தைகள் எழுதுவதை இன்னும் சிறப்பாக, பொறுப்புடன் எழுத்த வேண்டும் என்ற எண்ணைத்தை என்னுள் ஏற்படுத்துகின்றன.

  தங்களுக்கும், தங்களால் தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் நன்றிகள் பல.

  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 10. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா
  தங்கள் மூலம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. விருது பெற்றமைக்கும், தந்தமைக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறான முயற்சிகள் எழுத்தின்மீதான ஆர்வத்தை மென்மேலும் மேம்படுத்தும். அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் அதிக தாமதம். பொறுத்துக்கொள்க.

  பதிலளிநீக்கு
 12. THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற தங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள். பகிர்ந்தளித்தலின் போது தங்களிடமிருந்து அந்த விருதினைப் பெற்ற மற்றைய வலைப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  தங்களிடமிருந்து விருதினைப் பெறும் அந்த பதிவர்களைப் பற்றிய தங்களது குறிப்புகள் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளன.

  த.ம. 6

  பதிலளிநீக்கு
 13. நன்றி நண்பரே! பாரட்டுதல்களும், சரியான விமர்சனங்களும் பதிவர்களை உற்சாகப்படுத்தும் !

  தங்களது மனமான பாரட்டுக்களுக்கும், வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும், தங்களது விருதிற்க்கும் கோடான கோடி நன்றிகள் !


  இப்படிக்கு அன்புள்ள,
  சி.சிவக்குமார்,மதுரை-7

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள் ... விருது பெற்ற அனைவருக்கும்...
  மேலும் தங்களுக்கும்

  பதிலளிநீக்கு
 15. விருதுகள் பெற்ற அனைவருக்கும் நம்முடைய வலைத்தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் !!!.
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு