திங்கள், செப்டம்பர் 15, 2014

(பதிவு 106) ஷீரடி சாயிபாபாவை வணங்குவது தவறா? (அபுசி –தொபசி -44)

ஷீரடி சாயிபாபாவை வணங்குவது தவறா? (அபுசி –தொபசி -44) (15-9-2014)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும். இடையில் திடீரென்று நின்றுபோனாலும், மீண்டும் வந்துவிடும்!)

அரசியல்

இந்திய அரசியலில் அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் உள்ள இரும்புப் பிணைப்பு எளிதில் உடைக்கமுடியாதது. அதிகார வர்க்கத்தின் துணையும் ஆலோசனையும் வழிகாட்டுதலும் இன்றி   எந்த அமைச்சராலும் நெறிதவறி நடந்துவிட முடியாது. ஆனால் அமைச்சரின் நெறி தவறலைக் கண்டுபிடித்துவிட்டாலோ, அவரை மட்டுமே குற்றவாளியாக்கிவிட்டுத் தாங்கள் தப்பித்துவிடுவதே அதிகார வர்க்கத்தின் வழக்கம். (அதிகார வர்க்கம் என்னும்போது ஐ.ஏ.எஸ். முதலிய முதல் வகுப்புப் பதவிகளும் அதற்கு மேலும் உள்ளவர்களையே குறிப்பிடுகிறோம்.)

அந்த வகையில் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் தமக்கு அமைச்சர்களாக இருந்தவர்களைப் பற்றி அவதூறு கிளப்பும் வகையில் மஞ்சள் பத்திரிகைகளின் அளவுக்குக் கீழிறங்கிவந்து வாதம் செய்யும் கால கட்டம் இந்தியாவில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கணக்குத் தணிக்கையாளராகப் பணி ஒய்வு பெற்றிருக்கும் ஒரு மலையாள அதிகாரி, முன்னாள் அமைச்சர் மாறனைப் பற்றியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றியும் அவதூறு கிளப்பிக்கொண்டிருக்கிறார் என்று அவர்மீது வழக்குத் தொடுக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் நீதிபதிகளும் இந்த அவதூறு பரப்புதலில் தீவிரப் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்னால்  யாரோ யாருக்கோ சிபாரிசு செய்து பதவி பெற்றுக்கொடுத்ததாக, இப்போது சொல்ல முன்வந்திருக்கும் இவர்கள், தங்கள் பதவிக் காலத்தில் இதைச் சொல்லியிருந்தால் இன்னும் வலுவாக மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்குமே!         

இந்தியா ஜனநாயக நாடு என்பதால், எவரும் எதையும் செய்யலாம்தான். ஆனால், பதவியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு தங்களை எதுவும் செய்துவிடமுடியாது என்ற தைரியத்தில் ‘உண்மைகளை’  பேச முன்வருபவர்களின் நோக்கத்தை நாம் நிச்சயமாக ஐயுற வேண்டியிருக்கிறது. எதையோ எதிர்பார்த்து, அது கிடைக்கவில்லை என்ற நிலை உறுதியான பிறகுதான் இப்படிப் பேச ஆரம்பிக்கிறார்கள். இதை எப்படி நேர்மையாகக் கருத முடியும்? தங்கள்மீது நம்பிக்கை வைத்துப் பதவியில் இருத்திக்கொண்டவர்களை முதுகில் குத்தும்விதமாகச் செயல்படும் இவர்களை மரியாதைக்குரியவர்களாக நாம் கருத வேண்டிய அவசியம் உண்டா?

ஐ.ஏ.எஸ். வர்க்கம், தங்களில் ஒருவருக்கொருவரைக் காட்டிக் கொடுப்பதில்லை என்பதை அறிவோம். நீதித்துறையும் அப்படியே. (ஏற்கெனவே மருத்துவர்களும் அப்படியே என்பதை அறிவோம்.) இப்படிச் சமுதாயத்தின் ஒவ்வொரு துறையும் சுயநலம் காப்பதில் ஈடுபட்டால், அரசியல்வாதிகள்தானே பழி சுமக்க வேண்டும்? இப்படியிருந்தால் அரசியலில் நல்லவர்கள் எப்படிப் பதவிக்கு வர ஆசைப்படுவார்கள்? அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்றுதானே அது ஆகிவிடும்?

நமக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் சுமார் நூறிலிருந்து இருநூறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கலாம். ஆனால் ஒரேயொரு சகாயம் தானே தார்மீகப் பண்பாட்டின் நெறியாளராக நமக்கு முன் தெரிகிறார்! மற்றவர்கள் என்ன ஆனார்கள்? சகாயம் மாதிரி இல்லாவிடினும், சகாயத்தில் பாதி உயரமாவது இவர்கள் வளர முடியாதா? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் பலர்  கதை, கட்டுரை, கவிதை எழுதுகிறார்கள். திரைப்படம் எடுக்கிறார்கள். ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறுகிறார்கள்.  ஆனால் சகாயம் மாதிரியோ, ட்டி.என்.சேஷன் மாதிரியோ தங்கள் கடமைகளில் உறுதியான செயல்பாட்டைக் காட்டி இவர்கள் நமக்கு முன்னால் உயர மறுக்கிறார்களே ஏன்?

தமிழ்நாட்டிலிருந்து துடிப்பும் சிறந்த கல்வித்தகுதியும் உடைய இளைஞர்கள், கடந்த சில ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்.-தேர்வுகளில் ஆர்வமாகப் பங்குகொண்டு வெற்றியும் பெற்று வருகிறார்கள். சைதை துரைசாமி போன்றவர்களின் அமைப்புகள் இதற்கு முக்கியக் காரணமாக இருந்து வருகின்றன. தேசிய அளவில் டாப்-10 அளவில் வருகின்றனர். அவர்களுக்கு ‘ரோல் மாட’லாக இருப்பதற்கு ஒரேயொரு சகாயம் போதுமா என்று கேட்காமல் இருக்க முடியவில்லையே!

புத்தகம்


தன் சொத்து முழுதையும் மருத்துவ மனைகளுக்கு வழங்குமாறு உயில் எழுதிவைத்துவிட்டு வாரிசின்றி இறந்துபோன மூத்த எழுத்தாளர் ஆர். சூடாமணி யின் ‘இரவுச் சுடர்’ என்ற (சிறு) நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். எளிமையான நடை, எளிமையான சொற்களில் கனமான வருணனைகளை எளிதாகக் கொண்டுவந்துவிடும் நயமான எழுத்து கைவரப்பெற்ற சில மூத்த எழுத்தாளர்களில்  சூடாமணியும் ஒருவர். ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெண் ணானதாலும், ஆரோக்கியமின்மை காரணமாகவும்  வீட்டை விட்டு வெளியே சென்று சாதாரண மக்களோடு பழகும் வாய்ப்பு அதிகம் இல்லாதவராக இருந்தவர் சூடாமணி. எனவே அவரது பாத்திரங்கள் யதார்த்தங்களிலிருந்து சற்று விலகியே இருக்கிறார்கள் என்று படுகிறது.   

கதாநாயகி யாமினியைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்விக்கிறார்கள்  பெற்றோர்கள். அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது. அப்போது அவளுக்கு மனச் சிதைவு ஏற்பட்டுவிடுகிறது. இதற்குத் தாம்தான் காரணமோ என்ற குற்ற உணர்வுக்கு ஆளாகிறார், யாமினியின் தந்தை சாரநாதன். குழந்தையைத் தான் செய்த பாவத்தின் குறியீடாகவே பார்க்கிறாள், யாமினி. அதனால் அவள் வெறி அதிகரித்து, தற்கொலை செய்துகொள்ள முயன்று, தடுக்கப்பட்டு விடுகிறாள். உடலில் இருந்து விடுதலை வேண்டுகிறாள் அவள். சாரனாதனும் அவளைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக, யாருக்கும் தெரியாமல், அவள் தற்கொலை செய்ய உதவுகிறார். அவளுக்கும் தனக்கும் இதனால் நிம்மதி ஏற்படுவதாக உணரும்போது, இந்த நிம்மதியே அவருக்கு இன்னொருவகையான குற்ற உணர்வையும் ஏற்படுத்தி அவரை மனச் சலனத்துக்குள்ளாக்குகிறது.

யாமினியின் பெண் கீதாவும் அவளைப்போலவே கன்னியாக இருந்துவிட விரும்புகிறாளோ என்ற ஐயப்பாட்டுடன் கதை தொடங்குகிறது.

