மகாத்மா – மறுபிறவி – கில்லர்ஜி –
துளசிதரன்- லியோ டால்ஸ்டாய்
எங்கள் இனிய நண்பர் கில்லர்ஜி அவர்களின் கனவில் காந்திஜி வந்து பத்து கேள்விகளைக் கேட்டதாகவும், அதற்கு அவருடைய பத்து பதிவுலக நண்பர்கள்
பதில் தரவேண்டும் என்று கில்லர்ஜி கட்டளையிட்டதாகவும், அதில் தானும் ஒருவர்
என்றும் நண்பர் துளசிதரன் தெரிவித்திருக்கிறார். ‘யாம் பெற்ற துன்பம் பெருக
இவ்வையகம்’ என்பதில் பெரிதும் நாட்டமுள்ள துளசிதரன், தன் பங்குக்குப் பத்து
நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அதே சவாலை விடுத்திருக்கிறார். அந்தப் பத்தில்
அடியேனும் ஒருவன்!
கேள்விகள் காந்தியைப்
பற்றியதாக இல்லாவிடினும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இருபது
வருடங்களுக்கு முன்பு வாங்கிவைத்து, இன்னும் முழுமையாகப் படிக்கப்படாத, ‘மகாத்மா
காந்தியின் தேர்ந்தெடுத்த எழுத்துக்கள்’ என்ற ஆறு தொகுதி நூல்களைத் தூசுதட்டி
எடுத்தேன். எவ்வளவு எளிமையாக எழுதியிருக்கிறார் மகாத்மா! மனதிற்குப் புத்துணர்ச்சியூட்டுவதாக
இருக்கிறது, காந்தியின் எழுத்துக்களைப் படிக்கும் அனுபவம். அதற்காகவே
கில்லர்ஜிக்கும் துளசிதரனுக்கும் ஒரு கும்பிடு!
இனி, முதல் கேள்விக்குப்
போகலாமா?
(1)நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று
நினைக்கின்றாய்?
மறுபிறவி பற்றி மகாத்மா காந்தியின் கருத்து என்ன என்று
தெரிந்துகொள்வோமா?
1909 அக்டோபர் முதல் தேதியன்று காந்தி, லண்டனில் விக்டோரியா
தெரு, எண் 4-இல் இருந்த வெஸ்ட்மினிஸ்டர் பேலஸ் ஓட்டலில் தங்கியிருந்தபோது லியோ டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
“நீங்கள் ஹிந்து பத்திரிகைக்கு எழுதியதாகச் சொல்லப்படும்
ஒரு கடிதத்தின் பிரதி எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அதுதான் நீங்கள்
எழுதிய ஒரிஜினலா என்று தெரியவில்லை. எனவே அதன் பிரதியை உங்களுக்கு
அனுப்பியிருக்கிறேன். உறுதி செய்யக் கோருகிறேன். மேலும் ஏதேனும்
சேர்க்கவேண்டுமென்றாலும் சேர்த்து எழுதி அனுப்பினால் எங்கள் பத்திரிகையில்
வெளியிடுவேன்....
மேற்படி கடிதத்தில் ‘மறுபிறவி’ என்ற கொள்கையை நீங்கள் மறுத்துப்
பேசியிருப்பதாகப் படுகிறது. மறுபிறவி என்பதை இந்தியாவிலும் சீனாவிலும் உள்ள
கோடிக்கணக்கான மக்கள் பெரிதும் நம்பிக்கையோடு போற்றிவருகிறார்கள் (என்பதை நீங்கள்
அறிவீர்கள்.) சொல்லப்போனால் அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அனுபவபூர்வமான உண்மை
என்றே அவர்கள் கருதுகிறார்கள். மனித வாழ்க்கையின் பல விசித்திரங்களை மறுபிறவி என்ற
கோட்பாடு எளிதாக விளக்கி விடுகிறது. தென் ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்வால் பகுதியில்
தங்கள் உரிமைக்காகச் சிறை சென்ற மக்கள், இந்த நம்பிக்கையால்தான் ஆறுதல்
அடைந்திருக்கிறார்கள்.
