வியாழன், செப்டம்பர் 25, 2014

( பதிவு 109) சிவாஜி கணேசனும் அசோகமித்திரனும் (அபுசி-தொபசி 46)

(பதிவு 109) (அபுசி –தொபசி -46) (25-9-2014)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும். இடையில் திடீரென்று நின்றுபோனாலும், மீண்டும் வந்துவிடும்!)


for அரசியல்/அறிவிப்பு/அனுபவம்:

அந்தக் காலத்தில் பன்னிரண்டாம் வகுப்பிற்குப் ‘புகுமுக வகுப்பு’ என்று பெயர். அதைப் பள்ளியில் படிக்க முடியாது. கல்லூரியில் சேர்ந்துதான்  படிக்கவேண்டும். கல்லூரிகள் அப்போது அதிகமாக இல்லாததால், பெரும்பாலானவர்களின் படிப்பு, பதினொன்றாவதுடன் முடிந்துவிட்டிருக்கும். என்னுடைய நல்வினைப்பயனாக மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. அதில் புகுமுகவகுப்பில் சேர்ந்தேன். கணக்கு, பௌதிகம், இரசாயனம் கொண்ட முதல் பிரிவு.

என் தந்தையின் நண்பர் ஒருவர் திமிரியில் இருந்தார். இராணிப்பேட்டையிலிருந்து 12 கிமி தொலைவில் இருந்த சிறு நகரம். அந்தக் காலத்து பி.ஏ. (கணிதம்), பி.ட்டி. முடித்து, அரசுப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.(பெயர் மறந்துவிட்டது. சங்கரன் என்று வைத்துக்கொள்வோமே!)  அவர் என்னிடம் அன்போடு சொன்னார்: ‘குழந்தே! எங்கள் வீட்டில் தடுக்கி விழுந்தால் மேத்ஸ் புக்ஸ்தான். நானும் மேத்ஸ், எங்க அப்பாவும் மேத்ஸ், எங்க சித்தப்பாவும் மேத்ஸ். அதனால், நீ வந்தால் உனக்கு வேண்டிய எல்லாப் புத்தகங்களயும் எடுத்துக்கொண்டு போகலாம். காசு கொடுத்து வாங்கி அப்பாவுக்குச் செலவு வைத்துவிடாதே. நாளைக்கே வா’ என்றார்.

என்னென்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என்பது இன்னும் ஒரு வாரம் கழித்துதான் அறிவிக்கப்படும் என்றேன். சிரித்தார். ‘உனக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியாதா? நீ வாடா கண்ணா’ என்றார்.
***
எதிர்க்காற்றில் பன்னிரண்டு கிமி சைக்கிள் மிதித்துக்கொண்டு அவர் வீட்டை அடைந்தபோது காலை பத்துமணி.  ஞாயிற்றுக்கிழமை. ஓட்டடை அடித்துக்கொண்டிருந்தார்கள். ஆறுமாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஒட்டடை அடிக்கவேண்டும் என்பது சங்கரனின் தந்தையார் கட்டளையாம். சிலந்திவலைகள் சற்றே அதிகம்போல் தோன்றியது. அதைப் பொருட்படுத்தாமல் தென்னங்கூரை வேய்ந்த மொட்டைமாடியில் டியுஷன் நடந்துகொண்டிருந்தது. “ஏ க்யூப் மைனஸ் பி க்யூப் ஈக்வல்ஸ்.....” என்று சொல்லிக்கொண்டிருந்த சங்கரன், என்னைப் பார்த்ததும்  இறங்கி வந்தார்.

‘உட்காரப்பா...அம்மா, நம்ப சாஸ்திரிகளோட பிள்ளை. மேத்ஸ் புக்ஸ் கொடுக்கிறதா சொல்லியிருந்தேன்..’ என்று தாயாரிடம் அறிமுகப்படுத்தினார். சிறு ஊஞ்சலில் அமர்ந்து ஒட்டடை அடிப்பவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த வயதான பெண்மணி, மெல்ல எழுந்து ‘வாப்பா’ என்று சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டார்.  

சிறிதுநேரத்தில் அவரைவிட அதிக வயதான ஒரு பெண்மணி ‘காப்பி சாப்பிடப்பா’ என்று டபரா-டம்ப்ளரில் நுரை பொங்கும் காப்பியைக் கொடுத்தார். தமிழர் உபசரிப்பின் அடையாளமே காப்பிதானே!

அரைமணிநேரம் ஆயிற்று. உட்காரலாம் என்றால் இன்னும் தரையில் விழுந்திருந்த ஒட்டடைகள் நீக்கப்படவில்லை. நின்றுகொண்டே இருந்தேன். சங்கரனின் அப்பா வந்தார். வயது எண்பத்தைந்தாம். ஆரோக்கியமாகத்தான் இருந்தார். ‘வாடா கண்ணா..’  என்று வாய் நிறையக் கூப்பிட்டார். ‘மேத்ஸ் படிக்கிறியா?  வெரி குட். உனக்கு என்னென்ன புக்ஸ் வேண்டும்? எல்லாம் பரணில் மூட்டைகட்டி வைத்திருக்கிறேன். சொன்னால் எடுத்துத் தருகிறேன்’ என்று என்னுடைய முகத்தையே பார்த்தார்.

நான் ‘பேந்தப் பேந்த’ விழித்தேன். இன்னும் கல்லூரி திறக்காத நிலையில் நான் என்னவென்று சொல்வது? அதற்குள் சங்கரன் வந்துவிட்டார். ‘அப்பா, அவனுக்கு ஒண்ணும் தெரியாது. பி.யு.சி.-மேத்சுக்கு என்ன வேண்டும்னு ஒனக்குத் தெரியாதா?’ என்றார்.

‘என்ன, பி.யு.சி.யா?    நான் பி.எஸ்.சி.ன்னு இல்ல இருந்தேன்’ என்று என்னை அலட்சியமாகப் பார்த்தார் சங்கரனின் அப்பா. ‘எங்கிட்ட பி.யு.சி.க்கு எந்தப் புத்தகமும் கிடையாதே! வேணுமானால் ‘அனலிட்டிகல் ஜியாமெட்ரி’ இருக்கு, அதைக் கொடுக்கட்டுமா? ஆனால் அது எம்.ஏ. புத்தகமாச்சே, உனக்குப் பயன்படுமா?’ என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 12 கிமி வந்தாயிற்று. இன்னொரு 12 கிமி திரும்பிப் போகவேண்டும். இப்போதே பதினோருமணி வெய்யில் சுள்ளென்றிருந்தது. சீக்கிரம் இடத்தைக் காலிசெய்தாக வேண்டும். ‘பரவாயில்லை கொடுங்கள், நான் எம்.எஸ்.சி படிக்கும்போது பயன்படுமே’ என்றேன்.

அவர் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. சங்கரன் ‘இதோ வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு எங்கோ போனார். ‘சரி, இங்கேயே இரு, கொண்டுவருகிறேன்’ என்று மாடிக்குப் போனார் சங்கரனின் அப்பா.

வரும்போது அவர் கையில் இருந்தது 1924ஆம் வருடத்தில் வெளியிடப்பட்ட ‘அனலிட்டிக்கல் ஜியாமெட்ரி’ என்ற சுமார் இருநூற்றைம்பது பக்கமுள்ள, பைண்டு செய்யப்பட்டு, ஓரங்கள் கரையான் அரித்த, பழுப்பேறிய புத்தகம். பெருமாள் பிரசாதம் மாதிரி அதை அவர் கொடுக்க, நான் பக்தியோடு வாங்கிக்கொண்டேன். வயதானவர்கள் எது கொடுத்தாலும் அது ஆசீர்வாதமல்லவா? ‘வேண்டாம்’ என்று சொல்லி அவர் மனதைப் புண்படுத்துவானேன்?

‘மெதுவாத் தெறக்கணும். இல்லேன்னா பக்கங்கள் பிஸ்கட் மாதிரி ஓடிஞ்சு வந்துடும்.    ஆகி வந்த புத்தகம். எங்க அப்பா படிச்சது, அப்புறம் நான் படிச்சேன். என் தம்பி படிச்சான். இதை யாருக்கும் தரமாட்டேன். எங்க வாத்தியார் கேட்டாலே தரமாட்டேன்னா பாத்துக்கோயேன். என்னமோ தெரியலே, ஒன்னப் பாத்தா ஒடனே தரணும்னு தோணித்து. அதுவே ஒரு நல்ல சகுனம் பாரேன். நீ சொன்ன மாதிரியே  எம்.ஏ. படிக்கத்தான் போறே பாத்துண்டே இரு, என் வாக்குப் பலிக்கறதா இல்லையான்னு!’ என்றார் பெரியவர்.   
      
அவரை நமஸ்கரித்துவிட்டு சைக்கிளை எடுத்தேன்.
****
வீட்டிற்கு வந்ததும் அந்தப் புத்தகத்தை அப்படியே ஒரு காகிதக் கவரில் வைத்து குறுக்கிலும் நெடுக்கிலும் நூலால் கட்டி அலமாரியின் உச்சிப் பலகையில் வைத்தேன். சிதிலமாகிப்போய்க் கொண்டிருக்கும் இந்தப் புத்தகத்தால் எனக்கு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. அப்புறம் மறந்தே போனேன்.

திடீரென்று ஒருநாள், வேறு எதையோ எடுக்கும்போது இந்தப் புத்தகம் தரையில் விழுந்தது. குனிந்து எடுத்தேன் அலமாரி இருந்த இடம்  எப்போதுமே சற்று இருட்டாக இருக்கும். கையில் முள் குத்துவதுபோல் உணர்ந்தேன். விரைந்து வெளியில் வந்தேன். கையிலிருந்த புத்தகத்தின் உள்ளிருந்து ஏதோ ஒரு கூரான முள் நீட்டிக்கொண்டிருந்தது. அதற்குள் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. முழங்கைவரை மரத்துப் போவதுபோல் இருந்தது. ‘அம்மா’ என்று வலியால் அலறினேன். புத்தகம் தானாக நழுவிக் கீழே விழுந்தது. அதிலிருந்து ஓடியது, சிறிய தேள் ஒன்று! சிறிய அம்மிக் குழவியால் அதை ஒரே அடியில் கூழாக்கினார் அம்மா.

நல்ல வேளை அப்பா வீட்டில் இருந்தார். தேள்கடிக்கு மந்திரிக்கும் பழக்கம் அப்பாவுக்கு உண்டு. ஏராளமானவர்கள் வந்து குணம் பெற்றதை அறிவேன். அன்றுதான் எனக்கு அதை நேரில் அறியும் வாய்ப்புக் கிட்டியது. தேள் கொட்டிய கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மந்திரங்கள் சொன்னார். பிறகு தோள்பட்டையிலிருந்து மெதுவாக மாசாஜ் செய்வதுபோல் விரல்களால் மணிக்கட்டுவரை தடவினார். பிறகு அந்த விரல்களைத் தரையில் செங்குத்தாக நிற்கவைத்து, டொக், டொக் கென்று ஓசை வரும்படி தட்டினார். அப்படி மூன்றுமுறை செய்தார். ஒருமணி நேரத்திற்குப் பிறகு வலி குறைந்தது. மரத்துப் போன கை பழையபடி ஆயிற்று.

அடுத்த வாரம், அப்பா சங்கரனைப் பார்த்தாராம். எனக்குக் கொடுத்த புத்தகத்தில் முக்கியமான பொருள் ஏதேனும் இருந்ததா- பை சான்ஸ்- என்று கேட்டாராம். இருந்தால் கொண்டுவந்து கொடுக்கும்படி சொன்னாராம். செத்துப்போன தேளை எப்படி நான் திருப்பிக் கொடுப்பது?

அந்தப் புத்தகத்தில் இன்னும் கிழியாமல் இருந்த சில பகுதிகள், எனது பி.எஸ்சி வகுப்பில் பயன்பட்டன. பெரியவர் வாக்குப்படியே நான் எம்.எஸ்.சி படிக்க முடிந்தது. ஆனால் அங்கு இந்தப் புத்தகத்திற்குத் தேவை இருக்கவில்லை. அதற்குள் அது பொடிப்பொடியாகிவிடும் நிலைக்கு வந்துவிட்டதால், சேலம் ராஜகணபதி கோயில் முன்பிருந்த குப்பைக்கூடையில் போட்டேன். பிள்ளையார் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டு, விபூதியைத் தரித்துக்கொண்டு கிளம்பினேன். இப்போது நினைத்தாலும் தேளின் உருவம் கண்முன்னால் நிற்கிறது.

இப்போதெல்லாம் ஓட்டு வீடுகளே இல்லாததால், தேள்கள் காணக் கிடைப்பதில்லை. கடைசியாக நான் தேளைப் பார்த்து சுமார் இருபத்தைந்து வருடங்களாவது ஆகியிருக்கும்.

பு for புத்தகம் :  (அடுத்த இதழில் காண்க.)

சி for சினிமா & தொ for தொலைக்காட்சி

நீயா நானா கோபிநாத்தின் நள்ளிரவுக்கு முந்தைய நிகழ்ச்சியை –அதாவது – நீயா நானா நிகழ்ச்சியை- எப்போதாவது பார்ப்பதுண்டு. கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்த்தபோது – என்ன ஆச்சரியம்- எனக்கு மிகவும் பிடித்த தலைப்பில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஆத்மார்த்த ரசிகர்கள் – எழுத்தாளர் ஆத்மார்த்தியும் இருந்தார்- சிவாஜி மீது தங்களுக்கு எப்படிப் பிரியம் எழுந்தது, ஏன் எழுந்தது, எவ்வளவு அடர்த்தியான பிரியம் அது- என்பதை உணர்ச்சி பொங்கக் கூறிக் கொண்டிருந்தார்கள். பார்ப்பவர்களை அப்படியே ஐம்பதாண்டுகளுக்குப் பின்னே கொண்டு போய்விட்டது அந்த நிகழ்ச்சி.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தனக்கே உரிய வெண்கலக் குரலில் சிவாஜி கணேசன் மீதுள்ள தன் ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்தினார். சிவாஜி என்ற ஒரு நடிகர் வந்திராவிட்டால் கலைஞர் கருணாநிதியின் வசனங்களுக்கு யார் உயிர் கொடுத்திருக்க முடியும் என்று கேட்டார்.

சில ரசிகைகள் – இளம் வயதில் அவர்களும் மிக அழகாக இருந்திருக்கக்கூடும் – சிவாஜி கணேசனைத் தங்கள் அன்பிற்குரியவராக இதயத்திற்குள் ரகசியமாகப் பொத்தி வைத்திருந்ததை மெல்ல வெளிப்படுத்தினார்கள். பேரன் பேத்தி எடுத்துவிட்ட பிறகும்,  சிவாஜி மீதான தங்களது இளம்பருவத்து ஒருதலைக் காதலை வெளிப்படுத்துவதில், நாணம் கலந்த தயக்கம் அவர்களிடம் இருந்ததை ரசிக்கமுடிந்தது.

ஒரு ரசிகர் சிவாஜி கணேசன் பேசிய மிக நீண்ட வசனம் ஒன்றைக் கடகடவென்று ஒப்பித்துக் கைதட்டல் வாங்கினார். ஆனால் அவரது உணர்ச்சிப்பெருக்கின் வேகத்தோடு ஒத்துழைப்பதில் அவருக்குக் குரலுக்குச் சற்றே தயக்கம் இருந்தது.

வழக்கம் போல, சிறப்பு அழைப்பாளர்கள் ‘தேமேன்னு’ அமர்ந்திருந்தார்கள்.

சிவாஜி கணேசனின் நடிப்பும் வசனமும் எனக்கு மிகவும் பிடித்தவை. ‘பழனி’யில் வரும் ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா’ என்ற பாடலில் அவரது நடிப்பு உச்சக்கட்டத்தைத் தொடும். ‘மனித சாதியில் துன்பம் யாவுமே- மனதினால் வந்த நோயடா..’ என்ற வரிகளுக்கு அவர் நடிக்கும்போது நம் கண்ணிலிருந்து நீரை வரவழைப்பது சிவாஜியா, கண்ணதாசனா, டி.எம்.எஸ்.ஸா, அல்லது இந்த மூன்றுமாகி நிற்கும் கதாபாத்திரமா என்று தெரியாது. 

வீரபாண்டிய கட்டபொம்மனில் அவர் தூக்கிலிடப்படும் காட்சி வந்ததும் நான் அழுதே விட்டேன். யாரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவர்களும் அழுதுகொண்டிருந்தார்களே! ஆற்காடு ஜோதி தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, பாலாற்றுப் பாலத்தின் மீது இராணிப்பேட்டைக்கு நடந்து சென்று கொண்டிருந்த என் மனதில் ஒரே ஒரு சிந்தனைதான் இருந்தது. சிவாஜியைத் தூக்கில் போட்டுவிட்டார்களே, இனி அவர் நடித்துப் புதிய படங்கள் வராமல் போய்விடுமே என்ற கவலை. அவர் இறந்தது சினிமாவில்தான், நிஜத்தில் அல்ல என்ற பிரமை தீருவதற்குச் சில மாதங்கள் ஆயின.

பீம்சிங்கின் இயக்கத்தில் வந்த எல்லாப் ‘ப’ வரிசைப் படங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை. ‘பலே பாண்டியா’வில் வரும் ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?’ என்ற பாடலும், ‘பச்சை விளக்கி’ன் ‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ என்ற பாடலும் வறுமையால் இருண்டிருந்த என் இளம் நெஞ்சில் நம்பிக்கை விளக்கை ஏற்றிய பாடல்கள்.  ‘பாலும் பழமும்’ பாடலான ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ மற்றும் ‘ஆலயமணி’யின் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ பாடலும் என் வளர்நெஞ்சில் காதலைத் தூவிய பாடல்கள். ‘நெஞ்சிருக்கும் வரை’யின் ‘முத்துக்களோ கண்கள்..’ பாடல் விரக்தி மனநிலைக்கு ஆறுதல் கொடுத்ததாகும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். நிறுத்திவிடுகிறேன். இல்லையென்றால்,  அந்த ரசிகைகள் மாதிரி நானும் (அந்தக் காலத்தில்) சில நடிகைகளை என் மனதிற்குள் பூட்டி வைத்திருந்தேன் என்ற உண்மை வெளிவந்துவிடலாம். மீதமிருக்கும் நிம்மதியை ஏன் இழக்கவேண்டும்?

for பத்திரிகை

‘காலச் சுவடு’ –செப்டம்பர் 2014 இதழில் அசோகமித்திரனின் பேட்டியைப் படித்தேன். இதுவும் ஒரு ஐம்பது வருட அனுபவத்தை நினைத்துப்பார்க்கச் சொல்வதாகும். யார் கேட்டாலும் இல்லையென்னாமல் எழுதிக் கொடுத்துவிடுவேன் என்று அசோகமித்திரன் சொல்கிறார். ‘சாவி’ கதை கேட்பாராம். முதலில் தலைப்பு சொல்லி விடவேண்டுமாம். தலைப்பில் தயக்கம் காட்டினால் அவ்வளவுதான், சான்ஸ் போய்விடுமாம். ‘மானசரோவர்’ என்ற தலைப்பு அப்படித் திடீரென்று பீறிட்டுக்கொண்டு வந்த தலைப்பு தானாம்.
மனைவியுடன் அசோகமித்திரன (படம்: நன்றி: காலச்சுவடு)
பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்குச் சன்மானம் கொடுக்கவேண்டும் என்ற பொருளாதார நீதியைப் பற்றி அசோகமித்திரனுக்குக் கவலையில்லை. அவர்பாட்டுக்கு எழுதிக் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். வசதியான ஜெயகாந்தன் போன்றவர்கள் எப்போதோ எழுதுவதை நிறுத்திவிட்டபோதும், இன்றுவரை விடாமல் எழுதிக்கொண்டிருப்பவர் அசோகமித்திரன். நீங்கள் நிச்சயமாகப் படிக்கவேண்டிய பேட்டி. சில சுவாரஸ்யமான கேள்விகளும் அவரின் பதில்களும்:

உங்கள் கதைகளில் ஆண் பாத்திரங்களைவிடப் பெண் பாத்திரங்கள் துலக்கமாக இருக்கின்றன. அவர்களுடைய உணர்வுகளை மிகவும் உண்மையாகச் சொல்கிறீர்கள். இது பற்றிச் சொல்லுங்கள்.

அப்படியும் சொல்லலாம். ஆனால் ஆண், பெண் என்றெல்லாம் இல்லை. ஒருவகையில் அது எழுதுவதற்கு நிறைய வாய்ப்புகளை அளிக்கிறது. ஆண் பாத்திரங்களில் அது குறைவு.

அறுபது வருடங்களாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். எப்போதாவது எழுத்துத்திணறல்’ (writer’s block) ஏற்பட்டது உண்டா?

இல்லை. ஆனால் சோர்வு ஏற்பட்டதுண்டு. சோர்வாக இருக்கிற சமயம் யாராவது கதை வேண்டும் என்று கேட்பார்கள். எழுத ஆரம்பிப்பேன். ஒருவர் கதை கேட்டு எழுதிக்கொடுக்க முடியவில்லை என்றால் எனக்கு ரொம்ப குற்றஉணர்ச்சி ஏற்பட்டுவிடும்.

கல்கியைப் பற்றி....

கல்கியை எல்லோரும் மேம்போக்காக எழுதி இருக்கிறார். அதில் சரித்திரம் இல்லை என்று சொல்கிறார்கள். அதில் எனக்கு முழு உடன்பாடில்லை. அவர் இந்தப் பொன்னியின் செல்வனைவேண்டுமென்றேதான் நீட்டிக்கொண்டு போகிறார். அது உண்மை. ஆனால் தென்னிந்திய வரலாறு கிடைப்பதற்கு எனக்கு முழுக்க இந்தப் புத்தகம் உதவி செய்தது. அந்தப் புத்தகத்தை சி.பி. ராமசாமி அய்யர் மகன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஐந்து தொகுதிகள். எதற்கு இந்த வேலையற்ற வேலை என்று கேட்டேன். அந்த மொழிபெயர்ப்பின் முதல் தொகுதியை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி வெளியிட்டார். அப்போது பேசிய கருணாநிதி தான் பார்த்த காஞ்சி, மாமல்லபுரம் எல்லாம் கல்கியின் நாவலைப் படித்த பிறகு புதிதாகத் தெரிவதாக அண்ணா சொன்னார் என்று ஒரு தகவலைச் சொன்னார். இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்த முடியுமென்றால் அவரை நாம் எழுத்தாளர் இல்லை என்று சொல்ல முடியுமா? சுந்தர ராமசாமி மாதிரி கல்கியைக் கிண்டல் செய்தவர்கள் வேறு யாருமில்லை. ஜே.ஜே. சில குறிப்புகளை ஆரம்பிக்கிறபோதே சிவகாமியம்மாள் தன் சபதத்தை முடித்துவிட்டாரா என்று ஜே.ஜே. கேட்பதாகத்தான் ஆரம்பிப்பார்....
(இந்த அருமையான பேட்டியை எடுத்த சுகுமாரனுக்கும், தேவிபாரதிக்கும், வெளியிட்ட காலச்சுவடுக்கும் நன்றி.)
இணையத்தில் படிக்க: http://www.kalachuvadu.com/issue-177/page40.asp
சி for சிரிப்பு/சிந்தனை

ஞாயிற்றுக்கிழமையன்று ஏதோ ஒரு சேனலில் பிரசன்னா நடித்த பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. நண்பர்கள் சீரியசாக இருந்ததைக் கண்டு அவர்களை நல்ல மூடுக்குக் கொண்டுவருவதற்காகப் பிரசன்னா சொன்ன நகைச்சுவை துணுக்கு இது:

வாசகர் (நூலகரிடம் ஒரு தடிமனான புத்தகத்தைக் கொடுத்து): என்ன புத்தகமய்யா இது! ஏராளமான கேரக்டர்கள் இருக்கிறார்கள், கதையே இல்லையே!