கொஞ்சம் ஆழ்ந்து படிக்கவேண்டிய கதை. இரண்டு முறையாவது படித்தால்தான் எழுதியவரின் உள்ளம் ஓரளவாவது வெளிப்படும் வாய்ப்பிருக்கிறது. ‘இது, இன்னும் அதிகம் பேசப்படவேண்டிய  நாவல்’ என்கிறார், முன்னுரை வழங்கியுள்ள இந்திரா பார்த்தசாரதி.

‘இரவுச் சுடர்’ – ஆர். சூடாமணி- காலச் சுவடு வெளியீடு. (2010) விலை ரூ.75.  (C) பாரதி.

சினிமா, தொலைக்காட்சி : அடுத்த இதழில் காண்க.

பத்திரிகை

ஷீரடி சாயிபாபாவை இந்துக்கள் தொழவேண்டாம் என்று குஜராத்தில் உள்ள துவாரகா பீட சங்கராச்சாரியார் கூறியது பற்றி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அவுட்லூக் வார இதழ் தனது 15-9-2014 இதழில் இதுபற்றிய கவர்ஸ்டோரியை எழுதியுள்ளது.


ஷீரடி சாயிபாபாவின் பிறப்பு பற்றிச் சரியான தகவல் இல்லை. மகராஷ்டிராவில் பர்பானி மாவட்டத்தில் (ப்)பத்ரி என்ற ஊரில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டவர் என்றுமட்டும்  தெரிகிறது. இந்துவாகவே இருந்தாலும் இன்னொரு மதத்தவரால் இளம்பருவத்திலிருந்தே வளர்க்கப்பட்டால் அந்த மதத்துக்குரிய குறியீடுகளும் வாசகங்களும்தானே வெளிப்படும்! ஆகவே, ‘அல்லா மாலிக்’ என்று சாய்பாபா அடிக்கடி கூறுவார். ஆனால் அவர் சொன்ன அல்லா, இஸ்லாமிய  மதத்தவரான அல்லா அல்ல. எல்லா மதத்துக்கும் பொதுவான இறைவனையே அவர் அல்லாவாய் அடையாளம் காட்டினார். 

அவரைப் பற்றிய கதைகளும் அமானுஷ்ய செய்திகளும் அதிகம் பேசப்பட்டுள்ளன.     பூனா அருகிலுள்ள ஷீரடியில் உள்ள சாயிபாபா ஆலயம், திருப்பதி வேங்கடவனுக்கு அடுத்தபடியாக செல்வம் மிகுந்த ஆலயம். நினைத்தவர்களுக்கு நினைத்ததை நிறைவேற்றிக் கொடுக்கிறார் சாயிபாபா என்று பலர் என்னிடம்  கூறியது உண்டு. சினிமாப் படங்களும் சின்னத்திரைத் தொடர்களும் அவரைப் பற்றி ஏராளமாக வந்துள்ளன. 


பெங்களூரில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது எனது உடன்பணிபுரியும் இன்னொரு அதிகாரியான நரசிம்மராவ், வியாழக்கிழமைகளில் மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது  கோரமங்களாவில் இருந்த சிறிய சாயிபாபா ஆலயத்திற்குச் செல்வதுண்டு. இருவரின் வீடும் கோரமங்களாவில் இருந்ததால் ஒரே காரில் செல்வதுண்டு. அப்படி ஒரு வியாழன் மாலை நானும் அவருடன் சாயிபாபா ஆலயத்திற்குச் சென்றேன். 

அதற்குமுன் அங்கும் சரி, வேறு எந்த ஊரிலும் சரி, சாயிபாபா ஆலயத்திற்கு நான் சென்றதில்லை. அரவிந்த அன்னையின் தத்துவங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்த எனக்கு வேறு ஆன்மிக ஞானிகளின் துணையைத் தேடவேண்டிய அவசியம் இருக்கவில்லை. என்றாலும் எவரையும் நான் மறுதலித்ததில்லை. ரமணாசிரமத்திற்குச் சென்றிருக்கிறேன். திருக்கோவிலூர் சென்றிருக்கிறேன். விசிறி சாமியாரைத் தரிசித்திருக்கிறேன். பாலமுருகனடிமையையும், பங்காரு அடிகளாரையும், அண்மையில்  சிவசங்கர் பாபாவையும் கூட,  பார்த்துப் பேசியிருக்கிறேன். (புட்டபர்த்தி சாயிபாபாவை மட்டும் நான் பார்க்க முடிந்ததில்லை.) ஏதோ ஒரு ஆன்மிக சக்தி இல்லாமல் எந்த ஒருவரையும்  பல்லாயிரம் மக்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. அந்தச் சக்தியை முன்னிட்டு அவர்களை நான் மரியாதையோடு வணங்குவது வழக்கம். அப்படித்தான் கோரமங்களா சாயிபாபா ஆலயத்திற்கும் சென்றேன்.