எனவே, உங்கள் கடிதத்தில் நீங்கள் மறுபிறவியை மறுப்பதுபோல்
எழுதியுள்ள பகுதியைத் தயவுசெய்து மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன். இப்படிச்
சொல்வதனால், மறுபிறவி என்ற கோட்பாட்டை உங்கள்மேல் நான் திணிப்பதாகக்
கொள்ளவேண்டாம்.... “
இந்தக் கடிதத்திற்கு அதேவாரம் லியோ டால்ஸ்டாய் பதில்
எழுகிறார், யாஸ்னயா போல்னயா நகரில் இருந்து: “....... நீங்கள் விரும்பினால்
மறுபிறவி பற்றிய எனது கருத்துக்களை நீக்கிவிட்டு அக்கடிதத்தைப் பதிப்பிக்கலாம்
என்று உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன்...... எனது எழுத்துக்களைப் பதிப்பிக்க எனக்கு
ராயல்டி எதுவும் தரவேண்டாம்... மறுபிறவி என்ற கோட்பாட்டை விட இறைவன்’ என்பதும்
‘அன்பு’ என்பதுமே நிரந்தரமானவை என்றும், ஆத்மா அழிவதேயில்லை என்றும் மக்கள்
நம்புவதே அவர்களுக்கு வாழ்க்கையில் ஆழமான ஈடுபாடும் ஒழுக்கமும் உண்டாவதற்கு
இன்னும் வலிமையான காரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்...”
(‘Tolstoy and Gandhi’ – pp 59-63)
மகாத்மா காந்தியைப் போல் எனக்கும் மறுபிறவியில் நம்பிக்கை
உண்டு. ஏனெனில், அறுபதைக் கடந்த நிலையிலும் எண்ணிய பலவற்றை இன்னும் சாதிக்க
முடியாத கவலை மிகவுண்டு. அவற்றை இந்தப் பிறவியில் இல்லாது போனால், அடுத்த
பிறவியிலாவது சாதிக்க முடிந்தால் அதைவிட மகிழ்ச்சி தரக்கூடியது வேறென்ன இருக்க
முடியும்? ஆனால் சில கேள்விகளுக்குப் பதில் கிடைத்தாகவேண்டும்:
-மீண்டும் மனிதனாகவே பிறக்க முடியுமா?
-மீண்டும் ஆண்மகனாகவே பிறக்க முடியுமா?
-மீண்டும் தமிழனாகவே பிறக்க முடியுமா?
-மீண்டும் ‘கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி’ப் பிறத்தல்
சாத்தியமா?
-மீண்டும் அதே பெற்றோர்களுக்குப் பிறக்க வேண்டுமா?
-மிக முக்கியமாக, மீண்டும் அதே வாழ்க்கைத்துணைதான்
வாய்க்குமா?
இப்படிப் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மட்டுமே, அடுத்த
பிறவியில் எங்கு பிறக்கலாம் என்பதை நான் முடிவு செய்ய
முடியும் என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். பதில் தெரிந்தவர்கள்
விரைந்து தெரிவிக்க வேண்டுகிறேன். அதற்குள் கில்லர்ஜியின் பத்தாவது கேள்வியையும்
பார்த்துவிடலாமா?
(10) நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச்
செய்துவிட்டாய்; உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது; ஆகவே வேறு என்ன
பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்....?
ஆகா, என்னே கில்லர்ஜியின் சதித் திட்டம்! அடுத்த பிறவியில்
நான் என்னவாகப் போகிறேன் என்பதைத் தெரிந்துகொண்டு தனக்கும் அதே பிறவி வேண்டும்
என்று கேட்டு வாங்கிக்கொண்டு எனது முன்னேற்றத்தைத் தடுக்கப் பார்க்கிறாரோ என்று
சந்தேகப்படுகிறேன். தொலையட்டும்- கெடுவான் கேடு நினைப்பான்!
மனிதப் பிறவி இல்லாமல் போனால் வேறு என்னவாகப் பிறக்கலாம்
என்று இதுவரை நான் ஆராய்ச்சி செய்ததில்லை. இப்போது செய்யவேண்டியதாகிறது.