நூலகர் (நிம்மதிப் பெருமூச்சுடன்): நீங்கள் தானா அது? டெலிபோன் டைரக்டரியைக் காணோமே என்று தேடிக் கொண்டிருந்தேன். திருப்பிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி!
*****
(குறிப்பு: வழக்கமான பதிவுகள்: அடுத்த இதழில் காண்க.)
© Y Chellappa  (email: chellappay@yahoo.com).-

6 கருத்துகள்:

  1. அனுபவமும், அகோக மித்திரனின் பேட்டியும் அருமை சார்! எவ்வளவு அழகான அனுபவம் சார்! இதைத்தான் ஓல்ட் இஸ் கோல்ட் என்கின்றார்களோ?!!

    அந்த நகைச் சுவை ஹாஅஹ சூப்பர்....

    ஆஸ்பத்திரியிலிருந்தும் இடுகை...!!!!! உடல் நலம் எப்படி உள்ளது சார்?

    பதிலளிநீக்கு
  2. தேள் இருந்த புத்தகம், அசோகமித்திரனை குறித்து எழுதுகையில் வசதியான ஜே.கெ என குறிப்பிடுவது
    என
    பதிவு மிக மிக அருமை முகநூலில் பகிர்கிறேன் ...
    நன்றி ..

    பதிலளிநீக்கு
  3. தங்களின் பதிவைப் பார்த்ததும் நான் கும்பகோணம் கல்லூரியில் புகுமுக வகுப்பு (PUC-Pre University Course) படித்த நினைவு எனக்கு வந்துவிட்டது. நான் அப்போது படித்தது வரலாறு, புவியியல், அளவையியல். மறக்க முடியாத நாள்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள அய்யா திரு.செல்லப்பா அவர்களுக்கு,

    வணக்கம்.
    (“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும். இடையில் திடீரென்று நின்றுபோனாலும், மீண்டும் வந்துவிடும்!) -செய்தி அறிந்தேன். மகிழ்ச்சி.

    எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து பார்வையிட்டு தாங்கள் கருத்திடுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
    -மாறத அன்வுடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
  5. அய்யா,

    விடுமுறைக்கு பிறகு இன்றுதான் உங்கள் தளம் வருகிறேன்...

    இந்த பதிவின் முதல் பகுதியை பலமுறை வாசித்தேன் ! உங்கள் அனுபவத்துடன் ஒன்ற வைத்துவிடும் எழுத்துநடை.

    தமிழர் உபசரிப்பின் அடையாளமே காப்பிதானே!...

    இதை படித்தபோது தமிழரின் மற்றொரு தேசிய பானமான தேனீர் முதலில் கரிசல் கிராமத்தினுள் நுழைந்த போது எழுந்த களேபரங்களை பற்றி கி.ராஜநாராயணன் " கோபல்லபுரத்து மக்களில் வர்ணிப்பது ஞாபகம் வந்துவிட்டது ! அதே போல "

    " செத்துப்போன தேளை எப்படி நான் திருப்பிக் கொடுப்பது? "

    ஆஹா ! என்ன பகடி ?

    " அந்த ரசிகைகள் மாதிரி நானும் (அந்தக் காலத்தில்) சில நடிகைகளை என் மனதிற்குள் பூட்டி வைத்திருந்தேன் என்ற உண்மை வெளிவந்துவிடலாம். மீதமிருக்கும் நிம்மதியை ஏன் இழக்கவேண்டும்? "

    உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அய்யா !!!

    " அசோக மித்திரன் கட்டுரைகள் " நான் சமீபத்தில் மிகவும் விரும்பி வாசித்த நூல்களில் ஒன்று.

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி





    பதிலளிநீக்கு