பார்த்ததுமே, சாயிபாபாவின் திருஉருவம் என்னிடம் ஏதோ பேசுவதுபோல் உணர்ந்தேன். வலம் வந்தேன். ‘பூரண சரணாகதி’ யோ, ‘பாபாவே கதி’ என்ற உணர்வோ ஏற்படவில்லை என்றாலும், சாயிபாபா என்பது பொய்யில்லை, மிக உயர்ந்த ஆன்மிக வடிவம் என்பது எனக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டது.

இனிப்பு வழங்கினார்கள். அதை வாயிலிட்டுச் சுவைத்துக்கொண்டே காருக்குத் திரும்பினோம். ‘சாயிபாபாவை வணங்கினீர்கள் அல்லவா, உங்களுக்கு ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகிறது. பார்த்துக்கொண்டே இருங்கள்’ என்றார் நரசிம்ம ராவ்.

‘அது எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறீர்கள்?’ என்றேன்.

‘அது அப்படித்தான். முதல்முறை வரும் பக்தர்களிடம் தன் மகிமையை உணர்த்திக்காட்டுவது பாபாவின் வழக்கம்’ என்றார் அவர்.

‘நல்லது’ என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டு இறங்கினேன். யார்தான் நல்லது நடந்தால் வேண்டாம் என்று சொல்வார்கள்? என் வீடு வந்துவிட்டது.

அடுத்த வாரம் சென்னை சென்றிருந்தேன். ஒரு துணிக்கடையில் துணி எடுத்துக்கொண்டிருந்தோம் நானும் (என்!) மனைவியும். அப்போது என் அலைபேசி ஒலித்தது. எப்போதும் என்னுடன் அலைபேசியில் பேசியிராத, எங்கள் வங்கியின் மனிதவளத் துறையின் பொதுமேலாளர் மோகன் ராவ் அவர்கள் என்னிடம் பேசினார். ‘உங்களை இரண்டுநாள் பயிற்சிக்காக பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அநேகமாக இன்னும் ஒரு வாரத்தில் போகவேண்டி இருக்கலாம். குறைந்த அவகாசமே இருப்பதால் முன்கூட்டியே தெரிவிக்கிறேன். உரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள்” என்று அலைபேச்சை முடித்தார்.

உடனே நரசிம்மராவுக்குத் தகவல் சொன்னேன். அவர் சிரித்தார். ‘நான் தான் சொன்னேனே - சாயிபாபா ஏதாவது ஒரு புதுமையைச் செய்து தன்னை உங்களுக்கு விளக்குவார் என்று!’     

சில மாதங்களுக்குப் பிறகு என்னுடைய துறையின் பொதுமேலாளரிடமிருந்து  தெரிந்துகொண்ட செய்தி இது: அதிகாரிகளுக்கு  வெளிநாட்டுப் பயணங்களை அளிக்கும் முன்பு, உரிய துறையின் பொதுமேலாளருடன் ஆலோசித்தபிறகே வங்கியின் தலைவர் முடிவு செய்வாராம். ஆனால் இந்த விஷயத்தில் எனது பொதுமேலாளருக்கே அறிவிக்கவில்லையாம். தனக்கு வந்த ஒரு கடிதத்தின் மீது, என் பெயரை எழுதி, ‘இவரை அனுப்புங்கள்’ என்று உத்தரவிட்டிருந்தாராம் தலைவர். வேறு யார் விஷயத்திலும் அம்மாதிரி நடந்ததில்லையாம்!