தினத்தந்தியில் ‘சிந்துபாத்’ கதை – கன்னித்தீவு- வந்த புதிதில் – ஏன், இன்றும் கூட – ஆர்வமாக சலூன்களுக்குப் போய் அக்கதையைப் படித்த தலைமுறை அல்லவா எங்கள் தலைமுறை! அது திடீரென்று நினைவுக்கு வந்தது. அக்கதையில் இளம் வயதில் எங்களைக் கவர்ந்த பாத்திரம் ஒன்று உண்டு – அது தான், கடற்கன்னி! ஆழ்கடலில் திடீரென்று கூட்டம் கூட்டமாக வந்து கடற்கன்னிகள் நீர்விளையாட்டு ஆடுவார்களாம். ஆனால் அவர்களை யாராலும் பிடிக்க முடியாதாம்! இடுப்புவரை இளம் பெண்ணாகவும், இடுப்புக்குக் கீழே மீனாகவும் இருப்பார்களாம்!
தினத்தந்தியில் ‘சிந்துபாத்’ கதை – கன்னித்தீவு- வந்த புதிதில் – ஏன், இன்றும் கூட – ஆர்வமாக சலூன்களுக்குப் போய் அக்கதையைப் படித்த தலைமுறை அல்லவா எங்கள் தலைமுறை! அது திடீரென்று நினைவுக்கு வந்தது. அக்கதையில் இளம் வயதில் எங்களைக் கவர்ந்த பாத்திரம் ஒன்று உண்டு – அது தான், கடற்கன்னி! ஆழ்கடலில் திடீரென்று கூட்டம் கூட்டமாக வந்து கடற்கன்னிகள் நீர்விளையாட்டு ஆடுவார்களாம். ஆனால் அவர்களை யாராலும் பிடிக்க முடியாதாம்! இடுப்புவரை இளம் பெண்ணாகவும், இடுப்புக்குக் கீழே மீனாகவும் இருப்பார்களாம்!
அதுபோன்ற கடற்கன்னிகளை அவ்வப்பொழுது மாலுமிகள் பார்த்ததாக
தினத்தந்தியில் (மட்டும்!) செய்திகள் வரும். இன்றுவரை நான் நேரில் பார்த்ததில்லை.
ஆகவே, கில்லர்ஜி அவர்களே, துளசிதரன் அவர்களே, மானிடப் பிறவி
இல்லாத பட்சத்தில், நான் ஒரு கடற்கன்னியாகப் பிறக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்.
இது எப்படியிருக்கு?
(இங்கும் ஒரு கேள்வி எழுகிறது. கடற்கன்னிகள் மட்டும்தான்
இருப்பார்களா? அவர்களது ஆண்பாலான கடற்கண்ணன்கள் இருக்கமாட்டார்களா?
அவர்களைப் பற்றி யாரும் சொன்னதில்லையே,
ஏன்?)
(கடற்கன்னிகளைப் பற்றி மகாத்மாவின்
நூல்களில் எந்தக் குறிப்பும் அகப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.)
(c) Y. Chellappa
Email: chellappay@yahoo.com
(கில்லர்ஜியின் மற்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த பதிவுகளில்
பதிலை எதிர்பார்க்கலாம்.)
புத்தகத்திலிருந்தே கொடுத்த பதில் அட்டகாசம்! நாங்களும் நேற்று புத்தகம் இல்லையே என்று வருந்தினோம். மட்டுமல்ல இரவு வெகு நேரம் முழித்திருக்க முடியவில்லை. காலையில் முடித்து அவசர அவசரமாக போட்டுவிட்டோம்...
பதிலளிநீக்குசார்?! உங்களுக்கு எத்தனை வயசு?!!!ஹஹஹஹஹ் உங்கள் ஹ்யூமர் சென்ஸ் அசாத்தியம் சார்!
அதானே பார்த்தோம்...//.மிக முக்கியமாக, மீண்டும் அதே வாழ்க்கைத்துணைதான் வாய்க்குமா?// அக்மார்க் ராயசெல்லப்பா....ஆனா என்ன இதை நீங்க போல்டா போல்ட் எழுத்துக்களில் கொடுக்கலையேனு வருத்தம் சார்....