சிரிப்பு / சிந்தனை

“பத்ரிநாத்திற்குப் போகும் வழியில் ஒருநாள் நான் கூடத் தக்காளிப் பச்சடி பண்ணினேன் அம்மா” (என்றாள் கீதா).

...”எத்தனை பேர் பந்தியிலிருந்து உயிரோடு எழுந்தா(ர்கள்)?” என்றான் ராமேசன்.

“நிஜந்தான். எப்படியம்மா இத்தனை மோசமாய்ச் சமைச்சே-அப்படின்னுதான் எல்லாரும் என்னை கேட்டா”.

“இருக்கணுமே!”

“என் அப்பா டியுஷன்னு நான் பதில் சொன்னேன்”.

“கள்ளி!”

 தயிர் ஊற்றுவதற்குமுன் அன்னம் பரிமாறப்பட்டது. தன் வட்டிலில் விழுந்த கவளத்தில் படிந்திருந்த ஒரு ரோம இழையை கீதா முதலிரண்டு விரல்களால் எடுத்துத் தூக்கிப் பிடித்தாள். ‘இதை எந்த விட்டமினுக்காகச் சேக்கறது அம்மா?’ என்றாள் பெருந்தேவியைப் பார்த்து.

“சரிதாண்டி. தூக்கி எறிஞ்சுட்டு இலையைப் பாத்துச் சாப்பிடு” என்ற செல்லக் கண்டிப்பு வந்தது.

“என்ன கீது அது?” என்று கேட்ட ராமேசன் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, தொடர்ந்து “கேசவாச்சாரியா, சவுரி ராஜனா?” என்றான்.

“ரெண்டுபேருமில்லை. ரோமாபுரி வீரன்” என்று கீதா பதில் சொன்னாள். ராமேசன் சிரித்தான்.

-(ஆர்.சூடாமணியின் ‘இரவுச் சுடர்’ நாவல்: பக்கம்: 32-33) காலச்சுவடு.

© Y Chellappa  (email: chellappay@yahoo.com) 

12 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    நாட்டு நடப்புக்கள் தாங்கிய பதிவு......சாயியை இறைவனாக நினைத்து வழிபடுபவர்கள் வழிபடத்தான் செய்வார்கள்...பலர் பலவாறு பேசுவார்கள்.....

    ///ஏதோ ஒரு ஆன்மிக சக்தி இல்லாமல் எந்த ஒருவரையும் பல்லாயிரம் மக்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. அந்தச் சக்தியை முன்னிட்டு அவர்களை நான் மரியாதையோடு வணங்குவது வழக்கம். ///

    தாங்கள் சொல்லிய இந்த கருத்தே மிகச் சிறந்தது..... பகிர்வுக்கு நன்றி ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ஷீரடி சாயிபாபாவின் மகிமை மகிமைதான் சார். அவரை வணங்குவோர்க்குக் குறையில்லை. தங்கள் அனுபவமே அதைச் சொல்லுகின்றதே!

    சூடாமணியின் எழுத்து என்னே அருமை! என்ன ஒரு ஹாஸ்யம்! பகிர்வுக்கு நன்றி ...முடிந்தால் அந்த நாவல் கிடைக்கப் பெற்றால் வாசிக்க வேண்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்மூலம் உங்களுக்கு விரைவில் கிடைக்கும் அந்த நாவல். போதுமா?

      நீக்கு
  3. ஷிரிடி சாய்பாபா அனைவரையும் காப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் நம்பிக்கையைவிட, மற்றவர்களின் நம்பிக்கையை மிகவும் மதிப்பவன் நான். தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  4. ***என் நம்பிக்கையைவிட, மற்றவர்களின் நம்பிக்கையை மிகவும் மதிப்பவன் நான். தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!***

    Really?!

    Let us see..

    You are just another superstitious old guy. That's what the whole story tells here. Whatever happened has nothing to do with "Saibaba arul or whatever" as you believe. It is just a coincidence!

    Do you respect my opinion? Thanks!

    பதிலளிநீக்கு
  5. Yes, Mr Varun, I do certainly respect your opinion that it was a coincidence. If you read carefully, I have never mentioned about my beliefs. I only said I respect others' beliefs. It means, I respect the non-believers too. After all, I have no right to expect one to have a certain belief, right? எனவே தங்கள் வரவுக்கு நன்றி என்று கூறி முடிக்கட்டுமா?

    பதிலளிநீக்கு
  6. நீங்க உங்க நம்பிக்கையை சொல்வதில் தவறேதும் இல்லை! ஆனால் நலல்தும், கெட்டதும் எல்லாருக்கும் நடக்குது. சாய்பாபாவை வணங்கினால் உடனே நல்லது நடக்கும், எனக்கு நடந்தது என்பதுபோல் கருத்தைத்தான் நீங்க உங்க நண்பர் மூலமாக முன் வைக்கிறீங்க . இப்பதிவின் மூலம் நீங்க சொல்ல வருவது என்னனு உங்களுக்கு புரியுதோ இல்லையோ பலருக்குப் புரிகிறது.

    தன் வாழ்க்கையை மட்டுமன்றி பக்தர்கள், நாத்திகர் வாழ்க்கயையும் கவனமாகப் பார்த்து வருபவர்களுக்குத் தெரியும். சாய்பாபாவை மட்டுமன்றி எந்தக்கடவுளாக இருந்தாலும், அவரை வணங்கிவிட்டு திரும்பி வந்தவுடன் ஒரு சிலருக்கு மிகப் பெரிய துயரமும் ஏற்பட்டு இருக்கிறது (ஏற்படுகிறது) என்று. அப்படி யாருக்குமே இதுவரை நடக்கவில்லைனு சொன்னால் அது பச்சைப் பொய்!

    It is just like tossing coin and seeing whether you get "head" or "tail". The head or tail will never be 100% just because one visited such and such swamigal. That is how nature works. யாரும் அதை மாற்ற முடியாது.

    உங்க பதிவால் உங்களையே அறியாமல் பலரை தவறான வழியில் தள்ள முற்படுறீங்க. இதனால் கேண்சர் வந்தால் டாக்டரைப் பார்க்காமல் சாய்பாபாவை தர்ஷிக்க ஒரு சிலர் போகவும் வாய்ப்பிருக்கு. Saibaba's worship is not going to help getting rid of the cancer cells. A doctor might be able to do that as he knows how to deal with cancer cells. I am afraid you are misdirecting a patient! That's all I wanted to say. மாற்றுக்கருத்தை பகிர்ந்து கொள்ள அனுமதித்ததற்கு மறுபடியும் நன்றி. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பதிலுரைக்கு நன்றி வருண் அவர்களே! இப்போது நீங்கள் சொல்லும் ஒரு கருத்தும் என் மனத்தை உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயமே. உதாரணமாக, ஒரு மண்டலம் விரதம் இருந்து, சபரி மலைக்குச் சென்று தரிசனம் முடித்துவிட்டு, வரும் வழியில் அவர்களின் காரோ, ஜீப்போ, வேனோ மலையில் உருண்டு விழுந்து எவ்வளவு பேர் ஆண்டுதோறும் உயிர் துறக்கிறார்கள்? அதே போல, திருப்பதிக்கோ, மெக்காவுக்கோ, வாட்டிக்கனுக்கோ சென்று திரும்பும்போது எவ்வளவு பக்தர்கள் துர்மரணம் அடைகிறார்கள்? இறைவன் கருணையே உருவானவன் என்றால், இவர்களின் மரணத்திற்குக் காரணம்தான் என்ன? இந்தக் கேள்விக்குச் சரியான பதில் எனக்குத் தெரியவில்லை. ஆனால், இம்மாதிரி பதில் தெரியாத கேள்விகளால மட்டுமே இறைவன இருப்பதை மறுக்க வேண்டுமா அல்லது முடியுமா என்பது அதை விட ஆழமான கேள்வியே. (2) தங்கள் வருகையை எப்போதும் வரவேற்கிறேன். மாற்றுக் கருத்துக்களால் தானே மனம் மலரமுடியும் ! எனவே தாங்கள் தயங்காமல் கருத்துரைக்கலாம். இன்றைய நிலையில் வலைப்பதிவைப் படிக்க நேரம் ஒதுக்குவோர் குறைந்துவரும் நிலையில், உங்களுக்குள்ள பல்வேறு பணிகளுக்கு இடையிலும் எனது பதிவைப் படித்தும், கருத்துச் சொல்லியும் ஆதரவளிக்க உங்களைப் போன்றவர்கள் இருப்பது மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. தங்களுக்கு மீண்டும் எனது நன்றி.