இந்த வயசுலயும் கடல் கன்னியாகப் பிறக்க ஆசை!!!ஹஹ்ஹஹஹ்.. ஆனா நாங்க ரொம்ப ரசித்தோம் சார். துளசிக்கு கீதா வாசிக்க...விழுந்து விழுந்து சிரிச்சு வயறு புண்ணாகிடுச்சு சார்.....அதுலயும் இறுதியாக அந்த அடைப்புக் குறிக்குள் கொடுத்துள்ளீர்களே! சே உங்களை நினைத்துப் பொறாமையாகத்தான் இருக்கு. இந்த வயசுலயும் இப்படி இளமையாக யோசிக்கிறாரே என்று........இரண்டு குறிகளுக்குள் கொடுத்திருப்பதும்.....ரசித்தோம்! காத்திருக்கின்றோம் அடுத்த பதில்களுக்கு.
அட்டகாசம்!
மிக்க நன்றி நண்பரே ! இதயத்தை இளமையாக வைத்துக்கொண்டால் எழுத்து இளமையாகத் தானே வரும் !
நீக்குஒரு பதிவிற்காக தாங்கள் நூலைத் தேடி எடுத்து ஆழமாக ஊன்றிப் படித்துப் பகிர்ந்தமைக்கு நன்றி. வித்தியாசமான நடையில் தாங்கள் மறுமொழி கூறியுள்ளீர்கள். நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா! ஆண்டுக்கு ஓர் முறையாவது காந்தியடிகளின் எழுத்துக்கள் படிக்கப்பட வேண்டும் என்ற தணியாத. ஆவல் உண்டாகிறது !
நீக்குவணக்கம் ஐயா ஒன்றையும், பத்தையும் முடிச்சுப்போட்டு நான் சதி திட்டம் போட்டதாக சொல்லி விட்டீர்களே ? ஐயா இதற்காக இந்த வயதிலும் இவ்வளவு தூரம் தாங்கள் உழைத்தது கண்டு அதிசயமாக இருக்கிறது ஆச்சர்யமாக இருக்கிறது தங்களது அடுத்த பதிவுகளை SORRY பதில்களை காண ஆவலுடன் இருக்கிறேன் இருப்பினும் எனக்கு மானிடப்பிறவி கிடைக்காவிடில் எனது அடுத்தபிறவி எப்படி இருக்க வேண்டுமென ஆசைப்பட்டதை தாங்களும் எனது பதிவுக்கு வந்து அறிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅன்புடன்
கில்லர்ஜி
நன்றி நண்பரே ! உங்கள் பதிவுக்கு இன்னும் சற்று நேரத்தில் வருவேன் ! நல்லதொரு விவாதம் உங்களால் எழும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது .
நீக்குதமிழ் மணம் 1
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
ஒவ்வொரு பதிலும் மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா.
த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி இளம் நண்பரே! இடையில் சற்றே இடைவெளி நேர்ந்து விட்டது .இனி தொடர்ந்து எழுதுவேன் .உங்கள் பதிவுகளை விரைவில் படித்து விடுவேன்.
நீக்குவித்தியாசமாக அருமையாகச்
பதிலளிநீக்குசொல்லிப்போனவிதம் மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
(சென்னை வந்து விட்டீர்களா ? )
ஆம் .சென்னை யில் தான் இருக்கிறேன் . தங்கள் வரவுக்கு நன்றி ..
நீக்குtha.ma 3
பதிலளிநீக்குகாந்தி மொழிகள் மூலமாகவே
பதிலளிநீக்குகாந்திஜியின் கனவுகளுக்கு பதிலளித்தது ரசிக்கவைத்தது..
வித்தியாசமான சிந்தனை. பாராட்டுக்கள்.
ஹலோ! நண்பரே !
பதிலளிநீக்குஇன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு
மறுபிறவி என்ற கோட்பாடு பற்றிய இரு கேள்விகளுக்கு பதில் அளித்தீர்கள்.
பதிலளிநீக்குஇது தொடர் பதிவா?
தொடரும் பதிவா?