      நீக்கு
    2. *****இந்தக் கேள்விக்குச் சரியான பதில் எனக்குத் தெரியவில்லை. ஆனால், இம்மாதிரி பதில் தெரியாத கேள்விகளால மட்டுமே இறைவன இருப்பதை மறுக்க வேண்டுமா அல்லது முடியுமா என்பது அதை விட ஆழமான கேள்வியே!***

      இறைவனே உளவியல் சம்மந்தமான ஒரு காண்சப்ட்தான், sir. இறைவனை நம்பினால் மனநிம்மதி வருது, சாய்பாபாவின் முகத்தைப் பார்த்தால் நிம்மதி கெடைக்கிதுனு ஒரு சிலர் உணருகிறார்கள். That's how they feel. அது அவர்களுக்கு மன நிம்மதி தருது. அவ்ளோதான்.

      பெரிய துயரத்தையும், இழப்பையும் "இறைவன் இருக்கிறான்.. இறைவன் சோதனை, இறைவன் காப்பாத்துவான்" என்று எண்ணுகிற எண்ணங்கள் பலருக்கு உதவுது. They are the "aaththigarkaL" அதனால இறைவன் என்பவனை பொய்யாக்குவது அவர்களால் ஏற்றுக்கவே முடியாது. இது ஒரு வகை.

      ---------------

      இன்னொரு வகை என்னவென்றால்,

      இறைவன் என்கிற ஒரு ஆள் இருப்பதாக நினைப்பது சரி என்று தோன்றாமல் இருப்பது. அதாவது புத்தர்கூட இறைவன்னு ஒரு ஆள் இருப்பதாக நம்பவில்லை! Human beings, நம் புலன்களை அடக்கினால் நாமும் உயரலாம் என்றுதான் நம்பினார். கவனிச்சுப் பார்த்தீங்கனா புத்தருக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று கெடையாது. he never believed a "superior person" namely "GOD" ever!

      அதுக்காக அவர் கெட்டவரா? அதேபோல்தான் பெரியாரும். அவர்களுக்கு இறைவன் என்கிற ஒரு பவர்ஃபுல் ஆள் எல்லாரிடமும் விளையாடுகிறார், எல்லாவற்றையும் கண்ட்ரோல் பண்ணுகிறார், அவரை எப்போவுமே நம்ம உயர்வா நெனைக்கணும் என்கிற சிந்தனையே அபத்தமாகத் தோனுகிறது. Not only them, even today, பல நாத்திகர்கள், அறிவியல் நிபுணர்களும் அதேபோல் உணருகிறார்கள். 'It is their HONEST FEELING and OPINION that there can not be any God or whatsoever! இது இன்னொரு வகை மனிதர்கள்!

      -------------------

      இந்த இரண்டு வகையும் இருக்காங்க. இருவருமே சரியும் இல்லை, தவறும் இல்லை! இறைவன் இல்லை என்கிற நினைப்பே ஒரு சிலருக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இறைவன் இருக்கிறான் என்கிர சிந்தனை இன்னொருவருக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அவ்ளோதான்.

      இந்த ரெண்டு வகையுமே இருந்துட்டுப் போகட்டுமே! அதனால என்ன இப்போ??

      The problem comes only when someone talks LOUDLY THAT I am the correct but the others are wrong!

      Whether it is an atheist or a theist, when he/she loudly claims that HE/SHE is CORRECT then he becomes an INSENSIBLE PERSON!

      கடவுள் இருப்பதாக நினைப்பதும், இல்லைனு நெனைப்பதும் ஒருவரின் நம்பிக்கைதான். ரெண்டுமே அபத்தம்தான். அல்லது ரெண்டுமே அவர்களின் உண்மையான உணர்தலின் வெளிப்பாடே!

      If someone says, I am more comfortable believing GOD or being a non-believer/not believing in God is always FINE! We just need to respect each others belief! That's all.

      இது காலங்காலமாக பேசித் தீர்த்த ஒன்றுதான். உங்க ஷிரிடி சாய்பாபா பதிவால் இன்னொரு முறை நான் இதையெல்லாம் சொல்ல வேண்டியதாகிவிட்டது. நன்றி.

      நீக்கு
  7. அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.

    சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?
    http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html

    பதிலளிநீக்கு